(‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர்)
— தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் —
நேபாளநாட்டு முகவரியிலிருந்து 27.04.2023 திகதியிடப்பட்டு எட்டுமாதங்கள் கடந்த பின்னர் 07.12.2023 அன்று இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டதும் உலகத்தமிழர் பேரவையும் ( GTF ) சிறந்த இலங்கைக்கான சங்கமும் இணைந்து வெளியிடப்பெற்றுதுமான இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ‘இமாலயப் பிரகடனம்’ குறித்த எதிர்ப்புகள் தமிழர் தரப்பின் பல கோணங்களிலிருந்தும் பரவலாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
இப்பிரகடனத்திற்கு எதிர்புத் தெரிவித்துள்ள தமிழர் தரப்பினர் எல்லோரும் ஒரே பார்வையைக் கொண்டவர்களுமல்ல; ஒரே தத்துவார்த்தத் தளத்தில் இயங்குபவர்களுமல்ல என்பது அவதானத்திற்குரியதாகும். ஆதலால் இந்த எதிர்ப்பைத் தமிழ்த் தேசியக்(?) கட்சிகளின் வழமையான ‘எதிர்ப்பு அரசியல்’ எனப் பொதுமைப்படுத்தக் கூடாது.
ஏனெனில், இந்த இமாலயப் பிரகடனத்தை இலங்கை இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான இன்னொரு முயற்சி ( புதிய முயற்சி ) – இனங்களுக்கிடையிலான நல்லிணக்க புதிய அணுகுமுறை (பௌத்த தேரர்கள் சிலர் இப்பிரகடனத்தில் கைச்சாத்திட்டுள்ளதால்) இப்பிரகடனம் (வழமைபோல் அல்லாமல்) பௌத்தபீடங்களின் அங்கீகாரத்துடனான செயற்பாட்டு அரசியல் – இந்தப் பிரகடனத்தின் பின்னால் உலகின் கைதேர்ந்த சமாதான முயற்சியாளர்களின் மறைகரம் இருப்பதற்கான வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது- யார் குற்றியாவது அரிசியாகட்டும் என்பதால் இப்பிரகடனத்தால் சாதகங்கள் விளையுமாயின் யார் செய்தால் என்ன? தமிழர் தரப்பில் அது உலகத் தமிழர் பேரவையாக (அது தேர்தலில் மக்களால் அங்கீகரிக்கப்படாததொரு அமைப்பாக இருந்தாலும்கூட) இருந்துவிட்டுப் போகட்டுமே என்றவாறுதான் இப்பிரகடனத்தை ஆதரித்துக் கருத்துக்களை முன்வைக்கும் தமிழர் தரப்பினர் தங்கள் நிலைப்பாடுகளை நியாயப்படுத்துகிறார்கள்.
எழுந்தமானமாகப் பார்க்கும்போது இந்த நியாயங்கள் சரியானதாகத் தோன்றலாம் .
இப் பிரகடனத்தையும் அதன் பின்னரான உலகத்தமிழர் பேரவையின் செயற்பாடுகளையும் ஆதரித்து நிற்கும் தமிழர் தரப்பினரின் நோக்கமும் ஆதங்கமும் கடந்த எழுபத்தைந்து வருடங்களாகப் பாராளுமன்ற அரசியல் ஊடாக மட்டுமல்ல ஆயுதப் போராட்டம் மூலமாகவும் அடைய முடியாமற்போன இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வை இந்த இமாலயப் பிரகடனத்திற்கூடாகத்தானும் எய்தி விடமுடியுமா? எனப் பரீட்சித்துப் பார்க்கலாம் (அதனை எதிர்க்காமல்) என்பதாக இருக்கலாம். அதில் தவறுமில்லை .
ஆனால், இப்பிரகடனத்தை ஆதரித்து நிற்பவர்களின் எடுகோள் இப்பிரகடனத்தை எதிர்க்கும் தமிழர் தரப்பினர் அனைவரையும் இனப்பிரச்சினக்கான தீர்வை விரும்பாதவர்கள் அல்லது எப்போதுமே எதிர்ப்பு அரசியலை முன்னெடுப்பவர்கள். (அதற்கே பழக்கப்பட்டுப் போனவர்கள்-இசைவாக்கம் அடைந்தவர்கள்) அல்லது தமிழ் – சிங்கள நல்லிணக்கத்திற்கு எதிரானவர்கள் எனக் கருதுவதாக இருப்பதுதான் தவறானது.
