— வீரகத்தி தனபாலசிங்கம் —
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார திசாநாயக்க தற்போது தேசிய விடுதலை இயக்கம் ஒன்றின் அவசியம் குறித்து பேச ஆரம்பித்திருக்கிறார். இந்தியாவின் ‘இந்து’ ஆங்கிலப் பத்திரிகையின் கொழும்பு செய்தியாளர் மீரா ஸ்ரீனிவாசனுக்கு கடந்த வாரம் வழங்கிய நீண்ட நேர்காணலில் அந்த தேசிய விடுதலை இயக்கம் குறித்து அவர் விளக்கிக் கூறியிருக்கிறார்.
தேசிய விடுதலை இயக்கம் குறித்து பேசுகிறீர்களே…. நாட்டை எதனிடமிருந்து விடுவிக்கப்போகிறீர்கள் என்று செய்தியாளர் தொடக்கத்திலேயே திசாநாயக்கவிடம் கேட்டுவிடுகிறார். ஊழல்தனமான அரசியல் கலாசாரத்தில் இருந்து நாடு விடுதலை பெறவேண்டும். 75 வருடகாலமாக நாட்டை பாழ்படுத்திவந்த ஊழல்தனமான உயர்வர்க்க அரசியல் தலைமைத்துவத்திடம் இருந்து நாட்டை விடுவிப்பதே முதலில் செய்யவேண்டிய பணி என்பதே அவரின் பதிலாக இருந்தது.
அபிவிருத்தியடைந்த நாடுகளை நோக்கும்போது அவற்றின் முன்னேற்றம் பெருமளவுக்கு தேசிய விடுதலைப் போராட்டத்துடன் இணைந்ததாக இருந்ததாக அமெரிக்கா மற்றும் இந்தியாவை உதாரணம் காட்டிய திசாநாயக்க இலங்கையில் தேசிய விடுதலை இயக்கம் ஒன்று இருந்ததில்லை. பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகள் நாட்டை ஆட்சிசெய்த வேளையிலும் அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறிய பின்னரும் தேசிய விடுதலை இயக்கம் ஒன்றைக் கட்டியெழுப்புவதற்கு கிடைத்த இரு சந்தர்ப்பங்களை எமது அன்றைய தலைவர்கள் தவறவிட்டுவிட்டார்கள் அத்தகைய இயக்கத்தைக் கட்டியெழுப்ப தற்போது கிடைத்திருக்கும் மூன்றாவது சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஊழல்தனமான அரசியல் ஆளும் வர்க்கத்தை தோற்கடிப்பதற்கு சகல சமூகங்களையும் வடக்கையும் கிழக்கையும் தெற்கையும் ஐக்கியப் படுத்தவேண்டும் என்று அழைப்புவிடுக்கிறார்.
இலங்கையின் சமூக,பொருளாதார மற்றும் அரசியல் யதார்த்தங்களை நோக்கும்போது நாட்டுக்கு தேவைப்படுவது சமூக மாற்றமே என்பது தெளிவாகிறது. மக்கள் இன்று வேண்டிநிற்கும் முறைமை மாற்றத்துக்கு (System change) ஒரு அரசியல் கட்சி அல்ல, தேசிய விடுதலை இயக்கமே தேவை என்றும் அதை நிறைவுசெய்வதற்கே தாங்கள் முயற்சிப்பதாக தெரிவித்த திசாநாயக்க, ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) தங்களது கட்சி, ஆனால் தேசிய மக்கள் சக்தி தங்களது தேசிய இயக்கம் என்று விளக்கம் கொடுத்தார்.
ஜே.வி.பி. தலைமையில் இருபத்தைந்துக்கும் அதிகமான வேறு கட்சிகள், குழுக்கள், தொழிற்சங்கங்கள், பெண்கள் உரிமைகள் அமைப்புக்கள் மற்றும் இளைஞர் அமைப்புக்களை ஒன்றிணைத்து சில வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தியே அவரின் சிந்தனையில் உள்ள தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கப்போகும் தேசிய இயக்கம் என்பதை புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது.
