— கருணாகரன் —
இலங்கை அரசு 2024 புத்தாண்டுப் பரிசாக கடுமையான வரிவிதிப்பை அறிவித்துள்ளது. மக்களுடைய சக்திக்கு மீறிய வரிவிதிப்பு இது. அதாவது வருமானமின்றி வரியைச் செலுத்த வேண்டும். வருமானத்தைப் பெருக்குவதாக இருந்தால் தொழில் வேண்டும். இலங்கையில் விவசாயத்தையே செய்ய முடியாத அளவுக்கு அரசாங்கத்தின் பொருளாதார நடவடிக்கை இருக்கும்போது எப்படித் தொழில் செய்வது? வருமானத்தைப் பெருக்குவது.
இதனால்தான் நெற்றியில் ஒட்டும் 10 சதம் பெறுமதியான ஒட்டுப் பொட்டுத் தொடக்கம் குண்டூசி, கற்பூரம், ஊதுவத்தி போன்ற சின்னஞ்சிறிய பொருட்களைக் கூட இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு இலங்கையர்கள் தள்ளப்பட்டனர். இல்லையென்றால் கடைகளில் செத்தல் மிளகாய், வெங்காயம் போன்ற பொருட்கள் கூட இறக்குமதி செய்ய வேண்டியிருக்குமா? (இதற்குள் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி பற்றிய கதைவிடல்கள் வேறு).
இந்த நிலையில் இப்படி வரியை விதிப்பதற்கான துணிவு அரசாங்கத்துக்கு வந்ததற்குக் காரணம், நாட்டிலுள்ள எதிர்க்கட்சிகளின் இயலாமையும் மக்களிடமுள்ள முரண்பாடுகள் அல்லது ஒன்றிணைப்பின்மையுமாகும்.
எதிர்க்கட்சிகள் எந்தப் பொது வேலைத்திட்டத்தின் கீழும் இணைந்து செயற்படுவதற்குத் தயாரில்லை. அவற்றுக்கு நாட்டின் மீதும் மக்களின் மீதும் கரிசனை ஏதுமில்லை. இன்றுள்ள எதிர்க்கட்சிகளின் தலைவர்களிடத்தில் ஏனைய சக்திகளை ஒன்றிணைத்துச் செயற்படக்கூடிய ஆற்றலும் ஆளுமையும் இல்லை.
பொதுப் பிரச்சினைகளிலாவது ஒன்றுபட்டு நின்று செயற்படும் பண்பற்றவர்களாகவே மக்களும் உள்ளனர். மக்களை வழிப்படுத்த வேண்டிய ஊடகங்கள், அரசியற் பத்தியாளர்கள், புத்திஜீவிகள் போன்ற தரப்புகளும் பிளவுண்ட உளநிலையிலேயே இருக்கின்றனர். மட்டுமல்ல, நாட்டிலுள்ள புத்திஜீவிகள் எவரும் நாட்டின் இனப்பிரச்சினை, பொருளாதாரப் பிரச்சினை என எந்தப் பிரச்சினைக்கும் தீர்வைக் காட்டக் கூடியவர்களாக இல்லை.
இதெல்லாம் அரசாங்கத்துக்கு வாய்ப்பானதாகும். எனவே அது துணிந்து இந்த வரி விதிப்பை அமூல்படுத்த முற்பட்டுள்ளது.
மக்கள் நாட்டுக்கு வரி செலுத்துவதொன்றும் புதியதல்ல. உலகம் முழுவதிலுமுள்ள நடைமுறைதான்.
ஆனால், அந்த உலகம் எது? அங்குள்ள நடைமுறைகள் எப்படியாக உள்ளன? என்று அறிவது முக்கியம்.
அது பொருளாதாரம், அறிவியல், அரசியற் பண்பு, ஜனநாயகம், தொழில்நுட்பம், வாழ்க்கைத்தரம், ஊடகசுதந்திரம், வாழ்க்கைத்தரம் போன்றவற்றினால் வளர்ச்சியடைந்த உலகம். அவ்வாறு வளர்ச்சியடைவதற்கான அடிப்படைகளை அந்தந்த நாட்டு அரசாங்கங்களும் அங்குள்ள கட்சிகளும் மக்கள் அமைப்புகளும் ஊடகங்களும் புத்திஜீவிகள் தரப்பும் பாடுபட்டு உருவாக்கியுள்ளன.
