(அரசியல் – சமூக – வரலாற்று நாவல்)
— செங்கதிரோன் —
நடந்து கதிர்காம யாத்திரைக்குப் புறப்பட்ட கோகுலனின் தாயாரின் குழுவில் கோகுலனின் தாயார், கோகுலனின் இளையக்கா, இளையக்காவின் ஆறுமாதப் பெண் கைக்குழந்தை சுனீத்தா, கோகுலன் ஆகியோர் அடங்கியிருந்தனர். வேறு சில உறவினர்களும் இக்குழுவில் இணைந்து கொண்டிருந்தனர். கோகுலனின் இளையக்காவின் குழந்தைக்குத் தாம் கதிர்காமத்துக்கு நடந்துபோய் அங்கு வைத்தே தலைமயிர் வழிப்பதாக நேர்த்திக்கடனும் வைத்திருந்தார்கள்.
நடையாத்திரையின் போது சாமான்களைச் சுமந்து செல்வது சிரமம் என்பதால் ‘கைதூக்குகளை’க் குறைக்கும் வகையில் சாமான்களை ஏற்றிச்செல்வதற்காகக் கூடாரமடித்த மாட்டு வண்டிலொன்றைக் கூலிக்கு அமர்த்தி இருந்தார்கள். பொத்துவிலிலிருந்து ஆட்கள் பெட்டி பூட்டப்பட்ட உழவு இயந்திரத்தில் உகந்தை வரைக்கும் பயணித்து அங்கிருந்து நடக்கத்தொடங்கிக் கதிர்காமத்தை அடைவதுதான் ஏற்பாடு. அதற்கமைய உகந்தை வரைக்கும் உழவு இயந்திரமொன்றையும் வாடகைக்குப் பிடித்திருந்தார்கள்.
குறிப்பிட்ட நாளில் கதிர்காமயாத்திரை ஆரம்பமாகிற்று.
காலையில் பொத்துவில் ஆலையடிப்பிள்ளையார் கோயிலுக்கு எல்லோரும் கால்நடையாகச் சென்று கற்பூரம் கொளுத்தித் தேங்காய் உடைத்துக் கும்பிட்டு ‘அரோகரா’ ஒலியெழுப்பிப் பயபக்தியோடு பயணம் தொடங்கிற்று. உழவு இயந்திரப் பெட்டியினுள்ளே விரிக்கப்பட்டிருந்த பாயில் எல்லோரும் ஏறி அமர்ந்தனர். இடவசதிக்கேற்றவாறு தூரத்திலிருந்து வந்த வேறு சில யாத்திரிகர்களும் உகந்தைவரை வருகிறோம் எனக்கூறிக் கோயிலடியில் வைத்து இணைந்து கொண்டனர்.
பயணத்தின்போது உடனடித் தேவையான சில அவசியமான பொருட்களையும் குழந்தை சுனீத்தாவுக்குத் தேவையான சாமான்களையும் கையில் எடுத்துக் கொள்ள மிகுதிச் சாமான்கள் அடங்கிய மூட்டை முடிச்சுக்கள் பெட்டிபடுக்கைகள் எல்லாம் கூடார மாட்டுவண்டிலில் ஏற்கெனவே ஏற்றிக்கட்டியாகி விட்டது. முன்னால் உழவு இயந்திரம் செல்ல கூடாரமாட்டுவண்டில் அதனைப் பின்தொடர மீண்டும் ‘அரோகரா’ ஒலியுடன் பொத்துவில் ஆலையடிப்பிள்ளையார் கோயிலடியிலிருந்து கதிர்காம யாத்திரை அணி அசையத் தொடங்கியது.
யாத்திரை அணி பொத்துவில் பஸ்நிலையத்தை வந்தடைந்தபோது அருகிலிருந்த தொழிலதிபர் கனகரட்ணத்தின் வாசஸ்தலத்தின் முற்றத்திலும் வளவுக்குள்ளும் பஸ்நிலையத்திலும் கதிர்காமயாத்திரை செல்லும் பக்தர்கள் ஏராளமாகக் கூடியிருந்தார்கள்.
