தமிழ்க் கட்சிகளின்  ஐக்கியத்துக்கு சிவில் சமூகத்தின் முயற்சி 

தமிழ்க் கட்சிகளின்  ஐக்கியத்துக்கு சிவில் சமூகத்தின் முயற்சி 

—- வீரகத்தி தனபாலசிங்கம் —

   மக்கள் முறைப்பாட்டுக்கான குழு என்ற பெயரில் இயங்கும் வடக்கு — கிழக்கு சிவில் சமூக அமைப்பு யாழ்நகரில் தந்தை செல்வா கலையரங்கில் நவம்பர் 18 சனிக்கிழமை மாலை அரசியல் கருத்தாடல் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.

   அதன் நோக்கம் தமிழ் அரசியல் கட்சிகள்  மீண்டும் ஐக்கியப்பட்டு தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைக் கையாளுவதற்கு ஒருங்கிணைந்த அணுகுமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்துவதேயாகும்.

 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பொன். பாலசுந்தரம்பிள்ளை தலைமையில் நடைபெற்ற அந்த நிகழ்வில் அரசியல் ஆய்வாளர்களான யதீந்திரா, நிலாந்தனுடன் இந்த கட்டுரையாளரும் கருத்துக்களை முன்வைத்தனர்.

  சபையோரில் அதிகப் பெரும்பாலானவர்கள் அரசியல்வாதிகளாகவும்  அரசியல் மற்றும் சமூக  ஆர்வலர்களாகவுமே இருந்தனர். குறிப்பாக எந்த தமிழ்க் கட்சிகள் மீண்டும் ஐக்கியப்படவேண்டும் என்று சிவில் சமூக அமைப்பு எதிர்பார்க்கிறதோ அந்த கட்சிகளில் முக்கியமானவற்றின் தலைவர்கள் கலந்து கொண்டார்கள்.

  அரசியல்வாதிகள் பலரினதும் வருகை  கருத்தாடலை ஏற்பாடு செய்த சிவில் சமூக அமைப்புக்கு  திருப்தியளித்திருக்கக்கூடும். மீண்டும் ஐக்கியப்பட்டுச் செயற்பட  வேண்டியவர்கள் என்று எதிர்பார்க்கப்படுபவர்களுக்கு நேரடியாகவே  செய்தியைக் கூறுவதற்கு கருத்தாடல் வாய்ப்பைக் கொடுத்தது.

  இந்த நிகழ்வின் பின்புலம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. சில தூதரகங்கள் இந்த சிவில் சமூக அமைப்புக்கு ஊக்கம் கொடுத்து கருத்தாடலை ஏற்பாடு செய்வித்ததாகவும்  கூட சில ஊடகங்களில் கருத்துக்கள் வெளியாகின. இலங்கை அரசியல் பரப்பில் எத்தகைய நடவடிக்கை   முன்னெடுக்கப்பட்டாலும், இன்றைய புவிசார் அரசியல் நிலைவரங்களின்  அடிப்படையில் இத்தகைய விமர்சனங்கள் முன்வைக்கப்படுவது  வழமையாகிவிட்டது.

     அரசியல்வாதிகளை அழைத்துவந்து பத்திரிகைகளுக்கு கட்டுரைகளை வரைபவர்கள் மூவரைக்கொண்டு அவர்களுக்கு ‘வகுப்பு’ எடுத்தது போன்று அந்த நிகழ்வு இருந்ததாகவும் சில  ஊடகவியலாளர்கள் மறுநாள்  எழுதியதையும் காணக்கூடியதாக இருந்தது. இது  உண்மையில் அங்கு உரையாற்றியவர்களுக்கு  தமிழ் அரசியல் சமுதாயத்தின் ஐக்கியத்தில் இருக்கும் தனிப்பட்ட நலன்களுக்கு அப்பாற்பட்ட அக்கறையை கொச்சைப் படுத்துவதற்கு ஒப்பானதாகும். 

  எது எவ்வாறிருந்தாலும்,  தமிழ்க் கட்சிகள் மத்தியில்  மீண்டும் ஐக்கியம் ஏற்படவேண்டும் என்ற சிவில் சமூகத்தின்  அக்கறையில் தவறு காண்பதற்கு என்ன இருக்கிறது?  ஒரு புறத்தில் இன்றைய சூழ்நிலையில் தமிழ்க் கட்சிகளிடையே  ஐக்கியத்தை ஏற்படுத்துவது எந்தளவுக்கு நடைமுறைச் சாத்தியமானது என்ற கேள்வி இருக்கின்ற போதிலும், மறுபுறத்தில்  தமிழர்கள் மத்தியில் எந்தளவுக்கு இன்று ஐக்கியம் அத்தியாவசியமானதாக  இருக்கிறதோ அதேயளவுக்கு மறுதலையாக தமிழ் அரசியல் சமுதாயம் பிளவுண்டு சிதறிக்கிடக்கிறது என்பதே யதார்த்தமாகும்.

