“கனகர் கிராமம்” ‘அரங்கம்’ தொடர் நாவல்​​​​​​அங்கம் – 05

“கனகர் கிராமம்” ‘அரங்கம்’ தொடர் நாவல்​​​​​​அங்கம் – 05

அரசியல் – சமூக – வரலாற்று நாவல்

          — செங்கதிரோன் —

கோகுலனுக்கு மூன்று அக்காமார்கள். கோகுலன் குடும்பத்தில் நான்காவது பிள்ளை. முதல் ஆண்பிள்ளை. தம்பியொன்றுண்டு. தம்பிதான் குடும்பத்தில் கடைக்குட்டி. கோகுலனுக்கு நான்கு வருடங்கள் பிந்திப் பிறந்தவன். கோகுலன் ஆரம்பக்கல்வி படித்து ஐந்தாம் ஆண்டுப் புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த அதே பொத்துவில் மெதடிஸ்த மிசன் பாடசாலையில் தான் அவனும் அரிவரியிலிருந்து ஆரம்பக்கல்வியைத் தொடங்கியவன், ஆறாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தான்.

ஒரு நீளமான வளவை அகலப்பாட்டில் மூன்று சமதுண்டுகளாகப் பிரித்து மூன்று வளவுகளிலும் கட்டுப்பட்டிருந்த இரண்டறையும் மண்டமும் என்று கிராமப் புறங்களிலே காணப்படும் மாதிரி வீடுகளில் கோகுலனது அக்காமார்கள் மூவரும் அடுத்தடுத்துத் தத்தம் குடும்பத்துடன் குடியிருந்தார்கள். கோகுலனின் தாயாருடன் கோகுலனும் அவனது தம்பியும் “இளையக்கா” என்று அழைக்கப்பெறும் மூன்றாவது அக்காவின் குடும்பத்துடன்தான் கூட்டுக்குடும்பமாக ஒட்டிக்கொண்டார்கள். இக்கூட்டுக்குடும்பம் கோகுலனின் இளையக்கா, அவரின் கணவர், தாயார், கோகுலன், தம்பி யோகன் என ஐந்து பேர் கொண்டது.

கோகுலன் நள்ளிரவில் பொத்துவிலில் வந்திறங்கியது அவனது தாயாருக்கு மட்டுமே தெரியும். நள்ளிரவு நேரம் மற்ற அனைவருமே ஆழ்ந்த உறக்கத்திலிருந்ததே காரணம். மறுநாள் விடிந்தபோதுதான் கோகுலனைக் கண்டுவிட்டு தம்பி வந்திருக்கிறான் என்ற மகிழ்ச்சியில் கோகுலனிடம் வந்து அக்காமார்கள் மூவரும் நலம் விசாரித்துக் கொண்டார்கள். தம்பி யோகன் கோகுலனைக் கண்ட மாத்திரத்தில் அவனோடு வந்து “சுவிங்கம்” போல் ஒட்டிக்கொண்டான்.

கோயிலிலே ஒருவர் கதாப்பிரசங்கம் செய்யச் சுற்றிவரப் பக்தர்கள் இருந்து அதனைக் காதுகொடுத்துக் கேட்பதுபோல, கோகுலன் தான்வரும்போது அறுபதாம் கட்டையில் பஸ்சை யானைமறித்த கதை – பஸ்சால இறங்கி இரவுநேரம் நடந்து வரும்போது தனக்குப் பின்னால் வந்த மர்ம மனிதரின் கதை எல்லாவற்றையும் சுவையாகவும், சுவாரஸ்யமாகவும் எடுத்துச் சொல்ல அக்காமார்களும் அவனது தம்பியும் நல்ல அவதானத்துடன் செவிமடுத்தார்கள். ஆனாலும் “பெரியக்கா” என அழைக்கப்பெறும் முதலாவது அக்கா – மூத்தஅக்கா இடையிலே காரைதீவில் இறங்கி மறுநாள் வராமல் நேரே பொத்துவிலுக்கு நள்ளிரவில் தனியே வந்து இறங்கியதற்காகக் கோகுலனைக் கடிந்து கொண்டாள். மற்ற இரு அக்காமார்களும் அதற்குப் பக்கவாத்தியம் வாசித்தார்கள்.

