— அழகு குணசீலன் —
தமிழ்த்தேசிய அரசியல் இனப்பிரச்சினைக்கான தீர்வைத்தேடி இன்னும் இருபத்தி ஐந்து ஆண்டுகளில் நூற்றாண்டு விழாக்காணப்போகிறது. தமிழ்த்தேசிய அரசியல் தலைமைகள் மீதான பிரதான குற்றச்சாட்டு அவர்கள் செயற்பாட்டு அரசியலை செய்யவில்லை என்பதுடன், செய்ய முன்வருபவர்களையும் எதிர்ச்செயற்பாட்டு அரசியல் மூலம் விட்டுவைப்பதில்லை என்பதுதான். உலகத்தமிழர் பேரவையின் அரசியல் செயற்பாட்டிற்கும் இதுவே நடக்கிறது.
இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வை பாராளுமன்ற அரசியல் ஊடாக மட்டும் அல்ல, ஆயுதப்போராட்டம் மூலமாகவும் அடைய முடியாமல் போனதற்கான அரசியல் பின்னணி இந்த எதிர்ப்பு அரசியல் கலாச்சாரம். இந்த சூழலில் உலகத்தமிழர் பேரவையும், சிறந்த இலங்கைக்கான பௌத்த பிக்குகள் அமைப்பும் இணைந்து இமாலய பிரகடனத்தை முன்மொழிந்தனர். ஆகக் குறைந்தது இனப்பிரச்சினனைக்கான தீர்வைத்தேடும் பாதையில் உள்ள பிரதான தடையை இதுவரையான தமிழ்த்தேசிய அரசியலுக்கு மாறாகவும், சிங்கள பேரினவாத பௌத்த அரசியலுக்கு மாறாகவும் இந்த பிரகடனம் இனம்கண்டுள்ளது.
பண்டா – செல்வா ஒப்பந்தம் முதல் , இந்திய-இலங்கை ஒப்பந்தம் ஊடாகவும் , அதைத்தொடர்ந்த நோர்வே சமஷ்டி ஆலோசனை வரையும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் செயற்பாட்டு அரசியலுக்கு எதிராக எதிர்ச்செயற்பாட்டு அரசியல் செயற்பட்டுள்ளது. இந்த எதிர்ப்பு அரசியலை தமிழர் அரசியலும், சிங்கள பௌத்த அரசியலும் செய்திருக்கின்றன. பெரும்பான்மை சிங்கள தரப்புக்கு இந்திய – தமிழ்நாட்டு அரசியலை “காட்டி” தமிழ்த்தரப்பு ஏற்படுத்தும் அச்சம், தமிழர் பக்கத்தில் கடந்த கால அனுபவங்களைக்கொண்ட சிங்கள தரப்புமீதான நம்பிக்கையின்மை, இவைதான் அடிப்படை.
பேச்சுவார்த்தை ஊடான தீர்வொன்றை நோக்கிய நகர்வதற்கு இருதரப்பிலும் உள்ள அச்சமும், நம்பிக்கையின்மையும் முதலில் அகற்றப்படவேண்டும். இதுவரை தீர்வுகளை எதிர்த்த – தீயிட்டு கொளுத்திய தரப்பும், அவர்களுக்கு ஆரம்பத்தில் இந்தியாவை- தமிழ்நாட்டை காட்டி “அகன்ற தமிழகம்/அகன்ற இந்தியா” என்று அச்சம் காட்டியதரப்பும் ஒரு அரசியல் நெருக்கத்தை எட்டியிருக்கிறார்கள். ஒருவகையில் இது, இலங்கையின் உள்நாட்டு விவகாரம் இதை இலங்கைக்குள்ளே ஒற்றையாட்சிக்குள் புதிய அரசியலமைப்புக்கூடாக தீர்த்துக்கோள்ளமுடியாதா? என்ற பரீட்சார்த்த முயற்சி.
இந்த இருதரப்பு இணக்கத்தை/ நெருக்கத்தை கடந்த எழுபத்தைந்து ஆண்டுகளாக தமிழ்த்தேசிய பாராளுமன்ற அரசியல் தலைமைகளால் அடைய முடியவில்லை. அதே போன்று தமிழ்த்தேசிய அரசியலை தனியாக குத்தகைக்கு எடுத்த புலிகளின் ஆயுதப்போராட்டத்தாலும் எட்டமுடியவில்லை. இருந்த அச்சத்தை பயங்கரவாதம் என உறுதி செய்ததுடன், இருந்த நம்பிக்கையையும் , ஊசலாடிய இன உறவையும் இல்லாமல் செய்ததுதான் மிச்சம். இது தமிழ்த்தேசிய அரசியல் அடைந்துள்ள வரலாற்று படுதோல்வி.
