புலம்பெயர் மண்ணில் துப்பரவு பணி செய்து தாயகத்தில் பசுமை வளர்ப்பவர்

புலம்பெயர் மண்ணில் துப்பரவு பணி செய்து தாயகத்தில் பசுமை வளர்ப்பவர்

தரன் ஸ்ரீ

(ஸ்தாபகர், தலைவர், வன்னி தமிழ் மக்கள் ஒன்றியம்) யுடன் ஒரு உரையாடல். 

       —- கருணாகரன் —-

“பசுமையாக்கம்” என்ற எண்ணத்தோடு பசுமைச் செயற்பாடுகளில் மிகத் தீவிரமாக – ஆனால் முறையாகத் திட்டமிட்டுச் செயற்பட்டு வரும் தரன் ஸ்ரீயுடன் இந்த உரையாடலைச் செய்துள்ளோம். தாயக விடுதலைப் போராட்டத்தில் மாணவப் பருவத்தில் இணைந்து செயற்பட்ட தரன் ஸ்ரீயின் இயற்பெயர், கணபதி ஸ்ரீதரன். போராட்ட வாழ்வின்போதுதான் அவருக்கு மரங்களின் மீதும் பசுமை மீதும் ஈர்ப்பும் அறிமுகமும் ஏற்பட்டது. அதை இந்த நேர்காணலில் பதிவு செய்கிறார். சமூக அக்கறையும் இயற்கை மீதான நேசிப்பும் உள்ள பலருடைய பரிச்சயக் களமும் அனுபவமும் இதுவே. சரி பிழைகளுக்கு அப்பால் ஈழ விடுதலைப் போராட்டம் பல நல்ல சமூக அக்கறையுள்ள – இயற்கை மீதான – சூழல் மீதான – கரிசனையுள்ள பலரைப் பயிற்றுவித்துத் தந்துள்ளது.

தரன் ஸ்ரீ இப்பொழுது இருப்பது புலம்பெயர் தேசமொன்றில். ஆனால் அவர் அகரீதியாகவும் அக்கறையுடனான செயற்பாட்டிலும் ஈழ நிலத்தில்தான் பிணைந்திருக்கிறார். பல்லாயிரக்கணக்கான மரக்கன்றுகளையும் லட்சக்கணக்கான விதைகளையும் இந்த மண்ணிலே நடுகை செய்தும் விதைத்தும் வருகிறார். இதற்காக அவர் தான் வாழும் நாட்டில் இரவு பகலாக வேலை செய்கிறார். அப்படி வேலை செய்து சம்பாதிக்கும் பணத்தில்தான் இந்தப்பணிகளை முன்னெடுக்கிறார். இதற்காக அவர்  மிகக் கடினமான துப்புரவுப் பணியைச் செய்கிறார். கேட்டால், அந்தப் பணிக்கு அங்கே கூடுதலான காசைத் தருவார்கள். அந்தக் காசை இங்கே பயன்படுத்திக் கொள்வேன் என்று சிரிக்கிறார்.

பல்வேறு தரப்பினராலும் மேற்கொள்கிற சம்பிரதாய மர நடுகைகளுக்கு அப்பால்,  அக்கறையுடன் கூடிய ஒழுங்கான பசுமைத் திட்டம் இது என்று துணிந்து கூறும் தரன்ஸ்ரீ,  அதைக் கண்முன்னே  செயற்படுத்திக் காட்டி வருகிறார். பசுமைக்கு எந்த வேறுபாடுகளும் தெரியாது. அது அப்படி வேறுபடுத்திப் பார்ப்பதில்லை என்று சொல்லும் தரன் ஸ்ரீயுடன் இந்த உரையாடலை இரு அமர்வுகளில் முழுமைப்படுத்தினோம்.

1.      இதுவரையில் நீங்கள் விதைத்த – நடுகை செய்த மரங்களின் (விதைகளின்) எண்ணிக்கை?

