— அழகு குணசீலன் —
தமிழர் அரசியல் காலநிலையில் இரு பருவங்கள் உண்டு. அவை அரசியல் கோடையும், அரசியல் மாரியும். தேர்தல்கள் முடிவடைந்ததும் படிப்படியாக அரசியல் கோடைகாலம் ஆரம்பிக்கும், மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் வரட்சியாகும். தேர்தல்கள் நெருங்கும்போது அரசியல் மாரிகாலம் களைகட்டும். வாக்குறுதிகள் மழையாகப் பொழியும் -வெள்ளக்காடாகும். இப்போது இலங்கையில் தேர்தல்கள் பற்றி பேசப்படுகிறது, ஆக தமிழர் அரசியலில் மாரி ஆரம்பிக்கிறது. வழக்கம்போல் “தமிழ்க் கட்சிகளின் அரசியல் ஐக்கியம்” பற்றி பேசப்படுகிறது.
வடக்கு, கிழக்கின் வானம் பார்த்த அரசியல் பெருநிலப்பரப்பில் மக்கள் அரசியல் மாரியை எதிர்பார்க்கின்றனர். அந்த மாரி வழங்கவேண்டிய முக்கிய அரசியல் எதிர்பார்ப்பு கட்சிகளுக்கு இடையிலான அரசியல் ஐக்கியம். அதை கடந்த மூன்று காலாண்டுகளாக நாடாளுமன்ற அரசியலில் சாதிக்க முடியாத அல்லது விரும்பாத கட்சிகளும், அவற்றை கட்டுப்படுத்த முடியாத சிவில் அமைப்புக்கள் என்று கூறப்படுபவையும் தற்போது தேர்தல் நெருங்குகின்றபோது ஐக்கியம் பற்றி பேச ஆரம்பித்துள்ளன. இது மக்கள் மழை வேண்டி பொங்கல் வைத்து நேர்த்தி வைப்பதற்கு சமமானது. இதையே சிவில் அமைப்பு செய்திருக்கிறது. இந்த கருத்துருவாக்க கார்மேகத்திற்கு வயது 75 ஆகியும், கான மயிலாடவில்லை. துரதிர்ஷ்டவசமாக வான்கோழி ஆடுகிறது. இதனால்தான் தமிழர் அரசியலில் அகிம்சையிலும், ஆயுதத்திலும் கட்சி/ இயக்க, அரசியல் ஐக்கியம் ஒரு வரலாற்று பொய்.
1944 இல் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் ஆரம்பம் முதல் 2023 இல் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உடைவு வரை “ஐக்கியம்” வெறும் வரலாற்று பொய் என்பது நிரூபிக்கப்பட்டு வருகின்றது. இந்த உடைவு கூட இறுதியானது அல்ல. இது இன்னும் உடைந்து துண்டு துண்டாகும் அரசியல் காலநிலையே காணப்படுகிறது. தேர்தல் நெருங்க மக்களின் நாடிபிடித்து போலி ஐக்கியம் பேசுவதும், கதிரைக்கு வாய்ப்பில்லை என்றால் தேர்தலுக்கு முன்னரே வெளியேறி உண்மை முகத்தை காட்டுவதும் வரலாறு.
ஒட்டுமொத்தமாக தேர்தல் காலத்தில் இந்த ஐக்கியம் பற்றி ஏன் பேசப்படுகிறது என்றால் அதற்கான பதில் கதிரைகளின் எண்ணிக்கையை கூட்டுவதுதான். கதிரைகளின் எண்ணிக்கைக்கும் தமிழ்த்தேசிய இனவிடுதலை – உரிமைப் போராட்ட செயற்பாட்டு அரசியலுக்கும் உள்ள தொடர்பு என்ன? ஜே.வி.பி.யின் அரசியல் செயற்பாட்டை கதிரைகளின் எண்ணிக்கை நிர்ணயிக்கின்றதா?. அஷ்ரப், தொண்டமான் ஆகியோரின் அரசியல் அடைவுகள் இணக்க அரசியல் தலைமைத்துவ சாணக்கியத்தினால் பெறப்பட்டவை, நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையால் அல்ல. ரணில் விக்கிரமசிங்க எப்படி ஜனாதிபதியானார்?
1947 இல் தனித்து 7 கதிரைகளில் அமர்ந்து கொண்ட அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் தொடக்கம் 2004 இல் 22 கதிரைகளில் இடம்பிடித்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வரை இந்த கதிரைகளால் இனப்பிரச்சினைக்கான தீர்வில் சாதித்தது என்ன? ஆக, அரசியல் ஐக்கியம் என்பது கதிரைகளின் எண்ணிக்கையை இலக்காக கொண்டதே அன்றி தமிழ்மக்களின் அரசியல் அபிலாஷைகளை இலக்காக கொண்டதாக இல்லை. அது போன்றே தமிழ்க் காங்கிரஸிலிருந்து பிரிந்து தமிழரசுக்கட்சி உருவாகியது முதல், தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்து ரெலோ, புளட் கூட்டணி உருவாகியதுவரை கதிரைச் சண்டையே காரணமாக அமைகிறது.
