‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர்
(வாக்குமூலம்-87)
— தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் —
தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் (தமிழரசுக் கட்சியின் அமைப்பு விதிகளில் இல்லாத பதவி) என்று கருதப்படுகின்றவரும் -பழைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து ‘புளொட்’ மற்றும் ‘ரெலோ’ வெளியேறித் தமிழரசுக் கட்சி தனித்து விடப்பட்ட பின்னரும்கூட (இல்லாத) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் என்று கூறப்பட்டுவந்தவரும் – தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவரும்-திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் அவர்கள் தனது பாராளுமன்ற ஆசனத்தை இராஜினாமாச் செய்ய வேண்டுமென்று, தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் என்று கருதப்படுபவரும்-அதுவரைக்கும் தமிழர்களுடைய அரசியல் பொதுவெளியில் பெயரைக் கூடக் கேள்விப்படாமலே இருந்து 2010ல் தமிழரசுக் கட்சிக்குக் கிடைத்த தேசியப் பட்டியல் ஆசனத்தை இரா.சம்பந்தன் தன்னிச்சையாகத் தன் சுய விருப்பத்தின் பேரில் வழங்கியதன் காரணமாகத் தமிழர் அரசியலில் தலையை நுழைத்து இப்போது சம்பந்தனின் தலைப்பாகையை அவிழ்த்துத் தான் கட்ட எத்தனிப்பவருமான சுமந்திரன், வளர்த்த கடாவே மார்பில் பாய்வது போல அண்மையில் தொலைக்காட்சிப் பேட்டியொன்றில் பகிரங்கமாகக் கருத்துத் தெரிவித்திருப்பது தமிழ் அரசியற் பொதுவெளியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதன் விளைவாகத் தமிழரசுக் கட்சியின் பலர் கோஷ்டி பிரிந்து ‘கச்சை’ கட்டிக்கொண்டு கருத்துக்களை முன்வைக்கத்தலைப்பட்டிருக்கிறார்கள். இரா. சம்பந்தனின் இராஜினாமா விவகாரம் காரணமாகத் தற்போதைய தமிழரசுக் கட்சியின் ‘சாக்கடை’ அரசியல் என்றுமேயில்லாதவாறு துர்நாற்றம் எடுக்கத் தொடங்கியுள்ளது. 2020 ஆம் ஆண்டின் தேசியப் பட்டியல் ஆசன நியமனம் தொடங்கி சம்பந்தனைப் பதவி விலகக் கோரும் சமாச்சாரம் வரை ஆளையாள் நன்றாகவே கழுவி ஊற்றுகிறார்கள்.
இரா. சம்பந்தனைப் பொறுத்தவரை பாராளுமன்றக் கதிரையில் தீராக் காதல் கொண்டவர். 1989 தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் அவர் தோல்வியுற்ற போது அப்போது தமிழர் விடுதலைக் கூட்டணிக்குக் கிடைத்த தேசியப் பட்டியல் ஆசனத்தைத் தனக்குத் தர வேண்டுமென்று அப்போதைய தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகமாக விளங்கிய காலம் சென்ற அ. அமிர்தலிங்கத்துடன் அமர்க்களப்பட்டவர்.
பின்னர் 1994 தேர்தலிலும் திருகோணமலை மாவட்டத்தில் அவர் வெற்றி வாய்ப்பை இழந்தபோது அத்தேர்தலில் திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவான காலம் சென்ற அ. தங்கத்துரையைப் பதவி விலகிப் பாராளுமன்ற ஆசனத்தைத் தனக்கு விட்டுத் தரும்படி கேட்டு அதற்குத் தங்கதுரை சம்மதிக்காதபோது அவருடன் வாக்குவாதப்பட்டுவிட்டு “I know how to get it” (எனக்குத் தெரியும் அதை எப்படிப் பெறுவதென்று) என ஆங்கிலத்தில் தங்கதுரைக்குச் சவால் விட்டவர். (அதைத்தொடர்ந்து அவர் எவ்வாறு அந்த பாராளுமன்ற ஆசனத்தைப் பெற்றுக் கொண்டார் என்பதுபற்றிக் கிளிவெட்டி வாழ் மக்களும் ஏனையோரும் நன்கு அறிவர்)
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இரா. சம்பந்தனுக்கு முழுமையான-உளப்பூர்வமான உடன்பாடு இல்லாத போதிலும் கூட 2001 இல் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகளாக ஏற்றுப் பின்னர், புலிகளால் உருவாக்கப்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத் தலைமை தாங்க முன் வந்தது பாராளுமன்றக் கதிரைக்காகவே. இரா. சம்பந்தன் மட்டுமல்ல அப்போது தமிழீழ விடுதலைப் புலிகளைத் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகளாக ஏற்றுத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்துகொண்ட தமிழ் அரசியல்வாதிகள் அனைவரும் பாராளுமன்றக் கதிரைக் கனவில்தான் இணைந்து கொண்டனரே தவிர தமிழ்த் தேசியத்திற்காக அல்ல.
