வரிவலி….!         வளர்ச்சிக்கு  வாய்க்கரிசி போட்ட மக்களும், மன்னர்களும்.!(மௌனஉடைவுகள் -64)

வரிவலி….! வளர்ச்சிக்கு வாய்க்கரிசி போட்ட மக்களும், மன்னர்களும்.!(மௌனஉடைவுகள் -64)

— அழகு குணசீலன் —

 இலங்கையில் 2024 மக்களுக்கு பெரும் வரி வலியோடு பிறந்திருக்கிறது.  பிரசவ வலியற்ற பிறப்பு மக்களின் எதிர்பார்ப்பு?, இது  சாத்தியமா?  இந்த வரிவலியானது அனைத்து பிரச்சினைகளினதும் அடிப்படையும், முதன்மையானதும் பொருளாதாரமே என்பதை மீண்டும் ஒருமுறை  நிரூபித்துள்ளது. 

குறிப்பாக  உரிமைக்கும் அபிவிருத்திக்கும் இடையிலான தமிழர் அரசியலில் இனப்பிரச்சினை  தற்காலிக ஓய்வை எடுத்துக்கொண்டுள்ளது -பின்தள்ளப்பட்டுள்ளது. இதனால் அரசியல் தீர்வை விடவும், மேலதிகபெறுமான தீர்வை(வரி) அதிகரிப்பு  தாக்கம் பற்றியே எல்லாத்தரப்பும் உச்சரிக்கின்றனர். வெறுமனே இந்த நெருக்கடிக்கு கடந்தகால யுத்தம் ஒரு காரணம் என்று கதை சொல்லி தமிழ் ஊடகங்கள் தங்கள்  “கடமையை” மறந்து விடுகின்றன. 

மக்கள் மீதான இந்த சுமை ராஜபக்சாக்களின் ஆட்சியின் ஒரு விளைவு என்று காட்ட முயற்சிப்பதன் உண்மைத்தன்மை எவ்வளவு? அல்லது யுத்தமே காரணம் என்பது முற்றிலும் சரியானதா? தவறான பொருளாதார கொள்கை வகுப்பும், இலஞ்சம், ஊழல், சமூக, பொருளாதார  அபிவிருத்தி திட்டங்களில் முகாமைத்துவ குறைபாடுகள், கொந்துராத்து அரசியலின் வங்குரோத்து நிலை, ….. என்று ஆட்சிசெய்த கட்சிகளின் – தலைமைத்துவங்களின் தவறுகள் என்ற பட்டியல் மட்டுமா?

இல்லை, துட்டகைமுனுவாகவும், இராஜசிங்கனாகவும், பண்டாரவன்னியனாகவும், சங்கிலியனாகவும் தங்களுக்கு தாங்களே முடி சூடிக்கொண்ட “மன்னர்கள்” மட்டும் காரணமா…?  

ஒரு ஜனநாயக  பாராளுமன்ற அரசியலில் இந்த பொருளாதார நெருக்கடியில் மக்களின் வகிபாகம் என்ன?  சுதந்திரம் பெற்ற காலம் முதல் சேனநாயக்க முதலான பண்டாரநாயக்க தொடர்ந்த ஜயவர்தன -பிரமதாச…..  சிறிசேன -ராஜபக்சாக்கள், ரணில் விக்கிரமசிங்க  ஆட்சியாளர்களே காரணம் என்றால் அவர்களின் தேர்தல் வெற்றியை மட்டும் குறிவைத்த சமூக, பொருளாதார கொள்கைக்கு அங்கீகாரம் வழங்கிய மக்களின் “இலவசங்கள்” மீதான மோகம் பெரும் பங்கை வழங்கியிருக்கிறது.

 சமகால நோக்கில் சர்வதேச, பிராந்திய பூகோள அரசியல், உக்ரைன், பாலஸ்தீனம் மீதான யுத்தம் , உலகமயமாக்கத்தின் தாக்கம், காலனித்துவம் விட்டுச்சென்ற வைக்கோல் இழுத்த வழியை மக்களும், மன்னர்களும்  விரும்பிய/ பின்பற்றிய “கடன்வாங்கி கல்யாணம்”  பொருதாரக்கொள்கை ஊடகங்களிலும், ஆய்வுகளிலும் காணமல்போய்விடுகிறது. இது ஒட்டுமொத்த பொறுப்புக்கூறலை தவிர்த்து ஓடும் பொருளாதார அரசியல்.   