மறுபக்கத்தில் சிங்கள பேரினவாத அரசியல் தலைமைகளாலும் சமாதானத்திற்கான ஒரு தீர்வை காணமுடியவில்லை. அரசியல் தலைமைகள் விரும்பியோ, விரும்பாமலோ செய்த முயற்சிகள் பௌத்தபீடங்களின் அங்கீகாரத்தை பெறமுடியவில்லை.
இதனால் தான் இமாலய பிரகடனம் இருதரப்பு பாராளுமன்ற அரசியலுக்கு வெளியே சர்வதேச சமாதான முயற்சிகளில் அனுபவங்களைக்கொண்ட நாடுகளின் ஆலோசனைகளை உள்வாங்கி நகர்த்தப்படுகிறது. உலகத்தமிழர் பேரவையும், சமாதானத்திற்கான பிக்குகள் அமைப்பும் சம்பந்தப்பட்ட இரு தரப்பையும் பிரதிநிதித்துவம்(?) செய்கிறார்கள்.
இங்கு யார்? தமிழ் மக்களின் அல்லது சிங்கள மக்களின் அதிகார பூர்வ பிரதிநிதிகள் என்பதல்ல கேள்வி. கடந்த 75 ஆண்டுகளாக அதிகார பூர்வ பிரதிநிதிகளாக தங்களை அடையாளப்படுத்தியவர்களால் ஏன்? இதைச்செய்யமுடியவில்லை அல்லது இந்த இரு தரப்பினரும் அதிகாரம் இருந்தும் தோற்றுப்போனது ஏன்? என்ற கேள்வி சுயவிமர்சத்தை வேண்டி நிற்கிறது. இதனால் தான் பாராளுமன்ற தேர்தல் வாக்குகளை – பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்ட “அதிகார பூர்வ” பிரதிநிதித்துவங்களுக்கு வெளியே இது செய்யப்பட வேண்டிய தேவை இருக்கிறது.
இறுதியில் ஜனநாயக அரசியலில் பாராளுமன்றத்தின் சட்டவாக்கம் மூலமே இதனைச் சாதிக்கமுடியும் என்பதில் இரு வேறு கருத்துக்கள் இல்லை. அந்த சட்டவாக்கம் வரை இரு தரப்பையும் நெறிப்படுத்தும் செயலையே உலகத்தமிழர்பேரவையும், பிக்குகள் அமைப்பும் செய்கின்றன. ஒரு வகையில் இது இருதரப்பு அதிகாரவர்க்கத்திற்கும் வழங்கப்படுகின்ற அனுசரணை.
பெரும்பான்மை சிங்கள தரப்பில் இருந்து இமாலயப்பிரகடனத்திற்கு வெளிப்படையாக எதிர்ப்பு எழவில்லை. இது இலங்கை அரசியலில் தேர்தல் வாக்குகள் மூலம் தெரிவு செய்யப்படாத பௌத்த பீடங்கள் இன்னும் பலமாகவே இருக்கின்றன என்பதையே காட்டுகிறது.
ஆனால் தமிழ்த்தரப்பு மிகப்பலவீனமான நிலையில் இருந்து கொண்டு உலகத்தமிழர்பேரவையூடாக பலமான தரப்பொன்றை இணக்கத்திற்குள் இழுத்துள்ளது. அல்லது பலமான தரப்பை இனம்கண்டு அதனூடாக இந்த விவகாரத்தை நகர்த்தும் உலகத்தமிழர் பேரவையின் இணங்கிப்போக்கில் உள்ள தவறு என்ன?