இதற்குப் புறநடையாக வீ. ஆனந்தசங்கரி அவர்கள் ‘இனப் பிரச்சனைக்கான தீர்வு சம்பந்தமாகப் புலிகளுடனும் பேசித்தான் தீர்மானம் எடுப்பதில் தனக்கு ஆட்சேபனை இல்லையென்றும் ஆனால், புலிகள்தான் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என்பதை அது ஜனநாயக கோட்பாட்டுக்கு முரணானது என்பதால் ஏற்றுக்கொள்ள முடியாது’ என்ற நிலைப்பாட்டைப் பின்னர் எடுத்தார். அதனால்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து தமிழர் விடுதலைக் கூட்டணி ஓரம் கட்டப்பட்டு அந்த இடத்திற்குத் தமிழரசுக் கட்சி இட்டு நிரப்பப்பட்டது. ஆனந்தசங்கரியின் நிலைப்பாட்டையே ஆதரித்த மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் (பின்னாளில் தமிழரசுக் கட்சியின் செயலாளராகப் பதவியிலிருந்தவர்) கி. துரைராசசிங்கம் புலிகள் கோலோச்சிய காலத்தில் பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுவதைத் தந்திரமாகத் தவிர்த்துக் கொண்டார்.
2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிந்து புலிகளின் பிரசன்னம் அற்றுப்போன சூழ்நிலையில் இரா. சம்பந்தன் ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலிகளால் உருவாக்கப்படவில்லை’ யென்று கூறி முழுப் பூசணிக்காயைச் சோற்றுக்குள் மறைக்க முயன்றாலும் அவர் புலிகள் தரப்பினரோடு புளகாங்கிதம் கொண்டு பேசிய அந்த காணொலி இன்றும் சமூக ஊடகங்களில் காணப்படுகிறது.
இந்த வரலாற்று நிகழ்வுகள் ஒரு புறமிருக்க, சில மாதங்களுக்கு முன்னர் வவுனியாவில் நடந்த தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்திலேயே இரா. சம்பந்தன் தனது பாராளுமன்ற ஆசனத்தை இராஜினாமாச் செய்ய வேண்டுமென்று திருகோணமலையிலிருந்து வந்த ‘குகதாசன்’ குழுவினரால் சர்ச்சை கிளப்பப்பட்டுச் சம்பந்தனுடன் இது பற்றிப் பேசுவதற்குக் குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுச் சம்பந்தன் அதற்குச் சம்மதிக்காததால் அக்குழுவின் நடவடிக்கைகள் பிசுபிசுத்துப் போயிருந்தன.
இப்போது என்னவென்றால், கட்சி நடவடிக்கைகளும் முடிவுகளும் ஒருபுறமிருக்கச் சுமந்திரன் கட்சியின் முடிவுகள் எதுவும் இல்லாமல் சம்பந்தன் பதவி விலக வேண்டுமென்று தன்னிச்சையாகப் பகிரங்கமாகக் கூறியுள்ளார். இது குறித்துத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவோ அல்லது பொதுச்சபையோ அல்லது இவ்வருட இறுதிக்குள்ளேயாவது நடைபெறுமென ‘ஆரூடம்’ கூறப்பெறும் தேசிய மாநாடோ என்ன முடிவை மேற்கொள்ளவிருக்கிறது என்பதையும் அதற்குச் சம்பந்தனின் பிரதிபலிப்பு எப்படியிருக்கப் போகிறது என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதுவரைக்கும் தமிழ் ஊடகங்களுக்குப் பேசு பொருளொன்று- ‘தீனி’ கிடைத்திருக்கிறது.
