சீனக்கப்பல்கள் விவகாரம்;  நெருக்குதல்களை தற்போதைக்கு தவிர்க்க இலங்கை சாதுரியமான தீர்மானம்

சீனக்கப்பல்கள் விவகாரம்;  நெருக்குதல்களை தற்போதைக்கு தவிர்க்க இலங்கை சாதுரியமான தீர்மானம்

— வீரகத்தி தனபாலசிங்கம் —

    சீன ஆய்வுக் கப்பல்களின் இலங்கை வருகையினால் வழமையாக இந்தியாவிடமிருந்தும் மிகவும்  அண்மைக்காலமாக அமெரிக்கா மற்றும் ஜப்பானிடம் இருந்தும் வருகின்ற நெருக்குதல்களின் விளைவான புவிசார் அரசியல் இராஜதந்திர நெருக்கடியை தவிர்ப்பதற்கு அரசாங்கம் தற்காலிக ஏற்பாடாக என்றாலும் ஒரு சாதுரியமான  தீர்மானத்தை எடுத்திருக்கிறது.

  இலங்கையின் கடற்பரப்பில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கு வெளிநாட்டுக் கப்பல்களுக்கு அனுமதி வழங்குவதை ஒரு வருடகாலத்துக்கு இடைநிறுத்தம் (Moratorium ) செய்வதற்கு தீர்மானிக் கப்பட்டிருக்கிறது. 

    இந்த தீர்மானம் 2024 ஜனவரி முதல் நடைமுறைக்கு  வருகிறது என்றும்  சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு   அறிவித்திருப்பதாகவும்  வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி கடந்த வாரம் ஊடகங்களுக்கு கூறினார்.

  வெளிநாட்டுக் கப்பல்கள் எமது கடற்பரப்பில் மேற்கொள்ளும் ஆய்வு நடவடிக்கைகளில் இலங்கையும் சமத்துவமான பங்காளியாக பங்கேற்பதற்கு வசதியாக ஆற்றல் மேம்பாட்டைச் செய்யும் நோக்கிலேயே இந்த இடைநிறுத்தம் அறிவிக்கப்பட்டதாக அவர் ஒரு காரணத்தையும் கூறியிருக்கிறார்.

  அதேவேளை இலங்கைக்கு வரவிரும்பும்  வெளிநாட்டு இராணுவக் கப்பல்களுக்கும்  விமானங்களுக்கும் அனுமதி வழங்குவதில் கடைப்பிடிக்கப்படவேண்டிய ஒழுங்கு தொடர்பில் ‘தரம்வாய்ந்த செயற்பாட்டு நடைமுறை’ (Standard Operating Procedure ) ஒன்று வகுக்கப்பட்டிருப்பதாகவும்  அலி சப்ரி தெரிவித்தார்.

  இந்த நடைமுறை குறித்து கடந்த செப்டெம்பரில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் வருடாந்தக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்கு  நியூயோர்க் சென்ற வேளையில் இரு  வெளியுறவு விவகார நிபுணத்துவ நிறுவனங்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘தீவுகள் பேச்சுவார்த்தை’ (Islands Dialogue) மகாநாட்டில் உரையாற்றியோது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் ஏற்கெனவே குறிப்பிட்டார்.

  வெளிநாட்டு கப்பல்களுக்கு அனுமதி வழங்குவதற்கு கடற்படையினால் வகுக்கப்பட்ட தரம்வாய்ந்த செயற்பாட்டு நடைமுறை குறித்து அண்மையில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாகவும் இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட திருத்தங்களும் அதில்  சேர்க்கப்பட்டதாகவும் கூறிய ஜனாதிபதி  இலங்கைக்கு வருகின்ற எந்தக் கப்பலும் இந்தியாவுடன் ஆலோசனை கலந்து கொண்டுவரப்பட்ட நடைமுறைக்கு உட்படவேண்டும். அதனால் இந்தியாவுக்கு அச்சுறுத்தலை தோற்றுவிக்கக்கூடிய எந்தவொரு கப்பலும் வருவதாக தன்னால் காணமுடியவில்லை. இலங்கைக்கு உளவுக்கப்பல்கள் வருகின்றன என்பதற்கு எவரிடமும் சான்றுகள் இருந்ததில்லை என்றும் குறிப்பிட்டார்.

