மகிந்தவின் கனவு மெய்ப்படுமா?

மகிந்தவின் கனவு மெய்ப்படுமா?

— வீரகத்தி தனபாலசிங்கம் — 

   ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை தனது காலத்தில் மீண்டும் மக்கள் செல்வாக்குடைய கட்சியாக கட்டியெழுப்பாவிட்டால் மற்றைய ராஜபக்சாக்களினால்  எதிர்காலத்தில் அதைச் செய்யமுடியாமல்  போகலாம் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நம்புகிறார் போலும். 

  கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து ருஹுணு  ராஜபக்சாக்கள் அரசியலில் ஈடுபட்டு வெவ்வேறு பதவிகளை வகித்துவந்தபோதிலும், இந்த நூற்றாண்டின் முற்பகுதியில் மகிந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவிக்கு வந்த பின்னரே அவர்கள் அரசியலில் அதீத ஆதிக்கத்தைச் செலுத்தும் ஒரு வலிமையான  குடும்பமாக வளர்ந்தார்கள். மகிந்தவே குடும்பத்தின்  அரசியல் முகம்.

  கடந்த வருடத்தைய ‘அறகலய’ மக்கள் கிளர்ச்சியை அடுத்து அதிகாரத்தில் இருந்து இறங்கிய ராஜபக்சாக்கள் ஒரு சில மாதங்களுக்குள்ளாகவே மீண்டும் அதிகாரத்துக்கு வருவது குறித்துப் பேசத்தொடங்கினார்கள். 

  உள்ளூராட்சி தேர்தல்கள் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படுவதற்கு வழிவகுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின்  கெடுபிடி நடவடிக்கைகளுக்கு ஒத்துழைத்த ராஜபக்சாக்கள் எந்த தேர்தல் நடந்தாலும் தங்களது கட்சி வெற்றிபெறும் என்று கூறத்தயங்கவில்லை. அண்மைக் காலமாக அவர்களின் குறிப்பாக மகிந்தவின் அத்தகைய பேச்சுக்கள் தீவிரமடைந்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

   கடந்த வருடத்தைய  பொருளாதார நெருக்கடிக்கு மூன்று ராஜபக்ச சகோதரர்களும் பொறுப்பு என்று நவம்பர் 14 இல் உயர்நீதிமன்றம் அளித்த வரலாற்று முக்கியத்துவ தீர்ப்பு தங்களது எதிர்கால அரசியலுக்கு பாரதூரமான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்பது மகிந்தவுக்கு நன்றாகவே தெரியும். என்றாலும் அவர் தீர்ப்பை ஏற்கப்போவதில்லை என்றும் தங்களது ஆட்சிக்காலத்தில் சகல பொருளாதாரத் தீர்மானங்களும்  பாராளுமன்றத்தின் அங்கீகாரத்துடனேயே மேற்கொள்ளப்பட்டதால்  அதற்கும் பொறுப்பு இருக்கிறது என்றும் கூட கூறினார். 

  இரு வாரங்களுக்கு பிறகு நவம்பர் 28 பெருவாரியான புள்ளிவிபரங்களுடன் கூடிய அறிக்கையொன்றை வெளியிட்ட அவர்  2005 — 2014 தனது பதவிக்காலத்தில் பொருளாதாரம் ஆரோக்கியமான  வளர்ச்சியைக் கண்டிருந்ததாகவும் அடுத்து பதவிக்கு வந்த ‘ நல்லாட்சி ‘ அரசாங்கத்தின் செயற்பாடுகளே கடந்த வருடத்தைய பொருளாதார நெருக்கடிக்கு பிரதான காரணம் என்றும் கூறினார். 

  2015  தேர்தல்களில்  எடுத்த முடிவைப் போன்று — அதாவது ‘நல்லாட்சி’ அரசாங்கத்தைப் பதவிக்கு கொண்டு வந்ததைப் போன்று ஒரு முடிவை  மீண்டும் ஒருபோதும் எடுக்கக்கூடாது  என்றும் மகிந்த அந்த அறிக்கை மூலமாக நாட்டு மக்களைக் கேட்டுக்கொண்டார். மீண்டும் தங்களைப் பதவிக்கு கொண்டு வரவேண்டும் என்பதே மக்களுக்கான அவரின்  செய்தி.