அங்கெல்லாம் இனவாதமும் முரண்பாடுகளும் பைத்தியக்காரத்தனமாக ஆட்சி பீடத்தில் வைக்கப்படவில்லை. ஊழல் தலைவிரித்தாடவில்லை. பதிலாக தேசிய பொருளாதார உற்பத்தியில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. புத்திஜீவிகளும் மக்களும் ஜனநாயகத்தையும் மக்களின் உரிமைகளையும் குறித்துத் தெளிவாகச் சிந்திக்கிறார்கள். தலைவர்களும் கட்சிகளும் நாட்டைப் பற்றிச் சிந்திக்கிறார்கள்.
இலங்கையில்?
நாட்டைக் கொள்ளையடிப்பதும் வளங்களைச் சீரழிப்பதுமே பெரும்பாலான அரசியல்வாதிகளின் செயற்பாடாக உள்ளது. ஒரு கட்சிகூட நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கும் இன முரண்பாட்டுக்கு அரசியற் தீர்வைக் காண்பதற்குமான தங்களுடைய முன்வைப்புகளைச் செய்யவில்லை. பதிலாகப் பசப்பு வார்த்தைகளைச் சொல்லி அல்லது ஒன்றையொன்று குற்றம்சாட்டி, இனவாதத்தை வளர்த்துக் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கின்றன.
இதையிட்ட கவலைகள் மக்களுக்குமில்லை. மக்களில் படித்தவர்களுக்கும் இல்லை.
இன்று நாடு படுகுழிக்குள் வீழ்ந்து கிடக்கிறது. அடித்தட்டு மக்களின் நிலை மிக மோசமாகியுள்ளது.
“ரைற்றானிக்” கப்பல் மூழ்கும்போது மேற்தட்டு மக்கள் தாங்கள் மட்டும் பாதுகாப்பாக இருந்து விடுவோம் என்று எண்ணியதைப்போலவே இலங்கையின் மேற்தட்டு வர்க்கத்தினரும் அரசியல்வாதிகளும் சிந்திக்கின்றனர்.
ஆனால், இறுதியில் எல்லோரையும் இதெல்லாம் பாதிக்கும் என்பதை இவர்கள் உணரவில்லை. இப்படித்தான் இனவாதத்தை வளர்க்கும்போதும் தலைவர்கள் சிந்தித்தனர். அவர்கள் வளர்த்த இனவாதமே அவர்களைப் பலி கொண்டது.
அத்துலத் முதலி, ரஞ்சன் விஜேரத்னா, ஆர். பிரேமதாச, காமினி பொன்சேகா தொடக்கம் அமிர்தலிங்கம், தருமலிங்கம், ஆலாலசுந்தரம், கனகரத்தினம் வரை ஏராளம் உதாரணங்களுண்டு.
இவ்வளவும் நடந்த பிறகும் நம்மவர்களுக்கு அறிவு வரவில்லை. அனுபவம் சிந்திக்கவில்லை என்றால் என்னதான் செய்வது?
ஒவ்வொருவருடைய மூக்கு வரையிலும் இனவாதம் முட்டிப் போயுள்ளது.
மிகப் பின்தங்கிய நிலையிலிருந்த ஆபிரிக்க நாடுகள் உட்படப் பல தேசங்கள் இன்று அடைந்துள்ள வளர்ச்சியின் எல்லை பெரிது. குறிப்பாக எதியோப்பியா, உகண்டா போன்ற நாடுகள் அடைந்துள்ள வளர்ச்சி நம் கவனத்திற்குரியது. அவை இன்று சுயசார்பு நிலையை எட்டியுள்ளன. ஏழ்மை, வறுமை என்ற அடையாளங்களிலிருந்து மீண்டுள்ளன.
ஆனால், கடந்த நூற்றாண்டில் ஆசியாவிலேயே தனிநபர் வருமானம், தேசியப் பொருளாதார வளர்ச்சி போன்றவற்றில் முதல் நிலையிலிருந்த இலங்கை, இன்று கவிழ்ந்து போய்க் கிடக்கிறது.
இதற்குப் பிரதான காரணங்களில் ஒன்று இனவாதம். இரண்டாவது தவறான – மோசமான பொருளாதாரக் கொள்கை. அடுத்தது, ஊழல். இந்த மாதிரியான காரணங்களால் நாட்டை மிக மோசமான நிலைக்குத் தள்ளி விட்டனர் ஆட்சியாளர்கள்.
இப்பொழுது பொருளாதார நெருக்கடி அனைவரின் மீதும் பெரும் சுமையாக ஏறியுள்ளது.
நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தணிப்பதற்கு உற்பத்தி சார் பொருளாதார முறைமையை வகுத்துப் பின்பற்ற வேண்டும். அல்லது சுற்றுலா, வணிகம் போன்ற மாற்றுப் பொருளாதார முறைமைகளை மேம்படுத்த வேண்டும். ஆனால், அதைப்பற்றி இலங்கைக்குக் கடன் வழங்கும் உலக வங்கியோ நாட்டின் தலைவர்களோ அரசாங்கமோ வாயே திறக்கவில்லை. பொருளாதார நிபுணர்களும் எதையும் தீர்மானிக்க முடியாதவர்களாகவே உள்ளனர்.
