தமிழரசு கட்சியின் தலைவர் தேர்தலும் தமிழர் அரசியலின் எதிர்காலப் போக்கும் 

தமிழரசு கட்சியின் தலைவர் தேர்தலும் தமிழர் அரசியலின் எதிர்காலப் போக்கும் 

— வீரகத்தி தனபாலசிங்கம் —

    தென்னிலங்கையில் அரசியல் கட்சிகள் அனேகமாக எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதி தேர்தலுக்கு தங்களைத் தயார்படுத்துவதில் இறங்கியிருக்கும் நிலையில் தமிழர் அரசியலில் ஒரு கட்சியின் தலைவர் தெரிவு முன்னென்றும் இல்லாத கவனத்துக் குரியதாகியிருக்கிறது.

  திருகோணமலையில் இம்மாத இறுதியில் இலங்கை தமிழரசு கட்சியின் மகாநாட்டுக்கு முன்னதாக அடுத்த ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 21) நடைபெறவிருக்கும் தலைவர் தேர்தலே அதுவாகும். 

  தமிழரசு கட்சியின் 75 வருடகால வரலாற்றில் இதுவரையில் ஏகமனதாகவே தலைவர் தெரிவு இடம்பெற்றுவந்திருக்கிறது. அதன் தாபகத் தலைவர் தந்தை செல்வா விரும்பியிருந்தால் தனது ஆயுட்காலம் வரைக்கும் கட்சியின் தலைவராக பதவி வகித்திருக்கமுடியும்.  ஆனால், அவர் அரசியல் கண்ணியத்துடன் ஒரு தடவை மாத்திரம் தலைவராக இருந்துவிட்டு வடமாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் சேர்ந்த அரசியல்வாதிகள் மாறி மாறி கட்சியின் தலைவர்களாகவும் செயலாளர்களாகவும் வரக்கூடியதாக ஒரு ஏற்பாட்டை வகுத்தார். 

  வடக்கைச் சேர்ந்தவர் தலைவராக தெரிவானால் கிழக்கைச்  சேர்ந்தவர் பொதுச் செயலாளராக வருவார். கிழக்கைச் சேரந்தவர் தலைவராகும்போது வடக்கைச் சேர்ந்தவர் பொதுச் செயலாளராவார். இந்த தெரிவுகள் எப்போதுமே பொதுச்சபையில் கருத்தொருமிப்பின் அடிப்படையில் இடம்பெறுவதை தமிழரசு கட்சி  பாரம்பரியமாகப் பேணி வந்திருக்கிறது.

  ஒரு தடவை மாத்திரம் அதாவது 1973 ஆம் ஆண்டில்  முன்னாள் வட்டுக்கோட்டை பாராளுமன்ற உறுப்பினர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கமும் அன்றைய மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்  செல்லையா இராசதுரையும் தலைவர்களாக வருவதற்கு போட்டி போடுகின்ற ஒரு நிலை தோன்றியபோது தந்தை செல்வா இராசதுரையை விட்டுக்கொடுக்க இணங்கவைத்ததாக கூறப்பட்டது.

  அந்த கட்டத்தில் கட்சியின் தலைவராக அமிர்தலிங்கம் வருவதையே தந்தை செல்வா விருப்பியதாக நம்பப்பட்டபோதிலும், இராசதுரைக்கு ஒரு   வாய்ப்பைக் கொடுப்பதற்கு விரும்பியிருந்தாலும் கூட  விட்டுக்கொடுக்குமாறு அமிர்தலிங்கத்தை  இணங்கவைக்க அவரால் இயலுமாக இருந்திருக்குமா என்பது சந்தேகமே. 

  1970 களில் பல்வேறு தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி உருவாக்கப்பட்ட பிறகு 1976 வட்டுக்கோட்டைத் தீர்மானம்,1977 ஜூலை பொதுத்தேர்தல், 1983 கறுப்பு ஜூலை, ஆயுதப்போராட்டம்  ஆகியவற்றைத் தொடர்ந்து வந்த கொந்தளிப்பான சூழ்நிலைகளில்  தமிழரசு கட்சி பற்றி எவரும் பேசவில்லை. 