தங்களது கட்சி கோட்பாட்டு அடிப்படையில் சமூக மாற்றத்துக்கான வெகுஜன இயக்கம் ஒன்றை கட்டியெழுப்பவேண்டிய தேவையில் ஆரம்பம் முதலிருந்தே நம்பிக்கை கொண்டிருந்தபோதிலும், அத்தகைய இயக்கத்தை கட்டியெழுப்ப முடியாமல் போய்விட்டதாகவும் தங்களால் இப்போது வலிமையான வெகுஜன இயக்கம் ஒன்றை கட்டியெழுப்பக்கூடியதாக இருப்பது குறித்து திருப்தியடைவதாகவும் குறிப்பிட்ட அவர் தங்களது தேசிய விடுதலை இயக்கத்தில் இணையுமாறு வடக்கில் உள்ள மக்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.
“முன்னைய தென்னிலங்கை அரசியல் தலைவர்கள் வடக்கு மக்களை ‘மற்றையவர்களாகவே’ நோக்கினார்கள். நாங்கள் அவர்களை அவ்வாறு ‘மற்றையவர்களாக’ பார்க்கவில்லை. அதனால் எமது இயக்கத்தின் இயல்பான ஒரு அங்கமாக இருக்குமாறு வடக்கு மக்களைக் கேட்கிறோம். எமது அரசியல் பணியின் பெரும்பகுதி சிங்கள மக்கள் மத்தியில்தான் இடம்பெறுகிறது. அது எமது விருப்பம் இல்லை என்றாலும் உண்மை அதுதான். எமது புதிய தேசிய இயக்கத்தில் சகல சமூகங்களும் பங்கேற்க அனுமதிக்கவேண்டும் ” என்று அவர் கூறுகிறார்.
இலங்கையின் உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து அடுத்த வருடத்துடன் 15 வருடங்கள் நிறைவடையப் போகிறது. அரசியல் தீர்வு இன்னமும் காணப்படவில்லை. தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் நில அபகரிப்புகள் குறித்து தமிழ் மக்கள் பெரும் கவலை கொண்டுள்ளார்கள். இறந்தவர்களை நினைவுகூருவதற்கு அவர்கள் அனுமதிக்கப் படுவதில்லை. சித்திரவதை மற்றும் தடுப்புக்காவல் மரணங்கள் குறித்தும் செய்திகள் வருகின்றன. அதிகாரத்துக்கு வரும் நோக்கத்துடன் தேசிய இயக்கம் ஒன்றை கட்டியெழுப்பும் நீங்கள் தமிழ் மக்களுக்கு என்ன கூறுகிறீர்கள் என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
“இலங்கையில் இருந்த பிரச்சினை போர் அல்ல. பிரச்சினை ஒரு போரின் வடிவத்தை எடுத்தது. போர் முடிவுக்கு வந்தபோதிலும் தேசியப் பிரச்சினை தொடருகிறது. தமிழ்,முஸ்லிம் மக்களைப் பொறுத்தவரை அவர்களது மொழியுரிமைகள், கலாசார விவகாரங்கள் மற்றும் ஆட்சிமுறையில் பங்கேற்பது தொடர்பில் பிரச்சினைகள் இருப்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகளை நாம் காணவேண்டும்.
“இலங்கையில் இடம்பெற்றது ஒரு உள்நாட்டுப்போர். ஒரு நாடு இன்னொரு நாட்டைத் தோற்கடிக்கவில்லை. நடந்துமுடிந்தது ஒரு பெரும் அழிசெயல். அதை ஒரு ‘போர் வெற்றியாக’ குதூகலிக்கவேண்டும் என்றோ போரின் இறுதிநாளான மே 19 ஆம் திகதியை கொண்டாடவேண்டும் என்றோ நாம் நினைக்கவில்லை. போரில் இறந்த தங்கள் உறவுகளை நினைவுகூருவதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமை இருக்கிறது. போரில் பலியானவர்களை நினைவுகூருவதற்கு பொதுவான திகதியொன்றை நிர்ணயிக்க முடியுமானால் அது சிறப்பானது.