வருடாவருடம் யாத்திரிகள் வடமாகாணம் கீரிமலையிலிருந்து புறப்பட்டுக் கால்நடையாக வவுனியா – முல்லைத்தீவு – கொக்கிளாய் – தென்னைமரவாடி – திருகோணமலை – மூதூர் – கிளிவெட்டி – வெருகல் – மட்டக்களப்பு வழியாகப் பொத்துவிலையடைந்து பின் பொத்துவில் – பாணமை – உகந்தை வந்து உகந்தையிலிருந்து ‘யால’ சரணாலயத்தினுள் நுழைந்து அதனூடான காட்டு வழியாகக் கட்டகாமத்தையடைந்து ஈற்றில் கதிர்காமத்தைச் சென்றடைவர். இந்த யாத்திரைச் சங்கிலியில் இடையிலுள்ள ஊர்களிலிருந்தும் பேராற்றில் சிறுசிறு ஓடைகள் வந்து விழுந்து கலந்து பிரவாகிப்பதைப் போல பக்தர்கள் கூட்டம் இணைந்து கொள்ளும்.
வழியிலே கோயில்களிலே ‘இராத்தங்கல்’ போடுவார்கள். சிலர் பகல்வேளைகளிலே இடையிலுள்ள ஊர்களுக்குள் சென்று காணிக்கைகள் பெற்றும் ‘பிடிஅரிசி’ப் பிச்சையெடுத்தும் அப்படிக் காணிக்கையாகப் பெற்ற காசை வழிச்செலவுக்கு எடுத்துக்கொண்டும் ‘பிச்சை’யெடுத்த அரிசியையே தங்கும் இடங்களில் வைத்துச் சமைத்துண்டும் பயணத்தைத் தொடர்வர். ‘பிச்சை’ எடுக்கின்ற நடைமுறையை ஒரு ‘நேர்த்திக்கடன்’ஆக நிறைவேற்றும் பக்தர்களும் உண்டு.
வருடாவருடம் பொத்துவிலைக்கடந்து செல்லும் கதிர்காம யாத்திரிகள் அனைவருக்கும் தங்குமிடமும் கொடுத்து அன்னதானம் வழங்குவதும் தொழிலதிபர் கனகரட்ணம் குடும்பத்தினரின் வழி வழியாக வந்த செயற்பாடுகளிலொன்று. கதிர்காம யாத்திரிகர்களுக்கு அன்னமிடுவதற்காகவே ஒரு குறிப்பிட்ட தொகை ஏக்கரில் வேளாண்மை செய்கை பண்ணப்படுவதாகவும் ஊரில் பேசிக்கொள்வார்கள்.
உழவு இயந்திரம் பொத்துவில் பஸ்நிலையத்தைத் தாண்டி அறுகம்பையையடைந்து அறுகம்பைக் களப்பு – உப்பேரி வங்காளவிரிகுடாக்கடலில் கலக்கும் கழிமுகத்தில் அமைந்த அறுகம்பைப் பாலத்தினூடாக உல்லை சென்று நாவலாற்றுப் பாலத்தையும் கடந்து பாணமைச் சந்தியை அடைந்தது.
பாணமைச் சந்தியில் வைத்துத்தான் பாணமை ஊருக்குள் செல்லும் வீதி நேரே செல்ல வலது புறத்தில் உகந்தைக்குச் செல்லும் ‘கிறவல்’ வீதி பிரிகிறது. பாணமை பொத்துவிலிருந்து பத்துக்கட்டை (மைல்) தூரமிருக்கும். பாணமையிலிருந்து உகந்தைக்குப் பதின்மூன்று கட்டைத்தூரம், கிட்டத்தட்டப் பொத்துவிலுக்கும் உகந்தைக்கும் நடுவில் அமைந்தது பாணமை.
பாணமைச் சந்தியை அடைந்ததும் ‘பாணமை’ யின் வரலாறு பற்றி வித்துவான்
எப்.எக்ஸ்.சி.நடராசா 1962 இல் பதிப்பித்த மட்டக்களப்பின் பண்டைய வரலாறு கூறும் ‘மட்டக்களப்பு மான்மியம்’ எனும் நூலில் தான் இரண்டு மூன்று வருடங்களுக்கு முன் வாசித்த விடயங்கள் கோகுலனின் ஞாபகத்திற்கு வந்தன.
