(அரசியல் – சமூக – வரலாற்று நாவல்)
— செங்கதிரோன் —
அறுபதாம்கட்டைச் சேனையில் யானை தாக்கி இறந்த நல்லம்மா அக்காவின் சாவீட்டுக்குக் கோகுலனும் தன் தாயாருடன் சென்று வந்த நிகழ்விலிருந்து நினைவுக் குமிழிகள் காலக் குளத்திலிருந்து மீண்டும் மேலெழத் தொடங்கின.
அறுபதாம்கட்டைக் கச்சான் சேனை அறுவடைமுடிந்து 1967 ஆம் ஆண்டின் தமிழ் – சிங்கள புதுவருடக் கொண்டாட்டங்களும் கழிந்த பின் இரண்டாம் தவணை ஆரம்பிக்கும்போது கோகுலன் மட்டக்களப்பு வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்திற்கு மீண்டான். 1966 டிசம்பரில் தான் தோற்றியிருந்த க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் விசேட மற்றும் திறமைச் சித்திகள் பெற்றிருந்தான். கோகுலனின் பரீட்சை முடிகள் குறித்துத் தாயார் கனகமும் ஈன்றபொழுதிலும் பெரிதுவந்தாள்.
இரண்டாம் தவணை ஆரம்பமான முதல்நாள். கோகுலன் வகுப்பில் அமர்ந்திருந்தான். க.பொ.த உயர்தர விஞ்ஞான முதலாம் வருட வகுப்பு. பல்கலைக்கழகப் புகுமுக வகுப்பு என்றும் அந்நாட்களில் அழைக்கப்பட்டது.
வகுப்பாசிரியர் எஸ்.பொன்னுத்துரை வெள்ளை வேட்டியும் நீளக்கைச் ‘சேர்ட்’டுமாக கமக்கட்டுக்குள் புத்தகங்களை இடுக்கிக்கொண்டு வகுப்பறைக்குள் நுழைந்தார்.
வகுப்பைக் கண்களால் மேய்ந்த அவர் கோகுலனைக் கண்டுவிட்டு ‘வீரமாமுகம் தெரியுதே! அது வெற்றிப் புன்னகை புரியுதே!” என்றார்.
கோகுலனைக் கண்டுவிட்டுத்தான் அவர் அப்படி நையாண்டியாகச் சொல்கிறார் எனப் புரிந்து கொண்ட வகுப்பறை ‘கொல்’லென்று சிரித்தது. கோகுலனும் செய்வதறியாது தானும் சேர்ந்து சிரித்துச் சமாளித்தான்.
எம்.ஜி.ஆர் நடித்த ‘நாடோடி மன்னன்’ திரைப்படத்தில் எம்.ஜி. ஆருக்கு ஜோடியாக நடித்த சரோஜாதேவி படத்தில் பாடும் பாடலின் வரிகள்தான் இவை
எஸ்.பொன்னுத்துரை எழுத்தாளர் அல்லவா. அவருக்கு அப்படித்தான் வரும்.
வகுப்பறையில் சிரிப்பொலி அடங்கியதும் கோகுலனைப் பார்த்து “என்ன காணும் இப்பத்தான் உமக்கு விடிஞ்சிதே….” என்று இழுத்தார்.
அந்த வருடம் முதலாம் தவணை முழுவதும் பாடசாலைக்கு வராமல் நின்றுவிட்டு இரண்டாம் தவணை ஆரம்பமான அன்றுதான் கோகுலன் வந்துள்ளதைக் குத்திக்காட்டுகிறார் என்பது அவனுக்குப் புரிந்தது.
கோகுலன் இலேசாகச் சிரித்துக்கொண்டு பதில் ஏதும் சொல்லாமல் குனிந்து கொண்டிருந்தான்.
“கொஞ்சம் எழும்பும் காணும். புது மாப்பிளையை எல்லோரும் ஒருதரம் பார்க்கத்தானே வேணும்” என்றார் ‘எஸ். பொ’ என அழைக்கப்படும் எஸ்.பொன்னுத்துரை. கோகுலன் அதே சிரிப்புடன் எழுந்து நின்றான்.
