— தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் —
சென்ற பத்தியில் இலங்கையில் தமிழர்களுடைய அரசியல் பொதுவெளியில் பிரிந்து நின்று செயல்படுகின்ற நான்கு அரசியல் அணிகளை அடையாளம் கண்டோம். இந்த நான்கு அணிகளில் எந்த அணியை எதிர்காலத்தில் மக்கள் ஆதரிக்க வேண்டுமென்ற கேள்வியுடன் சென்ற பத்தி நிறைவுற்றிருந்தது.
முதலாவது அணியான ‘தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி’ (அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்) யின் ‘இரு தேசம்; ஒரு நாடு’ கோஷமும் அது முன் வைக்கும் ‘சமஸ்டி’ அரசியலமைப்புக் கட்டமைப்பும் இன்றைய அரசியல் களநிலையில் நடைமுறைச் சாத்தியமற்றவை. மேலும், இந்த அணி இந்திய எதிர்ப்பு வாதத்தையும் 13 ஆவது திருத்தத்தை முற்றாக நிராகரிப்பதையும் கொள்கையாகக் கொண்டிருப்பதால் இலங்கைத் தமிழர்களுக்கு நடைமுறையில் எந்த நன்மைகளையும் கொண்டு வரப்போவதில்லை. தற்போது அமுலில் உள்ள ஒற்றையாட்சி அரசியலமைப்பை நிராகரித்துக்கொண்டு அந்த ஒற்றையாட்சி அரசியலமைப்புக்கே விசுவாசம் தெரிவித்துச் சத்தியபிரமாணம் செய்து கொண்டு பாராளுமன்றம் செல்லும் இக்கட்சியிடம் (பாராளுமன்றம் செல்வதால் மட்டும் இக்கட்சி தான் கூறும் அரசியல் இலக்கை அடைய முடியாது) உண்மையும் நேர்மையும் இல்லை. இந்தியா இந்த அணியை ஏற்றுக்கொள்ளவேயில்லை.
இரண்டாவது அணியான (இப்போது தனித்து விடப்பட்டுள்ள) இலங்கைத் தமிழரசுக் கட்சியிடம் ‘ஐக்கிய இலங்கைக்குள் தமிழர்கள் கௌரவமாகவும் சமத்துவமாகவும் வாழக்கூடிய (சமஷ்டி) அரசியல் தீர்வு’ என்னும் வாய்ப்பாட்டைத் தவிர அதனை அடைவதற்கான எந்த வழி வரைபடமும் இல்லை. இக் கட்சி தோற்றம் பெற்ற 1949 இலிருந்து கடந்த சுமார் 75 வருட காலத்தில் இக் கட்சி உருப்படியாக சாதித்தது எதுவுமில்லை. இக் கட்சியின் அரசியல் செல்நெறி வெறுமனே ‘ஏட்டுச் சுரக்காய்’ தான். தமிழ் மக்களைப் பொறுத்தவரை காலாவதியாகிப்போன கட்சி இது. இந்தியாவுடனான தமிழரசுக் கட்சியின் உறவும் இறுக்கமானதாக இல்லை.
மூன்றாவது அணியான, ‘புளொட்’- ‘ரெலோ’- ‘ஈ பி ஆர் எல் எஃப்’ – தமிழ்த் தேசியக் கட்சி மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகிய ஐந்து கட்சிகளும் ‘ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி’ எனும் பெயரில் இணைந்துள்ள ‘குத்துவிளக்கு அணி’ யானது புதியதாகவும் பொலிவானதாகவும் தோற்றம் காட்டினாலும், தமிழரசுக் கட்சிக்கும் இந்த அணிக்கும் இடையில் பெரிய வித்தியாசம் இல்லை. உள்ளீட்டைப் பொறுத்த வரை தமிழரசுக் கட்சி ‘மோதகம்’ எனின் ‘குத்து விளக்கு’ அணி ‘கொழுக்கட்டை’ ஆகும். ஒப்பீட்டளவில், இதில் இணைந்துள்ள கட்சிகள் யாவும் முன்பு ஆயுதக் குழுக்களாக இருந்து ஜனநாயக நீரோட்டத்தில் கலந்தவை என்பதால், மிதவாதக் கட்சியான தமிழரசுக் கட்சியை விடவும் தீவிரமாகவும் துணிச்சலாகவும் தோற்றம் காட்டுவன. ஆனாலும் இவர்களிடமும் தெளிவான திட்டம் எதுவும் இல்லை.
