— கருணாகரன் —
ஈழத் தமிழரின் அரசியலில் நிலத்தைப் பற்றிப் பேசுகின்ற அளவுக்கு கடலைப்பற்றிப் பேசுவதில்லை நாம். ஆனால், கடலும் சேர்ந்ததே நமது தேசம். வடக்குக் கிழக்கில்தான் இலங்கைத்தீவின் பெரும்பகுதி கடல் உள்ளது. காங்கேசன்துறை, திருகோணமலை, ஒலுவில் என மூன்று பெரும் துறைமுகங்களும் பருத்தித்துறை போன்ற சிறிய துறைமுகப் பகுதிகளும் இங்கேதான் உண்டு. இதை விட மயிலிட்டி, குருநகர், கிளாலி, மன்னார், தலைமன்னார், மட்டக்களப்பு போன்ற பல இடங்களில் மீன்பிடித்துறைமுகங்களும் உள்ளன. பாசிக்குடா, காரைநகர், பூநகரி – கௌதாரிமுனை, முல்லைத்தீவு, பொத்துவில் – அறுகம்பை, தலைமன்னார் எனக் கடலோரச் சுற்றுலாத் தளங்களும் இருக்கின்றன. கடல் தொழிலை ஆதாரமாகக் கொண்ட பல்லாயிரம் குடும்பங்களும் அவர்களின் வாழிடமும் கடலையும் கடலோரத்தையும் சார்ந்தே இருக்கின்றன.
இப்படிப் பொருளாதார அடிப்படையிலும் வாழிட ரீதியாகவும் முக்கியமானதாக இருக்கும் கடற்பிராந்தியம் தேசத்தின் உயிர்நாடியானது. ஆகவே நிலம் மட்டுமல்ல, கடலும் இணைந்ததே நம்முடைய தேசம். உலகம் முழுவதும் கடலை ஆதாரமாகக் கொண்டே வணிக நடவடிக்கைகள் அனைத்தும் முன்னெடுக்கப்படுகின்றன. கப்பற்போக்குவரத்துத்தான் உலகின் மிகப் பெரிய பொருள் விநியோகத்தின் அடிப்படையாக இன்றுவரை உள்ளது.
ஒரு பக்கம் உலகப் பொருளாதாரத்தில் முக்கியமான பங்களிப்பைச் செய்கிறது கடல். அதாவது கடல் வழிப்போக்குவரத்து. இரண்டாவது கடலுணவும் கடலின் பிற வளங்களும். உதாணமாக திருகோணமலை – புல்மோட்டைப் பகுதியில் உள்ள இல்மனைட் என்ற கனிமப் பொருள் மிகப் பெரிய வளத்தை உடையது. இப்படிப் பலவற்றைச் சொல்லலாம்.
நமது உணவுப் பயன்பாட்டிலும் பண்பாட்டிலும் கடலுணவு முக்கியத்துவமுடையது. இதற்கு ஆதரமாக இருப்பது கடலாகும். நமக்கு இரண்டு வகையான கடல்கள் உண்டு. ஒன்று சமுத்திரங்களோடிணைந்த வங்கக் கடலும் இந்து சமுத்திரமுமாகும். மற்றது களப்புக் கடல் என்ற சிறுகடற் பிராந்தியங்கள்.
இன்று இந்தக் கடற் பிராந்தியங்களில் பல நெருக்கடிகள். ஒன்று இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகள். இரண்டாவது அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் அனுசரணையோடு முன்னெடுக்கப்படும் கடற்பாசி, கடலட்டை, இறால் வளர்ப்புப் போன்ற திட்டங்கள். இதை விட கடலோரத்தில் வாழும் மக்களாலும் சுற்றுலாப்பயணிகளாலும் செய்யப்படும் இயற்கைச் சிதைப்புகள். சூழல் மாசுறுத்தலும்.