“இவ்வளவு நாளும் ஏன் காணும் வரேல்ல. எங்க போயிருந்த நீர்” என்றார் எஸ்.பொன்னுத்துரை.
தனியாகத் தன்னைக் கூப்பிட்டுக் கேட்கவேண்டிய கேள்விகளையெல்லாம் இப்படி எல்லோருக்கும் முன்வைத்துக் கேட்டால் எப்படிப் பதில் சொல்வது என்று எண்ணிய கோகுலன் அதற்கும் பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக நின்றான்.
“சரி காணும், நீர் நல்ல கெட்டிக்காரன் என்று தெரியும். முதலாம் தவணைக்கு நீர் வராத பாடக்குறிப்புகளையெல்லாம் உம்மிட சிநேகிதர்மார்களிட்ட வாங்கி எழுதிப் படியும் சரி இரும்” என்று தானாகவே எஸ்.பொன்னுத்துரை முடித்து வைத்தார்.
கோகுலன் அப்பாடா! பிரச்சினை முடிந்தது என்று எண்ணிக் கொண்டு கதிரையில் அமர்ந்தான்.
எஸ்.பொன்னுத்துரை வரவு இடாப்பைப் பதிந்துவிட்டு வகுப்பைவிட்டு வெளியேறினார்.
கோகுலனின் தாயாரின் கூடப்பிறந்த தங்கையின் – கோகுலனின் சீனியம்மாவின் மகள் – கோகுலனுக்கு ஒன்றுவிட்ட அக்கா செங்கலடியில் வசித்தார். அவருடைய கணவன் நடேசன் செங்கலடி நீர்ப்பாசன அலுவலகத்தில் பிரதம லிகிதராகக் கடமையாற்றிக் கொண்டிருந்தார். கல்முனை நீர்ப்பாசன அலுவலகத்தில் கடமையாற்றிக் கொண்டிருந்த அவர் 1967 ஜனவரியில் தான் கல்முனையிலிருந்து மாற்றலாகிச் செங்கலடிக்கு வந்திருந்தார்.
செங்கலடி நீர்ப்பாசன அலுவலகம் செங்கலடி – பதுளை வீதிச் சந்தியில் சந்தியின் இடதுபுற மூலையில் அமைந்திருந்தது. செங்கலடி – பதுளை வீதியிலுள்ள ஆஸ்பத்திரிக்குப் பின்னால் உள்ள “இரிக்கேசன் குவாட்டஸ்” சில் தமது இரு குழந்தைகளுடனும் அவர்கள் குடியிருந்தனர்.
செங்கலடிச் சந்திக்கும் வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்திற்கும் இடையே ஒன்றரை மைல் தூரம்தான் இருக்கும்.
மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதான வீதியில் செங்கலடிக்கு அடுத்ததாகக் கொம்மாதுறைக் கிராமமும் கொம்மாதுறைக்கு அடுத்ததாக வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயமும் அடுத்தடுத்து அண்மித்ததாக அமைந்திருந்தன.
வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலய விடுதியிலிருந்து நடந்து வரக்கூடிய தூரத்தில் தான் செங்கலடி நீர்ப்பாசன அலுவலகமும் கோகுலனின் ஒன்றுவிட்ட அக்காவின் குடும்பம் குடியிருந்த “குவாட்டஸ்”சும் இருந்தன.
இரண்டாம் தவணை ஆரம்பமாகிப் பாடசாலைக்கு வந்த பின்னர் வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் செங்கலடியில் வதியும் தனது ஒன்றுவிட்ட அக்காவின் வதிவிடத்திற்குப் போய்வருவதைக் கோகுலன் வழக்கமாகக் கொண்டிருந்தான்.
