ஜனாதிபதி தேர்தலில் இருக்கக்கூடிய தெரிவுகள்

ஜனாதிபதி தேர்தலில் இருக்கக்கூடிய தெரிவுகள்

 — வீரகத்தி தனபாலசிங்கம் —

 இந்த கட்டுரையின் தலைப்பு சில வேளைகளில்  உரிய காலத்துக்கு மிகவும் முந்திய — தருணப் பொருத்தமில்லாத  ஒன்றாகவும் சிலருக்கு தோன்றலாம். ஆனால்,  இடையில்  எதிர்பாராதவிதமாக  அல்லது அரசியல் சூழ்ச்சித்தனமான செயல்களின்  விளைவாக ஏதாவது  இடையூறுகள் வராமல் இருந்தால்,  ஜனாதிபதி விக்கிரமசிங்க அறிவித்திருப்பதன் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் நடந்தால் அடுத்த வருடம் இந்த நேரம் நாம் ஒரு புதிய ஜனாதிபதியின் ஆட்சியின் கீழ் இருப்போம். அதனால் மக்களுக்கு இருக்கக்கூடிய தெரிவுகள் குறித்து பேசுவது  பொருத்தமானது அல்ல என்று கூறிவிடமுடியாது.

  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேர்தல்களை எவ்வாறு அணுகிவந்திருக்கிறார் என்பதை இந்த பத்தியில்  சில தடவைகள் அல்ல பல தடவைகள் எழுதியிருக்கிறோம். மீண்டும் ஒரு தடவை அதைப் பற்றி எழுதவேண்டிய தேவையை அவர் கடந்தவாரம் இந்தியாவின் பிரபரல்யமான  ஊடவியலாளர் ஒருவரிடம் தெரிவித்த கருத்துக்கள் ஏற்படுத்தியிருக்கின்றன. 

   இந்தியாவின்  Firstpost என்ற  செல்வாக்குமிக்க இணையத்தள செய்திச்சேவையின் நிருவாக ஆசிரியர் பால்கி சர்மாவுடன்  யூரியூப் அலைவரிசையில் ‘ Vantage with Balki Sharma ‘ என்று நிகழ்ச்சியில் விக்கிரமசிங்க கலந்துகொண்டார்.

  உள்நாட்டு விவகாரங்கள், பிராந்திய நிலைவரங்கள்,  சர்வதேச அரசியல் மற்றும் கிரிக்கெட் என்று பல்வேறு விவகாரங்கள் குறித்து பால்கி சர்மாவின் கேள்விகளுக்கு பதிலளித்த ஜனாதிபதி சர்ச்சைக்குரிய கேள்விகளுக்கு நழுவல் பதில்களைக் கூறியதைக் காணக்கூடியதாக இருந்தது. 

   “நீங்கள் ஒரு சிறந்த இராஜதந்திரியாக இருக்கவேண்டியவர் என்று நான் நினைப்பதுண்டு. ஆனால் அரசியல்வாதியாக வந்துவிட்டீர்கள்” என்று ஜனாதிபதியைப் பார்த்து  அந்த பெண் ஊடகவியலாளர் சிரித்துக்கொண்டு கூறினார்.

  “அடுத்த வருட ஜனாதிபதி தேர்தலில்   நீங்கள் போட்டியிடுவீர்களா?” என்று அவர் கேட்ட கேள்விக்கு  பதிலளித்த விக்கிரமசிங்க தனது முதல் பணி பொருளாதாரத்தை ஒரு உறுதியான நிலைக்கு  கொண்டுவருவதே என்று கூறினார். அதைச் செய்த பிறகு எத்தகைய முடிவை எடுப்பீர்கள் என்று கேட்கப்பட்டபோது முதலில் பொருளாதாரம் உறுதிப்பாட்டுக்கு வரட்டும்,அதற்கு பிறகு எத்தகைய தீர்மானத்தை எடுப்பது என்று பார்க்கலாம்  என்று அவர் குறிப்பிட்டார்.