   அந்த அறிக்கையை  மறுதலித்து பதில்  அறிக்கை ஒன்றை ‘நல்லாட்சி’ அரசாங்கத்தின் தலைவர்களோ அமைச்சர்களோ இதுவரையில்  வெளியிடவில்லை.  அந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளை நியாயப்படுத்த எவரும் இல்லை என்கிற அளவுக்கு அது ஒரு அநாதை நிருவாகமாக பதிவாகிவிட்டது. 

   2015 — 2019 காலப்பகுதியில் அரசாங்கத்தினால் பெறப்பட்ட சகல  கடன்களிலும் சுமார் 90 சதவீதமானவை  2015 ஆண்டுக்கு முன்னரான   கடன்களுக்கு வட்டியைச் செலுத்துவதற்காகவே பயன்படுத்தப்பட்டதாக  வெறைற் றிசேர்ச் நிறுவனத்தின் ஆய்வு ஒன்று கூறியது. ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான பொருளாதார நிபுணர் கலாநிதி ஹர்ஷா டி சில்வா கடந்த வாரம் கொழும்பு ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அதைச் சுட்டிக்காட்டினார்.

    உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகு சரியாக ஒரு மாதம் கடந்த நிலையில் டிசம்பர் 15 பொதுஜன பெரமுனவின் இரண்டாவது தேசிய மகாநாடு கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்றது. அதில் மீண்டும் மகிந்தவே கட்சியின் தலைவராக தெரிவு  செய்யப்பட்டார். முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச வகித்துவந்த தேசிய அமைப்பாளர் பதவி காலியாக விடப்பட்டிருக்கிறது. அதற்கு ஒரு பிரத்தியேகமான அரசியல் காரணம் இல்லாமல் இருக்கமுடியாது.

     முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச  மகாநாட்டில் கலந்துகொள்ளவில்லை. இலங்கையின் அரசியல் வரலாற்றில் மிகவும் தோல்வி கண்ட ஜனாதிபதி என்ற அபகீர்த்திக்குள்ளான அவரை தங்களது அரசியல் நடவடிக்கைகளில் இருந்து தூரவிலக்கும் ஒரு உபாயத்தை அவரது  சகோதரர்கள் அரசியல் அனுகூலத்துக்காக கடைப்பிடிக்கிறார்கள் என்று தெரிகிறது.

  அந்த மகாநாட்டில் மகிந்தவும் பசிலும் மாத்திரமே உரையாற்றினார்கள். பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவாசம்  வரவேற்புரை நிகழ்த்துவதற்கு மாத்திரம் அனுமதிக்கப்பட்டார். இது ராஜபக்சாக்களை வானளாவப் புகழ்ந்துரைக்கும் பெருவாரியான உரைகள் நிகழ்த்தப்படும் அவர்களின் வழமையான அரசியல் நிகழ்வுகளில் இருந்து வேறுபட்டதாக இருந்தது. 

  என்றாலும் சாகர காரியவாசம் உரையாற்றியபோது மகிந்தவை நோக்கி  சிங்கள பௌத்த மறுமலர்ச்சியின் தந்தை என்று கூறப்படும் அநகாரிக தர்மபாலவுக்கு அடுத்த தேசிய நாயகன் என்று வர்ணித்ததுடன் இன்னொரு ஐம்பது அல்லது நூறு வருடங்களுக்கு பிறகு 

அவரது வாழ்வும் பணிகளும் பாடப்புத்தகங்களில் பிரத்தியேகமான அத்தியாயமாக பதிவுசெய்யப்படும். அவரைப் பற்றி திரைப்படங்கள் தயாரிக்கப்படும் என்று கூறினார்.

  மகிந்த தனதுரையில்  மீண்டும் அதிகாரத்துக்கு வருவதற்கும் எந்த தேர்தலுக்கும் முகங்கொடுப்பதற்கும் பொதுஜன பெரமுன தயாராகிவிட்டது. நாட்டின் தேவைகளுக்கு ஏற்றமுறையில் புதிய பயணம் ஒன்றை கட்சி ஆரம்பிக்கும். புதிய நாடொன்றை உருவாக்குவதற்காக சகல இனங்களைச்  சேர்ந்த மக்களையும் எம்முடன் இணைந்து கொள்ளுமாறு அழைக்கிறோம். சகலரதும் பலத்துடன் எந்தவொரு தேர்தலிலும் நாம் வெற்றிபெறவோம். எமது பயணத்தில் இணைந்து கொள்வதற்கு எமது அழைப்புக்காக பல அரசியல் கட்சிகள் காத்துக்கொண்டிருக்கின்றன என்று கூறினார்.

