போரில் மாண்ட தலைவனுக்கு அஞ்சலி செலுத்த திராணியற்ற கோளைகள்!!        ஆண்டவர் என்றாலும் மாண்டபின் வந்தவருண்டோ.?

போரில் மாண்ட தலைவனுக்கு அஞ்சலி செலுத்த திராணியற்ற கோளைகள்!! ஆண்டவர் என்றாலும் மாண்டபின் வந்தவருண்டோ.?

(மௌன உடைவுகள் -58)

 ” MANKIND MUST PUT AN END TO WAR BEFORE WAR PUTS AN END TO      

MANKIND “.  -JOHN F. KENNEDY –

” மனித குலத்திற்கு யுத்தம் முடிவு கட்டுவதற்கு முன் , யுத்தத்திற்கு மனிதகுலம்  முடிவுகட்ட வேண்டும்.”   

இன்றைய உலகிற்கு பொருத்தமான இந்த ஜதார்த்தமான வார்த்தைகள்  முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோன்.எப்.கென்னடிக்கு சொந்தமானவை. கென்னடியின் கருத்தை அமெரிக்கா காற்றில் பறக்கவிட்டு எதிர்மறையாக மனித குலத்தை அழித்து தசாப்தங்களாக யுத்தத்தை காப்பாற்றிவருகிறது. உக்ரைன்…… பாலஸ்தீனம்……… பட்டியலில் இலங்கை…… முன்னால் உள்ளது.

30 ஆண்டுகால யுத்த வலிகளை சுமந்த இலங்கை மக்களை – மனித குலத்தை தொடர்ந்தும் அழிக்க “துவாரகா” என்ற பெயரில் ஒரு பூதம் புறப்பட்டு இருக்கிறது. மனித குலத்தை யுத்தம் அழிக்கும் முன், யுத்தத்தை அழிக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் இருதரப்பு யுத்தப்பிரியர்களால் தோற்கடிக்கப்பட்டன. அழிந்தது மனிதகுலம். அழிவுக்கு பின்னர் ஈழத்தமிழர்கள் மத்தியில் கொஞ்சமாவது எஞ்சிக்கிடக்கின்ற மானிடநேயத்தை, மத நம்பிக்கை பண்பாட்டு பாரம்பரியங்களை மட்டும் அல்ல கொல்லப்பட்டவர்களை மீண்டும் ஒருமுறை சாகடித்தே  தீருவோம் என்று ஒரு கூட்டம் கங்கணம் கட்டி நிற்கிறார்கள் .

கவிஞர் காசி.ஆனந்தன் வார்த்தைகளில் “தலைமகள் துவாரகா களமாட வருகிறாள்”. “என்.ஜி.ஓ. அமைத்து புலத்தில் நிதிசேகரித்து நிலத்தில் அரசியல் செய்ய சகோதரி வருவார் ” என்று கூறுகிறார் போராளிகள் கட்சி க.இன்பராசா. “துவாரகாவின்  உரைக்கு பின்னால் பிரபாகரன் இருக்கிறார்” .இது பழ.நெடுமாறன். இவர்களைப்போன்று இன்னும் சிலர் வாயில் வருவதை உளறித்தள்ளுகிறார்கள்.  எனினும் ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களில் அதிகப்பெரும்பான்மையினரும், விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்களும் இந்த பொய்க்கும், புரட்டுக்கும், புனைகதைக்கும் எதிராக குரல்கொடுத்து வருகிறார்கள். இது மாற்று கருத்தாளர்களுக்கு எதிராக புலிகளே வளர்த்து விட்ட  “புனை கதை கலாச்சாரம்” இப்போது  அவர்களில் ஒருபகுதியினர் அதற்கு எதிராக போராட வேண்டிய நிலை.

இந்த விவகாரம் தொடர்பாக பல் பக்க நோக்கு தேவைப்படுகிறது. இது துவாரகா உண்மையா? பொய்யா? அசலா ? நகலா? என்பதற்கு அப்பால் ஈழத்தமிழர்கள் மத்தியில் ஒரு புதிய அரசியல் கலாசாரத்தை விதைக்க வேண்டிய அவசிய தேவையைக்கொண்டது. ஆயுதப்போராட்ட காலத்தில் புறநானூற்று பெரும் புகழ்பாடி அப்பாவி இளைஞர்களை ஆட்சேர்ப்பு செய்தவர்கள், கேவலம் களத்தில் வீரச்சாவடைந்த தங்கள் தலைவர் குடும்பத்திற்கு பொதுவெளியில் அஞ்சலி செலுத்தவும், போரில் மாண்டதை ஏற்கவும் திராணியற்ற கோளைகளாக நிற்கிறார்கள். இது தனிநபர் வழிபாடு மீதான பக்தி அரசியல் தர்மசங்கடம்.