இவற்றையெல்லாம் கண்டு நம்முடைய கவிஞர் ஒருவர் குமுறுகிறார். அவருடைய ஆக்ரோஷமான குரல் கவிதைகளாகவும் களச் செயற்பாடுகளாகவும் வெளிப்படுகின்றன. இந்தக் களச் செயற்பாடுகள் பல வகையானவை. கடல் வள ஆய்வு, கடலைப்பற்றிய அறிவைப் புகட்டுதல், ஒளிப்படங்களின் (Photography) வழியாக பரப்புரைத்தல் தொடர்பான கலந்துரையாடல்களை மேற்கொள்ளுதல், களத்துக்கு பலரையும் அழைத்துச் சென்று நிலைமைகளை விளக்குதல், அரசியற் தரப்பினருடன் இது தொடர்பான உரையாடல்களை மேற்கொள்ளுதல் என விரிகிறது.
அப்படியிருந்தும் கடலைப்பற்றிய கவனம் நமக்கில்லை என்பது எவ்வளவு துயரமானது. அறிவீனமானது,
இதனால் இந்தக் கவிஞர் (தமயந்தி) இப்பொழுது கடலம்மா என்ற பெயரில் 30 கவிதைகளை எழுதியுள்ளார்.
“கடவுளர்களெல்லாம் பிறப்பதற்கு முன்பே பிறந்த கடல்
எல்லாக் கடவுளர்களையும் ரட்சித்த கடல்….
கடவுளர்களின் தலையெழுத்தை
எழுதியெழுதி அழித்த கடல்
அழித்தழித்து எழுதிய கடல்….”
கடலைப் பற்றி நாம் கொண்டிருக்கும் வியப்புக்கு அப்பாலான வியப்பைத் தருகிறது தமயந்தி கடலை உணரும் விதமும் உணர்த்தும் விதமும். எத்தனையெத்தனை விதமாகக் கடலைக் காண்கிறார் தமயந்தி! அந்தளவுக்குக் கடல் அவருக்கு உயிராகி உணர்விலே செறிந்துள்ளது. எல்லாவற்றுக்கும் மூத்தது – ஆதியானது கடலே என்கிறார். கடவுளர்கள் பிறப்பதற்கு முன்பே கடலிருந்தது. மட்டுமல்ல, எல்லாக் கடவுளர்களையும் ரட்சித்துமிருக்கிறது கடல். பூமியின் சரித்திரமும் அப்படித்தான் சொல்கிறது. பல்லாயிரம் கோடி ஆண்டுகளாகப் பொழிந்த மழையினால் முதலில் உருவாகியது கடல். அதற்குப் பிறகுதான் ஏனைய அனைத்தும். கடவுளரும்தான் என்று.
அப்படியான கடல் இன்று மனிதர்களால் எப்படியெல்லாம் சிதைக்கப்படுகிறது, கையாளப்படுகிறது, ஆதிக்கம் செலுத்தப்படுகிறது? என்பதை பதைப்புடன், கோபத்துடன், கவலையுடன் சொல்கின்றன தமயந்தியின் இந்தக்‘கடலம்மா’ கவிதைகள்.
