ஒரு போர்க்குரல்: தமிழ்ச்செல்வனின் எழுத்துகள்

ஒரு போர்க்குரல்: தமிழ்ச்செல்வனின் எழுத்துகள்

 — கருணாகரன் —

“ஊடகம், அரசியல், சூழலியல், சமூகச் செயற்பாடு, கலை, இலக்கியம், பண்பாடு, தனி வாழ்க்கை எல்லாம் ஒரு வட்டமாக இணைந்தவை. ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்க முடியாதவை. அப்படிப் பிரித்தால் அதனால் அனைத்திலும் பாதிப்பு ஏற்படும்” என்ற புரிதலோடு இயங்கிக் கொண்டிருப்பவர் ஊடகவியலாளர் முருகையா தமிழ்ச்செல்வன்.

இத்தகைய   நிலைப்பாட்டோடு இன்றைய ஈழத்தமிழ்ச் சூழலில் ஒருவர் இயங்குவதென்பது மிகச் சவாலானது. அந்தச் சவாலை எதிர்கொள்வதற்குத் துணிவும் கூடிய விலையைக் கொடுக்கவும் வேண்டும். ஏனென்றால் அரசு, அரசுக்கு அப்பாலான பொது அரசியற் தரப்புகள், பெருந்திரள் சமூகம், Corporate companies என அதிகார நிலைப்பட்ட அனைத்துத் தரப்பும் மக்களுக்கும் சூழலுக்கும் எதிர்காலத்துக்கும் எதிராக இயங்கும் தன்மையைக் கொண்டேயுள்ளன. வெளியே இவை ஒன்றுடன் ஒன்று முரண்பாடுள்ளவை, மோதிக் கொண்டிருப்பவை  போலத் தோன்றினாலும் அடிப்படையில் அப்படியல்ல. மறைமுகமாக ஒன்றுக்கு ஒன்று துணை நிற்பவை. ஒன்றை ஒன்று காப்பாற்றிக் கொள்பவை. என்பதால் இவையெல்லாம் ஒரே அச்சில் சுழன்று கொண்டிருப்பவையாகும்.

ஊன்றிக் கவனித்தால் இவையே ஊடகத்துறையைச் சீரழித்துக் கொண்டிருப்பவை அல்லது அவற்றின் மீது நெருக்கடியை உண்டாக்குபவை என்பதைப் புரிந்து கொள்ள முடியும். அவ்வாறே மக்களுக்கும் நாட்டுக்கும் விரோதமான முறையில் நச்சு அரசிலைத் தந்திரோபாயமாக முன்னெடுக்கின்றன. இலங்கைத் தீவில் முன்னெடுக்கப்பட்ட, முன்னெடுக்கப்பட்டு வரும் பெரும்போக்கு அரசியலினால் மக்களுக்கு எத்தகைய நன்மைகள் கிடைத்தன? ‘மக்களுக்காக’, ‘விடுதலைக்காக’, ‘நாட்டுக்காக’ என்ற பாசாங்குச் சொல்லாடல்களின் வழியே  மோசமாக மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த நாடக  அரசியல், மக்களின் மீது போரைத் தொடுத்து (இது தனியே ஆயுத ரீதியான போரை மட்டும் குறிக்கவில்லை, அரசியல் ரீதியான போரையும் அர்த்தப்படுத்தும்) அழிவுகளை உண்டாக்குகிறது. இதனால்தான் அந்நிய ஆக்கிரமிப்புக் காலத்தையும் விட சுதேசிகளுடைய அரசியல் அதிகாரத்தின் கீழ் பேரழிவுகளை நாடும் மக்களும் சந்திக்க வேண்டியிருக்கிறது! இன்று நாடு சந்தித்து நிற்கும் பிளவுகளும் பொருளாதார நெருக்கடிகளும் மக்கள் விரோத அரசியலின் விளைவுகளன்றி வேறென்ன? இதை யார் மறுத்துரை முடியும்?

சூழலியலைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. அந்தளவுக்கு அதைக்  கெடுத்துக் கொண்டிருக்கின்றன இவை. சட்ட விரோதமாக மண் அகழ்வது, மரங்களைத் தறிப்பது, காடுகளை அழிப்பது, கடலோரங்களைச் சிதைப்பது, நீர்நிலைகளைக் கெடுப்பது, சமூக ஒருங்கிணைப்புகளையும் ஒழுங்குகளையும் ஒழிப்பது என இது நீள்கிறது. அவ்வாறே  கலை, இலக்கியம், பண்பாடு போன்றவற்றையும் இவை கெடுத்தழிக்கின்றன. இந்தத் தரப்புகளால் நடத்தப்படும் போட்டிகள், விருதளிப்புகள், பண்பாட்டு விழாக்கள், ஊடகத்துறைக்கு அளிக்கப்பட்டிருக்கும் சுதந்திரம், அவற்றைக் கையாளும் விதம் எல்லாம் இதைக் காட்டுகின்றன. இதற்கு மேல் இதற்கெல்லாம் உதாரணங்கள் தேவையில்லை.

இவற்றைச் செய்வது தனி நபர்கள் போல உங்களுக்குத் தோன்றலாம். ஆனால், அப்படியல்ல. இவற்றின் பின்னே அரசு, அரசியற் கட்சிகள், காப்பரேட் நிறுவனங்களின் கரங்கள்தான் வலுவாக உள்ளன. குற்றமிழைப்பவர்களை ஒரு நூலாகத் தொடர்ந்து சென்றால், அது இவற்றில்தான் போய் முடியும். இந்தக் குற்றங்களையும் குற்றவாளிகளையும் கட்டுப்படுத்த முடியாமல்தான் இவையெல்லாம் கைளைப் பிசைந்து கொண்டிருக்கின்றன என்று நீங்கள் நம்புகிறீர்களா? இவையே சூழலியல் பற்றியும் தீவிரமாகப் பேசுகின்றன. உலகளாவிய சூழலியல் பாதுகாப்பு மாநாட்டில் (காலநிலை மாற்ற மாநாடு – Climate change conference) பங்கேற்றுக் கொண்டே உள்நாட்டில்  அதற்கெதிராகச் செயற்படுகிறது அரசு. அப்படித்தான் அதைப் பற்றி பேசும் அரசியலாளரும் பிற அமைப்புகளும்.

ஆனால், இதைத் தெரிந்தும் தெரியாமலும் மக்களும் (பெரும்பாலான புத்திஜீவிகளும் கூட) இந்தத் தரப்புகளைத்தான் ஆதரிக்கிறார்கள். அதனால் இவையே பலமானவையாக உள்ளன.  

ஆகவே, இவ்வாறு மக்கள் விரோத, சமூக விரோத, தேச விரோத, உலக விரோதச் செயற்பாடுகளை மேற்கொள்ளும் இந்த அதிகாரச் சக்திகளுக்கு எதிராகத் தமிழ்ச்செல்வனைப் போன்ற நிலைப்பாட்டை எடுத்து இயங்குவது மிகக் கடினம். வலுவான அமைப்பின் பலமின்றித் தனித்து இயங்குவதானால் அதற்கு மிகுந்த தன்னம்பிக்கையும் உறுதியும் வேண்டும். இல்லையென்றால் தாக்குப்பிடிக்கவே முடியாது. கடித்துக் குதறி விடும். அல்லது சத்தமின்றி உள்ளிழுத்து உறிஞ்சிச் சக்கையாக்கி விடும்.

