அறவழி புரியாத மடமைச்சமூகம்

அறவழி புரியாத மடமைச்சமூகம்

— கருணாகரன் —

“வகுப்பறையில் மாணவர்கள் கேட்கின்ற சில கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாதுள்ளது. அந்தளவுக்கு மேலிருந்து கீழ் வரையில் சகல அடுக்குகளிலும்  தவறுகளும் பிழைகளும் தாராளமாகி விட்டன. பிழை செய்தாலும் பெரிய ஆட்கள், செல்வாக்குள்ளவர்கள் என்றால் அவர்களுக்குத் தண்டனையே இல்லை. சட்டம் கூட அவர்களைக் கட்டுப்படுத்தாது. நிர்வாகத்தினால் கூட அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. காவல்துறையினர் லஞ்சம் வாங்குவது பகிரங்கமான உண்மை. பிள்ளைகளுக்கே (மாணவர்களுக்கே) இது நன்றாகத் தெரியும். சில பாடசாலை அதிபர்களே மோசடிகளில் ஈடுபடுகிறார்கள். இந்த நிலையில் எப்படி நாம் மாணவர்களை நல்வழிப்படுத்த முடியும்? அவர்கள் எதை முன்னுதாரணமாகக் கொள்வது? அவர்களுடைய சில கேள்விகளு்கு எப்படிப் பதிலளிப்பது?..” என்று கேட்கிறார் ஆசிரியர் விஜயசேகரன்.

லண்டனிலிருந்து வந்திருந்த சமூகச் செயற்பாட்டாளர்களுடன் சமகாலச் சமூக நிலைமை தொடர்பாக நடந்த உரையாடல் ஒன்றின்போதே நண்பர் இவ்வாறு குறிப்பிட்டுக் கேள்வியை எழுப்பியிருந்தார்.

விஜயசேகரன் குறிபிட்டுள்ள இந்த உண்மையும் இந்தக் கேள்விகளும் பலருடைய மனதிலும் செவியிலும் உள்ளதுதான்.

அரசியல் தலைவர்களான ராஜபக்ஸவினர் தொடக்கம் அரச உயர் மட்டத்தில் உள்ள அதிகாரிகள் வரையில்  பல தரப்பிலும் பகிரங்கமாகவே ஊழல் குற்றச்சாட்டுகள் உண்டு. இவை வெறும் குற்றச்சாட்டுகள் அல்ல. உண்மையான குற்றச்சாட்டுகள்.

ஆனாலுமென்ன? ராஜபக்ஸக்கள் மக்கள் ஆணையின் மூலம் மறுபடியும் பாராளுமன்றத்தில் உள்ளனர். அரசியலில் உள்ளனர். அதிகார நிலைப்பட்டவர்களாகச் சமூக வெளியில் உள்ளனர். இதனால் தாம் குற்றமற்றவர்கள் போலத் தோற்றம் காட்ட முற்படுகின்றனர்.

அப்படித்தான் அரச உயர் அதிகாரிகள் தொடக்கம் சிற்றூழியர் வரையிலும் லஞ்சம் ஊழலுடன் தொடர்புபட்டவர்களாக இருக்கிறார்கள். அடையாள அட்டை மற்றும் கடவுச் சீட்டு பெறுமிடங்களில் நடக்கும் லஞ்சம் பகிரங்கமானது. அப்படி நடக்கவில்லை என்று யாரும் சொல்லவே முடியாது.

இதபோலவே காவல்துறையில் நடக்கின்ற லஞ்சமும் ஊழலும். குறிப்பாக வீதிச்  சோதனை நடவடிக்கையில் ஈடுபடுகின்ற காவல்துறையினர் தாராளமாக லஞ்சம் வாங்குகின்றனர். இதையும் யாராலும் மறுக்க முடியாது.

இப்படித்தான் காணிப்பதிவுத் திணைக்களம், பதிவாளர் அலுவலகங்கள், வன இலாகாப் பகுதி, கனிய வளங்கள் திணைக்களம், கூட்டுறவுச் சங்கங்கள், இலங்கைப் போக்குவரத்துச் சபை, பெற்றோலியக் கூட்டுத்தாபனம் போன்ற இடங்களில் நடக்கின்ற லஞ்சம், ஊழல், மோசடி, களவு போன்றவையும்.

அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் வேலை வாய்ப்புப்  பெற்றுத் தருவதாகவும் இடமாற்றம், பதவி உயர்வு போன்றவற்றுக்காகவும் லஞ்சம் பெறுகிறார்கள்.