பண்டைய மட்டக்களப்பைப் பிரசன்னசித்து என்பவன் ஆண்ட காலத்தில் கலிங்க குமாரனாகிய புவனேயகயபாகு சோழ அரசனின் மகளாகிய தனது மனைவி தம்பதிநல்லாளுக்குக் குழந்தைப் பேறின்மையால் தலயாத்திரை சென்று புண்ணிய தலங்களைத் தனது மனைவி சகிதம் தரிசித்துக் கொண்டு வரும்போது அக்காலத்தில் ‘நாகர்முனை’ என அழைக்கப்பெற்ற திருக்கோவிலுக்கும் வந்து முருகனைத் தரிசித்தான்.
இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மட்டக்களப்பு மன்னனான பிரசன்னசித்து, நாகர்முனை முருகன் ஆலயத்தை நல்லமுறையில் நிர்மாணித்துத் தருமாறு புவனேய கயபாகுவை வேண்டினான். பிரசன்னசித்துவின் வேண்டுகோளை நிறைவேற்றிக்கொடுத்து பண்டைய மட்டக்களப்பில் எழுந்த முதலாவது பெருங்கோயில் அது என்பதால் அதற்குத் ‘திருக்கோவில்’ எனப்பெயர் சூட்டினான் புவனேயகயபாகு.
நாகர்முனை முருகன் கோயிலைச் செப்பனிட்டுக் கொடுத்த புவனேயகயபாகுவுக்குக் கைம்மாறு செய்ய விரும்பிய பிரசன்னசித்து தான் அப்போது ஆட்சிபுரிந்த மட்டக்களப்பு நாட்டின் தென்பகுதியில், தெற்கே மாணிக்க கங்கையையும் வடக்கே மக்கனல் வெட்டுவாய்க்காலையும் மேற்கே கடவத்தையையும், கிழக்கே கடலையும் எல்லைகளாகக் கொண்டு தனது ஆள்புல எல்லைக்குள் அடங்கிய இந் நிலப்பரப்பைத் தனியானதொரு அரசாக்கி அந்நிலப்பரப்பின் ஓரிடத்தில் மாளிகையும் கோட்டையும் அமைத்து அங்கிருந்து புவனேக கயபாகுவை ஆட்சிபுரிய வைத்தான். புதிதாக மாளிகையும் கோட்டையும் அமைந்த இடத்திற்குப் ‘புன்னரசி’ எனப்பெயரிடப்பட்டது.
இந்த நிகழ்வு நடந்தது கலிபிறந்து 3130 ஆண்டில் அதாவது கி.பி 28 இல் ஆகும்.
‘புன்னரசி’ என்ற பெயர் பின்னர் ‘உன்னரசுகிரி’ என்றாயிற்று.
புவனேயபாகுவின் மகனான மேகவருணன் தந்தைக்குப் பின் கலிபிறந்து 3150 இல் (கி.பி 48 இல்) மனுநேயகயபாகு என்னும் பெயரோடு ‘உன்னரசுகிரி’ எனும் இராச்சியத்தின் பட்டத்திற்கு வந்தான்.
மனுநேயகயபாகுவின் காலத்தில் மட்டக்களப்பை ஆண்ட மன்னனாக பிரசின்னசித்துவின் மகனான தாசகன் என்பவன் விளங்கினான். மட்டக்களப்பு மன்னனுடைய ஆளுகைக்குட்பட்ட பகுதியாகவே திருக்கோவில் கருதப்பட்டதால் தாசகனுடைய அனுமதியையும் ஒத்துழைப்பையும் பெற்று மனுநேயகயபாகுவும் தனது தந்தையான புவனேயகயபாகுவின் வழிநின்று திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி கோயிலை மேலும் செப்பனிட்டான்.
உன்னரசுகிரியை மனுநேயகயபாகு மன்னன் ஆண்டுவந்த காலத்தில் அவனுடைய மனைவிக்குச் சந்தானமில்லாமையால் கவலையுற்றிருந்தபோது ஒருநாள் ஒரு பேழை கடலில் மிதந்து வந்து கரையடைந்ததைக் கண்ட வேவுகாரன் ஒருவன் அச்செய்தியை மன்னனுக்கு அறிவிக்க, மன்னன் தன் அரச பிரதானிகளுடன் கடற்கரைக்குச் சென்று பேழையைத் திறந்ததாகவும் அப்பேழைக்குள் ஒரு பெண்குழந்தையிருந்து ‘கலகல’வெனச் சிரித்ததாகவும், மன்னன் மனமகிழ்ந்து அக்குழந்தையைப் பல்லக்கில் வைத்து அரசமாளிகைக்கு எடுத்துச் சென்று மனைவியிடம் கொடுத்து ‘ஆடக சவுந்தரி’ எனப் பெயர்சூட்டி வளர்த்ததாகவும், பேழை கடற்கரையை அடைந்த இடத்தை நகரமாக்கி அதற்குப் ‘பாலர்நகை’ எனப் பெயர் சூட்டியதாகவும் பாலர்நகையும் பண்டைய மட்டக்களப்பு அரசின் எல்லைக்குள்ளேயே அமைந்திருந்தது எனவும் பாலர்நகையே பாணகையாகிப் பின் பாணமையாக மருவியது போலும் என்றும் ‘மட்டக்களப்பு மான்மியம்’; நூலில் கூறப்பட்டுள்ளதையும் கோகுலன் நினைவுகூர்ந்தான்.