   சிலவேளை உங்களைப் போன்று ஒரு ஊடகவியலாளராக வந்தாலும் வருவேன். உங்கள் செய்தி சேவையில் எனக்கு இடம் தருவீர்களா என்று பால்கி சர்மாவை நோக்கி ஜனாதிபதி  நகைச்சுவையாக கேட்க அவரும் நிச்சயமாக உங்களை வரவேற்போம். உங்களிடம் இருந்து அறிய நிறைய இருக்கிறது என்று சிரித்த வண்ணம் பதிலளித்தார்.

  முதன் முதலாக 1993 மேயில் பிரதமராக பதவியேற்ற விக்கிரமசிங்கவிடம் நேர்காணல் ஒன்றின்போது அரசியலுக்கு வரவில்லை என்றால் என்ன செய்திருப்பீர்கள் என்று கேட்கப்பட்டபோது பத்திரிகை ஆசிரியராக வந்திருப்பேன் என்று அவர் அளித்த பதில் இச்சந்தர்ப்பத்தில் நினைவுக்கு வருகிறது. அவரின் குடும்பம் ஊடகத்துறையுடன் பின்னிப்பிணைந்தது.

  ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக இருந்தால் ராஜபக்சாக்களின் கட்சியின் ஆதரவைக் கோருவீர்களா என்ற பால்கி சர்மாவின் கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி தான் ஐக்கிய  தேசிய கட்சியைச் சேர்ந்தவராக இருந்தபோதிலும், கட்சி அடிப்படையில் சிந்திக்காத ஜனாதிபதியாக செயற்பட்டு வருவதாகவும் கட்சி அடிப்படையில் சிந்திக்கவேணடிய நேரம் வரும்போது இந்த கேள்விக்கு பதிலளிப்பதாகவும் கூறினார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து திட்டவட்டமாக அவர் பதிலளிப்பதை தவிர்த்த மேலும் ஒரு  சந்தர்ப்பமாக இந்த நிகழ்ச்சி  அமைந்தது.

   மூன்று வாரங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் 2024 பட்ஜெட்டை சமர்ப்பித்த மறுநாள் தனது  செயலகத்தில் பத்திரிகை ஆசிரியர்களை சந்தித்த ஜனாதிபதியிடம் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றின்  ஆசிரியர் எழுப்பிய கேள்விக்கும் நாட்டின் வங்குரோத்து  நிலையை முடிவுக்கு கொண்டுவருவதில் முழுமையாக கவனத்தைச் செலுத்தியிருப்பதால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்று இன்னமும் தீர்மானிக்கவில்லை என்றே அவர் பதிலளித்தார்.

  இதேவேளை, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச கடந்தவாரம் பாராளுமன்றத்திலும் வெளியில் செய்தியாளர்கள் மகாநாட்டிலும் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடமாட்டார் என்றும் ஏதேனும் சர்வதேச அமைப்பொன்றில் முக்கிய பதவியைப் பெற்றுக்கொண்டு அவர் தனது ஓய்வுகாலத்தைக் கழிப்பார் என்றும் கூறியிருந்தார்.

    வீரவன்ச அரசியலில் எல்லாம் தெரிந்தவர் என்ற தோரணையில் தான்தோன்றித்தனமாக பேசும் சுபாவத்தைக் கொண்டவர் என்றபோதிலும், அவர் கூறிய கருத்துக் குறித்து ஜனாதிபதியைச் சந்தித்த ஆளும் கட்சி அரசியல்வாதிகள் கவனத்துக்கு கொண்டுவந்தனர். அதற்கு பதிலளித்த அவர், தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பதை தீர்மானிப்பது வீரவன்ச அல்ல என்றும் அரசியலில் தொடருவதா இல்லையா என்பதை தானே தீர்மானிப்பார் என்றும் குறிப்பிட்டார்.

