— வீரகத்தி தனபாலசிங்கம் —
இலங்கை நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு இதுவரையில் எட்டு ஜனாதிபதி தேர்தல்கள கண்டிருக்கிறது. முன்னைய எந்த தேர்தலுமே அடுத்த ஜனாதிபதி தேர்தல் போன்று அது நடைபெறவிருப்பதற்கு பல மாதங்கள் முன்னதாகவே அரசியல் கட்சிகளினால் மாத்திரமல்ல, மக்களினாலும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் பரபரப்பாக பேசப்பட்டதில்லை.
மக்கள் கிளர்ச்சியை அடுத்து இடைநடுவில் 2022 ஜூலையில் பதவியைத் துறந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் எஞ்சிய பதவிக்காலத்துக்கு பாராளுமன்றத்தினால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவ்வருடம் நவம்பர் 18 ஆம் திகதி வரையுமே ஜனாதிபதி பதவியில் இருக்கமுடியும்.
அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடைவதற்கு ஒரு மாதத்துக்கு குறையாததும் இரு மாதங்களுக்கு மேற்படாததுமான காலப்பகுதிக்குள் அடுத்த ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதனால் எதிர்வரும் செப்டெம்பர் 18 ஆம் திகதிக்கும் அக்டோபர் 18 ஆம் திகதிக்கும் இடையிலான நாட்களே தேர்தலுக்கான காலப்பகுதியாகும்.
உள்ளூராட்சி தேர்தல்களை பொருளாதார நெருக்கடியைக் காரணம் காட்டி காலவரையறையின்றி ஒத்திவைக்கச்செய்த ஜனாதிபதி விக்கிரமசிங்க தேசிய தேர்தல்களையும் உரிய காலத்தில் நடத்தாமல் விடுவதற்கு முயற்சிக்கூடும் என்ற கடுமையான சந்தேகம் நிலவிய கட்டம் ஒன்று இருந்தது. ஆனால், இறுதியில் அவர் இவ்வருட பிற்பகுதியில் ஜனாதிபதி தேர்தலும் அதைத் தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலும் மாகாணசபை தேர்தர்களும் நடத்தப்படும் என்று அண்மைக் காலத்தில் பல தடவைகள் அறிவித்தார்.
அவ்வாறு அவர் அறிவித்த பின்னரும் கூட முதலில் எந்த தேர்தல் நடத்தப்படும் என்ற சந்தேகம் அரசியல் வட்டாரங்களில் நிலவுகிறது. கடந்த வருடம் பெப்ரவரிக்கு பிறகு எந்த நேரத்திலும் தற்போதைய பாராளுமன்றத்தை கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கிறது. தனக்கு அனுகூலமான அரசியல் சூழ்நிலையை உருவாக்குவதற்கு வசதியாக எதிர்வரும் மார்ச் மாதமளவில் பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டு விக்கிரமசிங்க பொதுத்தேர்தலுக்கு உத்தரவிடக்கூடும் என்று பல அரசியல் அவதானிகள் கருத்து வெளியிடுகிறார்கள்.
ஆனால், முக்கியமான எதிரணி அரசியல் கட்சிகள் கடந்த வருட நடுப்பகுதியில் இருந்தே ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகத் தொடங்கிவிட்டன. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை தங்களது ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய மக்கள் சக்தியும் அநுரா குமார திசாநாயக்கவை வேட்பாளராக தேசிய மக்கள் சக்தியும் சில மாதங்களுக்கு முன்னரே அறிவித்துவிட்டன. இரு கட்சிளுமே தேர்தல் பிரசாரங்களை ஏற்கெனவே தொடங்கிவிட்டன என்றுதான் கூறவேண்டும்.
விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என்று ஐக்கிய தேசிய கட்சி அரசியல்வாதிகள் கூறுகின்றபோதிலும், அவர் இன்னமும் தனது முடிவை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
பொருளாதார வங்குரோத்து நிலையை முடிவுக்கு கொண்டுவந்த பின்னரே தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பதைத் தீர்மானிக்கப்போவதாக ஜனாதிபதி கூறிவருகின்ற போதிலும், தனக்கு ஆதரவளிக்கக்கூடிய அரசியல் கட்சிகள்,குழுக்களின் பரந்த கூட்டணி ஒன்றை அமைப்பதற்கு அவர் முயற்சிகளை முன்னெடுத்த வண்ணமே இருக்கிறார்.