‘உன்னரசுகிரி’ நாடென்பது பாணமையிலிருந்து தெற்கே மாணிக்ககங்கை வரையும் மேற்கே லகுகல பிரதேசத்தையும் உள்ளடக்கியிருந்திருக்கக் கூடும்.
‘உன்னரசுகிரி’ நகரம் திருக்கோவிலுக்குத் தெற்கேயுள்ள உகந்தை மலைக்கும் ‘பாலர் நகைநாடு’ என அழைக்கப்பட்ட பண்டைய துறைமுக நகரமான பாணமைக்குமிடையில் தற்காலத்தில் அமைந்திருக்கும் ‘சன்னாசிமலை’ எனப்படும் மலைப் பகுதியாக இருக்கலாம்.
இந்த வரலாற்றுத் தகவல்களையெல்லாம் மீட்டுப்பார்த்த கோகுலன் இதுபற்றிய மேலதிக தகவல்களை பாணமை பெரியதம்பிப்போடியாரின் மகன் கதிரவேலிடம் பின்னர் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டுமென்று தீர்மானித்தான்.
பாணமைச் சந்தியின் இடதுபுறமாக இருந்தது பெரியதம்பிப்போடியாரின் பெரிய கல்வீடு. பெரியதம்பிப் போடியாரும் கோகுலனின் தந்தையும் நல்ல கூட்டாளிமார். இருவரையும் ‘தண்ணி’ போடும் பழக்கமும் இன்னும் நெருக்கமாக்கியிருந்தது. பெரியதம்பிப்போடியார் பொத்துவில் வரும்போதெல்லாம் கோகுலனின் வீட்டுக்கு வந்து தந்தையுடன் ‘முசுப்பாத்தி’ போட்டுக் கதைத்திருந்து விருந்துண்டு செல்வதும் வழக்கம். பெரியதம்பிப்போடியாரின் மகள் வள்ளியம்மாவும், மகன் – வள்ளியம்மாவின் தம்பி கதிரவேலும்கூட வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் விடுதியில் தங்கியிருந்து படித்துக் கொண்டிருந்தார்கள். வள்ளியம்மை கோகுலனுக்கு இருவருடங்கள் முந்திய ‘சீனியர்’ ஆகவும் கதிரவேல் கோகுலனுக்கு இருவருடங்கள் பிந்திய ‘யூனியர்’ ஆகவும் இருந்தனர்.
பாணமையிலிருந்து வந்து மேலும் இரு பெண்பிள்ளைகள் பெண்கள் விடுதியில் தங்கி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் படித்துக் கொண்டிருந்தார்கள். பாணமை ஊரின் மூன்று முக்கிய பிரமுகர்களின் பெண்பிள்ளைகள் வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் படித்துக் கொண்டிருந்தார்கள். ஒருவர் பெரியதம்பிப்போடியாரின் மகள் வள்ளியம்மா. இன்னொருவர் தம்பிராசா வைத்தியரின் மகள் கணேசம்மா. மற்றவர் சின்னையா வட்டவிதானையாரின் மகள் கனகம்மா. மூவருமே கோகுலனுக்குச் ‘சீனியர்’கள் கோகுலன் அவர்கள் மூவரையும் அக்கா என்று அழைப்பதுண்டு. வள்ளியம்மாவின் தம்பி கதிரவேல் ஆண்கள் விடுதியில் ஒரே ‘டோமற்றி’யில்தான் கோகுலனுடன் தங்கியிருந்து படித்துக் கொண்டிருந்தான்.
