— எழுவான் வேலன் —
சுயசிந்தனைக்கான கல்வி
ஒரு பாடசாலையில் ஆசிரியர் ஒருவர் இராமாயணத்தினை நல்ல சுவைபட கற்பித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்து பாடமேற்பார்வையாளர் மாணவர்களிடம் என்ன பாடம் கற்கிறீர்கள் என வினவிய பின் ‘சங்கரனுடைய வில்லை முறித்தது யார்?’ எனக் கேட்டார், உடனே ஒரு மாணவன் எழுந்து ‘ஐயா, அதை நான் முறிக்கவில்லை, இந்தப் பாடசாலையில் எது நடந்தாலும் என்னைத்தான் குற்றம் சுமத்துவார்கள். அதனால் நான் முறிக்கவில்லை என்பதை இப்பவே சொல்லிற்றன், பின்னர் எனக்குப் பிரச்சினை வரக்கூடா’ என்றானாம். உடனே பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர் ‘இல்லை…இல்லை. இவன் பொய் சொல்கிறான். இவன்தான் செய்திருப்பான் என்பதில் ஒரு துளிதானும் சந்தேகப்படத் தேவையில்லை, வில்லை முறித்தது இவனே இவன்’ என்றாராம். பாடமேற்பார்வையாளர் வகுப்பில் நடந்த விடயங்களை அவதானித்து விட்டு பாடசாலை அதிபரிடம் சென்று வகுப்பில் தான் சங்கரனின் வில்லை முற்றித்தது பற்றிக் கேட்டதையும் அதற்கு மாணவரும் ஆசிரியரும் அளித்த பதில்களைக் கூறினாராம் அதற்கு அதிபர், ‘இந்த விடயத்தை பெரிது படுத்தாமல் விடுங்கோ ஐயா, பாடசாலை அபிவிருத்திக் கட்டணத்தில் ஒருவாறு காசு எடுத்து அதை வாங்கிக் கொடுத்து விடுவம், இதப் பெரிசாக்கினால் போராட்டம், பகிஸ்கரிப்பு என்று பெரிய பிரச்சினையாகப் போயிரும். அதனால இத இதோடு விடுங்கோ நான் பார்த்துக் கொள்றன்.’ என்றாராம். பாடமேற்பார்வையாளர் வலயக்கல்வி அதிகாரியிடம் சென்று, வகுப்பில் நடந்த விடயங்களையும் பாடசாலை அதிபர் கூறிய விடயத்தினையும் கூறினாராம் அதற்கு வலயக்கல்வி அதிகாரி, ‘அந்த அதிபர் மிகச் சிறந்த நிர்வாகி எந்தப் பிரச்சினையையும் மிக நுட்பமாகக் கையாண்டு தீர்த்துவிடுவார். ஆதனால் அவரை பல பாடசாலைகள் தங்களுக்கு வேண்டும் எனக் கேட்டபோதும் நான் அவரை வேறு இடங்களுக்கு மாற்றாமல் இருப்பதற்குக் காரணம் அந்தப் பாடசாலையில் அடிக்கடி பிரச்சினை வருவதனாலாகும். அதனால் அவர் அதனைத் தீர்த்துக் கொள்வார். அதைப் பற்றிக் கவலைப்படாமல் விடுங்கோ’ என்றாராம். ஓஷோவின் இந்தக் கதை எமது கல்விமுறையினையும் சிந்தனைமுறையினையும் எடுத்துக்காட்டுவதற்கு சிறந்த உதாரணமாகும்.
இங்கு மாணவர் தொடக்கம் கல்வி அதிகாரி வரை எவருமே சங்கரன் யார் எனும் கேள்வியினைக் கேட்கவில்லை. கேள்வி கேட்காமல் அல்லது சிந்திக்காமல் ஒரு முடிவுக்கு வரும் போக்கினைக் காண்கிறோம்.
இவ்வாறு சிந்திக்காமல் ஒரு முடிவுக்கு வரும் நிலையானது தனிமனித நிலையினை அழித்து அதிகார வர்க்கத்தினரைப் பாதுகாக்கின்றது. இது எவ்வாறு இடம்பெறுகிறது அதாவது தனிமனிதன் அழிக்கப்பட்டு அதிகாரவர்க்கம் எவ்வாறு பாதுகாக்கப்படுகின்றது என்பது தொடர்பான சிந்திப்பது முக்கிமானதாகும்.
