(மௌன உடைவுகள்- 50)
— அழகு குணசீலன் —
நடைபெற்றுக்கொண்டிருக்கும் இஸ்ரேல் – பாலஸ்தீன யுத்தத்தில் அமெரிக்காவும், அதன் ஆதரவு ஐரோப்பிய நாடுகளும் இஸ்ரேலுக்கு ஆதரவான ஒருபக்க நிலைப்பாட்டை கொண்டிருப்பது வெளிப்படையானது. மேற்குலகம் பகிரங்கமாக இஸ்ரேலை ஆதரிப்பது மட்டுமன்றி, முற்று முழுதாக ஹாமாஸ் அமைப்பை இந்த யுத்தத்தின் காரணகர்த்தாவாக காட்டும் பிரச்சாரப்போரையும் தொடர்கிறது.
ஒக்டோபர் 7ம் திகதி சனிக்கிழமை நோவா கொண்டாட்டத்தின் போது , இஸ்ரேலிய உளவுப் பிரிவான மொஸாட்டுக்கு கண்ணில் மண்ணைத் தூவி -திசைதிருப்பி விட்டு தனது ஊடறுப்பு தாக்குதலை ஹாமாஸ் அமைப்பு மேற்கொண்டுள்ளதா? என்ற கேள்வியை மத்திய கிழக்கு இராணுவ ஆய்வாளர்கள் எழுப்புகிறார்கள்.
இது பாலஸ்தீன விடுதலை போராட்டத்தில் – நாணயத்தின் ஒரு பக்மான ஹாமாஸின் இராணுவ தந்திரோபாயம் என்றால், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அரபுத்தலைவர்களை சந்திக்க மத்திய கிழக்கு வந்த போதும் அவரைச் சந்திக்க மறுத்து வந்த வழியே திரும்பிப்போங்கள் என்று வழிகாட்டிய அரபுத்தலைவர்களின் செயல் ஹாமாஸின் அரசியல் இராஜதந்திர நாணயத்தின் மறுபக்கமாக அமைகிறது.
ஜோர்டான் மன்னர், எகிப்தின் தலைவர், பாலஸ்தீன அரச தலைவர் ஆகியோரை சந்தித்து “சமாதானம்” பேச வந்த பைடனுக்கு இது நடந்திருக்கிறது. பாலஸ்தீன மக்களை பட்டினி போட்டும், பொதுமக்கள் வாழும் இடங்களில் குண்டு போட்டும், வைத்தியசாலைக்கு குண்டு வீசியும் இஸ்ரேல் யுத்தத்தை தொடரும் நிலையில் ஜோர்தான் தலைநகர் அமானில் பைடனுடன் கைகுலுக்கி இரவு விருந்தில் எந்த முகத்தோடு அவர்கள் கலந்து கொள்ளமுடியும்.
அரபுத்தலைவர்களை சந்திக்கும் எண்ணத்துடன் பைடன் 7 மணித்தியாலங்கள் இஸ்ரேலில் கழித்தார்,பிரதமர் நெத்தயான்குவைச் சந்தித்தார். அப்போது காஸா வைத்தியசாலை தாக்குதல் நடந்து முடிந்திருந்தது. அதனை இஸ்லாமிய ஜிகாத் அமைப்புத்தான் செய்தது, அதற்கான ஆதாரங்கள் – கருத்து பரிமாற்ற குரல் பதிவை தனது அதிகாரிகள் தனக்கு உறுதிப்படுத்தியதாக கூறிய பைடன் “இஸ்ரேல் இதைச் செய்யவில்லை” என இஸ்ரேல் பேச்சாளராக மாறி திட்டவட்டமாக மறுத்திருந்தார். இப்போது மேற்குலக ஊடகங்களும், மேற்குலக நாடுகளும் பைடனின் கூற்றுக்கு சான்றிதழ் வழங்கிக்கொண்டிருக்கின்றன. நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகையில் இந்தக் குற்றச்சாட்டை ஜிகாத் மறுத்துள்ளது.
இந்த வைத்தியசாலை தாக்குதலுக்கு பின்னர்தான் பைடனை திருப்பி அனுப்பும் முடிவை அரபுத்தலைவர்கள் எடுத்தார்கள். காமாஸ் இஸ்ரேல் குடியேற்ற பகுதியில் பொதுமக்கள் மீது நடாத்திய தாக்குதலையும், பயணக்கைதிகள் விவகாரத்தையும் கண்டித்திருந்த இந்த தலைவர்களை பைடனின் ஒற்றைக்கண் – ஒரு பக்க நியாயம் ஹாமாஸ் பக்கம் தள்ளி விட்டிருக்கிறது. இது ஹாமாஸின் அரசியலுக்கு கிடைத்த வெற்றி.