சர்வதேச, பிராந்திய சமாதான முயற்சிகள் அனைத்தும் தோற்றுப்போன நிலையில் இமாலயப்பிரகடனம் பேச்சு வார்த்தைக்கான ஒரு மிகப்பெரிய வாய்ப்பு. கையில் “கேட்டிக்கம்பும்” இல்லாமல் ஈழம் கேட்பது போலன்றி தமிழ்த்தேசிய கட்சிகள் வைக்கின்ற கோரிக்கைகள் ஜதார்தமானவையாக, நடைமுறை சாத்தியமானவையாக அமையவேண்டும். “ஆயுதப்போராட்டம் மீண்டும் வெடிக்கும்” என்ற பாராளுமன்ற சவால்கள் 1970 களுக்குரியவை . இது முற்றாக காலாவதியாகி பதினைந்து ஆண்டுகள் ஆகிறது. இதை சம்பந்தர் ஐயாவின் வார்த்தைகளில் சொன்னால் “இந்த முன்னெடுப்பை நாம் பல ஆண்டுகளுக்கு முன் செய்திருக்க வேண்டும்….” ! இதன் மறுவாசிப்பு ” இன்னும் காலம் கடந்துவிடவில்லை…”!.
புலம்பெயர்ந்த தமிழர் புதுச்சாதி….!
—————————————————————-
இமாலய பிரகடனத்தை”புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்கள், தாயகத்தில் பெரும்பாலான தமிழ்கட்சிகள், குடிமக்கள் சமூகங்கள் நிராகரித்து விட்டன” என்று எவ்வாறு எடுத்த எடுப்பில் சிலரால் எழுத முடிகிறது. இது வெறுமனே கட்சிகள், டயஸ்போரா அமைப்புக்கள், சிவில் அமைப்புக்கள் ஆகியவற்றின் நீண்ட பெயர்ப்பட்டியல் ஆய்வு. இதற்கும் மக்கள் பிரதிநிதித்துவத்திற்கும் சம்பந்தம் இல்லை. சம்பந்தர் ஐயா யார்? தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர், தமிழரசுக்கட்சியின் மூத்த அரசியல்வாதி, 2020 தேர்தலில் வடக்கு கிழக்கில் அதிக வாக்குகளையும், பிரதிநிதித்துவத்தையும் கொண்ட கட்சியின் மக்கள் பிரதிநிதி. இந்த உண்மையை மறைத்து வடக்கு கிழக்கில் பெரும்பாலான கட்சிகளும், மக்களும் இமாலய பிரகடனத்தை நிராகரித்துள்ளனர் என்று எவ்வாறு உங்களால் “சேவகம்” செய்ய முடிகிறது?
“புலம்பெயர்ந்த தமிழர்களை டயஸ்போரா அமைப்புக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றன” என்ற கருத்தும் வெறும் காட்சிப்படுத்தல். இவை நிலத்தில் கட்சி அரசியல் போன்று புலத்தில் குழுவாதங்களின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளன. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மாத்திரமே “ஒருவகையான” மக்கள் தேர்வின் மூலம் அமைக்கப்பட்டது. 2010 இல் அமைக்கப்பட்ட அதற்கு மக்கள் வழங்கிய நான்கு ஆண்டுகளுக்கான அங்கீகாரம் முடிவடைந்துவிட்டது. தற்போது பத்து ஆண்டுகளாக மக்கள் அங்கீகாரம் இன்றி கடிதத்தலைப்பில் செயற்படும் அமைப்பு. இவர்கள் தான் சிங்கள அரசு தேர்தல் நடத்தாமல் ஜனநாயகத்திற்கு முரணாக ஆட்சி நடாத்துகிறது என்று மேற்குலகிற்கு கதை சொல்பவர்கள்.
ரணில் விக்கிரமசிங்காவை ஜனாதிபதியாக்க இமாலயபிரகடனம் “சேவகம்” செய்கிறதாம். ஜனாதிபதியாவதற்கு ரணிலுக்கு உலகத்தமிழர் பேரவை தேவை இல்லை. இலங்கையில் உள்ள தமிழ்த்தேசியக் கட்சிகளே போதும். இனப்பிரச்சினைக்கான தீர்வு முன்வைக்கப்படுகிறதோ இல்லையோ பிரதான தமிழ்த்தேசியகட்சிகள் ரணிலையே ஆதரிக்கும் நிலை உள்ளது. முஸ்லீம், மலையக கட்சிகளின் நிலையும் இதுதான். பொருளாதார நெருக்கடிக்கு ரணில் காணும் குறுங்கால தீர்வுகளும், அனுரகுமாரவைத்தவிர பலமான எதிரணி வேட்பாளர் இல்லாத நிலையும், பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் ரணில் போட்டியிட்டால் அவருக்கே வாய்ப்பாக அமையும். தமிழர் ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படவேண்டும், ஜனாதிபதி தேர்தலை தமிழ்மக்கள் பகிஷ்கரிக்கவேண்டும் என்ற தமிழ்த்தேசிய கட்சிகளின் கோரிக்கைகள் வேறுபட்டவை போன்று தெரிந்தாலும் இரண்டும் ரணிலை ஜனாதிபதியாக்கும் பின் கதவு அரசியல்.
