— அழகு குணசீலன் —
இலங்கையில் அரசியல் கட்சி ஒன்றின் சிறந்த தலைமைத்துவம் என்பது வெறுமனே தேர்தல் வெற்றியை – நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடப்படுகிறது. ஜனநாயக அரசியல் என்பது மக்களின் விருப்பம் அறிந்து செயற்படுவதாக உள்ளபோதும் “எப்படியாவது” கதிரைகளை அதிகரிப்பதே தலைமைத்துவ வெற்றியாக காட்டப்படும் வழக்கம் தொடர்கிறது. இந்த போக்கில் இருந்து தமிழரசுக்கட்சி அதன் ஆரம்பம் முதல் இன்றுவரை மாறவில்லை.
2009 யுத்த ஓய்வுக்கு பின்னர் ஜனநாயக நீரோட்ட கட்சி அரசியல் தலைமைத்துவம் என்பது ” அரசியல் கலாச்சார மாற்றத்தை” வேண்டி நிற்கின்ற இன்றைய சூழலில், தமிழரசுக்கட்சியின் தலைமைக்கு போட்டியிடும் எல்லோரும் “சிறிலங்கா பாராளுமன்றத்தில் தங்கள் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை ஏன்? எதற்காக? குறைந்தது….? அதற்கு பொறுப்பானவர்கள் யார்…? எண்ணிக்கையை எவ்வாறு அதிகரிப்பது“ என்று தேடும் படலத்தை ஆரம்பித்துள்ளனர்.
கதிரைக்கணக்கில் மதிப்பிடப்படும் அரசியல் அடைவு:
——————————-
காரணம்: தலைமைக்கான வேட்பாளர்கள் அனைவரும் தமிழரசின் அரசியல் அடைவை கதிரைக்கணக்கால் மதிப்பிடுகின்றனர். இது செயற்பாட்டு அரசியல் அற்ற, மக்களை வெறும் தேர்தல் வெற்றிக்கான வாக்காளர்களாக வழிநடத்தும் அரசியலாக தொடரப்போகிறது.
தமிழ்த்தேசிய அரசியலானது ஆயுதப்போராட்டத்திலும் சரி, அகிம்சை அரசியலிலும் சரி சரியான தலைமைத்துவத்தை ஒரு போதும் கொண்டிருக்கவில்லை. எப்போதும் ஒரு அரசியல் இடைவெளி நிரப்பப்படாமலே இருந்தது. புலிகளின் தலைமைத்துவம் இன்று வரை ஆயுதபலத்தை கொண்டு மதிப்பிடப்படுகிறது , தமிழ்த்தேசிய கட்சிகளின் தலைமைத்துவம் தேர்தல் வெற்றியை கொண்டு மதிப்பிடப்படுகிறது. புலிகள் ஒரு காலத்தில் தங்களால் நிராகரிக்கப்பட்ட தமிழரசுக்கட்சிக்கும், தங்களால் தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கும் வெள்ளை அடித்தார்களே அன்றி ஆயுதப்போராட்டத்திற்கு நிரப்பியாக ஒரு மக்கள் அரசியலை வளர்த்தெடுக்கவில்லை. மக்கள் அரசியல் என்பது புலிகள் ஏற்பாடு செய்யும் பல்வேறு நிகழ்வுகளில் “பார்வையாளர்” அரசியலாக அமைந்தது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு புலிகளின் தாளத்திற்கு ஆடியது.
புலிகளின் இந்த “அரசியல்” வடக்கு கிழக்கில் ஒரு ஜனநாயக, பன்முக அரசியல் வளர்ச்சியை மழுங்கடித்ததுடன் மக்கள் அரசியல் வலுவிழக்க காரணமானது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தமிழரசு உள்ளிட்ட பங்காளி கட்சிகள் கூட மறுசீரமைக்கப்படவில்லை, மாநாடுகளை நடாத்தவில்லை, கட்சி யாப்பின் அடிப்படையில் நிர்வாகங்களை தெரிவு செய்யவில்லை, அங்கத்தவர்களை திரட்டவில்லை, பழைய கிளைகள் புனரமைக்கப்படவில்லை, புதிய கிளைகள் அமைக்கப்படவில்லை, மக்களை அரசியல் மயப்படுத்தவில்லை.
