— கலாநிதி சு.சிவரெத்தினம் —
திரு.வெ.தவராஜா மட்டக்களப்பின் பன்முக ஆளுமைகளில் ஒருவர். இந்த பன்முகத்தன்மையும் சமூக ஈடுபாடும் கொண்டவர்கள் மிக அரிதாக உள்ள நிலையில் தவராஜாவினுடைய இழப்பு ஒரு தனிமனித இழப்பாக கடந்து செல்ல முடியாதது. தவராஜாவினுடைய பன்முக ஆளுமைகளில் இங்கு அவரின் நாடக ஆளுமையிளைப் பதிவு செய்ய முயல்கின்றேன்.
தவராஜா அவர்கள் 1964 இல் பிறந்தவர், அறுபதுகளில் பிறந்தவர்களுக்கு திராவிட பகுத்தறிவுவாதம், சமூகச் சீர்திருத்தக் கருத்துக்கள், இடதுசாரிச் சிந்தனைகள் என்பவற்றின் பாதிப்புக்கு உட்படுவதற்கு முன்னரே தமிழ்த் தேசிய சிந்தனைகளால் அவர்கள் பாதிக்கப்பட்டவர்கள். தவராஜா அவருடைய இளமைக் காலத்தில் தமிழ்த் தேசியக் கருத்துக்களால் பாதிக்கப்பட்டவராக இருந்தாலும் அவர் அதிகமாக சமூகச் சீர்திருத்தத்தையும் அதன் நடைமுறையினையும் நேசித்து அதனை ஒரு கொள்கையாக அன்றி நடைமுறைரீதியாக கடைப்பிடித்து வாழ்ந்த ஒருவராகவே இருந்தார்.
களுதாவளையில் பறைமேளக் கூத்துக்குப் புகழ் பெற்று விளங்கிய அண்ணாவியார் கலாபூசணம் வையன் ஆனைக்குட்டி அவர்களின் மகனான சிவலிங்கம் அவர்களால் 1980களில் ஆரம்பிக்கபப்பட்ட ‘அண்ணா கலைக் கழகம்’ மட்டக்களப்பின் நவீன நாடகங்களுக்கு முக்கியமான கலைக் கழகமாக விளங்கியது. இக் கலைக் கழகத்தின் நவீன நாடகங்கள் மட்டக்களப்பில் மட்டுமல்லாது மட்டக்களப்புக்கு வெளியிலும் பேசப்பட்டன. இந்த நாடகங்களில் முக்கிய பெண் பாத்திரமேற்று நடிப்பவராக தவராஜா இருந்தார்.
அண்ணா கலைக்கழகத்துடன் சேர்ந்து தவராஜா நாடகங்களில் நடிப்பது தொடர்பாக பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் அவை எவற்றையும் பொருட்படுத்தாது. அண்ணா கலைக் கழக அங்கத்தராகவும் அதன் ஒரு முக்கிய நடிகராகவும் செயற்பட்டதன் ஊடாக அவர் தன்னை சமூக அடிமைத்தனங்களுக்கு எதிரானவராக அவருடைய இளமைக் காலத்திலேயே காட்டிக் கொண்டார்.
அண்ணா கலைக் கழகங்கள் வழங்கிய நாடக அனுபவத்துடன் அவர் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்துக்கு தெரிவாகி அங்கு கல்வி கற்கச் சென்ற போது அங்கு குழந்தை சண்முகலிங்கம் அவர்களுடனான தொடர்பு அவரை சினிமாப்பாணி நவீன நாடகங்களுக்கு அப்பாலான நவீன நாடகத்துக்கு அறிமுகப்படுத்தியது.
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் அவர் பொருளியலை விசேட கற்கை நெறியாகக் கொண்டு கற்ற போதும் 1985,1986,1987,1988 ஆகிய நான்கு ஆண்டுகளிலும் அங்கு மேடையேறிய முக்கிய நாடகங்களில் எல்லாம் ஒரு நடிகராக நடித்திருந்தார். அதில் குறிப்பிடத்தக்கது ‘மண்சுமந்த மேனியர்’ எனும் நாடகமாகும். இந்தப் பயிற்சிகளும் அனுபவங்களும் அவரை ஒரு நாடக நடிகனாக, நாடக எழுத்தாளனாக, நாடக இயக்குநனராக மாற்றியது.