  கடந்த மாதம் இந்தியாவின் பிரபல்யமான  இணையத்தளச் செய்திசேவையான ‘ஃபெஸ்ற்போஸ்ற்’றின் நிருவாக ஆசிரியர் பால்கி சர்மாவுக்கு அளித்த நேர்காணலிலும் விகிரமசிங்க சீனக்கப்பல்களின் வருகை தொடர்பில் இந்தியா வெளியிடும் ஆட்சேபங்கள் குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.

   இந்திய அதிகாரிகள் எம்முடன் பேசுவதற்கு பெருவாரியான விடயங்கள் இருக்கின்றன. ஆனால் அவர்கள் சுற்றிச்சுற்றி சீனக்கப்பலின் வருகை குறித்தே பேசுகிறார்கள். இலங்கைக்கு வேறுபல நாடுகளின் கப்பல்களும் வருகின்றன. சீனக்கப்பல் வந்தால் மாத்திரமே பிரச்சினை கிளம்புகிறது. வேறு நாடுகளின் ஆய்வுக் கப்பல்களும் இராணுவக் கப்பல்களும் வருகின்றன. உளவுக்கப்பல்கள் என்று சந்தேகிக்கப்படுபவை எல்லாம் சிவிலியன் கப்பல்களே என்று பால்கி சர்மாவுக்கு கூறிய ஜனாதிபதி இலங்கையும் சமுத்திரவியல் ஆய்வுப்பிரிவொன்றை ஆரம்பித்து கப்பல்களை நிருமாணித்து  சீனா, இந்தியா மற்றும் நாடுகளின் துறைமுகங்களில் ஆய்வுகளைச் செய்வது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.

  ஜனவரி முதல் இலங்கை கடற்பரப்பில் ஜனவரியில்  ஆய்வுகளைச் செய்வதற்கு தனது இன்னொரு ஆய்வுக்கப்பல் கொழும்பு துறைமுகத்தில் வருவதற்கு  சீனா அனுமதி கோரியிருந்த நிலையிலேயே அரசாங்கத்தின்  அனுமதி இடைநிறுத்தத் தீர்மானம் வந்திருக்கிறது.

   இந்தியாவின் ஆட்சேபத்துக்கு  மத்தியிலும், சீனாவின் ஷி யான் 6 கப்பல் கடந்த  அக்டோபர் பிற்பகுதியில் கொழும்பு துறைமுகத்துக்கு வந்து இலங்கையின் மேற்கு கரையோரமாக  ஆய்வுகளைச் செய்து  இரு மாதங்கள் கடந்து விடுவதற்கு முன்னதாக சீனா புதிய ஆய்வுக்கப்பலின் வருகைக்கு  அனுமதியைக் கோரியிருப்பது கவனிக்கத்தக்கது.

   அந்த ஆய்வு நடவடிக்கைகளில் தேசிய நீரியல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனமும் ( நாரா) ருஹுணு பல்கலைக்கழகமும் பங்கேற்றன.

  சியாங் யாங் ஹொங் 03  என்ற கப்பல் 2024 ஜனவரி தொடக்கம் மே மாத இறுதிவரை தென் இந்து சமுத்திரத்தில் ஆழ்கடல் ஆய்வுகளைச் செய்வதற்கு  இத்தடவை சீனா இலங்கையிடம் மாத்திரமல்ல, மாலைதீவு அரசாங்கத்திடமும் அனுமதியைக் கோரியிருந்தது. 

