ஆளுநர் பதவி :                நஸீர் அகமட்டின் அரசியலும் கிழக்கின் தேவையும் ….!

ஆளுநர் பதவி : நஸீர் அகமட்டின் அரசியலும் கிழக்கின் தேவையும் ….!


(மௌன உடைவுகள் -56)

       — அழகு குணசீலன் —

இலங்கையின் ஒன்பது மாகாணங்களில் கிழக்கு மாகாணம் போன்று சமூக, பொருளாதார, அரசியல் சிக்கல்களும் குறிப்பாக இன, மத , கலாச்சார, பண்பாட்டு மோதல்களும்,  குரோதங்களும் நிறைந்த வேறு ஒரு மாகாணம்   இலங்கையில் இல்லை. இதை பல்வேறு தேசிய, சர்வதேசிய கள  ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. இதற்கு   இன, மத வாத தேசிய நாடாளுமன்ற அரசியலும், மாகாண அரசியலும் காரணம்.

இது  இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் முதலான தொடர்ச்சி  எனினும் கடந்த முப்பது ஆண்டுகால போர் இனங்களுக்கு இடையிலான இந்த முரண்பாட்டை மேலும் ஆழமாக்கி இருக்கிறது. இதில் முத்தரப்பு அரசியல்  கட்சிகளுக்கும், தலைமைகளுக்கும் பங்குண்டு. இவற்றிற்கும் அப்பால் பிராந்திய, அரபுலக நலன்களை கொண்ட அரசியலும் பின்னணியில் இருப்பதை மறுக்க முடியாது.

இந்த நிலையில் கிழக்கு மாகாணத்திற்கான தற்போதைய ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு பதிலாக புதிய ஆளுநராக  கட்சி மாறியதால் பதவி இழந்த முன்னாள் அமைச்சர்  நஸீர் அகமட் நியமிக்கப்பட இருப்பதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்றில் வெளிவந்த செய்தியானது கிழக்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச் செய்தியின்  பின்னணியில் உள்ள உண்மை , பொய்க்கு அப்பால் கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் கிழக்கின் ஆளுநர் ஒருவரின்  “தகுதி” பற்றி பேச வேண்டிய தேவையை இச் செய்தி ஏற்படுத்தியிருப்பது  குறிப்பிடத்தக்கது.

வடக்கு -கிழக்கு இணைந்த மாகாணசபை முதல், பிரிந்த வடக்கு, கிழக்கு மாகாணசபைகள் வரை பல ஆளுநர்களை மக்கள் பார்த்திருக்கிறார்கள். அரசியல் கட்சி சார்பற்ற(?) படைத்துறை, பொது நிர்வாகத்துறையை சேர்ந்தவர்கள் உட்பட கட்சி அரசியல்வாதிகள் வரை பலர் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் அதிகமானவர்களின் எதிர்மறையான செயற்பாடுகள் மாகாணசபை அதிகார பகிர்வு குறித்த ஆரம்பகால சந்தேகங்களுக்கு சான்றிதழ் வழங்குவதாக இருந்திருக்கின்றன. இந்த நிலைமை கிழக்கில் இருந்த நிலைமையை மேலும் மோசமாக்கி இருக்கிறது.

இந்த சூழலில் நஸீர் அகமட் கிழக்கின் இன்றைய நெருக்கடிகளை “நடுநிலையாக -நியாயமாக” கையாளக் கூடிய ஒரு அரசியல்வாதியா? என்ற கேள்வி எழும்போது அவர் கடந்து வந்த கடந்த கால அரசியல் பாதையை கவனத்தில் எடுக்காது கடந்து செல்ல முடியாது. தான் ஒரு நிர்வாகியே அன்றி அரசியல்வாதி அல்ல என்ற மனநிலையில் அவர் செயற்படவேண்டும். இது அவருக்கு சாத்தியமா…?  மக்கள் அவரிடம் இதை எதிர்பார்க்க முடியுமா…?

யார் இந்த நஸீர் அகமட் ஜெயினுலாப்தீன்….!

