(‘ அரங்கம் ‘ தொடர் நாவல்)
— செங்கதிரோன் —
உகந்தையிலிருந்து காலைத்தேனீருடன் மட்டும் கால்நடையில் புறப்பட்ட கோகுலனின் தாயாரின் யாத்திரை அணியிலிருந்த அனைவருக்கும் வெயில் ஏறத் தொடங்கியதும் பசி இலேசாக வயிற்றைக்கிள்ளத் தொடங்கியது.
யாத்திரைக் குழுவினர் காலைச் சாப்பாடு இல்லாமல்தானே உகந்தையிலிருந்து புறப்பட்டிருந்தார்கள். கோகுலனும் கதிரவேலும் தமக்குள்ளே காதுக்குள் ‘பசிக்கிறது’ என்று பேசிக்கொண்டதை இருவருடைய தாய்மாரும் காதில் விழுத்திக் கொண்டனர். அதனால் காலை ஒன்பதுபோல் காட்டுப் பாதையில் நின்ற நாவல் மரமொன்றின்கீழ் கூடாரவண்டில் நிறுத்தப்பட்டது. நாவல் மர நிழல் நல்ல ‘குளுமை’யாக இருந்தது. ஊரிலிருந்தே செய்துகொண்டுவந்திருத்த ‘பொரிவிளாங்காய்’ மற்றும் . ‘சீனிமா’ போன்ற உணவுப் பண்டங்கள் அனைவருக்கும் பரிமாறப்பட்டன. கோகுலனின் இளையக்காவின் குழந்தைக்குத் தேவையான பால் உணவுகள் உகந்தையிலிருந்தே தயாரித்துப் போத்தலில் இட்டு அடைத்துக் கொண்டுவரப்பட்டிருந்தது. குழந்தைக்குத் தேவையான உணவு மற்றும் மருத்துப் பொருட்கள் யாவும் சிறு ‘கைத்தூக்கு’ ப் பைகளிலேயே காவிவரப்பட்டன. அவசரமாகத் தேவைப்பட்டாலும் என்பதால் இந்த ஏற்பாடு.
பசியைப் போக்கிக் கொண்டபின் பயணம் தொடர்ந்தது. காலைச்சாப்பாட்டைப் பொரிவிளாங்காயோடும் சீனிமாவுடனும் சமாளித்துக் கொண்டு யாத்திரைக்குழு முன்னால் கூடாரவண்டிலைச் செல்லவிட்டுப் பின்னால் நடையைத் தொடர்ந்தது.
பகல் பதினொரு மணிபோல் ‘வாகூரவெட்டை’ யை அடைந்தார்கள். வாகூரவெட்டை உகந்தையிலிருந்து ஐந்துகட்டைத் (மைல்) தூரம். வாகூரவெட்டையை அடைந்ததும் கூடாரவண்டிலில் கொண்டுவந்த சாமான்களை இறக்கிச் சமையல் வேலை தொடங்கிற்று. இவர்களுக்கு முன்னேயே வந்திருந்த யாத்திரிகர்களும் அங்கு இருந்தார்கள்.
உகத்தையிலிருந்து வாகூரவெட்டைக்கு ‘யால’ வனவிலங்குகள் சரணாலயத்தினூடான காட்டுப்பாதைப் பயணத்தின்போது வாகூரவெட்டையை அண்மித்த பகுதிகளில் பாதையோரம் இருந்த சிறுகுட்டைகளைக் கண்டபோது, அங்கு சென்று அக்குட்டைகளின் ஓரமாக இருந்த ஈரநிலத்திலிருந்து . ‘திராய்க்கீரை’ போன்றதொரு சிறுதாவரத்தைப் பிடுங்கிச் சேகரித்துக் கொண்டுவந்தான் கதிரவேல். அத் தாவரம் திராய்க்கீரை போன்றே நிலத்தில் படர்வதாகும். அதன் இலைகள் திராய்க்கீரையின் இலைகளைவிடச் சற்றுப் பெரிதாக அகன்றும் வட்டவடிவமாகவும் தடிப்பாகவும் இருந்தன. கதிரவேலிடம் கேட்டபோது அதன் பெயர் ‘உப்புருவி” என்றான். பிடுங்கிக் கொணர்ந்த உப்புருவியைத் அவனது தாயாரிடம் கொடுத்தான் . “மத்தியானச் சோத்துக்குச் சுண்டித் தின்னலாம்” என்று கூறி அதனை வாங்கி எடுத்துக் கொண்டார் கதிரவேலின் தாயார்.
