தமிழ் மக்களின் விடுதலையும் ஐக்கியக்  கனவும்!

தமிழ் மக்களின் விடுதலையும் ஐக்கியக் கனவும்!

— கருணாகரன் —

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வும் விடுதலையும் சாத்தியமாக வேண்டும் என்றால் தமிழ்அரசியற் கட்சிகளுக்கும் அவற்றின் தலைமைகளுக்கும் இடையில் ஒற்றுமையும்ஐக்கியமும் அவசியம் என்ற கோரிக்கை பலராலும் தொடர்ந்து முன்வைக்கப்பட்டுவருகிறது.

இந்த அடிப்படையில் ஐக்கியம்ஒருங்கிணைவு போன்றவை ஏற்கனவே பலசந்தர்ப்பங்களிலும் ஏற்பட்டதுண்டு.

தமிழரசுக்கட்சிதமிழ்க் காங்கிரஸ் போன்றவை இணைந்து தமிழர் விடுதலைக்கூட்டணியும் (TULF) ஈரோஸ்.பி.ஆர்.எல்.எவ்ரெலோவிதலைப்புலிகள் ஆகியஇணைந்து ஈழதேசிய விடுதலை முன்னணியும் (ENLF) உருவாகியது.

பின்னாளில் புலிகளோடு இணைந்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என .பி.ஆர்.எல்.எவ்ரெலோதமிழரசுக் கட்சி ஆகியன ஐக்கியப்பட்டிருந்தன.

ஆனாலும் இவையெதுவும் இறுதிவரையிலும் அந்த ஐக்கியத்தைப் பேணவில்லைதீர்வும்கிட்டவில்லைபதிலாக ஒன்றையொன்று விழுங்குவதாகவே இருந்தனஇப்பொழுதுஒன்றையொன்று குற்றம் சாட்டிக் கொண்டிருக்கின்றனஇந்த நிலையிற்தான் மீளவும்ஐக்கியத்துக்கான குரல்கள் எழுப்பப்படுகின்றனஇதில் வேடிக்கை என்னவென்றால்கூட்டத்தில் சேர்ந்து நின்று கொண்டே கள்ளனே  “கள்ளனைப் பிடி” என்றுசொல்வதைப்போல ஐக்கியத்துக்கு எதிரானவர்களேஐக்கியத்தை வலியுறுத்துகிறார்கள்.

இந்தத் தொடர் இதைப்பற்றிப் பேசுகிறது.

———-

தமிழ் அரசியலில் ஐக்கியம், ஒற்றுமை, ஒன்றிணைவு என்ற பேச்சு மட்டும் குறையவில்லை. ஆனால், அது நிகழவில்லை.

என்றால் என்ன நடக்கிறது?

உண்மையில் இதொரு ஏமாற்றாக, நாடகமாகவே தொடரப்படுகிறது.

ஐக்கியத்தை வலியுறுத்துகின்ற தமிழ் அரசியற் பத்தியாளர்களான நிலாந்தன், வி. தனபாலசிங்கம், சி.அ.யோதிலிங்கம், யதீந்திரா, அ.நிக்ஸன், கே.ரி. கணேசலிங்கம் போன்றோருக்கு இதொரு நேர்மையான விருப்பமாக இருக்கலாம். இதைப்போல வெளியே உள்ள தமிழ் அரசியல் விடுதலை விரும்பிகள் சிலருக்கும் அப்படியான விருப்பம் இருக்கிறது என்பது உண்மையே.

ஆனால், தமிழ் அரசியற் சக்திகளிடத்தில் ஐக்கியத்தை உருவாக்க முடியாது என்று எல்லோருக்கும் தெளிவாகவே தெரியும். மிகச் சிரமப்பட்டு ஒரு குடையின் கீழ் இந்தச் சக்திகளைக் கொண்டு வந்தாலும் அவற்றினால் ஒருமித்த தீர்மானத்தை எட்ட முடியாது. அப்படி ஒருமித்த தீர்மானத்தை எட்டினாலும் அதை நடைமுறைப்படுத்தும் வரையில் ஒருங்கிணைத்து வைத்திருக்க முடியாது என்று.

