— அழகு குணசீலன் —
இஸ்ரேல் – பாலஸ்தீன (ஹாமாஸ்) போர் 2023 ஆண்டுகளாக தொடர்ந்த நம்பிக்கையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. யேசு பிறந்ததாக நம்பப்படும் அன்றைய மாட்டுத்தொழுவம் இன்றைய “பிறப்பு தேவாலயம்” பெத்தலேகத்தில் உள்ளது. நத்தார் பண்டிகையின் வாடை அங்கு வழமைபோல் இல்லை.
பாலன் பிறந்த தினத்தில் பாலஸ்தீன சிறார்கள் கொன்று குவிக்கப்படும் போது “எங்களுக்கு என்ன நத்தார் வேண்டிக் கிடக்கிறது….?” என்று கேட்கிறார் ஒரு பாலஸ்தீன கிறிஸ்த்தவ தாய். கொலை செய்யப்பட்ட பாலஸ்தீன சிறார்களின் நினைவுகளை சுமந்து நாங்கள் அதனை அமைதியாக அனுட்டிக்கவுள்ளோம் என்று தொடர்ந்து பேசுகிறார் அவர்.
இஸ்ரேலால் இயேசுவின் போதனைகள் கொல்லப்பட்ட நாள்….!
கடந்த ஒக்டோபர் 7ம் திகதி ஹாமாஸ் தீவிரவாத அமைப்பு இஸ்ரேலில் பொதுமக்கள் மீது நடாத்திய பயங்கரவாத தாக்குதலை அடுத்து இஸ்ரேல் பாலஸ்தீனம் (ஹாமாஸ்) மீதான யுத்தத்தை பிரகடனம் செய்தது. இஸ்ரேல் இதனை ஹாமாஸ்க்கு எதிரான போராக குறிப்பிட்டாலும் இது பாலஸ்தீன மக்களுக்கு எதிரான போர். இலங்கையில் “புலிகளுக்கு எதிரான போர் ” என்ற வார்த்தையின் அகராதி அர்த்தத்தைப் புரிந்து கொண்ட ஈழத்தமிழர்களுக்கு இந்த வலி தெரியும். இலங்கையில் ஒட்டு மொத்த தமிழர்களும் புலிகளான கதைதான் ஒட்டு மொத்த பாலஸ்தீனர்களையும் ஹாமாஸாக்கி இருக்கின்றது.
போராட்ட அமைப்புக்களின் பயங்கரவாதத்தை விடுதலையின் போர்வையில் நியாயப்படுத்த முடியாது. அதேபோல் பயங்கரவாத அமைப்புக்களுக்கு எதிரான போர் என்ற தொனியில் இடம்பெறும் அரச பயங்கரவாதத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது. யுத்தம் என்றால் அங்கு முதலிலும், அதிகமாகவும் பாதிக்கப்படுபவர்கள் பிள்ளைகளும் , பெண்களும் தான். இதற்கு பாலஸ்தீனம் மட்டும் விதிவிலக்காக இருக்கமுடியுமா என்ன…?
ஐக்கியநாடுகள் பாதுகாப்புச்சபை கூட்டத்தில் யுனிசெப் தலைவி கத்தரின் றூஸல் வெளியிட்ட தகவல்களும், புள்ளி விபரங்களும் அதிர்ச்சியளிக்கின்றன. ஒக்டோபர் 7ம்திகதி முதல் இதுவரை 20,000 க்கும் அதிகமானோர் பாலஸ்தீனத்தில் – ஹாஸாவில் கொல்லப்பட்டுள்ளனர்.53,000 பேர் காயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர், காயப்பட்டவர்களில் 5,300 பேர் பிள்ளைகள். இது கொல்லப்பட்டவர்களில் 40 வீதம் என்கிறார் றூஸல். இது ஒக்டோபர் 7 முதலான கடந்த 20.12.2023 புதன்கிழமை வரையான நாளாந்த சராசரி கணக்கில் நாளொன்றுக்கு 115 பிள்ளைகள் கொலை செய்யப்படுகின்றனர்.
