— கருணாகரன் —
‘தமிழ் மக்களுடைய விடுதலைக்கு ஐக்கியம் வேண்டும்’ என்ற குரல் – வலியுறுத்தல் தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது. கடந்த வாரம் கூட யாழ்ப்பாணத்தில் வடக்குக் கிழக்கு சிவில் சமூகம் என்ற தரப்பினர் முன்னெடுத்த கருத்தரங்கிலும் ஐக்கியத்தின் அவசியத்தைப் பற்றிப் பேசப்பட்டது. இந்த ஐக்கியக் குரலுக்கு ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலிருக்கும். ஆனால், அது உருவாகாத, உருப்படாத சவலையாகவே உள்ளது.
மட்டுமல்ல, ஐக்கியத்திற்கு எதிர்நிலையிற்தான் நடைமுறைகள் உள்ளன.
அதாவது ஐக்கியத்தை வலியுறுத்துவோரும் சரி, ஐக்கியத்தை உருவாக்க வேண்டிய சக்திகளும் சரி, ஐக்கியப்பட வேண்டிய தரப்பினரும் சரி, ஐக்கியத்துக்கு எதிரானதாகவே செயற்படுவதைக் காண்கிறோம். இவற்றின் அக – புற நிலைகள் ஐக்கியத்துக்கு ஒருபோதுமே சாத்தியமாக இல்லை.
இதைக்குறித்து இந்தக் கட்டுரைத் தொடர் ஆராய முற்படுகிறது.
தமிழர்களுக்கு நியாயமான தீர்வு கிட்டவேண்டும் என்றால், அதற்கு ‘தமிழ்த்தரப்பிலுள்ள சக்திகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும். ஐக்கியப்பட வேண்டும். அப்போதுதான் ஒருமுகப்பட்ட தீர்வைக் குறித்துப் பேசவும் அழுத்தம் கொடுக்கவும் முடியும். பிராந்திய சக்தியாகிய இந்தியா, சர்வதேச சமூகம் மற்றும் இலங்கை அரசு என எதனோடு பேசுவதற்கும் இந்த ஒருங்கிணைவும் ஒரு நிலைப்பட்ட கோரிக்கையும் அவசியமாகும்…’ என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது.
இங்கே இவ்வாறு ஐக்கியத்துக்காக அர்த்தப்படுத்தப்படுவது, வலியுறுத்தப்படுவது இன்றைய தமிழ்த்தேசியச் சக்திகளை – அப்படித் தம்மை அடையாளம் காட்ட முற்படும் தரப்புகளை – மனதிற் கொண்டேயாகும்.
ஆனால் இதுவே தவறான புரிதலாகும்.
இவை மட்டும் ஐக்கியமாகினால் அது தமிழ்த்தரப்பு என்றாகிவிடாது. ஒரு அரசியற் சூழலில், அதுவும் ஜனநாயக முன்னெடுப்பிலுள்ள அரசியற் சூழலில் தனியே ஒற்றைப்படையான தரப்புகள் மட்டும் முழுமையான அடையாளத்தையும் பிரதிநிதித்துவத்தையும் கொள்ள முடியாது.
ஏன் ஆயுதப்போராட்ட அரசியற் சூழலில் கூட அது பொருத்தமாவதில்லை.
விடுதலைப்புலிகளின் காலத்திலும் இந்தப் பிரச்சினை இருந்தது. புலிகள் இதை மறுதலித்துத் தாமும் தம்மால் உருவாக்கப்பட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் ஏக பிரதிநிதித்துவத்துக்குரியன என்று வாதிட்டபோதும் அதை இலங்கை அரசு மட்டுமல்ல, உலகமும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கவில்லை. அப்பொழுது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் 22 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தனர் என்பது கவனிக்கப்பட வேண்டியது.
அப்படி அதை ஒரு அங்கீகாரமாகக் கொண்டிருந்தால், புலிகளும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் அரசியல் அங்கீகாரத்துடன் தொடர்ந்தும் இருந்திருக்கும் நிலை உருவாகியிருக்கும்.
புலிகள்தான் ஆயுதப்போராட்ட அமைப்பு. ஆகவே அவர்களுக்குப் பிரச்சினை என்றால், மக்களால் அங்கீகரிக்கப்பட்ட – தெரிவு செய்யப்பட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அங்கீகாரத்துடன் இருந்திருக்கும்.
ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. நடக்கவும் மாட்டாது.
இதுதான் இன்றைய உலக நியதி.
இப்பொழுது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பே உடைந்து பல துண்டுகளாகி விட்டது.
ஆக ஐக்கியத்துக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்த சக்திகளை – தரப்புகளை முதலில் கொண்டு வர வேண்டும்.
