— அழகு குணசீலன் —
2020 நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பாக, உரிமைக்கான போர்வாள்களாக மக்களிடம் வாக்கு கேட்ட தமிழர் அரசியல், இருந்த உரிமையையும் இழந்து, அபிவிருத்தியும் அற்று இரண்டும் கெட்டான் நிலையில் கப்டன் அற்ற கப்பலாய் கடலில் தத்தளிக்கிறது.
ரெலோ, புளட் கூட்டாளிகள் வெளியேறியும், சம்பந்தர் பதவி விலக வேண்டும் என்றும், இல்லை விலகக்கூடாது என்றும் நகர்வுகள் இடம்பெறுகின்ற நிலையில் தமிழரசுக்கட்சிக்கு தலைமை ஒன்றை தேடும் படலம் ஆரம்பித்துள்ளது. ஜனநாயக முறையில் தேர்வு செய்வதை தடுக்கும் வகையில் எதிர் வேட்பாளர் இன்றி – போட்டியின்றி ஒருவரைத்தேடும் சதி ஆரம்பமாகி உள்ளது. கட்சி உறுப்பினர்கள் பொருத்தமான தலைமையை தேர்வு செய்வதற்கான பன்மைத்துவ வேட்பாளர் வாய்ப்பை மறுத்து, பெரும்பான்மை விருப்பின் அடிப்படையில் தலைமையை தேர்வு செய்யாது, ஒரு போட்டி தவிர்ப்பை கட்டாயப்படுத்தும் இந்த ஜனநாயக மறுப்பு அரசியலுக்கு பெயர் தமிழரசின் வரலாற்று பாரம்பரியமாம் .
இந்த பலவீனமான அரசியல் சூழலில் தமிழரசுக்கட்சி மக்கள் மத்தியில் இருந்து தூரவிலகி நிற்கிறது. அடுத்த தேர்தல் எப்போதும் அறிவிக்கப்படலாம் என்ற நிலையாகிவிட்டது. பாரம்பரியத்தை பேண முடியாமல் போகும் பட்சத்தில் தேர்தலுக்கு பின்னர்தான் தலைவர் தேர்வு என்றும் பேசப்படுகிறது.
தேர்தல் குறித்து பேசப்படுகின்ற இக்காலத்தில் புளட் எம்.பி. யாழ்ப்பாண அபிவிருத்தி குறித்து விழித்துக்கொண்டுள்ளார்.அதன் வெளிப்பாடுதான் சித்தார்த்தன் சந்திரகாந்தனிடம் விடுத்துள்ள கோரிக்கை.
“இராஜாங்க அமைச்சர் கௌரவ சந்திரகாந்தன் அவர்கள் யாழ்ப்பாண அபிவிருத்தி குறித்தும் கவனம் செலுத்த வேண்டும்….” . என்று கோரியிருக்கிறார் சித்தார்த்தன்.
“அபிவிருத்தியின் நாயகன் பிள்ளையான் ….” என்று சொன்னவர் தமிழரசுக்கட்சியின் முன்னாள் எம்.பி. செல்வராசா.
” மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திக்கு அரசாங்கம் பங்களிப்பு செய்தால் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார்” என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் பட்டிருப்பு எம்.பி. கணேசலிங்கம் ஒரு சந்தர்ப்பத்தில் கூறியிருந்தார்.
எதிர்த்தரப்பு தமிழ்த்தேசிய அரசியல்வாதிகளால் கூறப்பட்டுள்ள இந்த கருத்துக்கள் மக்கள் பிரதிநிதிகளின் வாயில் இருந்து ஒலித்தவை என்பதால் முக்கியமானவை. இலங்கையின் இன்றைய தமிழ்த்தேசிய அரசியல் சூழலில் சித்தார்த்தன் இதை வெளிப்படையாக கூறியிருப்பது மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குறித்த அவரின் மதிப்பீட்டின் அடிப்படையிலானதாகும்.