எனவே, இப்பிரகடனத்தை எதிர்ப்பவர்கள் எவரெவர் எத்தகைய அரசியல் தத்துவார்த்தத்தளத்தில் நின்று தமது எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுக்கிறார்கள் என்பதை இப் பிரகடனத்தை ஆதரிப்பவர்கள் கவனத்திற் கொள்ள வேண்டும். இப் பிரகடனத்தை எதிர்ப்பவர்கள் அனைவரையும் இனப் பிரச்சனைக்கான தீர்வு முயற்சிகளை விரும்பாதவர்கள் என்ற ஒரே தராசில் வைத்துப் பார்க்கவும் கூடாது .
இலங்கையின் இப்பிரச்சினைக்கான தீர்வில் இரண்டு காரணிகள் யதார்த்தமானவை .
ஒன்று
இலங்கையின் எந்தக்கட்சி அரசாங்கமென்றாலும் சரி – அரசுத் தலைவர் யாராயிருந்தாலும் சரி தமிழர்களின் குறைந்தபட்ச அரசியல் அபிலாசைகளைத்தானும் திருப்திப்படுத்தக்கூடிய எந்த அரசியல் தீர்வையும் தாமாகவிரும்பி முன்வந்து எந்தக் காலத்திலும் இதுவரை வழங்கியதுமில்லை. இனிமேலும் வழங்கப்போவதுமில்லை.
மற்றது
இனப் பிரச்சனைக்கான எந்த அரசியல் தீர்வும் அது 13 ஆவது திருத்தத்தின் முழுமையான அமுலாக்கலாயிருந்தாலென்ன அல்லது இமாலயப்பிரகடனம் குறிப்பிடுவதுபோல புதிய அரசியலமைப்பொன்றினூடான அதிகாரப்பகிர்வாக இருந்தாலென்ன (தற்போதுள்ள 13 ஆவது திருத்தத்தினூடாகப் பகிரப்பட்டுள்ள அதிகாரங்களை விடக் கூடுதலான அதிகாரங்களெதுவும் புதிய அரசியலமைப்பொன்றினூடாகக் கிடைக்கப் போவதில்லை) எதுவும் இந்தியாவின் முழுமையான அனுசரணை இல்லாமலோ அழுத்தமில்லாமலோ நிகழப்போவதில்லை.
இந்த இரு யதார்த்தங்களையும் எட்டிக்கடந்து எந்த அரசியல் அதிசயமும் இலங்கை மண்ணில் நிகழ்த்துவிடப்போவதில்லை .
இந்தப் பின்புலத்தில் சுற்றி வளைக்காமல் நேடியாகக் கூறப்போனால் இந்த இமாலயப் பிரகடனத்தின் பின்னால் இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கான தீர்வுச் செயற்பாடுகளிலிருந்து இந்தியாவை ஓரங்கட்டும் – தள்ளிவைக்கும் மேற்கத்தைய நாட்டுச் சக்திகளின், மறைமுகமான சூழ்ச்சி ஒன்றுமுள்ளது என்பதை இப்பிரகடனத்தை ஆதரித்து நிற்கும் தமிழர் தரப்பினர் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதே அறிவு.
இனப்பிரச்சினைத் தீர்வில் இந்தியாவை ஓரங்கட்டும் அல்லது புறந்தள்ளும் எத்தகைய செயற்பாடும் எதிர்கால நோக்கில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆபத்தானது. இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு இந்துசமுத்திரப் பிராந்திய புவிசார் அரசியலுடன் பின்னிப்பிணைந்ததாகும்.
1987 இல் தமிழர் தரப்பு (தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்) இந்தியாவை எதிர்த்த – ஓரம் கட்டிய – புறந்தள்ளிய செயற்பாட்டின் அறுவடையாகத்தான் 2009 இல் முள்ளிவாய்க்கால் யுத்தம் முடிந்தபின்பும்கூட இன்னும் இழப்புகளை இலங்கைத் தமிழர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அன்றுவிட்ட தவறைச் சரிப்படுத்தவேண்டுமே- தவறுக்குப் பிராயச்சித்தம் தேடவேண்டுமே தவிர மேலும் மேலும் அது போன்ற தவறுகளையோ அல்லது அதனைவிடவும் மோசமான தவறுகளையோ தெரிந்தோ தெரியாமலோ இனியும் இலங்கைத் தமிழர் இழைத்துவிடக்கூடாது என்பதுதான் இந்த இமாலயப்பிரகடனத்தை எதிர்க்கும் இப்பத்தி எழுத்தின் நோக்கமாகும் .
யார் குற்றியும் அரிசியாகட்டும் என்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதெனினும் இந்தியாவையும் சேர்த்துக் கொண்டு குற்றினால்தான் அது சமையலுக்குரிய அரிசியாகும் என்ற யதார்த்தத்தையும் ஏற்றுச் செயற்பட வேண்டும் .