— கலாநிதி ஜெகான் பெரேரா —
அரசாங்கம் பல புதிய சட்டங்களைக் கொண்டுவருகிறது. அவற்றில் சில சட்டங்கள் நேர்மறையாகவும் வேறுசில எதிர்மறையாகவும் நோக்கப்பட்டுவருகின்றன.
ஊழல் தடுப்பு சட்டம், உண்மை ஆணைக்குழு சட்டமூலம், தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்க அலுவலக சட்டமூலம் ஆகியவை நேர்மறையானவை. ஆனால் எதிர்மறையான சட்டங்கள் எண்ணிக்கையில் கூடுதலானவையாக இருக்கின்றன. அவற்றில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலமும இணையவெளி பாதுகாப்பு சட்டமூலமும் பட்டியலில் முன்னிலையில் நிற்கின்றன.
இந்த இரு சட்டமூலங்களும் கருத்தை வெளிப்படுத்திச் செய்யும் போராட்டங்களையும் களத்தில் முன்னெடுக்கப்படும் போராட்டங்களையும் ஒடுக்கும் நோக்கத்தைக் கொண்டவை. அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் கட்டுப்பாட்டு சட்டமூலம் மற்றும் தேர்தல் சீர்திருத்தங்கள் சட்டமூலம் உட்பட வேறு பல சர்ச்சைக்குரிய சட்டமூலங்களையும் கொண்டுவருவதற்கு அரசாங்கம் திட்டமிடுகிறது. அவை இன்னமும் பொதுமக்கள் முன்னிலையிலோ அல்லது பாராளுமன்றத்திலோ சமர்ப்பிக்கப்படவில்லை.
இந்த சட்டமூலங்கள் எல்லாவற்றையும் பொறுத்தவரை பொதுவான அம்சம் என்னவென்றால் அவை வெளிப்படைத்தன்மை இல்லாத முறையில் இனந்தெரியாத பேர்வழிகளினால் தயாரிக்கப் பட்டிருப்பதாகும்.
தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்க அலுவலக சட்டமூலம் சுமார் ஒரு மாதத்துக்கு முன்னர் எந்தவிதமான ஆரவாரமும் இன்றி பகிரங்கத்துக்கு வந்தது. ஒரு வருடத்துக்கு முன்னர் அமைப்பதாக அரசாங்கம் உறுதியளித்த உத்தேச உண்மை ஆணைக்குழுவுடன் சம்பந்தப்பட்டதாக இந்த சட்டமூலத்தை நினைத்து எவரும் குழப்பமடையத் தேவையில்லை.
தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்க அலுவலக சட்டமூலம் இன, மத மற்றும் சமூக அமைதியுடன் சம்பந்தப்பட்ட விவகாரங்களை தழுவியதாக மிகவும் பரந்த ஒன்றாக இருக்கிறது. அமைக்கப்படவிருக்கும் அலுவலகத்துக்கு நாட்டில் தேசிய ஐக்கியம், நல்லிணக்கம் மற்றும் நிலையான சமாதானத்தை அடைவதை நோக்கியும் நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு தொடர்பில் ஒரு தேசிய கொள்கையையும் தேசிய நடவடிக்கைத் திடடத்தை வகுப்பதை நோக்கியும் அவசியமான முன்மொழிவுகளைச் செய்வதற்கான ஆணை வழங்கப்படும்.
இதற்கு வேறுபட்டதாக, உத்தேச உண்மை ஆணைக்குழு நாட்டின் வடக்கு, கிழக்கில் உள்நாட்டுப்போர் இடம்பெற்ற மூன்று தசாப்த காலகட்டத்தின் மீது கவனத்தைச் செலுத்தும்.
தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்க அலுவலக சட்டமூலம் பதினொரு உறுப்பினர்களைக் கொண்ட அலுவலகம் ஒன்றை அமைப்பதற்கான ஏற்பாட்டை கொண்டிருக்கிறது. இந்த பதினொரு பேரில் ஒருவர் அமைச்சு ஒன்றின் மேலதிக செயலாளருக்கும் குறையாத பதவியில் இருக்கும் ஒருவர் பதவிவழி உறுப்பினராகவும் ஏனைய பத்துப் பேரும் அமைச்சர்களின் விதப்புரைகளின் அடிப்படையில் நியமிக்கப்படுபவர்களாகவும் இருப்பர். இந்த நியமனங்கள் சகலதும் ஜனாதிபதியினாலேயே செய்யப்படும்.