   தென் சீனக்கடலில் சீனாவின் சியாமென் துறைமுகத்தில்  நிற்கும் இந்த கப்பல் இரு நாடுகளிடம் இருந்தும் அனுமதி கிடைக்கும் பட்சத்தில் மலாக்கா நீரிணை வழியாக வருவதற்கு திட்டமிடப் பட்டிருந்தது.

  தற்போது மாலைதீவில் சீனாவுக்கு ஆதரவான அரசாங்கம் ஒன்று பதவியேற்றிருக்கும் நிலையில் சீனாவிடம் இருந்து இந்த கோரிக்கை வந்திருக்கிறது. 

   சீனாவுக்கு சார்பான மாலைதீவின் புதிய ஜனாதிபதி முஹமட் முய்சு கடந்த மாதம் பதவியேற்ற உடனடியாகவே மாலைதீவில் உள்ள இந்தியப் படையினரை திரும்ப அழைத்துக் கொள்ளுமாறு  புதுடில்லியிடம் கேட்டிருந்தார். 

   இந்தியப் படைகளை திருப்பியனுப்பப் போவதாக அவர் அண்மைய ஜனாதிபதி தேர்தலில் மக்களுக்கு  வாக்குறுதியளித்திருந்தார். மாலைதீவின் சுயாதிபத்தியத்துக்கு பாதகமான முறையில் முன்னைய அரசாங்கம் வெளிநாடுகளுடன் செய்துகொண்ட உடன்படிக்கைகளை மீளாய்வு செய்வதில் கவனம் செலுத்துவதாகவும் அவர் தேர்தல் விஞ்ஞாபனத்தில்  குறிப்பிட்டிருந்தார்.

  முன்னாள் ஜனாதிபதி இப்ராஹிம் முஹமட் சொலீயின் அரசாங்கம் இந்தியாவுடன் 2019 ஜூனில் நீரியல் ஆய்வு( Hydrography Agreement) உடன்படிக்கை ஒன்றைச் செய்தது. அந்த உடன்படிக்கையில் இருந்து விலகுவதாக புதிய ஜனாதிபதி பதவியேற்ற மறுநாளே அறிவித்துவிட்டார்.

   உடன்படிக்கையில்  இருந்து விலகுவதாக இருந்தால் 6 மாதங்களுக்கு  முன்னரே அறிவித்தலைக் கொடுக்கவேண்டும். அண்மையில் கொடுக்கப்பட்ட அறிவித்தலின் பிரகாரம்   உடன்படிக்கை 2024 ஜூன் 4 ஆம் திகதியுடன் காலாவதியாக வேண்டும்.

   இலங்கை அரசாங்க தலைவர்களைப் போன்றே மாலை தீவு தலைவர்களும்  பதவிக்கு வந்த உடனடியாக முதலாவது  வெளிநாட்டு விஜயமாக இந்தியாவுக்கு செல்வதே வழமை. ஆனால் முஹமட் முய்சு கடந்த மாதம் பதவியேற்ற பிறகு அந்த சம்பிரதாயத்தில் இருந்து விலகி முதலில் துருக்கி நாட்டுக்கே சென்றார். அந்தளவுக்கு இந்தியாவுக்கு எதிரான போக்கைக் கொண்டதாக அவரது அரசாங்கம் இருக்கிறது.

  இந்தியாவுக்கும் மாலைதீவுக்கும் இடையில் இராஜதந்திர தகராறு மூளக்கூடிய சாத்தியம் இருக்கும் நிலையில் தனது ஆய்வுக்கப்பலை அனுமதிக்குமாறு சீனா அந்த நாட்டு  அரசாங்கத்திடம் கேட்டிருக்கிறது. 

  வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்களுக்கு அனுமதி வழங்குவதில் இலங்கை அரசாங்கம் ஒரு வருடகால  இடைநிறுத்தத்தை அறிவித்திருப்பதை அடுத்து மாலைதீவு எத்தகைய முடிவை எடுக்கும் என்பது முக்கியமான கேள்வி.