நெருக்கடியைத் தீர்ப்பதற்குப் பதிலாக நாட்டை விட்டுத் தப்பியோடுவதே பலருக்கும் சுலபமாக உள்ளது. அதனால் தினமும் புலம்பெயர்வோரின் தொகை கூடிக் கொண்டேயிருக்கிறது. இந்த வெளியேற்றத்தினால் ஆற்றலுள்ளவர்கள், படித்தவர்கள், நிதிவளமுடையோரெல்லாம் வெளியேறி விடுகிறார்கள்.
மிஞ்சியோர் ஏதோ வகையினால் இயலாமைக்குள்ளானோராகவே இருக்கிறார்கள்.
அப்படி நாட்டை விட்டு வெளியேற முடியாதவர்களைச் சுற்றி வளைத்து, அவர்களுடைய கழுத்தைப் பிடித்து நெரித்து உயிரை வாங்கத் துடிக்கிறது அரசு.
இந்தச் சூழலில் தயவு தாட்சண்யமின்றி மக்களிடமிருந்து வரியை அறவிடுங்கள் என்று உலக வங்கி கட்டளையிடுகிறது. நாட்டைக் கொள்ளையடித்தவர்களிடமிருந்து சொத்துகளைப் பறிமுதல் செய்யுங்கள். ஊழலைக் கட்டுப்படுத்துங்கள் என்று அது நிர்ப்பந்திக்கவில்லை. அல்லது பொருளாதார மறுசீரமைப்பைச் செய்யுங்கள் என்று அது வற்புறுத்தவில்லை.
அதற்கான முயற்சிகளை எடுக்குமாறு அது கேட்கவும் இல்லை.
ஆனால், பொருளாதார வளர்ச்சிக்கான முயற்சிகள் அவசரமாக எடுக்கப்பட வேண்டும். அதுவே பொருளாதார நெருக்கடியை நிரந்தரமாகத் தீர்க்கும். அதை விடுத்து, இப்படி மக்களிடம் வரியை அறவிடுவதென்பது ஒரு போதும் தீர்வாகாது. இது தவறானது.
மக்களுக்கு வருவாய் இருந்தால்தான் வரியை அவர்கள் செலுத்தக் கூடியதாக ((மடியில் இருந்தால்தான் கையில் எடுக்கக் கூடியதாக) இருக்கும்.
அதைச் செய்யாது விட்டால், இது ஒட்டல் மாட்டில் சதையை (இறைச்சியை) த் தேடுவதாகவே இருக்கும்.
முதலில் அரசாங்கத்தின் வரி விதிப்பு முறைமையே தவறானது. உதாரணமாக உந்துருளி (மோட்டார் சைக்கிள்) களுக்கும் கூட உச்ச வரி விதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் இன்றைய நிலையில் பொருளாதார நடவடிக்கைகளுக்கு (தொழிலுக்கு) அதிகமாகப் பயன்படுத்தப்படுவது உந்துருளிகளையே. அவற்றுக்கு உச்ச வரி விதிப்பைச் செய்வதன் மூலம் உற்பத்திப் பொருளாதாரத்தில் (தொழில் செய்வோருக்கு) நெருக்கடியை மேலும் ஏற்படுத்துவதாகவே இருக்கும். இப்படிப் பல.
அதாவது, உற்பத்திக்கும் தொழில் நடவடிக்கைகளுக்கும் ஏற்றமாதிரியாக பொருளாதரத் திட்டமிடல், வரி அறவீட்டு நடவடிக்கைகள் இருக்க வேண்டும்.
மேலதிக வேலைகளைச் செய்யக் கூடிய ஏற்பாடுகள் இருக்க வேண்டும். மக்கள் இரண்டு வேலைகளைச் செய்யக் கூடியதாக உள்ளனர். ஆனால், அதற்கான வேலைகள், தொழில் விருத்திகள் வேண்டும்.
