(‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர்)
— தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் —
இலங்கையில் தமிழர்களுடைய அரசியல் பொதுவெளியில் தமிழ்த் தேசிய அரசியலின் நிகழ்கால நிலைமையினைக் கவனத்தில் கொள்ளும்போது-பகுப்பாய்வு செய்யும் போது, இந்நாட்டில் ஒடுக்குமுறைக்குள்ளாகியுள்ள சமூகங்களிலொன்றான ஈழத் தமிழினம் (வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழர்கள்) ஒற்றுமைப்பட்டு ஓரணியில் நிற்பதற்குப் பதிலாக நான்கு அணிகளாகச் சிதைவடைந்துள்ளது.
முதலாவது அணி:
இலங்கையில் முதன்முதல் தமிழ் அடையாளத்துடன் 1944 இல் ஜி ஜி பொன்னம்பலம் தலைமையில் உருவான அரசியல் கட்சியான அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் ‘சைக்கிள்’ சின்னத்துடன் ஜி ஜி பொன்னம்பலத்தின் பேரன் (குமார் பொன்னம்பலத்தின் மகன்) கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தைத் தலைவராகக் கொண்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்ற பெயர்ப் பலகையுடன் இயங்குகின்ற அணி.
இந்த அணி ‘இரு தேசம் ஒரு நாடு’ என்பதைக் கோஷமாக வைத்துக்கொண்டும்-இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த பிரதேசம் சுயாட்சி அலகாக அமையக்கூடிய ‘சமஸ்டி’ க் கட்டமைப்பை உதட்டளவில் உரத்துக் கூறிக் கொண்டும் தற்போதுள்ள ஒற்றையாட்சி அரசியலமைப்பை முற்றாக நிராகரிக்கிறது. மட்டுமல்லாமல் இந்தியாவையும் இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் விளைவான 13 ஆவது திருத்தத்தையும் பகிரங்கமாக எதிர்க்கிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரே வாரிசு தாமே என்றும் ஏனைய தமிழ் அரசியல் கட்சிகள் எல்லாம் துரோகிகளென்றும் கருதும் அணி. கட்சியின் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களைக் (கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன்) கொண்டது.
இரண்டாவது அணி:
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தலைவர் ஜி ஜி பொன்னம்பலத்துடன் ஏற்பட்ட அரசியல் முரண்பாடு காரணமாக அக்கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டு அல்லது வெளியேறி வந்து 1949 இல் எஸ் ஜே வி செல்வநாயகம் (தந்தை செல்வா) உருவாக்கிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இன்றைய தலைமுறை அணி. தற்போது மாவை சேனாதிராசா அதன் தலைவர். 1972/76 இல் உருவான தமிழர் விடுதலைக் கூட்டணியிலும் பின் 2001 இல் தமிழீழ விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலும் தலைமைக் (பிரதான) கட்சியாகவிருந்து 2009 முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தம் வரைக்கும் ‘உஸார்’ஆக ஓடித்திரிந்து யுத்த முடிவுக்குப் பின்னர் தன்னுடன் இணைக்கப்பட்டிருந்த பெட்டிகளை (கட்சிகளை) ஒவ்வொன்றாகக் கழற்றி அல்லது கழறவைத்துத் தற்போது தனியாக (‘எஞ்சின்’ மட்டும்) ஓடிக்கொண்டிருக்கும் அணி.
‘சமஷ்டி’ தான் தமது இறுதி இலக்கு என்று எப்போதும் கூறிக்கொண்டு அதனைச் சர்வதேசம் பெற்றுத்தரும் என்று மக்களுக்குத் தீபாவளிக்கும் பொங்கலுக்குமென அறிக்கைகள் விட்டுக்கொண்டு அதற்கு மேல் எதுவும் செய்ய இயலாத அணி. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பிலுள்ள 10 பாராளுமன்ற உறுப்பினர்களில் 06 பேரைத் தமிழரசுக் கட்சிக்காரர்களாக (இரா. சம்பந்தன், எம்.ஏ. சுமந்திரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், சிறிதரன், கலையரசன், சாணக்கியன்) வைத்துக் கொண்டிருப்பது. மாவை சேனாதிராசாவைப் பொம்மைத் தலைவராகவும் இரா. சம்பந்தனைப் பெருந் தலைவராகவும் சுமந்திரனைக் கட்சியின் பேச்சாளராகவும் வைத்திருப்பது. தமிழரசுக் கட்சியின் அடுத்த தேசிய மாநாடு நடைபெறும் போது (எப்போது நடைபெறுமோ தெரியாது) தலைவர் பதவிக்குச் சிறிதரனும் சுமந்திரனும் சி. வி. கே. சிவஞானமும் குறிவைத்து உள்ளே குத்துவெட்டுப்பட்டுக்கொண்டிருக்கும் அணி. குற்றுயிராய்க் கிடந்தாலும் பழக்க தோஷத்தில் ‘ஒற்றுமை'(?) மை ஓதிக் கொண்டிருப்பது-முனகிக் கொண்டிருப்பது. தனித்துப் போன அல்லது தனித்துத் தள்ளிவிடப்பட்ட பின்பும் தாம்தான் ‘ஒரிஜினல்’ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பென்று உரிமை கோரிக்கொண்டிருப்பது. ஒப்பீட்டளவில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையான தமிழ் உறுப்பினர்களைக் (06) கொண்டிருக்கும் தனியான தமிழ்க் கட்சி.