சில சந்தர்ப்பங்களில் ஊர்களில் உள்ள சமாதான நீதிவான்களே ஒரு பத்திரத்தில் கையொப்பம் வைப்பதற்காக, ஒருவரை உறுதிப்படுத்திக் கொடுப்பதற்காக லஞ்சம் வாங்குகிறார்கள்.

சில பாடசாலைகளில் மாணவர்களுக்குக் கிடைக்கின்ற உதவிப் பணம், மாணவர்களுக்கான உணவுப் பொருட்கள், அலுவலகத்துக்கு வாங்கப்படும் காகிதாதி, எழுது பொருட்கள் தொடக்கம் எதில் எல்லாம் ஊழல் செய்ய முடியுமோ அதில் எல்லாம் கை வைத்துவிடுகிறார்கள்.

இப்படியெல்லாம் செய்து விட்டு, இவர்கள் எல்லோரும்  வெளியே காட்டுகின்ற “பில்டப்”(தம்மைப் புனிதர்களாகக் காட்டுகின்ற நாடகம்), வெள்ளையடிப்பு இருக்கிறதே… அது தாங்கவே முடியாதது.

இப்படித்தான் கிளிநொச்சியில் அண்மையில் ஒரு பாடசாலையின் அதிபர் தன்னுடைய ஊழல், மோசடிகளை மறைத்துக் கொள்வதற்காக தனக்குத் தானே வெள்ளை அடித்துக் கொண்ட நிகழ்ச்சியும்.

குறித்த அதிபர், முன்னர் பணியாற்றிய பெண்கள் பாடசாலையில் செய்த மோசடிக்காக கணக்காய்வுத் திணைக்களத்தின் அறிக்கையின் அடிப்படையில் தண்டப்பணத்தை தன்னுடைய சம்பளத்தில் கழிப்பதற்கு சம்மதக் கடிதம் கொடுத்து, அந்தப்பணம் அறிவிடப்படுகிறது.

மட்டுமல்ல, இறுதியாகப் பணியாற்றிய பாடசாலையில் பிள்ளைகளுக்கு வழங்கிய மென்பானத்திலும் ஊழல்  செய்து பிடிபட்டார். போதாக்குறைக்கு மாணவர்களுக்கு வழங்குவதற்கு பாடசாலைக்கு வந்திருந்த உணவுப் பொருட்களை இடம் மாற்ற எடுத்த முயற்சி உலக உணவுத்திட்ட ஊழியர்களால் தடுக்கப்பட்டது. இதற்கும் மன்னிப்புக் கோரிக் கடிதம் எழுதியிருக்கிறார்.

இவையெல்லாம் குறித்த அதிபர் கையும் களவுமாகப் பிடிபட்ட விடயங்கள்.

பிடிபடாத விடயங்கள் பலவுண்டு. அவ்வாறான ஒரு விடயம், குறித்த அதிபரின் பாடசாலையில் உதவி தேவைப்படுகின்ற நிலையில் உள்ள 10 மாணவர்களுக்கான நிதியை புலம்பெயர் அமைப்பொன்று வழங்கி வந்தது.

குறித்த உதவித்திட்டம் குறித்த அதிபருக்கு முதல் பதவியிலிருந்த அதிபரின் காலத்திலிருந்தே தொடரப்பட்டு வந்தது. அந்த அதிபரின் காலத்தில் அதற்கான ஒழுங்கமைப்பின்படி இந்த நிதியைப் பகிர்ந்து மாணவர்களுக்குக் கொடுத்த பின்னர், அதை உறுதிப்படுத்திய கடிதங்களும் மாணவர்களின் தேர்ச்சி அறிக்கையின் போட்டோப் பிரதிகளும் நிதி வழங்குநர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்தது. இதுதான் அந்த உதவித்திட்டத்தின் நடைமுறையாகும்.

இந்த அதிபர் பொறுப்பேற்ற பின்னர் குறித்த நிதி வழங்கப்படவில்லை. எனவே இது தொடர்பாக நிதி வழங்குநர் சார்பாக அதிபரிடம் விசாரித்தபோது, அந்த நிதியை வேறொரு அவசர தேவைக்கு எடுத்துப் பயன்படுத்தியதாகவும் விரைவில் அது மீளப் பெற்றுத் தரப்படும் என்றும் உறுதி கூறப்பட்டது.

ஆனாலும் அப்படி எதுவும் நடக்கவில்லை. இதனால் குறித்த 10 மாணவர்களும் பாதிப்படைந்தனர்.

இது தொடர்பாக மறுபடியும் மறுபடியும் குறித்த அதிபரிடம் கேட்டபோது, ஒரு கட்டத்தில் சொன்னார், அந்த நிதி உரிய மாணவர்களுக்குப் பகிர்ந்து கொடுக்கப்பட்டாயிற்று என்று.