ஒட்டுமொத்த தமிழர் அரசியல் ஜனநாயகம் வடக்கு கிழக்கில் செயலிழந்தது. இப்போது யுத்தம் முடிந்து 15 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழரசு தலைமையைத் தேடுகிறது. தமிழரசின் வரலாற்று பாரம்பரியமான “போட்டியின்றி ஏகமனதான தெரிவு” என்ற அரசியல் பம்மாத்துக்கு பங்கம் ஏற்படும் வகையில் மூன்று பேர் தலைமைப்பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர். ஒரு வகையில் இது ஆயுதப்போராட்டத்தின் தோல்வியில் பிறந்த ஜனநாயக அரசியல் சூழல்- தலைமையை தெரிவு செய்யும் வாய்ப்பை உறுப்பினர்களுக்கு வழங்கியிருக்கிறது.
இனி…. வேட்பாளர்கள் குறித்து…..!
சிவஞானம் சிறிதரன்: யாழ். தேர்தல் மாவட்ட எம்.பி. 2010 இல் இலங்கை நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டவர். தமிழ்ப்பள்ளி வாத்தியாராக இருந்த சிறிதரன் அரசியலுக்குள் நுழைவதற்கு ஆயுதப்போராட்டத்தில் அவரது குடும்பத்திற்கு இருந்த உறவு சாதகமாக இருந்தது. கல்வி முதுமாணிப் பட்டம் பெற்ற சிறிதரன் இருபது ஆண்டுகளுக்கு மேலாக ஆசிரியராக -அதிபராக கடமையாற்றி இருக்கிறார். அது போன்று இருபத்தி ஐந்துக்கும் மேற்பட்ட பாராளுமன்ற குழுக்களிலும் செயற்பட்டிருக்கிறார். யாழில், கிளிநொச்சியில், வன்னிப் பெரு நிலப்பரப்பில் செல்வாக்குள்ள அரசியல்வாதி என்று கூறப்படுகிறது. புலிகளின் குடும்ப பின்னணி இதற்கு ஒரு காரணம்.
ஆபிரகாம் சுமந்திரன்: ஜனாதிபதி சட்டத்தரணி என்பது பலருக்கும் தெரிந்தது. தெரியாதது சுமந்திரன் இந்திய பல்கலைக்கழக பௌதிகவியல் விஞ்ஞானத்துறை பட்டதாரி. இன்ரநெற் – டிஜிட்டல் சட்ட சிறப்பு துறையில் முதுமாணிப் பட்டம் பெற்றவர். 2010 இல் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற அரசியலுக்கு கொண்டு வரப்பட்டவர். இலங்கை நாடாளுமன்றத்தில் இருபத்தி ஐந்துக்கும் மேற்பட்ட குழுக்களில் இவரும் செயற்பட்டிருக்கிறார். கொழும்பை தளமாகக்கொண்ட யாழ் . மாவட்ட எம்.பி.என்ற பார்வை சுமந்திரன் மீது தொடர்ந்தும் இருந்து வருகிறது. தமிழரசைப் பொறுத்தமட்டில் தற்போதைய நிலையில் சுமந்திரன் சர்ச்சைக்குரிய அரசியல்வாதி.
சீனித்தம்பி யோகேஸ்வரன்: மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் எம்.பி. இவரும் 2010 இல் அரசியலுக்கு வந்தவர். ஆரம்பத்தில் அரசாங்க உத்தியோகத்தராக கடமையாற்றியவர். கிழக்கு மாகாணத்தின் இந்து அமைப்புகள், ஆலயங்களோடு நெருக்கமான உறவைக்கொண்டவர். இது இவரின் அரசியலுக்கு போனஸ் ஆக அமைந்திருந்தது.