  “போலியான அரசியலுக்கு பதிலாக மெய்யான அரசியல் கலாசாரம் ஒன்றை நாம் உருவாக்குவோம். எமது முயற்சிகளும் பணிகளும் வரலாற்றில் எழுதப்படும்வரை நாம் பாடுபடுவோம். பெருமைக்குரிய நாடாக இலங்கையை உலகின் முன்னால் கொண்டு செல்வதற்கு தவறவிட்ட இடத்தில் இருந்து எமது பயணத்தை தொடங்குவதற்கு நாம் தயாராக இருக்கிறோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

  மூன்று தசாப்த கால போரின்போது விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகனை நேருக்கு நேர் எதிர்கொண்டு போரை முன்னெடுக்க வேறு  எந்த தலைவருக்கும் துணிச்சல் இருக்கவில்லை என்று கூறி போர் வெற்றிக்கு மீண்டும் மகிந்த உரிமைகோரினார். சிங்கள மக்கள் மத்தியில் மீண்டும் செல்வாக்கைப் பெறுவதற்கு ராஜபக்சாக்களுக்கு பிரபாகரன் நிச்சயம் தேவைப்படுவார். அது மாத்திரமல்ல, மீண்டெழுவதற்கான அவர்களின் பிரயத்தனத்தில் இனவாத அரசியல் மீண்டும் முக்கியமான பாத்திரத்தை நிச்சயமாகக் கொண்டிருக்கும்.

ராஜபக்சாக்களின் தற்போதைய அணுகுமுறைகளில் விசித்திரமான அம்சம் ஒன்றை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. அதிகாரத்தில் இருந்து இறங்கிய பிறகு தங்களது கட்சியின் பாராளுமன்றப் பெரும்பான்மைப் பலத்தைப் பயன்படுத்தி விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக பதவியல் அமரவைத்த அவர்கள் அவரது நிருவாகத்தில் இருந்து தங்களை வேறுபடுத்திக் காண்பிப்பதில் அக்கறையாக இருக்கிறார்கள்.

   ஜனாதிபதி விக்கிரமசிங்க ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக இருந்தாலும்  அவரது அரசாங்கத்தில் ஓரிருவரைத் தவிர ஏனைய அமைச்சர்கள் எல்லோரும் பொதுஜன பெரமுனவைச் சேர்ந்தவர்களே. அவர்களில் பலர் மகிந்தவின் அரசாங்கத்திலும் கோட்டாபயவின் அரசாங்கத்திலும் அமைச்சர்களாக இருந்தவர்கள். 

  அரசாங்கம் கொண்டுவரும்  சட்டமூலங்கள் மற்றும் தீர்மானங்கள்  பொதுஜன பெரமுன உறுப்பினர்களின் ஆதரவுடனேயே சபையில் நிறைவேறுகின்றன. விக்கிரமசிங்க சமர்ப்பித்த இரு  பட்ஜெட்டுகளும் பொதுஜன பெரமுனவின் ஆதரவின்றி நிறைவேறியிருக்கமுடியாது. அது மாத்திரமல்ல, ஜனாதிபதி நாட்டை நெருக்கடியில் இருந்து மீட்பதில் திறமையாக செயற்படுகிறார் என்றும் சடடம் ஒழுங்கை மீண்டும் நிலைநாட்டியிருக்கிறார் என்றும்  ராஜபக்சாக்கள் அவ்வப்போது கூறவும் தவறுவதில்லை.

  பொதுஜன பெரமுனவின் மாவட்டத் தலைவர்களுக்கு அமைச்சர் பதவிகளைக் கொடுக்கவேண்டும் என்று பசில் ராஜபக்ச ஜனாதிபதியை அடிக்கடி வலியுறுத்திக் கேட்டுவந்ததும்  அவர் அதற்கு இடம்கொடுக்காமல் இருந்துவருவதும் எல்லோருக்கும் தெரியும்.