சக தமிழ், முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்களை, தமிழ், முஸ்லீம் அமைச்சர்களை பாராளுமன்ற நாகரிகத்திற்கு கறை பூசி “கௌரவ…..” என்று சொல்வதற்கே வாய் கூசுகிறது….” என்று கட்சி அரசியல் நஞ்சுண்டு வாந்தி எடுத்து, தங்களைத் தாங்களே சிறுமைப்படுத்திக்கொள்வது கூட புரியாமல் அநாகரிக அரசியல் செய்கின்ற இந்த சுழலில் தமிழ்த்தேசிய வடக்கு பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தனின் பகிரங்க அழைப்பு பிள்ளையானின் இணக்க -அபிவிருத்தி அரசியலுக்கு கிடைத்த வெற்றி- அங்கீகாரம்.
இந்த கருத்தில் உடன்பாடுடையவர்கள் மட்டக்களப்பிலும், வடக்கு – கிழக்கிலும் பல புத்திஜீவிகள், கல்வியாளர்கள், அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் உண்மை பேச தயங்குகிறார்கள். இவர்களில் சிலர் சமூக மாற்றம் எழுத்துக்களால் ஏற்படாது என்று கூறிக்கொண்டே எழுத்து வியாபாரம் செய்பவர்கள்.
மட்டக்களப்பின் செயற்பாட்டு அரசியல் -அபிவிருத்தி குறித்து பலராலும் பேசப்படுவது ஒன்றும் புதியவிடயமல்ல. யுத்தத்தின் இறுதிக்காலத்தில் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிழக்குமாகாண முதலமைச்சராக இருந்த காலம் முதல் இன்று இராஜாங்க அமைச்சராக இருக்கின்ற காலம்வரை பேசப்படுகின்ற ஒரு விடயம் தான் இது.
வடக்கு -கிழக்கு மாகாணங்களின் சமகால சமூக, பொருளாதார, அரசியல் செயற்பாட்டுத்திட்டங்களை, நடைமுறைகளை ஒப்பிட்டு பேசுகிறவர்கள் இதை வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் வெளிப்படுத்தியுள்ளனர். புலம்பெயர்ந்த தேசங்களில் இருந்து வருகின்றவர்கள், தன்னார்வ நிறுவனங்கள், இராஜதந்திரிகள், பொது அமைப்புகள், புகலிட அமைப்புக்கள் என பலதரப்பினரும் இது பற்றி பேசியிருக்கிறார்கள். ஒப்பீட்டளவில் மட்டக்களப்பு மாவட்டம் யுத்தத்தின் பின்னர் அபிவிருத்தியில் ஒரு கட்டத்தை தொட்டு தொடர்கிறது என்பது இவர்களின் கருத்து.
கட்சி அரசியல் காழ்ப்புணர்ச்சிகளுக்கு அப்பால் உள்ளதை – நல்லதை பாராட்டுவதும், அங்கீகரிப்பதும் அரசியல் நேர்மை. இந்த நேர்மை இருந்தால்தான் பாதகமான விடயங்களையும், விமர்சனங்களையும் நேர்மையாக சுட்டிக்காட்ட முடியும். இல்லையேல் மக்கள் மத்தியில் “எல்லாவற்றையும் எதிர்க்கும்” இந்தப் பாணி வெறும் கட்சி அரசியல் சண்டையாகவே நோக்கப்படும். தேர்தல்கள் குறித்து பேசப்படுகின்ற இந்த காலகட்டத்தில் அரசியல்வாதிகளிடம் இருந்து இந்த நேர்மையை எதிர்பார்ப்பது மக்களின் இயல்பு.