  நிகழ்வுக்கு வந்திருந்த அரசியல் தலைவர்கள் கருத்தாடலின் முடிவுக்கு பிறகு  தனிப்பட்ட முறையில் வெளிக்காட்டிய பிரதிபலிப்புக்கள் மீண்டும் ஐக்கியப்பட்டு செயற்படுவதில் அவர்கள் அக்கறை காட்டக்கூடிய சாத்தியம் குறித்து வலுவான சந்தேகத்தைக் கிளப்புகிறது.

   அரசியல் ஆய்வாளர்களும் பத்திரிகையாளர்களும் ஏன் அரசியல்வாதிகளும் கூட வழமையாகப் எழுகின்ற,பேசுகின்ற ஒரு விடயம் இருக்கிறது. 

  அதாவது கடந்த கால அனுபவங்களில் இருந்து  முறையான பாடங்களைப் பெற்றுக்கொண்டு உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலைவரங்கள் வேண்டிநிற்பதற்கு இசைவான முறையில்  போரின் முடிவுக்கு பின்னரான காலகட்டத்தில் அடிப்படைக் கோட்பாடுகளைக் கைவிடாமல் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு  நகர்த்துவதுவதற்கான பாதையை  வகுக்கவேண்டும் என்று கூறுவார்கள்.

  ஆனால், எவருமே கடந்த கால அனுபவங்களில் இருந்து   பாடங்களைப் படித்திருப்பதாகக் கூறமுடியாது. உண்மையில் சொல்லப்போனால் ஜேர்மன் தத்துவஞானி ஹெகலின் பிரபல்யமான கூற்று ஒன்றை  நினைவுபடுத்துவது பொருத்தமானதாகும்..

  வரலாற்றில் இருந்து நாம் படித்திருக்கக்கூடிய பாடம் வரலாற்றில் இருந்து எவரும் பாடம் படிப்பதில்லை என்பது மாத்திரமே என்று அவர் கூறினார். 

  தங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு  தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் ஐக்கியப்பட்டு செயற்படவேண்டும் என்பது தமிழ் மக்களின் அக்கறையாக இருக்கின்றபோதிலும், அது ஒரு வெகுஜனக் கோரிக்கையாக  தற்போது  பொதுவெளியில்  வெளிக்கிளம்ப முடியாமல் இருப்பதற்கு காரணம் எமது  அரசியல்வாதிகள் மீது மக்கள்  பெருமளவுக்கு நம்பிக்கையை  இழந்துவிட்டதேயாகும். அதற்கான காரணங்களை அடுக்க இங்கு இடவசதி போதாது.

   தமிழ்க் கட்சிகளின் ஐக்கியத்தைப் பற்றி மீண்டும் பேசப்படுகின்ற நிலையில் கடந்த காலத்தை நாம் ஒரு தடவை திரும்பிப்பார்க்க வேண்டும்.

  பிரதமர் சிறிமா பண்டாரநாயக்க தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட முதலாவது குடியரசு அரசியலமைப்பு (1972) தமிழ் மக்களின் நியாயபூர்வமான அரசியல்  அபிலாசைகளை நிராகரித்ததைத் தொடர்ந்து அன்றைய பிரதான  தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து  உரிமைப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு  தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியை உருவாக்கினார்கள்.

   அவர்கள் முன்னெடுத்த செயற்பாடுகள் இறுதியில் 1976 வட்டுக்கோட்டை தீர்மானமாக வந்து பிறகு ஆயுதப் போராட்டம் தீவிரமடைந்து உள்நாட்டுப் போராகி அதுவும் முடிவுக்குவந்து இப்போது பதினைந்து வருடங்களைக் கடந்துவந்து நிற்கிறோம். 

  1970 களில் தமிழ்க் கட்சிகள் மத்தியில் ஏற்பட்டதைப்  போன்ற அரசியல்  உணர்ச்சிபூர்வமான ஐக்கியத்தை இலங்கைத் தமிழர் அரசியல்  வரலாற்றில் முன்னொருபோதும் நாம் கண்டதில்லை.