மேலும், வாகூரவெட்டைக்குப் போகும்வழியில் காட்டுப்பகுதிகளில் வீரை மற்றும் பாலை மரங்கள் நன்கு பழுத்துக்கிடந்தன. அவற்றை அவதானித்திருந்த யாத்திரைவந்த ஆண்களில் சிலர் கைகளிலே கத்தியும் சிறுகோடரியும் சிறு ஒலைப்பெட்டிகளும் எடுத்துக்கொண்டு காட்டுக்குள் இறங்கினர். கோகுலனும் கதிரவேலும் இளைஞர்களாக இருந்தபடியால் வீரப்பழம், பாலைப்பழம் ஆயவென்று காட்டுக்குப் புறப்பட்ட பெரியவர்கள் அவர்களையும் விரும்பினால் தங்களுடன் வரும்படி அழைத்தனர்.
தாய்மார்களிடம் அனுமதிபெற்றுக்கொண்டுக் கோகுலனும் கதிரவேலும் பெரியவர்களுடன் காட்டுக்குள் நுழைந்தனர்.
பெரியவர்கள் சிலர் நன்கு பழுத்திருத்த வீரமரங்களிலும் பாலைமரங்களிலும் ஏறிப் பழங்கள் அதிகமாக இருந்த கந்துகளைக் கத்தியாலும் கோடரியாலும் வெட்டிக் கீழே விழுத்தினார்கள். கீழே தரையில் விழுந்த கந்துகளிலிருந்து கழன்ற பழங்கள் தரையிலே உருண்டு சிதறின. கீழே நின்றவர்கள் அவற்றைப் பொறுக்கி வாயில் போட்டுக் கொண்டே கந்துகளில் இருந்த பழங்களை ஆய்ந்து ஓலைப்பெட்டிகளில் நிரப்பினார்கள். கோகுலனும் கதிரவேலும் அவர்களைப்போலவே கீழே நிலத்தில் விழுந்து கிடந்த பழங்களைச் சாப்பிட்டுக்கொண்டு அதன் பருப்புகளை, வெளியே துப்பிக்கொண்டே கந்துகளிலிருந்து பழங்களை ஆய்வதற்கு அவர்களுக்கு உதவினர்.
போதுமான அளவிற்குப் பழங்களை ஆய்ந்தபின்பு எல்லோருமாகப் பழங்கள் நிரப்பப்பட்ட ஒலைப்பெட்டிகளைத் தோளிலும் தலையிலும் காவிக் கொண்டு தாங்கள் தங்கியிருக்கும் இடத்திற்குத் திரும்பினர்.
திரும்பி வரும்போது கதிரவேல், பாலைமரங்கள் பழுக்கும் நாட்களில் பாலைப்பழம் தின்னவென்று கரடிகள் காட்டுக்குள்ளே திரியுமாம். மனிதர்களைக் கண்டால் தூரத்தே நின்று பயங்கரமான தோற்றத்துடன் வாயைப்பிளக்குமாம். தனியாக நின்றால் சத்தமில்லாமல் வந்து ஆளைக் கட்டிப்பிடித்துவிடுமாம். கரடியிலிருந்து விடுபட வேண்டுமென்றால் அதற்கு இடுப்பில்தான் தாக்கவேண்டுமாம். கரடி தனது பின்னங்கால்கள் இரண்டையும் நிலத்தில் ஊன்றிக் குந்தியவண்ணம் முன்னம் கால்கள் இரண்டையும் கைகளைப்போல் மடக்கித் தொங்கப் போட்டுக் கொண்டு மனிதனைப் போல் நிலைகுத்தாக எழுந்து நிற்குமாம் என்றெல்லாம் கரடிக் கதைகள் சொல்லிக்கொண்டு வந்தான். கதிரவேலுடன் பயணிப்பது கோகுலனுக்கு மகிழ்ச்சியாயிருந்தது. அவன் இதுபோன்ற சவாரசியமான கதைகளும் தகவல்களும் கூறிக்கொண்டு வந்ததால் நடைப் பயணம் அலுப்பில்லாமல் இருந்தது. தனது அப்பச்சியோடும் (அம்மப்பா) தந்தையாரோடும் வயல்களுக்கும் சேனைப் பயிர்ச் செய்கைப் பிரதேசங்களுக்கும் காடுகளுக்குள்ளும் போய்வந்த அனுபவங்கள் அந்த இளவயதிலேயே அவனுக்கு நிறைய வாய்த்திருந்தது.