அண்ணளவாக நான்கு லட்சம் மரக்கன்றுகளை விதைத்திருப்போம்.விதைகள் அதைவிட மூன்று மடங்காக இருக்கும்.தொடர்ந்து வருடம் வருடம் பனை விதைகளை விதைத்து வருகிறோம்.  நிலக்கடலை விதைகள் வழங்கி வருகிறோம். கல்வி நிலையங்கள் கிராமங்களில் மக்களின் வீட்டு தோட்டத்திற்கு விதை தானியங்கள் வழங்கி வைத்திருக்கிறோம். நாங்கள் அதன் எண்ணிக்கைகளை கணக்கில் கொள்வதில்லை.

2.      எந்தெந்தப் பிரதேசங்களில் விதைப்பு நடந்துள்ளது?

அமைப்பை ஆரம்பித்த காலகட்டத்தில் வடக்கில் ஐந்து மாவட்டத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் விதைப்பை மேற்கொண்டு இருக்கிறோம். கொரோனா நோய் தாக்கத்தின் பின்னர் பொருளாதார போக்குவரத்து நெருக்கடிகளை கவனத்தில் கொண்டு கடந்த இரண்டு வருடங்களாக கிளிநொச்சி யாழ் மாவட்டத்தில் மட்டும் மேற்கொள்கிறோம்.

3.      என்னென்ன மரங்கள் அல்லது விதைகள் நடுகை அல்லது விதைப்புச் செய்யப்பட்டுள்ளது?

பாடசாலைகள், முன்பள்ளிகள், கல்வி நிலையங்களில் மாணவர்களின் எதிர்கால நன்மை கருதி பயன் தரும் மரக்கன்றுகளை தெரிவு செய்து விதைத்து வருகிறோம். எதிர்காலத்தில் அவர்களுக்கு பழங்கள் கிடைக்கக்கூடிய மரங்களை அதிகம் விதைக்கிறோம். மரவள்ளித்  தடிகள், வாழைக்குட்டிகள், ராசவள்ளி விதை, வீட்டு தோட்டத்திற்கான விவசாய விதைப்பொருட்கள், பனை விதை, நிலக்கடலை விதை இதைவிட பல விதைப் பொருட்களை உள்ளடக்கிய விதைப்பந்துகள், குறிப்பாக அழிந்து போகும் இலுப்பை மரக்கன்றுகளை அதிகமாக விதைத்து அதிகம் வழங்கி வருகிறோம்.

பாடசாலைக்கு வழங்கும் மரக்கன்றுகளில் 30 தொடக்கம் 40 விதமான மரக்கன்றுகளை தெரிவு செய்து வைத்திருக்கிறோம். வீதிகளில் விதைக்கப்பட்ட மரக்கன்றுகள் இலுப்பை, கொண்டல், நாவல், மருது புளி, வாகை, வேம்பு, மலை வேம்பு, பூவரசு, கூழாமரக்கன்று ஆகிய மரக்கன்றுகளை வீதிகளில் விதைத்திருக்கிறோம். விதைத்து வருகிறோம்.

4.      பாடசாலைகளில் வன்னித் தமிழ் மக்கள் ஒன்றியம் மர நடுகையை மேற்கொள்கிறது. இது மாணவர்களின் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், அந்தச் சூழலையும் பசுமை – நிழற் சோலையாக்குகிறது. இதை எப்படி மேலும் மேம்படுத்தலாம்? எல்லாப் பாடசாலைகளும் இதற்கு ஒத்துழைக்கின்றனவா?

நாங்கள் முன் பள்ளி மற்றும் பாடசாலையை பசுமை சார்ந்த செயல்பாட்டிற்கு முதன்மையாக தெரிவு செய்த காரணம் கல்வி எப்படி அடிப்படையில் இருந்து கற்றுக் கொடுக்கப்படுகிறதோ அதே போல் அங்கே இருந்து எங்களுடைய பசுமை விதைகளை உணர்வுகளை விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி செய்கிறோம்.