   உள்நாட்டுப் போரின் மத்தியிலான  கணிசமான காலகட்டத்திலும் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியே முக்கியத்துவம் குறைந்துபோன நிலையிலும் கூட  தமிழரின் மிதவாத அரசியல் முகமாக தொடர்ந்து விளங்கியது.

  இந்த நூற்றாண்டின்  தொடக்கத்தில் பல்வேறு தமிழ் கட்சிகளை மீண்டும் ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு முதன் முதலாக எதிர்நோக்கிய 2001 டிசம்பர் பொதுத்தேர்தலில் தமிழர் விடுதலை கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது.

  பிறகு கூட்டணியின் தற்போதைய தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வீரசிங்கம் ஆனந்தசங்கரியுடன் ஏற்பட்ட வேறுபாடுகளை அடுத்து உதயசூரியன் சின்னம் தொடர்பில் மூண்ட சர்ச்சை காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழரசு கட்சியின் வீடு சின்னத்தில் 2004 ஏப்ரில் பொதுத் தேர்தலில் போட்டியிட வேண்டியேற்பட்டது. அதைத் தொடர்ந்து வந்த சகல பொதுத்  தேர்தல்களையும் கூட்டமைப்பு  வீடு சின்னத்திலேயே சந்தித்தது.

   தமிழரசு கட்சியே தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளில் பழமையானதாகவும்  வடக்கிலும் கிழக்கிலும்  ஆதரவைக் கொண்ட  பெரிய தமிழ்க்  கட்சியாகவும் இருந்த காரணத்தாலும் தொடர்ச்சியாக தேர்தல்களில் கூட்டமைப்பு  வீடு சின்னத்தில் போட்டியிட்டு வந்ததாலும் அந்த கட்சிக்கு மீண்டும் ஒரு தன்முனைப்பான  வகிபாகம் கிடைக்கக்கூடியதாக இருந்தது.

  கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் குறிப்பாக ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு ஜனநாயக அரசியலுக்கு வந்த இயக்கங்களின் தலைவர்கள் தமிழரசு கட்சி ஆதிக்கம்  செலுத்தும் போக்குடன் நடந்துகொள்வதாக அதிருப்தியை வெளிப்படுத்தத் தொடங்கினார்கள். கூட்டமைப்பை தனியான  சின்னத்தின் கீழ் தேர்தல் ஆணைக்குழுவில் பதிவுசெய்யவேண்டும் என்று அவர்கள் இடையறாது விடுத்துவந்த வேண்டுகோளை தமிழரசு தலைவர் இரா. சம்பந்தன் (அவரே கூட்டமைப்பின் தலைவராக இருந்தபோதிலும் கூட) ஒருபோதும் கருத்தில் எடுக்கவில்லை.  அதனுடன்  சேர்த்து வேறு முரண்பாடுகளும் நாளடைவில் கூட்டமைப்பில் விரிசலை ஏற்படுத்தின.

  தங்களுடன் இணைந்து தேர்தல்களில் போட்டியிடாவிட்டால் ஏனைய கட்சிகளினால் ஆசனங்களைப் பெறமுடியாது என்ற எண்ணத்தை தமிழரசு தலைவர்கள் வளர்த்துக் கொண்டார்கள் என்றுதான் கூறவேண்டும். கடந்த வருடம் முற்பகுதியில் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்த உள்ளூராட்சி தேர்தல்களில் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிட்டு முடிவுகள் வெளியான பிறகு  கிடைக்கும் ஆசனங்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு  வடக்கு, கிழக்கில் உள்ளுராட்சி சபைகளை அமைப்பதற்கு கூட்டுச் சேரலாம் என்று ஒரு யோசனையையும் சில  தமிழரசு தலைவர்கள் முன்வைத்தனர். மற்றைய அங்கத்துவக் கட்சிகள் கூட்டமைப்பில் இருந்து வெளியேறி தனியான கூட்டணியாக வேட்பு மனுக்களை தாக்கல் செய்தன. 