கடலைக் ‘கடலம்மா’ என்றுதான் தமயந்தி அழைக்கிறார். அதாவது தாயின் இடத்தில் கடலை வைத்துப் பார்க்கிறார். அல்லது தாய்மையாகக் கடலை உணர்கிறார். இந்தக் கவிதைகளில் மட்டுமல்ல, தமயந்தியின் வாழ்க்கையிலும் கடலே இணைந்துள்ளது. அவர் பிறந்ததும் வளர்ந்ததும் வாழ்வதும் கடலிலேதான் என்றே சொல்ல வேண்டும். இலங்கை (மெலிஞ்சமுனை), இந்தியா, நோர்வே என்றமைந்த தமயந்தியின் பயண வழியும் வாழ்க்கைச் சூழலும் கடலுடனேயே இணைந்தவை. அவர் ஒரு கடல்வாழ் உயிரினமே. கடலில்லாமல் தமயந்தியில்லை. (கடல் இல்லாமல் தமயந்தி மட்டுமல்ல, நாமும் இல்லைத்தான்) அந்தளவுக்குக் கடலுடன் ஒன்றிக் கலந்த தயந்திக்கு, யாரும் எந்த வகையிலும் கடலைச் சிதைப்பது பிடிக்கவில்லை.யாரும் கடலைப் பொருட்படுத்தாமல் இருப்பதும் பிடிக்கவில்லை. நிலத்துக்காகப் போராடுகின்ற மக்களினதும் அரசியல் தரப்பினரினதும் மனதில் – புரிதலில் – கடலைப் பற்றிய கரிசனை இல்லாமலிருப்பது ஏன் என்ற கேள்வி தமயந்தியிடம் உண்டு. ஈழம் என்பது கடலையும் கொண்டது என்பதைப் பலரும் புரிந்து கொள்வதில்லை. இதை ஏன் விளங்கிக் கொள்ளாமல் இருக்கிறார்கள் என்று கேட்கிறார். இது கோபத்தீயில் மூண்டெழுகின்ற கேள்வி. அந்தளவுக்கு ஆக்ரோஷமானது. அந்தக் கேள்விகள் எழுப்பிய உணர்வலைகளே தமயந்தியை இந்தக் கவிதைகளை எழுத வைத்துள்ளன.
கடல் பற்றிய தமயந்தியின் நோக்கு பன்முகப்பட்டது. இந்தக் கவிதைகள் அதைச் சொல்கின்றன.
எண்ணற்ற பறவைகளின் சிறகசைப்பில்
எழுந்து நடந்தது கடல்
கடல்
தான் நடந்த வழிகளெல்லாம்
முட்டைகளை இட்டுச் சென்றது….
பின்பு
மனிதர்கள் கடலின் மேல் நடந்தார்கள்
நடந்த இடங்களெல்லாம்
கடல் முட்டைகள் உடைந்தன
கூடுகள் சிதறடிக்கப்பட்டன….
சூழலியல் நோக்கில் பார்த்தால் கடல்சார் சூழலியலைப் பேசுகின்றன. சமுத்திரங்களை யுத்தப் பிராந்தியமாக்கிய மனித வரலாறு, இன்று இன்னொரு வகையில் பொருளாதாரச் சுரண்டலுக்காகக் கடலைச் சிதைக்கிறது. கடலின், கடலோரங்களின் இயல்பான இயற்கைச் சூழலை உருமாற்றி முற்கொள்ளப்படும் அட்டைப் பண்ணைகள், இறால் வளர்ப்புத்திட்டங்கள், கடற்பாசி வளர்ப்புப் போன்ற கவர்ச்சிகரமான (சூழ்ச்சிகரமான) மாயப் பொருளாதார நடவடிக்கைகளை தமயந்தி எதிர்க்கிறார். இது மீனவர்களை ஏமாற்றிக் காபரேட் கொம்பனிகளும் அரசியல் ஏஜெண்டுகளும் செய்கின்ற அநீதி என்பதே தமயந்தியின் நிலைப்பாடு. இதற்காக அவர் இந்தக் கவிதைகளில் மட்டுமல்லாமல் தனக்குச் சாத்தியமான அத்தனை வழிகளிலும் எதிர்த்துப் போராடுகிறார். இதனால் கடலைப்பற்றி கூடுதலாகத் தேடியறிவதும் அப்படித் தேடியறிகையில் கடலின் மீதான நேசம் கூடி வருவதும் நிகழ்கிறது. இது நிகழ நிகழக் கடலைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு மேலோங்குகிறது. அப்பொழுது அவர் ஒரு சூழலியலாளராகத் தெரிகிறார். கடலுடன் இணைந்த மக்களின் பார்வையில் நோக்கினால், இவை கடற் புத்திரனுடைய உணர்வின் வெளிப்பாடுகளாகத் தெரியும். அவரும் அப்படித்தான் தெரிவார். பொருளாதார நோக்கில் பார்த்தால் கடலைச் சிதைக்காமல், அதனுடைய இயல்பு கெடாமல் அதனுடன் இணைந்து வாழ்ந்து பெறுபவற்றைப் பெற வேண்டும் என்று தெரியும். இப்படிப் பன்முக வெளிப்பாட்டைக் கொண்டுள்ளன இந்தக் கவிதைகள்.