விடுதிச் சாப்பாட்டைவிட அக்காவின் வீட்டில் சுவையாகவும் வயிறாரவும் சாப்பிட்டு வரலாம். அக்காவின் இரு குழந்தைகளுடனும் நேரத்தை மகிழ்ச்சியாகக் கழித்துவரலாம் என்பவையே அதற்கான காரணங்கள்.
அவ்வாறு வந்திருந்தபோது ஒரு ஞாயிற்றுக்கிழமை கோகுலனின் அத்தான் நடேசன் கேட்டார்,
“கோகுலன்! ‘இரிக்கேசன் டிப்பார்ட்மென்ட்’, ‘இரிக்கேசன் லேனர்ஸ்’சுக்கு ‘அப்பிளிகேசன்’ ‘கோள்’ பண்ணியிருக்கு. ரெண்டு வருச ‘றெயினிங்’. ‘றெயினிங்’ காலத்தில் ‘அலவன்ஸ்’ தருவாங்கள். ‘றெயினிங்’ முடிந்ததும் இரிக்கேசன் ‘டிப்பார்ட்மென்டி’லேயே ‘ரி.ஏ’ ஆக வேலையும் கிடைக்கும். நல்ல வேலை ‘அப்பிளிகேசன்’ போட விருப்பமா?” என்று.
உடனே கோகுலன் ஒன்றும் யோசியாமல் எடுத்த எடுப்பிலேயே “ஓம்! அத்தான்” என்றான்.
அதற்கு நடேசன் “நீ படிப்பில கெட்டிக்காரன். ‘ஏ. எல்’ சோதனை எடுத்துப் ‘பாஸ்’ பண்ணி ‘யூனிவசிற்றி’க்குப் போய்ப் படிக்கோணும் எண்டுதான் உன்ர அம்மா ஆசைப்படுவா. அதக் கெடுத்திடப் போடாஎண்டும் நான் யோசிக்கிறன்” என்றார்.
“இல்லத்தான்! ‘யூனிவசிற்றி’க்குப் போய்ப் படிக்க எனக்கு ஆசதான். ஆனா அங்க போய்ப் படிக்கிறண்டா மாதாமாதம் கனக்கக் காசி வேணும். அம்மாட்ட அதற்கு வசதில்ல. ‘றெயினிங்’ காலத்திலயும் சம்பளம் தருவாங்க எண்டுறீங்க. ‘றெயினிங்’ முடிய ‘ரி.ஏ’ ஆக வேலயும் கிடைக்கும் எண்டுறீங்க. நல்ல வேலயெண்டும் சொல்றீங்க. எதுக்கும் ‘அப்பிளிகேசன’ப் போடுவமே அத்தான்” என்றான் கோகுலன்.
தாயாரைத் தொடர்ந்தும் கஸ்டப்படுத்தாமல் தான் படிப்பை முடித்துக் கொண்டு கெதியாக வேலையொன்று எடுக்கவேண்டுமென்பதே கோகுலனின் சித்தமாயிருந்தது.
“அப்பிடியெண்டா நாளைக்கே ‘அப்பிளிகேசன’ப் பின்னேரம் மூண்டு மணிக்குள்ள பதிவுத்தபாலில அனுப்போணும். நாளைக்கு ‘அப்பிளிகேசன்’ ர முடிவுத்திகதி. உடனபோய் ‘ஹொஸ்டல் வாடேனிட்ட’யும் ‘பிரின்சபலிட்ட’யும் சொல்லி அனுமதி எடுத்துக் கொண்டு நாளக்குக் காலயில நேரத்தோட ‘ஒபீஸ்’க்கு வா. நான் ‘அப்பிளிகேசன்’ போம அடிச்சு வைக்கன். வரக்கொள்ள உன்ர ‘ஓ லெவல் ரிசல்ட்ட’ அத்தாட்சிப்படுத்திற ‘பிரின்சிப்பல்’ர கடிதத்தையும் அவரிட்டிரிந்து ஒரு ‘கறக்ரர் சேர்டிபிக்கேட்’டும் எடுத்திட்டு வா. இதுகளவிட வேற ரெண்டு பேரிட ‘கறக்ரர் சேர்டிபிக்கேட்’டும் வேணும். ஒண்ட நான் இங்க எனக்குத் தெரிந்த யாரிட்டயும் எடுத்துத்தாறன். நீ உன்ர ‘ரீச்சர்’ மார்களிட்ட ஆரிட்டயும் வாங்கித்து வா” என்றார் நடேசன்.