   அதற்குப் பிறகு  மூன்று தசாப்த காலப் போரில் பெரும் அழிவுகளையும் உயிரிழப்புகளையும் அனுபவித்து வழமையான வாழ்வுக்கு திரும்புவதற்கு தமிழர்களில் பெரும்பான்மையானவர்கள் இன்னமும்  போராடிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் அரை நூற்றாண்டுக்கு பிறகு தமிழ்க் கட்சிகளின் ஐக்கியம் பற்றி பேசப்படுகிறது.

  போரின் முடிவுக்கு பிறகு உடனடியாக தமிழர்கள் மத்தியில் கட்டுறுதியான அரசியல் சமுதாயம் ( Polity) ஒன்று   இருக்கவில்லை. ஆயுதப் போராட்ட காலத்தில் மிதவாத தமிழ் அரசியல் சக்திகளின் செயற்பாடுகள் அமுங்கிப்போனதே அதற்கு பிரதான காரணம். 

  தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் சகல அம்சங்களிலும் ஆயுதப் போராட்ட இயக்கங்கள்  ஆதிக்கம் செலுத்துவதைத்  தடு்க்கக்கூடிய அரசியல் துணிவாற்றலும்  விவேகமும் கொண்ட மிதவாத தமிழ் அரசியல் தலைவர்கள் எம்மத்தியில் இருக்கவில்லை.

   தென்னாபிரிக்காவில் இன ஒதுக்கலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான கறுப்பின மக்களின் விடுதலை போராட்டத்துக்கு தலைமை தாங்கிய  ஆபிரிக்க தேசிய காங்கிரஸில் ஆயுதப்போராட்ட இயக்கங்களும் இருந்தன. ஆனால் அந்த இயக்கங்களினால்  விடுதலைப் போராட்டத்தை முழுமையாக அவற்றின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முடிந்ததில்லை. தமிழர்களின் போராட்டத்தில் அத்தகைய நிலை இருக்கவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது.

   தமிழர்கள் மத்தியில் பெருவாரியான ஆயுதப்போராட்ட இயக்கங்கள் தோன்றியதும் அவற்றில் பல இயக்கங்கள் அயல்நாட்டின் உளவுப் பிரிவுகளினால் கையாளப்பட்டமையும் இயக்கங்களுக்கு இடையிலான  சகோதரப் படுகொலைகள் தமிழ் மக்களின் நியாயபூர்வமான  போராட்டத்தின் தோல்விக்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக அமைந்ததும் தமிழர் அரசியல் போராட்டத்தின் மிகவும்  கசப்பான அனுபவங்கள்.

  போர்க்காலத்தில் பல தமிழ்க் கட்சிகளை ஐக்கியப்படுத்தி அமைக்கப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பிடமே போருக்கு பின்னரான தமிழர்களின் தலைமைத்துவம் தானாக வந்து சேர்ந்தது. தமிழர்கள் மத்தியில் கட்டுறுதியான அரசியல் சமுதாயத்துக்கு இருந்த வெற்றிடத்தை நிரப்பவேண்டிய பொறுப்பு அன்று கூட்டமைப்புக்கே இருந்தது.

  தேர்தல்களில் கூட்டமைப்புக்கு வாக்களிப்பதைத் தவிர வடக்கு, கிழக்கு தமிழர்களுக்கு வேறு தெரிவு இருக்கவில்லை. தேர்தல்கள் போன்ற ஜனநாயக செயன்முறைகளில் பங்கேற்பதை தவிர தமிழர்களுக்கு வேறு மார்க்கமும் இருக்கவில்லை.  

   அந்த நிலைவரம்  கணிசமான காலப்பகுதிக்கு நீடித்து இன்று பதினைந்து வருடங்கள் கடந்த நிலையில் என்ன மிஞ்சியிருக்கிறது? சிதறுண்ட ஒரு அரசியல் சமுதாயமே தமிழர்கள் மத்தியில் இருக்கிறது.

 தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட நாள் தொடங்கி அதன் தலைவராக இருந்துவந்த இரா.சம்பந்தன் அவர்கள் தமிழ் அரசியல் கட்சிகளின்  ஐக்கியத்தை பேணிப்பாதுகாத்து கூட்டமைப்பை வலுவான ஒரு அரசியல் இயக்கமாக கட்டியெழுப்பத் தவறிவிட்டார். வரலாறு  வேண்டிநின்ற கடமையை அவரால்  நிறைவேற்ற முடியாமற் போய்விட்டது.

    ஆறு தசாப்தங்களுக்கும் அதிகமான கால அரசியல் அனுபவத்தைக் கொண்ட சம்பந்தனிடம்  தமிழர்கள் எதிர்பார்த்த வகிபாகத்தை உரிய முறையில் அவரால்  கையாளமுடியவில்லை..