தூவாரகா ஏன் சுவிஸில் உயிர்த்தெழுந்தாள்….? உயிர்த்த தின கட்டுக்கதையால் நன்மை அடையப்போகிறவர்கள் யார்….?  இதற்கு பின்னணியில் உள்ள பிராந்திய,  சர்வதேச  அரசியல் சதி என்ன….?  இவர்களுக்கு பின்னால் காசி.ஆனந்தன் – பழ.நெடுமாறன் கும்பல் ஏன் ஒத்தோடுகிறது….? யாருடைய இருப்பை தக்க வைக்க துவாரகா தேவைப்படுகிறாள்……?   இதற்கு பின்னால் உள்ள பண மோசடி எதுவரை போகும்…..? இப்படி  துவாரகா விவகாரத்தில் பதில்களைத் தேடவேண்டிய கேள்விகளே அதிகம்? இது ஒன்றும் புதிதல்ல. இது புலிகளின் அரசியல் பொதுநிலை. பதில்களற்ற கேள்விகளோடு கடந்த முப்பது ஆண்டுகளை கடத்திய அரசியல் சூனியத்தில் இதைத்தவிர போராட்டத்தின் எச்சமாக வேறு எவற்றை எதிர்பார்க்க முடியும்?

துவாரகா மேட் இன் சுவிஸ்……!

——————————–

பிரபாகரன் குடும்பத்தை மறுபிறப்பு – மீள் உருவாக்கம் செய்வதற்கு சுவிஸைப்போன்று  வாய்ப்பான வேறு ஒரு நாடு உலகில் இருக்கமுடியாது. உலகில் முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் பயங்கரவாத இயக்கமாக தடை செய்யப்பட்டுள்ள புலிகள் அமைப்பு சுவிஸில் தடைசெய்யப்படவில்லை. அல்கைதா, ஐ.எஸ்.எஸ். இயக்கங்களே தடைசெய்யப்பட்டுள்ளன. ஹாமாஸ் தடைபற்றி அரசியல் மட்டத்தில் தற்போது பேசப்படுகிறது.  இந்த நிலையில் அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றிய சூழலில் பிரபாகரன் குடும்பத்தை உயிர்ப்பித்தல் இதன்  சூத்திரதாரிகளுக்கு சட்டச் சிக்கல்களை ஏற்படுத்திவிடும் என்பதால் சுவிஸ் சூழல் மட்டுமே இவர்களுக்கு இப்போதைக்கு சாதகமானது.

குறிப்பிட்ட  மாறுவேடக்காரி சுவிஸில் அகதி அந்தஸ்து பெற்றவர் என்பதால்  ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான பயணம் இலகுவானது. புலிகளைத் தடைசெய்துள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் எல்லை கடந்த நிதிசேகரிப்பை  செய்வதற்கு இது உதவும்.. வெளியாருக்கு  அடையாளம் தெரியாத கறுப்புக்கண்ண்ணாடி காரில், முக்காடு போட்டு முகம் மறைத்து முடிந்ததைச் செய்ய முடியும். இதில் இதுவரை பெண் என்றால் பேயும் இரங்கும் வலையில் சிலர் சிக்கியிருக்கிறார்கள். காசி.ஆனந்தனுக்கு எலும்பு முறிவு வைத்தியம் செய்ய மிதுஷியா  இந்தியா போனாலும் ஆச்சரியம் இல்லை.

இதன் முக்கிய பின்னணி “பணப்பறிப்பு” என்பதால் மாபியாக்களுக்கான காசுமரம் சுவிஸில் காய்க்க காலநிலை பொருத்தமாக உள்ளது. போராட்ட காலத்தில் அதிக நிதிப்பங்களிப்பை வழங்கிய மக்கள் சுவிஸ் தமிழர்கள். தாலிக்கொடி நடராஜா முரளிதரன் புலிகளின் பொறுப்பாளராக இருந்த காலம் முதல்  இந்த கட்டாய நிதி திரட்டல் ஆரம்பமானது. துரதிர்ஷ்டவசமாக புலத்திலும், நிலத்திலும் புலிகளால் இருந்த அச்சுறுத்தல் காரணமாக இதற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க மக்கள் தயங்கினர்.  சுவிஸ் புலிப்பொறுப்பாளர் குலத்தின் காலத்திலும் 2009வரை இது தொடர்ந்தது.

