(அரசியல் – சமூக – வரலாற்று நாவல்)
— செங்கதிரோன் —
கூமுனைக் கிராமத்திற்குப் போகும் வழியில் பாதையை ஒட்டியதாக நீர்நிலையொன்று பரந்துகிடந்தது. அதன் நடுவிலே பட்ட மரங்களும் ஓரங்களில் உயர்ந்த பச்சை மரங்களும் பற்றைக் காடுகளும் நீண்டுவளர்த்த புற்களும் நிறைந்து காட்சியளித்தன. அது சதுப்பு நிலக் காடாக இருக்க வேண்டுமென்று கோகுலன் எண்ணிக்கொண்டான்.
கதிரவேல் கோகுலனிடம் “இதுதான் கூமுன பறவைகள் சரணாலயம்” என்றான்.
பரந்துகிடந்த குளத்தின் நடுவினில் நீருக்குள் நின்றிருந்த பட்டமரங்களிலும் ஓரங்களில் நின்றிருந்த பச்சை மரங்களிலும் பலவகைப் பறவைகள் அமர்ந்து கொண்டும் அவற்றின் மேலால் சிறகடித்துப் பறந்துகொண்டும் இருந்தன. பச்சைப்பசேலென்று குடைவிரித்தாற் போன்று நின்றிருந்த மரங்களில் வெற்றிலையில் சுண்ணாம்பு அப்பியதைப்போல வெள்ளைக் கொக்குகள் மொய்த்திருந்தன.
மீன்கொத்திப் பறவைகள் மரக்கிளைகளில் அமர்ந்தவாறு மீன்களைக் குறிவைத்து நீர்ப்பரப்பைக் கூர்மையாக அவதானித்துக் கொண்டிருந்தன. ‘நெடுங்கழுத்தான்’ என அழைக்கப்படும் நீண்ட கழுத்தையுடைய நீர்க்காகங்கள் நீருக்குள் தலை தாழ்த்தி மூழ்குவதும் சிறிது தூரம் நீருக்குள்ளாலே சென்று பின்னர் நீர்மட்டத்திற்கு வெளியே தலையை நீட்டுவதுமாய் தமக்குள்ளே நீச்சல் போட்டி நடத்திக் கொண்டிருந்தன.
குளத்தின் கரைகளில் கணுக்கால் அளவிலான சப்புத் தண்ணீரில் நாரைகள் பல நின்று கொண்டிருந்தன. அவற்றில் சில தவம் புரியும் முனிவர்களைப் போல் ஒற்றைக் காலில் நின்றிருந்தன. அதைக் கண்டதும் கவிஞனொருவன் ‘நாலைப் போல் ( 4 ) காலை மடித்த நாரைகள்’ என்று வர்ணித்திருத்த கவிதை வரிகள் கோகுலனின் ஞாபகத்திற்கு வந்தன. ஒற்றைக் காலில் தாண்டவம் புரியும் நடராஜப் பெருமானின் தோற்றமும் மனக்கண்ணில் தோன்றிற்று. நாரைகளின் சொண்டுகளைப் பார்த்ததும் அவை பிளந்த பனங்கிழங்குகள் போல இருக்கின்றனவா என்று கூர்ந்து நோக்கினான். அதற்குக் காரணமும் இருந்தது. அவனுக்குப் பொத்துவில் மெதடிஸ்த மிசன் பாடசாலையில் ஐந்தாம் வகுப்பில் தமிழ்ப்பாடம் எடுத்த ‘பாரிசாதம் மாஸ்ரர்’ சங்ககாலத்துப் புலவரான சத்திமுத்துப்புலவர் பாடிய ‘நாராய்! நாராய்! செங்கால் நாராய்! பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன பவளக் கூர்வாய் செங்கால் நாராய்’ என்ற பாடலை உதாரணமாகக் கூறிக் கவிதைகளில் உவமைக்குப் பொருள் விளக்கம் தந்தது, அவனது மனதில் கள்ளிமரத்தில் ஆணி அடித்தது போல் பதிந்திருந்தது. நாரையைக் கண்டதும் அது நினவில் எழுந்ததே அதற்குக் காரணம். இளமையில் கல்வி சிலையில் எழுத்து அல்லவா· அந்தவயதில் அப்போது அப் பாடலின் பொருளை முழுமையாகப் புரிந்து கொள்வதற்குச் சற்றுச் சிரமமாகவே இருந்தது. ஆனால் இப்போது அது நன்றாகப் புரிந்தது. நாரையின் சொண்டின் வடிவமும் நிறமும் பிளந்த பனங்கிழங்குடன் பொருந்தும் உவமையை எண்ணியும் வியந்தான்.