============

(*)  தமிழரசுக்கட்சி – தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நிபந்தனை அற்ற ஆதரவுடன்  கிழக்கு மாகாண முதலமைச்சரான நஸீர் அகமட்டின் செயற்பாடுகள் குறித்து தமிழ், சிங்கள மக்கள் விஷனம் கொண்டுள்ளனர்.   இதன் அர்த்தம் முஸ்லீம்கள் அவரை முழுமையாக ஆதரிக்கிறார்கள் என்பதல்ல. தமிழர் தரப்பு வழங்கிய ஆதரவையும் மறந்து முஸ்லீம்கள் சார்ந்த ஒரு பாகுபாடான நிர்வாகத்தை அவர் மேற்கொண்டதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதை பகிரங்கமாக தட்டிக்கேட்க வெட்கப்பட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் தங்கள் பலவீனத்தை மறைத்து பார்த்துக்கொண்டிருந்தனர். கொழும்பு அரசில் நல்லாட்சிக்கு ஆதரவளித்து “நல்லாட்சி” எங்களை ஏமாற்றி விட்டது என்று சம்பந்தர் சொன்னது மாகாணசபையில் ஏமாற்றப்பட்டதையும் சேர்த்து சொன்னதுதான் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

(*) முதலமைச்சர் நஸீர் அகமட்டின் இந்த அரசியலை நன்கு அறிந்திருந்த முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் கண்டும் காணாதவராக இருந்து வந்தார். ஏனெனில் நஸீர் அகமட்டோடு முரண்படுவது கிழக்கு முஸ்லீம்களோடு முரண்படுவதாக அமைந்துவிடும். ஆக, முஸ்லீம் காங்கிரஸ் தலைமை, தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைமைகளின் பலவீனங்களை  முதலமைச்சர் நஸீர் அகமட் சரியாக பயன்படுத்தி தனது  இனவாத அரசியலை மேற்கொண்டார். 

(*}  கடந்த காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினராக, கொழும்பு அரசாங்கத்தின் அமைச்சராக நஸீர் அகமட் அவர்களின் செயற்பாடுகள் தமிழ்மக்கள் விரோதம் கொண்டவை. மட்டக்களப்பு மாவட்ட செயலக அதிகாரிகளை “பயங்கரவாதிகள்” என்று அழைத்தவர்.  சிங்கள அரசியல்வாதிகள் கூட தமிழ் அரசாங்க அதிகாரிகளைப்பார்த்து  இவ்வாறு பேசவில்லை. இது ஒருவகையில் அரசாங்க அதிகாரிகள் மீதான அதிகாரத்திணிப்பு, அழுத்தம், அதிகாரிகள் சுதந்திரமாக தங்கள் கடமைகளைச் செய்ய விடாது தடுத்தல், அச்சுறுத்தல், நிர்வாகத்தில் அரசியல் தலையீடு செய்தல்  போன்ற  இவை சட்டத்திற்கு முரணானவை என்பதை அவர் அறியாமல் இருக்க முடியாது.

(*) மட்டக்களப்பு மாவட்டத்தின் காணிப்பிரச்சினையை முஸ்லீம் காங்கிரஸ், தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்பன , மற்றைய கட்சிகளுடன் இணைந்து தீர்வுக்கான திட்டம் ஒன்றை பரஸ்பரம் கலந்துரையாடி இருக்கமுடியும். ஆனால் நஸீர் அகமட்டின் நாடாளுமன்ற உரைகளுக்கும், கேள்விகளுக்கும் பதில் அளிக்க முற்பட்டு மட்டக்களப்பின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தனிநபர் தாக்குதல்களையும், இனவாதத்தையுமே பேசினார்கள். இது நஸீர் அகமட்டை மட்டக்களப்பு முஸ்லீம்கள் மத்தியில் ஹீரோவாக்கியது. கல்முனையில் ஹரிஷ் ஹீரோவானார். தமிழர் பக்கத்திலும் இதுவே நடந்தது.