தனது பிள்ளைகளின் சம்பாஷணையைக் காதில் வாங்கிக்கொண்டே குசினி வேலைகளில் கவனத்தைச் செலுத்தியிருந்த கனகம் வெளியே வந்து முற்றத்தில் கூடியிருந்த தனது பிள்ளைகளில் கோகுலனுக்கு முந்திய மூத்த பெண்பிள்ளைகள் மூவரையும் பார்த்து “பார்த்தியளா பிள்ளைகாள்! தம்பிக்கு எத்தினதரம் சொல்லிருப்பன் நேரம் பிந்தினா காரதீவில இறங்கி அடுத்தநாள் வரச்சொல்லி. கேக்காம நடுராத்திரியில வந்து இறங்கியிருக்கான். காரதீவால வரக்கொள்ள கண்ணகியம்மன் கோயிலத் தாண்டக்குள்ள கண்ணகத்தாய நினைச்சிக் கும்பிடனும் என்று கனதரம் சொல்லியிருக்கன். காரதீவால வரக்கொள்ள பஸ்சுக்குள்ள நல்ல நித்திரயாம். அதனால கும்பிட ஏலாமப்போய்த்தாம் எண்டுறான். சங்கமன்கண்டியிலயும் இறங்கிப் பிள்ளையாரயும் கும்பிடாம வந்திருக்கான். அதுதான் அறுபதாம் கட்டயில ஆன மறிச்சிருக்கு” என்றாள்.

“என்னம்மா! சொல்றீங்க. யானை என்ன மட்டுமா மறிச்ச. பஸ்சுக்குள்ள இருந்த ‘றைவர்’ ‘கொண்டக்ரர்’ மற்ற ஆக்கள் எல்லாரையும் சேத்துத்தானே மறிச்ச. அதுக்குள்ள சங்கமன்கண்டியில இறங்கிப் பிள்ளையாரக் கும்பிட்ட ஆக்களும் இருந்தவங்கதானே” என்று சொல்லிச் சிரித்தான். அக்காமார்கள் மூவரும் அவனுடன் சேர்ந்து விழுந்துவிழுந்து சிரித்தார்கள். தம்பி யோகன் இக்கதைகளை அரைகுறையாக விளங்கிக்கொண்டு எல்லோரும் சிரிக்க அவனும் சேர்ந்து சிரித்தான். கனகம் எல்லோரையும் நோக்கி, “உங்க எல்லாருக்கும் நான் சொன்னது பகிடியாக் கிடக்கு” என்று கூறி முகத்தை ஒருவெட்டு வெட்டினாள்.

இந்த அமளிக்கிடையில், காலையில் பொத்துவில் ‘ரவுண்’ பக்கம் சாமான்கள் வாங்குவதற்காகச் சைக்கிளிலே போய்விட்டு அப்போதுதான் வந்திறங்கிய கோகுலனின் இளையக்காவின் கணவர் வந்து “அறுபதாம்கட்டச் சேனைக்குப் போறெண்டா சுணங்காம வெளிக்கிடுங்க. ‘பஸ் ஸ்ராண்டில’ அக்கரப்பத்து பஸ் கிடக்கு. கொஞ்ச நேரத்தால வெளிக்கிடப் போகுது” என்றார்.

அதனைக் கேட்ட அக்காமார்கள் மூவரும் கலைந்து அவரவர் வீட்டு வேலைகளைக் கவனிக்கச் செல்லக் கோகுலனும், தாயாரும், தம்பியோகனும் அவசரம் அவசரமாகக் குளித்துக் காலை உணவையும் முடித்துக் கொண்டு தேவையான சாமான்களைப் பைகளிலே இட்டுக் கைகளில் காவிக்கொண்டு பொத்துவில் பஸ் நிலையத்தை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்தார்கள்.