இந்த அலுவகத்தைச் சேர்ந்த எந்தவொருவரும் தங்களது கடமையைச் செய்வதை தவறான முறையில் தடுக்கும் அல்லது சீர்குலைக்கும் எந்தவொரு நபரும் அல்லது வேண்டுமென்றே தவறான தகவலை இந்த அலுவலகத்துக்கு வழங்கும் எந்தவொரு நபரும் அலுவலகத்தின் அதிகாரத்தை அவமதிக்கும் குற்றத்தை செய்தவராக கருதப்படுவார் என்று சட்டமூலம் கூறுகிறது.
அத்தகைய குற்றத்தை செய்தவராக எந்தவொரு நபரையும் கருதுவதற்கு நியாயமான காரணங்கள் இருப்பதாக அலுவலகம் நம்பும்பட்சத்தில் அந்த விடயத்தை அது மேன்முறையிட்டு நீதிமன்றத்துக்கு அறிவிக்கமுடியும். அலுவலகத்தின் உறுப்பினர்கள் அரசாங்க அமைச்சர்களினால் தெரிவுசெய்யப்பட்டு ஜனாதிபதியினால் நியமிக்கப்படவிருப்பதால் அவர்கள் சுயாதீனமாகச் செயற்படக் கூடியவர்களாக இருக்கமாட்டார்கள் என்பது ஒரு பிரச்சினை.
பக்கச்சார்பான
நியமனங்கள்
அதன் விளைவாக, தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்க அலுவலகத்துக்கு தெரிவு செய்யப்படக் கூடியவர்கள் பெரிதும் பக்கச்சார்பான நோக்கங்களுக்காக தங்களுக்கு இருக்கக்கூடிய பல்வேறு அதிகாரங்களை பயன்படுத்தக்கூடிய அரசியல்ரீதியில் பக்கச்சார்பான நபர்களாக இருக்கக்கூடும். ஜனாதிபதி தனது தற்துணிபின் அடிப்படையில் நியமிக்கின்றவர்களை தலைவர்களாகக் கொண்டு உருவாக்கப்படுகின்ற புதிய நிறுவனங்களின் அண்மையை பாணியைப் பின்பற்றுவதாக இந்த உத்தேச அலுவலகமும் அமையலாம்.
ஜனாதிபதி தனது தற்துணிபு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஐந்து ஆணையாளர்களை தெரிவுசய்வதற்கான ஏற்பாட்டை இணையவெளி பாதுகாப்பு சட்டமூலம் கொண்டிருக்கிறது. வெறுப்புப் பேச்சாக எது அமைகிறது என்பதையும் மக்களுக்கு எது பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதையும் அவற்றையெல்லாம் தண்டனைக்குரியவையாக கருதவேண்டிய தேவை இருக்கிறதா என்பதையும் தீர்மானிக்கும் அதிகாரம் இந்த ஆணையாளர்களுக்கு வழங்கப்படவிருக்கிறது.
இவர்களை நியமிக்கும் அதிகாரம் உயர்நீதிமன்றத்தில் பலர் தாக்கல்செய்த மனுக்களின் மூலமாக சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ஆணையாளர்களை நியமிக்கும் அதிகாரத்தை ஜனாதிபதிக்கு அல்ல அரசியலமைப்பு பேரவைக்கே வழங்கவேண்டும் என்று மனுதாரர்கள் கோரியிருக்கிறார்கள்.
அரச அதிகாரப் பதவிகளுக்கு தெரிவு செய்யப்படுபவர்கள் சாத்தியமான அளவுக்கு அரசியல் செல்வாக்கிற்கு ஆட்படாதவர்களாக இருப்பதை உறுதி செய்வதற்காகவே அரசியலமைப்பு பேரவை நிறுவப்பட்டது. அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தின் கீழ் முதன்முதலாக அரசியலமைப்பு பேரவை நிறுவப்பட்டபோது பாராளுமன்றத்தினால் அது ஏகமானதாக வரவேற்கப்பட்டது.