(*) இந்த  ” தமிழர் எதிர்ப்பு” நிலைப்பாட்டை பாதுகாக்க இவர்கள் முஸ்லீம் காங்கிரஸ் தீர்மானங்களை மீறி அரசாங்கத்தை ஆதரித்தனர். ஜனாஷா எரிப்பை அங்கீகரித்து பதவியை பெறுவது நோக்காக இருந்தது. இதன் மூலம் தமிழ்மக்களின் நலன்களுக்கு குறுக்கே நின்று  அரசாங்கத்தை திருப்திப்படுத்துவது. மட்டக்களப்பில் காணி விவகாரம், கல்முனையில் பிரதேச செயலாளர் அலுவலகம். ஹக்கீம் வெறும் பார்வையாளராக அடுத்த மாகாணசபையை குறியாக வைத்து தமிழ்த்தரப்புடன் கைகுலுக்கிக்கொண்டாரே தவிர எதையும் செய்யவில்லை. தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, முஸ்லீம் காங்கிரஸ் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொதுவெளியில் நாய், புலி அரசியல் பேசி மோதிக்கொண்டபோது இரு கட்சிகளின் தலைமைகளும் கட்டியணைத்து ஆரத்தழுவிக்கொண்டார்கள். இதற்கு பெயர் அரசியல் “சாணக்கியம்”.

இப்போது தேர்தல் மணி ஒலிக்கத் தொடங்கியுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு மட்டக்களப்பில் ஒரு பணிக்கன் – யானைப்பாகன் தேவை. அந்த பணிக்கு நஸீர் அகமட்டை ஜனாதிபதி இனம் கண்டுள்ளார். அவருக்கு ஆளுநர் பதவியை வழங்கி முஸ்லீம் காங்கிரஸ்க்கு மட்டும் அல்ல, தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கும் அரசியல் அழுத்தம் கொடுப்பது ரணிலின் உள்நோக்கமாக இருக்கலாம். மட்டக்களப்பில் தமிழ் – முஸ்லீம் உறவை சீர்குலைப்பது நஸீர் அகமட்டுக்கு மட்டக்களப்பிலும், ரணிலுக்கு குறிப்பாக கிழக்கிலும் பொதுவாக முழு இலங்கையிலும் அரசியல் முதலீடாக அமையும். ஈஸ்டர் தாக்குதல், ஜனாஸா எரிப்பு என்பன ராஜபக்சாக்களை குறிவைப்பதால் இது ரணிலுக்கு சாதகமாக அமைய வாய்ப்புண்டு.

கிழக்கு மாகாண ஆளுனராக ஏற்கனவே நல்லாட்சி ஜனாதிபதி சிறிசேனாவால் நியமிக்கப்பட்ட ஹிஸ்புல்லாவின் பதவிக்காலத்தையும், அனுபவங்களையும் தமிழ்மக்கள் இன்னும் மறக்கவில்லை. கோயிலை இடித்து பள்ளிவாசல் கட்டியவன் என்று வாக்கு சேகரித்தவர் அவர். உண்மையில் அங்கு என்ன நடந்தது என்பதை எஸ்.எல்.எம். ஹனிபா ஆதாரத்துடன் பதிவிட்டிருந்தார்.  கோயில் காணியை நிர்வாகம் முஸ்லீம் ஒருவருக்கு விற்று இருந்தது. அந்தக்காணியில் பின்னர் பள்ளிவாசல் கட்டப்பட்டது.  சில வேளை இதற்கான நன்கொடையை அரபுலகில் இருந்து பெற்று ஹிஸ்புல்லா கொடுத்திருக்கலாம். இது கோயில் வளவில் பள்ளிவாசல் அமைய வாய்ப்பானது.

