செ. யோ : எல்லாக் கரைகளையும் தழுவியோடும் நதி

செ. யோ : எல்லாக் கரைகளையும் தழுவியோடும் நதி

 —- கருணாகரன் —-

“எல்லாக் கரைகளையும் தழுவியோடும் நதி” என்று எனது மிக நெருக்கமான நண்பர்கள் மிகச்சிலரை நான்  சொல்வதுண்டு. இவ்வாறு பேராசிரியர் செ. யோகராஜாவுக்கும் சொல்லலாம். எல்லோரோடும் இணைந்து செயற்படக் கூடிய இயல்பும் பன்மைத்துவச் சிந்தனையும் இருந்தாலும் சில சந்தர்ப்பங்களில் அந்த நண்பர்கள்  நிறுதிட்டாகச் சில முடிவுகளை எடுத்து விடுவார்கள். ஒரு எல்லைக்குமேல் அனுமதிக்க முடியாது என்று  சிலரோடு உறவை மட்டுறுத்திக் கொள்வதுமுண்டு. இதற்குக்காரணம் அவர்களின் அரசியல் நிலைப்பாடுகள், இலக்கியக் கொள்கை போன்றவை.

செ.யோகராஜா அப்படியல்ல. முடிந்த அளவுக்குத் தன்னை நெகிழ்த்திக்  கொடுப்பார். தனக்குப் பிடிக்காத விடயங்களென்றாலும் நேரடியாக முரண்பட்டுக் கொள்ளாமல் அதை மென்மையாகச் சொல்வார். அல்லது மெதுவாகக் கடந்து செல்வார். முரண்பட்டுத்தான் என்ன ஆகப்போகிறது என்பதே செ.யோவின் நிலைப்பாடு. ஆனால் தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியோடிருப்பார். அது வெளியே பார்ப்பவர்களுக்கு உடனடியாகத் தெரியாது. சற்று ஆழ்ந்து கவனித்தால்தான் யோகராஜாவைப் புரிந்து கொள்ள முடியும். இவ்வாறானவர்களைச் சமகாலத்தினால் உடனடியாகப் புரிந்து கொள்ளவோ மதிப்பிடவோ முடியாது. காலம் செல்லச் செல்லத்தான் இவர்களுடைய அடையாளம் துலங்கும.

செ. யோகராஜா நம்மோடு பழகும் முறை மட்டுமல்ல அவருடைய இலக்கிய விமர்சனங்கள், முன்னுரைகள், உரைகள் எல்லாமே இதற்குச் சான்று. இதைப்பற்றி அவரிடமே ஒருநாள் கேட்டேன். ”நீங்கள் ரசனை விமர்சனத்திலதான் கூடுதலாக அக்கறை கொண்டிருக்கிறியள். தகவல்களை அதிகமாகக் கொடுப்பதுதான் உங்களுடைய நோக்காக இருக்கு. கைலாசபதியின் மாணவராக, அவருடைய வழியிலிருந்து  வந்தவர் இப்படியிருப்பது ஆச்சரியம்…” என்று.

“அது கைலாசபதியின் வழி. இது யோகசாராஜாவின் வழி. கைலாபதிக்கும் சிவத்தம்பிக்கும் அவர்களுடைய அரசியல் நிலைப்பாடு  முக்கியம். எனக்கு அப்படியல்ல. என்னுடைய நோக்கம், அதிகமாக இலக்கிய வாசிப்பை ஊக்குவிப்பதுதான். அதைப்போல இலக்கிய எழுத்தைத் தூண்டுவது. என்னுடைய  விமர்சனங்களையும் இந்த நோக்கிலதான் எழுதிறன். முக்கியமாக இலக்கியத்தில் மாணவர்களை ஈடுபடுத்துவதுதான். அதற்கப்பால் இலக்கிய வரலாற்றையும் அவர்களுக்குச் சொல்ல வேணும். அதற்கேற்ற மாதிரியே  அதைச் செய்யிறன்… அரசியல் மாறிக் கொண்டேயிருக்கும். அதனோடு நாம் இழுபட முடியாது” என்றார் சிரித்துக் கொண்டு.