குளத்தோரம் நின்றிருந்த மரங்களின் கிளை நுனிகளில் வீடுகளில் குழந்தைகளை உறங்கப் போடும் தூளிகளைப் போலத் தூக்கணாங்குருவிக் கூடுகள் ஏராளம் தொங்கின. சில கூடுகளுக்குள் தூக்கணாங்குருவிகள் போவதும் வெளிவருவதுமாகப் பறந்துகொண்டிருந்தன. அக்கூடுகளையும் குருவிகளையும் கோகுலன் சிறிதுநேரம் தன்னைமறந்து வைத்த கண் வாங்காது பார்த்துக் கொண்டு நின்றான்.
பின் கதிரவேலின் பக்கம் திரும்பி “கதிரவேல்! தமிழ்ப்பாடப் புத்தகமொண்டில படிச்ச பழம்பாடலொண்டு நினவில வருது” என்றான் .
“உங்களுக்கு பிறதர் படிச்சது வாசிச்சது எல்லாம் ஒண்டும் உடாம நல்ல ஞாபகம். என்ன பாடல் அதெண்டு சொல்லுங்களன் கேப்பம்” என்று கூறி அப்பாடல்வரிகளைக் கேட்கும் ஆவலுடன் கோகுலனைத் தூண்டினான் கதிரவேல்.
“தம்பி! அந்தப் பாடலச் சொல்லுங்களன். எனக்கும் ஆசயா இரிக்கி கேக்க” என்றார் பெரியவர் சாமித்தம்பி.
வான்குருவியின் கூடு வல்லரக்கு தொல் கறையான்
தேன்சிலம்பி யாவர்க்கும் செய்தரிதால் – யான்பெரிதும்
வல்லோமே என்று வலிமை சொல வேண்டாம் காண்
எல்லோர்க்கும் ஒவ்வொன் றெளிது.
என்று தனது நினைவில் பதிந்திருந்த அந்த ‘வெண்பா’ ப் பாடலை மிகவும் தெளிவாகக் கூறினான் கோகுலன்.
“அதிர விளக்கமென்ன தம்பி ” என்று விடுத்துக் கேட்டார் சாமித்தம்பி.
தூக்கணாங்குருவிக்கு வான்குருவி என்ற பெயருமுண்டு. வான்குருவியின்கூடு- தூக்கணாங் குருவியின் கூடு; வல்லரக்கு -மெழுகு தொல்கறையான் -கறையான் புற்று; தேன் – தேன்கூடு; சிலம்பி – சிலந்திவலை (இவற்றையெல்லாம்) யாவருக்கும் செய்தரிதால்- எல்லோராலும் செய்ய முடியாது. (அது அதுதான் செய்ய முடியும்). (ஆகவே) யான் பெரிதும் வல்லோமே என்று – நான்தான் வல்லவன்- கெட்டிக்காரன் என்று வலிமை சொல வேண்டாம் காண் – பெருமை பேசக்கூடாது; எல்லோர்க்கும் ஒவ்வொன் றெளிது – ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விடயம் எளிதாக இருக்கும்.
என்று ஆசிரியர் வகுப்பில் பாடம் எடுப்பதுபோல விளக்கம் கூறி முடித்தான் கோகுலன்.
பெரியவர் சாமித்தம்பியும் கதிரவேலும் கோகுலன் கூறிய விளக்கத்தை வியப்போடு கேட்டு மகிழ்ந்தார்கள்.
பெரியவர் சாமித்தம்பியும் தனக்கும் கொஞ்சம் விஷயம் தெரியும். தன்னிடமும் ‘சரக்கு’ உண்டு என்பதை வெளிப்படுத்தும் வகையில் ‘விட்டேனா பார்’ என்பது போல,
“தம்பிமாரே! தூங்கணாங்குருவி எண்டாப்போல அதுகளப் பற்றி எனக்கும் கொஞ்சம் விசயங்கள் தெரியும். சொல்லவா?” என்றார்.