இப்போதே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்ற இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி என்ற அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசுக்கும் இடையில் நெருங்க முடியாத இடைவெளியே உண்டு.  தீர்வு யோசனையில் மட்டுமல்ல, அணுகுமுறையிலும் இரண்டு கட்சிகளும் வெவ்வேறான நிலைப்பாடுகளைக் கொண்டவை. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறது. அதேவேளை இனப்பிரச்சினைத் தீர்வுக்கு இந்தியாவின் அனுசரணையை வலியுறுத்துகிறது அல்லது ஆதரிக்கிறது.

காங்கிரஸோ இவற்றுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கிறது. அதற்கு இந்தியாவின் தலையீட்டில் உடன்பாடில்லை. மட்டுமல்ல, அது இரு தேசக் கொள்கையை வலியுறுத்துகிறது. சர்வதேச சமூகத்தின் தலையீட்டை அல்லது அனுசரணையையே அது விரும்புகிறது.

இப்படித்தான் ஏனைய கட்சிகள் ஒவ்வொன்றுக்கும் இடையில் ஏகப்பட்ட  பிரச்சினைகள் உண்டு. அவை தனியே அரசியற் பிரச்சினைகள் மட்டுமல்ல, அந்தந்தக் கட்சிகளின் தலைமைத்துவத்தில் உள்ளவர்களின் ஆளுமைப் பிரச்சினைகளும் கூட. இதில் யார் பெரியவர்? யாருக்குக் கீழே யார் இருப்பது? யாரை யார் அதிகாரம் செலுத்துவது என்பது வரையில் இதுண்டு.

என்பதால்தான் இந்த ஒற்றுமை விவகாரம் அல்லது ஐக்கியக் கனவு என்பது தீராத சிக்கலைக் கொண்டதாக இருக்கிறது என்கிறேன்.

அரசியலில் எதுவும் நடக்காது என்றில்லை. எனவே இதையிட்டு நம்பிக்கையீனமடையத் தேவையில்லை. வரலாற்றுச் சூழலும் மக்களின் நிர்ப்பந்தமும் நிச்சயமாக ஒருநாள் இவர்களை ஐக்கியப்படுத்தும்” என்று யாரும் சொல்லக் கூடும். அவர்களுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்ளலாம்.

அப்படி நடந்தால் மகிழ்ச்சி. ஆனால் அது மட்டும் அரசியற் தீர்வுக்கோ தமிழ் மக்களுடைய விடுதலைக்கோ போதாது என்று துணிந்து கூற முடியும்.

அதற்கு அப்பால் ஏனைய பல தளங்களில் ஐக்கியம் ஏற்பட வேண்டும்.

1.     வடக்குக் கிழக்கு ஐக்கியம்.

2.     வடக்கிலும் யாழ்ப்பாணத்துக்கும் வன்னிக்கும் இடையிலான ஐக்கியம்.

3.     தமிழ் பேசும் சமூகத்தினராகிய தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான ஐக்கியம்.

4.     தமிழ்த்தேசியக் கட்சிகளுக்கும் அந்த அடையாளத்தைக் கொண்டிராத ஏனைய கட்சிகள் அல்லது அரசியற்தரப்புகளுக்குமிடையிலான ஐக்கியம்.

5.     தமிழ்ச் சமூகத்திற்குள்ளேயே சாதி, மத, பிரதேச வேறுபாடுகளைக் கடந்த ஐக்கியம்.

இவ்வாறு பல வகையிலான ஐக்கியம் சாத்தியமானால் மட்டுமே வடக்குக் கிழக்கில் வாழ்கின்ற மக்களின் அல்லது தமிழ் பேசுவோரின் விடுதலையும் தீர்வும் குறித்து சாதகமான வழிகள் திறக்கப்படும். அது கூட நீண்ட பல பிரயத்தனங்களின் பின்னரே  சாத்தியமாகும்.

அதாவது இவை எல்லாம் ஒரு புள்ளியில் இணங்கக் கூடிய தீர்வை எட்டுவதற்கு இந்தத் தரப்புகளின் ஒன்றிணைவு – ஐக்கியம் அவசியம்.

அது சாதாரணமானதல்ல. ஏனென்றால் ஒவ்வொரு தரப்பின் இன்றைய பிரச்சினைகளும் உணர்நிலைகளும் யதார்த்தத் தன்மையும் எண்ணவோட்டங்களும் நலன்களும் மக்களைக் குறித்த அக்கறைகளும் வெவ்வேறானவை. ஒவ்வொரு தரப்பும் தன்னுடைய தரப்பின் பிரச்சினை, நலன், தேவை, பாதுகாப்பு என்ற அளவில்தான் முதல்நிலையிற் சிந்திக்கும். மக்கள் நலனை அல்ல. மக்களிடத்திலே இவை பணியாற்றுவதும் கிடையாது.