அக்கரைப்பற்று “பஸ்” ஸில் ஏறி அறுபதாம்கட்டையில் வந்திறங்கிய கோகுலனும் தாயாரும் தம்பியும் பிரதான வீதியை ஓட்டினாற்போல் இருந்த சேனையின் கடப்புக்கு மேலால் கால்களை எட்டிவைத்துக் கடந்து உள்நுழைந்து சேனைகளுக்குள்ளால் சாரைப்பாம்புபோல நீண்டும் வளைந்து வளைந்தும் செல்லும் ஒற்றையடிப்பாதையிலே நடந்து பிரதான வீதியிலிருந்து சிறிது தொலைவிலிருந்த தமது சேனைக்கு வந்து சேர்ந்தார்கள். பொத்துவிலிருந்து அக்கரைப்பற்றுக்குச் செல்லும் பிரதான வீதியின் வலது புறத்தில் கடற்கரைப் பிரதேசத்தை நோக்கியதாய் அமைந்திருந்தது கோகுலனின் தாயாரின் சேனை. கடற்கரை அவ்விடத்திலிருந்து ஒரு கட்டைத் (மைல்) தூரமிருக்கும்.

சேனைப்பயிர்ச்செய்கைப் பிரதேசம் பச்சைக்கம்பளம் விரித்தாற்போல பரந்தும் விரிந்தும் பசுமையாகக்கிடந்தது. சேனையைச் சுற்றிவர அடர்த்தியான கொத்துவேலிமுள்வேலி போடப்பட்டிருந்தது. உள்நுழைவதற்கு ஓரிடத்தில் கடப்பு விடப்பட்டிருந்தது.

கொத்துவேலியின் மேல் பால்பீர்க்கங் கொடிகளும் காட்டில் தானாகவே முளைத்த மிரிபாகற்கொடிகளும் ஆங்காங்கே பூக்களுடனும் பிஞ்சுகளுடனும் முற்றிய காய்களுடனும் படர்ந்து கிடந்தன. பச்சைநிறப்பருத்திச் சோலையில் மஞ்சள் நிறப் பூ ‘டிசைன்’களைப் பதித்ததுபோல் அவற்றின் மஞ்சள் நிறப்பூக்கள் கண்ணைக் கவர்ந்தன. உருண்டையான மிரிபாகற்காய்கள் கொடியிலிருந்து காதில் கவசகுண்டலங்கள்போலத் தொங்கிக் கொண்டிருந்தன.

சேனையைச் சுற்றிக் கொத்துவேலியால் எல்லையிடப் பெற்றிருந்த உட்புறமாகப் போர்வீரர்கள் வரிசையாக நின்று காவல் புரிவதைப்போல சோளம் செடிகள் ஆளுயர வளர்ந்திருந்தன. சோளம் செடிகள் உச்சியிலே பாளை விரித்ததுபோலப் பூத்தும் பழுப்புநிற மீசையுடன் கணுக்களிலே குலைகள் தள்ளியும் கம்பீரமாக நின்றிருந்தன.

“கச்சான் இரண்டரமாதப் பயிராப் போய்த்து மனே!, பூக்கத் தொடங்கிட்டு. இனிக் கிழங்கு இறங்கும்” என்று கோகுலனின் தாயார் அவனிடம் கூறிவைத்தாள். நிலம் தெரியாமல் படர்ந்திருந்த கச்சான் செடிகளில் ஆங்காங்கே வானத்து நட்சத்திரங்கள்போல மஞ்சள்நிறப் பூக்கள் தலைகாட்டின.

சேனைப்பூமியில் புற்றுகள் இருந்த இடங்களில் அவை கொத்திக் கலைக்கப்பட்டுத் தரைமைட்டமாக்கப்பட்டுப் புற்றுமண் பரவிய இடங்களில் வெண்டி, கத்தரி, கொத்துஅவரை மற்றும் மிளகாய்ச் செடிகள் பூவும் பிஞ்சுமாய்க் காட்சியளித்தன. சில இடங்களில் பூசணி, வத்தக, வெள்ளரி மற்றும் கக்கரிக் கொடிகளும் நிலத்திலே படர்ந்து இருந்தன. அவற்றின் கொடிகளிலே இலைகளுக்குள்ளே ஒளிந்து கொண்டு தரையில் சாய்ந்து படுத்துக்கொண்டிருக்கும் தாய்நாயின் மடியிலிருந்து குட்டிகள் பால் குடிப்பதுபோல நீள் உருண்டையான பிஞ்சுக்காய்கள் தரையிலே படுத்துக்கிடந்தன.