இந்தச் சிரிப்புத்தான் அவருடைய அடையாளமும் அவருடைய ஆயுதமும்.  அவருடைய சிநேகிதமும் அதுதான். கதையோடு கதையாக மெல்லிய பகடிகளை விடுவார். அந்தப் பகடிகள் அர்த்தமும் ஆழமுமானவை. ஆனால் யாரையும் புண்படுத்தாதவை.  நானறிந்த வரையில் யோகராஜா யாரோடும் முரண்பட்டு பகையை உருவாக்கியதில்லை. அவரோடும் யாரும் முரண்பட்டுப் பகையை உருவாக்க முடியாது. “இனப்பிரச்சினைத் தீர்க்கிற பேச்சுவார்த்தைக்கு யோகராஜா சேரை அனுப்பலாம். ஆரையும் பகைச்சுக் கொள்ளாமல் காரியத்தை முடிக்கிறதில வலு கெட்டிக்காரன்..” என்று அவருடைய மாணவர் ஒருவர் சொன்னதை அடிக்கடி நினைத்துக் கொள்வேன். அந்தளவுக்கு மனிதர்களையும் மனித உறவுகளையும் மதித்து நடந்தவர் யோகராஜா. 

“முரண்பாடுகள் என்பது விவாதப் புள்ளிகளை உருவாக்குவதன் மூலம் அறிவைக் கூட்டும் என்றாலும் அது எங்களுடைய சூழலில் பகையாகத்தான் போய் முடியும். ஆகவே நான் தேவையில்லாமல் அதற்குள் சிக்க மாட்டன்” என்றார் ஒருநாள். “ஏன் நீர் கூட பலதையும் அனுசரிச்சுப் போற ஆள்தானே!” என்று என்னைப் பார்த்துச் சொன்னார். இதனால்தானோ என்னவோ எனக்கும் அவருக்கும் பல இடங்களில் பொருத்தமும் நெருக்கமும் அதிகம்.

செ. யோகராஜா பிறந்ததும் பாடசாலைக் கல்வியைப் படித்ததும்  யாழ்ப்பாணம் – கரவெட்டி, நெல்லியடியில். யாழ்ப்பாணத்தில் வடமராட்சிக்கென்று தனியான பாரம்பரியமுண்டு. படிப்பு, தொழில் போன்றவற்றில் வடமராட்சியார் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். கடுமையான உழைப்பாளிகள். அப்படியே தங்களுடைய அடையாளத்தை முன்னிறுத்துவதிலும் கவனம் கூடியவர்கள். மண்ணின் அடையாளம் அல்லது மண்ணின் குணம் அது என்பார்கள். ஆனால், செ. யோ இதற்கு அப்பாலான இயல்புள்ளவர். ‘கருணை யோகன்’ என்ற அவருடைய புனைபெயரும் ஆரம்பகால எழுத்துகளும் கரவெட்டியை அடையாளப்படுத்தக் கூடியதாக இருந்தாலும் பின்னாளில் அவர் அதிலிருந்து விலகி விட்டார். பிறகவர், யாழ்ப்பாணத்து ஆள் – வடமராட்சியைச் சேர்ந்தவர் என்றே சொல்ல முடியாத அளவுக்கு மாறிவிட்டார்.

செ.யோவின் பிந்திய அடையாளம் என்பது மலையகம்,  மட்டக்களப்பு என அமைந்தது. பின்னாளில் அநேகமாக மட்டக்களப்பு என்றாகியே  விட்டது. இந்த அடையாள மாற்றம் என்பது செ. யோவுக்கு இழப்பைத் தரவில்லை. சேர்மானங்களையே தந்திருக்கிறது. மதிப்பைக் கூட்டியிருக்கிறது.

இந்தப் பண்பு அவரிடம் எப்படி உருவானது?

