— சபீனா சோமசுந்தரம் —
நேரம் இரவு 7 ஐ நெருங்கிக் கொண்டிருந்தது. பெரிய பெரிய மழைத்துளிகள் விழத்தொடங்கி விட்டன.
‘என்ன ஒண்டுமே கதைக்காமல் வாறாய்..’ என்று பைக்கை முறுக்கியபடி கேட்டான் அவன்.
பின்னால் அமர்ந்திருந்த அவளுக்கு அவன் கேட்டது காதில் விழவில்லை. ஏதோ யோசித்து கொண்டிருந்தாள்.
பைக்கின் வேகத்தை குறைத்துவிட்டு
‘ஏய்..என்ன யோசிக்கிற..’ என்றான் மீண்டும் அவன்
பைக்கின் வேகம் குறையவே அவன் ஏதோ கேட்டிருக்கிறான் என்பதை அவளது மூளை உணர்ந்தது.
‘ஓ…ஓம்..மழை வந்திட்டு. என்னோட சேர்ந்து நீங்களும் நனையுறீங்க.. சொறி.. என்னால தான் இதெல்லாம்…’ என்றாள், கவலை தோய்ந்த குரலில்.
‘அட இதெல்லாம் ஒரு விசயமா.. பேசாமல் வா.. அதுக்கேன் இப்பிடி யோசிக்கிற’ என்றான் அவன்.
‘அப்பிடி இல்ல.. உங்களுக்கு கஷ்டம் தானே.. ‘ என்று மீண்டும் கவலைப்பட்டுகொண்டாள்.
‘நான் ஒரு கதை சொல்லுறேன் கேக்கிறியா என்றாள் அவன்.
‘நான் என்ன சின்ன பிள்ளையோ கதை கேக்க… ஆனாலும் சொல்லுங்க…’ என்று சொல்லி புன்னகைத்தாள் அவள்.
‘இந்த ரோட்டுல பாரு .. எவ்வளவு இருட்டு.. இதே போல ஒரு மழையில இருட்டில சனநடமாட்டம் அதிகமில்லாத ரோட்டுல ஒரு பொம்பிள பிள்ளை பயத்தோட ஸ்கூட்டில போறாள்..
அப்போ ஒரு சின்ன இடைவெளில ஒருத்தன் அவளை பின்தொடர்ந்து போறான்..
அவள் அவனை திரும்பி பார்க்கையில் அவன் அவளை பார்த்து தலையை அசைத்து புன்னகைக்கிறான்
அதுக்குபிறகு அவள் ஒரு பாதுகாப்பை உணர்கிறாள்.. பயமில்லாமல் நேராக போகிறாள் பின்னால் வந்து கொண்டிருக்கும் அவனின் பைக் சத்தத்தை கேட்டபடி..
அவள் தன்னுடைய வீட்டிற்குள் நுழையும் வரை அவன் அவளை பின்தொடர்கிறான்..
அது போல தான் நான் உனக்கு.. நீ எதையும் யோசிக்கவோ எதிலும் பின்வாங்கவோ கூடாது.. ஒரு சின்ன இடைவெளியில் நான் உன்னை தொடந்து வந்துகொண்டே தான் இருப்பேன் வாழ்க்கையில்..
நீ எங்கு தோற்றாலும் தூக்கி சுமக்கவும் திரும்பவும் எழுப்பி விடவும் கைக்கு எட்டின தூரத்தில் நான் இருப்பேன்..
உன் மூச்சு நின்று உன்னை ஆறடி மண்ணில் புதைக்கும் அந்த கடைசி நொடி வரை
உன்னை தொடர்ந்து வந்து கொண்டேதான் இருப்பேன்..’ என்று அவன் தன்னுடைய குட்டி கதையை சொல்லி முடித்தான்.
அவளிடமிருந்து ஒரு பதிலும் இல்லை.
உனக்கு நான் இருக்கிறேன் என்ற நம்பிக்கையை தர விரும்புகிறேன்..
அதை இதை தவிர வேற எப்படி சொல்லுறதெண்டு தெரியல..’ என்றான் அவன்.
அவள் ஏதோ சொல்ல வாயெடுக்க பைக் சரேலென பிரேக் போட்டு நின்றது.
அவள் சுற்றிலும் பார்த்தாள் அவளது வீடு வந்து விட்டது.
‘போய் தலைய துடை.. ஈரத்தோட நிக்காத.. என்று சொல்லிவிட்டு பைக்கை திருப்பிக்கொண்டு போனான் அவன்.
அந்த மழையில் அவள் கண்ணீர் கரைவது போல அவன் அன்பில் அவள் மனமும் கரைந்தது. அவன் போவதை இமைக்காமல் பார்த்தபடி நின்றாள் அவள்.