எனவேதான் இதற்கு எந்த நிலையிலும் அதிக விலைகளைக் கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும் என்கிறேன். தமிழ்ச்செல்வன் அந்த விலையைக் கொடுத்துக் கொண்டே தன்னுடைய துணிகரமான செயற்பாட்டை முன்னெடுத்து வருகிறார். தமிழ்ச்செல்வனை எதிர்கொள்ள முடியாத இயலாமையினால் அவருடைய சமூகப் பின்புலத்தை வைத்துத் தாக்கினார், ஒரு பாராளுமன்ற உறுப்பினர். தமிழ்ச்செல்வனுடைய சில கட்டுரைகளை, அவர் எழுதும் கொழும்புப் பத்திரிகை ஒன்றில் பிரசுரிக்காமல் தடுத்துள்ளார்  அமைச்சர் ஒருவருடைய இணைப்பாளர் ஒருவர். கூடவே கட்டுரைகளை பிரசுரிப்பதற்கு முன்பு தமக்குக் காண்பிக்க வேண்டும் என்ற கட்டளையையும் இட்டுள்ளார் அவர். இவ்வளவுக்கும் அவரும் ஒரு காலம் ஊடகத்துறையில் பணியாற்றியவர் என்பது நகைமுரண். இதை விட நிர்வாக அதிகாரிகள் மட்டத்திலும் உள்ளுர் அரசியற் தரப்புகளினாலும் தமிழ்ச்செல்வனுக்கு தொடர்ந்து நெருக்கடிகள் ஏற்படுத்தப்படுகின்றன. சமூக வலைத்தளங்களிலும் அவரை ஆதரிக்கும் அளவுக்கு எதிர்ப்புக் காட்டுவோரும் உள்ளனர்.

உண்மை, நியாயம், மாற்றுக்கருத்து, இவற்றைத் துணிந்து வெளிப்படுத்துதல், நேர்மையான முறையில் விமர்சனங்களை முன்வைத்தல் போன்றவற்றை எதிர்கொள்ள முடியாதபோது, அவதூறு செய்வதும், துரோக முத்திரை கூறுவதுமே தமிழ்ச்சூழலின் இயல்பு. அது தமிழ்ச்செல்வனுக்கும் நிகழ்ந்திருக்கிறது. ஆனால், இவையெல்லாம் தமிழ்ச்செல்வனை முடக்கி விடவில்லை. மேலும் மேலும் ஊக்கி, வலுவாக்கி, வளர்த்துள்ளன. இன்று அவருடைய பிரதான செயற்பாட்டுத் தளமாகிய ஊடகத்துறையில் அவர் துலங்கும் நட்சத்திரமாக இருப்பதற்கு இந்த எதிர்ப்புகள் முக்கியமான காரணமாகும். தனக்கான எதிர்ப்புகள் மேலெழ மேலெழ அவற்றை எதிர்கொள்வதற்காக, அவர் வலுவான ஆதாரங்களைத் தேடிச் சென்றார். இதற்காக அவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை (Right to Infomation) பயன்படுத்தி செய்திகளை அறிக்கையிட்டார். கட்டுரைகளை எழுதினார். தன்னுடைய தருக்கங்களை முன்வைத்தார். என்னுடைய அவதானத்தின்படி இலங்கையில்  RTI ஐப் பயன்படுத்திச் செய்திகளையும் அறிக்கைகளையும் எழுதிய ஊடகவியலாளர்களில் தமிழ்ச்செல்வன் முக்கியமானவர். வடக்குக் கிழக்கில் அவர்தான் முதல்நிலையாளராக இருப்பார் என எண்ணுகிறேன். இவ்வாறு செயற்படுவதன் மூலம் பலருடைய முகமூடிகளைக் கிழித்ததுடன், பல தரப்பிலும் நிகழ்ந்த ஊழல் மோசடிகளையும் அதிகார துஸ்பியோகங்களையும் பகிரங்கப்படுத்தி எதிர்த்தார். மக்களுக்கு விழிப்பூட்டும் இந்தப் பங்களிப்பு பாராட்டுக்குரியது.