  சீனக் கப்பல்கள்  இந்து சமுத்திரத்தில்  மேற்கொள்ளும் ஆய்வுகள் எதிர்கால இராணுவ நடவடிக்கைகளை நோக்கமாகக் கொண்டவை என்று கூறும் இந்தியா அதன் ஆட்சேபத்தை வெளிப்படுத்தி சியாங் யாங் ஹொங் 03 கப்பலை அனுமதிக்க வேண்டாம் என்று இலங்கையையும் மாலைதீவையும் கேட்டிருந்தது. 

   இலங்கையின் தீர்மானம் குறித்து சீனா எத்தகைய பிரதிபலிப்பையும் வெளிக்காட்டியதாக இதுவரை செய்தி இல்லை. ஆனால்  பெய்ஜிங் அதிருப்தியடைந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

  2022 ஆகஸ்டில் யுவான் வாங் 5 கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்தவேளையிலும் இவ்வருடம் அக்டோபரில் ஷி யாங் 6 கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு வந்தவேளையிலும் அவை புலனாய்வுத் தகவல்களை சேகரிக்கக்கூடிய ஆற்றல்களைக் கொண்டவை என்பதால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று புதுடில்லி கூறியது.

   ஆனால், தனது கப்பல்கள் சமுத்திரவியல் ஆராய்ச்சியில் ஈடுபடுவதாகவும் எந்தவொரு நாட்டின் பாதுகாப்புக்கும் எந்த விதத்திலும் அவை அச்சுறுத்தலை தோற்றுவிக்காது என்றும் கூறிய சீனா, இலங்கையுடனான தனது இரு தரப்பு ஊடாட்டங்களில் மூன்றாவது நாட்டின் கரிசனைகள் செல்வாக்குச் செலுத்துவது ஏற்றுக் கொள்ளமுடியாதது  என்று கடுமையாக விசனத்தை வெளிப்படுத்தியது.

   சீன ஆய்வுக் கப்பல்களின் வருகை தொடர்பில் மூளும் தகராறுகளுக்கு இந்தியாவையோ அல்லது சீனாவையோ அசௌகரியப்படுத்தாத  அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இலங்கை இருக்கிறது.

  முன்னைய இரு சீனக்கப்பல்களும் இலங்கை துறைமுகங்களில் தரித்துநின்ற நாட்களில் நாராவின் பிரசன்னம் இல்லாமல் இலங்கை கடற்பரப்பில் எந்தவிதமான ஆராய்ச்சிப் பணியையும் செய்யக்கூடாது என்று நிபந்தனை விதித்ததாக அரசாங்கம் கூறியது. ஆனால், அந்த நிபந்தனையின் அடிப்படையில்  சீனக்கப்பல்கள் ஆராய்ச்சி எதையும் செய்யவில்லை என்பது யாருக்கு வெளிச்சம்?

   இந்தியாவின் ஆட்சேபத்தையும் மீறி ஏற்கெனவே சீன ஆய்வுக்கப்பல்கள் இலங்கையின் துறைமுகங்களுக்கு வந்துசென்ற பிறகு மிகவும் குறுகிய காலத்துக்குள் மீண்டும் ஒரு சீன ஆய்வுக் கப்பலுக்கு அனுமதி கொடுப்பது என்பது இலங்கையைப் பொறுத்தவரை ஒரு சிக்கலான விடயமே யாகும். 