தமிழ்த்தேசிய அரசியலில் சட்டமும், ஆங்கிலமும் பிடித்திருந்த தகுதியை 2020 தேர்தலைத் தொடர்ந்து சிங்களமும் முக்கிய மொழித்தகுதியாக பிடித்திருக்கிறது. சிங்களத்திற்கு தார்பூசிய தமிழரசுக்கட்சியின் அரசியல் தலைமைத் தகுதிக்கு இப்போது சிங்களம் பாஸ் பண்ணி இருக்க வேண்டும்(?).
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் எம்.பி.யாக நியமிக்கப்பட்டது முதல் சுமந்திரன் மீது தமிழ்மக்களுக்கு ஒரு வெறுப்பும், எதிர்ப்பும் இருந்துவருகிறது. ஆரம்பத்தில் அவரின் சட்டவல்லமையைப் பாராட்டிய பலர் இன்று அவருடன் இல்லை. தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, அவை முதல்வர் சி.வி.கே.சிவஞானம், மற்றும் மூத்த போராளிகள் உள்ளிட்ட பலரும் தூரவிலகி நிற்கிறார்கள். இவர்கள் தமிழரசுக்கட்சியின் தலைவர் தேர்வில் கணிசமான செல்வாக்கை செலுத்தக்கூடிய மூத்த அரசியல்வாதிகள்.
இரா.சம்பந்தரின் முதுமையை – இயலாமையைப் பயன்படுத்தி தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அரசியல் முடிவுகளில் சுமந்திரன் செலுத்திய செல்வாக்கு வெளிப்படையானது. சுமந்திரனை முதன்மைப்படுத்துவதாக அவை இருந்ததுடன், சம்பந்தர் தனது இயலாமையை மறைக்க கண்டும் காணாமல் இருந்ததும் பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் – தமிழரசுக்கட்சியின் தவறான அரசியல் முடிவுகளுக்கு பின்னால் சுமந்திரன் இருந்திருக்கிறார். நல்லாட்சி முதல் ரணில் விக்கிரமசிங்கவின் ஜனாதிபதி தெரிவுவரையும் தொடரும் நிகழ்வுகள் இவை. தமிழரசுக்கட்சியின் சார்பில் சுமந்திரனால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் எவையும் மக்களை வந்து அடையவில்லை.
கடந்த தேர்தலில் சிறிலங்கா விசேட அதிரடிப்படையுடன் அவர் வலம்வந்த விதம், சக வேட்பாளர் சசிகலா ரவிராஜுக்கு எதிரான சுமந்திரனின் செயற்பாடுகள், புலிகளுக்கு எதிரான கருத்துக்களின் மூலம் மூத்தபோராளிகளை ஆத்திரமூட்டியமை, முன்னாள் புலிகளால் தமக்கு உயிர் ஆபத்து என்று அவர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தது , கொழும்பு கிளைத்தலைவர் கே.வி.தவராஜாவுடனான முரண்பாடு, தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இருந்து ரெலோ, புளட் வெளியேறக்காரணமாக இருந்த உள்ளூராட்சி தேர்தல் “பொறிமுறை”, சம்பந்தர் பதவிதுறக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளிட்ட பல விடயங்கள் தமிழரசுக்கட்சியின் தலைமைப்பதவிக்கு சுமந்திரனுக்கு குறுக்கே நிற்கின்றன.
இவற்றிற்கும் அப்பால் சகல சந்தர்ப்பங்களிலும் தன்னை முதன்மைப்படுத்துதல், கூட்டுப்பொறுப்பை புறம்தள்ளல், தனித்து ஓடுதல், வெளிப்படைத்தன்மை அற்ற தன்மை, மேற்குலக இராஜதந்திரிகளுடனும், கொழும்பு ஆட்சியாளர்களுடனும் உள்ள பின்கதவு உறவு , டயஸ்போராவில் சுமந்திரனுக்கு இருக்கின்ற எதிர்ப்பு….. போன்ற பல விடயங்கள் சுமந்திரன் மீதான ஒருபகுதி நம்பிக்கையை தமிழரசாரிடம் இழக்கச்செய்திருக்கிறது. கல்முனை தமிழ் பிரதேச செயலக விவகாரத்தில் அமைச்சு ஆவணத்தை சுமந்திரனே ஹக்கீமிடம் காட்டி, காட்டிக்கொடுத்தார் என்று சார்ள்ஸ் நிர்மலநாதனும் கூறியிருந்தார். இவர் சிறிதரனை ஆதரிப்பதாக கூறப்படுகிறது.