இவை அனைத்தும் கடலைப்பற்றிய கவிதைகளாகவே உள்ளன. கடலின் பரிமாணங்களை, அதோடு மனிதர்கள் கொண்ட, கொள்ளும், கொள்ள வேண்டிய, கொள்ளக் கூடாத உறவைப் பற்றி வெளிப்படுத்துகின்றன. அதுதான் தமயந்தியின் நோக்கமும். ஆகவே இவை ஒரு வகையில் சமூக, அரசியற் கவிதைகளாகவே உள்ளன. கவிதைகளின் தொனியும் அப்படியானதே. அரசியற் கவிதைகளின் பொதுக்குணமாக இருப்பது தாம் உணர்த்த முற்படுத்தும் இலக்கில் – நோக்கத்தில் கூர்மையைக் கொண்டிருப்பதாகும். அந்தத் தன்மை இந்தக் கவிதைகளிலும் உண்டு.
இதைக் கடலில் இருந்தபடியே எழுதியதாகச் சொல்கிறார். அப்படியே கடலின் வாடை அடிக்கிறது. ஈரம் தெரிகிறது. கடலின் சீற்றமும் துக்கமும் புரிகிறது.
ஆழியில் நீ
எதை எறிகிறாயோ
கரையில் அதையே கண்டடைவாய்.
கரையில் எதை நீ விதைக்கிறாயோ
கூரை மேல் அதையே
அறுவடை செய்வாய்
அதுதான் கடல்….
நோர்வேயிலிருந்து தன்னுடைய சொந்த ஊரான மெலிஞ்சிமுனைக்கு வந்து நின்றபோது ஏறக்குறைய ஒரு மாதத்திற்குட்பட்ட காலத்தில் எழுதப்பட்டவை இந்தக் கவிதைகள். இன்னொரு வகையில் சொன்னால், ஒரே மூச்சில் எழுதப்பட்ட கவிதைகள் எனலாம். அப்படி ஒரே மூச்சில் எழுதுவதற்கு உணர்வுக் கொந்தளிப்பு நிகழ வேண்டும். அப்போதுதான் இப்படி எழுதுவது சாத்தியமாகும். இல்லையென்றால் செயற்கைத்தனம் வந்து விடும். இங்கே இருந்து மூளையால் செய்யப்பட்ட கவிதையின் செயற்கையின் சாயல்கள் எதுவுமில்லை. சத்தியத்தன்மையே மேலோங்கியுள்ளது. இதற்குக் காரணம், அவரிடம் நிகழ்ந்த உணர்வுக் கொந்தளிப்பே.