   சம்பந்தன் அவர்கள் நீண்ட அரசியல் வாழ்வைக் கொண்டிருந்தாலும், அவரது அரசியல் மரபு (Political Legacy ) என்று அமையப்போவது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக அவர் முன்னெடுத்த செயற்பாடுகளும் கடைப்பிடித்த அணுகு முறைகளுமேயாகும்.

   சம்பந்தன் பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறக்கவேண்டும் என்று அண்மையில் யாழ்ப்பாண மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்த கருத்தை அடுத்து இது குறித்து முன்னரும் குறிப்பிடப்பட்டது.

       கட்சி அரசியல் மாச்சரியங்களுக்கு அப்பால் தமிழ் மக்களின் நலன்களை மனதிற்கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளின்  தலைவர்கள் கட்டுக்கோப்பாக பிரச்சினைகளைக்  கையாளக்கூடிய அணுகுமுறைகளை கடைப்பிடித்திருக்கவேண்டும். ஆனால், பாராளுமன்ற தேர்தல்களின்போது அவர்களிடம் காணப்பட்ட  ஐக்கிய உணர்வை பிறகு காணமுடிந்ததில்லை.

   ஆயுதப்போராட்டத்தைக் கைவிட்டு ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் இணைந்துகொண்ட  தமிழ் இயக்கங்களும் கூட்டமைப்பில் அங்கம் வகித்தன. ஜனநாயக அரசியல் தொடர்பில் அந்த இயக்கங்களுக்கு இருக்கக்கூடிய தடுமாற்றங்கள் அல்லது குறைபாடுகளை மனதிற்கொண்டு நீண்ட பாரம்பரியத்தையுடைய இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவர்களான சம்பந்தன், மாவை சேனாதிராஜா போன்றவர்கள் கூட்டமைப்பை குலையவிடாமல் வைத்திருப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்திருக்கவேண்டும். ஆனால் அவர்களும் தொலைநோக்கு இன்றி தங்களது கட்சி அரசியல் நலன்களின் அடிப்படையில் சிந்தித்து செயற்பட்டதே கூட்டமைப்பை உறுதியான ஒரு அரசியல் இயக்கமாக கட்டியெழுப்ப முடியாமல் போனதற்கு முக்கிய காரணமாகும். 

   எல்லாவற்றுக்கும் மேலாக, தற்போது காவரையறையின்றி ஒத்திவைக்கப் பட்டிருக்கும் உள்ளூராட்சி தேர்தல்களுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் கூட்டமைப்பில் பிளவு ஏற்பட்டு சில கட்சிகள் தனிவழியில் போனது தேர்தல் அரசியலில் அவர்கள் எந்தளவுக்கு தங்கள் தனித்தனி நலன்களை மாத்திரம் பேணுவதில் அக்கறையாக இருந்தார்கள்  என்பதை பிரகாசமாக அம்பலப்படுத்துகிறது.

  தமிழரசு கட்சி உட்பட இந்த கட்சிகள் சகலதுமே தமிழ் மக்கள் மத்தியில்  தங்களது தனித்தனியான செல்வாக்கை பரீட்சித்துப் பார்ப்பதற்கான ஒரு களமாக உள்ளூராட்சி தேர்தல்கள் அமையும் என்று எதிர்பார்த்தன. ஆனால், அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.

    சகல தமிழ்க் கட்சிகளுமே இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறையை அடிப்படையாகக் கொண்ட தீர்வையே நாடி நிற்கின்றன. அவற்றில் ஒரு கட்சியைத் தவிர மற்றையவை இடைக்கால ஏற்பாடாக பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு மாகாணசபை தேர்தல்கள் நடத்தப்படவேண்டும் என்று கோருகின்றன. அத்துடன் உள்நாட்டில் தமிழ் மக்களை அணிதிரட்டி ஜனநாயக அடிப்படையிலான போராட்டங்களை முன்னெடுத்து அரசாங்கத்துக்கு நெருக்குதலைக் கொடுப்பதற்கான வலுவைக் கொண்டிராத இந்த கட்சிகள் சர்வதேச சமூகத்தின் ஆதரவை நாடுவதை முக்கியமான தந்திரோபாயமாக கடைப்பிடிக்கின்றன.