இதன் அர்த்தம் மட்டக்களப்பில் தேனும், பாலும் ஓடுகிறது, மக்கள் பிரச்சினைகள் அற்று வாழ்கிறார்கள் என்று கட்டியம் கூறுவதும் அல்ல. கொரோனாதொற்று, பொருளாதார நெருக்கடி, வங்குரோத்து, அரசியல் ஸ்த்திரமின்மை, சர்வதேச -பிராந்திய அழுத்தங்கள்…..இப்படியான நிலைமைகளுக்கு மத்தியிலும் மக்கள் வாழப்பழகி இருக்கிறார்கள். உள்ளூர் அரசியலில் நம்பிக்கை அடைந்திருக்கிறார்கள். அரசாங்க ரீதியான சில முன்னேற்ற அடைவுகளை எட்டியிருக்கிறார்கள். குறிப்பாக கல்வி, சுகாதாரம், போக்குவரத்து வீதி – பாலம் கட்டுமானங்கள், உள்ளூர் உற்பத்தி, சந்தைப்படுத்தல், சூரிய மின்சக்தி, நீர்ப்பாசனம், சிறு கைத்தொழில்கள்….. மீன்பிடி, விவசாயம் , சுயதொழில்கள் போன்றவற்றில் இந்த மாற்றங்களை அவதானிக்க முடியும்.
இலங்கையின் இனப்பிரச்சினை என்பது மொழி, காணிப்பிரச்சினையை அடிப்படையாகக்கொண்டது. தமிழ்த்தேசிய அரசியலுக்கும் இந்த மொழி, காணிப்பிரச்சினைகளுக்குமான வயது சமவயது. இந்த பிரச்சினைகளை கடந்த 75 ஆண்டுகளாக தமிழ்மக்களுக்கு அரசியல் தலைமையை வழங்கிய வடக்கு தலைமைகளால் தீர்க்க முடியவில்லை. அப்போதும் அவர்கள் அமைச்சர்களாக, ஆட்சிக்கு ஆதரவளித்தவர்களாக, ஒப்பந்தங்களின் பங்காளர்களாக, எதிர்க்கட்சி தலைவர்களாக இவை எல்லாவற்றிற்கும் மேலாக சிங்களத்தலைமைகளின் நண்பர்களாக இருந்தார்கள். தங்கள் பாராளுமன்ற அரசியலுக்கு மொழி, காணி பிரச்சினைகளை முதலீடு செய்கின்ற அரசியலே தமிழர் அரசியல். அந்த நிலையில் இன்றும் எந்த மாற்றமும் இல்லை. இந்த பாட்டன் – பூட்டன் அரசியலே தொடர்கிறது. இனி வரும் தேர்தல்களிலும் இதுதான் நிலை.
உண்மையில் மேற்குலக பாராளுமன்ற அரசியலில் இந்த வேலைகள் பாராளுமன்ற உறுப்பினர்களது வேலைகள் அல்ல. அரசாங்கத்தின் அபிவிருத்தி கொள்கை திட்டத்தோடும், கொள்கை வகுப்பு, நிதி, திட்டமிடல், பொது நிர்வாகம் சார்ந்தது. ஆனால் இலங்கையைப் பொறுத்தமட்டில் சுதந்திரம் பெற்ற காலம் முதல் இது பாராளுமன்ற உறுப்பினர்களின் வேலையாகிவிட்டதுடன், மக்களின் எதிர்பார்ப்பும் அதுவாகவே உள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீடு , அபிவிருத்திக்கும், அரசாங்க கொள்கைத் திட்டமிடல் செயற்பாட்டுக்கும், அரசியல் அதிகாரத்திற்கும் இடையிலான அரசியல் அமைப்புரீதியான சட்ட அங்கீகாரம் என்பன இதற்கு வலுச்சேர்த்துள்ளன. யுத்தம் மக்களின் இந்த எதிர்பார்ப்பை இரட்டிப்பாக்கி இருக்கிறது.
