(அரசியல் – சமூக – வரலாற்று நாவல்)
— செங்கதிரோன் —
மடத்திலே வைத்து இராச்சாப்பாட்டை முடித்துக்கொண்டபின் பெண்களெல்லாம் மடத்தின் திண்ணையிலே பாயினை விரித்துப் படுக்கைகளைத் தயார் செய்ய, கோகுலனும் கதிரவேலும் தத்தம் படுக்கை விரிப்புகளை எடுத்துக்கொண்டு உகந்தை மலையின் மேல் ஏறி அதன் உச்சிப் பகுதியில் சமதரையாக – தட்டையாகக் காணப்பட்ட பகுதியைப் பிடித்துப் படுக்கைக்கான இடத்தை வசதியாக அருகருகே அமைத்துக் கொண்டார்கள் .
கதிர்காம நடை யாத்திரையில் கோகுலனும் கதிரவேலும் இணைந்து கொண்டது உண்மையிலேயே இருவருக்குமே அதிர்ஷ்டம்தான். பயணம் அலுப்பில்லாமல் சுவாரசியமாக அமைவதற்கும் அதேவேளை பயனுள்ள பல சமூக – வரலாற்றுத் தகவல்களையெல்லாம் பரிமாறிக் கொள்வதற்குரிய சந்தர்ப்பமாகவும் அவ்விருவருமுடைய இணைவு உதவிற்று .
பாணமைப் பெரியதம்பிப் போடியாரினதும் கோகுலனின் பெற்றோரினதும் குடும்பங்களின் உறவும் நெருக்கமும் இன்று நேற்று ஏற்பட்டதல்ல. கோகுலனின் பெற்றோர் காரைதீவிலிருந்து 1951 ஆம் ஆண்டு வாக்கில் பொத்துவில் பிரதேசத்திற்குக் குடியமரச் சென்றபோது முதலில் பாணமையில்தான் குடியமர்ந்தார்கள். அப்போதிருந்தே பெரியதம்பிப்போடியாரும் கோகுலனின் தந்தையும் கூட்டாளிகளாக இணைந்து கொண்டதில் இருவருடைய குடும்பங்களும் நெருங்கிய உறவை வளர்த்துக் கொண்டன. அதனால் சிறுவயதிலிருந்தே கோகுலனும் கதிரவேனும் பால்ய நட்புப் பூண்டிருந்தனர். கோகுலனுக்கு ஐந்து வயதாக இருக்கும்போது அவனது பெற்றோர் பாணமையிருந்து வெளிக்கிட்டு பொத்துவிலில் நிரந்தரமாகக் குடியேறிவிட்டனர். அதனால் கோகுலனும் கதிரவேலும் பிரிந்து வெவ்வேறு ஊர்களில் வசிக்க வேண்டியதாயிற்று .
கோகுலனின் பெற்றோர் பொத்துவிலில் ‘பாக்கியவத்தை’ என்றழைக்கப்படும் இடத்தில் முஸ்லீம் ஒரு வருக்குச் சொந்தமான பரந்த தென்னங்காணியொன்றில் குத்தகைக்குக் குடியமர்ந்தனர். தரையிலே செங்கல் அடுக்கிச் ‘சீமெந்து’த் தளம் அமைத்து அதன் மேல் காட்டுக் கம்புகளாலும் கிடுகுகளாலும் நிலைக்குத்தாகச் சுவர் எழுப்பி, கூரையும் அவ்வாறே காட்டுகம்புகளால் கோப்பிசம் போடபட்டும் கிடுகு வேய்ந்த வீடு. அந்நாட்களில் அதனைச் ‘செத்தை வீடு ‘ என அழைப்பர்.
பொத்துவில் பிரதான வீதியிலிருந்து பிரிந்து கோகுலனின் பெற்றோர் குடியிருந்த வீட்டுக்குச் செல்லும் ‘கிறவல்’ வீதி நேரே ‘விக்ரர்ர தோட்டம்’ என அழைக்கபட்ட தென்னந்தோட்டத்திற்குச் செல்கிறது. இவ்வீதியின் வலதுபுறப்பகுதி ‘வட்டிவெளி’ என்றும் இடது புறமிருந்த பரந்த தென்னந்தோட்டப் பகுதி ‘பாக்கியவத்தை’ எனவும் அழைக்கப்பட்டன .