இராமாயண இதிகாசத்தில் வசிட்ட மாமுனி செய்த உபதேசங்களைப் பட்டத்து இராமன் பயபக்தியோடு செவிமடுத்தாற்போல அத்தான் நடேசன் சொன்ன அத்தனை விடயங்களையும் கவனமாகக் காதில்வாங்கி மனதில் பதிய வைத்துக் கொண்டான் கோகுலன்.
அடுத்தநாள் கோகுலன் பம்பரமாய்ச் சுழன்றான். அவனது க.பொ.த சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகளை அத்தாட்சிப்படுத்திய கடிதத்தையும் நற்சான்றிதழையும் கல்லூரி அதிபர் ஏகாம்பரத்திடம் பெற்றுக்கொண்டான். அதேபோல நற்சான்றிதழ்க் கடிதமொன்றைத் தனது வகுப்பின் பௌதீகவியல் ஆசிரியர் இராமதிலகத்திடம் பெற்றுக்கொண்டான்.
எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு செங்கலடி நீர்ப்பாசன அலுவலகத்தையடைந்தபோது அத்தான் நடேசன் அவர் தட்டச்சு செய்து வைத்திருந்த விண்ணப்பப்படிவத்தைக் கோகுலனிடம் கொடுத்து அவர் சொல்கிற மாதிரியே அவனது கையெழுத்தில் நிரப்பச் சொன்னார். விண்ணப்பப் படிவத்தை நிரப்பிக் கையெழுத்திட்டுத் திகதியையும் போட்டவுடன், மற்றச் நற்சான்றிதழைப் பெறுவதற்காக செங்கலடியில் செல்வாக்குமிக்க ஊர்ப்பிரமுகரான பொன்னுத்துரை ஜே.பி என்பவரிடம் அழைத்துப்போய்க் கோகுலனை அவருடைய மைத்துனன் என அறிமுகம் செய்துவைத்து வேண்டிய நற்சான்றிதழை அவரிடமிருந்து பெற்றுக்கொண்டு சகல ஆவணங்களுடனும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தைக் கடித உறையிலிட்டு அவசரம் அவசரமாகச் செங்கலடி தபால் அலுவலகம் சென்றடைந்தபோது பின்னேரம் 3.00 மணியைத் தாண்டிவிட்டிருந்தது. 3.00 மணியுடன் பதிவுத்தபால் எடுக்கும் கருமபீடம் மூடப்பட்டுவிட்டது. நடேசன் தபால் அலுவலகத்தின் உள்ளே சென்று ஏற்கெனவே தனக்குத் தெரிந்திருந்த தபால் அதிபருடன் பேசி விண்ணப்பத்தை அன்றைய பதிவுத்தபாலில் சேர்க்கச் செய்தார்.
எடுத்தகாரியம் அத்தான் நடேசனின் உதவியால் எந்த இடையூறுமின்றித் திருப்தியாக முடிந்ததில் மகிழ்ச்சியடைந்த கோகுலன் வந்தாறுமூலை மத்திய மகாவித்தியாலய விடுதிக்கு அன்று மாலை மீண்டான்.
வேலைக்கு என்றாலும் சரி அல்லது ஏதாவது தொழில் பயிற்சிநெறிக்கு என்றாலும் சரி ‘இரிக்கேசன் லேனர்ஸ்’ (நீர்ப்பாசன பயிலுனர்)க்குப் போட்ட விண்ணப்பம்தான் கோகுலனது வேலை சம்பந்தமான முதலாவது விண்ணப்பம்.
இப்படி விண்ணப்பம் அனுப்பியிருந்தாலும்கூடக் கல்லூரிப் படிப்பில் கண்ணும் கருத்துமாகவே இருந்தான். நாள்கள் ஓடின.