இதேவேளை அனைத்துத் தரப்பும் பேரினவாதத்தினால் அச்சுறுத்தலுக்கும் ஒடுக்குமுறைக்கும் உள்ளாகிறது. ஆகவே பொது எதிரிக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் என்றாலும் எல்லாச் சக்திகளும் அதை ஏற்றுக் கொள்வதற்குத் தயாராக இல்லை. ஏனென்றால் அதற்கிடையில் தாம் பெறக்கூடிய நலன் என்ன என்றே பார்க்கின்ற நிலையே பெரும்பாலான கட்சிகளிடத்திலும் அவற்றின் தலைமைகளிடத்திலும் காணப்படுகிறது. அரசுடனும் பிராந்திய சக்திகளோடும் இவை  கொண்டுள்ள ரகசிய உறவு இன்னொரு பிரச்சினையாகும்.

ஆகவே இவை ஒவ்வொன்றும் மிகச் சிரமமான அடிப்படைகளைக் கொண்டவையாகவே உள்ளன.

இதனால்தான் தமிழ்த்தேசியக் கட்சிகள் என்று கூறப்படுகின்றவற்றுக்கிடையில்கூட இன்னும் ஐக்கியம் சாத்தியப்படவில்லை.

வெளிப்படையாக மட்டுமல்ல, உள்ளார்ந்தும் ஒன்றையொன்று பலியிடும் தன்மையுடனேயே உள்ளன.

உண்மையில் மக்களுக்காக – இன விடுதலைக்காகத்தான் இவை இயங்குகின்றன என்றால், தம்மை, தமது நலனையும் அடையாளத்தையும் ஒரு புறம் ஒதுக்கி வைத்துவிட்டு இவை ஒரு பொதுநிலைப்பாட்டின் அடிப்படையில், பொது உடன்பாட்டின் அடிப்படையில் ஒன்றிணைய முடியும் அல்லவா. இதற்காகப் பலரும் எடுத்த முயற்சிகளை எல்லாம் இவை வீணடித்திருக்க வேண்டியதில்லையே!

ஆக மொத்தத்தில் எந்த வகையிற் பார்த்தாலும் இந்தச் சக்திகள் இணக்கத்துக்கோ ஐக்கியத்துக்கோ ஒற்றுமைக்கோ வரப்போவதில்லை. இந்த நிலையில் இதற்கு அப்பால் உள்ள தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி, சமத்துவக் கட்சி, அகில இலங்கை தமிழர் மகாசபை, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, புதிய ஜனநாயக மாக்ஸிஸ, லெனினிஸக் கட்சி உள்ளிட்ட தரப்புகளுடன் எப்படி இணைவுக்கு வர முடியும்?

இதேவேளை மேலே சொல்லப்பட்டுள்ள தமிழ்த்தேசியக் கட்சிகள் மட்டுமல்ல, அதற்கு அப்பால் உள்ள ஏனைய தமிழ்க்கட்சிகளிடத்திலும் கூட ஐக்கியம் கிடையாது. அதற்கான சிந்தனையும் இல்லை. இதேவேளை இவை எவையும் தனித்து நின்று எதையும் சாதிக்கக் கூடிய நிலையிலும் இல்லை. மிஞ்சிப்போனால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறிய பெட்டிக் கடை என்ற அளவிற்தான் உள்ளன. இதற்குள்தான் மாபெரும் லட்சியக் கனவோடும் லட்சியப் பிரகடனங்களோடும் இவற்றின் தலைவர்களும் உள்ளனர்.

சரி, ஏதோ அதிசயமோ அற்புதமோ நிகழ்ந்து இவற்றிற்கிடையில் ஐக்கியமோ உடன்பாடோ ஏற்பட்டாலும் அதனால் விடுதலை சாத்தியமாகுமா என்றால், இல்லை என்பதே பதிலாகும்.

ஏனென்றால் தமிழ் மக்களின் விடுதலை என்பது, தனியே சிங்கள ஆதிக்கத்தரப்பிலிருந்து – சிங்கள பௌத்த மேலாதிக்க அரசிலிருந்து விடுதலை அடைவது மட்டுமல்ல.

அதற்கு அப்பால், அது தன்னைத் தானே பல வழிகளிலும் விடுவித்துக் கொள்ள வேண்டியுள்ளது. சாதி, பால், பிரதேசம், மதம், இனம் என்ற பல அடுக்குகளில்.

