— வீரகத்தி தனபாலசிங்கம் —
இலங்கையில் அரசியலிலும் ஆட்சிமுறையிலும் தலைவிரித்தாடும் ஊழலும் முறைகேடுகளும் குறித்து அண்மையில் தனியார் தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றில் அரசியல்வாதிகள் கலந்துரையாடினார்கள்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய, சம்பிக்க ரணவக்கவின் ஐக்கிய குடியரசு முன்னணியைச் சேர்ந்த ஷிரால் லக்திலக ஆகியோர் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
கலந்துரையாடல் முடிவுற்றதும் தொலைக்காட்சி பார்வையாளர்கள் ‘வட்ஸ்அப் ‘ மூலமாக இவர்களிடம் கேள்விகளைக் கேட்பதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.
தகவல் பெறுவதற்கான உரிமையைப் பயன்படுத்தி பாராளுமன்ற அமர்வுகள் பற்றிய விபரங்களைப் பெற்றுக்கொண்ட ஒரு பார்வையாளர் சுமந்திரனிடம் மூத்த தமிழ்த்தலைவர் இரா. சம்பந்தன் அவர்கள் குறித்து ஒரு கேள்வியைக் கேட்டார்.
தன்னால் பெறப்பட்ட விபரங்களின் பிரகாரம் தற்போதைய பாராளுமன்றத்தின் 228 நாள் அமர்வுகளில் சம்பந்தன் 38 நாட்கள் மாத்திரமே கலந்துகொண்டார். எதிர்க்கட்சி தலைவராக பதவிவகித்தபோது உத்தியோகபூர்வ வாசஸ்தலமாக வழங்கப்பட்ட அரசாங்க பங்களாவிலேயே இன்னமும் அவர் வசித்துவருகிறார். பாராளுமன்ற அமர்வுகளில் 13 சதவீதமானவற்றில் மாத்திரம் கலந்துகொண்ட சம்பந்தனுக்காக நாற்பது இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணம் செலவாகியிருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது என்று கூறிய அந்த பார்வையாளர் இவ்வாறு செலவிடப்படுவது ஒரு வகையான ஊழல் இல்லையா என்று சுமந்திரனிடம் கேள்வியெழுப்பினார்.
சம்பந்தனுக்காக பணம் செலவிடப்பட்டது ஊழலா இல்லையா என்பதற்கு பதிலளிப்பதை தவிர்த்துக்கொண்ட சுமந்திரன், தங்களது தலைவர் விடயத்தில் இலங்கை தமிழரசு கட்சிக்கும் தனிப்பட்ட முறையில் தனக்கும் அண்மைக்காலமாக இருந்துவரும் மனக்குறையை வெளிப்படுத்துவதற்கு அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தத் தவறவில்லை.
வயோதிபம் மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சம்பந்தன் அவர்களால் சில சந்தர்ப்பங்களில் பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்கமுடியாமல் இருக்கிறது என்று கூறிய சுமந்திரன் தானும் தமிழரசு கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலரும் கடந்த வருடமே சம்பந்தனைச் சந்தித்து தங்களது அக்கறையை வெளிப்படுத்தியபோது தனது உடல்நிலை நன்றாக இல்லை என்பதை தெரிந்து கொண்டுதான் கடந்த பாராளுமன்ற தேர்தலில் திருகோணமலை தமிழ் மக்கள் தனக்கு வாக்களித்தார்கள் என்று கூறி பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறக்க மறுத்துவிட்டார் என்று குறிப்பிட்டார்.
அவர் வெளியிட்ட இந்த கருத்து அரசியல் பரப்பிலும் ஊடகங்களிலும் ஒரு விவாதத்தை மூளவைத்திருந்தது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக நீண்டகாலமாக இருந்துவந்த சம்பந்தன் அதன் மற்றைய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஒப்பிடும்போது சுமந்திரனையே தனது நம்பிக்கைக்குரியவராக கருதிவந்தார் என்பது ஒன்றும் இரகசியமில்லை. சிறந்த ஒரு சட்டத்தரணியான அவரை உள்நாட்டுப்போரின் முடிவுக்கு பின்னர் நடைபெற்ற 2010 பொதுத்தேர்தலில் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் மூலமாக பாராளுமன்ற உறுப்பினராக்கி அரசியலுக்கு கொண்டுவந்தவரே சம்பந்தன் தான்.
