இமாலயப் பிரகடனம்-எடுப்பார் கைப்பிள்ளையாக இலங்கைத் தமிழர் பிரச்சினை படும்பாடு (வாக்குமூலம்-93)

இமாலயப் பிரகடனம்-எடுப்பார் கைப்பிள்ளையாக இலங்கைத் தமிழர் பிரச்சினை படும்பாடு (வாக்குமூலம்-93)

  — தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் —

(‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர்)

தமிழீழ விடுதலைப் புலிகளின் மிகத் தீவிரமான முகவராகச் செயற்பட்ட ‘உலகத் தமிழர் பேரவை’ (Global Tamil Forum) கடந்த ஏப்ரல் மாதம் நேபாள தலைநகர் காத்மண்டுவில் வைத்து ‘சிறந்த இலங்கைக்கான சங்க’ப் பௌத்த குருமார்கள் சிலருடன் இணைந்து ‘இமாலயப் பிரகடனம்’ என்ற பெயரில் 27.04.2023 திகதியிட்ட ஒரு கூட்டுப் பிரகடனத்தைத் தயாரித்து அதனை இப்போது இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் 07.12.2023 அன்று கையளித்துள்ளது. 

இப்பிரகடனத்தில் மாகாண மட்டத்தில் போதுமான அதிகாரப் பகிர்வினை உறுதிப்படுத்தும் புதிய அரசியலமைப்பு ஒன்றினை உருவாக்குமாறு கோரப்பட்டிருக்கிறது. 

‘தமிழ்த் தேசிய அரசியல்’ எனக் கூறப்படுகின்ற இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணத் தமிழர்களின் அரசியல் இப்போது ‘எடுப்பார் கைப்பிள்ளை’யாகி இருப்பதையே இந்த ‘இமாலயப் பிரகடனம்’ எடுத்துக்காட்டுகிறது.

தற்போது இலங்கை அரசியலமைப்பின் அங்கமாகவுள்ள 13 ஆவது திருத்தத்தின் மூலம் பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்களையே அமுல் நடாத்தாது-அமுல் நடத்த விரும்பாது அத்திருத்தம் நிறைவேற்றப்பட்ட 1988 இலிருந்து இன்றுவரை கடந்த 35 வருடங்களாக இழுத்தடித்து வருகிற இலங்கை அரசாங்கம் புதிய அரசியலமைப்பொன்றின் மூலம் அதற்கு மேல் எதனையும் தருமென்றோ-மாகாண மட்டத்தில் போதுமான அதிகாரப் பகிர்வினை உறுதிப்படுத்துமென்றோ எதிர்பார்ப்பது கடைந்தெடுத்த அரசியல் மதியீனம் ஆகும். 

பலவீனப்பட்டுள்ள தமிழர்களுடைய அரசியல் பொதுவெளியில் தடியெடுத்தவன் எல்லாம் தண்டப் பிரசண்டன் போலத்தான் இப்போது உலகத் தமிழர் பேரவை புறப்பட்டிருக்கிறது. இந்த ‘இமாலயப் பிரகடனம்’ ஓர் அரசியல் ‘கேலிக்கூத்து’ ஆகும். 

‘புதிய’ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் (குத்து விளக்கு அணியின்) பங்காளிக் கட்சிகளிலொன்றான ‘ரெலோ’ உலகத் தமிழர் பேரவையின் இமாலயப் பிரகடனத்தை நிராகரித்துள்ளதுடன் அதன் நடவடிக்கைகளுக்குக் கண்டனமும் தெரிவித்துள்ளது.

மேலும், இலங்கை வந்துள்ள (உலகத் தமிழ் பேரவைக்) குழு புலம்பெயர் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லையென்று அவுஸ்திரேலிய தமிழ்க் காங்கிரஸ்-வட அமெரிக்காவின் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு-இலங்கைத் தமிழ்ச் சங்கம், அமெரிக்கா-யுனைட்டெட் ஸ்ரேற்ஸ் தமிழ் அக்ஸன் குறூப் (United States Tamil Action Group)-உலகத் தமிழ் அமைப்பு, அமெரிக்கா-பிரித்தானிய தமிழர் பேரவை ஆகிய ஆறு புலம்பெயர் அமைப்புகள் ஒப்பமிட்டு எதிர்ப்பு அறிக்கையொன்றினைக் கூட்டாக வெளியிட்டுள்ளன. 

2009 செப்டம்பரில் பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசில் பதினான்கு நாடுகளைச் சேர்ந்த அமைப்புகளின் பிரதிநிதித்துவத்துடன் உருவான ‘உலகத் தமிழர் பேரவை’ யிலிருந்து அதன் ஆரம்பகாலப் பங்காளி அமைப்புகளான பிரித்தானிய தமிழர் பேரவை-அவுஸ்திரேலிய தமிழ்க் காங்கிரஸ்-யு.எஸ்.ரி.பி.ஏ. (யுனைடெட் ஸ்ரேற்ஸ் தமிழ் அக்சன் குரூப்) ஆகியவை உலகத் தமிழர் பேரவையிலிருந்து விலகிவிட்டனவென்றே அறியக்கிடக்கிறது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்) யின் தலைவர் இலங்கை வந்துள்ள உலக தமிழர் பேரவைக் குழுவைச் சந்திப்பதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார். 