சில இடங்களில் மிலாறுகள் நடப்பெற்று அவற்றில் பயற்றம்கொடிகளும், அவரைக் கொடிகளும் படர்ந்திருந்தன. பயற்றங்கொடிகளிலிருந்து மெல்லிய பச்சோலைப் பாம்புகள் போன்ற நீளமான காய்கள் நிலத்தை நோக்கித் தொங்கிக் கொண்டிருந்தன. அவரைக் கொடிகளில் ஊதாநிறப்பூக்களிடையே கொத்துக்கொத்தாய் பிறை நிலவு வடிவில் காய்கள் பிடித்திருந்தன.

சேனையின் பள்ளமான ஒரு சிறுபரப்பில் நெல்லும் செழித்துப் பயிராகியிருந்தது. ஒரு ஓரத்தில் சிறிதளவு குரக்கனும் பயிராகிக் கிடந்தது.

சேனையின் நடுவில் ஓலைக்குடிலொன்றும் கட்டப்பட்டிருந்தது. கிடுகுகளால் உட்பக்கம் வேயப்பட்டு அதற்குமேலால் வைக்கோலும் போடப்பட்டிருந்த அதன் கூரையில் நாடம் கொடியொன்று படர்ந்து அதிலும் பூவும் பிஞ்சுகளும் தோன்றியிருந்தன. மென்பச்சைநிறக் குடுவைகள்போல பிஞ்சுக் காய்களும் கதாயுதம்களைக் கிடத்தியதுபோல நீளமான முதிர்ந்த காய்களும் ஆங்காங்கே கூரைமேல் ஒய்யாரமாகக் கிடந்தன.

ஓலைக்குடிலுக்குள் காட்டுக்கம்புகளால் இரண்டடி உயரத்தில் கட்டில் போல் ‘தட்டி’ கட்டியிருந்தது. அதுதான் படுக்கை என்றும் கோகுலனுடைய தாயார் சொல்லி வைத்தாள். அருகில் மடித்துப் பயன்படுத்தக்கூடிய சாக்குக்கட்டில் ஒன்றும் மேலதிகமாக வைக்கப்பட்டிருந்தது. குடிலின் வாசல் இல்லாத நெற்றிமுட்டுப் பக்கத்தில் பாய் அடுக்கி வைக்கும் ‘அசவு’ம் ‘திருநீற்றுக் குடுக்கை’யும் தொங்கின.  

குடிலுக்கு வெளியே முற்றத்தின் ஓரமாகக் களிமண்ணினால் சதுரவடிவில் இரண்டடி உயரத்தில் கட்டப்பட்டு அதன் மேற்பரப்பில் மூன்று செங்கற்கள் நடப்பட்ட அடுப்பும் இருந்தது. அதுதான் குசினி என்றாள் கோகுலனுடைய தாயார். அதற்குமேல் மழைநீர் விழாமல் சிறு ஓலைக்கூரையும் போடப்பட்டிருந்தது.

ஓலைக்குடிலின் முன்னால் முற்றத்தில் எரிந்து நூர்ந்த குறைக்கொள்ளிக் கட்டைகளும் சாம்பலுமாய்த் ‘தீனா’ தீய்ந்து போய்க் கிடந்தது. இரவில் ‘தீனா’வில் எரியும் நெருப்பில் குளிர்காயலாம் என்றும் ‘தீனா’ எரிந்து கொண்டிருந்தால் யானை உட்பட ஏனைய மிருகங்களும் கிட்டவராமல் தள்ளிப்போய்விடும் என்றும் அவனுடைய தாயார் விளக்கமளித்தாள். “அப்ப விடியவிடியத் ‘தீனா’ எரியுமா அம்மா?” என்று கோகுலன் கேட்ட கேள்விக்குக் கனகம் “ஓம் மனே!” என்றாள்.