ஆனால், அடுத்தடுத்து பதவிக்கு வந்த அரசாங்கத் தலைவர்கள் அரச உயர்பதவிகளுக்கு நியமனங்களை செய்யும் விடயத்தில் தாங்கள் முன்னர் அனுபவித்துவந்த எதேச்சையான அதிகாரங்கள் தங்களிடம் இருந்து பறிக்கப்படுவதை கண்டுகொண்டபோது அவர்கள் அரசியலமைப்பு பேரவையை மலினப்படுத்துவதற்கு தங்களால் இயன்றவரை முயற்சித்தார்கள்.
அதன் விளைவாக, 17 வது திருத்தம் இரு சந்தர்ப்பங்களில் ரத்துச் செய்யப்பட்டது. ஆனால் பிறகு 21 வது திருத்தத்தின் மூலமாக மீணடும் அது கொண்டுவரப்பட்டது. அரசியலமைப்பு பேரவையை அமைத்த சட்டங்களை ரத்துச் செய்த முன்னைய அரசாங்கங்களைப் போலன்றி தற்போதைய அரசாங்கம் அரசியலமைப்பு பேரவையை அலட்சியம் செய்வதன் மூலமாக அதன் இருப்பை வெறுமனே பெயரளவிலானதாக்குவதில் பெருமளவுக்கு நாசூக்காக நடந்துகொள்கிறது.
தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்க அலுவலக சட்டமூலம் போன்ற நன்னோக்கங்களுக்கு பயன்படுத்தக்கூடிய சட்டங்களும் கூட இறுதியில் பக்கச்சார்பான நோக்கங்களுக்கு பயன்படுத்தப்படக்கூடியவையாக மாறுவது மிகவும் துரதிர்ஷ்டமான சாத்தியப்பாடாகும். குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கைச் சட்டத்துடன் ( International Convention on Civil and Political Rights Act – ICCPR Act) தொடர்புடைய விவகாரங்களில் இது நடந்திருக்கிறது.
குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான உலகில் மிகவும் பிரபல்யமான சர்வதேச சமவாயத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்டதே அந்த சட்டமாகும். ஆனால், அது இங்கு நடைமுறைப்படுத்தப்படுகின்ற விதம் அந்த சர்வதேச சமவாயம் எந்த மனித உரிமைகளை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டதோ அதே உரிமைகளை தலைகீழாக்குவதாக அமைந்திருக்கிறது.
இலங்கையில் பெரும்பான்மைச் சமூகத்துக்கு முன்னுரிமை கொடுக்கின்ற இனத்துவமயப்படுத்தப்பட்ட அரசை கேள்விகேட்பதற்கு துணிச்சலை வெளிக்காட்டிய பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் மற்றும் நடிகர்களை கொடுமைப்படுத்துவதற்கு இந்த சட்டம் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.
இந்த சட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் சட்டம் தடைசெய்த வெறுப்புப்பேச்சு எல்லையை மீறினார்கள் என்று கூறப்பட்டு பல மாதங்களை, பல வருடங்களை சிறையில் கழித்திருக்கிறார்கள்.
பக்கசசார்பின்மை :
தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்க அலுவலக சட்டத்தின கீழ் தெரிவுசெய்யப்படும் உறுப்பினர்கள் 21 வது திருத்தம் குறித்துரைக்கின்றதைப் போன்று பக்கச் சார்பற்றவர்களாக இருக்கவேண்டியது அவசியம். குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கைச் சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருப்பதைப் போன்று தேசிய ஐக்கியம் மற்றும் நலலிணக்க அலுவலகத்துக்கு பரந்தளவு அதிகாரங்களை வழங்கும் சட்டமும் அரசியல்ரீதியிலும் கோட்பாட்டு ரீதியிலும் எதிரிகளாக இருக்கக்கூடியவர்களை துன்புறுத்துவதற்கு துஷ்பிரயோகம் செயயப்படுவதற்கு சாத்தியம் இரு்கிறது.