முக்கியமான அரசியல் மற்றும் இராஜதந்திர சந்திப்புக்களின்போது சுமந்திரன் தனதருகில் இருந்து பங்கேற்பதை சம்பந்தன் எப்போதும் உறுதிசெய்துகொள்வார். தமிழர் அரசியலைப் பொறுத்தவரை, சர்வதேச சமூகத்துடன் தீவிரமான ஊடாட்டம் அத்தியாவசியமானதாக இருக்கின்ற இன்றைய காலகட்டத்தில் தமிழரசு கட்சியின் அடுத்த தலைமைத்துவத்துக்கு சுமந்திரனை சம்பந்தன் ஊக்கப்படுத்தி வளர்க்கிறார் என்றும் பரவலாக நம்பப்பட்டது.
அத்தகைய ஒருவர் தன்னைப் பற்றி இவ்வாறு கூறுவார் என்று சம்பந்தன் எதிர்பார்த்திருக்க மாட்டார். அவருக்கும் சுமந்திரனுக்கும் இடையிலான நெருக்கத்தை தெரிந்துகொண்ட வேறு எவரும் கூட இதை எதிர்பார்த்தி ருக்கமாட்டார்கள்.
சம்பந்தனுக்கு இது மனவருத்தத்தைக் ஏற்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவர் அதைப் பற்றி இதுவரையில் பகிரங்கமாக எதையும் கூறவில்லை. அது தான் சம்பந்தன். எந்த விடயத்திலும் உடனடியாக எதிர்வினை ஆற்றாமல் அமைதியாக இருந்து நிலைவரங்களை அவதானிப்பது அவரது சுபாவம்.
சுமந்திரன் அவர்களைப் பொறுத்தவரை, சம்பந்தனுக்கு எதிராகக் கிளம்பவேண்டிய தேவை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கேள்விக்கு பதிலளிக்கும்போது வயோதிபமும் உடல்நலக்குறைவும் காரணமாக முன்னரைப் போன்று துடிப்பாக செயற்படமுடியாமல் இருக்கும் ஒரு தலைவரை நியாயப்படுத்திக் கருத்துவெளியிட்டு தன்னை ஒரு பொருந்தாத்தன்மைக்கு உள்ளாக்க சுமந்திரன் விரும்பாமல் இருந்திருக்கலாம்.
தனது கருத்து குறித்து உருவான சர்ச்சையை அடுத்து கொழும்பு ஆங்கில தினசரியொன்றின் செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த சுமந்திரன் என்றென்றைக்கும் தீவிர அரசியலில் தொடர்ந்து இருக்கமுடியாது என்பதை சகல அரசியல்வாதிகளும் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் சம்பந்தன் விவகாரத்தில் தாங்கள் விரைவில் தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டியிருக்கிறது என்றும் கூறினார்.
இந்த பதில் சம்பந்தன் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை மாத்திரம் தான் துறக்கவேண்டும் என்று சுமந்திரன் விரும்புகிறாரா அல்லது அவர் முற்றாக அரசியலில் இருந்தே ஓய்வுபெறவேண்டும் என்று விரும்புகிறாரா என்று ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இந்த சந்தேகத்தை தெளிவுபடுத்துவதற்கு சுமந்திரன் அவர்களுடன் தொடர்புகொண்டபோது தங்கள் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து மாத்திரம் விலகவேண்டும் என்றே தான் கேட்டதாகக் கூறினார். ஆகவே சம்பந்தன் அரசியலில் இருந்து ஓய்வு பெறவேண்டும் என்பது சுமந்திரன் கோரவில்லை.
அடுத்த வருடம் பெப்ரவரி ஐந்தாம் திகதி 91வயதை அடையவிருக்கும் சம்பந்தன் உடல்நலம் குன்றி வெளிநடமாட்டம் வெகுவாக குறைந்துவிட்டபோதிலும், பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறக்க மறுத்துவருவதாகக் கூறப்படுவதை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது அவர் இன்னமும் கூட தனக்கு தமிழர் அரசியலில் ஒரு வகிபாகம் இருக்கிறது என்று நம்புகிறார் என்றே தோன்றுகிறது.
சம்பந்தன் அவர்கள் இப்போது கொழும்பு வாசஸ்தலத்தில் இருந்த வண்ணமே அரசியல்வாதிகளுடனும் வெளிநாட்டு இராஜதந்திரிகளுடனும் சந்திப்புக்களை நடத்திவருகிறார். அரசியல் நிலைவரங்கள் குறித்து தொடர்ச்சியாக அறிக்கைகளை வெளியிடும் அவர் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அண்மைக்கால பிரச்சினைகள் குறித்து அரசாங்க தலைவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் கடிதங்களை எழுதுகிறார். ஆனால், தனது திருகோணமலை மாவட்ட மக்களைச் சந்திக்கவோ அல்லது மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் போன்ற உத்தியோகபூர்வ நிகழ்வுகளில் பங்கேற்கவோ நேரடியாகச் செல்லக்கூடிய நிலையில் இல்லை.