  ஆளும் கட்சியில் இருந்து எதிரணிக்கு பாய்ந்தவர்களும் எதிர்க்கட்சிகளில் இருப்பவர்களும் தனது அரசியல் பயணத்தை ஏதோவொரு வழியில் முடக்கப்பார்க்கிறார்கள் என்று கூறிய ஜனாதிபதி தனது அரசியல் பயணத்தை அவர்களால் ஒருபோதும் முடக்கமுடியாது என்று தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின.

   தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஜனாதிபதி கூறுவதற்கு  ஜனாதிபதி தொடர்ச்சியாக மறுத்து வருகின்ற போதிலும்,  அவருக்கு நிகராக அரசியல் அனுபவத்தையும்  அறிவையும்  சர்வதேச செல்வாக்கையும் கொண்ட வேறு எந்த அரசியல்  தலைவரும்  இல்லை என்று அவரின் அரசியலை வெறுப்பவர்களில் பலரும் கூட பகிரங்கமாகக் கூறுவதுண்டு.

  இதுவரையில்  அடுத்த  ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்களாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார திசாநாயக்கவுமே தங்களை அறிவித்தி ருக்கிறார்கள். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கூட தனக்கும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் உத்தேசம் இருக்கிறது என்று சில மாதங்களுக்கு முன்னர்  கூறினார். ஆனால்  அதை யாரும் கணக்கெடுத்ததாக தெரியவில்லை.

   அண்மைய கருத்துக்கணிப்புகள் சகலதுமே பிரேமதாசவை விடவும் திசாநாயக்கவே மக்கள் செல்வாக்கில் முன்னிலையில் நிற்பதாக கூறுகின்றன. ஜனதா விமுக்தி பெரமுன ( ஜே.வி.பி.) வின் பொதுக்கூட்டங்களுக்கும்  ஊர்வலங்களுக்கும்  மக்கள் பெருமளவில் அணிதிரண்டுவந்தாலும்,  அந்த ஆதரவு தேர்தல்களில் வாக்குகளாக மாறுவதில்லை என்ற இதுகாலவரையான நிலை இனிமேலும் அவ்வாறே தொடரும் என்று ஒருபோதும் கூறமுடியாது என்பதே அரசியல் அவதானிகளின் பரவலான அபிப்பிராயமாக இருக்கிறது.

  கடந்த வருடத்தைய அறகலய மக்கள் கிளர்ச்சிக்கு பின்னரான அரசியல் சூழ்நிலையை அனுகூலமாகப் பயன்படுத்தி மக்கள் மத்தியில் செல்வாக்கை கணிசமானளவுக்கு தேசிய மக்கள் சக்தி வளர்த்துக்கொண்டிருக்கிறது. பாரம்பரியமான பிரதான அரசியல் கட்சிகள் மீதான வெறுப்பே இதற்கு முக்கிய காரணம்.

   தேசிய மக்கள் சக்தியின் மக்கள் செல்வாக்கு கொழும்பில் உள்ள மேற்குலக நாடுகளின் தூதரகங்களுக்கும் ஒரு  மருட்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்க தூதுவர் உட்பட பல நாடுகளின் தூதுவர்கள் தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களை அடிக்கடி சந்தித்து பேசுகிறார்கள். அமெரிக்கா உட்பட மேற்குலக ‘ஏகாதிபத்தியங்களை’ கர்ணகடூரமாக எதிர்த்துவந்த அந்த தலைவர்கள் அந்த ‘தோற்றப்பாட்டை’ பெருமளவுக்கு மாற்றிக்கொள்ள விரும்புகிறார்கள் என்று தோன்றுகிறது.