மூன்றாவது அணி:
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் (தமிழரசுக் கட்சியுடன்) அரசியல் ‘விவாகரத்து’ ப் பெற்றுக்கொண்டு தேர்தல்கள் திணைக்களப் பதிவேட்டில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியொன்றாக இருந்துவந்த ‘குத்துவிளக்கு’ ச்சின்னத்தையுடைய ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி என்னும் அரசியல் கட்சியைத் தேவைகருதித் தூசி தட்டிப் பூசி மினுக்கி முன்னாள் ஈபிஆர்எல்எஃப் (இந்நாள் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி) ஐயும், ‘புளொட்’ டையும், ‘ரெலோ’ வையும், ‘ரெலோ’ விடமிருந்து பிரிந்து வந்த தமிழ்த் தேசியக் கட்சியையும் (தேர்தல்கள் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்படாதது) மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சியையும் (இதுவும் தேர்தல் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்படவில்லை) இணைத்துத் தீபமேற்றித் தாம்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்று கூறும் இந்த ஐந்து கட்சிகளும் இணைந்த ‘ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி’ (‘குத்து விளக்கு’ அணி)
இந்த அணியும் ‘சமஸ்டி’யைதான் கோரி நிற்கிறது. ஆனால், தோற்றம் பெற்று அண்மைக்காலமாக ஒப்பீட்டளவில் தமிழரசுக் கட்சியைக் காட்டிலும் சற்று அதிகமாக 13 ஆவது திருத்தத்தைப் பற்றி அடிக்கடி நினைவூட்டுகிற அணி. ‘புளொட்’ சார்பில் ஒரு உறுப்பினரையும் (தர்மலிங்கம் சித்தார்த்தன்) ‘ரெலோ’சார்பில் மூன்று உறுப்பினர்களையும் (‘ரெலோ’ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், குருசாமி சுரேந்திரன், கோவிந்தம் கருணாகரன்- ஜனா) ஆக மொத்தம் 04 உறுப்பினர்களைப் பாராளுமன்றத்தில் கொண்டிருக்கின்ற அணி. ஏனைய பங்காளிக் கட்சிகளான ஈ பி ஆர் எல் எஃப் சார்பிலும் தமிழ்த் தேசியக் கட்சி சார்பிலும் ஜனநாயகப் போராளிகள் கட்சி சார்பிலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இல்லை.
இந்த அணியானது முன்பு ஆயுதக் குழுக்களாக இருந்து பின் ஜனநாயக வழிக்கு-தேர்தல் அரசியலுக்கு வந்த பின்னணியைக் கொண்ட கட்சிகளின் இணைவு ஆகும்.
28.09.2023 அன்று யாழ்ப்பாணத்தில் ஈ பி ஆர் எல் எஃப் சுரேஷ் பிரேமச்சந்திரனின் இல்லத்தில் கூடிய இவ் ஐந்து கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், பாராளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி) என்றில்லாமல் தனிக்குழுவாக இயங்க முடிவெடுத்துள்ளது.
தமிழரசுக் கட்சியினர் கூறிவருவதைப் போல இந்த இரண்டாவது அணியும் (வீடு) மூன்றாவது அணியும் (குத்துவிளக்கு) இணைந்து ஓரணியாவதற்கு இனிமேல் தமிழர்களுடைய அரசியல் பொதுவெளியில் வாய்ப்பே இல்லையென்றாகிவிட்டது. இந்த பிளவுக்கான முழுப் பொறுப்பும் 2001 இலிருந்து இன்று வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தேர்தல் திணைக்களத்தில் வேண்டுமென்றே பதிவு செய்யாமல் வைத்துக்கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தன்னிச்சையாக ‘தர்பார்’ நடத்திய தமிழரசுக் கட்சியின் மீதானதே.