பாக்கியவத்தைக் காணி முழுவதும் முன்னொரு காலத்தில் திருக்கோவிலில் வைத்திய அதிகாரியாக கடமையாற்றிய திருகோணமலையுடன் தொடர்புடைய ஒருவருக்குச் சொந்தமானதாக இருந்ததென்றும் அந்த வைத்திய அதிகாரியின் மனைவியின் பெயர் பாக்கியவதி என்றும் அவரது மனைவியின் பெயரில் அக்காணி ‘பாக்கியவத்தை’ எனப் பெயர் பெற்றதென்றும் ஊரார் பேசி கொள்வார்கள்.
இப் பாக்கியவத்தைக் காணியைப் பின்னாளில் மௌலானா என அழைக்கப்பட்ட முஸ்லீம் ஒருவர் வாங்கியபின் ‘மௌலானா தோட்டம்’ என அழைக்கப்படலாயிற்று. மௌலானா அதனைத் துண்டு துண்டாகப் பிரித்துப் பல பேருக்கு விற்றுள்ளார்.
கோகுலனின் பெற்றோர் ‘செத்தைவீடு’ கட்டிக் குடியேறிய வளவு மௌலானாவின் உறவினர் ஒருவருக்குக் கைமாறியதாகும். கோகுலனின் தந்தை உயிரோடிருந்த போதே மௌலானா தோட்டத்தில் ‘முட்டாசுக்காரர்’ என அழைக்கப்பட்ட முஸ்லீம் ஒருவருக்குச் சொந்தமான வேறொரு காணித்துண்டை விலை கொடுத்து வாங்கிப் போட்டிருந்தார் . விலைகொடுத்து வாங்கிய அக்காணித் துண்டு குத்தகைக்குக் குடியிருந்த காணிக்குக் கிட்டடியில்தான் அமைந்தது. கோகுலனின் தந்தை நோய்வாய்ப் பட்டு 1962 ல் இறந்த பின்னர்தான் தாய் தற்போது குடியிருக்கும் இக்காணியில் இரண்டறையும் மண்டபமுமாக ‘கல் வீடு’ கட்டிக்கொண்டுத் தன் பிள்ளைகளுடன் குடியேறினார் . இத்தென்னந்தோட்டப்பகுதி இடையில் மெளலானா தோட்டம் என அழைக்கப்பட்டாலும்கூட காலப்போக்கில் அதன் ஆரம்பப் பெயரான பாக்கியவத்தையே நிரந்தரமாக ஒட்டிக்கொண்டது .
கோகுலனின் பெற்றோரின் பாணமையிலிருந்து பொத்துவிலுக்கான இடப்பெயர்வு கோகுலன்- கதிரவேல் பால்ய வயது நட்பைப் பிரித்திருந்தாலும் வந்தாறுமூலை மத்திய மகாவித்தியாலய விடுதி வாசம் அவர்களிருவரையும் மீண்டும் பிணைத்துவிட்டிருந்தது. அப் பிணைப்பை இப்போது இறுக்கி விட்டிருந்தது கதிர்காம நடை யாத்திரை.
உகந்தை மலையின் உச்சிப்பகுதியில் கண்விழித்த படியே படுக்கை விரிப்பில் வானத்தைப் பார்த்த படி மல்லாக்கப்படுத்து இரண்டு கைகளையும் சேர்த்துப் பிடித்துத் தலைமாட்டின் கீழ் தலையணை -யாக வைத்துக்கொண்டு இருவரும் கதைக்கத் தொடங்கினார்கள்.
கோகுலன் கதிரவேலிடம் பாணமையிலிருந்து உகந்தைக்கு வரும் வழியில் இடையில் இறங்கிக் கும்பிட்ட பிள்ளையார் கோவிலடிச் ‘சன்னாசி மலை’ பற்றித் துருவிக் கேட்டான்.
கதிரவேல் பதிலுக்கு “நீங்க பிறதர், மட்டக்களப்பில வித்துவான் எப்.எக்ஸ்.சி நடராசா பதிப்பிச்ச மட்டக்களப்பு மான்மியம் எண்ட புத்தகத்தயும் மற்றது பண்டிதர் வி.சீ. கந்தையா எழுதின மட்டக்களப்புத் தமிழகம் ‘ எண்ட புத்தகத்தயும் வாசிச்சிரிக்கியள்தானே” என்று கேட்டான்.