விடுதலைப்புலிகளின் தலைவரின் வருடாந்த மாவீரர் உரைகளை செவிமடுத்தவர்களுக்கு ஈழவிடுதலைப்போராட்டத்தில் டயஸ்போராவின் முக்கியத்துவமும், பங்களிப்பும் விளங்கும். அல்லது இது வெறுமனே டொலருக்கான உரையா? இன்று புலம்பெயர்ந்த சமூகத்தைப்பார்த்து உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? உங்களுக்கு என்ன தகுதியும், அருகதையும் இருக்கிறது? என்று கேட்கின்ற உள்ளும் , வெளியும் உள்ள தமிழ்த்தேசிய அரசியலில் இதற்கான பதிலைத்தேடவேண்டி உள்ளது. ஈழப்போருக்கு நிதி, வடக்கு கிழக்கில் முதலீடு, பாதிக்கப்பட்ட மக்களுக்குக்கான சமூக, பொருளாதார வாழ்வியலை உயர்த்த உதவி, இப்படி இன்னோரன்ன…….. கோரிக்கைகள். ஆனால் டயஸ்போரா அரசியல் ரீதியில் ஒரு மாற்று அணுகுமுறையை அணுகினால் நீஙகள்யார்? எங்கிருந்து வருகிறீர்கள்? என்ற கேள்விகள்.
டயஸ்போராவை “புதுச்சாதியாக” பார்க்கும் நோய் அரசியலில் மட்டும் அல்ல அண்மைக்காலமாக தமிழ்க்கலை இலக்கிய துறையிலும் பரவிவருகிறது கவலையளிக்கிறது.
இமாலய பிரகடனம் தொடர்பிலும் எழுப்பப்படும் விமர்சனங்கள் இந்த வகையைச்சார்ந்தவைதான். தமிழர்களின் புலம்பெயர்வுக்கு சிங்கள பேரினவாத அரசு மட்டுமா காரணம். தமிழர்களை தமிழர்களே துரத்தவில்லையா? காலக்கெடு விதிக்கவில்லையா? அச்சுறுத்தல் இருக்கவில்லையா? சித்திரவதைசெய்யவில்லையா? சிறையில் அடைக்கவில்லையா? ஏன் கொலைசெய்யவில்லையா? இப்போது புலம்பெயர்ந்த உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது என்று கேட்கின்ற நீங்கள் தமிழ்த்தரப்பால் இவ்வளவும் நடந்தபோது அந்த தரப்பிடம் இவற்றை எல்லாம் செய்ய உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்று ஏன் கேட்கவில்லை? இந்த தரப்பை அங்கீகரித்து, சாமரை வீசிய ஒரு பகுதியினர்தான் தங்கள் எஜமானர்களுக்கு விசுவாசமாக டயஸ்போராவின் அரசியல் முயற்சிகள் குறித்து கேள்வி எழுப்புகிறார்கள். இவர்கள் புலத்திலும் இருக்கிறார்கள், நிலத்திலும் இருக்கிறார்கள்.
தமிழ்த்தேசியத்திற்கு “சேவகம் -ஊழியம்” செய்த இவர்கள் எழுப்புகின்ற கேள்விகள் வேடிக்கையானவை. உலகத்தமிழர் பேரவை -கனடிய காங்கிரஸ் உறுப்பினர்கள் மகிந்த ராஜபக்சவின் சந்தித்தது அவர்களுக்கு “சங்கக்குறைவாம்”. முள்ளிவாய்க்கால் இரத்தவாடை முடியும் முன் இராணுவத்தளபதி சரத்பொன்சேகாவை ஜனாதிபதியாக்குவதற்கு தமிழ்மக்களை வாக்களிக்க கோரியது உங்களின் இராஜதந்திர நகர்வு என்றால் உலகத்தமிழர் பேரவையின் இமாலயப்பிரகடனம் ஏன்? ஒரு இராஜதந்திர நகர்வாக இருக்கமுடியாது?