சிங்கள அரசியல் தலைவர்களினதும் வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் இராஜதந்திரிகளினதும் மதிப்புக்குரியவராக தமிழ் தலைவராக சம்பந்தன் இன்று விளங்குகிறார். தன்னை வீடுதேடி வந்து சந்திக்கும் வெளிநாட்டு பிரதிநிதிகளிடம் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை விளக்கிக்கூறி இனப்பிரச்சினைக்கு பயனுறுதியுடைய அரசியல் இணக்கத்தீர்வைக் காண்பதற்கு சர்வதேச சமூகத்தின் உதவியை தவறாமல் கோரிவருகிறார். இலங்கை வரும் வெளிநாட்டு தூதுக்குழுக்களும் அவரை தவறாமல் சந்திக்கின்றன.இந்த அளவில் அவரது தற்போதைய செயற்பாடுகள் இருக்கின்றன.
சம்பந்தன் அவர்கள் 1956 ஆம் ஆண்டில் தமிழரசு கட்சியில் இணைந்து அரசியலில் பிரவேசித்தவர். தனித்தமிழ் நாட்டுக்கு தமிழ் மக்களின் ஆணையைக் கேட்டு 1977 ஜூலை பொதுத்தேர்தலில் போட்டியிட்டு காலஞ்சென்ற தலைவர்கள் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் மற்றும் முருகேசு சிவசிதம்பரம் தலைமையில் பாராளுமன்றம் வந்த தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் 18 உறுப்பினர்களில் இன்று எம்மத்தியில் இருப்பவர்கள் சம்பந்தனும் வீரசிங்கம் ஆனந்தசங்கரியும் மாத்திரமே.
தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட நாள் தொடங்கி அதன் தலைவராக இருந்துவரும் சம்பந்தனுக்கு உள்நாட்டுப் போரின் முடிவுக்கு பின்னரான தமிழர் அரசியலின் தலைமைத்துவம் தானாக வந்துசேர்ந்தது. ஆறரை தசாப்தங்களுக்கும் அதிகமான கால அரசியல் வாழ்வைக் கொண்டவர் என்றாலும் அவருடைய ‘அரசியல் மரபு ‘ என்று அமையப்போவது கூட்டமைப்பின் தலைவராக கடைப்பிடித்த அணுகுமுறைகளும் முன்னெடுத்த செயற்பாடுகளுமே என்பதில் சந்தேகமில்லை.
போரின் முடிவுக்கு பின்னரான காலகட்டத்தில் கடந்த கால அனுபவங்களில் இருந்து படிப்பினைகளைப் பெற்றுக்கொண்டு, உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலைவரங்கள் வேண்டிநிற்பதற்கு ஏற்றமுறையில் தமிழர்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதற்கான மார்க்கத்தை வகுப்பதில் தலைமை தாங்கும் வரலாற்று முக்கியத்துவ பாத்திரம் சம்பந்தன் அவர்களுக்கு உரியதாக இருந்தது.
அந்த பாத்திரத்தை எவ்வாறு கையாண்டு வந்திருக்கிறார் என்பது குறித்து அகவுணர்வுகளுக்கு அப்பாற்பட்ட முறையில் செய்யப்படக்கூடிய ஒரு உருப்படியான மதிப்பீடு மாத்திரமே தமிழர் அரசியலில் அவரின் தகுநிலை பற்றிய கேள்விக்கு பதிலைக் கூறும்.
போரின் முடிவுக்கு பிறகு வடக்கு, கிழக்கு தமிழர்கள் மத்தியில் கட்டுறுதியான அரசியல் சமுதாயம் ஒன்று இருக்கவில்லை. மூன்று தசாப்த கால ஆயுதப்போரட்டத்தின் தவிர்க்கமுடியாத விளைவு இது. போர்க்காலத்தில் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பே போருக்கு பின்னர் அந்த இடைவெளியை நிரப்பும் பொறுப்பைக் கொண்டிருந்தது. தமிழ் மக்களுக்கு தேர்தல்களில் கூட்டமைப்புக்கு வாக்களிப்பதை தவிர வேறு வழியில்லை என்ற நிலை பல வருடங்களாக நீடித்தது.