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு வெளியே கண்டி, கொழும்பு போன்ற பல்கலைக்கழகங்களில் படித்த பெரும்பாலானவர்களிடம் மாற்றுப் பண்பிருப்பதுண்டு. பல்வேறு சமூகத்தினரோடும் பழகுவதனால் இது உண்டாகியிருக்கலாம். அந்தச் சூழலும் அங்குள்ள கற்பித்தல்முறைகளும் அதற்கு வாய்ப்பளித்திருக்கக் கூடும். 1990 க்கு முன்பு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் பன்முகச் சிந்தனையுடையோரையும் பன்முகப் பண்பாட்டாளர்களையும் உருவாக்கியது. யோகராஜா கொழும்புப் பல்கலைக்கழகத்தின் உருவாக்கம். 1960 களின் இறுதிப்பகுதியில் இணைந்து 70 இன் முற்பகுதியில் அங்கே பட்டம் பெற்றவர். செ.யோ அங்கே படித்த காலத்தில் அவரோடு சித்திரலேகா, சுதந்திரராஜா, நித்தியானந்தன், சின்னத்தம்பி, பார்வதி போன்றோரும் படித்துள்ளனர். இவர்கள் அனைவரும் தனி அடையாளங்களாக, ஒவ்வொரு துறையிலும் பின்னர் துலங்கியிருக்கிறார்கள். இந்தச் சந்தர்ப்பத்தில்தான் இவர்களோடு கைலாசபதி, மௌனகுரு போன்றோருடனும் செ.யோகராஜாவுக்கு அறிமுகம் உண்டானது. தொடர்ந்து 1980 கள் வரையில் கொழும்பு, மாகோ போன்ற இடங்களில் வேலை செய்திருக்கிறார். அதற்குப் பிறகே யாழ்ப்பாணத்துக்கு வருகிறார். யாழ்ப்பாணத்துக்குச் செ. யோ வரும்போது அவருக்கு வயது முப்பதுக்கு மேல்.

ஆக ஒருவருடைய ஆளுமை உருவாக்கப் பருவமான பதின்பருவமும் அதற்குப் பிறகான இளைமைக்காலமும் எங்கே, எப்படி, எவர்களோடு, எவற்றோடு இணைந்திருக்கிறது என்பதைப் பொறுத்தே அவருடைய பிற்கால வாழ்க்கை அமைப்பிருக்கும். காந்தியினுடைய  இளமைக்கால (ஆபிரிக்க) அனுபவங்களே அவருடைய பிற்காலத்தைய அரசியல்வாழ்க்கையை வடிவமைத்தது. ஈழப்போராட்டம் பலருடைய வாழ்க்கையை ஒழுங்கமைத்திருக்கிறது அல்லது சிதைத்திருக்கிறது. செ.யோகராஜாவின் பதின்பருவமும் இளைமைப்பருவமும்  வடக்குக்கு வெளியேதான் இருந்திருக்கிறது. அந்த நாட்களில் அவர் பழகியவர்களும் பேராசிரியர்கள் க. கைலாசபதி, கா. சிவத்தம்பி, எம்.ஏ.நுஃமான், அ.சண்முகதாஸ், சி. மௌனகுரு போன்றவர்கள். இவையெல்லாம் சேர்ந்து செ.யோவின் கல்விப் புலமைப் பார்வையையும் கலை, இலக்கியம் மீதான ஈடுபாட்டுணர்வையும்  விரிவாக்கியுள்ளன. இதனால் செ. யோ, பெருந்திரள் போக்கிலிருந்து சற்று விலகலான ஒரு பண்போடு தன்னை வடிவமைத்துக் கொண்டார்.

செ.யோகராஜாவிடமுள்ள அமைதியான சுபாவம் அவருடைய இளமைக்காலத்திலேயே இருந்தது என்று சொல்கின்றார் அவருடைய பாடசாலைக் கால நண்பரான இராஜரத்தினம். 

ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி ஆகியவற்றைப் படித்த கரவெட்டி விக்னேஸ்வரா, நெல்லியடி மகா வித்தியாலயம் ஆகியவற்றில் பண்டிதர்கள் முருகேசு, வீரகத்தி ஆகியோரிடம் தமிழையும் இலக்கியத்தையும் முறைப்படி படித்திருக்கிறார். வாசிப்பிலும் மொழியிலும் ஈடுபாடு வருவதற்கு இவர்கள் இருவருடைய வழிகாட்டலும் தூண்டலும் முக்கியமாக இருந்துள்ளன. இதை அவர் அடிக்கடி சொல்வதுண்டு. க.பொ.த. உயர்தரம்  வரையிலும் தன்னால் சைக்கிளோட முடியவில்லை. தன்னுடைய மூத்த சகோதரர்தான் தன்னை நெல்லியடி மகா வித்தியாலயத்துக்கு ஏற்றிக் கொண்டுபோய் விடுவார் என்பதையும் நினைவு கூர்ந்திருக்கிறார். எனவே இளமையிலிருந்தே உரத்துப் பேசாத, சற்று விலகியிருக்கின்ற சுபாவம் செ.யோவிடம் இருந்திருக்கிறது.