  இந்தியாவிடமிருந்து வந்திருக்கக்கூடிய நெருக்குதல் இத்தடவை மிகவும் கடுமையானதாக இருந்திருக்கக்கூடும். வல்லரசுகளுக்கு இடையிலான புவிசார் அரசியல் போட்டி  கடுமையாக தீவிரமடைந்திருக்கும் நிலையில் ஆய்வுக் கப்பல்களை அனுமதிக்குமாறு அடிக்கடி கோருவதன் மூலமாக சீனா தனக்கு  நெருக்கடியைத் தருகிறது என்று இலங்கை அரசாங்கம் அசௌகரியம் அடைந்திருக்கவும்  கூடும். அதனால் தற்போதைக்கு இந்த பிரச்சினைகளில் இருந்து விடுபடுவதற்கு ஒரு வழிவகையைக் கண்டறிய இலங்கை நிர்ப்பந்திக்கப்பட்டது. அதன் விளைவே வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்களுக்கு அனுமதி வழங்குவதற்கு  ஒரு வருடகால இடைநிறுத்தம்.

  இந்தியா நெருக்குதலைக் கொடுக்கிறது என்பதற்காக சீனாவுக்கு அசௌகரியத்தைக் கொடுக்கக்கூடிய எந்ததொரு தீர்மானத்தையும் இலங்கை எடுக்கவில்லை. ஆனால், தற்போது இலங்கை எடுத்திருக்கும் தீர்மானம் நிச்சயமாக சீனாவுக்கு பெரும் அசௌகரியத்தைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

 அதேவேளை, அடுத்த வருடம் தேசிய தேர்தல்கள் நடைபெறவிருக்கும் நிலையில் புவிசார் அரசியல் முக்கியத்துவமுடைய விவகாரங்களைக் கையாளுவதில் முக்கியமான எந்தவொரு  நாட்டையும் பகைத்துக் கொள்ளாமல் இருக்கவேண்டியதன் அவசியத்தையும் இலங்கை விளங்கிக் கொண்டிருக்கலாம்.

  சீனக் கப்பல்கள் வருவதாக கூறப்படும் சந்தர்ப்பங்களில் தனது பாதுகாப்பு குறித்து இந்தியா வெளிப்படுத்தும் அக்கறைகள் மிகைப் படுத்தப்பட்டவையாக இருப்பதாக சந்தேகிக்கும் சில சர்வதேச அரசியல் அவதானிகள் இந்தியா அதன் கேந்திர முக்கியத்துவ ஆயுதங்களை நிலைவைத்திருக்கும் இடங்களை  அறிந்து கொள்வதற்கு  சீனா இலங்கைக்கு கண்காணிப்புக் கப்பல்களை அனுப்பவேண்டியதில்லை என்றும் செய்மதி தொழில்நுட்பம் அபார வளர்ச்சி கண்டுவிட்டது என்றும்  கூறுகிறார்கள்.

  கடந்த வருடம் படுமோசமான பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்நோக்கியபோது வழங்கிய அவசரக் கடனுதவிக்கு கைம்மாறுசெய்யும் வகையில் கொழும்பின் நடவடிக்கைகள் அமையவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இந்தியாவிடம் இருக்கிறது என்ற ஒரு எண்ணம் தென்னிலங்கையில் பரவலாக இருக்கிறது.

  கடந்த காலத்தில் புவிசார் அரசியல் விவகாரங்களில் தனது அக்கறைகளை இலங்கை மதித்து நடக்காத பல சந்தர்ப்பங்கள் இருந்தபோதிலும், இலங்கையுடன் இந்தியா பெரும்பாலும் கடுமையாக நடந்துகொள்வதில்லை. சீனாவிடம் இலங்கை முற்றுமுழுதாக சரணடைந்து விடாதிருப்பதை உறுதிசெய்யவேண்டிய தேவை இந்தியாவுக்கு இருக்கிறது. 

  எது எவ்வாறிருந்தாலும், ஆசியாவின் இரு பெரும் வல்லாதிக்க நாடுகளுக்கும் இடையிலான புவிசார் அரசியல் போட்டியில் இலங்கை எப்போதும் கயிற்றில் நடப்பதைப் போன்றே செயற்பட வேண்டியிருக்கும். இந்து சமுத்திரத்தில் ஆதிக்கம் செலுத்துவதற்கான வல்லரசுகளின் போட்டி மேலும் தீவிரமடையக்கூடிய ஆபத்தே இருக்கிறது.