பிராந்தியத்தின் இந்திய -சீன அழுத்தங்கள் பற்றி மட்டுமே ஓரளவு பேசப்படுகிறது. அதிலும் பெருமளவான நோக்குகளில் பொருளாதாரத்தைவிடவும், சுய இலாப கட்சி அரசியலே முதன்மை பெறுகிறது.

ஜனநாயக அரசியலில் மிகப்பெறுமதி வாய்ந்த வாக்குரிமையை மக்கள் ஆட்சியாளர்களுக்கு “கடன்வாங்கி கல்யாணம்” செய்ய வழங்கினார்கள்.

இந்த நீண்ட காலமாக தொடர்ந்த  அரசியல் பாணியின் பயனை இப்போது அறுவடை செய்கிறார்கள். எனவே இந்த  பொருளாதார நெருக்கடிக்கான பொறுப்பு மக்களுக்கும் உண்டு. 

பாராளுமன்றத்தில் மட்டும் அன்றி காலிமுகத்திடலிலும்  மானிய/ கடன் உயர்கல்வி பெற்ற பல்கலைக்கழக மாணவர்களோ, அத்தியாவசிய உணவுப்பொருட்களுக்கான மானியங்களை அனுபவித்த மக்களோ, உரமானியத்தை பெற்ற விவசாயிகளோ, வங்குரோத்து நிலையிலும் சம்பள உயர்வு கேட்டு போராட்டம் நடாத்திய ஆசிரியர் சங்கமோ இவற்றில் தமக்கும் பங்குண்டு என்பதை  மறைத்து நெருக்கடியை பயன்படுத்தி கதிரையை பிடிக்க கட்சி அரசியல் செய்தனர். இதனால் தான் காலிமுகத்திடல் போராட்டம் தோல்வியில் முடிந்தது. கோத்தபாயவின் கதிரையில் ரணில் அமர்ந்ததும் கதைமுடிந்தது. இவை தான் காலிமுகத்திடல் பேசிய மக்கள் புரட்சி, சமூக, பொருளாதார,அரசியல் கட்டமைப்பு மாற்றம், புதிய அரசியல் கலாச்சாரம். நலிந்திருந்த பொருளாதாரத்திற்கு காலிமுகத்திடல் ஏற்படுத்திய நஷ்டம் – அரச, தனியார் சொத்தழிப்பு எவ்வளவு?  இவர்கள் தேசபக்தர்கள்…..?

கூப்பன் அரிசி அரசியல்….!

————————–

காலனித்துவகால மானிய அரசியலை கட்சிகள் சுதந்திரத்தின் பின்னரும் தொடர்ந்து பின்பற்றின. பின்பற்றின என்றாலும் பரவாயில்லை ஆட்சியை கைப்பற்ற அவை ஏட்டிக்குப்போட்டியாக அத்தியாவசிய  பொருட்களுக்கான மானியங்களை தேர்தல் வாக்குறுதியாக ஏறுவரிசையில் அதிகரித்தன. இது  வறிய மக்களுக்கான சிறிய தூண்டில் என்றால்  மத்தியதர, முதலாளி வர்க்கத்திற்கான சலுகைகள் இன்னும் பெரிய தூண்டில்களாக போடப்பட்டன. நீண்டகால சமூக, பொருளாதார, அரசியல் தெளிவற்ற மக்கள் அரிசிக்காக தங்கள் வாக்குகளை வழங்கினர். மன்னர்களுக்கு ஆட்சி, மக்களுக்கு அரிசி.

இந்த நிலை 1970 வரை தொடர்ந்தது.  இது THE SHORT -RUN EFFCT ON THE POOR. வறுமைமீதான குறுங்காலத் தாக்கம். நீண்டகால பொருளாதார அபிவிருத்தி பற்றி மன்னர்களும் பேசவில்லை. மக்களும் கேட்கவில்லை.