இதனுடைய நீட்சியை அவர் பல்கலைக்கழகத்தில் படித்த காலத்தில் அவருக்கு அறிமுகமான பேராசிரியர் கைலாசபதியின் அவதானிப்பிலும் நாம் காணக்கூடியதாக உள்ளது. “புத்தகக் கடைகளில் மசிந்து நின்றபடி புத்தகங்களைத் தடவிக் கொண்டு ஒரு பையன் நிற்பான். அவனைப் பிடித்துக் கொண்டு வாருங்கள்” என்று இதை நினைவுகொள்கிறார் பேராசிரியர் சி.மௌனகுரு. அந்தளவுக்குத் தனியொரு போக்குடையவராக யோகராஜா இருந்துள்ளார். ஆனாலும் அந்த அமைதிக்குள்ளே ஒரு தீவிரமிருந்தது. அதையே தன்னடையாளமாக ஆக்கிக் கொண்டார் செ.யோ.

சத்தம்போடாமல் அமைதியாகத் தன்னுடைய வேலைகளைச் செய்வதே செ.யோவின் பாணி. அவருடைய சொந்த வாழ்க்கைத் தெரிவையும் அப்படித்தான் செய்தார். யாழ்ப்பாணத்தில் பிறந்து மலையகத்தில் திருமணம் செய்துகொண்டார். இது பொதுவான யாழ்ப்பாண – மலையக அடையாளத்துக்கும் உறவு நிலைக்கும் விலக்கான ஒன்று. பொதுவாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெருந்திரள் சமூகத்தினர் யாரும் இப்படிச் செய்வதில்லை. யாழ்ப்பாணத்தாரைக் குறித்த மலையகத்தினரின் அனுபவமும் பார்வையும் எப்போதும் வேறாக – எதிர்நிலைப்பட்டதாகவே இருப்பதுண்டு. அப்படித்தான் யாழ்ப்பாணத்தவர்களின் பார்வையும். இதில் உடைப்பை – விலக்கலைச் செய்தார் யோகராஜா. சத்தம்போடாமல் வழமைகளை மீறி அவர்  செயற்பட்டதற்கு இதுவும் ஒரு சான்று. இதுதான் அவருடைய சிறப்பு. எதையும் பிரகடனப்படுத்துவதில்லை. உரத்து முழக்கமிடுவதுமில்லை.

மென்மையானவர், அமைதியானவர், எவரோடும் எவற்றோடும் முரண்படாதவர் என்று வெளியே தெரிந்தாலும் உண்மையில் யோகராஜா அப்படியானவரல்ல. அவருள் உறுதிப்பாடும் தீவிரமும் உண்டு. அந்த உறுதிப்பாட்டின் விளைவே அவர் தன்னுடைய திருமணத்தைத் தேர்ந்து கொண்டதும் பிறகு தன்னுடைய இருப்பிடத்தை கிழக்கில் – மட்டக்களப்பில் அமைத்துக் கொண்டதுமாகும். மட்டக்களப்பிலும் அவர் ஒரு சிறிய வட்டத்துக்குள் என்றும் சிக்கிச் சிறைப்பட்டுக் கொள்ளவில்லை. அங்கே பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய சூழலில் நிலவிய அணிகள், குழுக்கள் எதற்குள்ளும் மாட்டுப்படாமல் தன்னியல்புடன் வேலை செய்திருக்கிறார். இப்படிச் செயற்படுவதற்கொரு கெட்டித்தனம் வேணும். இதைப்பற்றிய அனுபவத்தை மௌனகுரு கூறுகிறார், “யோகராஜா விவாங்களில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கிக் கொள்வார். ஆனால், அந்த விவாதங்களை உள்வாங்கி, தனியாகக் கலைப்பீடாதிபதியான எனக்குப் பொருத்தமான ஆலோசனைகளைச் சொல்வார்” என்று.