இப்படியான அழிவுகளுக்கும் அநீதிக்கும் எதிரான அவருடைய தளராத எதிர்க்குரலுக்கு மிகப்  பெரிய அங்கீகாரம் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், துரதிருஸ்டவசமாக அப்படி எந்த அதிசயமும் நிகழவில்லை. அபூர்வமாகச் சில அங்கீகாரங்களும் விருதுகளும்  (வட மாகாணத்தின் சிறந்த புகைப்படத்துக்கான இளங்கலைஞர் விருது, இலங்கைப் பத்திரிகை ஆசிரியர் சங்கம் – பத்திரிகை ஸ்தாபனம் வழங்கிய விருது (2018), காவேரிக்கலாமன்றம் – யாழ் பெட்டகம் இணைந்து வழங்கிய சிறந்த சூழலியாளர் விருது) மட்டும் கிடைத்துள்ளன. இவ்வாறு கிடைத்த அங்கீகாரத்தை விட அவருக்கு இழைக்கப்பட்ட அவதூறுகளே அதிகம். அவருக்கு கொடுக்கப்பட்ட நெருக்கடிகள் அதற்கும் மேல். இதையெல்லாம் பலரும் பார்த்துக் கொண்டுதானிருக்கிறார்கள். அவர்களுக்கு உண்மைகள் தெரியும். சரியும் தவறும் புரியும்.  ஆனாலும் சரியின் பக்கம், நீதியின் பக்கம், நியாயத்தின் பக்கமாக நிற்கமாட்டார்கள். அதை விட அதிகாரத் தரப்புகளுடன் சமரசம்  செய்வதே அவர்களுடைய விருப்பமாகும். சிலர் ரகசியமான முறையில் தமிழ்ச்செல்வனுக்கு ஆறுதல் சொல்வார்கள். அல்லது தமிழ்ச்செல்வனுடைய காதுகளுக்குள் தங்களுடைய ரகசியக் கண்டனங்களைச் சொல்லிக் கொள்வார்கள். இதற்கு மேல் அவர்களுடைய நீதியின் குரல் எழுவதில்லை. இதொன்றும் ஆச்சரியமானதல்ல. நாம் புரிந்து கொள்ளக் கூடியதே!

தமிழ்ச்செல்வனுக்கு இதெல்லாம் பொருட்டல்ல. அவர் உருவாகி வந்த விதம் அப்படியானது. 2004 இல்  பத்திரிகைத் துறைக்குள் நுழைந்த தமிழ்ச்செல்வன், அப்பொழுது வன்னியில் வெளிவந்து கொண்டிருந்த ‘ஈழநாதம்’ பத்திரிகையில் உதவி ஆசிரியராக இருந்து கொண்டு, சூழற்பாதுகாப்பு, சமூகப் பிரச்சினைகள், மக்கள் நலன்  பற்றி கவனம் கொள்ளத்தக்கதாக எழுதினார். அது விடுதலைப்புலிகளின் காலம். அவர்களுடைய நிர்வாகப் பரப்பில், அவர்களுடைய ஆளுகைக்குட்பட்ட ஊடகத்தில் பணியாற்றிக் கொண்டே அவர்கள் சம்மந்தப்பட்ட விடயங்களிலும்  துணிச்சலுடன்  தன்னுடைய பார்வையை முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது. இதற்குக் காரணம், தேசவிடுதலை என்பது அதனுடைய சூழற்பாதுகாப்பையும் மக்கள் நலனையும் ஆதாரமாகக் கொண்டது என்ற உயர்ந்த புரிதல் அவருக்கு இருந்ததேயாகும். உண்மையும் அதுதான். சூழலைக் கெடுத்துக் கொண்டு தேசவிடுதலையைக் காண முடியாது.  இதனால் தமிழ்ச்செல்வன் புலிகளால் நேர்மறையாகப் புரிந்து கொள்ளப்பட்டவராக இருந்தார். 