முக்கியமாக வடக்குக் கிழக்கும் உள்ளார்ந்த இணைவைக் கொண்டிருக்க வேண்டும்.

வடக்கும் கிழக்கும் இணைந்திருப்பதென்பது அரசியற் கட்சிகளிடத்தில் மட்டும் நிகழ்ந்தாற் போதாது. அங்கே உள்ள சமூகங்களுக்கிடையில் இணைப்பு வேண்டும். முக்கியமாக வடக்குத்  தமிழர்களும் கிழக்குத் தமிழர்களும் இணைய வேண்டும். அதைப்போல தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து கொள்ள வேண்டும். அதாவது அனைவரும் ஒரு பொது நிலைப்பாட்டுக்கும் உடன்பாட்டுக்கும் வரக் கூடியதாக இருக்க வேண்டும். இது இப்பொழுது சாத்தியமா?

இல்லையென்றால், இதைச் சாத்தியப்படுத்தக் கூடிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். அதற்கான சந்திப்புகள், உரையாடல்கள், உடன்பாடுகள் என இதொரு விரிந்த வேலைத்திட்டம்.

கடந்த முப்பது ஆண்டுகளுக்குள் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் நிகழ்ந்திருக்கும் சமூக இடைவெளி சாதாரணமானதல்ல. அதன் அக – புறக் காரணிகளும் சாதாரணமானதல்ல.

யுத்த காலத்தில்தான் இந்த இடைவெளி நிகழ்ந்தது. இப்பொழுது எல்லாம் சரியாகி விட்டது என்று யாரும் சொல்லி விட முடியாது.

யுத்தம் முடிந்த பிறகு மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டிய அரசியல்  வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தால் சிலவேளை சிறிய அளவிலேனும் இது சாத்தியமாகியிருக்கக் கூடும்.

ஏப்ரல் குண்டு வெடிப்பு முஸ்லிம் சமூகத்துக்கு மிகப் பெரிய நெருக்கடியை உண்டாக்கியது. சிறுபான்மைத் தேசிய இனங்கள் அனைத்துக்கும் ஒரே விதமான நெருக்கடியே இலங்கையில் உள்ளதென்ற உண்மையை உணர்த்தியது. அதை ஒரு தொடக்க வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள தமிழ் அரசியற் சக்திகள் தவறி விட்டன. முஸ்லிம் சக்திகளும்தான்.

இன்று முஸ்லிம்கள் தாம் தனியொரு தேசிய இனம் என்ற அடிப்படையிலும் அந்தத் தேசிய இனத்தின் இருப்புக்கு ஏற்ற விதத்திலும் தீர்வு அமைய வேண்டும் என ஆழமாகச் சிந்திக்கிறார்கள்.

அதற்கேற்ற விதமான உரையாடல்கள் அவர்களிடத்திலே தொடர்ந்து நிகழ்கின்றன. அரசியற் தீர்மானங்கள், தெரிவுகள் அனைத்தும் இந்த அடிப்படையிலேயே நடக்கிறது. ஆகவே இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல் தமிழர்கள் தம்முடைய எண்ணத்துக்கு எதையும் தீர்மானிக்க முடியாது.

இந்த யதார்த்தத்தை இலங்கை அரசும் சிங்கள அதிகாரத் தரப்பும் தெளிவாகப் புரிந்துள்ளன. என்பதால்தான் இனப்பிரச்சினைக்கான தீர்வைப் பற்றிப் பேசும்போது அரசு எந்தத் தடுமாற்றமும் இல்லாமல் காய்களை நகர்த்துகிறது.

அதற்குத் தெரியும், தீர்வைக்குறித்த உச்சகட்ட நிலைப்பாட்டை எடுக்கும் தறுவாயில் நிச்சயமாக முஸ்லிம்களிடத்திலிருந்து குழப்பங்கள் ஏற்படும் என்று.

அது தவிர்க்க முடியாததும் கூட.

வடக்குக் கிழக்கிற்கான தீர்வில் அல்லது இனப்பிரச்சினைக்கான தீர்வில் முஸ்லிம்களுக்கும் இடமுண்டு. அவர்களுக்கும் பிரச்சினைகள் உள்ளன. பிரச்சினைகள் உள்ள எவருக்கும் தீர்வு அவசியமாகும்.