அன்றியும் தமிழரசுக் கட்சியைப் போலவே இக் ‘குத்துவிளக்கு’ அணியினரும் இந்தியாவுடன் ஓடும் புளியம்பழமும் போல ‘வழுவழுத்த’ உறவையே கொண்டிருப்பவர்கள். அவ்வப்போது இந்தியப் பிரதமருக்குக் கடிதம் எழுதுவதன் மூலமும் இலங்கையில் உள்ள இந்தியத் தூதரைச் சந்திப்பதன் மூலமும் இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்திய இராஜதந்திரிகளுடனான சந்திப்புக்களை மேற்கொள்ளுவதன் மூலமும் இந்தியாவுக்கு வாலைக்காட்டியும் மற்ற நேரங்களில் புலம்பெயர் தேசங்களில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் முகவர் அமைப்புகளுக்குத் தலையைக் காட்டியும் ஒரு ‘விலாங்குமீன்’ அரசியலை நடத்திக் கொண்டிருப்பவர்கள். தமிழரசுக் கட்சியையும் மற்றும் ‘புளொட்’ – ‘ரெலோ’ கட்சிகளையும் இவர்களை மக்கள் தேர்தலிலே தெரிவு செய்துள்ளார்கள் என்பதால் ஒப்புக்காக இந்தியா இவர்களைத் தடவி விட்டுக் கொள்கிறதே தவிர இந்தியா இவர்களை (தமிழரசுக் கட்சியையும் குத்து விளக்கு அணியையும்) நம்பவில்லை. இந்தியாவின் நிலைப்பாடு சரியா? பிழையா? என்கின்ற வாதப்பிரதிவாதங்களுக்கப்பால் இந்தியா இவர்களைப் புலிகளின் முகவர்களாகவே பார்க்கிறது என்பதே உண்மை. தங்கள் மீதான இந்தியாவின் நம்பகத்தன்மையை இவர்களால் இனிமேல் கட்டியெழுப்பவும் முடியாது. இவர்களது கடந்தகாலச் சந்தர்ப்பவாத அரசியல் அதனைச் சாத்தியமற்றதாக்கிவிட்டது.
மேற்கூறப்பெற்ற பகுப்பாய்வுகளின் அடிப்படையில் பின்வரும் அனுமானத்திற்கு நாம் வரலாம்.
வடக்கு கிழக்கில் இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் மக்களும் அவர்களால் இன்றுவரை தேர்தல்களினூடாக அங்கீகாரம் பெற்றுள்ள ‘தமிழ்த் தேசியக் கட்சி’ களும் உள்நாட்டில் எவ்வளவு கூத்தடித்தாலும் சரி அதற்கு அப்பால் புலம்பெயர் தேசங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் புலிகளின் அமைப்புகள் எவ்வளவு கூத்தடித்தாலும் சரி இலங்கை அரசாங்கங்களைப் பொறுத்தவரை அது எந்தக் கட்சி அரசாங்கமாகவிருந்தாலும் சரி இனப் பிரச்சினைத் தீர்வு விடயத்தில் இந்தியாவின் முறையான தலையீடும் அழுத்தமும் இல்லாமல் ஒரு அங்குலம்கூட முன்னோக்கி நகரப் போவதில்லை. இது முதலாவது அரசியல் யதார்த்தம்.
இனப் பிரச்சனைக்கான நிரந்தர அரசியல் தீர்வாக ‘தமிழ்த் தேசியக் கட்சி’ கள் ‘இரு தேசம்; ஒரு நாடு’ என்றும்-ஐக்கிய இலங்கைக்குள் ‘சமஷ்டி’ என்றும் எதனை முன்வைத்துக் குரல் எழுப்பினாலும்கூட கையில் தற்போதுள்ள 13 ஆவது திருத்தத்தின் முழுமையான, முறையான அமுலாக்களுக்கு மேல் எதனையும் இப்போதைய களநிலையில் இந்தியா முன்னெடுக்கமாட்டாது. இது இரண்டாவது அரசியல் யதார்த்தம்.