 தமிழ் மக்கள் மத்தியில் தங்களுக்கு இருக்கக்கூடிய செல்வாக்கை அறிந்துகொள்வதற்கான ஒரு சந்தர்ப்பமாக அந்த உள்ளூராட்சி தேர்தல்களை அந்த  கட்சிகள் மாத்திரமல்ல தமிழரசும் கூட எதிர்பார்த்தது. ஆனால் தேர்தல்கள் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டதால் அதற்கு வாய்ப்பு இருக்கவில்லை.

  இன்று தமிழ் அரசியல் சமுதாயம் சிதறிக்கிடக்கிறது. பல கட்சிகள். பல தலைவர்கள். தங்களுக்கு பின்னால் எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்கள்  என்று அவர்களுக்கே தெரியாது. தமிழரசு கட்சியிலும் ஐக்கியம், கட்டுக்கோப்பு என்று எதுவும் இருப்பதாக கூறமுடியாது. அதன் முக்கியஸ்தர்கள் தங்களுக்கென்று உருவாக்கிக்கொண்ட வெவ்வேறு கூடாரங்களின்  ஒரு முகாமாகவே  அது விளங்குகிறது.

   இவ்வாறான ஒரு பின்புலத்திலேயே தமிழரசு கட்சியின் தலைவர் தேர்தல் பற்றிய இன்றைய  பரபரப்பை நோக்கவேண்டியிருக்கிறது.

   சம்பந்தன் அவர்களை அடுத்து 2014 ஆம் ஆண்டில் தமிழரசு கட்சியின் தலைவராக ஏகமனதாக தெரிவான மூத்த அரசியல்வாதி மாவை சேனாதிராஜா கடந்த பத்து வருடங்களாக அந்த பதவியில் இருந்துவருகிறார். அவரின் தலைமையின் கீழ் கட்சியின் மகாநாடு நீண்டகாலமாகக் கூட்டப்படவில்லை. அவரின் இடத்துக்கு ஒருவரை கருத்தொருமிப்பின் அடிப்படையில் தெரிவு செய்யமுடியாத காரணத்தினாலேயே  மகாநாட்டுக்கு முன்னதாக அடுத்த வாரம் தேர்தல் நடைபெறவிருக்கிறது. தமிழரசு கட்சியின் வரலாற்றில் இதுவே தலைவர் பதவிக்கான முதன் முதலான தேர்தல். அதில்  பொதுச்சபையின் 275  உறுப்பினர்களே வாக்காளர்கள்.

  பாராளுமன்ற உறுப்பினர்களான மதியாபரணம் ஆபிரஹாம் சுமந்திரனும் சிவஞானம் சிறீதரனும் சீனித்தம்பி யோகேஸ்வரனும் தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.

  இவர்களில் சுமந்திரனும் சிறீதரனும் ஒரே காலத்தில் பாராளுமன்றப் பிரவேசம் செய்தவர்கள். ஜனாதிபதி சட்டத்தரணியான சுமந்திரன் 2010 ஏப்ரில் பொதுத்தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் மூலமாக பாராளுமன்றம் வந்து பிறகு 2015 ஆகஸ்ட், 2020 ஆகஸ்ட் பொதுத் தேர்தல்களில் கூட்டமைப்பின் வேட்பாளராக யாழப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு மீண்டும் பாராளுமன்றத்துக்கு தெரிவானார். கடந்த 14 வருடங்களாக அவர்  பாராளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.