மக்களை அச்சுறுத்தும் புலிகளின் பாணி, தமிழீழ அடையாள அட்டை அச்சுறுத்தல், விடுமுறைக்கு ஊருக்கு போகும்போது முகமாலையில் சுவிஸில் பணம் வழங்கியதை உறுதிப்படுத்த வேண்டிய நிலை, அதிகபணம், தாலிக்கொடி, நகைகள் போன்றவற்றை முன்கூட்டிய ஏற்பாட்டில் திட்டமிட்டு உண்டியலில் போடவைத்து மற்றையவர்களுக்கு மண்டைச்சலவை செய்த உளவியல் போன்றவற்றிற்கு பின்னால் பிராபாகரன் குடும்பம் இன்னும் உயிரோடு இருக்கிறது என்று கூறுகின்றவர்கள் இருந்தார்கள் /இருக்கிறார்கள். 

தங்களை படைப்பாளிகள், வெளியீட்டாளர்கள், தொகுப்பாளர்கள், கலைஞர்கள், நாடககாரர்கள் என்றெல்லாம் கூறிக்கொண்டும், ஜெனிவாவுக்கு காவடி எடுத்துக் கொண்டும் இருப்பவர்கள் முரளியின் அட்டூழியங்களுக்கு மௌனம்காத்தது போன்று இன்றும் காக்கிறார்கள். உலகத்தமிழர் ஒருங்கிணைப்பு குழு, தமிழர் புனர்வாழ்வுக்கழகம், கல்விக்கழகம், கலைபண்பாட்டுக்கழகம் , இளையோர் அமைப்பு, சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு போன்றவற்றின் மரியாதைக்குரிய மனிதர்களாக இவர்கள் இன்னும் நடமாடுகிறார்கள். சர்வதேச, மற்றும் ஐரோப்பிய டயஸ்போரா அமைப்புக்களும் இது விடயத்தில் ஊமையாகிவிட்டன.

சுவிஸ் சட்டமா அதிபர் திணைக்களம் 13 புலி சந்தேகநபர்களுக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கில் போதுமான சாட்சியங்களை அரசதரப்பால் சமர்ப்பிக்க முடியவில்லை. மக்கள் கட்டாயத்தின் பேரில் நிதி செலுத்தினார்கள் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இருக்கவில்லை. இதற்கு ஒரு முக்கிய காரணம் கட்டாயப்படுத்தி, போலியான ஆவணங்களை தயாரித்து, கணவனுக்கு தெரியாமல் மனைவியும், மனைவிக்கு தெரியாமல் கணவனும் வங்கிக்கடன்களை பெற்றுக்கொடுத்து இருந்தார்கள். அதை வட்டியுடன் திருப்பி செலுத்துவதை இயக்கம் பொறுப்பெடுத்து இருந்தது. 2009 க்குப் பின்னர் இதில் ஏற்பட்ட சிக்கல் பல குடும்பங்களை பிரித்தது , குடும்ப வன்முறை அதிகரித்தது, பிள்ளைகள் பராமரிப்பு இல்லங்களில் வளர்ந்தார்கள். நீதி மன்றத்தில் ஆதாரம் இல்லை என்பதற்காக புலிகள் சட்டப்படி குற்றமற்றவர்களாக இருக்கலாம் , சுவிஸ் மக்கள் மன்றத்தில்….?

சுவிஸ் அரசு தொடுத்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது அழைத்து வரப்பட்ட  சுமார் 150 பேர்  நீதிமன்றம் முன் சுவிஸ் புலிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் செய்தனர். 5,200 பேர்  சந்தேகநபர் சுவிஸ் புலிப்பொறுப்பாளர் குலத்திற்கு ஆதரவாக கையொப்பமிட்ட மனுவை புலிகளின் சட்டத்தரணி நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  போலி ஆவணங்களை தயாரித்தது மட்டும் குற்றமாக கொள்ளப்பட்டது. சுமார் 55,000 க்கும் அதிகமான ஈழத்தமிழர்கள் வாழ்கின்ற சுவிஸில் இவர்கள் வெறும் 10 வீதம் . இந்த நிலையில்தான் துவாரகா என்று காட்சிப்படுத்தக்கூடிய ஒருவர் சுவிஸில் கிடைத்ததும் நிலத்திலும், புலத்திலும் உள்ள ஈழத்தமிழர்களின் துரதிஷ்டம்.