ஒரு மாணவனின் வீட்டில் ஒரு மரக்கன்றை விதைத்தால் அவர் பராமரிக்க தவறினால் எங்கள் முயற்சிகள் பயனற்று போய்விடும். கடந்த காலத்தில் ஒவ்வொரு மாணவர்களுக்கும் வீடுகளுக்கு கொண்டு சென்று விதைப்பதற்காக மரக்கன்றுகளை கொடுத்தோம். இப்படிப் பல ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு.  அந்த முயற்சியில் அதிகமான தோல்விகளை தழுவியுள்ளோம்.

பாடசாலையில் விதைக்கும் பொழுது ஒரு வகுப்பில் 30 தொடக்கம் 40 மாணவர்கள் இருக்கலாம். நாங்கள் பாடசாலையில் மரக்கன்றுகளை விதைக்கும் பொழுது பசுமை கருத்துக்களையும் விதைக்கிறோம். அதில் யாராவது ஒரு மாணவர் உள்வாங்கிக் கொண்டால் எங்களுடைய முயற்சிகள் பயனளிக்கும்.

ஆகவேதான் பசுமை அடிப்படையில் இருந்து விதைக்கப்பட வேண்டும் என்ற நோக்கோடு விதைத்து வருகிறோம். அனைத்து பாடசாலை அதிபர்களும் பசுமையை எதிர்பார்க்கிறார்கள். எங்களுடைய செயல்பாட்டாளர்கள் பாடசாலையோடு அதிபர்கள் ஆசிரியர்கள் தொடர்பு கொள்ளும் பொழுது இந்தப் பத்து ஆண்டுகளில் எந்த பாடசாலை அதிபரும் எங்களுக்கு பசுமை வேண்டாம் என்ற கருத்தை சொன்னதில்லை.  

வடக்கில் பல நூற்றுக்கணக்கான பாடசாலைகளில் பசுமையை விதைத்து விட்டோம்..விதைத்த பாடசாலைகளில் எங்கே பசுமை பாதுகாக்கப்படுகிறது என்றால்… அந்தப் பாடசாலை அதிபர் அல்லது அந்த பாடசாலையில் கல்வி கற்கும் ஒரு ஆசிரியர் பசுமை சார்ந்த உணர்வோடு நேசிப்பவராக இருக்க வேண்டும். அங்கு விதைக்கப்படும் மரக்கன்றுகள் பாதுகாக்கப்படுகின்றன.

5.      உங்களுடன் இணைந்து எப்படியானவர்கள் இந்தப் பணியில் ஈடுபடுகிறார்கள்?

ஒவ்வொரு மாவட்டத்திலும் பசுமையை நேசிப்பவர்கள் எங்களோடு இணைந்து கொள்கிறார்கள். எங்கள் அமைப்பின் அலுவலகம் கிளிநொச்சி பாரதிபுரத்தில் இருக்கின்றது.  பசுமைப் பணியாளர்கள் தொடர்ச்சியாக பணியாற்றுகிறார்கள். பசுமை விதைப்பு நிகழ்வுகள் செயல்திட்டங்களின் போது அமைப்போடு தொடர்பில் இருக்கும் பசுமையாளர்களுக்கு தெரியப்படுத்துகிறோம்.

நிகழ்வில் அவர்களும் கலந்து கொண்டு பசுமையை விதைத்து வருகிறார்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் பசுமை செயல்பாடுகளை அந்த கிராமத்தில் இருக்கும் பசுமை செயல்பாடுகளோடு தொடர்புகளை ஏற்படுத்தி நடைமுறையை செயல்படுத்துகிறோம். பல நூறு பசுமை செயல்பாட்டாளர்கள் தொடர்பில் இருக்கிறார்கள் எங்கள் அமைப்போடு.

6.      அடுத்ததாக நீங்கள் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள விதைப்புகள் – நடுகைகள்?

பாடசாலைகள், முன்பள்ளி, கல்வி நிலையங்கள், அரசு நிர்வாகத் திணைக்களங்கள்,வீதிகள், கோவில்கள், குளங்கள், விளையாட்டு மைதானங்கள், சதுப்பு நில கண்டல் தாவரங்கள்.

