— வீரகத்தி தனபாலசிங்கம் —
கட்டுப்பாட்டை மீறியதற்காக கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட இரு அரசியல்வாதிகளின் பாராளுமன்ற உறுப்புரிமையின் கதி குறித்து உயர்நீதிமன்றம் இம்மாத முற்பகுதியில் ஒரு வாரகால இடைவெளியில் வேறுபட்ட இரு தீர்ப்புக்களை வழங்கியிருந்தது.
இரு வழக்குகளும் சாராம்சத்தில் வேறுபட்டவை என்ற போதிலும், இருவருமே தங்களது கட்சிகள் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புகளின் போது எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று எடுத்த தீர்மானத்துக்கு எதிராக செயற்பட்டமைக்காக வெளியேற்றப்பட்டதை ஆட்சேபித்து உயர்நீதிமன்றத்தை நாடியதில் ஒரு ஒற்றுமை இருக்கிறது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட் 2022 பட்ஜெட்டை எதிர்த்து வாக்களிப்பதற்கு கட்சி எடுத்த தீர்மானத்தை மீறி அரசாங்கத்துடன் சேர்ந்து 10 டிசம்பர் 2021 அன்று வாக்களித்தமைக்காக கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டது சரியானது என்று உயர்நீதிமன்றம் அக்டோபர் 6 தீர்ப்பளித்தது. அதையடுத்து அவர் தனது பாராளுமன்ற உறுப்புரிமையையும் சுற்றாடல் பாதுகாப்பு அமைச்சர் பதவியையும் இழந்தார்.
நசீர் அஹமட்டுடன் சேர்ந்து 2022 பட்ஜெட்டுக்கு ஆதரவாக முஸ்லிம் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் வாக்களித்திருந்த போதிலும், பிறகு அவர்கள் தங்களது செயலுக்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டதை அடுத்து ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதை கட்சியின் உயர்பீடம் தவிர்த்ததாக கூறப்பட்டது.
எங்கள் மக்கள் சக்தி கட்சியின் (அபே ஜனபல பக்சய) பாராளுமன்ற உறுப்பினர் வண. அத்துரலிய ரத்தன தேரர் கொழும்பு துறைமுக பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை எதிர்ப்பதற்கு கட்சி எடுத்த தீர்மானத்தை மீறி அரசாங்கத்துடன் சேர்ந்து வாக்களித்தார். அதற்காக தன்னை வெளியேற்றுவதற்கு கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கை குழு 2021 அக்டோபரில் எடுத்த தீர்மானத்தை ஆட்சேபித்து அவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கின் விசாரணை கடந்த வருடம் செப்டெம்பரில் நிறைவடைந்தது.
‘விஜயதாரணி தேசிய சபை’ என்ற அமைப்பின் தலைவரான ரத்தன தேரர் அபே ஜனபல பக்சயவுடன் கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் செய்துகொண்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் பிரகாரம் அவரின் உறுப்புரிமையை ரத்துச் செய்வதற்கு ஒழுக்காற்று நடவடிக்கை குழுவுக்கு அதிகாரம் கிடையாது என்று உயர்நீதிமன்றம் அக்டோபர் 13 தீர்ப்பளித்தது. அதனால் தேரர் தொடர்ந்தும் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கமுடியும்.
தனது கட்சியின் உயர்பீடத்தின் தீர்மானங்களை மதித்து நடப்பதாக உறுதியளித்த நசீர் அஹமட் அதை மீறிச் செயற்பட்டதற்காக பாராளுமன்ற உறுப்புரிமையை இழந்த அதேவேளை, ரத்தன தேரர் கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக செயற்பட்டபோதிலும், அவரை வெளியேற்றுவதற்கு தீர்மானத்தை எடுத்த ஒழுக்காற்று நடவடிக்கை குழுவின் ‘தகுதியின்மை’ காரணமாக பாராளுமன்ற உறுப்புரிமையை காப்பாற்றிக்கொள்ள முடிந்தது.
மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் ஜனாதிபதி பிரேமதாசவுக்கு எதிராக கிளம்பிய அமைச்சர்களான காமினி திசாநாயக்க மற்றும் லலித் அத்துலத் முதலி உட்பட 8 பேர் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டதை ஆட்சேபித்து அவர்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் தோல்வியடைந்து பாராளுமன்ற உறுப்புரிமையை இழந்ததற்கு பிறகு கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதற்காக அரசியல்வாதி ஒருவர் முதற்தடவையாக பாாளுமன்ற உறுப்பினர் பதவியை இப்போதுதான் இழந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நசீர் அஹமட்டுக்கு நேர்த்த கதி தங்களது கட்சிகளை விட்டு வெளியேறிய பின்னரும் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கும் அரசியல்வாதிகள் பலருக்கு நீண்டகாலத்துக்கு பிறகு பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து தங்களது கட்சிகளும் சட்ட நடவடிக்கை எடுக்க முற்பட்டால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்கவேண்டிவரும் என்று அவர்களுக்கு பயம் வந்திருக்கிறது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அடிக்கடி கூறுவதைப் போன்று பாராளுமன்றத்தில் தற்போது யார் யார் எந்தப் பக்கத்தில் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.
கடந்த வருடத்தைய மக்கள் கிளர்ச்சியை அடுத்து ராஜபக்சாக்களின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து உத்தியோகபூர்வமாக வெளியேறாவிட்டாலும், பல பாராளுமன்ற உறுப்பினர்கள் சபைக்குள் சுயாதீனமான குழுக்களாக செயற்படுகிறார்கள். அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையில் பொதுஜன பெரமுன இறங்கக்கூடும் என்று செய்திகள் வெளியாகின.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார மற்றும் டயானா கமமே அரசாங்கத்தில் இணைந்து அமைச்சர் பதவிகளை வகிக்கிறார்கள். ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு கட்சியில் இருந்து வெளியேற்றிய பின்னரும் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக தொடருகிறார்கள். தங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையை கட்சி எடுக்கலாம் என்ற பயம் அவர்களுக்கும் இருக்கிறது.
ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளராக கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு தெரிவாகிய முன்னாள் அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க போன்றவர்களும் தனியாகவே சபைக்குள் இயங்குகிறார்கள்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கப் பக்கத்துக்கு இழுப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முயற்சித்துவந்தார் என்பது ஒன்றும் இரகசியமானது அல்ல. அந்த கட்சியின் பல உறுப்பினர்கள் அரசாங்கப் பக்கம் போகக்கூடும் என்றும் எதி்பார்க்கப்பட்டது போன்று மேலும் பொதுஜன பெரமுன உறுப்பினர்களில் பலரும் கூட எதிர்த்தரப்புக்கு செல்லக்கூடும் என்ற நிலையும் ஒரு கட்டத்தில் இருந்தது.
ஆனால் தற்போது உயர்நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு ஒரேயொரு உறுப்பினரை பாராளுமன்றத்தில் கொண்டிருக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ஜனாதிபதி விக்கிரமசிங்கவை தவிர, ஏனைய கட்சிகளின் தலைவர்களுக்கு குறிப்பாக சஜித் பிரேமதாசவுக்கு பெரிய ஆறுதலைக் கொடுத்திருக்கிறது எனலாம். நசீர் அஹமட் விவகாரத்தை அடுத்து தங்கள் கட்சிகளின் உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்புரிமையை இழக்கவேண்டிவரும் என்ற பயத்தில் கட்சி தாவமாட்டார்கள் என்று அவருக்கு நம்பிக்கை வந்திருக்கும்.
இலங்கை அரசியலமைப்பின் ஏற்பாட்டின் பிரகாரம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவினால் பதவியை இழப்பர். ஆனால் 1979 ஆம் ஆண்டு தமிழர் விடுதலை கூட்டணியின் மட்டக்களப்பு தொகுதி பாராளுமன்ற உறுப்பினரும் மூத்த அரசியல்வாதியுமான செல்லையா இராஜதுரை ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் சேருவதற்கு வசதியாக அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன அரசியலமைப்புக்கு ஒரு திருத்தத்தை கொண்டுவந்தார். அதை ‘இராஜதுரை திருத்தம்’ என்றே அரசியல் அவதானிகள் நகைத்திறனுடன் அழைத்தார்கள்.
அந்த திருத்தம் எதிரணியில் இருந்து அரசாங்கப் பக்கத்துக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்வதற்கு மாத்திரமே வசதியான ‘ஒரு வழிப்பாதையாக’ இருந்தது. அரசாங்கத் தரப்பில் இருந்து எதிரணிக்கு சென்றால் எவரும் பாராளுமன்ற உறுப்புரிமையை இழக்கவேண்டிய நிலை. அன்றைய அரசாங்க காலத்தில் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பு திருத்தங்களில் பெரும்பாலானவை ஜெயவர்தனவுக்காக ஜெயவர்தனவின் யோசனையின் அடிப்படையில் கொண்டு வரப்பட்டவையேயாகும்.