இரண்டாம் தவணை முடிந்து விடுமுறைக்கு வீடு சென்றிருந்தபோதுதான் தான் அனுப்பிய விண்ணப்பம் குறித்த விபரத்தைத் தாயாரிடம் எடுத்துச் சொன்னான். அதனைக் கேட்ட தாயார் கனகம்,
“அத்தான் நடேசன் பிழையாக வழிநடாத்த மாட்டார். நம்மட குடும்பத்துக் கஸ்டமெல்லாம் அவருக்கு நல்லாத்தெரியும். விண்ணப்பம் அனுப்பியிருந்தா நேர்முகப் பரீட்சைக்குக் கூப்பிடுவாங்கதானே. அப்ப பாப்பம். நீ படிப்பு விட்டிடாத” என்றாள்.
தாயின் சொற்படியே கோகுலனும் நடந்தான்.
1967 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணையும் முடிந்து மார்கழி விடுமுறையம் கழிந்து 1968 ஆம் ஆண்டின் முதலாம் தவணையும் போய் இரண்டாம் தவணைக்குப் பாடசாலையும் ஆரம்பமாகி நடந்து கொண்டிருந்தது. கோகுலனுக்கு இப்போது பதினேழு முடிந்து பதினெட்டு வயது நடந்து கொண்டிருந்தது. அவனது க.பொ.த உயர்தர விஞ்ஞான கல்லூரிப்படிப்பும் தங்குதடையின்றி சுமுகமாகப் போய்க் கொண்டிருந்தது. தன்னையும் தன்தம்பியையும் படிப்பித்து ஆளாக்குவதற்குத் தன் தாயார்படும் பாட்டைத்தான் கோகுலன் அடிக்கடி மனதில் எண்ணி மிகவிரைவில் தனது தாயாரைப் பொறுப்புகளிலிருந்து விடுவித்துப் பொறுப்புக்களைத் தான் எடுத்துக்கொண்டு அவவை ஆறுதலாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்துக்கொள்ள வேண்டுமென்பதுதான் கோகுலனின் ஒரே குறிக்கோளாக இருந்தது.
1968 ஏப்ரல் மாதத்தின் முதல்நாள் கோகுலன் பாடசாலை முடிந்து விடுதிக்கு வரும்போது, அவனது தாயார் விடுதி முன் ‘போர்டிக்கோவின்’ கீழ் கோகுலனின் வரவைப் பார்த்துக் காத்துக் கொண்டு நிற்பதைத் தூரத்திலிருந்தே கண்டுவிட்டான். தாயைக் கண்டதும் கோகுலனின் உள்ளம் உவகைகொண்டாலும், இப்படிச் சொல்லாமல் கொள்ளாமல் வந்து நிற்கிறாவே. வீட்டில் ஏதும் பிரச்சினையோ? என்று எண்ணியும் கலவரப்பட்டான். பொத்துவிலிருந்து இவ்வளவு தூரம் அலைந்து தன்னைக் காண வந்திருக்கிறாவே என்று கவலையும் பட்டான்.
கோகுலன் ஓடோடி வந்ததும் அவனது தாயார் முகம் மலர்ந்தாள். களிப்பு அவளது கன்னங்களில் கூத்தாடியது. கோகுலனைத் தொட்டு மகிழ்ந்த அவள், “மனே! உனக்கு நேர்முகப் பரீட்சைக்கு வரச்சொல்லிக் கடிதம் வந்திருக்கு. எனக்கு விபரம் ஒண்டும் தெரியா. வா அம்பாறைக்குப் போகலாம். அத்தான் நடேசனிட்டப் போய்க் கதைப்பம். அதற்குத்தான் உன்னக் கூட்டிப்போக வந்தனான். உடன வெளிக்கிட்டு வா” என்றாள்.