ஆக, இதுவரை ஊடகவியலாளரும் அரசியல் பத்தி எழுத்தாளருமான யதீந்திரா மட்டுமே உலகத் தமிழர் பேரவையின் செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்க வேண்டுமென்று ஆலோசனை வழங்கியுள்ளார். (ஞாயிறு தினக்குரல் 10.12.2023) இதன் தாற்பரியம் என்னவென்று தெரியவில்லை. 

தமிழ் மக்களுடைய ஐக்கியத்தையும்-தமிழ் அரசியல் கட்சிகளினுடைய ஐக்கியத்தையும்-தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் சிதைத்ததிலும் தமிழர் அரசியலைச் சந்தி சிரிக்கவைத்ததிலும் சுமந்திரனின் தான்தோன்றித்தனமான-தன்னிச்சையான-கட்டுப்பாடற்ற-வித்துவச் செருக்குடனான செயற்பாடுகள் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாகப் பங்காற்றியுள்ளன என்பதைத் தமிழ் மக்கள் இன்னும்  சரியாகப் புரிந்து கொள்ளவில்லைபோல்தான் தெரிகிறது. 

தமிழ் அரசியல் கட்சிகளுக்கிடையில் பகைமையை வளர்ப்பதிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் குலைத்ததிலும் இரா. சம்பந்தனின் கட்டுப்பாட்டிலிருந்த (மாவை சேனாதிராசாவைப் ‘பொம்மை’த் தலைவராகக் கொண்டிருந்த) தமிழரசுக் கட்சிக்கும் பெரும் பங்குண்டு. 

உலகத்தமிழர் பேரவையின் செயற்பாடுகளின் பின்னணியில் பாதர் இமானுவேலுக்கூடாகச் சுமந்திரனின் அரசியல் ‘சித்து’ விளையாட்டுகள் உள்ளனவா என்பதும் ஆராயப்பட வேண்டிய ஒன்று.

போதாக்குறைக்கு உலகத்தமிழர் பேரவைக் குழு இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களை 11.12.2023 அன்று சந்தித்தும் உள்ளது. 

இத்தகைய சீத்துவத்தில்தான் உலகத் தமிழர் பேரவைக் குழு இலங்கை வந்து ‘சிலு சிலுப்பு’க் காட்டித் திரிகிறது. 

வடக்குக் கிழக்குத் தமிழ் மக்கள் இதனைச் ‘சீரியஸ்’ ஆக எடுத்துக் கொள்ளக் கூடாது. 

ஆனாலும், ஓர் உண்மையைத் தமிழ் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். 

அது என்னவெனில், உலகத் தமிழர் பேரவையினரிடமும் சரி அவர்களை ஆதரிப்பவர்கள் மற்றும் எதிர்ப்பவர்களிடமும் சரி தமிழ் மக்களைச் சமூக பொருளாதார ரீதியாகக் கைதூக்கிவிடக்கூடிய ‘அரசியல் வழி வரைபடம்’ எதுவும் கிடையாது என்பதே. இவர்கள் அனைவருமே வெறுமனே விளம்பரத்திற்காகவும் வேறு சில சுயநல நோக்கங்களுக்காகவும் வெறும்கையால் ‘முழம்’ போடுபவர்களே. 

இப்பத்தி மீண்டும் மீண்டும் வலியுறுத்துவது என்னவேனில், அவற்றின் கடந்த காலச் சரிபிழைகளுக்கும் அப்பால் தற்போதைய அரசியல் யதார்த்தத்தையும், ‘பிச்சை வேணாம் நாயைப் பிடி’ எனும் தமிழர்தம் அரசியல் கையறுநிலையையும் கருத்தில்கொண்டு, தமிழ் மக்கள் கூட்டணி-ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி-தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி-தமிழர் விடுதலைக் கூட்டணி-அகில இலங்கை தமிழர் மகாசபை-தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி-சமத்துவக் கட்சி-ஈரோஸ் ஜனநாயக முன்னணி ஆகிய எட்டு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் இணைந்தும் அகில இலங்கை தமிழர் மகாசபையின் தலைவர் எந்திரி கலாநிதி கா. விக்னேஸ்வரன் அவர்களை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டும் இயங்குவதுமான அதிகாரப் பகிர்வுக்கான இயக்கத்தைப் பலமாகக் கட்டியெழுப்பிட வடக்குக் கிழக்குத் தமிழர்கள் தமது முழுமையான அரசியல் அங்கீகாரத்தை அதிகாரப்பகிர்வுக்கான இயக்கத்திற்கே வழங்க வேண்டும் என்பதைத்தான். இதுவொன்றே தமிழர் அரசியலில் நேர்மறையான மாற்றத்தைக் கொண்டுவரும்.