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது கட்சியில் இருந்து நீக்கப்பட்டால் ஒரு மாத காலத்தில் அவர் பாராளுமன்ற உறுப்புரிமையை இழப்பார். ஆனால் தன்னை நீக்கிய கட்சியின் முடிவை எதிர்த்து அவர் நீதிமன்றத்தை நாடமுடியும். தீர்ப்பு வரும் வரை நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்படக்கூடிய இடைக்காலத்தடை உத்தரவுகளின் விளைவாக பாராளுமன்ற உறுப்பினராக தொடர்ந்தும் இருக்கலாம். கட்சிதாவிய பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை பாதுகாத்துக்கொள்ளக்கூடியதாக உயர்நீதிமன்றம் தீர்ப்புகளை வழங்கிய பல சந்தர்ப்பங்களும் உண்டு.
ஆனால், 1999 ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர்கள் சரத் அமுனுகம,விஜேபால மெண்டிஸ், நந்தா மத்தியூ மற்றும் சுசில் முனசிங்க ஆகியோர் திருமதி குமாரதுங்கவின் அரசாங்கத்தில் இணைந்துகொண்டதை அடுத்து ஐக்கிய தேசிய கட்சி தங்களை வெளியேற்றியதை ஆட்சேபித்து அவர்கள் தொடுத்த வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஒரு எதிர்மறையான திருப்புமுனையாக அமைந்தது.
அந்த வேளையில் பிரதம நீதியரசராக இருந்த சரத் என். சில்வாவையே கட்சித்தாவலை செல்லுபடியானதாக்கி தவறான ஒரு முன்னுதாரணத்தை வகுத்து மோசமான அரசியல் கலாசாரத்துக்கு வழிவகுத்தவர் என்று இன்று வரை கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.
இரு வாரங்களுக்கு முன்னர் டெயிலி மிறர் பத்திரிகையில் இந்த விவகாரங்கள் குறித்து எழுதிய மூத்த பத்திரிகையாளரும் அரசியல் ஆய்வாளருமான எம்.எஸ். எம். அயூப், சரத் என்.சில்வா பிரதம நீதியரசர் பதவியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் 2014 ஆண்டில் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் சரத் அமுனுகமவின் வழக்கின் மூலமாக கட்சித்தாவலை ஏற்கத்தக்கதாக ஒன்றாக மாற்றியது தானல்ல என்று கூறியதை மேற்கோள் காட்டியிருந்தார்.
தான் வெளிநாட்டுக்கு சென்றிருந்த வேளையில் அந்த தீர்ப்பை பதில் பிரதம நீதியரசராக இருந்த ரஞ்சித் அமரசிங்கவே வழங்கியதாகவும் ஆனால் அதை பின்னர் தான் அங்கீகரித்ததாகவும் சரத் என்.சில்வா நேர்காணலில் கூறியிருந்தார் என்று எழுதிய அயூப் பின்னரான காலகட்டத்தில் கட்சித் தாவல்களை செல்லுபடியாகக்கூடியவை என்று வழங்கப்பட்ட பல தீர்ப்புக்கள் பல்வேறு சட்டரீதியான நுட்ப நுணுக்கங்களின் அடிப்படையில் அமைந்தவையே என்று குறிப்பிட்டார்.
ஆனால், கடந்த இரு தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக கட்சித்தாவல்கள் சர்வ சாதாரணமானவையாக மாறியதற்கும் பாராளுமன்ற உறுப்புரிமையை இழக்கவேண்டிவரும் என்ற பயமின்றி அரசியல்வாதிகள் தங்களை தெரிவுசெய்த மக்களின் விருப்பு வெறுப்புக்களை மதிக்காமல் நடந்து கொள்வதற்கும் அந்த தீர்ப்பே முக்கிய காரணமாக இருந்தது என்பதில் சந்தேகமில்லை.
அதன் விளைவாக தோன்றிய ஆரோக்கியமற்ற அரசியல் கலாசாரத்தினால் உச்சபட்சத்துக்கு பயனடைந்தவர்கள் ராஜபக்சாக்களே. பணத்துக்கும் பதவிக்கும் அரசியல்வாதிகள் விலைக்கு வாங்குவதை ஒரு ‘கலையாகவே ‘ ராஜபக்சாக்கள் வளர்த்தெடுத்தார்கள் எனலாம்.
