கிழக்கின் தனித்துவ அரசியலை  பிரதேசவாதமாகக் கூறுவது யாழ். மையவாதக்கட்சிகளின் சூழ்ச்சி -(வாக்குமூலம்-82) 

கிழக்கின் தனித்துவ அரசியலை  பிரதேசவாதமாகக் கூறுவது யாழ். மையவாதக்கட்சிகளின் சூழ்ச்சி -(வாக்குமூலம்-82) 

— தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் —  

இப் பத்தியிலே கூறப்போகின்ற விடயம் ஏற்கெனவே இப்பத்தித் தொடரில் பிரஸ்தாபிக்கப்பட்ட விடயம்தானெனினும் அதனை மீண்டும் ஒரு முறை அழுத்திக் கூற வேண்டியுள்ளது. அது கிழக்கின் தனித்துவ அரசியல் என்கின்ற விடயமாகும். 

கிழக்கின் தனித்துவ அரசியல் எனும்போது அதனை வடக்கிற்கு எதிரான அல்லது வடகிழக்கு இணைப்புக்கு எதிரான அல்லது வடக்கு கிழக்கு இணைந்த தாயகக் கோட்பாட்டிற்கு முரணான பிரதேச வாதமாகப் பார்க்கின்ற தவறான புரிதலும் பிழையான விளக்கமும் இல்லாமலில்லை. 

இந்தத் தவறான புரிதலையும் விளக்கத்தையும் ‘தமிழ்த் தேசிய’ க் கட்சிகளே வேண்டுமென்று முன்னெடுக்கின்றன. கிழக்கின் தனித்துவ அரசியல் என்பதன் தாற்பரியத்தைத் தெளிவுபடுத்துவதே இப்பத்தியின் பிரதான நோக்கமாகும்.

கிழக்கு மாகாணத் தமிழர்கள் முகம் கொடுக்கும் சமூக பொருளாதார அரசியல் பிரச்சினைகளும் சவால்களும் வடக்கு மாகாணத் தமிழர்கள் எதிர்நோக்கும் சமூக பொருளாதார அரசியல் பிரச்சினைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்ட சில தனித்துவமான பரிமாணங்களைக் கொண்டவை என்பதை முதலில் தெரிந்தும்-தெளிந்தும்கொள்ள வேண்டும். அப்படித் தெரிந்தும்-தெளிந்தும் கொள்ளும்போது சமூக பொருளாதார பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான அரசியற் சமன்பாடு வடக்கு மாகாணத்திற்கும் கிழக்கு மாகாணத்திற்கும் வெவ்வேறானவை என்பதும் இரண்டு மாகாணங்களுக்கும் ஒரு பொதுவான அரசியற் சமன்பாடு பொருந்தாது என்பதும் புரியவரும்.

1949 இல் இலங்கைத் தமிழரசுக் கட்சி தோற்றம் பெற்ற காலத்திலிருந்து பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணிக் காலமென்றும் அதற்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் காலமென்றும் இப்படி எல்லாக் காலத்திலும் ‘தமிழ்த் தேசியம்’ என்ற கருத்தியலின் அடிப்படையில் இக்கட்சிகளையே அவற்றின் சரிபிழைகளுக்கப்பால் இன்றுவரை கிழக்கு மாகாணத் தமிழர்கள் பெரும்பான்மையாக ஆதரித்து வருகிறார்கள்.