இதனால் மக்கள் பிரதிநிதிகள், அரசாங்க நிர்வாக இயந்திரத்துடன் இணைந்து அபிவிருத்திதிட்டங்களை முன்னுரிமையின் அடிப்படையில் பட்டியல் இடுவதும், அதற்கான நிதியை பெற்றுக்கொடுப்பதும், பிரச்சினைகளை தீர்ப்பதற்கான ஜதார்த்தமான அணுகுமுறைகளை பின்பற்றவும் வேண்டிய கட்டாய பொறுப்பை சுமக்க வேண்டியுள்ளது. இது வங்குரோத்து நாடு ஒன்றில் வரையறுக்கப்பட்ட வளங்களைக்கொண்டு, வரையறை அற்று செயற்பட முடியாத ஜதார்த்தத்தைக் கொண்டது என்பதை கட்சி அரசியல் வேலிகளை கடந்து நேர்மையாக சிந்திப்பதன் மூலமே அறியமுடியும். பா.உ. சித்தார்த்தனின் இந்த கோரிக்கை இதனையே வெளிப்படுத்துகிறது.
கிழக்கில் இருந்து கடல்வள அபிவிருத்தி தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அது போன்று வடக்கில் இருந்து இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தனிடம் விடுத்துள்ள இந்த கோரிக்கை குறித்து வடக்கு அரசியல் தலைமைகள் வெட்கப்பட ஏதும் இல்லை. வேண்டுமானால் தமிழ்த்தேசிய அரசியல் அபிவிருத்தியை கவனத்தில் கொள்ளாதது குறித்து வெட்கப்படுவதில் நியாயம் உண்டு. அதன் ஒரு வெட்கத்தைப்பாராத வெளிப்பாடாகவும் சித்தார்த்தனின் இந்த கூற்றை கொள்ள முடியும்.
சித்தார்த்தனின் அழைப்பு ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் வெளிவந்த போது கிழக்கில் ஒரு பகுதியினர் சந்தேகங்கள் கொண்டே பார்த்தனர். இதற்கு பின்னால் சித்தார்த்தன் விரித்து இருக்கின்ற சதிவலை என்ன? என்ற கேள்வியும் எழாமல் இல்லை. இலங்கை அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர் ஒருவர் முழு நாட்டுக்குமான அமைச்சர். ஆனால் எல்லோரும் போன்றே தமது மாவட்டத்தில் அதிக கவனம் செலுத்துவது பொதுவான ஒன்று. கிழக்கு கடந்த காலங்களில் வடக்கில் இருந்து பெற்ற “கசப்பான அனுபவங்கள்” இந்த அழைப்பின் பின்னால் உள்ள சந்தேகங்களுக்கு காரணமாக அமைகின்றன. ஆனாலும் அந்த அதே கசப்பான அனுபவங்களை கையாண்ட அனுபவம் பிள்ளையானுக்கு உண்டு என்பதால் இது பற்றி அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை. அதற்காக அலர்ட்டாக இருக்கக்கூடாது என்பதும் அல்ல. சித்தார்த்தனின் கோரிக்கையை சாதகமாக அணுகுவதன்மூலம் அபிவிருத்தி அரசியலுக்கான வலுவை அதிகரிக்க முடியும்.
மட்டக்களப்பின் அபிவிருத்தி பற்றி பேசினால் வெளியில் உள்ள சிலருக்கு அலர்ஜி ஏற்படுகிறது. 1977 இல் பட்டிருப்பு எம்.பி. யாக பூ.கணேசலிங்கம் வெற்றி பெற்ற பின்னர் மட்டக்களப்பு கச்சேரியில் மாவட்ட அபிவிருத்தி தொடர்பான கூட்டம் ஒன்று இடம்பெற்றது. பிரதமர் பிரேமதாசா இதில் கலந்துகொண்டார். கச்சேரி மாநாட்டில் உரையாற்றிய கணேசலிங்கம் எம்.பி. “மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்கு அரசாங்கம் பங்களிப்பு செய்தால், அரசாங்கத்திற்கு தனது ஒத்துழைப்பு உண்டு” என்று பேசியிருந்தார். அன்றைய தினம் மாலை பட்டாளிபுரத்தில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்திலும் கணேசலிங்கமும் கலந்து கொண்டு உரையாற்றினார்.