உழவு இயந்திரம் பாணமைச் சந்தியை அண்மித்தபோது வந்தாறுமூலை மத்திய மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கும் இவர்கள் எல்லோரையும் நினைவில் நிறுத்திக் கொண்டான் கோகுலன்.
பாணமைச் சந்தியிலிருந்த பெரியதம்பிப்போடியாரின் வீட்டடியில் வீதியோரத்தில் உழவு இயந்திரமும் பின்தொடர்ந்துவந்த கூடாரமாட்டு வண்டிலும் நிறுத்தப்பட்டன.
உழவு இயந்திரப் பெட்டியிலிருந்து எல்லோரும் கீழே இறங்கினார்கள். கனகத்தைக் கண்டதும் பெரியதம்பிப் போடியாரின் மனைவி ‘கேற்’றடிக்கு ஓடிவந்து முகம்மலர்ந்து ‘வாங்க மச்சாள்!’ என்று கையைப் பிடித்து வரவேற்று எல்லோரையும் உள்ளே அழைத்துச் சென்றார். கோகுலனைக் கண்டதும் பெரியதம்பிப்போடியாரின் மகன் கதிரவேல் ஓடிவந்து அளவிலாத ஆனந்தத்தில் கையைப்பிடித்து ‘வாங்க ‘பிறதர்’;’என்று கூறி வீட்டினுள்ளே அழைத்துச் சென்றான். வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலய விடுதியில் ‘சீனியர்’ மாணவர்களை ‘யூனியர்’ மாணவர்கள் மரியாதையின் நிமித்தம் ‘பிறதர்’ என்றுதான் அழைப்பார்கள். கோகுலன் அச்சந்தர்ப்பத்தில் கதிரவேலைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. கோகுலன் கதிர்காமம் நடந்து போவதற்கென்று வந்தாறுமூலையிலிருந்து பொத்துவிலுக்குப் புறப்படும் போது கதிரவேல் அங்கு விடுதியிலேயே நின்றிருந்தான்.
கோகுலன் கதிரவேலிடம் ‘என்ன கதிரவேல!; நீ எப்படி இங்க?’ என்றான் ஆச்சரியத் தொனியுடன்.
‘இண்டைக்குக் காலம்பறதான் புறப்பட்டு இப்ப கொஞ்சநேரத்துக்கு முன்னதான் பாணமைக்கு வந்து சேந்த நான் ‘பிறதர்’. அக்காவும் என்னோட வந்தவ. அம்மாவும் நானும் அக்காவும் கதிர்காமம் நடந்து போறெண்டு இரிக்கம்’ என்றான் கதிரவேல்.
அச்செய்தியைக் கேட்டதும் கோகுலனுக்கு நல்ல மகிழ்ச்சி. தனக்குப் பேச்சுத்துணைக்கு ஆள்கிடைத்தது மட்டுமல்ல தனது தாயாருக்கும் நல்ல தோழமையுள்ள ஆட்கள் பயணத்துக்குக் கிடைத்திருக்கிறார்கள் என்று எண்ணியதும்தான் அம்மகிழ்ச்சிக்குக் காரணம்.
உழவு இயந்திரப் பெட்டியில் வந்திறங்கிய யாத்திரிகர்கள் மற்றும் கூடாரமாட்டு வண்டிலோட்டி அவனுடைய உதவியாளர் அனைவருக்கும் பெரியதம்பிப்போடியார் வீட்டில்தான் அன்று மதியச்சாப்பாடு.
மதியச்சாப்பாடு முடிந்து பெரியதம்பிப் போடியாரின் மனைவி – கோகுலனின் தாயார் – கோகுலனின் இளையக்கா – கதிரவேல் – கதிரவேலின் அக்கா மற்றும் கோகுலன் எல்லோரும் வீட்டு முற்றத்திலிருந்த மாமரத்தின் கீழே கூடியிருந்து கதைத்துக் கொண்டிருந்தார்கள்.