  தங்களிடம் ஆட்சியை தந்துபார்க்குமாறு மக்களுக்கு அறைகூவல் விடுக்கும் அந்த தலைவர்கள் அதிகாரத்துக்கு வருவதற்கு உள்நாட்டில் மக்களை அணிதிரட்டுவது மாத்திரம் போதாது சர்வதேச சமூகத்தின்  ஆதரவும் தேவை என்ற புரிதலுடன் தங்களது செயற்பாடுகளை முன்னெடுப்பதை காணக்கூடியதாக இருக்கிறது.  பொருளாதாரக் கொள்கைகளை பொறுத்தவரையிலும் கூட  மாறிவிட்ட சர்வதேச நிலைவரங்களுக்கு பொருத்தமான  முறையில்  தங்களது நிலைப்பாடுகளில் பெருமளவு மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டதாகவும் ஆரம்பகால ஜே.வி.பி.யை மனதிற்கொண்டு தங்களை மதிப்பிடுவது  பொருத்தமானது அல்ல என்றும் அவர்கள் பகிரங்கமாக கூறுகிறார்கள்.

  அடுத்ததாக, சஜித் பிரேமதாசவைப் பொறுத்தவரை தனது தந்தையார் விட்டுச்சென்ற இடத்தை நிரப்பக்கூடிய ஒருவராக தன்னை நிரூபிப்பதற்கு அவர் கடுமையாக முயற்சிக்கிறார்;  எதிர்க்கட்சி தலைவர் என்ற வகையில் சிறந்த பாராளுமன்றவாதியாகவும் செயற்படுவதில் கடும்  முனைப்பைக்  காட்டுகிறார். 

   ஆனால், பாரதூரமான அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளை இலங்கை எதிர்நோக்கும் நிலைவரத்துக்கு மத்தியில்  நாட்டை வழிநடத்தக்கூடிய அரசியல் முதிர்ச்சியுடனும் தொலைநோக்குடனும் கூடிய  ஒரு தலைவராக அவரை ஏற்றுக்கொள்வதற்கு நாட்டின்  பெரும்பாலான  மக்கள் தயாராயிருக்கிறார்களா என்பது முக்கியமான ஒரு கேள்வி.

   தன்னிடம் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தை தரமறுத்த விக்கிரமசிங்கவை கடந்த பாராளுமன்றத் தேர்தலில் வரலாறு காணாத தோல்வியைத் தழுவச்செய்ததன் மூலம்  பிரேமதாச  தனக்கு அரசியலில்  நம்பகத்தன்மையை தேடிக்கொண்ட போதிலும், கடந்த வருடத்தைய மக்கள் கிளர்ச்சிக்கு மத்தியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அழைப்பையேற்று பிரதமர் பதவியை ஏற்காததை வைத்துக்கொண்டு அவர் சவால்களுக்கு முகங்கொடுக்க தயங்கும் ஒரு தலைவர் என்ற எதிர்மறையான பிரதிமையை  உருவாக்குவதில் விக்கிரமசிங்கவும் ஐக்கிய தேசிய கட்சியும் முழுமூச்சாக ஈடுபடுகிறார்கள்.   பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் சவாலை ஏற்றக்கொள்ள பிரேமதாச முன்வரவில்லை என்பதை ஜனாதிபதி பாராளுமன்றத்திலும் வெளியிலும் எண்ணற்ற தடவைகள் கூறியிருப்பார்.  

  மகிந்தவின் அறிக்கை :

  ===============

   இது இவ்வாறிருக்க, பொருளாதார நெருக்கடிக்கு தங்களது நிருவாகத்துக்கு இருந்த பொறுப்பின் காரணமாக மக்கள் மத்தியில் மீண்டும் ஆதரவைத் திரட்டுவதில் பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்கிவந்த  ராஜபக்சாக்களுக்கு அண்மைய உயர்நீதிமன்ற தீர்ப்பு மேலும் பின்னடைவாக அமைந்தது. அந்த தீர்ப்பின் விளைவாக தங்களது எதிர்கால அரசியலுக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகளை உணர்ந்த அவர்கள் இப்போது பொருளாதார நெருக்கடிக்கு தாங்கள் முற்றிலும் பொறுப்பு அல்ல என்ற பிரசாரங்களை முன்னெடுக்கவேண்டிய பெரும் நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகியிருக்கிறார்கள். 