விவேகமாகவும் நிதானமாகவும் கையாளாத் தவறினால் இனங்கள்,மதங்களுக்கு இடையில் பதற்றத்துக்கு வழிவகுக்கக்கூடிய ஆபத்தைக் கொண்ட பல சர்ச்சைகளை நாட்டில் காணக்கூடியதாக இருக்கிறது. நாட்டின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கண்டுபிடிக்கப்படுகின்ற தொல்பொருளியல் இடங்களை, மதத் தலங்களாக மாற்றுமாறு கொடு்க்கப்பட்டுவரும் நெருக்குதல்கள் உட்பட பல பிரச்சினைகள் பதற்றத்தை தோற்றுவிக்கக்கூடியவையாக இருக்கின்றன.
குறிப்பிட்ட மதத்தைப் பின்பற்றுபவர்கள் எவரும் அந்த பகுதிகளில் வசிக்காத நிலையிலும் கூட அவற்றை மதத்தலங்களாக மாற்றுமாறு கோரப்படுகிறது.
தொல்பொருளியல் இடமொன்றில் பௌத்த விகாரையொன்று நிர்மாணிக்கப்படுவது தொடர்பாக வடக்கில் குருந்தூர்மலையில் மூண்டிருக்கும் முரண்நிலை அத்துமீறலை நிறுத்துவதற்கு முயற்சித்த நீதிபதியொருவர் நாட்டைவிட்டு தப்பியோட நிர்ப்பந்திக்கப்பட்ட அளவுக்கு பாரதூரமான பதற்றநிலையை தோற்றுவித்தது.
கிழக்கில் காலங்காலமாக மேய்ச்சல் நிலமாக இருந்துவந்த பகுதியை வெளியில் இருந்து வந்தவர்கள் உரிமைகோருவது தொடர்பான தகராறும் பதற்றநிலையை தோற்றுவித்திருக்கிறது.வயல்வெளிகளில் கால்நடைகள் கொல்லப்பட்டுக்கிடக்கும் படங்களை காணக்கூடியதாக இருக்கின்ற அதேவேளை தங்களது பொருளாதார சொத்துக்களை இழந்துவிட்டதால் உரிமையாளர்கள் பெரும் கவலையடைந்திருக்கிறார்கள்.
மூன்று தசாப்தகால உள்நாட்டுப் போரின்போது வயல்வெளிகள் மனித கொலைக்களங்களாக மாறிய கடந்த காலத்தைப் போன்ற நிலைவரம் மீண்டும் தோன்றுவதை தடுப்பதற்கு அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்கவேண்டியது முக்கியமானதாகும்.
நாட்டைப் பாதிக்கும் இந்த பிரச்சினைகள் தொடர்பில் தனது நிலைப்பாட்டை ஜனாதிபதி தெளிவாக வெளிப்படுத்தியிருக்கின்ற போதிலும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக இல்லை. தங்களுக்கு சொந்தமில்லாத நிலங்களை ஆக்கிரமிப்பதற்கான உரிமை எந்த நபருக்கும் கிடையாது என்று ஜனாதிபதி கூறியிருக்கிறார். ஆனால் அதை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதால்தான் பிரச்சினை நீடிக்கிறது.
அரச உயர்பதவிகளுக்கான நியமனங்களை செய்வதில் அரசியலமைப்பு பேரவைக்கு இருக்கும் உரிமைக்கு மதிப்பளிப்பது போன்ற அரசியலமைப்பு ரீதியான நியமங்களை பின்பற்றாமல் நடந்துகொள்வதன் மூலமாக ஜனாதிபதியே தனது நன்னோக்கங்களை மலினப்படுத்துவது துரதிர்ஷ்ட வசமானதாகும். இது அரச நிறுவனங்களின் சுயாதீனத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் நீதியையும் மலினப்படுத்துகிறது.
தன்னெண்ணத்தில் செயற்படுவதற்கு முயற்சிப்பதற்கு பதிலாக ஜனாதிபதி நாட்டில் நல்லாட்சியை உறுதிப்படுத்துவதற்கு எதிரணி அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூகத்துடன் சேர்ந்து பல்முனை கருத்தொருமிப்பு ஒன்றைக் காண்பதற்கு செயலில் இறங்கவேண்டியது அவசியமாகும். எஞ்சியிருக்கும் காலம் போதாமல் இருந்தாலும் முயற்சித்துப் பார்க்கலாம்.