இப்போது அந்த பாலஸ்தீன கிறிஸ்தவ தாய் “பாலன் பிறந்த தினம் எங்கள் பிள்ளைகளின் நினைவுதினம்” என்பதன் வலியை எவராலும் உணர்ந்து கொள்ள முடியும். யுனிசெப் அறிக்கை படி 1,200 பிள்ளைகளைக்காணவில்லை இவர்கள் இஸ்ரேலின் விமான, தரைமார்க்க அரச பயங்கரவாத தாக்குதல்கள் மூலம் தகர்க்ப்பட்ட கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது. இந்தப் புள்ளி விபரங்களை இஸ்ரேலும், ஹாமாஸும் கூட்டிக்குறைத்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
பட்டினி வளர்ந்தவர்களை விடவும் பிள்ளைகளை சாகடிக்கிறது. ஹாஸா மீதான பொருளாதாரத்தடை ஒரு மில்லியனுக்கும் அதிகமான பிள்ளைகளுக்கு உணவுப்பஞ்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தான் வாயாளவான உங்கள் அரசியல் – இராஜதந்திர – வார்த்தையாடல்களால் பாலஸ்தீனத்தை சாகடிக்க வேண்டாம் என்ற தொனியில் பாதுகாப்புச்சபையை எச்சரித்திருக்கிறார் றூஸல். பாலஸ்தீனத்தின் இன்றைய தேவை தற்காலிக இடைவேளை அல்ல ஒரு முழுமையான யுத்த ஓய்வு என்பது அவரின் கருத்தாக உள்ளது. பாதுகாப்புச்சபையில் இதுவரை பல தடவைகள் அமெரிக்கா தனது வீட்டோவைப்பயன்படுத்தி இஸ்ரேலுக்கு தனது விசுவாசத்தை வெளிப்படுத்தியுள்ளது.
மேற்குலக – அமெரிக்க இஸ்ரேல் சார்பு நிலைப்பாட்டில் றூஸலின் கருத்து எந்தளவுக்கு பாதுகாப்பு சபையின் பிரேரணை ஒன்றை நிர்ணயிக்கும் வல்லமை கொண்டது ….? ஆனால் மனிதாபிமான யுத்தநிறுத்தத்தை வேண்டி நிற்கின்ற அமெரிக்க அணிசாராத நாடுகளின் காதுகள் றூஸலின் கருத்துக்கு திறந்திருக்கின்றன என்று நம்பலாம்.
உக்ரைன் – ரஷ்ய சண்டையில் உலகை இலகுவாக திசைதிருப்பியது போன்று பாலஸ்தீன விடயத்தில் அமெரிக்காவால் செயற்பட முடியாது. ஹாமாஸை பணயக்கைதிகளின் விடுவிப்புக்கு இணங்க வைப்பதற்கு மனிதாபிமான உணவுவிநியோகத்தை பேரம்பேசுகின்றன அமெரிக்காவும் இஸ்ரேலும். உக்ரைன்க்கு ஆயதம் வழங்குவதில் குடியரசுகட்சியினரை ஒரு வழிக்கு கொண்டு வருவதற்கு பாலஸ்தீனத்தில் அமைதி நிலவுவதாக காட்டவேண்டிய தேவை ஜோ பைடனுக்கு உண்டு.
இந்த நிலையில் உக்ரைனில் இராணுவத்திற்கு ஆள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தப்பிச் சென்று வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளார்களை அந்த நாடுகள் உக்ரைனிடம் ஒபபடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அதிபர் ஷெலன்ஸி விடுத்துள்ளார். ஜேர்மனியில் மாத்திரம் இரண்டு இலட்சம் ஆண்கள் இராணுவ சேவைக்கு மறுப்பு தெரிவித்து தஞ்சம் அடைந்துள்ளனர். இவர்கள் கட்டாயப்படுத்தி திருப்பி அனுப்பப்படமாட்டார்கள் என்று ஜேர்மனி அறிவித்துள்ளது. ஆட்தட்டுப்பாடு காரணமாக எல்லைப் பிரதேசங்களான கீயு, டொன்பாஸ் போன்றவற்றை ரஷ்யாவிடம் விட்டு விட்டு வெளியேறும் யோசனைபற்றியும் உக்ரைன் ஆய்வாளர்கள் பேசுகிறார்கள். இது நடந்தால் அது உக்ரைனின் தோல்வி அல்ல, அமெரிக்காவின் தோல்வி. இதனால் பாலஸ்தீனத்தில் கைதிகளை விடுவித்து ஒரு சமாதான படத்தை காட்ட அமெரிக்கா முயல்கிறது. இது அமெரிக்கா தனது வளங்களையும், கவனத்தையும் உக்ரைன் நோக்கி அல்லது ரஷ்யாவுக்கு எதிராக பயன்படுத்த வசதியாக அமையும் என நம்பப்படுகிறது.