  ஏனைய ராஜபக்சாக்களை விட மகிந்த ராஜபக்சவே இந்த பணியை முன்னெடுக்கவேண்டியிருக்கிறது.  அந்த குடும்பத்தின் பிதானமான அரசியல் முகமாக அவரே இன்னமும் விளங்குகிறார். வேறு எந்த ராஜபக்சவாலும் பல வருடகால அரசியல் ஈடுபாட்டுக்கு பின்னரும் கூட  அவரின் பாத்திரத்தை வகிக்கக்கூடிய நிலைக்கு கிட்டவும் வர முடியவில்லை. 

    மூத்த மகன் நாமல் ராஜபக்சவின் அரசியல் எதிர்காலத்தை உறுதிசெய்து கொள்வதற்காக தங்களது ஆட்சிக்காலச் செயற்பாடுகளை நியாயப்படுத்தவேண்டிய தேவை மகிந்த ராஜபக்சவுக்கு  இருக்கிறது.

  தனது பதவிக்காலத்தில்  அதாவது  2006 — 2014 காலப்பகுதியில் உறுதிவாய்ந்த பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட்டிருந்ததாக கூறி அவர் கடந்த வாரம் ‘இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் மூலங்கள்’ என்ற தலைப்பில் நீண்ட அறிக்கையொன்றை வெளியிட்டார்.

   நிதியமைச்சராக இருந்தபோது பாராளுமன்றத்தில் பட்ஜெட்டுக்களை  சமர்ப்பித்த சந்தர்ப்பங்களில் புள்ளிவிபரங்களை மகிந்த ராஜபக்ச கையாண்டிருந்தாலும், மற்றும்படி அவரது பேச்சுக்களிலோ அல்லது அறிக்கைகளிலோ வழமையாக அவர் புள்ளிவிபரங்களில் கவனம் செலுத்துவதில்லை. அவரின் பேச்சுக்கள் பெரும்பாலும் ஜனரஞ்சக மானவையாகவே இருக்கும். ஆனால், இந்த அறிக்கை முற்றிலும் புள்ளிவிபரங்களைக் கொண்டதாக இருக்கிறது.

  2014 செப்டெம்பரில் சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட அறிக்கையில் இலங்கையின் பெரும்பாக பொருளாதாரச் செயற்பாடுகள் பொதுவில் எதிர்பார்க்கப்பட்டதையும் விட அதிகமாக இருந்ததாகவும் அன்றைய அண்மைய வருடங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் கண்ட இலங்கை மேல் மத்தியதர வருமானத்தையுடைய நாடுகளின் அணியில் இணைவதை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது என்றும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி விரைவாக வளர்ச்சியடைந்து  வரும் முன்னரங்க ஆசிய பொருளாதாரங்களில் ஒன்றாக விளங்குகிறது என்றும் கூறப்பட்டிருந்ததை அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கும் அவர் 2015 ஜனவரியில் மிகவும் துடிப்பான ஒரு பொருளாதாரத்தையே தான் விட்டுச் சென்றதாக கூறியிருக்கிறார்.

   மீண்டும் 2019 நவம்பரில் பிரதமராக பதவியேற்றபோது தங்களது அரசாங்கம் ஏற்கெனவே பெரும் பின்னடைவைக் கண்ட ஒரு பொருளாதாரத்தையே கையேற்கவேண்டியிருந்தது என்று கூறியிருக்கும் மகிந்த ராஜபக்ச அத்தகைய ஒரு பலவீனமான நிலையிலேயே இலங்கையை கொவிட் — 19 பெருந்தொற்று தாக்கியது என்று குறிப்பிட்டார்.