ஆனால், அந்தப் பொறுப்பை நிறைவேற்றக் கூடியதாக கூட்டமைப்பை வழி நடத்துவதில் சம்பந்தன் தனது நீண்டகால அரசியல் அனுபவத்தின் அடிப்படையில் விவேகத்துடனும் தொலைநோக்குடனும் நடந்துகொண்டிருந்தால், தமிழ் அரசியல் சமுதாயம் இன்று காணப்படுவதைப் போன்று சிதறுண்டு போயிருக்காது என்று தமிழ் மக்கள் மத்தியில் வலுவான அபிப்பிராயம் இருக்கிறது.
கட்சி அரசியல் மாச்சரியங்களுக்கு அப்பால் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளின் தலைவர்களை அரவணைத்து கட்டுக்கோப்பாக விவகாரங்களை கையாளக்கூடிய அணுகுமுறையையும் வழிகாட்டலையும் தமிழ்ச்சமூகம் சம்பந்தனிடம்
வேண்டிநின்றது.
தமிழரசு கட்சிக்குள் தோன்றுகிற உட்பூசல்களாக இருந்தாலென்ன, தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளுக்கிடையில் ஏற்பட்ட பிரச்சினைகளாக இருந்தாலென்ன அவற்றை உடனடியாகக் கையாளாமல் அமைதியாக இருந்த அவதானித்த சம்பந்தனின் அணுகுமுறையே தமிழ்த்தேசிய அரசியலின் இன்றைய நிலைமை பெரிதும் காரணமாக இருந்தது எனலாம்.
அவசரப்படாமல் அமைதியாக இருந்து நிலைவரங்களை அவதானித்து அவற்றை எவ்வாறு விவேகமாக கையாளுவது என்பது குறித்து தீர்மானிப்பதும் நிலைவரங்கள் அவசரமான அணுகுமுறையையும் தீர்மானங்களையும் வேண்டிநிற்கும்போது அரசியல் துணிவாற்றலுடன் துரிதமாகச் செயற்படாமல் அமைதியாக இருப்பதும் ஒன்று அல்ல.
இன்று வடக்கு, கிழக்கில் இயங்கும் பெருவாரியான அரசியல் கட்சிகளில் ஒவ்வொன்றும் தங்கள் சொந்தத்தில் கூட்டணிகளை அமைத்திருப்பதாக கூறுகின்றன. அவற்றின் உறுப்பினர்களின் எண்ணிக்கை தலைவர்களுக்கே வெளிச்சம்.
எந்த தமிழ்க் கட்சியிலும் ஒழுங்கு கட்டுப்பாடு என்பது கிடையாது. ஒரு காலத்தில் தலைவர்களுக்கு கட்சி உறுப்பினர்கள், மக்கள் மத்தியில் இருந்த மதிப்பு,மரியாதையை இன்று காணமுடியவில்லை.
நீண்ட பாரம்பரியத்தைக் கொண்ட தமிழரசு கட்சியிலும் கூட கூட்டாக தீர்மானம் எடுத்து பொதுவெளியில் பேசும் பண்பாட்டை இன்று காணமுடியவில்லை. பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் எண்ணத்தின்படி அறிக்கைகளை வெளியிடுவதையும் உரைகளை நிகழ்த்துவதையும் காணக்கூடியதாக இருக்கிறது. தமிழரசு கட்சியின் உண்மையான நிலைப்பாடுகளை மக்கள் திட்டவட்டமாக தெரிந்துகொள்ள முடியாத அளவுக்கு குழப்பநிலை.
தமிழ் தேசிய அரசியலின் படிப்படியான இந்த சீரழிவு தனது கண் முன்னால் நடந்தேறுவது குறித்து சம்பந்தன் அவர்கள் நிச்சயம் வருந்தியேயாக வேண்டும். உடல்நலம் குன்றிய நிலையில் அவரின் மனதை புண்படுத்துவது எமது நோக்கமல்ல. அவர் பூரண சுகத்துடன் வாழவேண்டும். ஆனால் தமிழர் அரசியலின் இன்றைய நிலையை அவருக்கு கூறாமல் இருக்கமுடியவில்லை. சுமந்திரன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வெளியிட்ட கருத்து இதற்கான வாய்ப்பைத் தந்தது.
அதேவேளை சம்பந்தனுக்கு இணையான நீண்டகால அரசியல் அனுபவத்தையும் வெளியுலகின் மதிப்பையும் கொண்ட வேறு ஒரு தமிழ்த் தலைவர் இன்று இல்லை என்பது அவருக்கு அனுகூலமானதாக இருக்கிறது.நாளடைவில் அரசியலில் இருந்து அவர் ஓய்வு பெறும்பட்சத்தில் ஏற்படக்கூடிய வெற்றிடமும் கூட தனிப்போக்கானதாகவே இருக்கும்.
(வீரகேசரி வாரவெளியீடு)