•ஓம், இரண்டயும் வாசிச்ச நான்தான்” என்றான் கோகுலன் .
அதில வாற ஆடகசவுந்தரி எண்ட பொம்புள அரசிஆண்ட உன்னரசுகிரி எண்ட நாட்டிர அரசமாளிக சன்னாசிமலயிலதான் இருந்த” என்றான் கதிரவேல் .
” ஆனா , ரெண்டு புத்தகத்திலயும் சன்னாசிமலதான் உன்னரசுகிரியெண்டு திட்டவட்டமாகச் சொல்லப்படல்லயே . அப்படி இரிக்கலாம் எண்டுதானே இரிக்கி” என்று தனது சந்தேகத்தை இறக்கி வைத்தான் கோகுலன்.
” பண்டிதர் வி.சீ.கந்தையாட பொஞ்சாதி ஆரெண்டு தெரியுமா ? ” என்று கேட்டான் கதிரவேல் .
” இல்ல . சொல்லண்டாப்பா ” என்றான் கோகுலன் கொடுப்புக்குள் சிரித்துக்கொண்டே .
” அவ அப்பாக்கு ஒண்டுவிட்ட அக்கா . எங்களுக்கு மாமி. அவட பேர் கங்கேஸ்வரி கந்தையா. அவ “அரசின் ஆணையும் ஆடக சவுந்தரியும் ‘ எண்ட புத்தகம் எழுதினவ. எனக்குப் பதினாலு வயசா இரிக்கக்கொள்ள இந்தா உனக்கு கொண்டுபோய் வாசியெண்டு சொல்லி எனக்கும் ஒரு புத்தகம்தந்தவ. ஆடகசவுந்தரிர அரண்மன சன்னாசிமலயிலதான் இரிந்ததெண்டு அவவும் சொன்ன ஞாபகம். அத வச்சித்தான் நானும் சொன்ன என்று பெருமைபடப் பேசினான் கதிரவேல் .
” பண்டிதர் வி.சீ.கந்தையாட ஊர் மண்டூர் எலுவா ” என்று கோகுலன் சொல்ல , ” ஓம் . அவர் வந்து மட்டக்களப்புச் சிங்களவாடியிலதான் கலியாணம் கட்டினவர். எங்கட அப்பா சிங்களவாடிதானே” என்றான் கதிரவேல் .
” பண்டிதர் வி.சீ.கந்தையாவ எனக்குத் தெரியும் . ஒரு தரம் வந்தாறுமூலைப் பள்ளிக்கு வந்து ‘ அசெம்பிளி ‘ யில பேசினவர்” . என்றான் கோகுலன் .
” ஓம் . நீங்க சொல்லிற சரிதான் பிறதர் ” என்று கதிரவேலும் ஆமோதித்தான் .
கால்களை நன்கு நீட்டி மல்லாக்கப்படுத்துக் கொண்டிருந்த கதிரவேல் எழும்பிக் கால்களை மடித்துச் சம்மாணம் கட்டி அமர்ந்துகொண்டு கதைக்கத் தொடங்கினான்.
வானம் சலனமற்று வெள்ளி பூத்திருந்தது. அளவாக வீசிய குளிர் காற்று உடலைத் தழுவியபோது இதமாக இருந்தது . கதிரவேலிடம் கதை கேட்கும் ஆர்வத்தில் கோகுலனும் எழுந்து கால்களை மடக்கிக் கதிரவேலைப் போலவே சம்மாணம் இட்டு இருந்து கொண்டான்.