அந்த முயற்சிகள் எந்தளவுக்கு முன்னேற்றம் கண்டிருக்கின்றன என்பது தெரியவில்லை. ராஜபக்சாக்களின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த அமைச்சர்களும் அந்த கட்சியில் இருந்து வெளியேறி தனியாக இயங்கும் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒரு பிரிவினரும் விக்கிரமசிங்கவுக்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
தனது முடிவை அறிவிப்பதில் ஜனாதிபதி தந்திரமாக தயக்கம் காட்டினாலும் அவர் பெரும்பாலும் தேர்தலில் போட்டியிடுவார் என்றே தெரிகிறது. மக்களின் ஆணையுடன் ஜனாதிபதியாக வருவதற்கு இது அவருக்கு இறுதி சந்தர்ப்பமாக இருக்கலாம்.
அண்மையில் தேசிய மகாநாட்டைக் கொழும்பில் நடத்திய பொதுஜன பெரமுன ஜனாதிபதி தேர்தலில் அதன் வேட்பாளராக கோடீஸ்வர வர்த்தகர் தம்மிக்க பெரேராவை களமிறக்கப்போவதாக அறிகுறிகளைக் காட்டியிருக்கிறது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் போட்டியிடப்போவதாக அறிவித்திருக்கிறார். பெருவாரியான வேட்பாளர்கள் போட்டியிடக்கூடிய சாத்தியம் இருக்கிறது.
இதுவரையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களில் மிகவும் குறைந்த எண்ணிக்கையான வேட்பாளர்கள் போட்டியிட்ட ஜனாதிபதி தேர்தல் என்றால் அது ஜே.வி.பி.யின் இரண்டாவது கிளர்ச்சிக்கு மத்தியில் நடத்தப்பட்ட 1988 டிசம்பர் தேர்தலேயாகும். ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக முனானாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளராக முன்னாள் பிரதமர் சிறிமா பண்டாரநாயக்கவும் ஸ்ரீலங்கா மகாஜன கட்சி வேட்பாளராக ஒஸீ அபேகுணசேகரவும் போட்டியிட்டனர்.
2019 நவம்பர் ஜனாதிபதி தேர்தலில் 35 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர். அதுவே மிகவும் கூடுதல் எண்ணிக்கையான வேட்பாளர்கள் போட்டியிட்ட தேர்தலாகும். இந்த தடவை அதை விடவும் கூடுதலான வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
பதவியில் இருக்கும் ஜனாதிபதி பலம்பொருந்தியவராக இருந்தால் அவருக்கு எதிராக எதிரணிக் கட்சிகள் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவது வழமை. ஆனால், இந்த தடவை அவ்வாறு பொதுவேட்பாளரை நிறுத்துவது குறித்து பரிசீலிக்கவேண்டிய அவசியம் தென்னிலங்கை அரசியல் கட்சிகளுக்கு இல்லை எனலாம்.
ஜனாதிபதி விக்கிரமசிங்க மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கைக் கொண்டவராக இல்லை. அவரது ஐக்கிய தேசிய கட்சி மிகவும் பலவீனமான நிலையில் இருக்கிறது. அத்துடன் வரி அதிகரிப்புகளின் விளைவான கடும் விலைவாசி உயர்வுக்கு மத்தியில் அவர் வரும் நாட்களில் மக்களின் மனங்களை வென்றெடுக்கக்கூடிய சாத்தியமும் இல்லை. வேண்டுமானால் சில கட்சிகள் கூட்டணி அமைத்து களமிறக்கக்கூடிய வேட்பாளரை பரபரப்புடன் கூடிய பிரசார நோக்கத்துக்காக பொதுவேட்பாளர் என்று பெயரளவில் அறிவிக்கக்கூடும்.
ஆனால், இந்த தடவை ஒரு விசித்திரமான நிகழ்வுப்போக்காக சில தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவது குறித்து பேசத் தொடங்கியிருப்பதைக் காணக்கூடியிருக்கிறது. இத்தகைய ஒரு யோசனை முன்னர் ஒருபோதும் தமிழர் அரசியலில் எழுந்ததில்லை.
ஜனாதிபதி தேர்தல்களில் முன்னரும் தமிழ் வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். 1982 அக்டோபர் 20 நடைபெற்ற முதல் ஜனாதிபதி தேர்தலில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் தலைவர் குமார் பொன்னம்பலம் போட்டியிட்டார். நாடுபூராவும் அவருக்கு 173,934 வாக்குகள் மாத்திரமே கிடைத்தன.
அந்த தேர்தலில் அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவை எதிர்த்து சுதந்திர கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட ஹெக்டர் கொப்பேகடுவவை விடவும் யாழ்ப்பாண மாவட்டத்தில் பொன்னம்பலம் சுமார் 10 ஆயிரம் வாக்குகளையே கூடுதலாகப் பெற்றார். வன்னி மாவட்டத்தில் அவரை விடவும் கொப்பேகடுவ 10 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றார். கிழக்கு மாகாணத்தின் தேர்தல் மாவட்டங்களில் பொன்னம்பலத்துக்கு கிடைத்த வாக்குகள் கணக்கில் எடுக்கக்கூடியவை அல்ல.