ஓலைப்பெட்டிகளில் நிரம்பிக் கொணர்ந்த வீரப்பழங்களும் பாலைப்பழங்களும் வாகூரவெட்டையில் நின்றிருந்த எல்லா யாத்திரிகர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டன.
வீரப்பழத்தைச் சாப்பிட்டு எல்லோருடைய வாயும் வெற்றிலைச் சிவப்பாகி நின்றனர். பற்களும்கூட வீரப்பழத்தோல்கள் ஒட்டிப்பிடித்துக் கொண்டிருந்தபடியால் அவைகளும் சிவப்பாகத் தோற்றம் காட்டின. வீரப்பழக் ‘கசறு’ உதடுகளில் படித்து உலர்த்து விறைச்சதுபோல் ஒரு மாதிரியாக இருந்தது. பாலைப்பழம் சாப்பிட்டு உதடுகளில் அதன் பசைத்தன்மையுள்ள பால் படிந்து உதடுகள் ஒன்றோடொன்று ஒட்டியொட்டிக் கழன்றன. பெரியவர் ஒருவர் தேங்காய் எண்ணெயை உதடுகளில் பூசித் தடவினால்தான் பாலைப்பழப் பாலின் பசை போகும் என்றார்.
கதிரவேல் கோகுலனிடம் “காட்டுக்குள்ள எங்க தேங்காண்ணைக்குப் போற. அவர்ர கதயப் பாரு” என்று சொல்லிச் சிரித்தான் . காட்டுச் செடிகளின் இலைகளை ஆய்ந்து அனைவரும் உதடுகளில் உரசிச் சுத்தப்படுத்திக் கொண்டார்கள்.
பகல் மூன்றுமணி போல்தான் சமையல் வேலைகள் முடிந்தன. எல்லோரும் சாப்பிட்டு விட்டுச் சற்றுத் தரையிலே சாய்ந்து இளைப்பாறினார்கள்.
அன்றிரவு வாகூரவெட்டையிலே தங்கி அடுத்த நாள் ‘கூமுனை’ செல்வதென்று தீர்மானிக்கப்பட்டது. பகல் சமைக்கும்போது இரவைக்கும் சேர்த்துச் சமைத்து இராச் சப்பாட்டுக்கும் வைத்துக் கொண்டார்கள்.
காட்டுக்குள்ளே இரவிலே தங்குமிடங்களில் சமைப்பதற்குத் தண்ணீர் மற்றும் வெளிச்சவசதிகள் இல்லையென்பதாலும் அப்படிச் சமைப்பதென்பது அசௌகரியங்கள் அதிகம் என்பதால் பகலில் சமைக்கும்போதே இரவைக்கும் சேர்த்தே சமைத்துக் கொள்வார்கள் அல்லது நேரத்தைப் பொறுத்து பகலுக்கும் இரவுக்கும் சேர்த்து ஒரு சமையல்தான் வைத்துக் கொள்வார்கள்.
கோகுலனும் கதிரவேலும் ஏனைய யாத்திரிகர்களைப் போலவே சாப்பிட்டு விட்டுத் தரையில் பாய்களை விரித்து ஒரு குட்டித் தூக்கமும் போட்டு எழுந்தார்கள் . மாலை கருக்கலாகிக் கொண்டுவந்தது.
ஒவ்வொரு யாத்திரிகர் குழுவும் காட்டுக்குள் விறகுகள் பொறுக்கி வந்து ‘தீனா’ப்போட்டு நெருப்பு மூட்டி விட்டுப் பாதுகாப்பான – வசதியான இடங்களில் அமர்ந்துகொண்டார்கள்.