இதன் விளைவு, இன்று கிழக்கு மாகாணத் தமிழர்கள் இருந்ததையும் இழந்து நிர்க்கதியாகி நிற்கின்றனர். அம்பாறை மாவட்டத்தில் (முன்னாள் நீதி அமைச்சரும் உள்நாட்டலுவல்கள் அமைச்சருமாயிருந்த அமரர் கே. டபிள்யு. தேவநாயகம் பா.உ. அவர்களால் கால்கோள் இடப்பெற்று முன்னகர்த்திக் கொண்டுவரப்பட்ட) குறைந்தபட்சம் கல்முனை வடக்குத் தமிழ்ப் பிரதேச செயலக விவகாரத்தைக்கூட வென்றுதர இயலாத அரசியல் கையாலாகாத்தனத்தையே வடக்கு மாகாணத்தைத் தளமாகக் கொண்ட இத் ‘தமிழ்த் தேசிய’ க் கட்சிகள் வரலாற்றில் நிரூபித்துள்ளன. இந்தக் கட்டத்திலாவது கிழக்கு மாகாணத் தமிழர்கள் கிழக்கு மாகாணத்திற்கு ஒரு செயற்பாட்டுத் திறன்மிக்க அரசியல் வியூகத்தை -அணுகுமுறையைக் காலம் கடந்தாவது வலுவாகக் கட்டமைக்க வேண்டிய தேவைப்பாடு எழுந்துள்ளது. இதனையே ‘கிழக்கின் தனித்துவ அரசியல்’ என இப் பத்தி அடையாளப்படுத்துகிறது.

ஏற்கெனவே எனது அரசியல் பத்தித் தொடர்களில் குறிப்பிட்டது போல, கிழக்கு மாகாணத் தமிழர்கள் அடிப்படையில் மூன்றுவகைச் சவால்களுக்கு முகம் கொடுத்து வந்துள்ளனர்/வருகின்றனர்.

ஒன்று; வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத் தமிழர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக முகம் கொடுக்கும் பௌத்த சிங்கள பேரினவாத ஒடுக்குமுறை அரசியல் மற்றும் தமிழ் மக்களின் சமூக பொருளாதார இருப்பைப் பாதிக்கும் பாரபட்சமான நடவடிக்கைகள். இவற்றைத் தடுத்து நிறுத்தும் அரசியல் வல்லமை இதுவரையிலும் வடக்கைத் தளமாகக் கொண்ட ‘தமிழ்த் தேசிய’க் கட்சிகளிடம் இல்லை; இனிமேலும் இருக்கப் போவதுமில்லை.

மற்றையது; அரசியல் செல்வாக்கினதும் பொருளாதாரப் பலத்தினதும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் பலவீனத்தினதும் பின்னணியில் முஸ்லிம் அரசியல்வாதிகளின் அனுசரணையுடன் மதவாத இனவாத சக்திகளினால் காலத்திற்குக் காலம் பாரம்பரிய தமிழ்ப் பிரதேசங்களிலும் தமிழ் மக்களிடையேயும் ஏற்படுத்தப்பெற்றுவரும் (மதமாற்றம் உட்பட) இஸ்லாமிய விஸ்தரிப்பு வாதம். ‘தமிழ் பேசும் மக்கள்’ எனும் வார்த்தைப் பிரயோகத்தினால் மட்டும் கிழக்கில் தமிழ்-முஸ்லிம் உறவை ஓதிய வடக்கைத் தளமாகக் கொண்ட தமிழ்த் தேசியக் கட்சிகளால் கிழக்கின் முஸ்லிம் அரசியல்வாதிகளினால் கிழக்குத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட எந்த பாரபட்சமான நடவடிக்கைகளையும் தடுக்க முடியவில்லை; இனிமேலும் முடியாது.

அடுத்த சவால்; கிழக்கு மாகாணத் தமிழர்களின் நலன்களை அறவே நாட்டத்தில் கொள்ளாத வடக்கைத் தளமாகக் கொண்ட தமிழ் அரசியற் கட்சிகளினால் தமிழ்த் தேசிய அரசியல் எனும் பெயரில் அல்லது போர்வையில் முன்னெடுக்கப்பட்ட/ முன்னெடுக்கப்பட்டுவரும் யாழ்மேலாதிக்க மேட்டுக்குடி அரசியல்.