கோகுலனின் தாயார் கனகம் பெரியதம்பிப்போடியாரின் மனைவியிடம் ‘மெய்தானா மச்சாள். நீங்களும் கதிர்காமம் நடந்துவரப்போறயலாமே. கதிரவேல் சொன்னதாமெண்டு தம்பி சொன்னான்’ என்று கேட்க, ‘ஓம் மச்சாள்!… அதுதான் யோசிச்சனான்; உங்களோடே சேர்ந்து வந்தா நல்லமெண்டு. உங்களயும் முருகன் கொண்டு விட்டமாதிரி. காலம வகுகலைக்குப் போய்த்துக் கெதியா வந்திடுவனென்ட உங்கட அண்ணயும் காணல்ல – பெரியதம்பிப் போடியாரைக் கனகம் அண்ணன் என்று தான் அழைப்பது – வந்திட்டாரெண்டா உங்களோடே நாங்களும் வந்திறலாம்’ என்று பெரியதம்பிப்போடியாரின் மனைவி பதில் சொல்லவும், கேட்டிருந்த கதிரவேல்,
‘அம்மா! அப்பா வரப் பிந்தித்தாரெண்டா நான் கோகுலன் ‘பிறதர்’ ஆக்களோட உகந்தைக்கு இப்ப போறன். நீங்களும் அக்காவும் நாளைக்கு வெள்ளென்ன வெளிக்கிட்டு உகந்தைக்கு வந்து சேருங்க. புறகு அங்கால நாம எல்லாருமாச் சேந்து போகலாம்’ என்றான்.
கதிரவேலின் யோசனையைக் கேட்ட கோகுலனுக்குப் பழம் நழுவிப் பாலில் விழுந்து அது நழுவி வாயில் விழுந்தது போலிருந்தது. ‘அப்படியெண்டா நீங்க கொண்டுபோற சாமான்களயெல்லாம் எங்கட கூடார வண்டிலில ஏத்துங்க. நாங்க சாமான்களக் கொண்டுபோறம். இரவு உகந்தயில தங்கியிருப்பம். நாளைக்கு உங்கட அம்மாவும் அக்காவும் வந்தொன்ன எல்லாருமாச் சேந்து பயணத்தத் தொடரலாம்.’ என்று கதிரவேலிடம் கூறிய கோகுலன் தனது தாயாரிடம் திரும்பி ‘என்னம்மா சொல்லிறீங்க?’ என்றான்.
‘அப்படிச் செய்யிறான் நல்லம்’ என்று ஆமோதித்தாள் கனகம்.
‘ஓம்! மச்சாள!; எனக்கும் அதுதான் விருப்பம். உகந்தயிலிருந்தாவது நாமெல்லாம் ஒண்டாச் சேந்திரனும்; எதுக்கும் கதிரவேல இப்பதே உங்களோட கூட்டிப்போங்க. தம்பி கோகுலனும் ஆசப்படுறான். கோகுலன் சொன்னமாதிரி எங்கட சாமான்சக்கட்டுகளயும் வண்டிலில ஏத்தியுடுறம். அதையும் கொண்டுபோங்க’ என்று பெரியதம்பிப்போடியாரின் மனைவி எல்லோருக்கும் சாதகமாகச் சொல்ல கதிரவேல் எழும்பி வண்டியில் ஏற்றவேண்டிய சாமான்களையெல்லாம் வீட்டுக்குள்ளிருந்து எடுத்து வெளியில் வைக்கத் தொடங்கினான் கோகுலனும் உதவினான்.
கதிரவேலும் கோகுலனும் சேர்ந்து சாமான்களையெல்லாம் தூக்கிக் கொண்டுபோய் வண்டிலோட்டியிடம் கொடுக்க அவன் அவற்றை வாங்கிப் பக்குவமாக வண்டிலின் உள்ளே எடுத்து வைத்தான்.
இது நடந்து கொண்டிருக்கும்போதே லகுகலைக்குப் போயிருந்த பெரியதம்பிபோடியார் ‘கார்’ ஒன்றில் வந்து இறங்கினார். பொத்துவிலிருந்து வாடகைக்கு ‘கார்’ பிடித்துக் கொண்டு வந்திருக்கவேண்டும். வந்த கார் கோகுலனுக்குத் தெரிந்ததுதான். பொத்துவில் செல்லத்துரையின் கார்.
தனது தந்தை காரில் வந்து இறங்குவதைக் கண்ட கதிரவேல் ‘இப்ப பிரச்சன இல்ல ‘பிறதர்.’; அப்பா வந்திட்டார்.; எல்லாரும் இஞ்சருந்தே ஒண்டாப் போகலாம்’ என்றான்.
