இலங்கைத் தமிழ்த் தேசியப் பிரச்சனையைக் கையாளும் ‘மாதனமுத்தா’க்கள் (வாக்குமூலம்-94)

இலங்கைத் தமிழ்த் தேசியப் பிரச்சனையைக் கையாளும் ‘மாதனமுத்தா’க்கள் (வாக்குமூலம்-94)

‘(அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர்)

    — தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் —

இலங்கைக் கடற்பரப்பில் எந்த ஒரு நாட்டினதும் ஆய்வுக் கப்பல்கள் ஆய்வு மேற்கொள்வதற்கு 2024 ஜனவரியிலிருந்து ஒரு வருட காலத்திற்கு அனுமதி வழங்குவதில்லையென்ற தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் எடுத்திருப்பதாக இலங்கையின் வெளிநாட்டு விவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன.

இத் தீர்மானத்தின் ‘ரிஷி மூலம்’ இரகசியமானது அல்ல. எல்லோரும் அறிந்த விடயம்தான். கடந்த அக்டோபரில் இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி சீன ஆய்வுக்கப்பல் (ஷியான் 06) இலங்கையின் கொழும்புத் துறைமுகத்திற்கு வந்து தரித்து பின் ‘இந்து சமுத்திர’க் கடற்பரப்பில் ஆய்வுகளை மேற்கொள்ள இலங்கை அனுமதியளித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக மேலும் ஆய்வுகளை மேற்கொள்ளவென அடுத்த வருடம் ஜனவரி 05 முதல் 20 ஆம் தேதி வரை ஆய்வுகளை மேற்கொள்வதற்கு ‘ஷியாங் யாங் ஜோங் 03’ எனும் கப்பலின் வருகைக்கான அனுமதியைச் சீனா இலங்கையிடம் கேட்டிருக்கும் நிலையில்தான் இத்தகைய தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் எடுத்திருக்கின்றது. இவ் ஆய்வுக் கப்பலின் வருகைக்கு இந்தியா முன்னைய சந்தர்ப்பங்களை விடவும் இம்முறை பலமான எதிர்ப்பைக் காட்டியிருந்தது என்பது அவதானிக்க வேண்டியதொரு அம்சமாகும். இந்தியாவின் எதிர்ப்புத்தான் இலங்கை அரசாங்கம் இப்படி ‘பாம்புக்கும் நோகாமல் கம்புக்கும் நோகாமல்’ இராஜதந்திரச் சாதுரியத்துடன் ஒரு தீர்மானத்தை எடுக்க வைத்துள்ளது என்பது அரசியல் மாணவன் எவருக்கும் எளிதில் விளங்கக்கூடிய இலகு எண்கணிதம் ஆகும்.

இங்கேதான் இலங்கைத் தமிழர் தரப்பின் அரசியல் சக்திகள் கண்விழிக்க வேண்டும்.

மகாவம்ச காலத்திலிருந்தே இந்தியாவைத் தங்கள் எதிரியாகவே பார்க்கும் இலங்கையின் பௌத்த சிங்கள பேரினவாத சக்திகள் (அது அரசாங்கமாகக்கூட இருக்கலாம்) அந்த இந்திய எதிர்ப்பை மூர்க்கமாக வெளிப்படுத்தாமல் மிகவும் புத்திசாலித்தனமாகவும் அரசியல் சாணக்கியத்துடனும் இராஜதந்திர வழிமுறைகளுக்கூடாகவுமே கையாண்டு வருகின்றன. அதற்குச் சிறந்ததோர் உதாரணம்தான் இலங்கை அரசு தற்போது எடுத்துள்ள தீர்மானம். 

ஆனால், இதற்கு முற்றிலும் முரண்பட்டதாக, இலங்கைத் தமிழர்களின் நேச சக்தியாக விளங்கிய- விளங்க வேண்டிய இந்தியாவை இலங்கைத் தமிழர் அரசியல் சக்திகள் இன்னும் தெளிவாக கூறப்போனால் ‘தமிழ்த் தேசிய அரசியற் சக்திகள்’ எனத் தமக்குக் குறிசுட்டுக் கொண்டுள்ள அனைத்து அமைப்புகளும் இன்னும் இந்தியா மீது விரல் நீட்டுவதை விடவில்லை. 

2009இல் இறுதி யுத்தத்தில் இலங்கைத் தமிழர்களுக்குப் பேரழிவு ஏற்பட்டதற்கான அடிப்படைக் காரணங்கள் 1987  இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தைத் தமிழீழ விடுதலைப் புலிகள் எதிர்த்தமையும்-இந்திய இலங்கைச் சமாதான ஒப்பந்தத்தை அமுல்படுத்தவென இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பிரசன்னமாகியிருந்த இந்திய அமைதி காக்கும் படையின்மீது போர் தொடுத்தமையும்- 1988 இல் மாகாண சபைத் தேர்தல் மூலம் மக்களால் தேர்வு செய்யப்பட்ட வடக்கு கிழக்கு (தற்காலிகமாக) இணைந்த மாகாண அரச நிர்வாகத்தைச் சீர்குலைத்தமையும்-தமிழீழ விடுதலைப் புலிகளின் அதுபோன்ற இன்னோரன்ன அரசியல் இலக்குகளற்ற ஆயுத நடவடிக்கைகளுமே (அமிர்தலிங்கம், பத்மநாபா, ராஜீவ்காந்தி  ஆகியோரின் படுகொலைகள் உட்பட)  என்பதைத் தமிழ்த் தேசிய அரசியல் தரப்பு இன்னும் நேர்மையோடு ஒப்புக் கொள்ளவும் இல்லை; உணரவும் இல்லை. 