தமிழ்த் தேசிய அரசியல் எனும் பெயர்ப் பலகையைத் தாங்கி வடக்கைத் தளமாகக் கொண்ட தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளால் முன்னெடுக்கப்பட்டுவரும் யாழ் மேலாதிக்க மேட்டுக்குடி அரசியலானது, அடிப்படையில், யாழ்குடா நாட்டுக்குள்ளே பெரும்பான்மையாக வாழுகின்ற குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களைப் பேணிப் பாதுகாப்பதற்காக, யாழ்குடா நாட்டுக்குள் வாழும் விளிம்பு நிலைத் தமிழ் மக்களினதும் மற்றும் யாழ்குடா நாட்டிற்கு வெளியே வன்னிப் பிரதேசம் உட்பட கிழக்கு மாகாணத்தில் வாழும் விவசாய மனோபாவம் கொண்ட தமிழ் மக்களினதும் நலன்களைப் பலி கொடுக்கத் துணிகின்ற வர்க்கக் குணம்சத்தையே கொண்டுள்ளது. 

சேர். பொன்னம்பலம் இராமநாதனுடைய காலத்திலிருந்து இன்றுவரை இக்குணாம்சத்தில் மாற்றமில்லை; இனிமேலும் மாற்றமுறுவதற்கான சாத்தியக் கூறுகளும் தென்படவில்லை.

மேற்கூறப்பெற்ற மூன்று சவால்களுக்கும் கிழக்கு மாகாணத் தமிழர்கள் முகம் கொடுக்க வேண்டியேற்பட்ட காரணங்களினால், கடந்த காலங்களில் அரசாங்கங்களினால் அவ்வப்போது அறிமுகம் செய்யப்பட்ட பொருளாதார அபிவிருத்தித் திட்டங்கள்-விவசாய நடவடிக்கைகள்-உள்ளூராட்சி சீர்திருத்த நடவடிக்கைகள்-தேர்தல் தொகுதி மற்றும் உள்ளூராட்சி மற்றும் நிர்வாக அலகுகளின் எல்லை மீள் நிர்ணயங்கள்-நிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகள்-வன் செயல் இழப்பீட்டுக் கொடுப்பனவுகள்-வறுமை ஒழிப்பு திட்டங்கள்-அனர்த்த நிவாரண நடவடிக்கைகள் என எல்லா விடயங்களிலுமே புறக்கணிப்புக்குள்ளும் பாரபட்சங்களுக்கும் உள்ளான சமூகமாகவே கிழக்கு மாகாணத் தமிழர்கள் இன்றுவரை இருந்து வருகின்றனர்.

உதாரணங்கள் சில

* 1959 இல்நடந்த தேர்தல் தொகுதி எல்லைகள் மீள் நிர்ணயத்தின் போது அப்போதைய மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்பகுதியில் வாழ்ந்த தமிழர்களுக்கு (தற்போதைய அம்பாறை மாவட்டத் தமிழர்களுக்கு) பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் கிடைக்கச் செய்வதில் தமிழரசுக் கட்சி அக்கறை செலுத்தவில்லை 

*1965இல் தமிழரசுக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அரசாங்கம் அமைத்து தமிழரசுக் கட்சியின் சார்பில் காலஞ்சென்ற மு. திருச்செல்வம் ஸ்தலஸ்தாபன (உள்ளூராட்சி) அமைச்சராகவிருந்த போதிலும் கல்முனைத் தமிழர்களின் நியாயமான கோரிக்கையான கல்முனை வடக்கு உள்ளூராட்சி அலகை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. 

*1976 இல் நடந்த தேர்தல் தொகுதி எல்லைகள் மீள்நிர்ணயத்தின் போது வடக்கு மாகாணத்தில் முல்லைத்தீவு (புதிய) தேர்தல் தொகுதியை பெற்றுக் கொள்வதற்காக திருகோணமலை மாவட்டத்தில் (புதிய) சேருவிலத் தொகுதி உருவாவதற்குத் தமிழரசுக் கட்சி விட்டுக் கொடுத்து திருகோணமலை மாவட்டத்திற்கு இருந்துவந்த இரண்டு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றாகக் குறைவதற்குக் காரணமாயிருந்தமை. 