அது சாத்தியமா?
இல்லை என்பதே வெளிப்படையான – உண்மையான பதில்.
ஏனென்றால் அவை ஒன்றும் எளிதாக உடைந்து – பிரிந்து செல்லவில்லை.
உடைந்தோ பிரிந்தோ செல்வதற்கான ஆழமான அரசியற் கொள்கை வேறுபாடுகள் இவற்றிற்கிடையே இல்லை என்றாலும் இவற்றின் நடைமுறைப் பிரச்சினைகளும் மனநிலையும் ஆழமானவை. எளிதில் தீர்த்துக் கொள்ள முடியாதவை. அதாவது இவற்றில் அடிப்படையான பண்பு மாற்றம் நிகழாமல், வெறுமனே தீர்வு காண – இணைய – முடியாதவை.
அந்தப் பண்பு மாற்றத்தை நிகழ்த்துவதற்கான அரசியற் தெளிவு, கொள்கையின் மீதான உறுதிப்பாடு, வாழ்க்கை முறைமை, மனநிலை, அறிவு போன்றவையும் இந்தத் தரப்பினரிடத்தில் இல்லை.
என்பதால்தான் தமிழரசுக் கட்சியை விட்டு, (கூட்டமைப்பை விட்டு) வெளியேறிய சக்திகள் கூட தனித்தனியாக உடைந்தும் பிரிந்தும் (தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம், தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ்த் தேசியக் கட்சி, ஜனநாயகப் போராளிகள், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்), ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகம் போன்றவை) நிற்கின்றன.
இன்னொரு நிலையில் தமிழரசுக் கட்சியே உடையக் கூடிய நிலையிற்தான் உள்ளது. அதற்குள்ளிருக்கும் தலைமைத்துவப் போட்டியும் அணிப் பிளவுகளும் வெளிப்படையானவை.
ஏனைய கட்சிகளிலும் அவற்றின் தலைவர்களைக் கடந்து அடுத்த நிலையாளர்கள், அடுத்த கட்டத்தலைவர்கள் என எவரும் இல்லை. ஆகவே அவையும் எப்போது பொறிந்து விழும் என்று தெரியாத நிலையிலேயே உள்ளன.
இவ்வளவுக்கும் இவை அனைத்தும் ஒற்றுமையையும் ஐக்கியத்தையும் வலியுறுத்திக் கொண்டிருப்பவை.
ஆகவே இங்கே ஐக்கியம் – ஒற்றுமை – ஒருங்கிணைவு என்பதெல்லாம் வெறுமனே வாயால் உச்சரிக்கப்படுகிறதே தவிர, அது ஆத்மார்த்தமாக – உள்ளார்ந்த எண்ணமாக உருக் கொள்ளவில்லை. அப்படி உண்மையாகவே, ஆத்மார்த்தமாக ஐக்கியத்தைப்பற்றிச் சிந்தித்திருந்தால், ஐக்கியத்தின் தேவையை உணர்ந்திருந்தால் இவை சகிப்புத்தன்மையோடும் விட்டுக் கொடுப்புகளோடும் ஐக்கியப்பட்டிருந்திருக்கும். அல்லது இப்போது கூட எளிதாக (நிபந்தனைகளின் அடிப்படையிலோ நிபந்தனையின்றியோ) ஐக்கியப்பட்டிருக்கும்.
என்பதால் ஐக்கியத்தைப்பற்றிய ஆழமான ஈடுபாடு இவற்றுக்குக் கிடையாது. அதில் நம்பிக்கையும் இல்லை.
ஆனால், வெளி நிர்ப்பந்தங்களுக்காகவே ஐக்கியம் பற்றிப் பேசுகின்றன; ஐக்கியம் பற்றிய உரையாடல்களில் கலந்து கொள்கின்றன. அங்கும்கூட தமது தனியான மனநிலையை விட்டு விட்டு அவற்றில் பங்கேற்பதில்லை. கூட்டுணர்வு கொள்வதில்லை.
இதை நாம் இவற்றின் அகநிலைப் பிரச்சினையாகப் பார்க்க முடியும். ஒவ்வொரு கட்சிக்கும் அவற்றின் தலைமைக்கும் உள்ள உளப் பிரச்சினையாக இதுள்ளது. இதற்குள் இவற்றின் அரசியல் இருப்புப் பற்றிய பிரச்சினை முக்கியமானது. அதை முன்னிலைப்படுத்திச் சிந்திப்பதன் விளைவே இந்தச் சிக்கலாகும்.
