புலமைப் பரீட்சையும் அன்பளிப்புகளும்

புலமைப் பரீட்சையும் அன்பளிப்புகளும்

 — எழுவான் வேலன் —

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களின் பெற்றோர்கள் ஆசிரியர்களை பரிசு மழையால் மூழ்கடிக்கும் பழக்கம் ஒன்று இப்போ ஆரம்பமாகியிருக்கிறது. வறுமையான பிள்ளைகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த புலமைப் பரிசில் திட்டம் இப்போ பெற்றோரை வறுமையாக்கும் நிலைக்கு கொண்டு வந்திருக்கிறது. இந்த புலமைப் பரீட்சையை நோக்கமாகக் கொண்டு முதலாம் ஆண்டிலிருந்தே பிள்ளைகளுக்கு ரியுசன் ஆரம்பிக்கப்படுகிறது. அன்றிலிருந்து ஐந்து வருடத்துக்கு ரியுசன் காசு கட்ட வேண்டிய நிலைக்கு பெற்றோர்கள் தள்ளப்படுகிறார்கள். (புலமைப் பரீட்சை முடிந்த பின் கட்டப்படுகின்ற ரியுசன் காசு வேறு கணக்கு) நான்காம் ஆண்டுக்குப் போனதும் புலமைப் பரீட்சை கற்பிக்கும் ஆசிரியர்களின் பொறுப்பில் பிள்ளை ஒப்படைக்கப்படுகின்றது. இரண்டு வருடத்துக்கு அவர்கள் காசை உறிஞ்சிக் கொள்வார்கள். இதிலுள்ள வேடிக்கை என்னவென்றால் பெரும்பாலான இடங்களில் குறித்த பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியரே பிரத்தியேக வகுப்பாக இதை பாடசாலைக்கு வெளியே நடத்துவதாகும்.

ஆரம்பத்தில் பிள்ளை சித்தியடைந்தால் பிள்ளையின் மகிழ்ச்சிக்காக ஆசிரியர் சக மாணவர்கள் என அனைவருக்கும் இனிப்புக்கள் பகிர்வதைக் காணக் கூடியதாக இருந்தது. பின்நாட்களில் இது குறித்த ஆசிரியருக்கும் தலைமை ஆசிரியருக்கும் விருந்து படைப்பதாக மாற்றமடைந்து இன்று விருந்துடன் ஆசிரியைகளுக்கு சேலையும் ஆசிரியர்களுக்கு சேட், வேட்டி என்பன கொடுப்பதாக மாறியிருக்கிறது. பதினைந்து ஆசிரியர்கள் இருக்கும் ஒரு பள்ளிக் கூடத்தில் மூன்று பிள்ளைகள் மட்டும் சித்தியடைந்தால் ஒரு பெற்றோர் ஐந்து ஆசிரியருக்கு சாப்பாடும் ஆடைகளும் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகிறார். இன்றைய பொருளாதார நெருக்கடியில் ஐந்து பேருக்கும் ஆகக் குறைந்தது பதினைந்தாயிரம் ரூபா செலவழிக்க வேண்டியேற்படுகிறது. சேலை வாங்கிக் கொடுக்காத பிள்ளைகளை அழைத்து சில ஆசிரியர்களும் பெற்றோர்களும் பேசிய நிகழ்வுகளும் இடம் பெற்றிருக்கின்றன. இதனால் அந்தப் பிள்ளையும் பெற்றோர்களும் அவமரியாதைக்கும் குற்ற உணர்வுக்கும் உள்ளாகிறார்கள். என்ன கடன் பட்டாவது இந்த விடயத்திலிருந்து விடுபடுவதற்காக ஆசிரியர்களை மகிழ்விக்க முயல்கிறார்கள். உண்மையில் பிள்ளைகளிடம் கைநீட்டி அன்பளிப்புப் பெறும் ஆசிரியர்களே அவமரியாதைக்கும் குற்ற உணர்வுக்கும் உள்ளாக வேண்டியவர்கள்.  

அன்பளிப்பு என்ற பெயரில் வாங்கப்படும் சேலை, சேட், சாப்பாடு என்பன ஒரு வகை இலஞ்சமேயாகும். ஒழுக்கத்தினையும்,  நேர்மையினையும், கடமையினையும் கற்றுக் கொடுக்க வேண்டிய பாடசாலைகள் பிள்ளைகளின் பிஞ்சு மனதில் அன்பளிப்பு என்ற பெயரில் இலஞ்சத்தினையும், நேர்மையீனத்தினையும் கடமை துஸ்பிரயோகத்தினையும் நடைமுறை ரீதியாகக் கற்றுக் கொடுக்கின்றன. இந்த மாணவர்கள் நாளை பெரிய பதவிகளுக்குப் போகும் போது தான் செய்கின்ற கடமைகளுக்கெல்லாம் அன்பளிப்பை எதிர்பார்ப்பவர்களாக மாறுவது ஒன்றும் ஆச்சரிப்படத்தக்க விடயமில்லை.

ஆசிரியர்கள் தங்கள் கடமைக்கு அன்பளிப்புப் பெறுவதில்லை அது தனது கடமை அந்தக் கடமையை ஆற்றுவதற்காகத்தான் அரசு சம்பளம் தருகின்றது என்பதை நடைமுறை ரீதியாகக் கடைப்பிடிப்பார்களாக இருந்தால் பிள்ளையும் அந்த ஒழுக்கத்தை ஆசிரியர்களிடம் இருந்து கடைப்பிடிக்கக் கற்றுக் கொள்ளும்.  