*1977 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் இரட்டை அங்கத்தவர் தொகுதியான மட்டக்களப்பில் , இராசதுரையையும் காசிஆனந்தனையும் வேட்பாளர்களாகத் தமிழர் விடுதலைக் கூட்டணி நிறுத்தி (காசியானந்தனை தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில்) மட்டக்களப்புத் தமிழ் மக்களின் ஒற்றுமையைக் குறைத்தமை; தமிழ்-முஸ்லிம் உறவுக்கும் குந்தகம் விளைவித்தமை. 

*1994 பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் (திகாமடுல்ல தேர்தல் மாவட்டம்) தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமை வேட்பாளராக யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த மாவை சேனாதிராசாவை நிறுத்தியதன் மூலம் அம்பாறை மாவட்டத் தமிழர்களுக்குச் சாத்தியமான ஒரேயொரு பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தையும் பறிபோகச் செய்தமை. 

*ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் முன்வைக்கப்பட்ட தென்கிழக்கு முஸ்லிம் மாகாணக் கோரிக்கைக்கு அதனால் பாதிக்கப்படக்கூடிய அம்பாறை மாவட்டத் தமிழர்களுடன் கலந்தாலோசியாது தமிழர் விடுதலைக் கூட்டணி அக்கோரிக்கையை நிபந்தனையின்றி ஆதரித்தமை. 

*2012 இல் நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் 11 உறுப்பினர்களைப் பெற்றுக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 07 உறுப்பினர்களைக் கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு முதலமைச்சர் பதவியைக் காவு கொடுத்தமை. 

(விரிவஞ்சி உதாரணங்கள் மட்டுப்படுத்தப்படுகின்றன)

மேற்குறிப்பிடப்பெற்ற மூன்று சவால்களிலும் முதலிரண்டு சவால்களும் (பௌத்த சிங்களப் பேரின வாதமும், இஸ்லாமிய விஸ்தரிப்பு வாதமும்) வெளித் தெரியக்கூடிய புறப்பகைகள் ஆகும்.

ஆனால், மூன்றாவது சவாலான யாழ் மேலாதிக்க வாதம் உள்ளிருந்து அரித்துக்கொல்லும் உட்பகையாகும்.

கிழக்கு மாகாணத் தமிழர்கள் உட்பகையிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டு அரசியலில் சுதந்திரமாக இயங்கும்போது மட்டுமே புறப்பகைகளை வெல்ல முடியும். இதுவே யதார்த்தம்.

இந்த யதார்த்தத்தை எதிர்மறையாக நோக்காது புரிந்துணர்வுடன் நேர்மறையாக நோக்குவதற்குத் தமிழ்த் தேசியக் கட்சிகள் எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் வடமாகணத்தைத் தளமாகக் கொண்ட தமிழ் அரசியல் கட்சிகள் முன்வர வேண்டும். அப்படியானால் இக் கட்சிகள் செய்ய வேண்டியது என்ன?

எதிர்காலத்தில் இலங்கையில் ஜனநாயக ரீதியாக நடைபெறப்போகின்ற எல்லாத் தேர்தல்களிலும் அது உள்ளூராட்சி அதிகார சபைத் தேர்தலாயிருந்தாலென்ன-மாகாண சபைத் தேர்தலாயிருந்தாலென்ன-பாராளுமன்றப் பொதுத் தேர்தலாயிருந்தாலென்ன தனித்தனியே போட்டியிடாமல் தத்தமது கட்சி வேட்பாளர்களை கிழக்கு மாகாணத்தைத் தளமாகக் கொண்ட தமிழ் அரசியல் கட்சிகளுக்கூடாக நிறுத்த வேண்டும். அது தமக்கு ஏற்புடையதல்ல என உணரும் கட்சிகள் தேர்தல்களிலே கிழக்கு மாகாணத்தில் போட்டியிடாமல் ஒதுங்கியிருந்து கிழக்கு மாகாணத்தைத் தளமாகக் கொண்ட தமிழ் அரசியல் கட்சிகளுக்குப் புரிந்துணர்வோடு வழிவிடவேண்டும். இது நடைமுறைச் சாத்தியமானால் நன்று. அப்படி நடைபெறாவிட்டால் கிழக்கு மாகாணத் தமிழர்கள் செய்யவேண்டியது என்ன?