“இதென்ன சாமி! காட்டுவழிப் பயணத்தில இப்படியான விசயங்கள கேக்கத்தானே உங்கள எங்களோட சேத்துக் கொண்ட நாங்க” என்று கதிரவேல் கூற, அவரும் பெருமிதத்தோடு இலேசாகச் சிரித்துக் கொண்டே கதையோடு கதையாக தூக்கணாங்குருவியைப் பற்றிக் கோகுலனும் கதிரவேலும் இதுவரை கேட்டறிந்திடாத சில விடயங்களைக் கூறி வைத்தார்.
தூக்கணாங்குருவி வற்றிவரண்ட குட்டைகளிலிருந்து களி மண்ணைக் கொணர்ந்து உருட்டிக், கீழ்நோக்கித் தொங்கும் தனது கூட்டில் வைத்துக் குளங்களில் முங்கி வந்து சிறகுகளில் ஒட்டியிருக்கும் நீர்த்திவலைகளைக் களிமண்ணில் தெளித்து கூட்டைக் குளிரூட்டிக் குஞ்சுகளுக்கு வெப்பம் தாக்காமல் வசதியேற்படுத்திக் கொடுக்குமாம்.
நார்களினால் வேயப்பட்ட அதன் பாரமற்ற கூடு காற்றில் ஆடாமலிருப்பதற்காக அதன் பாரத்தைக் கூட்டும் வகையில் களிமண்ணையும் கூட்டில் பொருத்தி வைக்குமாம்
இரவு நேரங்களில் குஞ்சுகளுக்குப் பயம் நீங்கவும் வெளிச்சம் பாய்ச்சவும் மின்மினிப் பூச்சுக்களைக் கவ்விக் கொணர்ந்து கூட்டில் ஈரக்களிமண்ணில் அவை வெளியே பறந்துவிடாதபடி சொருகி வைக்குமாம்.
ஆண்தூக்கணாங்குருவி கூட்டைக்கட்டி பெண்தூக்கணாங்குருவி அதனைப் பார்த்துத் திருப்திப்பட்டால்தானாம் அக்கூட்டில் இணைந்து வாழுமாம் . பெண்தூக்கணாங்குருவி திருப்தியடையவில்லையென்றால் ஆண்குருவி வேறு கூடுகட்டுமாம்.
இப்படியாகத் தூக்கணாங்குருவி பற்றிக் கதைத்து முடிந்ததும், சரணாலயச் சூழலில் தென்பட்ட உள்ளூரில் காணக்கிடைக்காத சில புதிய பறவைகளைச் சுட்டிக்காட்டி’ அவை என்ன பறவைகள்’ என்று கோகுலன் கதிரவேலிடம் வினவியபோது,
“அது பிறதர்! வெளிநாட்டுப் பறவைகள் . இடம்பெயர்ந்து வந்திரிக்கி. கொஞ்ச நாக்களில சொந்த நாடுகளுக்குத் திரும்பிப் போயிருங்கள்” என்று விடைபகன்றான் கதிரவேல்.
கோகுலனுக்கு அதைக் கேட்கப் புதிதாகவும் புதிராகவும் இருந்தது.
“காலநில மாறக்கொள்ள அதுகள் கடலக் கடந்து வரும் தம்பி” என்றார் சாமித்தம்பி.
கூமுனைப் பறவைகள் சரணாலயக் காட்சிகளை ரசித்தவாறும் அங்கிருந்த பறவைகள் பற்றிய தகவல்களைப் பரிமாறிக் கொண்டும் கோகுலன், கதிரவேல், பெரியவர் சாமித்தம்பி மூவரும் கூமுனை ஊருக்குள் நுழைந்தனர்.