இரவுநேரத்தில் காட்டுக்குள்ளே தங்கும்போது விலங்குகள் நடமாடும் இடங்களுக்கு அருகில் தங்கக்கூடாது. விலங்குகள் நீர் அருந்துவதற்கு நீர்நிலைகளுக்குச் செல்லும் வழியாகவும் இருக்கக்கூடாது. யானை, காட்டு மாடு போன்ற விலங்கினங்கள் விரும்பி உண்ணும் புல், இலைகுழை வகைகளும் அருகில் இருக்கக்கூடாது. யானை, காட்டுமாடு போன்ற விலங்குகள் வந்தாலும் படுத்துக்கிடக்கும் ஆட்களுக்குப் பக்கத்தில் வராமல் இருப்பதற்கான தடுப்புகள் இருக்கவேண்டும். அத்தகைய தடுப்புகளில் ஒன்றுதான் தீ மூட்டி விடியவிடிய எரிந்து கொண்டிருக்கும் ‘தீனா’க்கள். இவற்றையெல்லாம் கவனத்திலெடுத்துத்தான் கதிர்காம யாத்திரிகர்கள் காட்டுக்குள்ளே இராத்தங்கலுக்கான இடத்தைத் தேர்ந்தெடுப்பார்கள். வாகூரவெட்டைத் தங்குமிடத்தையும் அவ்வாறுதான் தேர்த்தெடுத்திருந்தார்கள்.
ஆங்காங்கே இடைவெளிவிட்டு சுற்றிவரத் ‘தீனா’க்கள் எரிந்துகொண்டிருந்ததையும் அவைகளுக்கு அருகில் யாத்திரிகர்கள் தரையில் அமர்ந்திருந்ததையும் படுத்துக்கிடந்ததையும் பார்த்தபோது காட்டில் வாழும் பழங்குடி மக்களின் வாழ்க்கையை வைத்துத் திரைப்படமொன்று எடுத்தால் அதில் வரும் காட்சிபோல இருக்கிறது எனக் கோகுலன் தன் கற்பனையில் எண்ணிக் கொண்டான்.
மறுநாள் காலைத் தேனீருடன் வாகூரவெட்டையிலிருந்து ‘கூமுனை’ நோக்கிய பயணம் தொடங்கிற்று. வாகூரவெட்டையிலிருந்து கூமுனைக்கு ஏழுகட்டைத் ( மைல் ) தூரம்.
வாகூரவெட்டையிலிருந்து கூமுனை நோக்கிப் புறப்பட்ட யாத்திரை அணி இடையிலே ஓரிடத்தில் ஒரு பெரிய பாலைமரத்தின்கீழ் இளைப்பாறிக் காலைச் சாப்பாடாக அவல் சாப்பிட்டார்கள். வாகூரவெட்டையிலிருந்து புறப்படும்போதே தேங்காய் துருவியும் அவலைச் சற்று நீரில் போட்டு இளகவைத்தும் அவற்றைப் பாத்திரங்களில் இட்டு வண்டிலில் வைத்துக் கொணர்ந்திருந்தார்கள். நடைப் பயணத்தில் சாமான்களைக் காவுவதற்குக் கூடாரவண்டிலை வாடகைக்கு அமர்த்திக் கொண்டதால் திருவிலை – கத்தி – கோடரி – பீங்கான் கோப்பைகள் – சட்டிபானைகள் -அகப்பை மற்றும் கரண்டிகளென்று சமையலுக்கும் சாப்பாடு தயாரிப்பதற்கும் தேவையான உபகரணங்களையும் ஏற்றிக்கொண்டுவர வாய்ப்பாகவும் வசதியாகவும் போய்விட்டது.
துருவிக் கொணர்ந்த தேங்காய்ப் பூவையும் இளகவைத்த அவலையும் சேர்த்துப் பிசைந்து சீனியும் போட்டுப் பிரட்டி எல்லோருக்கும் தாராளமாகப் பரிமாறப்பட்டது. காலைப் பசியை அவல் அடக்கியது. கால்நடைப் பயணமும் களைப்பின்றித் தொடர்ந்தது.