    கிளிநொச்சி மகாவித்தியாலயத்தின்  முன்னாள் அதிபரான சிறீதரன் 2010, 2015, 2020 பொதுத் தேர்தல்களில் யாழ்ப்பாண மாவட்டத்தில்  கூட்டமைப்பின் வேட்பாளராக போட்டியிட்டு தொடர்ச்சியாக  பாராளுமன்றத்துக்கு தெரிவானார். அவருக்கும் 14 வருட பாராளுமன்ற அனுபவம்.

  யோகேஸ்வரன் 2010, 2015 பொதுத்தேர்தல்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில்  கூட்டமைப்பின் வேட்பாளராக போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு தெரிவாகி பத்து வருடங்கள் உறுப்பினராக இருந்தார்.

  தமிழரசு கட்சியின் பாரம்பரியத்தின் பிரகாரம் ஏகமனதாக தலைவரை தெரிவு செய்வதற்கு இந்த மூவருக்கும் இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்த முடியாவிட்டால் கட்சியின் வேறு ஒரு மூத்த முக்கியஸ்தரை தலைவராக ஏகமனதாக தெரிவுசெய்ய முயற்சிப்பதே கட்சியின் நலன்களுக்கு உகந்தது என்ற யோசனை சில தரப்பினரால் முன்வைக்கப்பட்டது.

  சுமந்திரன் மூன்று வாரகால வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு தமிழரசு கட்சியின் செயற்குழுவின் கூட்டம் கடந்த வாரம்  சம்பந்தன் அவர்களின் கொழும்பு இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  தினத்துக்கு முதல் நாளே நாடு திரும்பினார்.

  தேர்தலில் வெற்றி பெறுபவருடன் மற்றவர் கட்சியின் நலன்களைக் கருத்திற்கொண்டு ஒத்துழைத்துச் செயற்பட உறுதி பூண்டிருப்பதாக சுமந்திரனும் சிறீதரனும் முன்கூட்டியே அறிவித்திருந்தார்கள். கட்சியைப்  பிளவுபடுத்தக்கூடிய எந்த நடவடிக்கையிலும் இறங்கப்போவதில்லை என்று அவர்கள் கூறினார்கள்.

  கட்சி உறுப்பினர்களின் சில கூட்டங்களில் ஏற்கெனவே உரையாற்றிய சுமந்திரன் கிழக்கில் காரைதீவில்   கூட்டமொன்றில் வைத்து தனக்கு இவ்வருடம் 60  வயதாகிறது என்றும் 65 வயதானதும் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுவிடப் போவதாகவும் கூறினார்.

   அதேவேளை கிழக்கில் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் தனக்கு ஆதரவுதேடச் சென்ற சீறீதரன் ஆங்கில அறிவும் சட்ட அறிவும் மாத்திரம்  தலைவராகுவதற்கு போதுமான தகுதிகள் அல்ல, அந்த இரு துறைகளிலும் புலமை இல்லாத பலர் சிறந்த அரசியல் தலைவர்களாக திகழ்ந்து மக்களுக்கு பெருஞ்சேவை செய்ததை வரலாற்றில் கண்டிருக்கிறோம்  என்று செய்தியாளர்கள் மகாநாட்டில் கூறினார். காமராஜர்,  கருணாநிதி,எம்.ஜி.ஆர். பிரேமதாச என்று உதாரணங்களையும் அடுக்கினார்.

  ஆங்கில அறிவும் சட்ட அறிவும் கொண்ட சேர்.பொன் இராமநாதன், ஜீ.ஜீ. பொன்னம்பலம், தந்தை செல்வா, அமிர்தலிங்கம் ஆகியோரின் காலத்தில் தமிழ் மக்களுக்கு விடுதலை கிடைக்கவில்லையே என்றும் அவர் கூறினார்.