வாழ்க்கை என்பது ஏதோ ஒரு பிரச்சினைக்குத் தீர்வைக்காணும் ஒரு நடத்தைதான். அந்தப் பிரச்சினை மனிதர்களுடைய தேவைகளுடன் தொடர்புபட்டதாகும். அந்தத் தேவை அவர்களுடைய அடிப்படைத் தேவைகளுடன் தொடர்புபட்டதாகவோ அல்லது தனிமனிதத் தேவைகளுடன் தொடர்புபட்டதாகவோ இருக்கலாம். ஆனால் வாழ்க்கையை, தேவையை அடிப்படையாகக் கொண்ட பிரச்சினைக்கான தேடலாக நோக்குவது கிடையாது.
இதன்காரணத்தினால் வாழ்க்கை வேறு பிரச்சினை வேறு என பார்க்கப்படுகின்றது. எப்போதொல்லாம் நாளாந்த நடவடிக்கைளுக்கு மாற்றான புதிய சிக்கலான பிரச்சினைகள் எதிர்நோக்கப்படுகின்றதோ அப்போதெல்லாம் பிரச்சினைகளை எதிர்நோக்கமுடியாமல் கையறுநிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இது அவர்களை உளச்சிக்கலுக்கு உள்ளாக்குகிறது. இந்த உளச்சிக்கலில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கான ஒரே வழி போதைப் பொருள் பாவனை அல்லது தற்கொலை என்ற தவறான ஒரு முடிவை நோக்கி இன்றைய கல்வி கற்ற இளைய சமூகம் தள்ளப்பட்டுக் கொண்டு செல்வதை அன்றாட செய்திகள் காட்டுகின்றன. விரிவுரையாளர்கள், அரச உத்தியோகத்தர்கள், பட்டதாரிகள், பல்கலைக் கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் என இந்தப்பட்டியல் நீண்டு செல்வதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.
இது எதைக் காட்டுகின்றது என்றால் கல்வி பிரச்சினைகளுக்குத் தீர்வைத்தராது அவர்களை தற்கொலைக்கு இட்டுச் செல்கின்றது என்பதையாகும். வாழவைக்க முடியாத கல்வியினால் என்ன பயன் எனும் கேள்வி இங்கு எழும்புகின்றது. ஆனால் இந்தக் கேள்வியினைக் கேட்பது கிடையாது ஏனெனில் கேள்வி கேட்பதற்கான சுய சிந்தனையை இக்கல்வி கொண்டிருக்கவில்லை. இக் கல்வியினால் உருவாக்கப்படும் சுயசிந்தனையற்றவர்கள் மூலம் அதிகாரம் பாதுகாக்கப்படுகின்றது. அதிகாரத்துக்கு சேவை செய்வதற்கான சேவகர்களை உருவாக்குதே இக்கல்வியின் முக்கிய பணியாக இருக்கின்றது. கடந்த ஆட்சியில் உரத்துக்கு கொண்டுவரப்பட்ட உடனடி கட்டுப்பாடு அது சூழலுக்கு நன்மை பயப்பதாக இருந்தாலும் கூட அது எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதைக் கூட அதிகாரத்துக்கு ஆலோசனை வழங்க முடியாதளவுக்கு சேவகம் செய்யும் தன்மைவாய்ந்த அதிகாரிகளைக் இக்கல்வியே உருவாக்கியிருக்கிறது.
மக்களின் பணத்தை சுருட்டிக் கொண்டு வாழும் அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் பாதுகாக்கின்ற வலையமைப்பையும் இக்கல்வியே கொண்டிருக்கின்றது. ஒரு அரசின் முக்கிய கருவிகளான சட்டத்துறை, நீதித்துறை, நிர்வாகத்துறை ஆகிய அனைத்துமே அதிகாரத்துக்கு சேவை செய்யும் சேவர்களையே முழுக்க முழுக்கக் கொண்டிருக்கின்றது. அதனால் இக்கல்வியினை மாற்றுவதற்கு அதிகாரவர்க்கம் விரும்புவதில்லை. மேலும் மேலும் சுயசிந்தனையற்றவர்களாக ஆக்குவதற்கே முயல்கின்றது. இந்த நிலையினைத்தான் தனிமனிதன் அழிக்கப்பட்டு அதிகார வர்க்கம் பாதுகாக்கப்படுகின்றது எனக் கூறலாம்.
இதற்கு மிக வேடிக்கையான உதாரணங்கள் பல இருக்கின்றன.