ஆயுதப்போராட்ட அமைப்புக்கள் இணைந்து உருவாக்கிய ஈழம் தேசிய விடுதலை முன்னணியின் கதியும் இதுவாகத்தானே முடிந்தது. புரட்சி, விடுதலை, சமதர்மம், அடக்குமுறை , சுதந்திரம் என்று பேசிய அமைப்புக்கள் கட்சி அரசியல் குணாம்சங்களையே கொண்டிருந்தன. கொழும்பு கதிரைகளுக்கான போட்டியாக அன்று இது இல்லாவிட்டாலும் அதிகார, ஆயுத, தலைமைத்துவ, ஏகபோக வெறியாக இது வெளிப்பட்டது. இது நாடாளுமன்ற அரசியல் தரகுமுதலாளித்துவ குணாம்சம். அதனால் காலப்போக்கில் இதுவும் கொழும்புக்கதிரைக்கான போட்டியிலேயே போய் நிற்கிறது. அதுவும் 2009 க்குப் பின்னர் முற்று முழுதாக இதுவே தமிழ்த்தேசிய அரசியலாகிவிட்டது. ஒரு வகையில் இது தேர்தல் கால “அரசியல் சுற்றாடல்” பாதுகாப்பு.
1972 இல் தமிழ்க் காங்கிரஸ், தமிழரசுக்கட்சி இணைந்த தமிழர் ஐக்கிய முன்னணி எதையும் சாதித்ததாக இல்லை. பின்னர் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இணைந்த தமிழர் விடுதலைக்கூட்டணியின் சாதனைகள் எவை? 1976 இல் தனிநாட்டுக்கோரிக்கை முன் வைக்கப்பட்டபோது தொழிலாளர் காங்கிரஸ் வெளியேறி சௌ.தொண்டமான் சாதித்ததில் ஒப்பிடுகையில் வடக்கு தமிழ்த்தலைமைகளின் அடைவு என்ன? இவை அனைத்தையும் 1977 தேர்தலுக்கான கோசங்களே அன்றி கொள்கைகள் அல்ல என்பதால் ஐக்கியத்தினால் சாதிக்க முடியவில்லை. இத் தேர்தல் காலத்தில் மிகக் குறுகிய காலப்பகுதியில் குமார் பொன்னம்பலம் தொகுதிச்சண்டையில் வெளியேறினார். தனிநாட்டுக்கோரிக்கை ஏற்படுத்திய ஐக்கியமாக இருந்திருந்தால் குமார் வெளியேறியது ஏன்? இப்போது ஒரு நாடு இருதேசம் இன்னொரு வேசம்.
1989 இல் இந்திய -இலங்கை சமாதான உடன்பாட்டுக் காலத்தில் ரி.யு.எல்.எப், ஈ.என்.டி.எல்.எப், ஈ.பி.ஆர்.எல்.எப் , ரெலோ இணைந்த தேர்தல் கூட்டு ஏற்பட்டது. இதன் ஆயுளை இந்திய படையின் வெளியேற்றம் நிர்ணயித்தது. மேலும் ஆயதப்போராட்காலத்தில் அதற்கு சமாந்தரமாக ஏற்படுத்தப்பட்ட அடுத்த ஐக்கியம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு. திண்ணை காலியாகும் வரை காத்திருந்து 2009 க்கு பின்னர் ஒவ்வொரு கட்சியாக கழன்று – கழற்றி விடப்பட்டு தமிழரசு மட்டும் கூட்டமைப்பு என்ற பெயரில் தனிக்குடித்தனம் நடாத்துகிறது. இதுவே தமிழர் அரசியல் ஐக்கியத்தின் வரலாற்று பொய். விக்கினேஸ்வரனின் கூட்டணியும் இந்தப்பொய்யில் பங்காளி ஆகியது.
அண்மையில் தமிழர் அரசியல் ஐக்கியம் குறித்த கலந்துரையாடல், பதிவுகள் குறித்து நோக்கும்போது எல்லோரும் கோருவது சமஷ்டி- ஒரே கொள்கை ஆகவே ஐக்கியத்தை ஏற்படுத்துவது இலகுவானது அல்லது ஏற்படுத்துவதில் உள்ள பிரச்சினை என்ன என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. இந்த நோக்கு தமிழ்த்தேசிய அரசியலின் போலிமுகத்தை காணத்தவறுகிறது. பிரதான நோய்க்கான சிகிச்சையை புறக்கணித்து பக்கவிளைவுகள் பற்றி பேசப்படுகிறது.