மறு பிறப்பின் பின்னணி அரசியல் …..!

———————————————————————–

“துவாரகா ” நாடகத்தின் தயாரிப்பாளர்கள் இந்திய மத்திய ஆட்சி அதிகாரத்தின் கைக்கூலிகளாக இருக்கிறார்கள். பாரதீய ஜனதாவின் பச்சை இந்துத்துவ மதவாத அரசியலை முற்று முழுதாக நியாயப்படுத்துபவர்கள். இதில் இரண்டு விடயங்கள் மறைந்துள்ளன

ஒன்று: ஈழத்தமிழர்கள் இந்துக்கள் என்ற காட்டப்படுவதன்மூலம் குறுக்கு வழியில் இந்திய மத்திய அரசின் ஆதரவை ஈழப்போராட்டத்திற்கு பெறமுடியும் என்று கூறுபவர்கள். இவர்கள்தான் பழ.நெடுமாறன்- காசி ஆனந்தன் அணி, மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சியை சேர்ந்தவர்கள். இவர்களின் டெல்லி சந்திப்புகள் இதற்கு சான்று. இவர்களை இந்திய முன்னாள் புலனாய்வாளர்கள் நெறிப்படுத்துவதாக கூறப்படுகிறது. இவர்கள் பிராபாகரன், பொட்டம்மான் குடும்பம் இறுதி யுத்தத்தில் தப்பிவிட்டார்கள் என்று காசுக்கு கதையளப்பவர்கள். இந்தியாவே  அவர்களை காப்பாற்றியது என்று கூறுபவர்கள். இத்தனைக்கும் இவர்கள் புலிகள் மீதான தடை நீக்கத்துக்கு எதிரான வட இந்திய கருத்தியலைக்கொண்டவர்கள்.  

ஆனால் தடை நீக்கம் முக்கியமல்ல புலிகள் இந்தியாவுக்குள் சட்டரீதியாக நுழையவும், ஒன்று கூடவும் தடையில்லை என்றும், இந்தியா உதவிகளை வழங்கவும் தடையில்லை என்றும் கூறுகிறார்கள். இந்த கால்கழுவும் அரசியலே காசி.ஆனந்தனுடையது. இதன் மூலம் இந்தியாவுக்கும் இவர்களுக்கும் இடையிலான தொடர்பை மையப்படுத்தி பிராபாகரன் குடும்பம் உயிரோடு இருக்கிறது என்ற அச்சத்தை இலங்கை அரசுக்கு ஏற்படுத்துவது. இது சிங்கள பௌத்த பேரினவாத அரசியல்வாதிகள் புலிகளின் மீள் உருவாக்கம் பற்றி உரத்து பேச களம் அமைக்கிறது. இதனூடாக வடக்கு கிழக்கில் நெருக்கடியை ஏற்படுத்தி அதிலிருந்து கட்சி அரசியல் இலாபத்தை பெற்றுக்கொள்வது. 

இரண்டு: சீனாவுக்கு எதிரான இந்திய சார்பு நிலைப்பாடு. உண்மையில் இந்தியா ஈழப்போராட்டத்தில் தலையிட்டு வளர்த்தும், அழித்தும் விட்ட செயற்பாடுகளுக்கு எண்ணற்ற ஆதாரங்கள் உண்டு. இதை விடுதலைப்புலிகளைவிடவும் அதிகம் தெரிந்திருப்பவர்கள் எவரும் இருக்கமுடியாது. இந்த நிலையில் இந்தியாவை திருப்திப்படுத்துவதற்காக தமிழ்த்தேசிய அரசியல் சீன எதிர்ப்பு அரசியல் பேசுகிறது.

 உண்மையில்  இவர்கள் இரு பிராந்திய வல்லரசுகளையும், ஆதிக்க சக்திகளையும் ஒன்றாகப்பார்க்காமல் எடுப்பார் கைப்பிள்ளையாக இந்தியாவின் சீன எதிர்ப்பு கொள்கையேயே தத்தெடுத்துள்ளனர். இதை பிரபாகரனின் வருகையின் மூலம் இப்படி நியாயப்படுத்துகின்றனர்:  “புலிகளின் மீள்வருகை இந்தியாவுக்கு பாதுகாப்பு, புலிகள் இருக்கும் வரை சீனா இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் வாலாட்ட முடியாது”. இது இன்றைய சீனாவின் உலகமயமாக்க  சர்வதேச சமூக, பொருளாதார, அரசியல் பட்டுவீதி கடற்பரப்பு ஆதிக்கத்தில் குருடனுக்கு யானைகாட்டிய கதை. 