இதை மறைத்து கோயிலை இடித்து பள்ளிவாசல் கட்டினேன் என்ற ஹிஸ்புல்லாவின் அரசியல் பச்சை இன, மத வெறி கொண்டது. இது தேர்தலில் வெற்றி பெறுவதற்கு மிகச்சிறந்த குறுக்கு வழி. மறுபக்கத்தில் கோயில்காணியை விற்ற நிர்வாகம்  தங்கள் தவறை மறைப்பதற்கு ஹிஸ்புல்லாவின் பொய்யை ஊதிப்பெருப்பித்து இனவாதம் பேசியது. இவ்வாறான அரசியல்தான் கிழக்கின் இன்றைய அரசியல். சமூகவிரோதிகளான சைவப்பழங்கள் தப்பிக்கொண்டார்கள். பழி பள்ளிவாசலில் விழுந்தது. 

 கிழக்கு மாகாணத்தின் இதுவரையான ஏழு ஆளுநர்களில் ஒருவர் முஸ்லீம், ஒருவர் தமிழர், மற்றைய ஐவரும் சிங்களவர்கள்.  இவர்களில் ஒஸ்ரின் பெர்ணான்டோவை தவிர  , மற்றையவர்கள் முப்படைகளைச் சேர்ந்தவர்கள்  அல்லது  அரசியல்கட்சிகார்கள். 

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் லெப்டினன்ட் ஜெனரல் நளின் செனிவ்ரெட்ண, மேஜர் ஜெனரல் அசோகா ஜெயவர்த்தன, ரியர் அட்மிரல்

மொகான் விஜயவிக்கிரம போன்றவர்கள் இராணுவ பின்னணியைக் கொண்டவர்கள். காலனித்துவ காலம் போன்று அதிகாரப்பகிர்வு அலகுகளை நிர்வகிக்க முப்படைத்தலைமைகளையும்,  நிர்வாக அறிவும், திறனும் அற்ற கட்சி அரசியல் வாதிகளையும் அதுவும் தேர்தலில் மக்களால் நிராகரிக்க பட்டவர்களையும் ஆளுநர்களாக நியமனம் செய்ததும் மாகாணசபைகளின் சுயாதீன இயக்கத்தை தடுத்து நிறுத்தியுள்ளது.

அதிலும் குறிப்பாக ஆளுநர் அநுராதா ஜகம்பாத் பொதுஜனபெரமுனயின் பௌத்த சிங்கள பேரினவாதத்தின் பிரதிநிதியாகவே முற்றிலும் செயற்பட்டார். அவரின் அத்துமீறிய நடவடிக்கைளுக்கு எதிராக தமிழ்த்தரப்பு பேசியபோதெல்லாம் கிழக்கின் முஸ்லீம் எம்.பிக்கள் அதை “தமிழ் -சிங்கள சண்டையாக” வேடிக்கை பார்த்தனர்.  முரண்பாடு வளர்வது அவர்களுக்கு அரசியலில் இலாபம். இதனால் தான் செந்தில் தொண்டமானின் நியமனத்தை அவர்களால் ஆரம்பத்தில் இருந்தே ஜீரணிக்க முடியவில்லை.  ஏற்கனவே முஸ்லீம் சமூகத்தை சேர்ந்த ஹிஸ்புல்லா ஆளுநராக இருந்துள்ளார், இப்போது ஒரு தமிழர் அதுவும் வடக்கு கிழக்குக்கு வெளியில் இருந்து நியமிக்கப்பட்டுள்ளார் என்று அவர்கள் கருதவில்லை. அவர்களின் குறி தவறியதால் ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சியே செந்தில் தொண்டமான் மீதான வெறுப்பு. 

சிங்கள பௌத்த பேரினவாதிகள் எதிர்க்கிறார்கள். முஸ்லீம் அரசியல் வாதிகள் எதிர்க்கிறார்கள். போதாக்குறைக்கு திலீபனின் ஊர்தி விடயத்தில்  ஆளுநர் சட்டப்படி நடுநிலையாக செயற்பட்டதால் சட்டவாதிகளை கொண்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் செந்தில் தொண்டமானை எதிர்த்தது. இவர்கள் யாருக்காக அரசியல் செய்கிறார்கள். இவர்களின் அரசியலுக்கும் செந்தில் தொண்டமான் ஆளுநர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்ற பேரினவாத அரசியலுக்கும் என்ன வித்தியாசம். 