பனை விதைப்பு மற்றும் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மையப்படுத்தி விவசாயப் பொருட்கள், மரக்கன்றுகள் வழங்கும் செயல் திட்டமும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

7.      விதைப்பு அல்லது நடுகை செய்யப்பட்டவற்றை எப்படி, எந்த அடிப்படையில் பராமரிக்கிறீர்கள்?

பாடசாலைகள், முன்பள்ளிகள். கல்வி நிலையங்களில் விதைப்பு செய்யும் பொழுது அவர்களோடு தொடர்பில் இருப்போம். மாதத்தில் இரண்டு தடவை அல்லது ஒரு தடவை சென்று பார்வையிடுவோம். அல்லது தொடர்பு கொண்டு மரக்கன்றுகளின் வளர்ச்சி சம்பந்தமாக கேட்டு அறிவோம். புகைப்படங்களையும் பெற்றுக் கொள்வோம். மரக்கன்றுகளின் வளர்ச்சியை அறிவதற்காக.

வீதிகளில் விதைக்கும் மரக்கன்றுகளுக்கு அமைப்பு சார்ந்து நிரந்தர பணியாளர் ஒருவர் இருக்கிறார். தற்காலிக பணியாளர்களையும் ஏற்படுத்திக் கொண்டு நீரூற்றுவது, பராமரிப்பது போன்ற செயல்களை ஏற்படுத்துகிறோம். மரங்களை வளர்த்து முடிப்பதில் பல சிரமங்கள் உள்ளன. எங்களுடைய முயற்சிகளை சிரமங்களின் மத்தியிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறோம். பல தோல்விகளுக்கு மத்தியில்  வெற்றிகள் கிடைக்கின்றன. அந்த வெற்றிகளே எங்களுடைய ஊக்கமாகும். அதுவே இந்த மண்ணின்  பசுமையாகும்.

8.      இந்தப் பணியின்போது நீங்கள் எதிர்கொள்ளும் சவால்கள்?

பசுமைக்கான ஆதரவு மிக அரிதாகத்தான் உள்ளது. வெளியே பேசப்படும் அளவுக்கு இல்லை. தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி செய்கிறோம். அதிகமான பாடசாலைகளில் அவர்கள் விருப்பப்படும் மரக்கன்றுகளை தரும்படி கேட்டுக் கொள்வார்கள். அவர்கள் பராமரிப்பார்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கி வைப்போம். விதைத்துக் கொடுப்போம்.

ஆனால் மரக்கன்றுகளை கேட்பதில் இருக்கும் அக்கறை பராமரிப்பதில் அதிகமாக இருப்பதில்லை. கேட்டால் பல காரணங்களை சொல்வார்கள்.  ஆனால் அவை தகுந்த காரணங்களாக இருப்பதில்லை. வீதி ஓரங்களில் மரக்கன்றுகளை விதைத்து மரக்கன்றுகளுக்கு கூடுகளை அடைத்து சிரமத்தின் மத்தியில் பராமரித்து வரும்பொழுது கால்நடைகள் கூட்டை அழித்து விடும். கன்றுகளை சாப்பிட்டு விடும். பல மாதங்களாக மரக்கன்றுகளை பாதுகாத்து வரும்பொழுது தங்கள் வீடுகளுக்கு முன்னே துப்புரவாக இருக்க வேண்டும் என்று மரக்கன்றுகளை முழுமையாக அழித்து விடுவார்கள். சிலர்,  மரக்கன்றுகளோடு குப்பைகளைக் கூட்டி நெருப்பு வைத்து விடுவார்கள். கூடு கட்டியிருக்கும் பனை மட்டைகளைக் கூட கழட்டிச் சென்று விடுவார்கள்.