எனவே மாணவர்களிடம் அல்லது அவர்களுடைய பெற்றோரிடம் கேட்டறியலாம் என்று விசாரித்தபோது, அப்படி தமக்கு எந்தப் பணமும் அதிபராலோ பாடசாலையின் வழியாகவே வழங்கப்படவில்லை என்று அவர்கள் உறுதிபடத் தெரிவித்தனர்.

இதையடுத்துக் குறித்த அதிபரிடத்தில் வினவிய போது அந்தக் காசு கொடுத்தாச்சு. அவ்வளவுதான். இதற்கு மேல் தம்மால் பதிலளிக்க முடியாது என்று உறுதியாகத் தெரிவித்து விட்டார்.

இந்தப் பிரச்சினையைப் பெரிதாக்கி பாடசாலையோடு மோதிக்கொள்ள விரும்பாத உதவும் தரப்பினர் பின்னர் அந்த உதவியை வேறு இடத்துக்கு மாற்றி விட்டனர்.

இப்படியெல்லாம் பல ஊழல், முறைகேடுகள், மோசடிகள், தவறுகளோடு சம்மந்தப்பட்ட அதிபர், சேவையிலிருந்து ஓய்வு  பெறுகின்றபோது நடந்த பிரிவுபசார நிகழ்வில் தான் ஒரு புனிதப் போராளி போலப் பேசினார். “தன்மீது பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும் அதையெல்லாம் எதிர்த்துத் துணிச்சலாக நின்று சாதித்திருக்கிறேன். எல்லாவகையான எதிர்ப்புகளுக்கு அப்பால் சாதனைப் பெண்ணாக இப்பொழுது ஓய்வு பெறுகிறேன்” என்று திமிராகச் சொல்லியிருந்தார்.

இவ்வாறு துணிச்சலாக – திமிராக – அந்த அதிபர் வாய்திறப்பதற்குக் காரணம் சில தரப்பினர் கொடுத்த ஆதரவாகும். ஒன்று அவருடைய ஊழல், மோசடி போன்ற குற்றச்சாட்டுகளை  நன்றாகவே அறிந்த, சமூக நிலையில் பெரியவர்களாக இருக்கும் உயர் அதிகாரிகளும் பெற்றார் ஆசிரியர் சங்கத்தினரும்.

இரண்டாவது ஆசிரியர்களில் ஒரு தரப்பினர்.

இவர்களுடைய நிலைப்பாடு என்னவென்றால், என்னதான் குற்றச்சாட்டுகள், தவறுகள் இருந்தாலும் அவர் தன்னுடைய சேவையை முடித்து ஓய்வு  பெற்றுச் செல்கிறார். அப்படிச் செல்லும்போது நாம் பழைய விடயங்களைப் பற்றிப் பேசுவது அவரைக் கவலைப்படுத்தும் என்பதாகும்.

இன்னொரு காரணம், இவ்வளவு குற்றச்சாட்டுகள் இருந்தபோதும் அவர் மீது ஏன் பொறுப்புக்குரிய உயர் அதிகாரிகள் அதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை? அது  அவர்களுடைய தவறல்லவா? என்பது. ஆகவே இதொரு மன்னிக்கக் கூடிய குற்றம் – விடயம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

இன்னொரு தரப்பு, இவை எதைப்பற்றியும் அறியாதது. அவர்களைப் பொறுத்தவரையில் தங்கள் பாடசாலையின் அதிபர் பணி ஓய்வில் செல்கிறார். அதை மதிப்புறு நிகழ்வாகச் செய்து விடுவோம் என்பதாகும்.

வேறொரு தரப்பு, அதிபரின் மீது பக்தி விசுவாசம் கொண்டது. அது தானும் ஊழல், முறைகேடு, தவறுகளோடு சம்மந்தப்பட்டது. அல்லது அதற்கு ஆதரவான மனநிலை உடையது.

ஆனால், முன்வைக்கப்பட்ட – கணக்காய்வுப் பிரிவு, கல்வித் திணைக்களம் போன்றவற்றினால் ஆதாரப்படுத்தப்பட்ட – அத்தனை குற்றச்சாட்டுகளுக்கும் உரிய நடவடிக்கையை எடுக்கத் தவறியது மாகாணக் கல்வித் திணைக்களமாகும்.

இவ்வளவுக்கும் இந்த ஊழல் விவகாரம் அப்போது மாகாணசபையில் விவாதிக்கப்பட்டது. நிர்வாக ரீதியான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பணிக்கவும் பட்டது. இருந்தும் மாகாணக் கல்வித் திணைக்களத்தினருடைய  அசிரத்தையான செயற்பாடுகளால் குறித்த அதிபர் எத்தகைய தண்டனைக்கும் உள்ளாகாமல் தப்பி விட்டார்.