 யுத்த முடிவுக்குப் பின்னர் (Post – war period)  இதை மேலும் வலுவாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறார். இன்று தமிழ்ச்செல்வனுடைய எழுத்துக்கு இருக்கின்ற வலு அவர் இருக்கின்ற சூழலில் மிக அதிகம். இதற்குக் காரணம், அவருடைய அரசியற் பார்வையும் வரலாற்று நோக்குமாகும். யுத்த முடிவுக்குப் பின்னரான (2009 க்குப் பிறகான) உள்ளுர் மற்றும் உலகச் சூழலை தமிழ்ச்செல்வன் நிதானமாகப் புரிந்துள்ளார். இதனால், தேவையற்ற மயக்கங்களும் அதீத கற்பனைகளும் அவரிடமில்லை. சமகால நெருக்கடிகளைக் குறித்த அச்சமும் குழப்பங்களுமில்லை. பதிலாக  மிகத் தெளிந்த பார்வையே உள்ளது. ஒரு ஊடகவியலாளர், உண்மை, யதார்த்தம் இவை இரண்டுக்கும் நேர்மையாக இருக்க வேண்டும் என எண்ணுகிறார். அவரைப் பொறுத்தவரையில் “அறிவென்பது துணிவுக்குரியது. சரியானதை, சமூக நீதிக்குரியவற்றை, சமத்துவத்தை, உலகளாவிய நன்மைக்கானவற்றை, பன்மைத்துவத்தை, விமர்சனபூர்வமானவைகளை, அறிவியலை ஏற்று நடக்க வேண்டும்” என்பதாகும். “இவற்றுக்காக விலைகளைக் கொடுக்க நேர்ந்தால் அதைக் கொடுத்துத்தானாக வேண்டும். அப்படி விலைகளைக் கொடுத்தே மனித குலம் முன்னேறி வந்திருக்கிறது. தன் நெஞ்சறிந்த உண்மைகளை எதன்பொருட்டும் மறைத்துக் கொள்ளவோ, மழுப்பி வார்த்தையாடவோ முனைந்தால் அது கீழ்மையானது. மனித குலத்துக்கே எதிரானது. அறிவற்றது. அதுவே துரோகத்தனமானது” என்ற நம்பிக்கையைக் கொண்டவர். இதை அவர் அடிக்கடி நேர்ப்பேச்சிலும் சொல்வதுண்டு. இதுவே அவருடைய வழிமுறையும். இந்த நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதால் அவர் சர்ச்சைக்குரியவராகத் தென்படுகிறார். காரணம், ‘யதார்த்தவாதி வெகுசன விரோதி’ என்பதே.

தன்னுடைய உறுதியான செயற்பாட்டின் வழியே தனக்கென ஒரு அடையாளத்தையும் முன்மாதிரியையும் உருவாக்கியுள்ளார் தமிழ்ச்செல்வன். அதுதான் தமிழ்ச்செல்வனின் சிறப்பு. இதற்குப் பிரதான காரணம், அவரிடம் தன்லாபங்களுக்கப்பாலான பாசாங்கற்ற சமூகப் பற்றுள்ளதாகும். தன்லாபங்களுக்காகச் சமரசங்களைச் செய்து கொள்ள முயற்சிப்பதில்லை. அப்படிச் செய்வது சிலருக்குத் தந்திரோபாயமான வழிமுறையாகப் படலாம். இன்றைய சூழலில் அப்படித்தான் பலருமுள்ளனர். அதொரு பொதுப்போக்காக வளர்த்தெடுக்கப்பட்டுமுள்ளது. ஆனால், தமிழ்ச்செல்வனுக்கு அதில் நம்பிக்கையில்லை. அது இழிவென்பது அவருடைய நிலைப்பாடு.

ஊடவியலாளர்களுக்கிருக்க வேண்டிய – அவர்கள் பேண வேண்டிய பன்முக ஈடுபாடும் அறிவும் தமிழ்ச்செல்வனிடமுள்ளது. இலக்கிய வாசிப்பு, பன்முக அடிப்படையிலான வரலாற்றுத் தேடல், மாற்றுக் கருத்துகளுக்கு மதிப்பளித்தல், ஓவியம், ஒளிப்படம், சினிமா போன்றவற்றில் உள்ள ஈடுபாடு இதில் முதன்மையானது. இந்த ஈடுபாட்டின் நிமித்தமாக கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மலையகம், கொழும்பு அஎன இவற்றுக்கான பயணங்களைச் செய்திருக்கிறார். கிளிநொச்சியில் இயங்கும் ‘எழுத்தாளர் – வாசகர் வட்டம்’, ‘திரைப்பட வட்டம்’, ‘மக்கள் சிந்தனைக் களம்’, ‘ஊடகவியலாளர் அமையம்’ போன்றவற்றில் தமிழ்ச்செல்வன் முதன்மைச  செயற்பாட்டாளர். இந்த நூல்  வெளிவரும்போது அவர் சென்னை புத்தகக் காட்சியில் நிற்பார்.