ஓலைக்குடிலின் முற்றத்திலும் ஓரத்தில் இறுங்குச் சோளக்கன்றுகள் ஒட்டகச் சிவிங்கியின் உயரத்திற்கு ஓங்கி வளர்ந்திருந்தன. அவையும் சோளன்செடிகளைப்போல உச்சியில் பாளை விரித்ததுபோலப் பூத்திருந்தன. மிளகாய்க்கன்றுகளும் மரவெள்ளிச் செடிகளும் மேலதிகமாக அங்கே நின்றன.

பலவிதமான பறவையினங்கள் ஒலியெழுப்பிக்கொண்டு சேனைக்குள்ளே உலாவந்தன. பலநிற வண்ணாத்திப் பூச்சிகளும் ஆங்காங்கே பறந்துகொண்டிருந்தன. விமான நிலையத்தில் புறப்பட்டுச்செல்லுகின்றதும் தரையிறங்குவதுமான விமானங்களைப்போல அவ்வப்போது குளவிகளும், தேனீக்களும், பலசாதி வண்டுகளும் குறுக்கும் மறுக்கும் சேனையை ஊடறுத்தன.

இவை ஒவ்வொன்றையும் பார்க்கப்பார்க்க இயல்பாகவே இயற்கை எழிலில் ஈர்ப்புக்கொண்ட கோகுலன் களிபேருவகை கொண்டான். ஆனாலும், தனது தம்பியும் பன்னிரண்டு வயதுச் சிறுவன். மூத்த ஆண் பிள்ளையான தானும் வந்தாறுமூலையில் தூரத்தில். தந்தையுமில்லாமல் ஒரு கைஉதவியுமில்லாமல் தனித்துநின்று தன் தாய்படும் பிரயாசையையும், அவளது உழைப்பையும் குறித்துப் பெருமிதம் அடைந்தபோதும் தந்தையை இழந்த தன்னையும் தன் தம்பியையும் வளர்த்து ஆளாக்குவதற்குத் தனது தாய்படும் பாடெண்ணியபோது தாயின் மீது இரக்கம் ஏற்பட்டதில் அவனது கண்ணிமைகளின் ஓரத்தில் பனித்துளிபோல் கண்ணீர் கசிந்தது. அதனைத் தாயாருக்குக் காட்டாமல் தன்னைச் சுதாகரித்துக் கொண்டான் கோகுலன்.

இரவுக்காவலுக்குப் பொத்துவில் ஊரில் நல்ல வேட்டைக்காரன் எனப் பெயரெடுத்த செல்லத்தம்பியைக் கிழமைச் சம்பளத்திற்கு அமர்த்தியிருப்பதாகவும் அவன் மாலை 6.00 மணிக்கு இராச்சாப்பாடும் கட்டிக்கொண்டுவந்து காவல் புரிந்துவிட்டு மறுநாள் காலை 6.00 மணிக்குப் போய்விடுவதாகவும் இரவில் தேனீர் போட்டுக் குடிப்பதற்குக் குடிலுக்குள்ளே சீனி தேயிலை எல்லாம் வைத்திருப்பதாகவும் கதையோடு கதையாக அவனுடைய தாயார் கூறத்தவறவில்லை.

வளர்ந்து பெரியவனானபின் தானும் தனது தாயாரைப்போலத் தனியாகக் கச்சான் சேனை செய்யவேண்டுமென்ற ஆசையும் கோகுலனுக்கு அப்போது அந்தப்பதினாறு வயதில் உண்டாயிற்று. தம்பி யோகன் அவனோடேயே குட்டிநாய்போல ஒட்டிக்கொண்டு திரிந்தான். ஆண்பிள்ளைகள் இருவரையும் எண்ணிக் கனகம் அகம் பூரித்தாள். அதேவேளை இருவரினதும் எதிர்காலத்தைக் குறித்தும் சிந்தனைவயப்பட்டாள்.

(தொடரும் ……. அங்கம் 06)