எங்களிடம் மரக்கன்றுகளுக்கு நீர் ஊற்றுவதற்கு வாகன வசதிகள் இல்லை. மரக்கன்றுகளுக்கு அருகில் இருக்கும் வீடுகள், குளங்கள், நீர்நிலைகளிலிருந்து நீரை எடுத்துக் கொள்கிறோம். சிலர் முன்வந்து உதவி செய்வார்கள். பலர் கதவை (படலையை) திறக்கவே மாட்டார்கள். அவர்களின் வீட்டுக்கு முன்னே வைத்திருக்கும் மரக்கன்றுகளுக்குத்தான் நாங்கள் நீரைப் பெற்றுக் கொள்ள வீட்டு உரிமையாளரோடு தொடர்பு கொள்வோம்.

மின்சார கட்டணம் அதிகரிக்கிறது என்று சொல்லி நீரைத் தராத பலர் உண்டு. வீதி அபிவிருத்தியில் ஈடுபடும் ஊழியர்களும் பசுமை மரங்களின் தேவையை உணராத மனிதர்களும் நாங்கள் நீண்ட மாதங்களாக பராமரித்து வந்த பல நூறு மரக்கன்றுகளை அழித்திருக்கிறார்கள். அமைப்பின் பசுமைச் செயல்பாட்டை விரும்பாதவர்களும் பராமரித்து வந்த மரக்கன்றுகளை அழித்திருக்கிறார்கள்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி எரிபொருளின் தட்டுப்பாடு காலங்களில் முப்பது ஆயிரம் ரூபாய் பெறுமதியான மரக்கன்றுகளை கொண்டு சேர்ப்பதற்காக 25,000 ரூபாயை வாகனத்திற்காக கூலியாக கொடுத்திருக்கிறோம் பல தடவைகள்.

வீதி விதைப்புகளை மேற்கொள்ளும் பொழுது பிரதேச சபைகளின் உதவிகளை எதிர்பார்த்தோம். மரக்கன்றுகளுக்கு நீர் ஊற்றுவதற்காக பிரதேச சபைகளை நிர்வாகித்த தவிசாளர்கள் வாக்குறுதி தருவார்கள். ஆனால் அவை வாக்குறுதிகளாகத்தான் இருக்கும். ஆனால் நாங்கள் பல சவால்களை எதிர்கொண்டு பசுமையின் அவசியத்தை விழிப்புணர்வாக விதைப்பு, பராமரிப்புகள் ஊடாக கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் உறுதியாக பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

9.      இதில் நீங்கள் அடைகின்ற உணர்வு?

பசுமை நமது காலத்தில் பாதுகாக்க வேண்டும். நாளைய தலைமுறைக்காக என்ற இந்த அர்ப்பணிப்பு நிறைந்த பயணத்தை ஆரம்பித்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். மண்ணில் விதைத்த மரக்கன்றுகள் துளிர் விட்டு தலை எடுக்கும் பொழுது முயற்சிகள் தோற்றுப் போகவில்லை உயிரூட்டப்படுகிறது என்ற பசுமைக் கனவுகள் மெய்ப்படும் தருணங்களாக பசுமை உணர்வை அதிகப்படுத்துகின்றன.

10.  எப்படியானவர்கள் இந்த விதைப்பு அல்லது நடுகைப் பணியில் ஈடுபட ஆர்வமாக உள்ளனர்?

கடந்த காலத்தில் பசுமை செயல்பாடுகளோடு ஆர்வம் உடையவர்கள், பசுமையை நேசிப்பவர்கள், அதன் அவசியத்தை உணர்ந்தவர்கள், நிலத்தையும் பலத்தையும் பாதுகாக்க விரும்புபவர்கள், சுற்றுச்சூழல் சார்ந்த அதிகம் அக்கறை கொண்டவர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைய தலைமுறை பசுமை உணர்வாளர்கள்.

11.  உங்களுடைய இந்தப் பசுமைச் செயற்பாடுகளுக்கு புலம்பெயர் உறவுகளும் உள்ளுர் ஆதரவாளர்களும் ஊக்கமளிக்கின்றனர். இவர்கள் எல்லோரையும் இணைத்து ஒரு கட்டமைப்பை உருவாக்கலாம் அல்லவா?