” மறுபுறத்தில், வடக்கில் மாத்திரமல்ல, தெற்கிலும் கூட நினைவுகூரல் அர்த்தத்தை இழந்துபோயிருக்கிறது. சிலருக்கு அது அரசியல் செயற்திட்டமாகி விட்டது. வடக்கில் உள்ள மக்கள் இறந்தவர்களை நினைவுகூரும்போது தெற்கில் உள்ள சிலர் அதை குழப்பவேண்டும் என்று விரும்புகிறார்கள். அது ஒரு வகையான விளையாட்டாக மாறிவிட்டது” என்று அவர் பதிலளித்தார்.
ஊழல்தனமான உயர்வர்க்க அரசியல் அதிகார வர்க்கத்தை தோற்கடிக்கக்கூடிய ஒரு தேசிய விடுதலை இயக்கத்தின் மூலமாக நாட்டில் சமூக மாற்றத்தை ஏற்படுத்தி அதன் வழியாக இனப்பிரச்சினை உட்பட சகல பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை காண்பதே தேசிய மக்கள் சக்தியின் இலட்சியம் என்பதே திசாநாயக்க இந்த நேர்காணலின் மூலமாக கூறும் செய்தியாகும்.
சகல சமூகங்களையும் ஒன்றிணைத்து முன்னெடுக்கப்படக் கூடிய தேசிய போராட்டத்தின் மூலமாக பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் காண்பது என்பது அடிப்படையில் ஒன்றும் புதிய அணுகுமுறை அல்ல. பழைய இடதுசாரிக் கட்சிகள் கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து முன்வைத்து இறுதிவரை சாத்தியமாகாமல் போன அணுகுமுறைதான் அது. அதன் தோல்விக்கு காரணம் இனவாத அரசியல் என்பது வரலாறு தந்த பாடம்.
பழைய இடதுசாரி தலைவர்கள் தேசிய ரீதியான தொழிலாளர் வர்க்கப்புரட்சி ஒன்றின் மூலமாக உருவாக்கப்படக்கூடிய சோசலிச சமுதாயம் ஒன்றில் இனப்பிரச்சினை இல்லாமல் போய்விடும் என்று கூறிய காலம் ஒன்றும் இருந்தது.
தேசிய இயக்கத்தில் இணையுமாறு தமிழ் மக்களுக்கு திசாநாயக்க விடுக்கும் அழைப்பை தேசிய இனப் பிரச்சினையையும் தங்களது நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளையும் இதுகாலவரையில் அவரது கட்சி எவ்வாறு அணுகிவந்திருக்கிறது என்பதை கருத்திற் கொண்டுதான் அவர்கள் நிச்சயம் நோக்குவார்கள். அது தவிர்க்கமுடியாதது.
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதை நோக்கிய இதுகாலவரையான சகல முயற்சிகளையும் எதிர்த்துவந்த எதிர்மறையான வரலாற்றை ஜே.வி.பி. கொண்டிருக்கிறது. போரை முழுவீச்சில் முன்னெடுப்பதற்கு ராஜபக்ச அரசாங்கத்துக்கு முழுமையான ஆதரவையும் அது வழங்கியது.
ஆனால், தங்களது கட்சியின் கடந்த கால அரசியலை அடிப்படையாக வைத்து தங்களை தற்போது நோக்கவேண்டியதில்லை என்று கூறும் ஜே.வி.பி. தலைவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு உள்நாட்டில் மக்களை அணிதிரட்டுவது மாத்திரம் போதாது, சர்வதேச சமூகத்தின் குறிப்பாக அதன் வல்லாதிக்க நாடுகளின் ஆதரவும் ஒத்துழைப்பும் கூட அவசியம் என்பதை உணர்ந்தவர்களாக தங்களது நிலைப்பாடுகளில் பெரும் மாற்றங்களைச் செய்திருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது.