  உண்மை நிலைவரம் இவ்வாறிருக்கும்போது டிசம்பர் 20  முன்னர் அரசாங்கத்தின் வரிக்கொள்கைகள் குறித்து அறிக்கை யொன்றை வெளியிட்ட மகிந்த தற்போதைய அரசாங்கத்தைப்  பொதுஜன பெரமுன நடத்தவில்லை என்று கூறியிருந்தார்.

  “அரசாங்கத்தில் ஒரு அங்கமாக பொதுஜன பெரமுன இருந்தாலும் அரசாங்கத்தின் தலைவர் வேறுபட்ட ஒரு கொள்கையைப் பின்பற்றும் இன்னொரு கட்சியின் தலைவர். அடுத்த தேசிய தேர்தல்கள் வரை உறுதியான அரசாங்கம் ஒன்று பதவியில் இருப்பதை உறுதிசெய்யவேண்டியது பொதுஜன பெரமுனவின் கடமை” என்று கூறி அவர் விக்கிரமசிங்க நிருவாகத்துக்கு அளித்துவரும் ஆதரவுக்கு ஒரு நியாயத்தைக் கற்பிக்க முயற்சிக்கிறார்.

  அத்துடன் புத்தாண்டு முதல் வரி அதிகரிப்புகளின் விளைவாக வாழ்க்கைச் செலவு கற்பனைசெய்து பார்க்கமுடியாத அளவுக்கு வாட்டி வதைக்கப்போகின்றது என்று மக்கள் ஏங்கிக்கொண்டிருக்கும்  நிலையில் வரி அதிதரிப்புகளுக்கு எதிராக மகிந்த கருத்து தெரிவித்திருக்கிறார்.

   பெறுமதிசேர் வரியை (வற்) தற்போதைய 15 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அதிகரிப்பதற்கும் ஏற்கெனவே அந்த வரியில் இருந்து விலக்களிக்கப்பட்ட பெருவாரியான பொருட்களையும் சேவைகளையும் மீண்டும்  உள்ளடக்குவதற்கும் அண்மையில் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சட்டமூலத்தை ஆதரித்து கையை உயர்த்திவிட்டுத்தான் இந்த கதைகளை எல்லாம் மகிந்த நாட்டு மக்களுக்கு கூறுகிறார். 

 மகிந்த வற் வரி சட்டமூலத்தை ஆதரித்த அதேவேளை ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் வாரிசு என்று கூறப்படும் அவரின் மூத்த மகன் நாமல் ராஜபக்ச அதை ஆதரிக்கவில்லை. சட்டமூலம் மீதான வாக்கெடுப்பின்போது நாமல் சபையில் பிரசன்னமாகி இருக்கவில்லை. மக்களுக்கு சொல்லொணா இடர்பாடுகளைக் கொண்டுவரப்போகும் அந்த வரி அறவீட்டை தன்னால் ஆதரிக்க முடியாது என்று அவர் கூறினார்.

 பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்தவும் அந்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் அந்த சட்டமூலத்தை ஆதரித்த அதேவேளை மகன் நாமல் மாத்திரம் அதை எதிர்த்து வாக்களிக்க சபையில் இருக்கவும் துணிச்சல் இல்லாமல், அதை ஆதரிக்கவேண்டாம் என்று கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வேண்டுகோளும் விடுக்காமல் நாடகமாடுவது இலங்கை மக்களின் விவேகத்தை அவமதிக்கும் ஒரு செயல் என்பதைத் தவிர, வேறு எவ்வாறு கூறமுடியும்? 

  வரிக்கொள்கைகள் புதுவருடத்தில் முக்கியமான அரசியல் பிரச்சினையாக மாறப்போகிறது என்று அறிக்கையில் கூறியிருப்பதன் மூலமாக தேசிய தேர்தல்களில் அதுவே  தங்களது பிரசாரத்தின் பிரதான அம்சமாக  இருக்கும் என்ற எச்சரிக்கையை மகிந்த ஜனாதிபதிக்கு  விடுத்திருக்கிறார்.