இறுதி யுத்தத்தின் போது இலங்கை அரசாங்கத்திற்கு உதவிய இந்தியாவை அதற்காகக் குற்றம் சாட்டுகின்ற தமிழ்த் தேசிய அரசியல் சக்திகள் தமிழீழ விடுதலைப் புலிகள் புரிந்த அரசியல் மற்றும் இராணுவத் தவறுகளைச் சுட்டிக்காட்டாமல்-விமர்சிக்காமல் அவற்றை வசதியாகக் கடந்து சென்றுதான் கருத்துகளை முன்வைக்கின்றன. தமிழ் ஊடகங்களில் பக்கங்களை நிரப்பும் அரசியல் ஆய்வாளர்களில் பெரும்பாலானவர்கள்  இவ்வாறுதான் நடந்து கொள்கிறார்கள். புலிகளை நொந்துகொள்ள இயலாதவாறு இவர்கள் அனைவருமே- ‘பழைய’ மற்றும் ‘புதிய’ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி உட்பட) மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்) என்று இவர்கள் அனைவரும் மூளைச் சலவை செய்யப்பட்டிருக்கிறார்கள் அல்லது புலிசார் உளவியலிலிருந்து வெளிவர இயலாதவாறு இறுகிப் போய் இருக்கிறார்கள். 

இந்த நிலைமை மாறும்வரை தமிழ்த் தேசிய அரசியலில் எந்த முன்னேற்றமும் ஏற்படப் போவதில்லை. 

பௌத்த சிங்களப் பேரினவாத அரசாங்கங்கள் இந்தியாவை இராஜதந்திரரீதியாகக் கையாள இலங்கைத் தமிழ்த் தேசியத் தரப்புக்கு அது தெரியாமல் இமாலய அரசியல் மற்றும் இராணுவத் தவறுகளை இழைத்துவிட்டு இப்போது இமாலயப் பிரகடனங்களுக்கூடாக அத்தவறுகளைச் சரி செய்ய முனைகிறது. இந்த அணுகுமுறை இந்தியாவையும் இலங்கை அரசாங்கங்களையும் இலங்கைத் தமிழர்களையும் ஒருங்கே முட்டாளாகக் கருதும் செயற்பாடாகும். முட்டியையும் உடைத்து ஆட்டின் கழுத்தையும் வெட்டிய ‘மாதனமுத்தா’ போல் முட்டாள்தனமான அரசியல் இது.

தமிழரசுக் கட்சி தோற்றம் பெற்ற காலத்திலிருந்து (1949) இன்று வரை தமிழ்த் தேசிய அரசியல் வெறுமனே உணர்ச்சிப் பிரவாகமாகவும் -வீராத்தாபங்களை வெளிப்படுத்தியதாகவும்-சாகசங்களை (Adventures)ப் போற்றித் துதிபாடியதாகவுமே இருந்து வருகிறதே தவிர மக்கள் நலன் சார்ந்த அரசியல் சாணக்கியத்துடன் அல்ல.

பௌத்த சிங்களப் பேரினவாத சக்திகளிடமிருந்தே தமிழ்த் தேசிய அரசியல் தரப்பு இராஜதந்திர அணுகுமுறைகளைக் கற்றுக்கொள்ளவேண்டியிருக்கிறது.

இலங்கைத் தமிழ்ச் சமூகம் இன்றைய களநிலையில் வட்டுக்கோட்டைத் தீர்மானம்-திம்புக் கோட்பாடு-(இப்போது) இமாலயப் பிரகடனம் போன்ற ஏட்டுச் சுரைக்காய்களை வாய்ப்பாடுபோல் நெட்டுருப் பண்ணுவதை நிறுத்திவிட்டு இலங்கைத் தமிழர்களுடைய அரசியற் பொதுவெளியில் இப்போது அறிவுபூர்வமாக மேற்கிளம்பியுள்ள அதிகாரப் பகிர்வுக்கான இயக்கத்தைக் கட்டியெழுப்ப ஒன்றுதிரளவேண்டும். 

1987இல் கைச்சாத்திட பெற்ற இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தத்தை முழுமையாகவும் முறையாகவும் அர்த்தமுள்ள விதத்தில் அமுல் செய்யும்படியான கோரிக்கையை ஓர் ஒற்றைக் கோரிக்கையாக முன்வைத்துச் செயல்படக்கூடிய சக்திகளுக்கு இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணத் தமிழர்கள் தமது முழுமையான அரசியல் அங்கீகாரத்தை வழங்குவது ஒன்றே இன்றைய களநிலையில் இந்தியாவைக் கையாள்வதற்கான ஒரேயொரு நேர்மறையான அரசியல் அணுகுமுறையாகும்.