அத்தான் நடேசன் அந்நேரம் செங்கலடியிலிருந்து மாற்றலாகி அம்பாறை நீர்ப்பாசன அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அதுதான் கோகுலனை அம்பாறைக்குக் கூட்டிப்போக வந்திருந்தாள் கனகம்.
‘ஹாஸ்டல் வார்டன்’ செல்லையா காரைத்தீவைச் சேர்ந்தவர். அவரும் வந்தாறுமூலையில் ஆசிரியப் பணிபுரிந்து கொண்டிருந்தார். வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் ஆறாம் வகுப்பிலிருந்து க.பொ.த சாதாரண வகுப்புவரை கோகுலனுடைய வகுப்புக்கு இந்த சமயப் பாடம் படிப்பித்தவர். உறவினரும்கூட. ஆண்கள் விடுதியிலிருந்த அவரின் அறைக்குத் தாயாரையும் கூட்டிச்சென்ற கோகுலன் விடயத்தைக் கூறி அனுமதி பெற்றுக்கொண்டு, தாயாருடன் அம்பாறை புறப்பட்டான். அவரும் வாழ்த்துச் சொல்லிக் கோகுலனை அவனது தாயாருடன் வாசல் வரைவந்து வழியனுப்பி வைத்தார்.
கோகுலனும் தாயாரும் வந்தாறுமூலையிலிருந்து மட்டக்களப்பு வந்து அங்கிருந்து நேரே அம்பாறை செல்லும் ‘பஸ்’ சைப் பிடித்து அம்பாறை சென்று அன்றிரவை அம்பாறையில் அத்தான் நடேசன் தனது குடும்பத்துடன் குடியிருந்த ‘இரிக்கேசன் குவாட்டர்ஸ்’சிலே தான் கழித்தார்கள். அதனால் அத்தான் நடேசனோடு அன்றிரவு ஆறுதலாக இருந்து எல்லாம் பேச முடிந்தது.
நேர்முகப்பரீட்சைக் கடிதத்தின்படி அது ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி மு.ப 8.45க்கு கொழும்பில, கொழும்பு – 7, பௌத்தலோக மாவத்தையிலுள்ள (புல்லர்ஸ் வீதி) இலங்கை நீர்ப்பாசனத் திணைக்களத் தலைமைப்பணிமனையில் நடக்கவிருப்பதாக அத்தான் நடேசன் கூறினார்.
கோகுலன் அதுவரை ஒருநாளும் கொழும்பு சென்றதில்லை. கொழும்பில் ஓரிடமும் அவனுக்குத் தெரியவும்மாட்டாது. அதனால் அத்தான் நடேசன்தான் அவனை நேர்முகப் பரீட்சைக்காகக் கொழும்புக்குக் கூட்டிச்செல்லத் தானாகவே முன்வந்தார்.
நேர்முகப்பரீட்சை நடைபெறும் திகதிக்கு முதல் நாளான 3ம் திகதி மாலை ஆறுமணிக்கெல்லாம் மட்டக்களப்பு புகையிரத நிலைய வாசலில் வந்து காத்திருக்கும்படியும் தான் அம்பாறையிலிருந்து அங்கு வந்து சேர்வதாவும் இரவுப் புகையிரத வண்டியில் இருவரும் கொழும்புக்குச் செல்வதாயும் கூறினார்.
மறுநாள் காலை கோகுலனும் கோகுலனின் தாயாரும் அம்பாறையிலிருந்து புறப்பட்டுக் கல்முனை வரைக்கும் இருவரும் ஒன்றாக வந்து, அவனது தாயார் கோகுலனை வந்தாறுமூலைக்குச் செல்வதற்காகக் கல்முனை பஸ்நிலையத்தில் மட்டக்களப்புக்குச் செல்லும் ‘பஸ்’சில் கவனமாக ஏற்றிவிட்டுக் காரைத்தீவுக்குச் சென்றாள். அன்றிரவு காரைதீவில் தங்கி அடுத்தநாள் பொத்துவிலுக்குச் செல்வதே அவளது சித்தம்.
(தொடரும் … அங்கம் 10)