ஆம், அதற்கான முயற்சியை ஆரம்பித்திருக்கிறேன். இன்னும் சில மாதங்களில் வன்னி தமிழ் மக்கள் ஒன்றிய பசுமை அமைப்பு சார்பாக புலம்பெயர்ந்த ஒவ்வொரு நாடுகளிலும் ஒவ்வொரு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட இருக்கிறார்கள். அனைவரும் ஒன்றிணைந்து தாய் மண்ணிலும் பசுமையின் கனவுகளோடு இருக்கும் பல பசுமை செயற்பாட்டாளர்களை மாவட்டம் தோறும் தேர்வு செய்து பயணிக்கும் ஒரு முயற்சியை விரைவில் ஆரம்பிக்க இருக்கிறோம்.

12.  இளைய தலைமுறையின் ஈடுபாடு எப்படியுள்ளது?

தற்பொழுது பசுமை சார்ந்த செயல்பாடுகளில் இளைஞர்கள் ஆர்வமாகக் கலந்து கொள்வதைக் காணமுடிகிறது. வடக்கைப் பொறுத்தவரை எங்களுடைய வன்னி தமிழ் மக்கள் ஒன்றிய பசுமை அமைப்பு நீண்ட காலமாக பசுமை விதைப்பு செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதால் பல இளைஞர்களை பசுமையை நேசிப்பதற்கும் விதைப்பதற்கும் தயார்படுத்தி இருக்கிறோம்.

இன்று பல புதிய புதிய பசுமை அமைப்புகள் உருவாகி இருக்கின்றன.  பசுமையை நேசிக்கும் எங்களுக்கு அவை மிக மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றன. பசுமை அனைவருக்கும் பொதுவானது. அவசியமானது என்பதை உணர்கிறார்கள் இன்றைய இளைஞர்கள்.

13.  இதுவரையான உங்களுடைய அனுபவம், அவதானிப்பு என்ன?

என்னுடைய பசுமைப் பயணம் என்பது க.வே பாலகுமாரன் அண்ணா அவர்களால் எனக்குள் பசுமை உணர்வு விதைக்கப்பட்டது. இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர். நீண்ட காலங்களாக இந்த பசுமை விதைப்போடு பயணித்துக் கொண்டிருக்கிறேன். அதன் அடிப்படையில் கூறுகிறேன், எங்கள் மண்ணில் அளவுக்கு அதிகமாக மரக்கன்றுகள் மரங்கள் உள்ளன. இருக்கும் மரக்கன்றுகளையும் மரத்தையும் பாதுகாக்கும் வழிமுறைகளை பலப்படுத்த வேண்டும்.

பசுமையை விதைப்பவர்கள் குறைவாக இருக்கிறார்கள். அழிப்பவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் வீதிகளில் இருக்கும் மரக்கன்றுகள் மரங்கள் எரிக்கப்படுகின்றன. மக்கள் நடமாட்டம் இல்லாத இடங்களில் இருக்கும் மரக்கன்றுகளும் மரங்களும் பனங் கூடல்களும் பசுமையின் அவசியத்தை உணராதவர்களால் அழிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. அவை மிக அவசியமாக தடுக்கப்பட வேண்டும்.

பொது இடங்களில் இருக்கும் மரக்கன்றுகளை மரங்களை அழிப்பவர்களை இனம் கண்டு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அவை கடுமையானதாக இருக்க வேண்டும். மக்கள் நடமாட்டம் உள்ள வீதிகளில் இருக்கும் மரக்கன்றுகள் ஒவ்வொரு நாளும் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது மக்கள் நடமாட்டம் அற்ற காடுகளில் இருக்கும் மரங்கள் பல லட்சம் ஒவ்வொரு நாளும் சட்டவிரோதமான முறையில் அழிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. தடுக்கப்பட்டால் மட்டும்தான் நிகழ்காலத்தில் அடுத்த தலைமுறைக்கான பசுமையை பாதுகாத்திட முடியும்.