சோசலிசக் கட்சியொன்று அடிப்படைக் கோட்பாடுகளில் சமரசம் செய்துகொள்ளாமல் மாறிவரும் சூழ்நிலைகளுக்கு இசைவாக அதன் மூலோபாயங்களில் மாற்றங்களைச் செய்வது இயல்பானது என்று அவர்கள் தங்களது அண்மைக்கால மாற்றங்களை நியாயப் படுத்துகிறார்கள்.
இரு வாரங்களுக்கு முன்னர் அநுரா குமார திசாநாயக்க கொழும்பு ஆங்கில வாரப்பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தேசிய மக்கள் சக்தி புதிய யுகத்துக்கு ஏற்றமுறையில் மாற்றம் கண்டுவிட்டது என்று கூறியிருந்தார்.
உலகில் 1900 கள் வரை சோசலிச முகாம் என்றும் முதலாளித்துவ முகாம் என்றும் இரு முகாம்கள் இருந்தன. நாம் சோசலிச முகாமைச் சேர்ந்தவர்களாக இருந்தோம். அதற்கு பிறகு உலக ஒழங்கு அமெரிக்காவை மையப்படுத்தியதாக மாறியது. இப்போது சீனா, ரஷ்யா, இந்தியா மற்றும் ஐரோப்பா என்று வேறு அதிகார மையங்கள் வந்துவிட்டன. அதனால் நாமும் மாறவேண்டிய தேவை ஏற்பட்டது. கோட்பாட்டுக்கும் யதார்த்தங்களுக்கும் இடையில் வேறுபாடு இருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவினதும் மேற்குலக ஏகாதிபத்திய நாடுகளினதும் கட்டுப்பாட்டில் உள்ளவை என்று சர்வதேச நாணய நிதியம் , உலக லங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற சர்வதேச நிதிநிறுவனங்களை நிராகரித்த தேசிய மக்கள் சக்தி இப்போது அவற்றுடன் இணைந்து செயற்படத்தயாராயிருக்கி்றது. ஒரு காலத்தில் தனிச்சொத்துடைமையை ஒழிக்கும் கோட்பாட்டில் நம்பிக்கை கொண்டிருந்த அவர்கள் இப்போது தனியார்துறையுடன் (முதலாளித்துவ சக்திகள்) இணைந்து செயற்படுவதற்கும் வெளிநாட்டு முதலீடுகளை வரவேற்கவும் முன்வந்திருக்கிறார்கள்.
அண்மைக்காலமாக கொழும்பில் உள்ள மேற்குலக நாடுகளின் தூதுவர்களை அவர்கள் தொடர்ச்சியாக சந்தித்து தங்களது நிலைப்பாடுகளை விளக்கிக் கூறிவருகிறார்கள்.
இவ்வாறாக தங்களது முன்னைய பெரும்பாலான நிலைப்பாடுகளில் மாற்றங்களைச் செய்திருக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் இனப்பிரச்சினை தொடர்பில் மாத்திரம் எந்த மாற்றத்தையும் செய்ய முன்வரவில்லை. சிறுபான்மைச் சமூகங்களுக்கு பிரச்சினைகள் இருக்கின்றன. இனப்பிரச்சினை இன்னமும் தீர்க்கப்படவில்லை என்று திசாநாயக்க ‘இந்து ‘ நேர்காணலில் கூறினாரே தவிர அந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு எந்த யோசனையையும் முன்வைக்கவில்லை. அதிகாரப்பரவலாக்கம் குறித்து பேசுவதை அவர் தவிர்க்கிறார். வெறுமனே தங்களது தேசிய விடுதலை இயக்கத்தில் இணையுமாறு கூறுவதன் மூலம் அவரால் தமிழ் மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதில் ஒரு அங்குலமேனும் முன்னோக்கி நகரமுடியாது.