ஊரில் முப்பது நாற்பது குடும்பங்கள்தான் வசிக்கின்றன என்று கதிரவேல் வழியிலேயே கூறியிருந்தான். சுற்றிவரக் காடு. நடுவிலே காட்டெருமைகள் படுத்துக் கிடப்பது போல ஆங்காங்கே தள்ளித் தள்ளி சிறுவீடுகள். ஊரின் நுழைவாயிருந்து குடியாட்டங்களின் அந்தம்வரை நெற்றி வகிடெடுத்தாற் போன்றிருந்த தரைப்பாதை யொன்று ஊருக்குள் நுழையும் வழியை அடையாளம் காட்டிற்று. பாதையின் இருமருங்கிலும் வீடுகள் இருந்தன. கோகுலனும் கதிரவேலும் பெரியவர் சாமித்தம்பியும் ஊருக்குள் நுழைவதைக் கண்ட ஊரவர்கள் முன்னுக்கு வந்து ‘யாரிவர்கள் ? என்பது போல் நோட்டம் பார்த்தனர். அவர்களின் உடல் மொழியைப் புரிந்துகொண்ட கதிரவேல் அவர்களிடம் தான் பாணமைப் பெரியதம்பிப் போடியாரின் மகன் என்று சிங்களத்தில் அறிமுகம் செய்து கொண்டான். கோகுலனைக் காட்டி உகந்தைக் கோயில் வண்ணக்கர் புஞ்சி மாத்தயாவரின் நெருங்கிய உறவினரென்றும் சாமித்தம்பியைக் காட்டிக் கதிர்காம யாத்திரையின்போது, தங்களுடன் இணைந்து கொண்டவரென்றும் அறிமுகம் செய்துவைத்தான். கூமுனை ஊராட்களுக்குக் கதிரவேலின் தந்தை பெரியதம்பிப் போடியாரையும் உகந்தை முருகன் கோயில் வண்ணக்கரையும் நன்கு தெரிந்தே இருந்தது. முகம் மலர்ந்து வரவேற்றார்கள். படைமுகத்திலும் அறிமுகம் வேண்டுமென்று சொல்வது இதனால்தானோ. கோகுலனும் கதிரவேலும் பெரியவர் சாமித்தம்பியும் ஊருக்குள் நுழைவதைக்கண்டு குரைத்துக்கொண்டு ஓடிவந்த இரண்டுநாய்கள் பின்னர் காட்டுக்குள் ஒட்டினாற்போல நிற்கும் மரங்கள் காற்றுக்கு ஒன்றையொன்று உராய்வதால் எழும் ஒலி போல உறுமிக்கொண்டு அப்பால் நின்றன.
காட்டுக்கம்புகளைச் சிறிய இடைவெளிகளில் நிலைக்குத்தாக நட்டு குறுக்கே கிடையாக சிறிய இடைவெளிகளில் வரிச்சுகள் வைத்து நார்களால் இணைத்துச் சதுர இடைவெளிகளில் ஈரக்களிமண் உருண்டைகளை இட்டு நிரப்பித் தட்டிப் பூசி மெழுகிய சுவர்களுடன் – காட்டுக்கம்புகளாலேயே சுவர்வளைகள், முகட்டுவளை, முட்டுக்கால்கள், மூலைக்கைமரங்கள் மற்றும் பக்கக் கைமரங்கள் வைத்துக் காட்டுக்கொடிகளால் பொருத்திக் கட்டிய கோப்பிசத்துடனும் – இலுக்குப் புற்களால் வேயப்பட்ட கூரையுடனும் – ஈரக் களிமண் பரப்பிப் பூசிச் சாணியால் மொழுகப்பட்ட தரையுடனும் சிறுசிறுவீடுகள் போதிய இடைவெளிகள் விட்டு ஆங்காங்கே நிலைகொண்டிருந்தன. வீடுகளைப் பிரிக்கும் வேலிகள் இல்லாத கூட்டுவாழ்க்கை அம்மக்களுடையது. இயற்கைச் சூழலில் நல்ல சுவாத்தியமான வீடுகள் எனக் கோகுலன் எண்ணிக்கொண்டான். வீடுகளை வேலிகள் பிரிக்காதது போல் அம்மக்களின் மனங்களை எந்த வேலியும் பிரிக்கவில்லை என்றும் எண்ணினான்.
ஆண்கள், உச்சியிலே இடிமின்னல் தாக்கிய பனைமரம்போல வாரிவிடப்படாத அலங்கோலப் பரட்டைத் தலையுடனும் சவரம் செய்யப்படாத முகத்தில் முளைத்த சிறுதாடி , மீசையுடனும் தோற்றமளித்தார்கள். இடுப்பிலே முழங்காலுக்குச் சற்றுக் கீழே நுனி தொங்கும் வண்ணம் கட்டையாகச் சாறன் கட்டியிருந்தார்கள். சிலர் மேலங்கியில்லாமலும் சிலர் கைவைத்த வெள்ளை நிற ‘பெனியன்’ அணிந்தும் இருந்தனர். பெண்களில் சிலர் பலவிதமான நிறங்களில் ரவுக்கையும் கணுக்கால் வரைக்கும் ‘லுங்கி’யும் அணித்திருந்தனர். ஒரு சில பெண்கள் சேலையும் கட்டியிருந்தார்கள்
சிறுவர் சிறுமியரைத் தவிர வயதுவந்த ஆண்கள் பெண்கள் அனைவருடைய பற்களும் வெற்றிலை பாக்குச் சப்பும் பழக்கம் காரணமாகக் காவிபடிந்திருந்தன. உடலுழைப்பின் காரணமாக அனைவருமே ஒட்டிய வயிறுடன் வைரம் பாய்ந்த உடற்கட்டமைப்புடன்தான் ஆண்கள் பெண்கள் அனைவருமே தோற்ற மளித்தார்கள். தொப்பை விழாத அவர்களின் வயிறு அவர்களைத் தொழிலாளர் வர்க்கமாக உயர்த்திக் காட்டிற்று .