14.  உங்களுடைய இந்தப் பசுமைச் செயற்பாடுகளுக்கு ஊக்கியாக இருந்தவர் அல்லது தூண்டலாக விதையைப் போட்டவர்கள்?

இன விடுதலைப் பயணத்தில் பயணிக்கும் பொழுது சில மாதங்கள் க.வே பாலகுமாரன் அண்ணாவுக்கு பணிவிடை செய்வதற்காக பணியமர்த்தப்பட்டேன். என்னை பணியாளராக பார்க்காமல் ஒரு பசுமையாளராக மாற்றியது அவர்தான். எனக்குள் பசுமை விதையை விதைத்தவர் முதன்மையானவர் அவர்தான்.

தொடர்ந்து சக்தி அண்ணா, கௌதமன் அண்ணா இவர்களோடு இணைந்து பசுமை செயல்பாடுகளில் ஈடுபட்டு இருக்கிறேன். அதன் தொடர்ச்சியை யுத்தம் முடிந்த பின்னர் மெல்ல மெல்லமாக ஆரம்பித்து ஒரு அமைப்பை உருவாக்கி இன்று நாளைய தலைமுறையின் வாழ்வுக்காக பசுமையோடு சென்று கொண்டிருக்கிறேன். நாளைய தலைமுறைக்காக…

15.  அரசியல் தரப்பினரின் ஆதரவு இந்தப் பணிகளுக்கு எப்படியுள்ளது? அரசியல் தரப்பினரின் பசுமைச் செயற்பாடுகளைக் குறித்து உங்களுடைய பார்வை என்ன?

நான் இதுவரை வடக்கில் அரசியல் சார்ந்து அதிகாரத்தில் பயணிக்கும் ஒரு பசுமையாளரைப் பார்த்ததில்லை. கார்த்திகை மாதம், மரம் நடுகை மாதம் என்று தமிழ் தேசியம் சார்ந்து பயணிக்கும் கட்சிகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் பசுமைப் புரட்சி பல லட்சம் மரங்களை விதைக்கப் போகிறோம் என்று நூறு மரக்கன்றுகளை விதைத்து விளம்பரத்தை ஏற்படுத்திக் கொள்வதைத்தான் பார்க்க முடிகிறது. இவர்களிடம் தூய்மையான பசுமை எண்ணங்கள் இல்லை.

இன்று வடக்கில் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடக்கம் கட்சித் தலைவர்கள் வரை எவருமே பசுமை சார்ந்து சிந்திப்பதில்லை. இதற்கு ஒரு விடயத்தை உதாரணமாக இங்கே குறிப்பிடுகிறேன். சில மாதங்களுக்கு முன்னர் தாய் மண்ணுக்கு வருகை தந்தேன். 80 நாட்கள் விடுமுறையில் வந்தேன். 70 நாட்கள் பசுமையோடு பயணித்தேன். பல பாராளுமன்ற உறுப்பினர்களையும் அரசியல் கட்சி தலைவர்களையும் சந்தித்தேன். வடக்கில் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் அங்கையன் ராமநாதன் அவர்களை சந்தித்து 30 நிமிடங்களுக்கு மேலாக வீதிகளில் காணப்படும் மரங்களை சட்டவிரோதமாக அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.  பொழுது சாயும் பொழுது சத்தம் இல்லாமல் எரித்து அழிக்கிறார்கள் எனப் பல ஆதாரங்களை அவருக்கு காண்பித்து, “உங்களுக்கு இருக்கும் அதிகாரத்தை கொண்டு மரங்களைப் பாதுகாக்க முயற்சி செய்யுங்கள்” என்று வலியுறுத்தினேன்.