கோகுலனின் தாயாருக்கும் பெரியதம்பிப்போடியாரைச் சந்தித்துக் கொண்டதில் மகிழ்ச்சியே. இருவரும் ஒருத்தருக்கு ஒருத்தர் முகமன்கூறிச் சம்பாஷித்துக் கொண்டனர். பெரியதம்பிப் போடியார் கோகுலனைக் கிட்டக்கூப்பிட்டு, ‘மருமகன் இத வச்சுக்கொள்ளுங்க’ என்று அவனது கைக்குள்ளே காசுத்தாள்களைத் திணிக்க முனைந்தார்; கோகுலன் ‘வேணாம் மாமா!’ என்று வாங்க மறுத்தான். அவர் விட்ட பாடில்லை. அவருக்குச் சாடையான வெறி. வழக்கமாக அவர் அப்படித்தான். கோகுலனை எங்கு கண்டாலும் ‘மருமகன்’ என்று கிட்டக்கூப்பிட்டுக் காசு தருவார். கோகுலன் பொதுவாகவே வாங்க மறுத்துவிடுவான். ஆனால், அவர் விடமாட்டார். சிலவேளை அவரது அன்புத்தொல்லை பொறுக்க முடியாமல் வாங்கியும் விடுவான். அன்றும் அப்படித்தான் நடந்தது.
கோகுலனும் பெரியதம்பிப்போடியாரும் ஆளுக்குஆள் அமளிப்படுவதை அவதானித்த கனகம் ‘மனே!.. மாமா கதிர்காமம் போறண்டு சொன்னன்ன ஆசையோட செலவுக்குத் தாரார். பரவால்ல வாங்கு’ என்று கோகுலனிடம் கூற அன்புத்தொல்லை அதோடு தீர்ந்தது.
அவருடைய மனைவியார் வந்து ‘வாங்க சாப்பிட’ என்றழைக்க ‘வாறன்புள்ள’ என்று கனகத்திடமும் ‘வாறன் மருமகன்’ என்று கோகுலனிடமும் சொல்லிவிட்டுப் பின் திரும்பிக் கோகுலனின் இளையக்காவிடம் ‘கவனமாப் புள்ளயக் கொண்டு கதிர்காமம் போய்த்து வாங்க மகள்’ என்று சொல்லிக்கொண்டே குழந்தையின் கையைப்பிடித்து ஒரிருதாள்காசுகளைத் திணித்துவிட்டு வீட்டினுள்ளே சென்றார்.
கிராமத்து உறவு வஞ்சகமில்லாதது, உன்னதமானது, பலனை எதிர்பாராதது, அன்பு நிறைந்தது என்று கோகுலன் எண்ணிக்கொண்டான். அதற்கு உதாரணமாகப் பெரியதம்பிப்போடியார் தெரிந்தார். அவரது மனைவி பிள்ளைகளும் அவ்வாறுதான் இருந்தார்கள். பெரியதம்பிப்போடியாரின் மனைவி கணவனுக்குச் சாப்பாட்டைக் கொடுத்துச் சாப்பிட்டு முடிந்தவுடன் அவர் பகல் தூக்கத்திற்குச் செல்லக் கனகத்திடம் வந்து ‘சரி! மச்சாள் இனி வெளிக்கிடுவம்’ என்று சொல்ல எல்லோரும் பயணத்திற்கு ஆயத்தமானார்கள். ‘அண்ணன் நல்லாப் போட்டுத்துத்தான் வந்திரிக்கார் போல’ என்று பெரியதம்பிப்போடியாரின் மனைவியின் காதைக் கடித்தாள் கனகம். கூடாரவண்டில் யாத்திரைக் குழுவிலிருந்த அத்தனைபேரினதும் மூட்டை முடிச்சுகள், பெட்டிபடுக்கைகள், சமையலுக்குத் தேவையான காய்கறிகள், தேங்காய் மற்றும் மளிகைச்சாமான்கள், பாத்திரங்கள் என்று எல்லாவற்றையும் ஏராளமாகவும் தாராளமனதுடனும் உள்வாங்கிக் கொண்டது.
சாமான்கள் நிறைய வழியவழிய ஏற்றிக் கட்டப்பட்டு நிறைமாதக் கர்ப்பிணிபோல் நின்றிருந்த கூடார வண்டிலைப் பார்த்ததும் கோகுலனுக்கு இளவயது நினைவலைகள் குளத்தில் கல் எறிந்தால் எழும் நீர்வளையங்கள் போல் எழுந்தன.
(தொடரும் …… அங்கம் 12)