அவர் தனது கல்வியினைப் பூர்த்தி செய்து 1990களில் மட்டக்களப்பு வின்சன் உயர் தரப் பெண்கள் பாடசாலையில் ஆசிரியராக கடமையாற்றிய போது தனது நாடக அனுபவங்களையும் திறமைகளையும் விதைக்கின்ற களமாக அப்பாடசாலையினைப் பயன்படுத்திக் கொண்டார். பாடசாலையும் அவரைப் பயன்படுத்திக் கொண்டது.
மட்டக்களப்பில் சினிமாப் பாணிக்கு மாற்றீடான நவீன நாடகங்களை அறிமுகப்படுத்திய முன்னோடியாக தவராஜா விளங்கினார். அவர் குழந்தை சண்முகலிங்கத்தினுடைய நாடகங்களையும் தன்னால் எழுதப்பட்ட நாடகங்களையும் மாணவர்களைக் கொண்டு பழக்கி மேடையிட்டார். இந்நாடகங்கள் மட்டக்களபப்பு நாடக ஆர்வலர்களுக்கு பெரு வியப்பை அளித்தன. இதில் குறிப்பிடத்தக்க நாடகம் ‘மங்கையராய்ப் பிறப்பதற்கே’ எனும் நாடகமாகும்.
1991 இல் கிழக்குப் பல்கலைக் கழகத்தில் கலைகலாசார பீடம் ஆரம்பிக்கப்பட்டு அதில் நாடகமும் அரங்கிலும் ஒரு பாடமாகக் கற்பிக்கப்படத் தொடங்கியதும் பேராசிரியர் சி.மௌனகுரு அவர்கள் பீடாதிபதியாக துறைத் தலைவராக இருந்து செயற்பட்ட போது பல்கலைக் கழகத்துடன் தனது இணைப்பை ஏற்படுத்திக் கொண்டார். இக்காலப் பகுதியில் உதவிப் பிரதேச செயலாளராக, பிரதேச செயலாளராக கடமையாற்றிய போது தான் கடமையாற்றிய பிரதேச இளைஞர் யுவதிகளுக்கு பல்கலைக் கழக விரிவுரையாளர்களைக் கொண்டு நாடகப் பயிற்சிப் பட்டறைகளை ஒழுங்கு செய்து நடாத்தினார். அதுவரை காலமும் நாடகம் நடிப்பதற்கு பயிற்சிகள் அவசியமா? நாடகத்துக்கு பயிற்சிப்பட்டறைகள் தேவையா என்ற நிலை இருந்த போது வேறு எப் பிரதேச செயலாளர்களும் செய்ய முன்வராது கவனிக்காமல் விடப்பட்டுக் கிடந்த நாடகக் கலையை உயிர்ப்பிக்க தனது அதிகாரத்துக்கு உட்பட்ட அனைத்து காரியங்களையும் மிகச் சிறப்பாக நிறைவேற்றினார்.
தவராஜா நவீன நாடகங்கள் மேல் கொண்டிருந்த ஈடுபாட்டுக்கு எவ்விதத்திலும் குறைவில்லாமல் அவர் பாரம்பரிய அரங்குகளிலும் அந்த அரங்கச் செயற்பாடுகளிலும் அக்கறை கொண்டவராக இருந்தார். வறட்டுவாத பாரம்பரியம் பேசுபவராக இல்லாமல் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறையினருக்கு எவ்வாறு கொண்டு சேர்க்க வேண்டும் என்பதிலும் அதன் அழகியல் மதிப்புக்கள் சரியாகப் பேணப்பட வேண்டும் என்பதிலும் சரியான கொள்கைத் தெளிவு உடையவராக இருந்தார். பாரம்பரியம் என்பதற்காக கண்ணை மூடிக்கொண்டு கொடியசைப்பவராக அவர் இருக்கவில்லை.
இன்று மட்டக்களப்புக் கூத்துக்கான அடையாளமாக பலராலும் பயன்படுத்தப்படுகின்ற வடமோடி முடியை ஆரையம்பதியில் இருந்து கண்டுபிடித்து காட்சிப்படுத்தியவரும் தவராஜாவே ஆகும். இன்று பல்வேறு தேவைகளுக்காக அந்த முடியைப் பயன்படுத்துகின்ற பலர் அதன் பின்னால் உள்ள தவராஜாவினுடைய தேட்டத்தையும் உழைப்பையும் அறிந்திருக்கமாட்டார்கள். அறிந்தவர்கள் கூட அதனை நாசூக்காக மறைத்து தங்களைத்தான் கூத்து மீட்பர்களாக குறிசுட்டுக் கொள்கிறார்கள்.