யுத்தம் முடிந்த பின் மக்களை சமாதானத்தின் பால் வலுவூட்டல் எனும் நிகழ்ச்சித் திட்டத்தில் கீழ் பல நூறு கோடிகள் செலவிடப்பட்டன, அறிஞர்களும் அதிகாரிகளும் பொதுமக்களுக்கு சமாதானம் தொடர்பான பல வகுப்புக்களையும் பயிற்சிப்பட்டறைகளையும் நடாத்தி தங்களின் மேலதிக வருமானத்தினை அதிகரித்துக் கொண்டார்கள். ஆனால் இங்கு எவருமே யுத்தத்துக்குக் காரணமான அதிகார அரசியல் பற்றியும் அந்த அரசியலால் ஏற்பட்ட யுத்தத்துக்கு, தாங்கள் எவ்வாறு பொறுப்பாக்கப்பட்டோம், பலியாக்கப்பட்டோம், கருவிகள் ஆக்கப்பட்டோம் என்பது தொடர்பாக எதுவிதக் கேள்விகளும் கேட்கவுமில்லை , இவ்வாறான செயல் திட்டங்களை நிராகரித்துக் குரல் எழுப்பவும் இல்லை. யுத்தத்துக்கான காரணகர்த்தவாக யுத்தத்துக்கு பலியாக்கப்பட்ட சாதாரண பொதுமக்கள் பொறுப்பாக்கப்படுகிறார்கள் அதனை அந்த மக்களும் ஏற்றுக்கொள்கிறார்கள்.
இதுபோன்றே டெங்கு நுளம்பு பரவுதலை ஊக்குவிக்கும் காரணிகளாக இருக்கும் ஐஸ்கிறீம் கப், ஜோக்கற் கப் போன்றவற்றை சரியானமுறையில் அவற்றை அகற்றாது விட்டதனால் வீட்டுக்காரர் நீதிமன்றத் தண்டனைக்கு உள்ளாகின்றார். ஆனால் அவற்றை உற்பத்தி செய்து மக்களின் நுகர்வுக்காக விட்டு இந்தச் சூழலை மீளவும் பயன்படுத்த முடியாதளவுக்கு பாதிப்பை ஏற்படுத்திய அந் நிறுவனங்களுக்கு உற்பத்தியைச் செய்வதற்கான அனுமதியும் சலுகைகளும் வழங்கப்படுகின்றன. எய்தவன் இருக்க அம்பை நோகும் இவ்வாறான போக்குகளுக்கு எதிராக கேள்வி எழுப்பி போராடாததோடு சூழலை மாசுபடுத்திய குற்றத்தையும் பொதுமக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடியினால் பொருட்களுக்கேற்பட்ட தட்டுப்பாட்டுக்கு குறிப்பிட்ட ஒரு நபரையே காரணகர்த்தாவாகக் கண்டார்களே தவிர இந்த பொருளாதார நெருக்கடி ஏற்பட்டமைக்கான பொருளாதார, அரசியல், கல்விக் கொள்கைகள் பற்றி கேள்வி எழுப்பினாரில்லை. அதன் பின் எழுந்துள்ள நிபந்தனையுடனான கடன்பொறிகள் மேலும் மேலும் இந்த நாட்டை சாக்கடைக்குள் இழுத்துச் செல்கின்றது என்பது பற்றியும் இலங்கையின் பொருளாதார நிபுணர்களோ அல்லது பல்கலைக் கழக சமூகமோ கேள்வி எழுப்பப் போவதில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த அரசியல் மாற்றத்துக்கு தலைமையேற்றதும் பல்கலைக் கழக சமூகம்மேயாகும்.
கேள்வி கேட்காது அடிபணிந்து ஏற்றுக் கொள்கின்ற அல்லது தவறான காரணங்களைக் கண்டடைகின்ற மேற்படி சம்பவங்கள் முதல் கதையில் சங்கரன் யார் எனக் கேள்வி கேக்காமல் இருந்த அதே சம்பவத்தின் நீட்சியை தெளிவாகக் காட்டுகின்றன.
எனவே பிரச்சினைகளுக்கு சரியான காரணத்தை அறிய முடியாமல் இருக்கின்ற அல்லது அறிந்தும் மறைக்கின்ற கல்வியையும் அந்தக் கல்வியினை எவ்வித விமர்சனங்களுமின்றி ஏற்றுக் கொண்டு அதற்கு நிதியினை செலவிடும் அரசினையும் பொதுமக்கள் கேள்வி கேட்க முன்வரவேண்டும்.