கூமுனை ஊரவர்கள் பேசிய பாஷையின் ஒலியமைப்பும் உச்சரிப்பும் சற்று வித்தியாசமாகவிருந்ததைக் கோகுலன் அவதானித்தான். கோகுலனுக்குச் சிங்களம் சுமாராகத்தான் பேச வரும். கதிரவேல் அளவுக்குச் சரளமாகப் பேசவராது. ஊராட்களும் கதிரவேலும் சம்பாஷிப்பதைக் கூர்ந்து கவனித்த கோகுலன் கதிரவேலைப் பார்த்து,
“இவங்க பேசிற பாஷ என்ன?” என்று கேட்டான். கதிரவேல் , “அது பிறதர் . திருக்கோவில் பகுதியில றூவஸ்குளம், அலிகம்ப பக்கத்தில இரிக்கிற குற ஆக்கள் தங்களுக்குள்ள தெலுங்குப் பாஷ கதைச்சாலும் நம்மளோட பேசக்கொள்ள தமிழ்தான் பேசுவாங்க. ஆனா அவங்க பேசிற தமிழ் நமக்குச் சிலவேள விளங்கிறல்ல எலுவா? அது கொச்சத் தமிழ். அதுபோல கூமுன ஆக்கள் பேசிறது கொச்சச் சிங்களம். ரவுண் பகுதிகளில பேசிற சிங்களத்துக்கும் இவங்க பேசிற சிங்களத்துக்கும் கொஞ்சம் வித்தியாசமிரிக்கி. இஞ்ச சீவிக்கிற ஆக்களும் ‘பழங்குடி’ மக்கள்தான். இவங்களப் ‘பதுவர்’ எண்டு சொல்லுவாங்க” என்று கூமுனை ஊராட்களைப் பற்றிய அறிமுமொன்றினைக் கோகுலனுக்கு ஊட்டினான்.
“அப்படியெண்டா லகுகலப் பக்கமிருக்கிற ஹூலாநுகே, பக்கிமிட்டியாவப் பக்கமிருக்கிற ஆக்கள் பேசிறதும் கொச்சச் சிங்களம்தானே” என்றான் கோகுலன்.
“ஓம்! அதுவும் கொச்சச் சிங்களம்தான். ஆனா அது பறவால்ல ஓரளவு விளங்கும். கூமுன ஆக்கள்ற சிங்களம் அதவிடக் கொச்ச விளங்கிற கஸ்டம்” என்று விளக்கமளித்தான் கதிரவேல்.
பெரியவர் சாமித்தம்பிக்கும் அரைகுறையாகச் சிங்களம் பேச வரும். அவரும் அங்கு வந்த கூமுனை ஊராட்கள் சிலருடன் தனக்குத் தெரிந்த சிங்களத்திலும் சைகைகள் புரிந்து உடல் மொழியாலும் பேச்சுக் கொடுத்தார்.