அன்றைய  அதிக ஏற்றுமதி வருமானம், குறைந்தளவான சனத்தொகை, உள்நாட்டு உற்பத்தியில் இருந்த  ஓரளவு தளம்பலற்ற ஸ்த்திரத்தன்மை, அந்தியச்செலாவணி மேலதிக இருப்பு என்பன காரணமாக 1970 வரை  மக்கள் விரும்பிய இந்த கூப்பன் அரிசி அரசியலை  அரசாங்கங்களால் சமாளிக்க முடிந்தது. ஆனால் இதனை தொடர்ந்தும் செய்யமுடியாது என்று அறிந்திருந்தும் சிறிமாவோ பண்டாரநாயக்கா அரசாங்கம் அரிசியைச் சொல்லி ஆட்சிக்கு வந்து, அரிசி மானிய அரசியலில் கைவைத்தது. அன்றைய ஆடம்பர இறக்குமதிகளை கட்டுப்படுத்தி, உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்கும் பல பொருளாதார அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தியது. கல்வி , வைத்தியம், சத்துணவு போன்ற சமூக நலதிட்டங்களில் சில மாற்றங்களை அறிமுகம் செய்தது. கிராமிய பொருளாதார அபிவிருத்தி ஒரு ஏற்றத்தை காட்டியது. ஆடம்பரங்களை அனுபவித்த மத்திய, முதலாளி வர்கத்தினர் இதை எதிர்த்தனர். 

1970- 1977 இல் வடக்கு கிழக்கில் பொருளாதாரம் வளர்ச்சி கண்டது. விவசாய உற்பத்தியாளர்களின் வருமானம் அதிகரித்தது. வயல்வாடிகளில் வழமைக்குமாறாக பைசிக்கிளை பார்க்கவும், வானொலியை கேட்கவும் முடிந்தது. கிராமிய மக்களின் சேமிப்பு அதிகரித்தது. உணவுத் தட்டுப்பாடு உள்ளூர் உப உணவுப்பொருட்களின் நுகர்வை ஊக்குவித்தது. இளைஞர்களின் வேலையின்மை அவர்களை  அரசாங்க வேலையில் இருந்த கவர்ச்சியை விவசாயத்துறை நோக்கி திருப்பியது. அணிசேராக்கொள்கை, சுயதேசிய பொருளாதார கொள்கை, இடதுசாரி அரசியல், வருமானப்பங்கீட்டை சீர்செய்கின்ற மானிய, சொத்துடைமை -காணிச்சீர்திருத்தங்கள் என்பனவற்றின் விளைவாக கிழக்காசியாவில் குறிப்பிடக்கூடிய முன்மாதிரியையும், தலைமைத்துவ பண்பையும் இலங்கை பெற்றிருந்தது.

இந்தியாவில் ஆட்சிகள் மாறினாலும் பொருளாதார கொள்கையிலும், வெளிநாட்டு கொள்கையிலும் பாரிய மாற்றங்கள் அற்று தொடரப்படும். இலங்கையில் அந்த நிலை இல்லை. இதனால் முதலாளித்துவ, மேற்குலக  சார்பு ஐக்கிய தேசியக்கட்சி 1978 இல் ஆட்சியை கைப்பற்றியது. மத்திய, முதலாளித்துவ வர்கத்தினரை திருப்திப்படுத்தும் திறந்த பொருளாதாரம், ஆடம்பர நுகர்வு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு ……, அறிவித்து ஆட்சியைப் பிடித்தார் ஜே.ஆர்.ஜெயவர்த்தன. இன்றுவரை சமூக, பொருளாதார கொள்கையில்லாத தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகள் இனப்பிரச்சினையை முதலீடாகவும், ஐக்கிய தேசியக் கட்சியின் பொருளாதார கொள்கை விசுவாசிகளாகவும் செயற்பட்டன. 

வடக்கு -கிழக்கில் மட்டுமன்றி நாடுமுழுவதும் கடந்த ஆட்சிகாலத்தில் கட்டி எழுப்பப்பட்ட சுதேசிய பொருளாதாரம் சிதைக்கப்பட்டு, கட்டற்ற இறக்குமதி, கைத்தொழில் -சுதந்திரவர்த்தகவலய வெளிநாட்டு முதலீட்டு பொருளாதாரம் அறிமுகமாகியது.  மக்கள் முதலாளித்துவ நுகர்வு கலாச்சாரத்திற்கு பழக்கப்பட்டார்கள்.  ஆகா….ஓகோ….இதுவல்லோ வாழ்க்கை என்று  வரைவிலக்கணம் வகுத்தார்கள். இவர்களை மீண்டும் சுதேசிய பொருளாதாரம் நோக்கி முழுமையாக திருப்ப முடியாத நிலைமை  அடுத்த ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டது. ஆட்சியை பிடிக்க நினைப்பவர்கள் வரையறுக்கப்பட்ட நிலைக்குள் செயற்படவேண்டிய சூழலை ஏற்படுத்தியது.  சர்வதேச பொருளாதார உலகமயமாக்கம், பிராந்திய பொருளாதார போட்டி, பழக்கப்பட்ட இறக்குமதி சார்ந்த நுகர்வு கலாச்சாரம் என்பனவற்றிற்கு இடையே பயணிக்க வேண்டிய கட்டாயம் இலங்கை பொருளாதாரத்திற்கு ஏற்பட்டது. இவற்றை பூர்த்தி செய்கின்ற ஆட்சியே நல்லாட்சி என்று காட்சிப்படுத்தப்பட்டது. மக்கள் அதை நம்பினர், தங்கள் வாக்குகளால் அங்கீகாரம் வழங்கி அடுத்த ஆட்சியை கொண்டு வந்தனர். 