இலங்கையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கு இதுகாலவரையில் அரசாங்கங்கள் மேற்கொண்ட சகல முயற்சிகளையும் கடுமையாக எதிர்த்த எதிர்மறையான ஒரு வரலாற்றை ஜே.வி.பி. கொண்டிருக்கிறது. அந்த போக்கில் மாற்றத்தைச் செய்யும் எந்த அறிகுறியையும் அவர்களிடம் காண முடியவில்லை.
இவ்வருட முற்பகுதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 13 வது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு தனக்கு இருக்கும் விருப்பத்தை வெளிப்படுத்தியதை அடுத்து தென்னிலங்கையில் சிஙகள தேசியவாத சக்திகளிடம் இருந்து கிளம்பிய எதிர்ப்புக்கு மந்தியில் தேசிய மக்கள் சக்தி எவ்வாறு நடந்துகொண்டது என்பதை ஏற்கெனவே ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் இந்த பத்தியில் எழுதியிருந்தோம்.
முன்றரை தசாப்தங்களுக்கு மேலாக நாட்டின் அரசியலமைப்பில் இருந்துவரும் ஒரு திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் முயற்சிக்கு ஒத்துழைப்பை வழங்க தேசிய மக்கள் சக்தி முன்வந்திருந்தால் இனப்பிரச்சினை தொடர்பில் தங்களது நிலைப்பாட்டில் மாற்றத்தைச் செய்யத் தயாராயிருப்பதற்கான ஒரு நேர்மறையான சமிக்ஞையை தமிழ் மக்களுக்கு காட்டியிருக்க முடியும்.
இனப்பிரச்சினைத் தீர்வுக்கான வழிவகைகளை ஆராய்வதற்கு ஜனாதிபதி மூன்று தடவைகள் கூட்டிய பாராளுமன்ற கட்சிகளின் மகாநாட்டிலும் அவர்கள் பங்கேற்கவில்லை.
தமிழர்கள் தங்களது பிரச்சினைக்கான ஒரு தீர்வாக 13 வது திருத்தத்தை ஏற்றுக்கொள்வார்கள் என்றால் அது குறித்து தங்களுக்கு பிரச்சினை இல்லை என்று கடந்த வருடம் கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற கருத்தரங்கொன்றில் திசாநாயக்க கூறியது நன்றாக நினைவிருக்கிறது.
ஆனால், ஜனாதிபதியின் அறிவிப்பை அடுத்து அந்த திருத்தத்தக்கு எதிராக தென்னிலங்கையில் பரவலாக கிளம்பிய எதிர்ப்பைக் கண்ட அவர் திருத்தத்துக்கு ஆதரவாக தெரிவிக்கக்கூடிய எந்த கருத்தும் ‘அறகலய ‘ மக்கள் கிளர்ச்சிக்கு பிறகு தங்களுக்கு சிங்கள மக்கள் மத்தியில் வளர்ந்துவரும் ஆதரவைப் பாதித்துவிடும் என்று கருதியதியதனால் போலும் போக்கை மாற்றிக்கொண்டார்.
தங்களது ஆட்சியில் புதிய அரசியலமைப்பின் மூலம் இனப்பிரச்சினைக்கு சகல சமூகத்தவர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வைக் காண்பது குறித்து தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் பேசியதெல்லாம் கையில் இருக்கும் பிரச்சினையை கையாளுவதில் இருந்து நழுவும் ஒரு தந்திரோபாயமேயாகும்.
தென்னிலங்கை மக்களினால் நிராகரிக்கப்படும் எந்தவொரு தீர்வும் தமிழர்களுக்கு நிரந்தர தீர்வாக அமையாது என்றும் திசாநாயக்க கூறினார்.