அவருக்கு பிறகு ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கிய தமிழ் அரசியல் கட்சி ஒன்றைச் சேர்ந்த வேட்பாளர் சிவாஜிலிங்கமே. அவர் 2010 ஜனவரி ஜனாதிபதி தேர்தலிலும் 2019 நவம்பர் ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிட்டார். அவர் பெற்ற வாக்குகளைப் பற்றி பேசத் தேவையில்லை. தான் தோன்றித்தனமாக நடந்துகொள்ளும் அவர் ஒரு தடவை பாராளுமன்ற தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டார். எதற்காக என்பது அவருக்கே வெளிச்சம்.
நவசமசமாஜ கட்சியைச் சேர்ந்த சுந்தரம் மகேந்திரனும் எமது தேசிய முன்னணி என்ற கட்சியைச் சேர்ந்த சுப்பிரமணியம் குணரத்தினமும் முறையே 2015 ஜனவரி ஜனாதிபதி தேர்தலிலும் 2019 ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிட்டனர்.
தற்போது பொதுத் தமிழ் வேட்பாளர் குறித்து பேசுபவர்களில் சிலர் தமிழர்களின் குறிப்பாக வடக்கு கிழக்கு தமிழர்களின் வாக்குகள் அடுத்த ஜனாதிபதியை தெரிவுசெய்வதில் ஒரு தீர்க்கமான பங்கை வகிக்கும் என்று நம்புகிறாரகள் போலும். அதை தமிழர் அரசியலுக்கு சாத்தியமான அளவுக்கு அனுகூலமாகப் பயன்படுத்தலாம் என்பது அவர்களது எதிர்பார்ப்பாக இருக்கலாம்.
பொதுத் தமிழ் வேட்பாளராக போட்டியிடுபவர் தனக்கு கிடைக்கக்கூடிய தமிழ் மக்களின் ஆதரவை பேரம் பேசும் சக்தியாக பயன்படுத்தி பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களிடம் இனப்பிரச்சினை தீர்வுக்கு உத்தரவாதங்களைப் பெறுவதற்கு முயற்சிக்கலாம் என்றும் அவ்வாறு ஏதாவது உத்தரவாதத்தை தரக்கூடிய வேட்பாளருக்கு பிரதியுபகாரமாக தனது ஆதரவை அவர் அளிக்கலாம் என்றும் கூட ஒரு தரப்பு யோசனை கூறுகிறது.
சிறுபான்மை இனத்தவர்களின் வாக்குகள் ஜனாதிபதி தேர்தலின் வெற்றியாளரை தீர்மானித்த காலம் ஒன்று இருந்தது. கடந்த நூற்றாண்டின் பிற்பகுதி வரை இருந்த அந்த நிலைவரம் இந்த நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து பெரும்பாலும் மாறிவிட்டது.
அதேவேளை, ஜனாதிபதியாக ஒருவரை தெரிவு செய்வதற்காக அல்ல பெரும்பாலும் தமிழர்கள் யார் ஜனாதிபதியாக வரக்கூடாது என்ற அடிப்படையில் சிந்தித்தே வாக்களித்து வந்திருக்கிறார்கள். அவர்களின் வாக்குகளுக்கு ஒரு ஆட்சேபப் பரிமாணமே இருந்தது.
2015 ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சவை தோற்கடிப்பதற்கு மைத்திரிபால சிறிசேனவுக்கு சிறுபான்மை இனத்தவர்களின் வாக்குகளே உதவிய சந்தர்ப்பம் இதில் ஒரு விதிவிலக்காக அமைந்திருந்தாலும், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச சிங்கள மக்களின் அதிகப் பெரும்பான்மையான வாக்குகளை சுவீகரித்து மகத்தான வெற்றியைப் பெற்றார்.
அந்த தேர்தலில் சிறுபான்மை இனத்தவர்களின் வாக்குகள் எந்த செல்வாக்கையும் செலுத்த முடியவில்லை. தன்னை நாட்டின் தலைவராக பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மக்களே தெரிவு செய்தார்கள் என்று கோட்டாபய பகிரங்கமாகப் பிரகடனம் செய்தார்.