யேசு பிறந்த போது 2023 ஆண்டுகளுக்கு முன்னர் வானில் வால்வெள்ளி தோன்றியதாக நம்பப்படுகிறது. யூதராகப் பிறந்த யேசுவின் வாழ்வியலை ஏற்றுக்கொண்ட இஸ்ரேல் யூதர்களும் இதை நம்புகிறார்கள். ஆனால் வானில் இன்று இஸ்ரேலின் குண்டுகளும், ஹாமாஸின் ராக்கட்டுக்களும்தான் மின்னுகின்றன. வால் வெள்ளியை பார்த்து மூவேந்தர்கள் பெத்தலேகம் நோக்கி அதிசயத்தை அறிய வந்தார்கள். கஸ்பர்,மில்சோர், பால்தசார். இவர்களில் ஒருவர் கறுப்பராம்.
இப்போது இத்திசை நோக்கி இஸ்ரேலின் யுத்த முனைப்புக்கு பின்னணியில் இருக்கும் மேற்குலக தூதுவர்கள் வருகிறார்கள். சண்டையை இஸ்ரேல் நிறுத்தக்கூடாது, உணவுப்பொருட்களின் விநியோகம் மட்டும் செய்யப்பட்டால் சரி, ஹாமாஸ் பணயக்கைதிகளை விடுதலை செய்யவேண்டும் இந்த மாவைத்தான் திருப்பித் திருப்பி அரைக்கிறார்கள். இவர்களில் ஒருவர் கறுப்பர். ஆபிரிக்க – அமெரிக்கரான அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர். ஆனால் அவர் பேசுவது யுத்த தந்திர உபாயம். இஸ்ரேல் ஹாமாஸை வெற்றி கொள்வதற்கான இராணுவ ஆலோசனை. இயேசுவின் பிறப்புச்செய்திக்கு எதிர்மாறானது.
கிட்லரின் சர்வாதிகார ஆட்சியில் யூதர்கள் மீது இன் அழிப்பு மேற்கொள்ளப்பட்டது என்ற ஒரேயொரு காரணத்திற்காக இஸ்ரேலால் செய்யப்படும் அனைத்து செயற்பாடுகளையும் மேற்குலகம் அங்கீகரிப்பது எந்தளவுக்கு நியாயமானது? இன அழிப்பை அனுதாப முதலீடாகக்கொண்டு இன்னொரு பாலஸ்தீனமக்களை, அவர்களின் இறைமையை இஸ்ரேல் மறுப்பதை, அழிப்பதை மேற்குலகம் அங்கீகரிப்பது அநீதியானது.
இஸ்ரேல் அமைக்கப்பட்டபோது 7 வீதமான பாலஸ்தீன நிலத்தைக் கொண்டிருந்த இஸ்ரேல் இன்று 93 வீதமான நிலப்பரப்பை ஆக்கிரமித்துள்ளது. அன்று 90 வீதமான பாலஸ்தீன மண்ணுக்கு சொந்தக்கார்களான பாலஸ்தீனமக்கள் இன்று வெறும் 4 வீத நிலப்பரப்பில் ஹாஸாவிலும், மேற்குகரையிலும் முடங்கிக்கிடக்கின்றனர். இந்த நில ஆக்கிரமிப்புதான் இஸ்ரேல் – பாலஸ்தீன பிரச்சினையின் அடிப்படை எனத்தெரிந்தும் அதை தீர்த்து வைக்காது, யுத்தத்திற்கு ஆதரவளிக்கின்ற போக்கே மேற்குலகில் நிலவுகிறது. பாலஸ்தீன மக்களின் இழப்பில் இவர்கள் தங்கள் அரசியலை செய்கிறார்கள்.
அநியாயங்களை எதிர்த்து போராடியதற்காக இயேசு கொடுங்கோலாட்சியினரால் சிலுவையில் அறையப்பட்டார். யேசுவின் வழியில் வந்த இஸ்ரேல் பாலஸ்தீனத்தீனர்களை சிலுவையில் அறைந்து கொண்டிருக்கிறது. “ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் திருப்பிக்கொடுங்கள்” என்ற வார்த்தைகள் அர்த்மற்றவையாகிவிட்டன. இஸ்ரேலை பாலஸ்தீனர்கள் கன்னத்தில் அறையவிட்டு மறு கன்னத்தில் அடிக்கிறது அமெரிக்கா.
இதனால் நத்தார் பாலஸ்தீனர்களுக்கு சமாதானத்திற்கான கிறிஸ்துமஸ் அல்ல .உலகம் கிறிஸ்துமஸ் கொண்டாடிக் கொண்டிருக்கும் போது பாலஸ்தீன மக்கள் சிலுவையில் அறையப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.
இதனால் இன்றைய நத்தார் பாலஸ்தீனர்களுக்கு”பெரிய வெள்ளி “.
இயேசு சிலுவையில் அறையப்பட்டதினம்…!