 சீனா இந்து சமுத்திரத்தை இப்போது ‘சீன – இந்து சமுத்திரப்  பிராந்தியம்’ (China — Indian Ocean Region —  (CIOR) என்று அழைக்கத் தொடங்கியிருக்கிறது.

   இந்திய பத்திரிகையாளரும் அரசியல் ஆய்வாளருமான பி.கே. பாலச்சந்திரன் அண்மையில் ‘நியூஸ் இன் ஏசியா ‘ செய்திச் சேவையில் எழுதிய கட்டுரையொன்றில் அது குறித்து விளக்கமாக கூறியிருக்கிறார்.

  “வங்காள விரிகுடா தொடக்கம் அன்ரார்ட்டிக்கா வரை வடக்கு — தெற்கு பூமத்திய ரேகையில்  பரந்துகிடக்கும் 9,600 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான கடலையும் ஆபிரிக்காவின் தென்பகுதி தொடக்கம் அவுஸ்திரேலியா வரை கிழக்கு — மேற்கு பூமத்திய ரேகையில்  பரந்துகிடக்கும்  7,600 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான கடலையும் பாரம்பரியமாக  ‘இந்து சமுத்திரம் ‘ என்று அழைப்பதற்கு மாறாக அதை ‘சீன — இந்து சமுத்திரப் பிராந்தியம் ‘ என்று சீனா இப்போது   கூறுகிறது.

  ” சீனாவின் யுனான் மாகாணத்தில் குன்மின் நகரில் டிசம்பர் 7,8 திகதிகளில் நடைபெற்ற ‘ பொதுவான எதிர்காலம் ஒன்றுடனான கடல்சார் சமூகத்தை ஒன்றணைத்துக் கட்டியெழுப்புவதற்கு நிலைபேறான கடல்சார் பொருளாதாரத்தை ஊக்குவித்தல் ‘  (Boosting Sustainable Blue Economy to Build a Maritime Community with a Shared Future )  என்ற தொனிப்பொருளிலான சர்வதேச  மகாநாட்டில் உத்தியோகபூர்வ ஆவணமொன்றில் பல இடங்களில் சீன — இந்து சமுத்திர பிராந்தியம் என்ற பதம் பயன்படுத்த ப்பட்டிருக்கிறது.

  “அந்த மகாநாட்டில் பங்கேற்ற பிரதிநிதி ஒருவர் தெரிவித்த தகவலின்படி இந்து சமுத்திரத்தை பிரத்தியேகமாக  இந்தியாவுடன் அடையாளப்படுத்துவதை சீனா எதிர்க்கிறது போன்று தெரிகிறது. இந்து சமுத்திரத்தில் சீனாவுக்கும் கூட  ஒரு இடம் இருக்கிறது என்று உரிமை கோருவதற்காகவே  சீன — இந்து சமுத்திர பிராந்தியம் என்ற பதம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

  “மகாநாட்டில் பங்கேற்ற இந்து சமுத்திர பிராந்தியத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் பலரும் இந்த விடயத்தில் சீனாவின் கருத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் போன்று தெரிகிறது. இந்தியாவுடன் மாத்திரம் அந்த சமுத்திரத்தை அடையாளப்படுத்துவது அதன் மீது  தங்களுக்கே உரிமை இருக்கிறது என்ற உணர்வை இந்தியர்களுக்கு கொடுப்பதுடன் புதுடில்லி அதன் மீது ஆதிக்கம் செலுத்தவும் பங்களிப்புச் செய்தது என்று அந்த பிரதிநிதிகளும் உணர்கிறார்கள்.”

 ( ஈழநாடு )