இரா. சம்பந்தன் அவர்கள் பாராளுமன்றப் பதவியை இராஜினாமாச் செய்ய வேண்டுமென்ற வேண்டுகோளுக்குக் காரணங்களாக முன்வைக்கப்படுபவை அவருடைய மூப்பும் அவருடைய செயற்திறமின்மையுமே.
அவருடைய மூப்புப் பற்றி ஒன்றும் குறை கூற முடியாது. அது இயற்கையே. பிணியும்-மூப்பும்-சாக்காடும் உலகில் எவராலும் தவிர்க்க முடியாதது. எனவே, அது பற்றி இப்பத்தி பேசவில்லை. ஆனால், சம்பந்தனின் செயற்திறனின்மையைப் பொறுத்தவரை அது இன்று நேற்றல்ல 2010 லேயே ஆரம்பித்து விட்டது. திருகோணமலை மாவட்டத்திற்குப் பெயரளவிலேயே அவர் ‘எம்.பி’ ஆக இருந்தார். மக்களுடனான அவரது தொடர்பாடல் ஒப்பீட்டளவில் வழமையாகவே மிகவும் பலவீனமானது. மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில்கூட அவர் ஒழுங்காகவும் முறையாகவும் கலந்து கொள்ளவில்லை. 2015-2020 காலகட்டங்களில் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் கலந்து கொள்வதை அவர் முற்றாகவே புறக்கணித்தார் என்றுகூடக் கூறலாம். இதன் பிரதிபலிப்பே இன்று திருகோணமலை மாவட்டம் கிட்டத்தட்டப் பறிபோய் விட்டதாகக் கூறப்படுகிறது. 2015 ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு (தமிழரசுக் கட்சிக்குக்) கிடைத்த தேசியப் பட்டியல் ஆசனங்களில் ஒன்றை திருகோணமலை மாவட்டத்தில் சேனையூர்க் கிராமத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற துரைரெட்ணசிங்கம் என்பவருக்கு வழங்கி அவர் மூலமாகத்தான் காரியங்கள் ஆற்றினார். ஆனால், சம்பந்தன் தேர்ந்தெடுத்த துரைரெட்ணசிங்கம் ஒரு ‘பச்சைத்தண்ணி’ யாகவே இருந்தார். துரைரெட்ணசிங்கத்திற்குத் தேசிய பட்டியல் ஆசனம் வழங்கப்பட்டது .
துரைரெட்ணசிங்கம் கூட செயற்றிறனற்றவராகவே காணப்பட்டார். துரைரெட்ணசிங்கம் தன்னை மேவிவிடக் கூடாதென்பதிலும் சம்பந்தன் கவனமாக இருந்தார்.
ஆனால், இந்தக் குறைபாடுகளுடனும் பலவீனங்களுடனும் இரா. சம்பந்தனுடைய அரசியல் அனுபவம் – கல்வி மற்றும் தொழில்சார் தகைமை – 1977 இல் இருந்தே பாராளுமன்ற உறுப்பினராகவிருந்த (இடையில் சில தேர்தல்களில் தோல்வியுற்றிருந்தாலும்கூட) பிரபல்யம் என்பவற்றின் காரணமாகத் தமிழ்த் தேசிய அரசியலுக்கு அவர் தேவைப்பட்டவராக இருந்தார். ஆனால், தலைமைத்துவப் பண்புகளான உண்மை-நேர்மை-ஒழுக்கம்-தன்னல மறுப்பு-தியாகம்-எல்லோரையும் அணைத்துப்போதல்-ஒற்றுமையை யாசித்தல்-கட்சி அரசியலுக்கு அப்பால் மக்கள் நலன் சார்ந்த பார்வை-தன்னை ஒறுத்தல்-சகிப்புத்தன்மை என்பவற்றில் மிகவும் பலவீனமானதொரு தலைவராகவே (அரசியல்வாதியாகவே) தன்னை இனம் காட்டினார். அதனால்தான் மூப்பு வந்த போது அவரது கட்சிக்காரர்களே அவரைத் தூக்கியெறிய முனைகிறார்கள்.