கிழக்கு மாகாண சபையின் ஆளுநர் எப்படியானவராக இருக்க வேண்டும் என்பது இனங்களையும், மதங்களையும் , மாகாண எல்லையையும் கடந்தது. தமிழர், முஸ்லீம், சிங்களவர் என்பதற்கு அப்பால் ஒரு சிவில் அதிகாரியே நியமிக்கப்பட வேண்டும். அவர் கட்சி அரசியல் சாராதவராக மட்டும் அன்றி , கிழக்குமாகாணத்தை சேராதவராகவும் இருப்பதில் நன்மை உண்டு. அரசியல் வாதிகளுக்கும், கட்சிகளுக்கும் கால் கழுவி , பூசைத்தட்டு வழங்குபவராக இருக்க கூடாது. செந்தில் தொண்டமானில் இருக்கின்ற ஒரு வேறுபாடு அவர் கிழக்குமாகாணத்தை சேராதவர். அவர்சார்ந்த இ.தொ.கா. கட்சிக்கு கிழக்கில் ஆட்சேர்க்கவும், கட்சி வேலை செய்யவும், கட்சியை வளர்க்கவும் வேண்டிய தேவை அவருக்கு இல்லை.

இதனால் அவரது கடமையை சுயமாக செய்ய முடிகிறது.

 ஹிஸ்புல்லா போன்று நஸீர் அகமட் ஜெயினுலாப்தீன் நியமிக்கப்பட்டால் இவரும் தேர்தலை குறியாகக் கொண்டு கட்சி அரசியலே செய்வார். அதுவும் இவர் மட்டக்களப்பு மாவட்ட அரசியல்வாதியாக இருப்பதால் அது இன்னும் வாய்ப்பாக அமைந்துவிடும். கிழக்குக்கு தேவை நிர்வாக நிபுணத்துவம் கொண்ட ஒரு சிவில்சேவை அதிகாரியே. இவர் சிங்களவரா? தமிழரா? முஸ்லீமா? என்ற கேள்வி இங்கு முக்கியமற்றது. நிர்வாகம் செய்வதற்கு எதற்கு இனமும், மதமும். 

லயனல் பெர்ணான்டோ…!  காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் தலைவராக இருந்தவர். நேர்மையான நிர்வாகி .அ. அமிர்தலிங்கத்தின் ஆலோசனையின் பேரில் யாழ்.அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டவர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் அரசாங்க அதிபர்கள் கூட செய்யாதபணிகளை  செய்து யாழ். மக்களின் இதயங்களை வென்றவர்.

பின்நாளில் பல அமைச்சுக்களின் செயலாளராகவும், பிரான்ஸ், நெதர்லாந்து தூதுவராகவும் பணியாற்றினார்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளராக நியமிக்கப்படும் செய்திகள் வெளிவந்தபோது,  இராஜினாமா செய்வதற்காக கடிதம் கிடைக்கும்வரை காத்திருக்கிறேன் என்று கூறி கடிதம் கிடைத்தவுடன் பதவியை இராஜினாமா செய்தவர். இதற்கு மனித உரிமைகள் நிலைமைகள் மோசமாக இருந்த அன்றைய சூழலில் ஆணைக்குழுவின் மற்றைய உறுப்பினர்கள் மீது அவருக்கு நம்பிக்கை இருக்கவில்லை என்று கூறப்பட்டது. ஷாலியா பீரிஸ், ஹாசாலி ஹுசைன், அம்பிகா சற்குணநாதன் ஆகியோர் மற்றைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் பலர் தனது பணிக்கு குறுக்கே நிற்பார்கள் என்பதே இராஜினாமாவுக்கு காரணம்.

இப்படியான இன, மத,  மொழி, எல்லைகளை கடந்த நேர்மையான நிர்வாக நிபுணர்கள் இலங்கையில் இன்னும் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அரசியல் தலைவர்களை “காக்கா” பிடிப்பதில்லையே…!  என்ன செய்ய?

இதனால் …….  பிடிப்பவர்களுக்கே காலம் கைகொடுக்கிறது.