அவர்களிடம் பேச்சுக் கொடுத்ததிலும் கதிரவேலின் மொழிபெயர்ப்பினூடாகவும், அவர்கள் வேட்டைத் தொழில் புரிபவர்களாகவும் வேட்டை நாய்களைப் பயன்படுத்துபவர்களாகவும் வேட்டைக்குச் செல்லும் வேளைகளில் பிடி முதுகுப்பக்கம் தொங்கும் வண்ணம் கைக்கோடரியைத் தோளில் கொழுவிச் செல்பவர்களாகவும் வேட்டையாடிவரும் மிருகங்களின் இறைச்சியை காட்டுக்கம்புகளைக் குறுக்குமறுக்கும் நெருக்கமாகக் கட்டிச் செய்த தட்டியில் பரப்பி அடுப்புக்கு மேலே கட்டித் தொங்கவிட்டு நெருப்பிலே வாட்டிக் காயப் போட்டு வரும் ‘காஞ்ச இறைச்சி’ (காய்ந்த இறைச்சி) யைத் தேனில் ஊறவைத்துத் தின்பதாகவும் அறியமுடிந்தது. தேனை மரத்தைக் குடைந்தெடுத்த ‘மரக்குடுவை’களிலும் முற்றிய நாடங்காய்களின் கழுத்தைக் குறுக்காக வெட்டி உள்ளீட்டைக் குடைந்தெடுத்த ‘சுரக்குடுவை’களிலும் சேமித்து வைப்பதாகவும் அறியமுடிந்தது . வேட்டைத் தொழிலைவிடச் சிறிய அளவில் வேளாண்மைப் பயிர்ச்செய்கை, கச்சான் – சோளன் – குரக்கன் உள்ளிட்ட சேனைப்பயிர்ச் செயகை , ஆடு, மாடு வளர்த்தல் போன்ற தொழில்களிலும் அவர்கள் ஈடுபடுகின்றனரென்றும் அவர்களுக்குப் பிடித்த உணவுகளில் குரக்கன் மாவில் அல்லது சோளனை இடித்தெடுத்த சோளன் குருணலில் அவித்த பிட்டும் ‘காஞ்ச இறைச்சி’ க் குழம்பும் பிரதானவை என்பதையும்- தமது குடியாட்டப் பகுதிகளில் பாம்புகளைக் கண்டால் அவற்றை அடித்துக் கொல்லாமல் நீண்ட தடிகளால் அவற்றை வேகமாக எத்திக் காட்டுப்பகுதிக்குள் எறிந்து அவற்றை உயிர்தப்ப விடுவரென்பதையும் – உணவுத் தேவைகளுக்காகவன்றி வேறு எந்தநோக்கங்களுக்காகவும் மிருகங்கள் எதனையும் வீணாகக் கொல்வதில்லை யென்றும் – தந்தமுள்ள யானைகளைக்கூடத் தொடுவதில்லை ( கொல்வதில்லை ) யென்றும் . ‘கவிலித்த’ அம்மன் கோயிலில்தான் அந்த அம்மனைப் ‘பத்தினித் தெய்யோ’ என அழைத்து அதிகமானவர்கள் வழிபடுபவர்களென்றும் சிலவேளைகளில் சிலர் உகந்தை முருகன் கோயிலுக்குச் சென்று வழிபடுபவர்களென்றும் அறிய முடிந்தது.
ஊரில் அவர்களுக்கென்று தமக்குள்ளே உள்ளூர்த் தலைவர் ஒருவரும் உள்ளார். அவருடைய சொற்படிதான் எல்லோரும் கட்டுப்பட்டு நடப்பர் .
சிறிய ஆரம்பப் பாடசாலையொன்றும் அங்கு அரசநிர்வாகத்தில் இயங்கியது. தேர்தல்காலங்களில் அச்சிறிய கிராமத்திற்கென்றே தனியான வாக்குச் சாவடி அரச அதிகாரிகளால் அமைக்கப்படுமாம்.
கூமுனைக் (குமண) கிராமம் ‘பொத்துவில்’ தேர்தல் தொகுதியிலும் உள்ளூராட்சி அலகைப் பெறுத்தவரை ‘பாணமைப்பற்று’க் கிராமசபையின் கீழும் நிர்வாக அலகைப் பொறுத்தவரை ‘பொத்துவில்’ பிரிவுக்காரியாதிகாரி – டி.ஆர்.ஓ. வின் கீழும் ( Divisional Revenue officer – DRO) அமைந்திருந்தது .
கதிரவேல், கோகுலனிடம் “இஞ்ச நல்லா மலிவா விளாம் பழம் வாங்கலாம். நல்ல விளாம்பழம் . தேனும் வாங்கலாம் நல்ல தேன்” என்றான்.
“மரத்தால பழுத்து உழுந்து புறக்கின விளாம் பழங்கள். விளாமரத்தில ஏறிக் கந்துகள உசுப்பிக் கீழ உழுந்த பழங்களும் இரிக்கி. இப்படி நல்லா மரத்தோட பழுத்த பழங்கள் வேறெங்கயும் கிடைக்கமாட்டா. தேனும் அப்படித்தான். காட்டுக்குள்ள போய் மரப்பொந்துகள வெட்டி வதயோட எடுத்துவந்து, புளிஞ்செடுத்த சுத்தமான தேன்” – ஊராட்கள் கொச்சைச் சிங்களத்தில் சொன்னதைக் கதிரவேல் மொழிபெயர்த்துத் தமிழில் இவ்வாறு ஒப்புவித்தான்.