மேற்கூறியவாறு, வடமாகாணத்தைத் தளமாகக் கொண்ட தமிழ் அரசியல் கட்சிகள் கிழக்கு மாகாணத்தைத் தளமாகக் கொண்ட தமிழ் அரசியல் கட்சிகளுடன் ஒரு புரிந்துணர்வுக்கு வர மறுத்தால் அல்லது பின் வாங்கினால் கிழக்கு மாகாணத் தமிழர்கள் இனிவரும் எல்லாத் தேர்தல்களிலும் வடக்கைத் தளமாகக் கொண்ட தமிழ் அரசியல் கட்சிகள் எதுவென்றாலும் சரி கிழக்கில் தனித்தனியாகப் போட்டியிடும் அவ்வாறான கட்சிகளையெல்லாம் முற்றாக நிராகரித்து கிழக்கு மாகாணத்தைத் தளமாகக் கொண்ட கட்சிகளுக்கு அல்லது கட்சிகளின் கூட்டுக்கு மட்டுமே வாக்களித்திடச் சங்கற்பம்கொள்ளவேண்டும். இத்தகைய அரசியல் வியூகம் ஒன்றுதான் எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத் தமிழர்களை ஓரளவுக்கேனும் பாதுகாக்கும்.

இந்த வியூகம் எந்த வகையிலும் வடக்கு மாகாணத்திற்கு எதிரானதல்ல. எதிர்காலத்தில் இலங்கை அரசியலில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் ஓர் ஒற்றை மொழிவாரி மாகாண அதிகார பகிர்வு அலகாகவரும் ‘அற்புதம்’ நிகழுமாயின் அந்த அற்புதம் நிகழ்கின்ற வேளையில் கிழக்கு ‘இல்லை’ யென்று ஆகிவிட்டால் வடக்கோடு எதனை (இல்லாததை) இணைப்பது என்று ஆகிவிடும்.

எனவே, மேற் கூறப்பெற்ற அரசியல் வியூகமானது வடக்கிற்கு எதிரானது அல்ல; கிழக்கைக் காப்பாற்றித் தக்க வைப்பதற்கானதென்பதை வடக்கைத் தளமாகக் கொண்ட தமிழ் அரசியல் கட்சிகள் யாவும் புரிந்துகொண்டு செயற்பட வேண்டும். அதேவேளை, கிழக்கைத் தளமாகக் கொண்ட தமிழ் அரசியற் கட்சிகள் கிழக்கின் தனித்துவ அரசியலென்பது பிரதேச வாதமாகப் பிறழ்வடையாதிருக்கும் வகையில் அரசியலில் அவதானமாகவும் அறிவுபூர்வமாகவும் செயற்பட வேண்டும். ஏனெனில் அத்தகைய பிறழ்வு எதிரிகளுக்கு வாய்ப்பாகிவிடும். அதிலும் எச்சரிக்கை வேண்டும்.

‘கிழக்கின் தனித்துவ அரசியல்’ எனும் கருத்தியலைப் பிரதேச வாதமாகவோ அல்லது தமிழ்த் தேசியக் கருத்தியலுக்கு எதிரானதாகவோ நோக்காது அதனைக் கிழக்கைக் காப்பாற்றுவதற்கான மூலோபாயம் என வடக்கைத் தளமாகக் கொண்ட தமிழ் அரசியற் கட்சிகள் யாவும் உணர்ந்து கொள்ள வேண்டும். அவ்வாறு உணர மறுக்கின்ற வடக்கைத் தளமாகக் கொண்ட தமிழ் அரசியற் கட்சிகளையெல்லாம் கிழக்குத் தமிழர்கள் முற்றாக நிராகரிக்க வேண்டும். இந்த அணுகுமுறை ஒன்றே கிழக்கைத் தக்க வைப்பதற்கான அரசியற் சமன்பாடு ஆகும்.