முதலீடுகளைச் செய்வதற்காக புலம்பெயர் நாடுகளிலிருந்து பலர் ஆர்வத்தோடு வந்திருந்தனர். ஆனால், அவர்களை வரவேற்கக் கூடியவாறு இலங்கை அரசின் நடவடிக்கைகள் இருக்கவில்லை. அரசாங்கத்தின் உயர் மட்டத்தலைவர்கள், அமைச்சர்கள் தொடக்கம் அதிகாரிகள் வரையில் அனைத்து மட்டங்களிலும் கொமிசன் கேட்கப்பட்டது. இதனால் அவர்கள் கசப்போடு திரும்பிச் சென்றனர். மட்டுமல்ல, முதலீட்டாளர்களைக் கவரக் கூடியவாறு விரைவுபடுத்தப்பட்ட சேவைகளை – அனுமதிகளை வழங்குவதற்கான பொறிமுறையும் அரசிடம் இருக்கவில்லை. நிர்வாக அதிகாரிகளும் தேவையற்ற இழுத்தடிப்புகளைச் செய்து அவர்களைக் களைப்படைய வைத்தனர். இன்னொரு காரணம், இனவாத நோக்கோடு அணுகப்பட்டமையாகும். இதனால் முதலீட்டு வாய்ப்புகளும் இழக்கப்பட்டன.
இதேவேளை பொருளாதார நெருக்கடி என்று சொல்லிக் கொண்டிருக்கும் அரசாங்கம் இன்னும் ஜனாதிபதி, அமைச்சர்கள், அமைச்சரவை, பாராளுமன்றம், பாராளுமன்ற உறுப்பினர்கள் போன்றவற்றுக்கான செலவீனங்களைக் குறைக்கவில்லை.
உண்மையில் இந்தத் தரப்புகள்தான் முன்னுதாரணமாக செலவுக் குறைப்பைச் செய்திருக்க வேண்டும். அதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆகவே மக்களுடைய வரிப்பணமானது, இந்தத் தரப்புகளின் செலவீனத்துக்கே செல்கிறது. மேலும் செல்லப்போகிறது. மிஞ்சிய பணத்தை ஊழல்வாதிகள் எடுத்துக் கொள்வார்கள்.
புதிய பொருளாதாரக் கொள்கையும் நடைமுறையும் வகுக்கப்படாமல் வரி விதிப்பைச் செய்வது நெருக்கடியை உண்டாக்குமே தவிர, மீட்சியைத் தராது.
அரகலயப் போராட்டத்தின் பரிசாக ஜனாதிபதிக் கதிரையைப் பெற்றுக் கொண்ட ரணில் விக்கிரமசிங்கவுக்கு இதுவரையிலுமான சூழல் வாய்ப்பாகவே இருந்தது. அதை வைத்துக் கொண்டே இதுவரையான கடினமான நாட்களை அவர் ஓட்டினார். இனி அதற்கான வாய்ப்புகள் குறைவு.
இப்பொழுது ரணில் தனக்குத்தானே நெருக்கடியை உருவாக்கும் ஒரு சூழலுக்குள் தள்ளப்பட்டிருக்கிறார். அவருக்குக் கிடைத்த அதிர்ஸ்டம் ஏறக்குறைய முடிவுக்கு வரும் நிலையில் உள்ளது. மாற்றங்கள் எதையும் செய்யாமல், மக்களின் சுமைகளைக் குறைக்காமல், தொடர்ந்தும் ஆட்சியை வெற்றிகரமாக நடத்தலாம் என்றால் அது முடியாததாகவே இருக்கும்.
மக்களின் வயிற்றிலடித்தால் மக்கள் நெற்றியலடிப்பார்கள்.
ஆம், மக்களின் மனதில் கொதிப்பு உயரத் தொடங்கியுள்ளது.
அது ஒரு நாள் பெரு வெடிப்பாக நிகழும்.
இலங்கைத்தீவின் கடந்த ஒரு நூற்றாண்டு அனுபவங்கள், இதுதான். அதிகாரத் தரப்புளின் எல்லை மீறுதல்களும் அதை மக்கள் போராட்டங்கள் கட்டுப்படுத்துவதாகவுமே இருக்கிறது.
இனியும் அதற்கான வாய்ப்புகள்தான் அதிகம் தெரிகின்றன.
எல்லாவற்றுக்கும் காரணம், மக்கள் விட்ட தவறுகள்தான். அதையே இப்பொழுது அறுவடை செய்து கொண்டிருக்கிறார்கள். இது தேர்தல் ஜனநாயகத் தெரிவின் காலம். இங்கே மக்கள் சரியானவர்களை – சரியான தரப்புகளைத் தெரிவு செய்யவில்லை என்றால் அதற்கான தண்டனையை மக்கள்தான் அனுபவிக்க வேண்டும். அதுதான் இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது.
எதிர்காலத்திலாவது இந்தப் படிப்பினைகளின் அடிப்படையில் அனைத்துச் சமூகத்தினரும் தங்களுடைய அரசியற் தலைமைகளை மறுபரிசீலனைக்குட்படுத்தித் தெரிவு செய்தால்தான் ஓரளவுக்காவது விமோசனம் உண்டு. இல்லையென்றால் சுமையும் அழிவும்தான்.