இதொரு அணுகுமுறை. ஆனால், மிகச் சிரமமானது. வாள்முனையில் நடப்பதற்குச் சமம். இதற்கு நேர்மை முக்கியம். நேர்மையைத் தவிர, வேறு எதனாலும் அணிகள், குழுக்களைச் சமாளிக்கவே முடியாது. தங்களுடைய பக்கத்துக்குச் சார்பாக இல்லை என்றால் எப்படியாவது எதிர்த்தரப்போடு இணைத்துக் குற்றப்படுத்துவார்கள். அல்லது வசைகளை வாரி இறைப்பார்கள். ஆனால், ஒருவர் தன்னை, தன்னுடைய இயல்பை, தனது உறுதிப்பாட்டை நிரூபித்து விட்டால் மெல்ல மெல்ல அவரைப் புரிந்து கொண்டு விலகிச் சென்று விடுவார்கள். அல்லது அவரை அப்படியே விட்டு விடுவார்கள். செ.யோவிடம் சார்பின்மையும் அதற்குரிய நேர்மையுமிருந்தது.

இதனால்தான் அவரை யாரும் சந்தேகிக்கவில்லை. பதிலாக நேசிக்கக் கூடியதாக இருந்தது. கிழக்கில் உள்ள இலக்கிய அணிகள் (மலர்ச்செல்வன் – மைக்கல்கொலின்), அரசியற் போட்டிகள், தமிழ் – முஸ்லிம் சமூகப் பிளவுகள் எதற்குள்ளும் சிக்கிக் கொள்ளாமல் எல்லோரும் மதிக்கக் கூடியவராக, இணைந்து வேலை செய்யக் கூடியவராக செ. யோ இருந்தார். மலர்ச்செல்வனோடும் அவர் நிகழ்ச்சிகளில் பங்கேற்பார். மைக்கல் கொலினின் செயற்பாடுகளிலும் இணைந்திருப்பார். ஜெய்சங்கரோடும் உறவுண்டு. மௌனகுருவோடும் நெருக்கமுண்டு. இதைப்போல முஸ்லிம் படைப்பாளிகளோடும் சேர்ந்து வேலை செய்திருக்கிறார். அவருக்கு இன, மத, பிரதேச வேறுபாடுகள் என ஏதுமில்லை. அவற்றின் மீது அவருக்கு நம்பிக்கையும் இல்லை. இது முக்கியமான ஒன்று.

இதுவே அனைத்துத் தரப்பினரும் தங்களுடன் நெருக்கமாக யோகராஜாவை உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. ஒவ்வொருவரும் தங்களில் ஒருவராக அவருடன் நெருங்கி உறவாடி வேலை செய்திருக்கிறார்கள். உறவைப் பேணியிருக்கிறார்கள். இனமுரணும் போட்டிகளும் அணிமுதன்மைப்பாடுகளும் மலிந்து கிடக்கும் தமிழ்ச்சூழலில் – இன்றைய வாழ்க்கையில் – இது சிறப்புக் கவனத்திற்குரியதாகும். இதற்கு அடிப்படையானது செ.யோவிடமிருந்த பன்மைத்துவப் பண்பாகும். அதில் அவர் மாறாத உறுதிப்பாட்டைக் கொண்டிருந்தார். தன்னுடைய புலமைத்துவச் சூழலிலும் அதைப் பேணினார். அதற்கு வெளியே உள்ள இலக்கிய – விமர்சனச் சூழலிலும் அதைக் கடைப்பிடித்தார்.

நிலைமைக்குத் தோதாகவோ சந்தர்ப்பத்துக்கும் ஆட்களுக்கும் ஏற்ற மாதிரியோ கதைத்துச் சமாளிக்காமல், அவரவருடைய உளவியலைப் புரிந்து கொண்டு, தன்னுடைய நிலைப்பாட்டையும் பொதுப் பயன்பாட்டையும் கவனத்திற் கொண்டு செயற்பட்டதனால் இதைச் சாத்தியப்படுத்த முடிந்தது. இவ்வாறு ஆழமான புரிதலோடு நிதானமாகச் செயற்படுவதன் மூலம்தான் வரலாற்றில் மறக்க முடியாத மனிதர்களாக மாற முடிகிறது. செ.யோ அப்படியான வரலாற்று மனிதராகவே உணரப்படுகிறார். சுவாமி விபுலாநந்தரை தமிழர்களும் முஸ்லிம்களும் மதித்துப் போற்றுவதைப்  போல செ.யோவையும் இருதரப்பினரும் மனதில் வைத்துள்ளனர். இதற்கப்பால் மலையகத்தினரும் செ. யோவைத் தங்களுடைய ஆள் என்று உணர்ந்திருக்கின்றனர். ஏன் யாழ்ப்பாணத்தவர்களுக்கும் யோகராஜா உரித்தாளராகவே இருந்திருக்கிறார்.