இந்தியா, ஆட்சி அதிகாரத்தில் எந்தக் கட்சி இருந்தாலும் புலிகளையோ அல்லது புலிகளின் முகவர்களையோ உளப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப் போவதுமில்லை. நம்பப் போவதுமில்லை. ஆனால், வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் தெரிந்தோ தெரியாமலோ தேர்தலில் புலிகளின் முகவர்களாகச் செயற்படுகின்ற ‘தமிழ்த் தேசியக் கட்சி’ களையே பெரும்பான்மையாகத் தெரிவு செய்கிறார்கள். இந்த நிலைமை தொடரும்வரை இந்தியா இனப்பிரச்சினை விவகாரத்தில் பெரிதாகத் தலையீடு செய்யமாட்டாது. இது மூன்றாவது அரசியல் யதார்த்தம்.
மேற்கூறப்பெற்ற அரசியல் யதார்த்தங்களின் அடிப்படையில் அறிவு பூர்வமாகச் சிந்திக்கும்போது 13 ஆவது திருத்தத்தையே ஒரு பற்றுக் கோடாகப் பிடித்துக் கொண்டு அதனை முறையாகவும் முழுமையாகவும் அமுல் செய்வதற்கு உளப்பூர்வமாகவும் ஈடுபாட்டுடனும் உழைக்கக்கூடிய, அதேவேளை இந்தியா நம்பிக்கை வைத்துச் செயற்படக் கூடியதுமான ஓர் இந்திய ஆதரவு அரசியல் கூட்டணியையே வடக்கு கிழக்கில் வலுவாகக் கட்டமைக்க வேண்டும். இதனைச் சாத்தியப்படுத்த இந்தியாவின் நம்பிக்கையை இழந்து போயுள்ள ‘தமிழ்த் தேசியக் கட்சி’ களால் முடியாது. இதனைச் செய்யக்கூடிய உளப்பூர்வமான ஈடுபாடும்-தார்மீகப் பொறுப்பும்- செயற்பாட்டுத் திறனும்- அறிவார்ந்த அரசியல் அணுகுமுறைகளும் நான்காவது அணியான அதிகாரப் பகிர்வுக்கான இயக்கத்திடம் மட்டுமே உள்ளது. அதிகாரப் பகிர்வுக்கான இயக்கத்தின் மீது இந்தியாவும் ஒப்பீட்டளவில் ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளின் மீதானதைவிட நம்பிக்கை வைத்துள்ளது. ஆனால், இந்த அதிகாரப் பகிர்வு இயக்கத்திற்கு மக்களுடைய அரசியல் அங்கீகாரம் இல்லை அல்லது போதாது. இது மட்டுமே இந்த அணியின் பலவீனமும் குறைபாடும் ஆகும். அந்த அங்கீகாரம் தேர்தல்களினூடாகவே ஜனநாயக ரீதியாக வெளிப்படவும்-வழங்கப்படவும் முடியும்.
எனவே, எதிர்காலத்தில் வடக்கு கிழக்கில் நடைபெறப் போகின்ற எல்லாத் தேர்தல்களிலும் அது உள்ளூராட்சி அதிகார சபைத் தேர்தலாயிருந்தாலென்ன – மாகாணசபைத் தேர்தலாயிருந்தாலென்ன – பாராளுமன்றத் தேர்தலாயிருந்தாலென்ன அதிகாரப் பகிர்வுக்கான இயக்கத்திற்கு மட்டுமே வடக்கு கிழக்கு தமிழர்கள் தமது அரசியல் அங்கீகாரத்தை வழங்குவதன் மூலம் அதனைப் பலப்படுத்த முடியும். இதனூடாகவே வடக்கு கிழக்கில் இந்தியா நம்பிக்கை வைக்கக்கூடிய ஒரு மாற்று அரசியல் கூட்டணியைக் கட்டமைக்க முடியும். இதுவே இன்றைய அரசியல் யதார்த்தம்.