அப்படித் தப்பியவர் அல்லது தப்ப வைக்கப்பட்டவர், பதவியில் இருக்கும்போது எதுவும் பேசாமல் பம்மிக் கொண்டிருந்து விட்டு, பணி ஓய்வு பெற்றபின்னர் சவாலாகப் பேசுவதற்கான துணிச்சலைக் கொடுத்தது இந்த மாகாண உயரதிகாரிகளே.

மாகாண அதிகாரிகள் இவரை மட்டுமல்ல, பல பிரதேச சபைகளில் குற்றவாளிகளைத் தப்ப வைத்திருக்கிறார்கள். பல விளையாட்டு உத்தியோகத்தர்களைத் தப்ப வைத்திருக்கிறார்கள். பல அதிபர்களைக் காப்பாற்றியிருக்கிறார்கள். பல வைத்தியர்களைப் பாதுகாத்திருக்கிறார்கள்.

அதாவது குற்றவாளிகளைக் காப்பாற்றும் நடவடிக்கையை மாகாணசபை நிர்வாகம் தாராளமாகச் செய்கிறது.

இப்படித்தான் ராஜபக்ஸக்களும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பியுள்ளனர். தப்பியது மட்டுமல்லாமல், தமக்கு மக்கள் ஆதரவுண்டு என்று திமிராகக் காண்பிக்கவும் செய்கின்றனர்.

பேமாலித்தனமாக மக்களும் இந்த அதிபருக்கு வழங்கிய ஆதரவைப்போலவே – மன்னிப்பைப்போலவே  – ராஜபக்ஸவினருக்கும் ஏமாளித்தனமாக ஆதரவளித்துள்ளனர்.

கடவுச் சீட்டுப் பணிமனை, காவல்துறை, விமான நிலையம், வனத்திணைக்களம், கனிய வளங்கள் திணைக்களம், பிரதேச செயலகம்  போன்ற இடங்களில் நடக்கின்ற பகிரங்க ஊழலைத் தெரிந்து கொண்டு, அது முற்றிலும் பிழை என்று நன்றாகவே அறிந்து  கொண்டும் அதைக் கண்டும் காணாமலிருப்பதைப்போலவே அனைத்தையும் பழகி விட்டோம்.

இதனால்தான் நல்லதொரு சமூக வழியை, அறவழியைப் பற்றி இளைய தலைமுறையினருக்குப் போதிக்க முடியாதிருக்கிறது.

ஏனென்றால் அத்தனை பிள்ளைகளுக்கும் நன்றாகத் தெரியும், யார் யாரெல்லாம் லஞ்சம் வாங்குகிறார்கள். எப்படியெல்லாம் ஊழல் செய்கிறார்கள். குற்றவாளிகள் எப்படியெல்லாம் காப்பாற்றப்படுகிறார்கள், தப்புகிறார்கள் என்று.

எனவே பிள்ளைகளுக்கு இதை மறைத்து எப்படி அறத்தைப் போதிக்க முடியும்? எப்படி நல்வழியைக் காட்ட முடியும்? யாரை முன்னுதாரணமாக்குவது? குருவின் ஸ்தானத்திலுள்ள ஆசிரியர்களும்  அதிபர்களுமே தவறு செய்கிறார்கள், தவறுகளைச் செய்து விட்டுத் தப்பித்துக் கொள்கிறார்கள், அப்படித் தப்பிக் கொண்டு, திமிராகப் பொது மேடையில் தாங்கள் மகத்தானவர்கள் என்று புருடா விடுகிறார்கள் என்றால்…

அரசன் எவ்வழியோ அவ்வழியில் குடிகளும் என்ற முன்னோர் வாக்கு இப்படியாயிருக்கிறது இலங்கை மணித் திருநாட்டில். அதிபர் எவ்வழியோ அவ்வழியே உங்கள் பிள்ளைகளும் – மாணவர்களும் – என்று எண்ணிக் கொள்ளுங்கள். உங்களின் கண்மூடித்தனமான ஆதரவுக்கு உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்.

ஆம், நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சொன்ன நக்கீரனின் பரம்பரையிலிருந்து வந்த மக்கள், நாமார்க்கும் குடியல்லாம், நமனை  அஞ்சோம் என்ற வம்சத்தைச் சேர்ந்தவர்கள், அச்சமில்லை, அச்சமில்லை, உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை என்றவரின் பேரரர்கள்….

இன்று வீழ்ந்திருக்கின்ற இடமோ..!