தொழில், இருப்பிடம், ஏனைய காரணங்கள் போன்றவற்றினால் யாழ்ப்பாணத்தை விட்டு – வடமராட்சியை விட்டு விலகியிருந்தாலும் அந்த உறவுகளை விட்டு விடவும் இல்லை. யாழ்ப்பாணத்தில் நடக்கின்ற இலக்கிய நிகழ்வுகள், கூட்டங்கள், கருத்தரங்குகள் போன்றவற்றிலும் அவருடைய பிரசன்னம் இருந்தது. அங்கே உள்ள எழுத்தாளர்கள், கவிஞர்கள், இதழாழர்கள் எல்லோரோடும் உறவைப் பேணினார். எல்லா இதழ்களுக்கும் தொடர்ந்து எழுதிக் கொண்டேயிருந்தார். அவருடைய இலக்கிய விமர்சனங்களைக் குறித்த போதாமைகளைப் பல தடவை சுட்டிக் காட்டியிருக்கிறேன். “தகவல்களை முன்வைப்பதில் உள்ள அக்கறைதான் அவற்றிற் கூடுதலாக  உள்ளது. அதோடு உங்களுடைய பார்வையை, நீங்கள் காணும் தரிசனத்தை முன்வைத்து விவாதியுங்கள்” என்று.

இதைத் தனக்கு ஏற்கனவே பேராசிரியர் கா. சிவத்தம்பியும் கூறியுள்ளார். “பல தகவல்களையும் சேகரித்து வைத்திருக்கிறீங்கள். அதை ஒழுங்குமுறைப்படுத்திக் கூறுவதற்கு ஒரு நிலைப்பாட்டை நீங்கள் எடுக்க வேணும். அதற்கொரு சமூக அரசியற் பார்வையும் சித்தாந்தப் பயிற்சியும் தேவை” என. “ஆனால். சமகாலத்தில் கவனப்படுத்த வேண்டிய விடயங்களையும் கவனப்படுத்த வேணும் என்று கருதுகின்றவர்களையும் பற்றிச் சொல்ல வேணும் என்று எனக்குத் தோன்றுவதைச் செய்கிறன். இதைச் செய்கிறதுக்கும் ஒரு ஆள் தேவைதானே!” என்றார்.

இலக்கியம், மொழி, பண்பாடு, நாட்டாரியல், பெண்ணியம், இதழியல் போன்றதுறைகளில் ஆர்வத்தோடு  தீவிரமாகச் செயற்பட்ட செ. யோ, கடந்த ஐம்பது ஆண்டுகளை அதற்கெனச் செலவிட்டிருக்கிறார். பல ஆளுமைகளை அவர்களுடைய தொடக்க நிலையிலேயே இனங்கண்டு வளர்த்தவர். கிழக்குப் பல்கலைக்கழகத்தை கட்டியெழுப்பியர்களில், அங்கே சில புதிய துறைகளின் உருவாக்கத்துக்குப் பாடுபட்டவர்களில் முக்கியமானவர். அதற்காக அவர் செலுத்திய உழைப்பும் பங்களிப்பும் பெரியது. கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் வாசிப்பு இயக்கத்தை வலுப்படுத்துவதற்காகப் பாடுபட்டிருக்கிறார். இலக்கிய விமர்சனத்தின மூலமாக இலக்கிய வரலாற்றுப் பதிவுகளைச் செய்திருக்கிறார்.

எழுபத்தைந்து ஆண்டுகால வாழ்க்கையில் யோகராஜா சாதித்தவை அதிகம். பல முன்னுதாரணங்களையுடையவை. கிழக்குப் பல்கலைக்கழக வளர்ச்சி, இலக்கிய விமர்சனம், இதழியற் பங்களிப்புகள், வாசிப்பு இயக்கம், இலக்கியச் செயற்பாடுகள், புலமைத்துவ விருத்திக்கான பங்களிப்பு எனப் பல்வகைப்பட்டவை. இவற்றைக் குறித்த ஒரு விரிவான ஆய்வும் மதிப்பீடும் அவசியம் செய்யப்பட வேண்டும்.