இலங்கையின் தமிழ்த்தேசிய பாராளுமன்ற அரசியலுக்கு துவாரகாவின் அசல், நகல் தெரியும். அதை வெளிப்படையாக பேசுவது புனிதமான பாராளுமன்ற கோயில் வழிபாட்டுக்கு தெய்வப்பழியாகிவிடும். ஒரு கட்சி உண்மையை போட்டுடைத்தால் மறுகட்சிக்கு வாக்கு பெட்டி உடைக்கப்படும்போது அதன் விளைவு வெளிப்படும்.  ஈழப்போராட்டம் எவ்வாறு பொய்மைகாளால் கட்டிவளர்க்கப்பட்டு வியாபார அரசியலானதோ அந்த நிலை தொடர்வதையே இவர்கள் விரும்புவார்கள்.  அதையே செய்கிறார்கள்.

சர்வதேச அரசியல் தாக்கம்….!

——————————-

யுத்தம் முடிவடைந்த கையோடு காணாமல்  ஆக்கப்ப்பட்டவர்கள் என்ற பட்டியலில் இருந்தவர்கள் திரும்பிவந்தார்கள், சிலர் வெளிநாடுகளில் அரசியல்தஞ்சம் கோரினார்கள். இன்னும் சிலர் இலங்கை சிறைகளில் -முகாம்களில் இருப்பது தெரியவந்தது. இந்த சில்லறை நிகழ்வுகளுக்கு அப்பால் போர்க்குற்ற விசாரணை, வெள்ளைக்கொடி விவகாரம், யுத்தமீறல்கள், இனப்படுகொலை என்ற பல குற்றச்சாட்டுக்கள் சர்வதேசத்தின் – நிறுவனங்களின் உதவியுடன் இலங்கை அரசு மீது வைக்கப்பட்டது.

ஆனால்   வேடதாரி துவாரகாவோ ” அப்பாவும், அம்மாவும்” சுகமாக இருக்கிறார்கள் என்று கூறி ஊர் வாயை அடைக்க முயற்சித்துள்ளார். யுத்தம் மௌனிக்கப்பட்டு 14 ஆண்டுகள் தொடர்ந்தும் மனித உரிமைகள் பேரவையில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக பிராபாகரன் – மதிவதனி தம்பதியரின் மகன் பாலச்சந்திரன்  கொலை பல கேள்விகளை எழுப்பியது. பல ஆவணங்கள், முறைப்பாடுகள், புகைப்படங்கள், வீடியோக்கள் எல்லா விசாரணை பனல்களுக்கும் சேர்க்கப்பட்டது. இப்போது பிரபாகரன், பொட்டம்மான் குடும்பம் இருக்கிறார்கள். இன்னும் எத்தனை குடும்பங்கள் உயிரோடு இருக்கின்றன…..?

சர்வதேசம் இந்த விசாரணையை தொடர்வதா ? அல்லது பிரபாகரன் குடும்பம் திரும்பிவிட்டது என்று விசாரணைகளை இரத்துசெய்வதா? இலங்கை அரசு எமது படையினர் மீதான குற்றச்சாட்டுக்களை நிராகரித்து முக்கிய புள்ளிகள் உயிரோடு இருக்கிறார்கள் என்று கூறப்போகிறது, பயங்கரவாதத்திற்கும், புலிகள் மீதான தடை க்கும் சாதகமான சூழலை துவாரகா இலங்கைக்கு வழங்கியுள்ளார். 

போராளிகள் கட்சியின் கதிரை அரசியலுக்கு இவை மூலதனம். அதன் மூலமான பக்க விளைவுகளுக்கு  நிவாரணம் வழங்க புலம்பெயர்ந்த மக்களின் நிதியியல் என்.ஜி.ஓ. தோல்வி அடைந்த ஆயுதப்போராட்டம் ஒன்றின் அடையாளங்களை போராடியவர்களை  கொண்டே எப்படி வேரோடு அழிப்பது என்பதற்கு உலகில் மிகப்பிந்திய  உதாரணம் இதை விடவும் வேறு என்ன இருக்கமுடியும்.?

       “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் “.