தவராஜாவுக்குள் இருந்த பாரம்பரிய ஆவல்தான் அவரை பேராசிரியர் மௌனகுரு அவர்களின் இராவணேசனில் இந்திரஜித் பாத்திரமேற்க வைத்தது. பிரதேச செயலாளர் எனும் பொறுப்புமிக்க ஓய்வில்லாத பணிக்கு மத்தியிலும் ஒழுங்காக ஒத்திகைகளுக்கு வந்து பாடி, ஆடிப் பயிற்சி பெற்று அந்த அரங்க ஆற்றுகையில் தனக்கான முத்திரையைத் தெளிவாகப் பதித்தார். அவருடைய பாடல்களும் ஆடல்களும் இராவணேசனுக்கு தனிச்சிறப்பை வழங்கின். இலங்கையில் பல்வேறு பிரதேசங்களிலும் ஆற்றுகை செய்யப்பட்ட போது அத்தனை ஆற்றுகைகளிலும் தவராஜா தனியாக மிளிர்ந்தார்.
இது போன்றே தனது ‘படி’ எனும் காத்திரமான கலை இலக்கியச் சஞ்சிகையில் ‘நான்காவது மகிடி பற்றிய அறிமுகம்’ சு.சிவரெத்தினத்தின் கட்டுரையை 1997ம் ஆண்டு பிரசுரித்து மகிடிக் கூத்துப் பற்றிய புரிதலை அகலப்படுத்தினார்.
பிரதேச செயலாளராக கடமையாற்றிய பிரதேச செயலகங்களின் கலாசார விழா மலர் ஓர் ஆவணமாக இருக்க வேண்டும் என்பதற்காக கலாசார உத்தியோகத்தர்களுக்கு சரியான வழிப்படுத்தல்களை வழங்கி, கலாசார உத்தியோகத்தர்களை விட கடினமாகப் பணிபுரிந்து அம் மலர்களை வெளிக் கொண்டு வந்திருந்தார். அவருடைய பிரதேசத்து பிரதேச கலாசார மலர்கள் ஏனைய பிரதேச கலாசார மலர்களில் இருந்து தனித்துவமானவையாகவும் பயனுள்ள ஆவணங்களாகவும் இருப்பதற்குக் காரணம் தவராஜா அந்த விடயங்கள் தொடர்பாக சமூகப் பொறுப்புடன் நடந்து கொண்டமையேயாகும்.
தவராஜாவினுடைய கலை, இலக்கிய நிர்வாக ஆளுமைகளை அடையாளம் கண்ட சுவாமி விபுலாநந்தா அழகியற் கற்கைகள் நிறுவகம் அவரை கல்விசார் அவைக் குழுவின் ஒரு உறுப்பினராகச் சேர்த்துக் கொண்டது. அதில் மூன்று வருடங்கள் மிகச் சிறப்பாக தனது பணியினைச் செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து முகாமைத்துவ சபையின் உறுப்பினராகவும் மூன்றாண்டுகள் பணிபுரிந்து முக்கியமான முடிவுகள் எடுத்து பலருடைய வாழ்க்கையில் விளக்கேற்றியும் வைத்தார் என்பதை மறக்க முடியாது.
இவ்வாறு சமூக அடிமைத்தனத்துக்கு எதிரானவராகவும், சிறந்த கலை இலக்கியவாதியாகவும். வாழ்ந்த தவராஜா சிறுகதைத் தொகுப்பு, கவிதைத் தொகுப்பு, நாடகநூல் என மூன்ற நூல்களைத் தந்துள்ளார். அவர் ஓய்வு பெற்ற பின் ‘படி’ சஞ்சிகையினைத் தொடர்ச்சியாக வெளிக் கொண்டு வருவதின் ஊடாக சிறந்த இலக்கிய, நாடக உரையாடல்களை வெளிக் கொண்டு வர வேண்டும் என்ற ஆவல் கொண்டிருந்த தவராஜாவை காலன் விட்டுவைக்காதது மட்டக்களப்புக்கு பெரும் இழப்பேயாகும்.