யாத்திரைஅணி பகல் பதினொருமணிபோல் கூமுனை ‘கவிலித்த’ அம்மன் கோவிலைச் சென்றடைந்தது. அங்கு சென்றடைந்ததும் முதல் வேலையாக வண்டிலிலிருந்து தேவையான சாமான்கள் இறக்கப்பட்டுப்’ பொங்கல் வைப்பதற்கான ஏற்பாடுகள் ஆரம்பமாகின.
கோகுலனும் கதிரவேலும் குளிப்பதற்கான உடைகளை மாற்றிக்கொண்டு காட்டுக்குள் அடுப்பு மூட்டுவதற்கான விறகுகளைச் சேகரித்துக் கொடுத்துவிட்டு, அங்கு ஏற்கெனவே வந்திருந்த ஏனைய யாத்திரிகர்கள் சிலருடன் சேர்ந்து குளிப்பதற்குக் கூமுனை ஆற்றில் (குமுக்கன் ஓயா) இறங்கினார்கள். குமுக்கன் ஆறு என்றும் இதனை அழைப்பதுண்டு. குமுக்கன் ஆற்றங்கரையோரம்தான் ‘கவிலித்த’ அம்மன்கோவில் சிறியதொரு ஒற்றைக் கட்டிடத்தில் அமைந்திருந்தது. கதிர்காமத்திற்குக் காட்டுவழியே நடந்து செல்லும் யாத்திரிகர்கள் அனைவரும் இக்கோவிலுக்கு வந்து தங்கி அம்மனுக்குப் பொங்கிப் படைத்துத்தான் செல்வர்.
குமுக்கன் ஆற்றின் இரு கரைகளிலும் ஓங்கி வளர்ந்து கிளைபரப்பி நின்ற மருதமரங்களின் நிழல் ஆற்றுநீரைக் குளிரூட்டி அது ‘சில்’ லென்று இருந்தது. மூக்கைப் பொத்திப் பிடித்துக் கொண்டு வாயையும் மூடியபடி தண்ணீருக்குள்ளே தலையைத் தாழ்த்தி மூழ்கி எழும்ப நடந்துவந்த உடல் அலுப்பு எங்கே போனதென்றே தெரியவில்லை. உடல் அலுப்பையெல்லாம் ஆற்றுநீர் உறிஞ்சி எடுத்துக் கொண்டது. குமுக்கன் ஆற்றங்கரை குளிரூட்டப்பெற்ற அறைக்குள்ளே இருப்பது போன்ற உணர்வையே ஏற்படுத்திற்று.
கோகுலனும் கதிரவேலும் குமுக்கன் ஆற்றில் உடலலுப்புத் தீர நன்கு மூழ்கிக் குளித்து வெளியே வருவதற்கும் ‘கவிலித்த’ அம்மனுக்கான பொங்கல் வேலைகளை முடித்துப் பெண்களும் ஆற்றில் குளிப்பதற்கு ஆயத்தமாவதற்கும் நேரம் சரியாக இருந்தது.
எல்லோரும் ஆற்றில் மூழ்கிக் குளித்து வந்த பின்னர் அம்மனுக்குப் ‘படையல்’ செய்து கற்பூரம் கொளுத்திக் கும்பிட்ட பின்னர் தரையிலே அரைவட்டம் போட்டமர்ந்து காட்டில் ஆய்ந்து வரப்பட்ட அகலமான ‘சமுள’ மரத்து இலைகளிலே பரிமாறப்பெற்ற பொங்கலைச் சுவைத்துண்டு பசியாறினார்கள். பீங்கான் கோப்பைகள் கொணர்ந்திருந்தாலும்கூட காட்டில் பறித்த பச்சை இலைகளிலே வைத்துச் சாப்பிடுவது ஒரு தனிச்சுவை என்பதால் அப்படிச் சப்பிடத்தான் அனைவரும் விரும்பினர்.