“நல்ல சுத்தமான தேன் எண்டா தண்ணிக் கிளாசுக்குள்ள உட்டா கரையாம கீழ அடியில போய்ப்படியும். நாய்க்கு வச்சா தின்னாது” என்றார் பெரியவர் சாமித்தம்பி.
“அப்படியெல்லாம் பாக்கத் தேவல்ல . இஞ்சள்ளது சுத்தமான தேன்தான்” என்றான் கதிரவேல் குரலில் சற்றுக் கடுமையை ஏற்றியவனாக.
பெரியவர் சாமிதம்பி “நான் அதுக்குச் சொல்லல்ல . சும்மா தேனப்பற்றித் தெரிஞ்சதச் சொன்னனான் . பிழையா எடுக்காத தம்பி” என்றவர் தொடர்ந்து “தேனுக்குள்ள நெல்மணிகளப் போட்டு வச்சா பழுதாகாமக் கன நாளைக்கு இரிக்கும்” என்று தேன்பத்தித் தனக்குத் தெரிந்த விடயங்களைப் பெருமையோடு அவிழ்த்துச் சமாளித்தார்.
கதிரவேலின் தந்தை பெரியதம்பிப் போடியார் பாணமையில் வைத்துக் கொடுத்த காசு கோகுலனிடம் இருந்தது. கதிரவேலும் காசு வைத்திருத்தான். கூட்டிவந்த பெரியவர் சாமித்தம்பியிடமும் காசு இருந்தது.
40 மூவரும் கைகளில் தூக்கக்கூடியளவு சாக்குப்பைகளில் விளாம்பழங்களும் ஆளுக்கொரு தேன்போத்தலும் வாங்கிக் கொண்டார்கள். பெரியவர் சாமித்தம்பி, “பால பழுக்கிற காலம் தேன் நல்லா இனிப்பா இரிக்கும்” என்றார்.
காட்டில் தேனீக்கள் தேன் சேகரிக்கும் பூக்களைப் பொறுத்தும் தேனின் குணமும் சுவையுமிருக்குமாம். வேப்பமரம் பூக்கும் காலத்துத் தேன் சற்றுக் கசப்பாக இருக்குமாம். ஆனால் அதற்கு மருத்துவக் குணமுண்டாம் என்றும் கூறித் தன் தேன்மான்மியத்தை முடித்தார்.
புறப்படும்போது ஊராட்கள் மேலும் சிலர் வந்து எல்லோரும் கூடிநின்று அன்போடு வழியனுப்பி வைத்தார்கள். ஒருவர் ஒடிவந்து ஆளுக்கொரு விளாம்பழத்தை இலவசமாக ஒவ்வொருவருடைய கைகளிலும் திணித்தார்.
படிப்பறிவில்லாத அம்மக்களின் வஞ்சகமற்ற அன்பை உணர்ந்த கோகுலன் நகர்ப்புறங்களில் நாகரிகமாக வாழ்ந்து கொண்டு நயவஞ்சகத்தனமாகப் பழகும் ஆட்களை இம்மக்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தான். காட்டுப்புற வாழ்க்கையும் – கடின உழைப்பும் – வஞ்சகமில்தை வாழ்க்கை முறைகளும் – நுகர்வுக் கலாசாரம் தொற்றிவிடாத இவர்களது வாழ்க்கைக் கோலங்களும் – வணிகம் சாராத இம்மக்களின் மனப்போக்கும் – பூச்சுகளற்ற இம்மக்களின் உண்மை முகங்களும் மொத்தத்தில் இயந்திர நாகரிகத்தால் கற்பிழந்துவிடாத கூமுனை ஊர் மக்களின் வாழ்க்கை கோகுலனுக்குப் பிடித்திருந்தது.
கூமுனை ஊர்மக்களிடமிருத்து விடைபெற்றுக் கொண்டு மூவரும் ‘கவிலித்த’ அம்மன் கோவிலை நோக்கித் திரும்பி நடக்கத் தொடங்கினார்கள்.
( தொடரும் …. அங்கம் 17 )