அதேவேளை இன்றைய அரசியல் சூழ்நிலையில் சில தமிழ் அரசியல்வாதிகள் எதிர்பார்ப்பதைப் போன்று எந்தவொரு பிரதான வேட்பாளரும் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் எந்த உத்தரவாதத்தையும் தமிழர்களுக்கு தரப்போவதில்லை. குறைந்தபட்சம் தற்போது அரசியலமைப்பில் உள்ள 13 திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கூட உறுதிமொழியைத் தரப்போவதில்லை.
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் இனப்பிரச்சினைக்கான தீர்வு விவகாரம் முக்கியமான ஒரு பேசுபொருளாக அமையாமல் இருப்பதை உறுதிசெய்துகொள்ளும் தந்திரமான நோக்குடன்தான் ஜனாதிபதி விக்கிரமசிங்க கடந்த வாரம் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருடன் நடத்திய சந்திப்பின்போது அடுத்த பொதுத்தேர்தலுக்கு பிறகு தெரிவு செய்யப்படும் பாராளுமன்றமே புதிய அரசியலமைப்பு ஒன்றின் மூலமாக அரசியல் தீர்வைக் காணும் முயற்சிகளை முன்னெடுக்கும் என்று அறிவித்தார்.
இதன் மூலமாக அவர் தன்னை மாத்திரமல்ல ஏனைய முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களையும் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் உத்தரவாதம் ஒன்றை வழங்கவேண்டிய பொறுப்பில் இருந்து விடுவித்துவிட்டார் எனலாம்.
இத்தகைய சூழ்நிலையில் பொதுத் தமிழ் வேட்பாளர் பிரதான வேட்பாளர்களுடன் பேரம் பேசுவதற்கான வாய்ப்பு பெரும்பாலும் இருக்கப்போவதில்லை.
உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து 15 வருடங்கள் நிறைவடையப்போகும் நிலையில், தமிழர்கள் எத்தகைய அரசியல் தீர்வை இன்று நாடிநிற்கிறார்கள் என்பதை தென்னிலங்கைக்கும் உலகிற்கும் காண்பிக்க அவர்களிடமிருந்து ஒரு ஆணையைப் பெறுவதற்கு ஜனாதிபதி தேர்தலைப் பயன்படுத்தவேண்டும் என்று யோசனை கூறும் ஒரு தரப்பினரும் இருக்கிறார்கள். இது பொதுத் தமிழ் வேட்பாளரை நிறுத்தும் யோசனைக்கு அவர்கள் முன்வைக்கும் நியாயப்பாடு.
இவர்கள் வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு பிறகு 1977 ஜூலை பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கு தமிழர்கள் தமிழர் விடுதலை கூட்டணிக்கு வழங்கிய ஆணைக்கு நேர்ந்த கதியை ஒரு கணம் சிந்தித்துப்பார்க்கவேண்டும். தனித்தமிழ் நாட்டைக் காண்பதற்கு அமைதிவழியில் போராடுவதற்கு ஆணையை தமிழ் மக்கள் தங்களுக்கு தந்ததாக உரிமை கோரிய அன்றைய தமிழ்த் தலைவர்களின் அரசியலுக்கு நேர்ந்த பரிதாபம் இன்றைய அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடமாக அமையவேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழ் மக்கள் இன்று எதிர்நோக்குகின்ற உடனடிப் பிரச்சினைகளை கையாளுவதற்கு கூட ஒன்றுபட்டுச் செயற்பட முடியாத இன்றைய தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பொதுவேட்பாளர் ஒருவரை தெரிவுசெய்வதில் கருத்தொருமிப்புக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கமுடியுமா? அவ்வாறு கருத்தொருமிப்பின் மூலமாக பொதுவேட்பாளராக தெரிவாவதற்கு தானும் வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் மக்கள் மத்தியில் பரந்தளவு ஏற்புடைமையைக் கொண்ட ஒரு தமிழ் அரசியல்வாதியோ சிவில் சமூகப் பிரதிநிதியோ இன்று இருக்கிறாரா?
உள்நாட்டுப் போருக்கு பின்னரான காலப்பகுதியில், கடந்த கால அனுபவங்களில் இருந்து பெற்றுக்கொண்ட படிப்பினைகளின் அடிப்படையில் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை பயனுறுதியுடைய முறையில் அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதற்கு வழிகாட்டத்தெரியாத இன்றைய தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்களின் தன்னகம்பாவத்துக்கு வடிகால் தேடுமுகமாக விபரீதமான அரசியல் விளையாட்டில் இறங்காமல் தமிழ் மக்களை அவர்கள் விரும்புகிற முறையில் வாக்களிக்க அனுமதிப்பதே சிறந்தது. தமிழ் அரசியலை உலகில் நகைப்புக்கிடமானதாக்காமல் இருந்தால் அதுவே போதும்.
(வீரகேசரி வாரவெளியீடு )