இன்று மிகமிக அவசியமாக நாம் கடலைப்பற்றிச் சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளோம். அந்தளவுக்கு ஈழக்கடல் அபாயச் சூழிக்குள்ளில் சிக்கியுள்ளது. ஒரு பக்கம் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள். அவர்கள் கடலின் கண்ட மேடைகளையும் நம்முடைய அருமையான பவளப்பாறைகளையும் சிதைக்கிறார்கள். இன்னொரு பக்கத்தில் காப்ரேட் கொம்பனிகளின் சூழ்ச்சிக்குப் பலியாகும் உள்ளுர் மீனவர்களின் பாசி வளர்ப்பு, அட்டைப் பண்ணைகள், இறால் வளர்ப்பு போன்ற இயல்புக்கு மாறான திட்டங்கள். இரண்டினாலும் பாதிக்கப்படுவது கடல் வளமும் நியாயமான மீனவர்களுமே. ஆனால், இதைப்பற்றி அரசுக்கும் சரி, அரசியல் தரப்பினருக்கும் சரி அக்கறை கிடையாது. கடலையும் மீனவர்களையும் பாதுகாக்க வேண்டிய மீனவர் சங்கங்களும் இந்தச் சூழ்ச்சிக்குப் பலியாகிக் கொண்டிருக்கின்றன. எல்லோரும் தங்களுடைய காலத்தில் கிடைப்பதைப் பெற்றக் கொள்ள வேண்டும் என்று சிந்திக்கிறார்களே தவிர, ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வாழ்வைத் தந்த கடலின் இயற்கை வளத்தைப் பேண வேண்டும் என்று சிந்திப்பதாக இல்லை. புதிய கடற்பொருளதாரத் திட்டங்களினால் இயற்கை அரண்களாக இருந்த கண்டற்காடுகள் அழிக்கப்படுகின்றன.. இயல்பாயமைந்த நிலத்தடிப் பாறைகள் சிதைக்கப்படுகின்றன. கடலோரங்களில் இன்று ஆமைகளையே காண முடியாத நிலை உருவாகி விட்டது. இப்படியே சென்றால் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும். தலைமுறை தலைமுறையாக வாழ்வதற்கு மீனையும் பிற கடல்சார் பொருட்களையும் அள்ளித் தந்த கடலில் ஒரு வேளை உணவுக்கு மீனைப் பிடிக்க முடியாமல் போய் விடும்.
இப்படி நிகழ்காலத்தையே சிதைக்கின்ற அபாயப் பொறிகளைப் பற்றி மக்கள் சிந்திக்காமலிருப்பது தமயந்திக்குப் பெருங்கவலையை அளிக்கின்றது. சினத்தையும் உண்டாக்குகிறது. இந்தச் சனங்கள் எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திப்பதாகக் காணவில்லை என்று குமுறுகிறார் தமயந்தி. அவருடைய வாழ்நிலை, அவருடைய பரிச்சயம், அவருடைய ஈடுபாடு (விருப்பம்) எல்லாமே கடலாக மாறி விட்டன. எதில் ஒருவருக்கு கூடிய கரிசனை இருக்குமோ அவருடைய கவனமும் வெளிப்பாடுகளும் அதைச் சார்ந்தே – அதில் மையமிட்டே இருக்கும். இது இயல்பு. இன்று நம்முடைய தமிழ்ச் சூழலில் கடலைப்பற்றிப் பேசக் கூடிய அனுபவத்தையும் அறிவையும் கொண்டிருப்பவர்களில் தமயந்தி முக்கியமானவர்.
தமயந்தியின் இந்தக் கடற் கவிதைகள் ஒரே பொருளைக் குறித்துப் பல நிலைகளில், பல தோற்றங்களில் பேசுகின்றவையாக உள்ளன. இதனால் பல்வேறு நிறங்களை வெளிப்படுத்துகின்றன. முழுக்கவிதைகளையும் வாசிக்கும்போது நெடுங்கவிதை ஒன்றை வாசித்த உணர்வு ஏற்படுகிறது. கவிதையின் வடிவ முறைமைகளுக்குள் தன்னைச் சிறைப்படுத்திக் கொள்ளாமல் தன்னெழுச்சியாக வெளிப்படுத்தக் கூடிய – அமையக் கூடிய வடிவத்தில் இவற்றை எழுதியளித்திருக்கிறார் தமயந்தி. இது ஒரு போர்க்குரல். கருணையின் பாற்பட்ட அழைப்பு. அன்பின் வெளிப்பாடு. அபாய எச்சரிக்கை. கடமை உணர்வு
–