சுமந்திரனின் சட்டவாதங்களும், நாடாளுமன்ற விவாதங்களும், மொழி ஆளுமையும், கிழக்கில் அவருக்கு இருக்கின்ற ஓரளவான ஆதரவும் அவரை தமிழரசுக்கட்சியின் தலைமைப்பதவிக்கு வழிநடத்துமா…..? சுமந்திரனின் அரசியல் தவறுகளை சமாளிக்க இந்த விடயங்கள் போதுமானவையா…? மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட உறுப்பினர்களின் அதிகளவான ஆதரவை சுமந்திரன் பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. இதற்கு பின்னால் கலையரசன் எம்.பி., சாணக்கியன் எம்.பி. உள்ளனர். சுமந்திரனினுக்கு நன்றி கடன்தீர்க்க வேண்டிய கடமைப்பாடு அவர்களுக்கு.
கடந்த தேர்தலில் சாணக்கியனுக்கு வேட்பாளர் நியமனம் கிடைத்தது முதல் அதை விமர்சிப்பவராக யோகேஸ்வரன் இருந்தார். இதனால் சீ.யோகேஸ்வரனால் சுமந்திரனின் ஆதரவை கிழக்கில் எந்தளவு பிரிக்கமுடியும் என்பது கேள்விக்குறி. மட்டக்களப்பு முன்னாள் எம்.பிக்கள், உள்ளூராட்சி தலைவர்கள், முக்கியஸ்தர்கள் சுமந்திரன் அணிக்காக பிரச்சாரம் செய்கிறார்கள். அதேவேளை சுமந்திரன் – சாணக்கியன் கம்பனிக்கு எதிரான ஒரு நிலைப்பாடும் மட்டக்களப்பு தமிழரசு இளையோரிடம் இல்லாமல் இல்லை.
சிறிதரனைப்பொறுத்தமட்டில் அவர் தலைமைப்பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் இருந்து வடக்கில் பல விடயங்களை நகர்த்தி வருகிறார். நாடாளுமன்ற பிரசன்னம், உரையாற்றுதல் அதிகரித்திருக்கிறது. அவரது தொனியில் அனுசரித்துப்போகும் அணுகுமுறை வெளிப்படுகிறது. தனது வெற்றியில் நம்பிக்கை கொண்டுள்ளார். இரண்டு வருடத்திற்கே தலைமைப்பதவியில் இருப்பேன் என்று அடித்துச் சொல்கிறார். இந்தியாவுடன் இணக்கப்போக்கு தெரிகிறது. புதுடெல்லியில் தமிழரசுக்கட்சியின் கிளை அலுவலகம் அமைக்கப்படும் என்ற தனது எதிர்கால திட்டங்களை கூறுகிறார். செயற்பாட்டு அரசியலுக்கான வரைபடம் தன்னிடம் உள்ளது என்றும் சொல்லும் அவர் இந்தியாவை தவிர்த்து ஓடமுடியாது என்று வெளிப்படையாக பேசுகிறார். இவர்கள் இருவரில் யார் இந்தியாவுக்கு சிறந்த முட்டாக அமையக்கூடியவர் ?. இதுவரை அதை இந்தியா தீர்மானிக்காமல் இருக்க முடியாது.