  நவம்பரிலும் டிசம்பரிலும் மகிந்த  வெளியிட்ட இரு அறிக்கைகளும் பிறகு அவ்வப்போது ஊடகங்களுக்கு தெரிவிக்கும் கருத்துக்களும் இன்று  நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியின் தோற்றுவாய் ‘நல்லாட்சி’  அரசாங்கத்தின் கொள்கைகளிலும் செயற்பாடுகளிலுமே இருக்கிறது என்றும் உயர்நீதிமன்றம் என்னதான் தீர்ப்பில் கூறியிருந்தாலும் பொருளாதார நெருக்கடிக்கு தாங்கள் பொறுப்பு அல்ல என்றும் நாட்டு மக்கள் நம்பவேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார் என்பதை தெளிவாக உணர்த்துகின்றன.

  கடந்த வாரமும் கூட மகிந்த அடுத்த தேர்தலில் பொதுஜன பெரமுன மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றும் என்று நம்பிக்கை வெளியிட்டார். ஒரு விடயத்தை திரும்பத்திரும்பக் கூறுவதன் மூலமாக மக்கள் மத்தியில் ஒருவிதமான உளவியல் ரீதியான தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று அவர் நம்புகிறார் போலும். 

தங்களது ஆட்சிக்காலத்தில் தங்களைப் பற்றி கட்டமைத்த பிரமாண்டமான பிம்பம் எவ்வாறு குறுகிய காலத்திற்குள் தகர்ந்துபோனது  என்பதில் இருந்து ராஜபக்சாக்கள் பாடம் படிக்கவில்லை. மக்கள் தங்களைப் பற்றி உண்மையில் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து சரியாகப் புரிந்துகொள்ளாமல் அவர்கள் மீண்டும் அதிகாரத்துக்கு வருவதற்கு கனவு காண்கிறார்கள்.

  மக்கள் மத்தியில் தங்களுக்கு மீண்டும் செல்வாக்கை வளர்த்துக் கொள்ளமுடியும் என்று ராஜபக்சாக்கள் நம்புவது ஒரு புறமிருக்க, கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஏற்பட்டதைப் போன்ற கதி பொதுஜன பெரமுனவுக்கு ஏற்படப்போவதில்லை என்ற ஒரு அபிப்பிராயம் பரவலாக இருக்கிறது என்பதை மறுக்கமுடியாது. ஆனால் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஒரு ராஜபக்ச களமிறங்கக்கூடிய சாத்தியமில்லை. அந்த தேர்தலில் சந்திக்கக்கூடிய தோல்வி எதிர்காலத்தில் கட்சியை கட்டியெழுப்புவதற்கு பாதிப்பாக அமையும் என்பதை ராஜபக்சாக்கள் அறிவார்கள்.

   முன்னரும் இந்த பத்தியில் கூறியதைப் போன்று அடுத்த தேசிய தேர்தல்களில் ராஜபக்ச்க்களின் வியூகங்கள்  கடந்த காலத் தவறுகளுக்காக தங்களைப் பொறுப்புக்கூற வைக்காத ஒரு அரசாங்கம் அமைவதை உறுதிப்படுத்துவதாகவே  இருக்கும். ஜனாதிபதி வேட்பாளராக தங்களால் களமிறக்கப்படக்கூடியவர்கள் என்று சிலரை ராஜபக்சாக்கள் நாட்டுக்கு காண்பிக்க முயற்சித்தாலும் கூட அவர்களுக்கு  விக்கிரமசிங்கவை விடவும் ‘பாதுகாப்பான தெரிவு’ இல்லை என்றே கூறவேண்டும். 

  வரலாற்றுப் பதிவு 

============

  இறுதியாக, தங்களால் முன்னெடுக்கப்படும் முயற்சிகளும் பணிகளும் வரலாற்றில் எழுதப்படும்வரை பாடுபடுவோம் என்று மகிந்த கூறியதையும்  அவரின் வாழ்வு எதிர்காலத்தில் பிரத்தியேகமான அத்தியாயமாக பாடப்புத்தகங்களில் பதிவுசெய்யப்படும் என்று சாகர காரியவாசம் கூறியதையும் குறித்து சில கருத்துக்கள்.

  இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிகளாக இதுவரையில் பதவியில் இருந்தவர்களில் வேறு  எவருக்கும் எதிராக நாட்டு மக்கள் கிளர்ச்சி செய்ததில்லை. அது ராஜபக்சவுக்கே நடந்தது. 