மாதா, பிதா, குரு, தெய்வம் என தெய்வத்துக்கு முதல் வைத்து நோக்குகின்ற ஆசிரியர்கள் மாணவர்களின் மனதில் கடமையைச் செய்வதற்கு அன்பளிப்பு எனும் எண்ணங்களை ஏன் விதைக்கிறார்கள் என்பதும் இதனை அப்பாடசாலைகளின் அதிபர்கள் உட்பட கல்வி அதிகாரிகள் வரை கண்டு கொள்ளாதிருப்பதன் நோக்கம்தான் என்ன என்பதும் விளங்கவில்லை. என்ன கேடு கெட்டுப் போனாலும் பரவாயில்லை எமது பாடசாலையில், எமது வலயத்தில் எத்தனை மாணவர்கள் புலமைப் பரீட்சை சித்தியடைந்திருக்கிறார்கள் என்பதைக் காட்டுவதுதான் எல்லாருக்கும் நோக்கமாக இருக்கிறது போல்த் தெரிகிறது. பெற்றோர்களும் ஆசிரியர்களும் தங்கள்,  தங்கள் கௌரவத்துக்காக, புகழுக்காக பிள்ளைகளைப் பிழிய அதிபர்களும் கல்வி அதிகாரிகளும் தங்கள் பாடசாலை,  வலயம் என்பவற்றை உயர்த்துவதற்காக பெற்றோர்களைப் பிழிகிறார்கள் போலத் தெரிகிறது.      

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரீட்சையே இன்று மாணவர்களை மிகவும் கொடுமைப்படுத்துகின்ற பரீட்சையாக இருக்கின்றது. பெற்றோர்களினதும் ஆசிரியர்களினதும் கௌரவத்துக்காக சிறுவர்கள் பலிக்கடாவாக்கப்படுகின்றனர். நான்காம் ஆண்டில் இந்தச் சித்திரவதை தொடங்கி விடும். கிட்டத்தட்ட இரண்டு வருட கடும் பயிற்சி அதன் பிறகு பரீட்சை. இந்தக் காலப்பகுதிக்குள் காலை முதல் அந்தப் பிள்ளை தூங்கும் வரை பல பெற்றோர்கள் ஓய்வின்றிப் பிள்ளையை வருத்துகிறார்கள். என்னதான் சிறுவர் உரிமை பற்றிப் பேசினாலும் கல்வி என்ற பெயரில் இந்தப் பிள்ளைகளின் உரிமை பறிக்கப்படுவதை நாம் எல்லோரும் கண்டும் காணாதது போல் இருந்து வருகிறோம்.

புலமைப் பரீட்சை முடிவு வந்தவுடன் சித்தியடையாத மாணவர்களின் மனம் நோகா வண்ணம் நடந்து கொள்ளும்படி சில சமூக ஆர்வலர்கள் முகநூல்களில் எழுதுவதுடன் இது முடிந்துவிடுகிறது. இவற்றின் ஊடாக எந்தப் பெற்றோரும் பெரியளவுக்கு விழிப்புணர்வு பெற்றதாக இல்லை. ஏனெனில் ஒவ்வொருவருக்கும் பந்தயத்தில் தாம்தான் முந்த வேண்டும் என்ற நோக்கு இருக்கிறதே தவிர தனது பிள்ளையின் உளநிலை பற்றி அக்கறைப்படுவதாக இல்லை.

இந்தப் போக்கு இவ்வாறு வளர்ந்திருப்பதனையும் இதனால் பிள்ளைகள் பாதிக்கப்படுவதனையும் கல்வி அதிகாரிகளும் சமூக ஆர்வலர்களும் அறியாமல் இல்லை. இருந்த போதும் புலமைப் பரீட்சையினை அரசு ரத்து செய்வதாக இல்லை. காலத்துக்குக் காலம் கல்வி அமைச்சர்கள், அதிகாரிகள் இது தொடர்பாக பேசுவார்களே தவிர உருப்படியான காரியம் எதையும் செய்வதாக இல்லை. இதற்குக் காரணம் பாடசாலைகளுக்கு மாணவர்களைச் சேர்ப்பதில் சரியான பொறிமுறையை எவரும் கண்டுபிடிக்கவில்லை என்பது புலனாகின்றது. புலமைப் பரிசில் கொடுப்பதுதான் இந்தப் பரீட்சையின் நோக்கம் என்றால் அதற்கு எவ்வளவோ வழிமுறைகள் இருக்கின்றன. ஆனால் புலமைப்பரிசிலை விட பாடசாலை அனுமதிதான் கல்வி அமைச்சுக்கு சிக்கலான விடயமாகத் தெரிகிறது.

புலமைப் பரிசு, பாடசாலை அனுமதி என்பவற்றைத் தாண்டி நாட்டுக்கு நற்பிரசைகளை உருவாக்குவதை மறந்து ஆசிரியர்களும் சமூகமும் செயற்படுகின்றது. புலமைப் பரீட்சையின் ஊடாக அன்பளிப்பு என்ற பெயிரில் இலஞ்சம் பெறும் மனோபாவம் ஒன்று உருவாகப் போவதை எவரும் உணர்வதாக இல்லை. இன்று வளர்ந்து வந்து கொண்டிருக்கும் இந்த அன்பளிப்புப் பண்பாட்டை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருவது ஒவ்வோர் ஆசிரியர்களின் கடமையும் பொறுப்பும் ஆகும் இதனை மீறுபவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு இந்த சீர்கெட்ட அன்பளிப்பு இலஞ்சம் நிறுத்தப்பட வேண்டும். இதனை கல்வி அதிகாரிகள் செய்ய முன்வரவேண்டும். அடுத்த ஆண்டில் இந்நடவடிக்கை தொடருமாக இருந்தால் அனைத்து ஆதாரங்களுடனும் வெளிப்படுத்தப்பட வேண்டியிருக்கும் என்பதையும் தெரியப்படுத்திக் கொள்கின்றோம்.