 அதற்கு முன்னதாக, யாழ்ப்பாணத்தில் தனியார் தொலைக்காட்சி சேவையொன்றுக்கு பேட்டியொன்றை அளித்த  வட மாகாணத்தின்  முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய யாழ்ப்பாண மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் சுமந்திரனையும் விட தமிழரசு கட்சியின் தலைவராகுவதற்கு சிறீதரன் தகுதி வாய்ந்தவர் என்றும் அவருக்கு ஆங்கில அறிவு குறைவாக இருந்தாலும் ஆற்றல்வாய்ந்த  மொழி பெயர்ப்பாளர்களை வைத்துக்கொண்டு சிறப்பாக செயற்பட முடியும் என்றும் கூறினார். 

  சுமந்திரன் சட்டக்கல்லூரியில் நீதியரசரின் மாணவன். தனது மாணவன்  தமிழரசின் தலைவராக வருவதை தான்  விரும்பவில்லை என்பதை வெளிப்படையாகவே அவர் காட்டிக்கொண்டார். 

 அதுபோக, உண்மையில் சிறீதரன் ஆங்கில, சட்ட அறிவு குறித்து அவ்வாறு  கருத்தை வெளியிட்டிருக்கவேண்டிய தேவையில்லை. அவருக்கு ஆங்கில அறிவு குறைவு என்பதால் தமிழரசு கட்சியின் தலைவராக வரமுடியாது என்று யாரும் பகிரங்கமாக கூறியதில்லை. அவர் விரும்பினால் இப்போது கூட சட்டக்கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கு எந்த தடையும் கிடையாது.

 இது இவ்வாறிருக்க, நீண்ட நாட்களுக்கு பிறகு கடந்த செவ்வாய்கிழமை பாராளுமன்றம் வந்த சம்பந்தன் அவர்களை சிறீதரன் சந்தித்துப் பேசினார். திருகோணமலை தமிழரசு கட்சிக்கிளை உறுப்பினர்கள் தெரிவில் தனது ஆதரவாளர்கள் புறக்கணிக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டிய சம்பந்தன் அந்த குறைபாடு சீர்செய்யப் படும்வரை கட்சியின் மகாநாட்டை ஒத்தி வைப்பதற்கு முயற்சிக்கிறார் என்ற ஒரு சந்தேகம் நிலவிய பின்னணியில் அவர் மகாநாடு திட்டமிட்டபடி நடைபெறவேண்டும் என்றும் தலைவர் தெரிவில் கட்சியின் பாரம்பரியம் பாதுகாக்கப்படவேண்டும் என்றும் சிறிதரனிடம் கூறினார்.

    பொதுச்சபையில் கருத்தொருமிப்புடன் தலைவர்  தெரிவாகக்கூடிய சூழ்நிலையை உருவாக்கும் அரசியல் வலிமை சம்பந்தனிடம் தற்போது இல்லை.

  மறுநாள் புதன்கிழமை அவரின் வாசஸ்தலத்தில் கட்சியின் செயற்குழுக் கூட்டத்திலும் ஏகமனதாக தலைவரைத் தெரிவு செய்வதற்கு மூன்று வேட்பாளர்களையும் இணங்க வைக்க முடியவில்லை. இறுதியில் சுமந்திரன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க மூவரும் கலந்துபேசி ஒரு முடிவுக்கு வருவதற்கு ஒரு நாள் அவகாசம் வழங்கப்பட்டது.

   ஆனால், மூவரும் மறுநாள் பாராளுமன்றத்துக்கு அண்மையாக மாதிவெலவில் சிறீதரனின் உத்தியோகபூர்வ இல்லத்தில்  சந்தித்தபோதிலும் இணக்கப்பாட்டுக்கு வரமுடியவில்லை. அதனால் தலைவரைத் தெரிவுசெய்வதற்கு தேர்தல் நிச்சயம் என்றாகிவிட்டது.

 சிறீதரனை ஆதரிக்கப்போவதாக ஏற்கெனவே அறிவித்திருந்த யோகேஸ்வரன் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவிக்கப் போவதில்லை என்றும் பொதுச்சபையில் வைத்து  தனது ஆதரவாளர்களிடம்  சிறீதரனுக்கு வாக்களிக்குமாறு  கேட்கப்போவதாகவும் யோகேஸ்வரன் கூறியதாக இந்த கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருந்த தருணத்தில் அறிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது.