புறநிலையில் அழுத்தங்கள் இருந்தாலும் அதை அகநிலைப் பிரச்சினைகள் தள்ளி விடுகின்றன. உண்மையில் அகநிலையில் ஐக்கியம் பற்றிய உணர்விருந்தால் – ஈடுபாடிருந்தால் புறநிலையைக் கடந்தும் ஐக்கியம் சாத்தியமாகும். மட்டுமல்ல, அந்த ஐக்கியம் வலுவானதாகவும் இருக்கும்.
இது புறநிலை அழுத்தத்தையே எதிர்த்து வெளித்தள்ளி விடக்கூடிய அகநிலைப் பிரச்சினையாக அல்லவா உள்ளது.
எனவேதான் இன்றைய நிலையில் ஐக்கியம் – ஒற்றுமை சாத்தியமில்லை என்ற அறுதியிட்டுக் கூற முடிகிறது. அதை மீறிச் சொல்வதாக இருந்தால் அதொரு பாவனையாக – நாடகமாக இருக்குமே தவிர, அதில் உண்மை எதுவும் இருக்காது.
அரசியலில் பிரதானமாக இரண்டு அல்லது மூன்று வகையான சூழலில் ஐக்கியத்துக்கான சந்தர்ப்பங்களும் வாய்ப்புகளும் இருப்பதுண்டு.
ஒன்று, புற அழுத்தங்களின் போது. தேர்தல் அல்லது பேச்சுவார்த்தை அல்லது வெளிச்சக்திகளின் அழுத்தம் என வரும்போது. இது அந்தச் சூழலை எதிர்கொள்வதற்கான தற்காலிக ஏற்பாடாக இருக்கும். சிலவேளை இதிலிருந்து தொடங்கி ஒரு வலுவான கூட்டாகவும் ஐக்கியமாகவும் தொடரவும் கூடும். ஆனால், அந்த வெளி அழுத்தம் குறையும்போதும் உள்ளே போட்டிகள் வலுக்கும்போதும் உடைவு சாதாரணமாக நிகழ்ந்து விடும். கூட்டமைப்பின் உடைவு இதற்கு உதாரணம்.
இதில் இன்னொன்றும் உள்ளது. ஒடுக்குமுறை அல்லது பிரச்சினையை எதிர்கொள்வதற்காக (Based on the issues) சில வேலைத்திட்டங்களின் அடிப்படையில் அல்லது பொதுப் பிரச்சினைக்கு முகம் கொடுக்கும் அடிப்படையில் ஒன்றிணைந்து செயற்படுவது – ஐக்கியப்படுவது என்பதாக இதிருக்கும். இப்படிச் செயற்பட்டு வரும்போது ஏற்படுகின்ற புரிந்துணர்வு, உறவு, அனுபவம் போன்றவற்றின் அடிப்படையில் இந்த ஐக்கியத்தை – ஒற்றுமையை வலுப்படுத்திக் கொள்ள முடியும். ஆனால், அதற்கும் இவற்றின் உளநிலை பொருத்தமாக இல்லாமலே உள்ளது.
அவ்வப்போது நிகழ்கின்ற போராட்டங்கள், பொதுப்பிரச்சினைகளுக்கான முகம் கொடுத்தல்களில் இந்தச் சக்திகளிற் சில அப்படியான ஒரு தோற்றத்தைக் காட்டுகின்றன. ஆனால், இதை நிதானமாக அணுகி வளர்த்தெடுத்தால் ஓரளவுக்கு ஐக்கியத்தை – ஒற்றுமையை வலுப்படுத்தலாம்.
மெய்யான ஐக்கியம்
===========
இரண்டாவது, இந்தக் கட்டுரை பேச முற்படுகின்ற ஒரு பகுதியான மெய்யான ஐக்கியத்தை எட்டுவதற்கு – உருவாக்குவதற்கு – கொள்கை ரீதியாகவும் (Based on principle) தீர்வுக்கான தேவையின் அடிப்படையிலும் மேற்கொள்கின்ற உறவாகும். இது சற்றுக் கடினமானது. ஆனால், இதில் தெளிவேற்பட்டு, அந்தத் தெளிவின் அடிப்படையில் கட்டியெழுப்பப்படுகின்ற ஐக்கியமானது உறுதியாகவும் ஓரளவுக்கு நிரந்தரத்தன்மை உடையதாகவும் இருக்கும். அதுதான் பலமானது. ஏனெனில் அது கொள்கை ரீதியானது. ஐக்கியம் என்றால் என்ன, எந்த அடிப்படையிலானது என்ற தெளிவுடன் மேற்கொள்ளப்படுவதால் இது பலமானது, வலுவானது.
இங்கே இவை எதற்குமான வாய்ப்புகள் இல்லை. என்பதால்தான் ஐக்கியம் – ஒற்றுமை நிகழமறுக்கிறது.
(தொடரும்)