நான்காவது அணி:
தமிழர்களுடைய அரசியல் பொதுவெளியில் இது ஒரு ‘புதிய’ அணி. அது எதுவெனில், கலாநிதி காசிலிங்கம் விக்னேஸ்வரனைத் தலைவராக் கொண்ட அகில இலங்கை தமிழர் மகாசபையின் ஏற்பாட்டில் அகில இலங்கை தமிழர் மகாசபையும், ஆனந்த சங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியும், சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியும், திருநாவுக்கரசு ஸ்ரீதரன் தலைமையிலான தமிழர் சமூக ஜனநாயக கட்சியும், முருகேசு சந்திரகுமார் தலைமையிலான சமத்துவக் கட்சியும் இணைந்து டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஆதரவுடன் 09.04.2021 அன்று உருவாக்கிய ‘அதிகாரப் பகிர்வுக்கான இயக்கம்’ (MOVEMENT FOR DEVOLUTION OF POWER) ஆகும். இதன் ஒருங்கிணைப்பாளராகவும் நெம்புகோலாகவும் அகில இலங்கை தமிழர் மகா சபையின் தலைவர் கலாநிதி கா. விக்னேஸ்வரன் அவர்களே செயற்பட்டு வருகின்றார்.
பின்னர், 08.05.2023 இலிருந்து மேலதிகமாகப் பாராளுமன்ற உறுப்பினர் சி வி விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியையும் இராஜநாதன் பிரபாகரன் தலைமையிலான ஈழவர் ஜனநாயக முன்னணியையும் ( முன்னாள் ஈரோஸ்) சேர்த்துக்கொண்டு ‘அதிகாரப் பகிர்வுக்கான இயக்கம்’ ஊடாக 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கான ஒரு வழி வரைபட அறிக்கையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்து அதன் காரிய சித்திக்காகப் பகீரதப்பிரயத்தனத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.
இந்த ‘அதிகாரப் பகிர்வுக்கான இயக்கம்’ மேற்கூறப்பெற்ற (நான்காவது அணி) எட்டுக் கட்சிகளை உள்ளடக்கி இருந்தாலும் கூட நடைமுறையில் பின்வருமாறுதான் தொழிற்பட்டுக்கொண்டிருக்கிறது
* தமிழர் விடுதலைக் கூட்டணி (வீ. ஆனந்த சங்கரி)-தார்மீக ஆதரவு மட்டுமே.
* தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி (பிள்ளையான்)-தார்மீக ஆதரவு மட்டுமே.
* தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி (திருநாவுக்கரசு ஸ்ரீதரன்)-செயற்பாடுகளில் சிறிதளவு பங்கேற்பு.
* சமத்துவக் கட்சி (முருகேசு சந்திரகுமார்)-செயற்பாடுகளில் சிறிதளவு பங்கேற்பு.
* ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (டக்ளஸ் தேவானந்தா)-அரசாங்க மட்டத்தில் ஆதரவு மட்டுமே.
* ஈழவர் ஜனநாயக முன்னணி (ராஜநாதன் பிரபாகரன்)-தார்மீக ஆதரவு மட்டுமே.
அதிகாரப் பகிர்வு இயக்கத்தின் நெம்புகோலாக அகில இலங்கை தமிழர் மகாசபைதான் (கலாநிதி கா. விக்னேஸ்வரன்) செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. அதற்கு உறுதுணையாக-உந்துவிசையாகத் தமிழ் மக்கள் கூட்டணி (சி.வி. விக்னேஸ்வரன்) ஒத்துழைக்கிறது. ஆனாலும், வடக்கு கிழக்குத் தமிழர்களின் ஒட்டுமொத்தமான அங்கீகாரம் என்ற அளவுகோலை வைத்துப் பார்க்கும் போது அரசியல் பிரதிநிதித்துவ வலு பலவீனமான அணி. இந்த அணியின் நெம்புகோலாக இயங்கும் அகில இலங்கை தமிழர் மகாசபைக்குப் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவமேயில்லை.
எது எப்படி இருப்பினும் மேற்கூறப்பெற்ற கட்சிகளில் ‘தமிழ்த் தேசியக் கட்சிகள்’ எனத் தமக்குத்தாமே முத்திரை குத்திக்கொண்டு (தமிழ் ஊடகங்களும் இவ்வாறுதான் குறி சுட்டு வைத்துள்ளன) செயற்படும் கட்சிகள் ‘போலி’த் தமிழ்த் தேசியம் பேசும் வினைத்திறனற்ற கட்சிகளே. இக்கட்சிகளால் தமிழ் மக்களுக்குப் பின்னடைவுகளைத் தவிர வேறு ஒன்றும் ஆகப்போவதில்லை.
இந்தப் பின்புலத்தில் வடக்கு கிழக்குத் தமிழர்கள் எதிர்காலத்தில் மேற்கூறப்பெற்ற நான்கு அணிகளில் எதனை ஆதரிக்க வேண்டுமென்ற கேள்வி எழுகிறது. இக் கேள்விக்கான பதிலை அடுத்த வாரப் பத்தியிலே பகுப்பாய்வு செய்யலாம்.