தனி ஆளாகக் கதிர்காமயாத்திரை வந்திருந்த மட்டக்களப்பு வந்தாறுமூலையைச் சேர்ந்த சாமித்தம்பி என்பவர் கூமுனையில் வைத்துக் குமுக்கன் ஆற்றிலே குளிக்கும்போது கோகுலனுக்கும் கதிரவேலுக்கும் தானாகவே அறிமுகமாகிக் கொண்டார். ஐம்பது வயதைத் தாண்டியவர். தாடி மீசை வைத்திருந்தார். கடந்த பத்து வருடங்களாகத் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் தவறாது கதிர்காமத்திற்கு நடையாத்திரை மேற்கொண்டு வருவதாகக் கூறினார். வந்தாறுமூலையிலிருந்தே தான் நடந்து வருவதாகவும் கூறினார். இடங்கள் -பெயர்கள்-பாதைகள் எல்லாம் அவருக்கு அத்துப்படியாக இருந்தன. தனி ஆளாக அவர் வந்திருப்பதனால் அவரைத் தங்களோடு இணைத்துக் கொண்டால் நல்லது என எண்ணிய கோகுலனும் கதிரவேலும் தமக்குள் பேசிக்கொண்ட பின் தங்கள் எண்ணத்தைத் தமது தாய்மாரிடம் தெரிவித்து அவர்களும் சம்மதம் சொல்லப் பொங்கல் உண்ணும் போது அவரையும் தங்கள் பந்தியிலே இணைத்துக் கொண்டார்கள். அவரும் மகிழ்வோடு இணைந்து கொண்டார்.
கோகுலனின் தாய் – கோகுலன் – கதிரவேல் – கதிரவேலின் தாய் – கதிரவேலின் அக்கா – கோகுலனின் இளையக்காவும் குழந்தையும் அடங்கிய யாத்திரைக் குழுவில் மேலதிமாகச் சாமித்தம்பியும் .கூமுனையில் வைத்து இணைத்துக் கொள்ளப்பட்டார்.
உண்ட மயக்கம்தீர சற்றுத் தரையிலே சாய்ந்து ஓய்வெடுத்துக் கொண்டபின் கோகுலனின் தாயாரின் அணியுடன் இணைந்துகொண்ட சாமித்தம்பி கோகுலனையும் கதிரவேலையும் நோக்கித் “தம்பிச் சாமிமாரே! கூமுனைக்குப் போய் வருவம். வாறீங்களா?” என்று அழைத்தார்.
கோகுலன் விபரம் தெரியாமல் “நாம நிக்கிற இடம் கூமுனதானே! ” என்றான்.
கதிரவேல் , “இல்ல பிறதர். இதுவும் கூமுனதான். கூமுன என்று பெரியசாமி போய் வரக் கூப்பிடுறது கூமுன ஊரச் சொல்றார். அங்குதான் குடியாட்டங்கள் இரிக்கிது. அதுதான் கூமுன ஊர். சிங்களத்தில் ‘குமுண’ எண்டுவாங்க. உள்ளுக்குள்ள போகணும். இஞ்சரிந்து மூண்டு நாலு கட்டத்தூரம் வரும். நான் முன்னம் எங்கட அப்பச்சியோட ரெண்டுமூண்டுதரம் போய் வந்திருக்கன். அங்க போய்த்து வாறத்துக்குத்தான் பெரியவர் கூப்பிடுறார்” என்று விளக்கம் சொன்னான்.
“தம்பிக்கும் இடமெல்லாம் தெரியும் போல” என்ற சாமித்தம்பி.
“இருங்க புள்ளயள். உடுப்ப மாத்திட்டு வாறன்” என்று எழுந்து சற்று அப்பால் மறைவுக்குப் போனவர் சில நிமிடங்களில் காவி வஸ்திரம் அணிந்து கழுத்திலே உருத்திராட்ச மாலைகளும் போட்டுக் கொண்டு ‘அசல்’ சாமிக் கோலத்தில் திரும்பி வந்தார். சாமித்தம்பி என்ற பெயர் அவருக்குப் பொருத்தமாகத்தான் இருந்தது. கோகுலன், கதிரவேல், பெரியவர் சாமித்தம்பி மூவரும் ‘கூமுனை’க் (குமண) கிராமம் நோக்கி நடையைக் கட்டினர்.
(தொடரும்….. அங்கம்-16)