பொருளாதார அபிவிருத்திக்கான முதலீட்டு செலவுகளை விடவும், உணவுமானியம், மற்றும் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து போன்ற சமூகநல செலவுகள் வரவு- செவலுவுத்திட்டத்தில் அதிகரித்தது. மறுபக்கத்தில் யுத்தம் பாதுகாப்பு செலவீனங்களை அதிகரித்தது. உள்நாட்டு உற்பத்தியில் ஏற்பட்ட வீழ்ச்சி இறக்குமதியை வேண்டி நின்றது. பெருந்தோட்ட ஏற்றுமதிகளில் ஏற்பட்ட வருமானவீழ்ச்சி, அளவுக்கதிகமாக ஆடைத்தொழிலும், வெளிநாட்டு வேலைவாய்ப்பிலும் அந்நியச் செலாவணிக்காக தங்கியிருக்கும் நிலையை ஏற்படுத்தியது.

மற்றைய ஆசிய நாடுகள் ஆடைத்தொழிலுக்கும், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கும் போட்டியானபோது இந்த தங்கியிருத்தலின் தவறு உணரப்பட்டது.

காலப்போக்கில் வரவுசெலவுத்திட்ட செலவுகளில் நடைமுறைச் செலவுகள் பெரும்பங்கை வகித்தன.  இதில் மானியங்களுக்காக பெரும்தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தச் சூழலில் வெளிநாட்டு கடன்களில் தங்கியிருக்கவேண்டிய நிலையை ஏற்படுத்தியது. இது எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் ஏற்பட்டிருக்கக்கைடிய பொதுநிலை. ஜே.வி.பியின் பொருளாதாரக் கொள்கையோ, அல்லது மற்றைய கட்சிகளின் பொருளாதாரக்கொள்கையோ இந்த நிலையை இரவோடிரவாக மாற்றியிருக்கமுடியாது.

இதன்போது வெளிநாட்டு கடன், உதவிகளை நுகர்வு மானியமாக வழங்குகின்ற நிலைக்குமாறாக உற்பத்தி துறைக்கு பயன்படுத்தும் கொள்கை வகுக்கப்பட்டது. 1962 இல்  பசுமைப்புரட்சி காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு  1989 வரை இருந்துவந்த உரமானியமுறையில் மாற்றம் செய்யப்பட்டது. 1990 -1994 வரை உரமானியம் வழங்கப்படவில்லை. 1995 -2004 காலப்பகுதியில் யூரியா நைதரசன் பசளைக்கு மட்டும் மானியம் வழங்கப்பட்டது. 2005 இல் இருந்து மீண்டும் முக்கிய மூன்று நைதரசன் (N) பொஸ்பரஸ் (P) பொட்டாசியம் (K)  பசளைகளுக்கு மானியம் வழங்கப்பட்டது. ஒரு புறம் உணவுமானியம், மறுபுறம் உரமானியம் மக்கள் – விவசாயிகள் பெற்றுக்கொண்டார்கள். உரமானியம் நெல்உற்பத்தியில் கணிசமான அதிகரிப்பை பதிவு செய்தது. விவசாயிகளின் வருமானத்தில் அதிகரிப்பு ஏற்பட்டது.

இதனால் தான் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் சிறிசேனவுக்கு எதிராக தோல்வியுற்ற போது சிங்கள மக்களின் வீடுகள் செத்தவீடுகளாக காட்சி அளித்தன, சில தினங்கள் அடுப்பு எரியவில்லை. ஏழை விவசாயிகள் கதறி அழுதனர். இந்த  மானியங்களை அரசாங்கம் கடன்வாங்கித்தான் தருகிறது என்பதை மக்கள் அறிந்திருக்கவில்லை. 