உள்நாட்டுப்போரின் விளைவுகளினால் சிங்கள மக்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம். அரசியல் உரிமைகள் பற்றிய பிரச்சினை என்று வரும்போது சிங்கள மக்கள் பாதிக்கப்படவில்லை. அவ்வாறு பாதிக்கப்படாத மக்களின் இணக்கத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வைக் காண்பது என்பது இலங்கையின் கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் நோக்குகையில் ஒருபோதும் நடைமுறைச் சாத்தியமானது அல்ல.
இதுவரையான எந்த அரசியல் தீர்வு முயற்சியை சிங்கள மக்கள் ஆதரித்தார்கள்? அல்லது தாங்கள் முன்னெடுத்த தீர்வு முயற்சிகளுக்கு சிங்கள மக்களின் ஆதரவை வென்றெடுப்பதற்கு எந்த சிங்கள தலைவர் மானசீகமாக முயற்சித்தார்? எதிர்ப்புகளுக்கு முகங்கொடுத்து தாங்கள் எடுத்த நிலைப்பாட்டை நியாயப்படுத்துவதற்கு எந்த சிங்கள தலைவருக்கு துணிச்சல் வந்தது?
மக்களின் தவறான உணர்வுகளுக்கு பின்னால் இழுபட்டுச் செல்வதற்கு தலைவர்கள் தேவையில்லை. தவறான சிந்தனைகளைச் சுட்டிக்காட்டி அவற்றினால் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகளை மக்களுக்கு எடுத்துக்கூறி சரியான மார்க்கத்தில் அவர்களை வழிநடத்துவதற்கே தலைவர்கள் தேவை. அத்தகைய தலைமையை வழங்குவதற்கு இதுவரையில் ஆட்சிப்பொறுப்பில் இருந்த எந்த சிங்கள தலைவருக்கும் அரசியல் துணிவாற்றல் வரலவில்லை என்பதே வரலாறு.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் திசாநாயக்க அந்த தலைவர்களிடம் இருந்து வேறுபட்டவராக தன்னை மக்கள் முன்னிறுத்த வேண்டும்.
பொருளாதாரப் பிரச்சினை உட்பட நாடு எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தங்களது கட்சியின் முன்னைய நிலைப்பாடுகளில் இருந்து மாறுபட்ட முறையில் தீர்வுகளை முன்வைக்கும் திசாநாயக்கவும் அவரது தோழர்களும் இனப்பிரச்சினையைப் பொறுத்தவரையில் மாத்திரம் நெகிழ்ச்சியான ஒரு நிலைப்பாட்டை எடுப்பதற்கு தயங்குவது துரதிர்ஷ்டவசமானது.
இனப்பிரச்சினை தொடர்பில் இதுகாலவரையில் ஜே.வி.பி./ தேசிய மக்கள் சக்தி கடைப்பிடித்த கொள்கைகளும் அணுகுமுறைகளும் சிறுபான்மைச் சமூகங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளையும் மனக்குறைகளையும் குறைந்த பட்சமேனும் ஏற்றுக்கொள்வதற்கு மறுத்துநிற்கும் சிங்கள தேசியவாத சக்திகளையே வலுப்படுத்தி யிருக்கின்றது.
இந்த போக்கில் மாற்றத்தைச் செய்யாதவரை திசாநாயக்க சிந்தனையில் கொண்டிருக்கும் தேசிய விடுதலை இயக்கம் ஒருபோதும் முழுமை பெறாது. தேசிய மக்கள் சக்திக்கு தற்போது தென்னிலங்கையில் அதிகரித்திருப்பதாக கூறப்படும் ஆதரவை சிறுபான்மைச் சமூகங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகள் மற்றும் மனக்குறைகள் குறித்து சிங்கள மக்களுக்கு ஓரளவுக்கேனும் புரிதலை ஏற்படுத்துவதற்கு பயன்படுத்தாத பட்சத்தில் தேசிய விடுதலை இயக்கம் பற்றி பேசுவதில் பயனில்லை.
( ஈழநாடு )