கணேசலிங்கத்தின் இந்த கருத்தை திரிபுபடுத்தி தவஸ, தினபதி, சிந்தாமணியில் தொடர்ந்து சில வாரங்கள் அன்றைய மட்டக்களப்பு நிருபர் ஜோசப் பரராஜசிங்கம்(சுகுணம் ஜோசப்) , கணேசலிங்கத்திற்கு எதிராக கட்சிமாறப்போகிறார் என்று எழுதினார். காசி.ஆனந்தனின் தோல்வி , இராசதுரையின் வெற்றி, தேவநாயகம் அமைச்சர், கனகரெட்ணம் கட்சி மாறப்போகிறார் இந்த பலவீனமான தமிழ்த்தேசிய அரசியலில் அமிர்தலிங்கத்தினால் கணேசலிங்கத்தை எதுவும் செய்ய முடியவில்லை. தமிழர் விடுதலைக்கூட்டணி தலைமையின் பலவீனத்தை தனக்கான பலமாக அவர் பயன்படுத்திக்கொண்டார்.
இவை எல்லாம் மட்டக்களப்பின் அபிவிருத்திக்கு தடைகள் இன்று மட்டும் அல்ல அன்றும் இருந்தன என்பதையே காட்டுகின்றன.
இது போன்றே பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா (நவம்) மட்டக்களப்பின் அபிவிருத்தியில் அக்கறை கொண்டவர். பூ.கணேசலிங்கத்தின் தொடர்ச்சியாக அரசியலுக்கு வந்தவர். பட்டிருப்பு தொகுதியில் இரு சாதிகளுக்கு இடையே மட்டும் பாராளுமன்ற அதிகாரம் மாறி மாறி பங்கிடப்பட்டுக்கொண்டிருந்த காலத்தில் அந்த அரசியல் வழக்கத்தை தகர்த்த கணேசலிங்கத்தின் அரசியல் தொடர்ச்சியே செல்வராசா.
செல்வராசாவின் பாராளுமன்ற உறுப்பினர் காலத்தில் -யுத்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்ட சுகாதாரத்துறை அபிவிருத்திக்கு அவர் ஆற்றிய பணி முக்கியமானது. அன்றைய சுகாதார அமைச்சர் பௌஸியுடன் அவர் கொண்டிருந்த தனிப்பட்ட நட்பு இதற்கு பெரும் வாய்ப்பாபாக அமைந்தது. இது விடயத்தில் சந்தேகம் கொண்ட புலிகள் செல்வராசா எம்.பி.யை காட்டுக்குள் அழைத்து, விசாரித்து எச்சரித்து அனுப்பினார்கள். காரணம் மட்டக்களப்பின் அபிவிருத்தியில் அவர் அக்கறை காட்டியதுதான்.
இந்த அரசியல் வரலாற்றை அறியாத சில புது வரவுகள் “செல்வராசா ஒரு இளைஞனிடம் பட்டிருப்பை ஒப்படைத்து சென்றிருக்கிறார்” என்று செத்த வீட்டில் மட்டக்களப்பு மக்களுக்கு காதில் பூ சுத்துகிறார்கள்.
மட்டக்களப்பு அபிவிருத்தி என்பது இன்றும் பேரினவாத அரசியல் தடைகளை மட்டும் அல்ல தமிழ்த்தேசிய கட்சி அரசியல் தடைகளையும் தாண்டவேண்டிய ஒன்றாகவே உள்ளது. அதற்கு பலமான அரசியல் தலைமைத்துவம் மட்டக்களப்பிற்கு தேவை. சித்தார்த்தன் விடு தூது இதை நிரூபித்து இருக்கிறது.