“நிச்சயமாக இதற்கு நடவடிக்கை எடுக்கிறேன்” என்று வாக்குறுதி தந்தார். இன்று மாதங்கள் நான்கு கடந்து விட்டன. இன்று வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இன்னும் ஒரு நிகழ்வையும் இங்கே ஞாபகப்படுத்த விரும்புகிறேன். எங்களுடைய வன்னி தமிழ் மக்கள் ஒன்றிய பசுமை அமைப்பின் ஊடாக பசுமை செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் பொழுது கட்சி வேறுபாடுகள் இல்லாமல் அனைவரையும் அன்போடு அழைப்போம். பசுமை உணர்வுகளோடு நாளைய தலைமுறைக்காக கலந்து கொள்ளுங்கள் என்று கேட்போம்.

கிளிநொச்சி மண்ணில் வீதி விதைப்புக்காக ஒரு செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்தினோம். அனைத்துக் கட்சி உறுப்பினர்களையும் அன்போடு அழைத்தோம். அன்றைய நிகழ்வின் ஆரம்பத்தில் தமிழ் தேசிய கட்சியை சார்ந்த ஒரு தவிசாளர் தன்னுடைய ஆதரவாளர்கள் வர்த்தகர்களோடு கலந்து கொள்ள வந்தவர், தங்களுடைய கட்சிக்கு எதிரானவர்கள் இங்கே பங்கு பெற்றிருக்கிறார்கள். நாங்கள் தமிழ்த் தேசியவாதிகள் இதில் கலந்து கொள்ள மாட்டோம் என்ற கருத்தை பரிமாறி தங்களுடைய ஆதரவாளர்கள் உட்பட அனைவரையும் அழைத்துச் சென்று விட்டார்.

பசுமைக்கு பாகுபாடு தெரியாது. மண்ணில் வாழும் அத்தனை உயிரினங்களுக்கும் பாகுபாடுகள் வேற்றுமை தெரியாமல் பயனைக் கொடுப்பதுதான் பசுமை. இது போன்ற பல புரிதல்கள் இல்லாத அரசியல் உறுப்பினர்களை கடந்து தான் இந்தப் பசுமைப் பயணத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

எங்களைப் போன்ற பசுமையாளர்களின் கனவுகள், பசுமையை ஆழமாக நேசித்து அர்ப்பணிப்போடு செயல்படுபவர்கள் அரசியலுக்கு வரவேண்டும். அப்பொழுதுதான் எங்களுடைய வளங்களும் பசுமையும் பாதுகாக்கப்படும்.

16.  எதிர்காலத்தில் எப்படியான திட்டங்களை மேற்கொள்ளலாம் எனத் திட்டமிட்டுள்ளீர்கள்?

கிராமங்கள், மாவட்டங்கள் என்ற அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு அங்குள்ள வீதிகள், பொது இடங்கள், பாடசாலைகள் பசுமையாக வேண்டும். அதற்கான பசுமைச் செயல் திட்டங்களை உருவாக்கி வைத்திருக்கிறோம். அவை மட்டுமல்ல, இயற்கையின் தாய்மடி எங்களிடம் இருக்கும் காடுகளையும் பாதுகாக்கும் வழிமுறைகளையும் உருவாக்கி வைத்திருக்கிறோம். அழிவடைந்து போகும் மரங்களை பாதுகாக்க முயற்சி செய்ய இருக்கிறோம்.

முக்கியமாக விவசாயத்தை பாதுகாக்க முழுமையாக முயற்சி செய்வோம். எங்களை விட பசுமையை பாதுகாப்பவர்கள் விவசாயிகள். அது அவர்களின் அடிப்படை வாழ்வோடு உணர்வோடு இணைந்த ஒன்று. ஆகவே அவர்களை பாதுகாத்தால் பசுமையையும் பாதுகாக்க முடியும். அதைப்போலக் கடலோரத்தையும் கடற்றொழிலாளர்களையும் இணைத்துச் செயற்படுவோம். கண்டற்காடுகளுக்கும் சதுப்பு நில மரங்களுக்கும் இவர்களே பாதுகாவலர்கள்