பண்டிதர் வி.சீ. கந்தையாவைப் பற்றி மீண்டும் பேச்சு வந்ததால் அவர் எழுதிய மட்டக்கிளப்புத் தமிழகம் புத்தகத்தில் ,
ஆடக சவுந்தரி உன்னரசுகிரியிலிருந்து பண்டைய மட்டக்களப்பு நாடுமுழுவதையும் கலி பிறந்த வருடம் 3180 ( கி.பி .78 லிருந்து) தொடக்கம் நூற்றிப்பதின்மூன்று ஆண்டுகள் ஆண்டாளென்றும் அவளை மகாசேனன் என்ற மன்னன் மணம்புரிந்து ‘மீனேரிக்’ (மின்னேரி குளத்தைக்கட்டி `தட்சணாபதி ‘ க் ( திருகோணமலை ) கோயிலையும் செப்பனிட்டுக் கோயிலுக்கு மானியமாக ‘காந்தளை ஏரி யைக் ( கந்தளாய்க் குளம் )கட்டுவித்தானென்றும் – இவர்களிருவருக்கும் பிறந்த மகன் சிங்க குமாரன் உகந்தை மலை உச்சியில் சிவனாலயமொன்றைக் கட்டினானென்றும் – இவ்வாலயத்தை சுற்றி எட்டுத்திக்குகளிலும் எட்டுத் தீர்த்தக் கிணறுகள் அமைத்தானென்றும்- அவன் கட்டிய சிவன் கோயில் இப்போது அழிந்து விட்டதென்றும், ஆனால் மலையில் பொழியப்பெற்ற தீர்த்தக்கிணறுகள் இப்போதும் உள்ளனவென்றும் எழுதியுள்ள விடயங்களை நினைவில் கோர்த்து கோகுலன் கதிரவேலிடம் எடுத்துச் சொன்னபோது அவன் அவற்றை ஆமோதித்தவனாக,
“ஆடக சவுந்தரியக் கலியாணம் செய்தது குளக்கோட்டன் எண்ட அரசன்தான் ” என்றான் .
” பண்டிதர் வி . சீ . கந்தையாவும் அவரிட புத்தகத்தில ஆடக சவுந்தரிய முடிச்ச மகாசேனன் எண்ட அரசன் குளக்கோட்ட மன்னனாக இரிக்கலாம் எண்டுதான் எழுதியிரிக்கார் ” என்று கோகுலனும் கதிரவேலுடன் ஒத்தூதினான் .
இருவரும் கதைத்துக் கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை . நடுநிசியாகி விட்டிருந்தது மலை உச்சியில் உறங்கியவர்களும் கீழே கோயில் வளவுக்குள்ளும் வெளியிலும் படுத்துக் கிடந்த அனைவரும் நல்ல உறக்கத்தில் ஆழ்ந்திருந்தார்கள். கோயிலின் சுற்றுப்புறச் சூழலைச் சுற்றி ஆங்காங்கே காட்டு விறகுகளைக் கொண்டு மூட்டிய தீனாக்கள் விட்டுவிட்டுத் தீ நாக்குகளை உமிழ்ந்து கொண்டிருந்தன. கடல் இரையும் சத்தம் காதில் நன்றாகவே விழுந்து கொண்டிருந்தது. இரவின் அமைதியைக் கிழித்துக் கொண்டு காட்டுக்குள்ளே நரியொன்று ஊளையிடும் சத்தம் எழுந்து பின் அடங்கியது. பின்னர் சிறிது நேரத்தில் தூரத்தில் யானை பிளிறும் சத்தமும் கேட்டது.
சம்மாணம் கட்டி அமர்ந்திருந்த கோகுலனும் கதிரவேலும் மீண்டும் கால்களை நீட்டி வானத்தைப் பார்த்தபடி மல்லாக்கப்படுத்துக்கொண்டு பலதையும் பத்தையும் பரிமாறிக் கொண்டார்கள்.
பாணமையிலிருந்து உகந்தைக்கு உழவு இயந்திரத்தில் வந்தது. குலுங்கிக் குலுங்கியும் பள்ளங்களில் விழுந்தெழும்பியும் ஏதோ குதிரையில் ஏறிச் சவாரி வந்தமாதிரி உடம்பு அலுத்தும் களைத்தும் போயிருந்ததால் கதைத்துக்கொண்டிருக்கும்போதே இருவரும் தங்களை அறியாமலே கண்ணயர்ந்து போனார்கள்.
கடல் மட்டும் தூங்காது அலகளையெழுப்பி ஆரவாரித்துத் தனது கடமையை ஓய்வு ஒழிச்சலின்றி ஆற்றிக்கொண்டிருந்தது .
( தொடரும்….. அங்கம்: 14 )