 “பொருளாதாரம் தொடர்பான எந்தவொரு விவாதத்திலும் ஆள்வீத நிகர உள்நாட்டு உற்பத்தியே மிகவும் அடிப்படையான பொருளாதார குறிகாட்டி என்பதை கவனத்தில் எடுக்கவேண்டியது முக்கியமானதாகும். 2006 — 2014 காலப்பகுதியில் எனது அரசாங்கத்தில் இலங்கையின் ஆள்வீத நிகர உள்நாட்டு உற்பத்தி  சுதந்திரத்துக்கு  பின்னர் பதவியில் இருந்த சகல  அரசாங்கங்களின் காலத்தினதும் கூட்டுமொத்த நிகர உள்நாட்டு உற்பத்தியின் இரு மடங்கிற்கும் அதிகமானதாகும். அதனால் மக்கள் தங்களது தீர்மானங்களை கூச்சலையும் பொய்களையும் பிரசாரங்களையும் அடிப்படையாகக் கொண்டு அல்ல உகந்த தரவுகளையும் விளக்க விபரங்களையும் அடிப்படையாக வைத்தே எடுக்கவேண்டும். 2015 ஜனவரியில் செய்த அரசியல் தவறைப் போன்ற இன்னொரு தவறை இலங்கை தாங்கமாட்டாது” என்று அவர் தனது அறிக்கையில் இறுதியாகக் கூறியிருக்கிறார்.

 அவரது இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் பெருவாரியான புள்ளிவிபரங்களை இந்த கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருந்த தருணம் வரை எவரும் நிராகரித்துப் பதில் அறிக்கை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சில அரசியல் அவதானிகளையும் அறிக்கை தடுமாற வைத்திருக்கிறது.

   2015 ஜனாதிபதி தேர்தலில் தன்னைத் தோற்கடித்து செய்த அரசியல் தவறை மீணடும் செய்யவேண்டாம் என்று நாட்டு மக்களிடம்  விடுத்த வேண்டுகோளின் மூலமாக மகிந்த ராஜபக்ச கூறுகின்ற செய்தியை புரிந்துகொள்வதில் எவருக்கும் சிரமமிருக்காது. 

   ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி தேர்தலில் அதன் வேட்பாளரைக் களமிறக்கும் என்றே ராஜபக்சாக்களும் அவர்களின் விசுவாசிகளும் கூறிக்கொண்டிருக்கிறார்கள். அந்த கட்சியின் சார்பில் நிறுத்தப்படக்கூடிய வேட்பாளர் ஒரு ராஜபக்சவை தவிர வேறு எவருமாக இருப்பதற்கு பெரும்பாலும் வாய்ப்பு இல்லை. தங்களது மக்கள் செல்வாக்கு மிகவும் தாழ்ந்த நிலையில் இருப்பதால் தாங்களே நேரடியாக இந்த தடவை  களமிறங்காமல் தங்களது விசுவாசிகளில் ஒருவரை (தம்மிக்க பெரேரா போன்றவர்களை) போட்டியிடவைப்பதற்கும் அவர்களுக்கு யோசனை இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் ஊகங்கள் அடிபடுகிறது.

 ஜனாதிபதி தேர்தலில்   விக்கிரமசிங்கவை  பொதுஜன பெரமுன ஆதரிக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவிய கட்டம் ஒன்று இருந்தது. அந்த நிலை இப்போது இல்லை. அடுத்துவரும் மாதங்களில்  இலங்கை அரசியலில்  பல நாடகபாணி நிகழ்வுகளை நிச்சயம்  எதிர்பார்க்கலாம்.

   இத்தகைய ஒரு பின்புலத்தில் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மக்களுக்கு இருக்கக்கூடிய தெரிவுகள் தொடர்பில் கடந்த வாரம் ‘ சண்டே ரைம்ஸ் ‘ பத்திரிகையில் ‘ ‘சிற்றிசன் சில்வா’ பத்தியில் இரு வாரங்களுக்கு முன்னர் தென்னமெரிக்க நாடான ஆர்ஜனடீனாவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுடன் இலங்கை நிலைவரத்தை ஒப்பிட்டு  எழுதப்பட்டிருந்த கருத்து  மிகவும் சுவாரஸ்யமானதாகவும் சிந்தனையை தூண்டுவதாகவும் இருந்தது. 