  வேறு எந்த ஜனாதிபதியும் பதவிக்காலத்தை முழுமையாக நிறைவு செய்யாமல் இடைநடுவில் பதவியைத் துறந்ததில்லை. அதையும் ஒரு ராஜபக்சவே செய்தார்.

 வேறு எந்த ஜனாதிபதியும் மக்கள் கிளர்ச்சிக்கு மத்தியில் நாட்டை விட்டுத் தப்பியோடியதில்லை. ஒரு ராஜபக்சவே அவ்வாறு  செய்தார்.

  மக்களினால் முற்றுகையிடப்பட்ட நிலையில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அலரிமாளிகையில் இருந்து குடும்பத்துடன் ஹெலிகொப்படரில் கிளம்பி படைத்தளம் ஒன்றில் தஞ்சமடைந்த ஒரு பிரதமர் என்றால் அதுவும் ஒரு ராஜபக்சவே. 

  இலங்கை அரசியல்  கடந்த காலங்களிலும் சில உயர்வர்க்க குடும்பங்களின் ஆதிக்கத்தில் இருந்திருக்கிறது. ஆனால் ஒரு ராஜபக்ச அதிக்ரத்துக்கு வந்த பிறகு அவரது குடும்பம் அரசாயலிலும் ஆட்சி முறையிலும் அருவருக்கத்தக்க முறையில் மட்டுமீறிய ஆதிக்கத்தைச் செலுத்தியதைப் போன்று அந்த குடும்பங்கள் செய்ததில்லை.

  ராஜபக்சாக்களுக்கு எதிராக மாதக்கணக்காக கிளர்ச்சி செய்ததைப் போன்று அந்த குடும்பங்களுக்கு எதிராக மக்கள் ஒருபோதும் வீதியில் இறங்கியதில்லை.

  நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை அறிமுகப்படுத்தப்பட்டு கடந்த நான்கு தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக அரச நிருவாகத்தில் எதேச்சாதிகாரம் படிப்படியாக அதிகரித்து வந்தபோதிலும் ஒரு ராஜபக்ச ஜனாதிபதியாக வந்த பின்னரே எதேச்சாதிகாரம் உச்சத்துக்குப் போனது.

  ஆட்சிமுறையின் கெடுதியான போக்குகள் சகலவற்றையும்  (உயர்மட்டத்தில் ஊழல் மோசடி, பொதுச் சொத்துக்கள் சூறையாடல், அதிகார துஷ்பிரயோகம், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு,பொறுப்புக் கூறலை அலட்சியம் செய்தல், பேரினவாத அரசியலை முன்னெடுத்து சிறுபான்மை இனத்தவர்களின் இருப்பை ஆபத்துக்குள்ளாக்குவது ) உருவகிப்பவர்களாக விளங்கியதும் ராஜபக்சாக்களே.

ராஜபக்சாக்கள் எதிர்காலத்தில் எதைச் செய்தாலும் வரலாற்றில் இருந்து  இவற்றையெல்லாம் ஒருபோதும் அழித்துவிட முடியாது. நவீன இலங்கையின் மிகவும் 

மோசமான ஆட்சியாளர்கள் ராஜபக்சாக்களே என்பது  வரலாற்றில் ஏற்கெனவே பதிவாகிவிட்டது.

  இரண்டாவது உலகப்போரின்போது ஒரு கட்டத்தில் ஜேர்மன் விமானப்படைக்கு பிரிட்டிஷ் விமானப்படை வீரர்கள் ஏற்படுத்திய படுமோசமான இழப்பை பாராட்டியபோது வின்ஸ்ரன் சேர்ச்சில் பிரிட்டனின் வரலாற்றில்  முன்னர் ஒருபோதும் சொற்ப எண்ணிக்கையான வீரர்கள்  குறுகிய ஒரு காலப்பகுதியில் பெரும் எண்ணிக்கையானவர்களுக்கு அது போன்ற இழப்பை ஏற்படுத்தியதில்லை என்று கூறினாராம். 

  இந்த உவமானம் எதற்காகக் கூறப்படுகிறது என்பதை புரிந்துகொள்வதில்  வாசகர்களுக்கு சிரமம் இருக்காது என்று நம்புகிறோம்.

  (ஈழநாடு)