இந்த கட்சித்தாவல் கலாசாரத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் விக்கிரமசிங்க கூட தனது அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க எதிரணியில் இருந்து குறிப்பாக ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் வரவேண்டும் என்று எதிர்பார்த்த வண்ணமே இருக்கிறார் என்பது எமது அரசியல் கலாசாரத்தின் சீரழிவின் ஒரு தெளிவான வெளிப்பாடாகும். கட்சித்தாவலை எதிர்ப்பதும் ஆதரிப்பதும் அவரவருடைய அரசியல் அனுகூலத்தின் அடிப்படையிலான ஒன்றாக மாறிவிட்ட தையே காண்கிறோம்.
நசீர் அஹமட்டுக்கு எதிரான தீர்ப்பை அடுத்து கடந்த வாரங்களில் ‘தலைகள் உருளப்போகின்றன’ என்ற தலைப்புடன் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின. அந்த தீர்ப்பு ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்து அரசியல் விமர்சகர்களும் தொடர்ச்சியாக எழுதிக் கொண்டேயி ருக்கிறார்கள்.
கட்சியின் கட்டுப்பாட்டை மீறிய பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து ஆராய்வதாக அதன் பொதுச்செயலாளர் சாகர காரியவாசம் கூறியிருந்தார் என்றபோதிலும் இதுவரையில் அதற்கான அறிகுறி எதையும் காணவில்லை.
எதிரணியுடன் இணைந்துகொண்ட பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் தங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டாம் என்று காரியவாசத்திடம் கெஞ்சிக்கேட்டுக்கொண்டதாகவும் அறியமுடிகிறது.
ஆனால், 12 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட டலஸ் அழகப்பெரும அணியின் பேச்சாளரான பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் மாத்திரமே தங்களுக்கு எதிராக பொதுஜன பெரமுன நீதிமன்றத்தின் தீர்ப்பை எந்த சந்தர்ப்பத்திலும் நாடப்போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்.
கடந்த வருடம் ஜூலையில் புதிய ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கு இடம்பெற்ற வாக்கெடுப்பில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக தங்களால் நிறுத்தப்பட்ட அழகப்பெருமவுக்கு எதிராக விக்கிரமசிங்கவை ஆதரித்தவர்களே கட்சியின் நலன்களுக்கு எதிராக செயற்பட்டார்கள். தான் அழகப்பெருமவுக்கே வாக்களித்ததாக பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச அந்த வேளையில் கூறியது பதிவில் இருக்கிறது என்று கூறியிருக்கும் பேராசிரியர் தங்களுக்கு எதிராக கட்சியின் தலைமைத்துவம் சட்ட நடவடிக்கை எடுக்குமானால் நீதிமன்றத்தில் சகல சான்றுகளையும் சமர்ப்பிக்கத் தயாராயிருப்பதாகவும் தெரிவித்தார்.
அதேவேளை, நசீர் அஹமட்டுக்கு எதிரான தீர்ப்பு இன்னும் இரு வாரங்களில் பாராளுமன்றத்தில் ஜனாதிபதி விக்கிரமசிங்க சமர்ப்பிக்கவிருக்கும் 2024 பட்ஜெட் மீதான வாக்கெடுப்பில் தாக்கத்தைச் செலுத்தக்கூடிய சாத்தியம் இருக்கிறது.
எதிர்க்கட்சியைச் சேர்ந்த எந்தவொரு உறுப்பினரும் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி பிரதம கொறடாவின் கட்டுப்பாட்டை மீறிச்செயற்படுவதற்கு முன்னரைப் போன்று துணிச்சல்கொள்ள மாட்டார்கள்.
பொதுஜன பெரமுனவின் வேட்பாளர்களாக பாராளுமன்றத்துக்கு தெரிவாகி இப்போது ஒரு வருடத்துக்கும் மேலாக சுயாதீனமாக செயற்பட்டுவரும் அழகப்பெரும அணியும் அநுரா பிரியதர்ஷன யாப்பா அணியும் பட்ஜெட் வாக்கெடுப்பில் எவ்வாறு நடந்து கொள்வார்கள் என்பது இத்தடவை முக்கியமாக அவதானிக்க வேண்டியதாகிறது.
(வீரகேசரி வாவெளியீடு )