   எதிர்காலப் போக்கு :

  இந்த இருவரில் எவர் தமிழரசு கட்சியின் தலைவராக வந்தாலும், தற்போதைய உள்நாட்டு மற்றும் சர்வதேச அரசியல் சூழ்நிலைகளில் தமிழர் அரசியலை வழிநடத்தும் கூட்டுப் பொறுப்புக்கு எவ்வாறு பங்களிப்பை வழங்கப்போகிறார்கள்  என்பதே முக்கியமான கேள்வி.

  தமிழர் அரசியலின் செல்நெறியைத் தீர்மானிப்பதில் தமிழரசு கட்சிக்கே தனியான  பங்கு இருப்பதாக கூறமுடியாவிட்டாலும், அதற்கு மற்றைய தமிழ்க் கட்சிகளை விடவும் கூடுதலான பாத்திரம் இருக்கிறது. உள்நாட்டு்ப் போரின் முடிவுக்கு பின்னரான கடந்த 15 வருட காலத்திலும் அந்த பாத்திரத்தை எந்தளவுக்கு பயனுறுதியுடையதாக அந்த கட்சி கையாண்டிருக்கிறது என்பதை இச்சந்தர்ப்பத்தில் ஒரு தடவை நாம் திரும்பிப் பார்க்கவேண்டும்.

  போரின் முடிவுக்குப் பிறகு வடக்கு,கிழக்கு தமிழர்கள் மத்தியில் கட்டுறுதியான அரசியல் சமுதாயம் ஒன்று இருக்காத நிலையில் அவர்களுக்கு தலைமை தாங்கும் பாத்திரம் தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் தானாகவே வந்துசேர்ந்தது. கூட்டமைப்பின் பிரதான அங்கத்துவக் கட்சி என்ற முறையில் அதில் கூடுதல் பொறுப்பு தமிழரசு கட்சிக்கும் அதன் அன்றைய தலைவர் சம்பந்தனுக்குமே  இருந்தது.

 உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலைவரங்களுக்கு ஏற்றமுறையில்  தமிழர்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதற்கான வரலாற்று முக்கியத்துவ பாத்திரம் அவர்களுக்குரியதாகவே இருந்தது.

  ஆனால் அந்தப் பாத்திரத்தை அவர்கள் சரியாகக் கையாளவில்லை. இலங்கை தமிழர்கள் அவர்களது அரசியல் வரலாற்றில் முன்னென்றும் இல்லாத வகையில்  ஒரு இக்கட்டான நிலையில் இருக்கிறார்கள்.

  சர்வதேச சமூகத்தின் தலையீடுகளினால்  கூட இலங்கை அரசாங்கத்தை வழிக்கு கொண்டுவர முடியவில்லை. தமிழ் அரசியல்வாதிகளும் சில  அவதானிகளும் புவிசார் அரசியல் நிலைவரங்கள் தமிழர்களுக்கு  வாய்ப்பாக அமையும் என்ற நம்பிக்கையைக் கொண்டிருந்தபோதிலும் நிலைமை தலைகீழாகவே மாறியது. 

  1987 ஜூலை சமாதான உடன்படிக்கையின் மூலமாக மாகாணசபைகள் அறிமுகம் செய்யப்படுவதற்கு உதவிய இந்தியாவினால் கூட அந்த நோக்கத்துக்காக 36 வருடங்களுக்கு  முன்னர் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தை இலங்கை அரசாங்கங்கள் நடைமுறைப்படுத்துவதை இன்றுவரை உறுதிசெய்யமுடியவில்லை. 

   உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தாலும், தமிழர்களுக்கு நீதி கிடைப்பதற்கான சாத்தியங்களைக் காணவில்லை. ஆனால் தமிழ் அரசியல்வாதிகள் தொடர்ந்தும் சர்வதேச சமூகத்தையே நம்பிக்கொண்டிருக்கிறார்கள். 

  தென்னிலங்கை சிங்கள அரசியல் சமுதாயத்தை பொறுத்தவரை இனப்பிரச்சினைக்கு சிறுபான்மை இனத்தவர்களின் நியாயபூர்வமான குறைந்தபட்ச  அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய ஒரு அரசியல் தீர்வைக் கூட  காணவேண்டிய தேவை இருப்பதாக கருதுவதாக இல்லை.

  தீர்வைக் காண்பதற்கு தென்னிலங்கையை நிர்ப்பந்திக்கக்கூடிய நெருக்குதலைக் கொடுப்பதற்கான வழிமுறை எதுவும் தமிழ் அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவர்களை நம்பி போராட்டங்களில் இறங்குவதற்கும் தமிழ் மக்கள் தயாரில்லை. பல தமிழ்த்  தலைவர்கள் கடந்த காலத்தில் தமிழர்களை வாழவைப்பதிலேயே நாட்டம் காட்டுகிறார்கள். அவர்கள் ஆயுதமேந்தப் போவதில்லை என்றபோதிலும் கடந்த கால ஆயுதப்போராட்டம் குறித்து பேசிக்கொண்டேயிருக்கிறார்கள். 

   புலம்பெயர்ந்த தமிழ்ச்சமூகத்தில் உள்ள தீவிரவாத நிலைப்பாடுகளைக் கொண்ட குழுக்களின் நிகழ்ச்சி நிரல்களுக்கு ஒத்துழைப்பவர்களாகவே பல தமிழ் தலைவர்கள் நடந்துகொள்கிறார்கள். வெளிநாடுகளினாலும் கையாளப்படக்கூடியவர்களாக அவர்கள் இருப்பது ஒன்றும் இரகசியமானதல்ல.

 நடைமுறை யதார்த்தங்களை உணராதவர்களாக தமிழ்த்தேசிய அரசியலை வெறுமனே உணர்ச்சிமயமான கற்பிதங்களுடன் பேசிக்கொண்டிருக்கும் அவர்கள்  கடந்தகால போராட்டங்களை காவியம் போன்று புகழ்பாடுவதில் திருப்தி காண்கிறார்கள்.

  இவற்றை விடுத்து கடந்தகால கசப்பான அனுபவங்களில் இருந்து  பெறக்கூடியதாக இருக்கும் படிப்பினைகளை அடிப்படையாகக் கொண்டு நடைமுறைச் சாத்தியமான பாதையை வகுக்கக்கூடிய ஆற்றல்களை இதுவரையில் வெளிப்படுத்த முடியாதவர்களாக தமிழ் அரசியல்வாதிகள் விளங்குகிறார்கள். ஒரு கட்சியின் நிலைப்பாட்டுக்கு மற்றைய கட்சி எதிர்வினையைக் காட்டுவதிலேயே காலம் கடந்துகொண்டிருக்கிறது.

  இவை தமிழரசு கட்சியின் புதிய தலைவர் சிந்தித்துப் பார்க்கவேண்டிய முக்கியமான விடயங்கள். பழைய தமிழரசின் அரசியலுக்கு புதிய தலைவர் தேவையில்லை.

  இறுதியாக தமிழரசு கட்சியின் தலைவர் தேர்தலில் யார் வெற்றிபெறவேண்டும்  என்பதில் ஏனைய தமிழ்க்கட்சிகள் உன்னிப்பான அக்கறையுடன் இருப்பது சுவாரஸ்யமான ஒரு  அம்சமாகும். அதற்கான காரணத்தை புரிந்துகொள்வதில்  தமிழர் அரசியலை உன்னிப்பாக அவதானித்துவரும் எவருக்கு சிரமம் இல்லை.

 ( ஈழநாடு )