இப்படி அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்படுகின்றதும், குறைந்த விலையில் வழங்கப்படுகின்றதும், வாகனங்களுக்கான இறக்குமதி சலுகை, வாகன கொள்வனவுக்கு அரசாங்க ஊழியர்களுக்கான சலுகைகள் அனைத்தும் வழங்கப்பட்டபோது இவற்றால் நன்மை அடைந்தவர்கள் மக்கள். இப்போது பொருளாதாரம் அதற்கு இடம்கொடுக்கும் நிலையில் இல்லை, கடன்களை திருப்பிச் செலுத்தாத நிலையில் மீண்டும் கடன்பெற கடுமையான நிபந்தனைகளை நாடு எதிர்கொள்ள வேண்டி உள்ளது.

இந்த நிலையில் ஜனாதிபதி கோத்தபாய மீண்டும் கட்டுப்பாடான பொருளாதார கொள்கை நோக்கிய பயணத்தை ஆரம்பித்தபோது நாட்டை அடவுவைத்துத்தான் தங்களுக்கு இந்த வசதியை அரசாங்கம் செய்கிறது என்பதை மக்கள் புரிந்துகொள்ள தவறியதால், இவற்றில் அரசாங்கம் கைவைத்தபோது மக்கள் அரசாங்கத்தை எதிர்த்தனர். பொறுப்புள்ள ஜனநாயக அரசியலில் எதிர்க்கட்சிகள் இதில் குளிர்காய நினைத்தனவேயன்றி சரியான தீர்வொன்றை காண்பதற்கு அரசாங்கத்திற்கு ஒத்துழைக்கும், மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பையும் தட்டிக்கழித்து “தாங்கள்”ஆட்சியில் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காது, அப்படி நடந்திருக்காது என்று பூச்சாண்டி அரசியல் செய்யத்தொடங்கியது.

இரசாயன பசளைக்கு பதிலாக சேதனப்பசளை, இறக்குமதி கட்டுப்பாடு, வரிவிதிப்புக்களை மேற்கொண்டு வரவு-செலவுத்திட்ட பற்றாக்குறையை நிரப்பவேண்டிய நிலையில், வெளிநாட்டு கடன்களை -வட்டியை திருப்பிச்செலுத்த முடியாததால் மக்கள் எதிர்பார்த்த “மானிய ஆட்சியை” கோத்தபாயாவால் வழங்க முடியவில்லை. நல்லாட்சியின் ஐந்தொகையும் சேர்ந்து பொருளாதார நெருக்கடிக்குள் இலங்கை தள்ளப்பட்டது.  ஆக, இந்த நெருகடி ஒரு தொடர்கதை – சங்கிலித் தொடர்.

தவறான பொருளாதார கொள்கை வகுப்பு, தவறான துறைகளில் முதலீடுகள், வெளிநாடுகளின், சர்வதேச நிதி நிறுவனங்களின் நிதி உதவிகளுக்கு கடுமையான நிபந்தனைகள் இத்தனைக்கும் மத்தியில் ஐ.எம்.எப். அனுசரணையின்றி  சரிந்து கிடக்கின்ற பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த முடியாது. இதனால்  விரும்பியோ, விரும்பாமலோ ஐ.எம்.எப். இன் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் அரசாங்கத்திற்கு இருக்கிறது. இந்த நெருக்கடிக்கு மக்களும், எதிர்க்கட்சிகளும்  பங்குதார்கள் என்பதால் இலங்கையின் எதிர்காலத்திற்கான  சில செயற்பாடுகளை சகித்துக்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. முதலீடு, ஏற்றுமதி, உற்பத்தி அதிகரிப்பு என்பனவற்றிற்கான வாய்ப்புகள்  வரையறுக்கப்பட்டுள்ள  நாட்டின் அரை வங்குரோத்து நிலையில் மானிய செலவுகளை குறைப்பதும், வரி வருமானத்தை அதிகரிப்பதுமான ஒரு வரவு செலவு திட்டத்தையே எந்த ஒரு அரசாங்கமும்  இன்றைய நிலையில் செய்யமுடியும்.

          “அழுதும் பிள்ளை அவளே பெறவேண்டும்”.