   ” கடந்த வாரம் ஆர்ஜன்டீனாவில் நடந்ததை நாம் மனக்கலக்கத்துடன் நோக்கவேண்டியிருக்கிறது. ஒப்பீட்டளவில் அனுபவமில்லாத ஒரு பொருளியலாளரான ஜாவியர் மில்லீயை அந்நாட்டு மக்கள் தங்களது புதிய  ஜனாதிபதியாக தெரிவு செய்திருக்கிறார்கள். அவரை கிறுக்கன் (Madman) என்றும் அழைப்பார்களாம்.

 ” மில்லீக்கு ஒரு அமைச்சராகவோ அலலது ஆளுநராகவோ பதவி வகித்த முன்னனுபவம் எதுவும் கிடையாது. ஆக இரு வருடங்கள் மாத்திரமே அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார். கன்சர்வேட்டிவ் மற்றும் பெரோனிஸ்ட் முகாம்களைச் சேர்ந்த அரசியல்வாதிகள் தங்களது நாட்டை தவறாக ஆட்சிசெய்து பொருளாதாரத்தை நாசமாக்கிவிட்டார்கள் என்று கண்ட ஆர்ஜன்டீன மக்களுக்கு இறுதியில் அனுபவம் குறைந்த மில்லீயே தெரிவாக அமைந்தார்.

  “இலங்கையைப் போன்று ஆர்ஜன்டீனாவும் கடுமையான பணவீக்கத்தினால் பாதிக்கப்பட்டிருக்கிறது. தங்களது வருமானத்தைக் கொண்டு வாழ்க்கையை ஓட்டமுடியாதவர்களாக மக்கள் திணறிக் கொண்டிருக்கிறார்கள். இரு பாரம்பரிய அரசியல் முகாம்களையும் சேர்ந்த தலைவர்களுக்கு எதிராக மில்லீ தொடுத்த கடுமையான பிரசாரங்கள் மக்களின்  உண்வுகளுடன் ஒத்துப்போனது. பாரம்பரிய அரசியல் தலைவர்களை  வாக்காளர்களை கொள்யைடிப்பவர்கள் என்று அவர் சாடினார்.

   ” மாறிமாறி பச்சையையும் நீலத்தையும் தெரிவுசெய்து எந்த நன்மையையும் காணாத எம்மைப் போன்றே ஆர்ஜண்டீன மக்களும் இரு பிரதான  அரசியல் முகாம்கள் மீதும் அதிருப்தியடைந்து விட்டர்கள். அவர்களுக்கு போதும் போதும் என்றாகிவிட்டது 

   ” பழைய தலைவர்கள் மத்தியில் இருந்து ஒருவரை  மீண்டும்  தெரிவுசெய்வதன் மூலம் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கப் போவதில்லை என்பதை உணர்ந்த அந்நாட்டு மக்கள் பழைய முகாம்களுக்கு வெளியில் இருந்து ஒருவரை தங்கள் ஜனாதிபதியாக தெரிவு செய்திருக்கிறார்கள்.

  ” அடுத்த வருடம் இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடந்தால் ரணிலை விடவும் பேச்சாற்றலால் மக்களைக் கவரக்கூடிய ஒருவருக்கு நாம் வாக்களிப்போமா? அல்லது தற்போது இருப்பவர்களில் குறைந்தளவுக்கு ஆட்சேபனைக்குரிய ரணிலுக்கு வாக்களிப்போமா?  

  ” பாரம்பரிய அரசியல் முகாம்கள் மீது வெறுப்படைந்த ஆர்ஜன்டீன  மக்களைப் போன்று பொருளாதாரத்தை நாசமாக்கிய ஊழல்காரர்களைப் பழிவாங்குவதற்கு தீவிரவாத சிந்தனைகொண்ட வெளியாள் ஒருவருக்கு மக்கள் வாக்களிப்பார்களா?”

 ( ஈழநாடு )