சமஷ்டி, சர்வதேசத்திற்கு காட்டுதல், தமிழ்த்தேசியக்கட்சிகளாக நிறம்தீட்டல், இணைந்த வடக்கு -கிழக்கு இவையாவும் இக் கட்சிகளின் கொள்கைகள் அல்ல வெறும் கோசங்கள். கொள்கைகள் என்றால் ஐக்கியம் ஏன் வில்லங்கமான காரியமாகிறது? இவை அல்ல ஐக்கியத்திற்கு குறுக்கே நிற்பவை. இக்கட்சிகளின் சுய இலாப அரசியல், தலைமைத்துவப்போட்டி, உட்கட்சி பூசல்கள், பாரம்பரிய பழம்பெருமை பேசல், ஆயதப்போராட்டத்தை பின்னணியாகக் கொண்டகட்சிகளை ஓரங்கட்டல், சர்வதேச, பிராந்திய பூகோள அரசியல் , கதிரைக்கணக்கு…….போன்றவையே தடையாகவுள்ளன. இதனால் தான் கோசங்களால் ஒன்றுபடும் இவர்களால் கொள்கையின் அடிப்படையில் ஒன்றுபட முடியாதுள்ளது.
தமிழ் கட்சிகளின் ஐக்கியம் பற்றி பேசும்போது அது தமிழ்த்தேசியத்தை பெயரில் கொண்ட கட்சிகள்/ கூட்டணிகளை மட்டும் குறிக்கிறதா? அல்லது இலங்கையின் அனைத்து தமிழ்க்கட்சிளையும் அல்லது வடக்கு கிழக்கில் செயற்படும் தமிழ்க்கட்சிகளை குறிக்கிறதா என்ற தெளிவும் இல்லாமல் உள்ளது. நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற, வகிக்காத இணக்க அரசியல் சார்ந்த முன்னாள் போராளிகள் கட்சிகளையும் “தமிழ்க்கட்சிகளின் ஐக்கியம்” என்பது குறித்து நிற்கின்றதா என்பதிலும் தெளிவில்லை.
துவாரகாவின் வருகைக்கு மணிகட்டி நிற்கின்ற ஜனநாயகப் போராளிகள் கட்சி இணக்க அரசியல் பற்றி பேசுகிறது. நாடாளுமன்ற ஆசனங்கள் மூலம் அரசியல் செய்யவிரும்புகிறது. ஈ.பி.டி.பி, ரி.எம்.வி.பி, புளட், ரெலோவை, ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சிகளை ஜனநாயக அரசியல் செயற்பாட்டிற்கு களத்தில் இறங்க உதாரணம் காட்டுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக கடந்த கால தவறுகளை மறந்து புதுடெல்லியுடனும், கொழும்புடனும் பேச விரும்புவதுடன் ரணிலை ஜனாதிபதியாக்கவும் அது தயாராகிறது. பிரபாகரன் குடும்பம் இறந்தது என்று ராஜபக்சாக்கள் சொன்ன பொய்யை ரணில் விக்கிரமசிங்க மூலம் துவாரகாவுக்கு – அவரின் என்.ஜி.ஓ.வுக்கு வழிவிட்டு அரசியல் செய்ய விரும்புகிறது. ஆக, ஜனநாயகப் போராளிகள் கட்சியின் அரசியல் “வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும், ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும்” கதையாகி விட்டது.
சுவீடனைச் சேர்ந்த உலக காலநிலை செயற்பாட்டாளர் கிறேற்ரா தூன்பேர்க் போன்று , தமிழ்த்தேசிய அரசியல் காலநிலை பாதிப்புக்கு எதிராக போராட துவாரகா வருவதாக (?) காட்டப்படுகிறது. துவாரகாவும் குறிப்பிட்ட காலம் சுவீடனில் வாழ்ந்தவர். துவாரகா வருகிறாரோ? இல்லையோ? அவரின் பெயரால் அரசியல் செய்ய சிலருக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. போராளிகள் கட்சிக்கு ஒரு சில நாடாளுமன்ற கதிரைகள் கிடைத்தால் அந்தப் புண்ணியம் துவாரகாவுக்கு கிடைக்கட்டும். ஆனால் தமிழர் அரசியல் ஐக்கியம் கிடைப்பதற்கு மக்கள் புண்ணியம் செய்யாத பாவிகளாகவே இருக்கிறார்கள்.
“தமிழன் என்றொரு இனம் உண்டு அதற்கென்று ஒரு குணம் உண்டு” . துவாரகா அல்ல பிரபாகரன் வந்தாலும் அதனை மாற்ற முடியாது.