தமிழ்ச்செல்வனுடைய திறனுக்கும் அடையாளத்துக்கும் சான்றாக இந்தச் சூழலியற் கட்டுரைகள் உள்ளன. ஒரு களச் செயற்பாடாக சூழலியல் நெருக்கடிப் பிரதேசங்களுக்கு நேரடியாகச் சென்று, விவரங்களைத் திரட்டி, ஒளிப்படங்களை எடுத்து ஆவணமாக்கப்பட்டவை இவை. இவை வெளிப்படுத்தப்பட்டபோது பலவிதமான நெருக்கடிகள் அவருக்கு உண்டாகின. காரணம், சூழலைப் பாதுகாக்க வேண்டும், பேண வேண்டும், அதை நல்லபடியாக வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்துக்கு மாறாகவே சமூக நிலவரம் இருப்பதாகும். சூழலைக் கேடாக்குவதன் மூலம் நம்வாழ்கையும் நம்முடைய வாழ்க்கைச் சூழலையும் ஏன் உலகத்தையும் நாசமாக்குகிறோம் என்று எப்படித்தான் சொன்னாலும் அதைப் புரிந்து கொள்வோர் மிகக் குறைவு. இதனால்தான் சூழலியலாளர்களுக்குள்ள மதிப்பையும் சமூகச் செல்வாக்கையும் விட சூழற்கேடாக்கிகளுக்குச் செல்வாக்கும் மதிப்பும் அதிகமாக இருக்கிறது. சட்டமும் நீதி மன்ற நடவடிக்கைகளும் கூட கேடாக்கிகளை ஏதோ வகையில் காப்பாற்றிக் கொண்டேயுள்ளன. எனவேதான் ஏற்கனவே சொல்லப்பட்டுள்ளதைப்போல அரசியற் தரப்புகள், அதிகாரத் தரப்புகளின் ஆதரவுடன் சூழற்கேடாளர்கள் இயங்குவதால், இந்தக் கேடுகளை எதிர்ப்பதென்பது, உடந்தையாக இருக்கும் அதிகாரத் தரப்புகளையும் அரசியற் தரப்புகளையும் எதிர்ப்பதாகும். இந்தப் பரப்பில் தமயந்தி, அம்ரிதா ஏயெம், பொ. ஐங்கரநேசன், ஊடகவியலாளர் ராம், தரன்ஸ்ரீ போன்ற மிகச் சிலரே எழுதியும் இயங்கியும் வருகின்றனர். ஏனையோர் சூழலியலைப் பொருட்படுத்துவது குறைவு. ஆனால், எல்லாவற்றுக்கும் அப்பால் இது தன்னுடைய கடமை என உணர்ந்திருக்கிறார் தமிழ். மக்களை விழிப்படைய வைப்பது அவசியம் என்பது அவருடைய எண்ணம்.  இதற்காகத் தமிழ்ச்செல்வனைப் பாராட்ட வேண்டும். ஊடக, அரசியல், சமூகச் செயற்பாட்டுப் பரப்பில் உள்ள பலரும் சூழலியலைப் பற்றிப் பேசுவதற்குத் தயங்குவதுண்டு. அதைப் பேசினால், அதிகாரத் தரப்புகளின் பகையை ஏற்றுக் கொள்ள வேண்டிவரும் என்ற அச்சம். அறிவுக்கு எதிரானது இந்தப் பயம்.

இதைப்போல வெவ்வேறு துறைகளைப் பற்றியும் தமிழ்ச்செல்வனுடைய கட்டுரைகள் உண்டு. அவையும் தேர்ந்தெடுக்கப்பட்டு நூலாக்கம் பெற வேண்டும். இவையெல்லாம் எழுத்தோடு, புத்தகத்தோடு அடங்கி விடாமல், அறிவின்  விளைவுகளாகும் என்ற புரிதலோடு நம்முடைய சூழலில் உரையாடல்களாகத் தொடர வேண்டும். அது  அவசியமாகும். 

 (ஊடகவியலாளர் மு. தமிழ்ச்செல்வனின் “நஞ்சாகும் நிலம்” என்ற சூழலியல் நூலுக்கு எழுதப்பட்ட முன்னுரை)