வடக்கில் சுமந்திரன் மீதுள்ள அதிருப்தியை அறுவடை செய்வது சிறிதரனின் இலக்காக இருக்கிறது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பை மீளுருவாக்கம் செய்து வெளியேறியவர்களை சிறிதரனின் அணுகுமுறை உள்ளே ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒற்றுமையை விரும்புபவர்களுக்கு சிறிதரனின் துரும்பு இலகுவில் எடுபடவாய்ப்புண்டு. யாழ்.குடாநாட்டிலும், வன்னி பெருநிலப்பரப்பிலும் இருந்து சிறிதரன் அதிக ஆதரவைப்பெறமுடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதேசங்களுக்கு இடையிலான சம பிரதிநிதித்துவம் அற்ற இந்த முறையில் வடக்கே தீர்மானிக்கின்ற சக்தியாக அமையப்போகிறது. இதனால் சம்பந்தரின் விருப்புடன் திருகோணமலையில் ஆறு பிரதிநிதித்துவங்களை அதிகரிக்க சுமந்திரன் முனைவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.
ஒப்பீட்டளவில் சுமந்திரனை விடவும் சிறிதரன் வடக்கில் களநிலையில் நிற்கின்ற ஒரு அரசியல்வாதி.அண்மையில் மன்னார் , வவுனியா நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் சில தகவல்களை சிறிதரன் வெளியிட்டிருந்தார். இதன் மூலம் தனது எதிர்கால செயற்பாடு எப்படி அமையும் என்பதை வெளிப்படுத்தியுள்ளார். தலைமைத்துவம் தொடர்பாக இடம்பெற்ற நேர்காணல்கள், ஊடகச்சந்திப்புக்களில் ஒப்பீட்டளவில் வெளிப்படைத்தன்மையும், தமிழ்த்தேசிய அரசியல்பற்றும், தோற்றாலும் கட்சிக்காக தொடர்ந்து உழைக்கும் எண்ணமும் சிறிதரனிடம் அதிகம் வெளிப்படுகிறது.
சி.யோகேஸ்வரன் தலைமைத்துவ வாய்ப்பு தனக்கு இல்லை என்று தெரிந்தும் போட்டியில் இருந்து இதுவரை விலகவில்லை. இறுதி நேரத்தில் பேரம்பேசல்மூலம் ஒரு பதவியை இலகுவாகப்பெற முடியும் என்று நம்புவதாக தெரிகிறது. சுமந்திரனா? சிறிதரனா? என்ற கேள்வி எழுமாயின் யோகேஸ்வரனின் தேர்வு சிறிதரனாக அமையலாம். ஏனெனில் மதம் சார்ந்த நிலைப்பாட்டில் மாற்று மதங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவராக யோகேஸ்வரன் உள்ளார். இந்த மதவிவகாரம் வடக்கில் சற்று அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. இதனாலும் சில முக்கிய புள்ளிகள் சிறிதரனை ஆதரிக்கிறார்கள்.
எது எப்படியோ தலைவர்பதவி இல்லாவிட்டாலும் யோகேஸ்வரன் வெறும் கையோடு மட்டக்களப்பு திரும்பமாட்டார் என்றே நம்பப்படுகிறது. தகுதிக்கு மீறிய அவரின் தலைமைத்துவ வேட்பாளர் விண்ணப்பத்தின் இரகஷியம் இதுதான்.
தமிழரசுக்கட்சியின் தலைமைத்துவத்திற்கான தேர்தல் கட்சியில் மட்டும் அல்ல யாழ்குடாநாடு, வன்னி, கிழக்கிலும் ஒரு உடைவை ஏற்படுத்தப்போகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னரான தேசியப்பட்டியல் நியமனம் ஏற்படுத்திய சலசலப்பு இப்பவே கேட்கத்தொடங்கிவிட்டது………!
தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் உரத்துக்கேட்கும். இது வெறுமனே தலைவர் கதிரைக்கான சத்தம் மட்டுமா….? இல்லை….?
75 ஆண்டுகளாக அடையமுடியாத சமஷ்டி……!
40 ஆண்டுகால ஆயதப்போராட்ட எட்டாக்கனி தமிழ் ஈழம்….!!
36 ஆண்டுகளாக பேசுபொருளான அதிகாரப்பகிர்வு……!!!
கொள்கைகள் குறித்த தமிழ்த்தேசிய அரசியல் பரிதாபத்தின் அழுகுரலா……?