   இத்தகைய ஒரு பின்புலத்தில், வடக்கு,கிழக்கு மாகாணங்களின் குடிப்பரம்பலை மாற்றியமைக்கும் நோக்குடன் அரசாங்கத்தின்  அனுசரணையில்  சிங்கள பௌத்த பேரினவாதச் சக்திகள் இராணுவத்தின் உதவியுடன்  தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் நில அபகரிப்பு மற்றும் பௌத்தமயமாக்கல் செயற்பாடுகள் உட்பட தமிழ் மக்கள் எதிரநோக்குகின்ற பெருவாரியான உடனடிப்  பிரச்சினைகளைக் கையாளுவதற்கு ஒன்றிணைந்து  செயற்படுவதில் என்ன தடை இருக்கிறது? 

   தேசிய இனப்பிரச்சினை 20 ஆம் நூற்றாண்டின் பெரும்பாலான காலப்பகுதியில் இருந்த தோற்றப்பாட்டில் தற்போது இல்லை என்று கனடாவில் வசிக்கும் இலங்கை அரசியல் ஆய்வாளர் ராஜன் பிலிப்ஸ் அவர்கள் அண்மையில் தெரிவித்த கருத்தை எமது தமிழ் அரசியல் தலைவர்கள் கவனத்தில் எடுக்கவேண்டும்.

  மலையக தமிழர்களின் குடியுரிமைப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுவிட்டது. பிராந்திய ரீதியில் வரையறுக்கப்பட்ட முஸ்லிம் கட்சிகள் தோற்றம் பெற்றுவிட்டன. இலங்கைத் தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். சிறுபான்மை இனத்தவர்களில் பெரும்பான்மையானவர்களாக வடக்கு, கிழக்கு தமிழர்கள் இனிமேலும் இல்லை. மொழியுரிமை விடயத்திலும் முஸ்லிம்களும் இந்திய வம்சாவளி சமூகமும் மும்மொழிகளையும் கையாளும் போக்கு அதிகரித்துவருகிறது. ஆங்கிலக் கல்வியில் சகல சமூகங்களும் அதிக அக்கறை காட்டுகின்றன. அதனால் மொழியியல் அமைப்பும் (Linguistic landscape ) மாற்றம் கண்டிருக்கிறது என்று காரணங்களை ராஜன் பிலிப்ஸ் அடுக்கிக்கொண்டு போகிறார்.

  அவரது கருத்து விவாதத்துக்கு உரியது என்றபோதிலும் தமிழ் அரசியல் தலைவர்கள் அதில் சிந்திப்பதற்கு பல விடயங்கள் இருக்கிறது.

   இனப்பிரச்சினைக்கான  அரசியல் தீர்வு முயற்சிகளில் தமிழர்களின் அரசியல் அபிலாசைகள் மற்றும் மனக்குறைகளின் அடிப்படையில் பிரதான அழுத்தத்தை கொடுக்கக்கூடிய வாய்ப்புக்கு நாளடைவில் நேரக்கூடிய கதி குறித்து சிந்திக்க வேண்டியிருக்கிறது. 

   தமிழர்களின் சனத்தொகை குறைந்துகொண்டு போவது மாத்திரமல்ல, தமிழர்களின் பாரம்பரிய வாழ்விடங்களின்  புவியியல் அமைப்பிலும் பெருமளவு மாறுதல்கள் ஏற்பட்டுவிட்டன. இவை எல்லாம் தமிழ் தலைவர்கள் மிகுந்த அக்கறையுடன் நோக்கவேண்டிய பிரச்சினைகளாகும்.

  இறுதியாக, தமிழர்களுக்கு எதைக் கொடுக்கக்கூடாது என்பதில் சிங்கள அரசியல் சமுதாயம் அதன்  கட்சி அரசியல் முரண்பாடுகளுக்கு மத்தியிலும் உறுதியான ஒருமித்த நிலைப்பாட்டில் இருக்கின்ற அதேவேளை தமிழ் அரசியல் சமுதாயம் தமிழர்களுக்கு தேவையானதை ஒருமித்துக் கோரமுடியாத நிலையில் இருக்கிறது என்பது வேதனைக்குரியதாகும்.

  வடக்கு, கிழக்கின் இன்றைய தமிழர் சமுதாயம் கற்பனை செய்து பார்த்திருக்க முடியாத தியாகங்கள் நிறைந்த மூன்று தசாப்த கால விடுதலைப் போராட்டத்தைக் கடந்துவந்த ஒரு சமூகத்துக்கு இருக்கவேண்டிய பண்புகளுடன் இல்லை என்பதும் இன்றைய எமது அரசியல்வாதிகள் கவனத்தில் எடுக்கவேண்டிய ஒரு முக்கிய பிரச்சினையாகும்.