எஸ்.ஜே.வி. செல்வநாயகம் (தந்தை செல்வா) அவர்கள் மூப்படைந்தும் நோய்வாய்ப்பட்டும் ‘கோமா’ நிலையிலிருந்தபோதுகூட அவரது பாராளுமன்றப் பதவியை வறிதாக்க நினைத்துக் கூடப் பார்க்காத தனி நபர் வழிபாட்டுப் பாரம்பரியமுடையது தமிழரசுக் கட்சி.
எனவே, சம்பந்தன் பதவி விலக வேண்டுமென்ற அழுத்தம் அவரது கட்சிக்காரர்களாலேயே கொடுபடுவதற்கு அவரது மூப்பு மட்டும் காரணமல்ல, அவர் எப்போது தமிழர்களின் அரசியல் தலைமைத்துவத்திற்கு வந்தாரோ அன்றிலிருந்து அவரால் புரியப்பட்ட தன்முனைப்பான – தன்னல அரசியலும் கூடத்தான் பங்களிப்பை வழங்கியுள்ளது.
எது எப்படியிருப்பினும், இரா. சம்பந்தன் பதவி விலகி அதன் விளைவாகத் திருகோணமலை மாவட்டப் பாராளுமன்றப் பிரதிநிதியாகக் குகதாசன் வருவதாலோ அல்லது தமிழரசுக் கட்சிப் பாராளுமன்றக் குழுத் தலைவராகச் சுமந்திரன் வருவதாலோ அல்லது தமிழரசுக் கட்சித் தலைவரான மாவை சேனாதிராசா அகற்றப்பட்டு அந்த இடத்திற்குச் சுமந்திரனோ-சிறிதரனோ-சி.வி.கே. சிவஞானமோ அல்லது மீண்டும் மாவையோ வருவதாலோ அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி) வேறு வழிகளில் ‘புனர் ஜென்மம்’ எடுப்பதாலோ தமிழ் மக்களுடைய அரசியலில் எந்த முன்னேற்றமும் ஏற்படப்போவதில்லை.
ஒட்டுமொத்தமாகத் தமிழரசுக் கட்சியே ‘காலாவதி’ ஆகிப் போய்விட்டது. தமிழ் மக்கள் தமிழரசுக் கட்சியை முற்றாக நிராகரிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. தமிழரசுக் கட்சியை மட்டும் அல்ல ‘தமிழ்த் தேசியக் கட்சிகள்’ என்று தம்மைக்.குறிசுட்டுக் கொண்டுள்ள அனைத்துக் கட்சிகளையும் தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.
‘சத்தவெடி’ அரசியலைக் கைவிட்டு மக்களுக்குச் சமூக பொருளாதார நன்மைகளைக் கொண்டுவரகூடிய ‘பங்குபற்றல்’ அரசியலை (Participatory Politics) அர்ப்பணிப்புடன் முன்னெடுக்கும் ஆற்றல் வாய்ந்த ‘மாற்று அரசியல் அணி’யே தமிழ் மக்களின் இன்றைய அதி முக்கிய அரசியல் தேவையாகும். தேர்தல் அரசியல் வேறு. தலைமைத்துவ அரசியல் (Leadership Politics) என்பது வேறு. இரா. சம்பந்தனின் பதவி விலகல் மட்டும் எந்தக் கனியையும் வீழ்த்தப் போவதில்லை. ஆளை மாற்றுகிற அரசியலையல்ல இன்று தமிழ் மக்கள் அவாவி நிற்பது ; அரசியலை மாற்றுகிற ஆள்தான் இன்றைய அவசரத் தேவை. சம்பந்தனின் பதவி விலகல் எந்த மாற்றத்தையும் கொண்டுவரப் போவதில்லை.