பிரித்தானிய, ஜேர்மன், பிரான்ஸ், இத்தாலி போன்ற ஐரோப்பிய ஒன்றிய முக்கிய தலைவர்களும், வெளியுறவு அமைச்சர்களும் பைடனுடன் ஒத்து ஊதுகிறார்கள். கனடாவும் ஒத்தோடுகிறது. யுத்த நிறுத்தம் என்ற பெயரில் பயணக்கைதிகளை விடுவிக்க சென்ற ஜேர்மன் வெளியுறவு அமைச்சர் அரபுத்தலைவர்களின் சந்திப்பில் பகிரங்கமாக சர்வதேச சட்டங்களின் படி இஸ்ரேல் தன்னை பாதுகாத்துக் கொள்வதற்கான உரிமையைக் கொண்டிருக்கிறது என்று கூறினார். இக் கருத்தை அருவருப்பாக கேட்டுக்கொண்டு, முகம் சுழித்துக்கொண்ட அரபுத்தலைவர்களின் ஒருமித்த கருத்தை ஜோர்தான் அப்போது பதிலாக வழங்கியது. “பாலஸ்தீன மக்களுக்கு அந்த உரிமை இல்லையா?” என்று முகத்தில் அறைந்தபடி கேட்டார் ஜோர்தான் பிரதிநிதி. கடந்த திங்கட்கிழமை லக்சம்பர்கில் இடம்பெற்ற ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் ஜேர்மன் வெளியுறவு அமைச்சர் இஸ்ரேலின் காஸா மீதான படைநகர்வுக்கு ஆதரவான கருத்தை வெளியிட்டார். இதனை நிராகரித்த பல நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் யுத்த நிறுத்தம் ஒன்றுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
இரண்டாம் உலகயுத்த காலத்தில் ஹிட்லரின் நாஷிப்படைகளால் யூதர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையையும், அதனால் சர்வதேசத்தில் அதற்கு ஏற்பட்டுள்ள அவமானமும், கறையும் ஏழு தசாப்தங்கள் கடந்தும் இன்னும் ஜேர்மனி முழுக்க அப்பிக்கிடக்கிறது. அந்த அநாகரிக அரசியலுக்காக ஜேர்மன் செய்யும் பிராயச்சித்தமே இஸ்ரேலை நியாயப்படுத்தும் அப்பட்டமான அறம் தவறிய அரசியல். மேற்குலகம் உண்மையில் யுத்த நிறுத்தம் ஒன்றுக்காகவோ, பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலின் பொருளாதார தடைகளை நீக்கும் மனிதாபிமான மனித உரிமை அரசியலுக்காகவோ இவற்றை செய்யவில்லை. அரபுத்தலைவர்களின் முதுகைத்தடவிக்கொடுத்து ஹாமாஸை ஒரு வழிக்கு கொண்டு வந்து பயணக்கைதிகளை விடுவிப்பது இதன் உள்நோக்கம்.
இதனால்தான் காஸா மீதான இஸ்ரேலின் தரை, கடல் மார்க்க இராணுவ நடவடிக்கைத்திட்டத்தை இந்த சமாதான தூதர்கள் தாமதப்படுத்துகிறார்கள். இஸ்ரேல் அறிவித்துள்ள காஸா மீதான தரைமார்க்க படையெடுப்பு ஹாமாஸுக்கும், பாலஸ்தீனர்களுக்குமான ஒரு வெருட்டல். கடந்த திங்கட்கிழமை அதிகாலை இஸ்ரேல் இராணுவம். காஸாவுக்குள் ஊடுருவி தாக்கிவிட்டு திரும்பியிருக்கிறது. இதை ஒரு இராணுவ அழுத்தமாகக் கொண்டு பயணக்கைதிகளை விடுவிப்பதற்கான ஒரு யுக்தி. பயணக்கைதிகளின் விடுதலைக்காகவே பைடன் தான் தரைமார்க்க இராணுவ நடவடிக்கைக்கு ஆதரவு இல்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார். மறுபக்கத்தில் சரியான இணக்கம் இன்றி பயணக்கைதிகளை விடுதலை செய்வது ஹாமாஸுக்கு பலவீனமாக அமைந்துவிடும் என்பதை ஹாமாஸும், FATAH வும் அறியாமல் இல்லை.
மேற்கு நாடுகளில் வன்முறைகள் ஆரம்பித்துள்ளன. இதுவும் இஸ்ரேலின் தரைமார்க்க இராணுவ நடவடிக்கைக்கு மேறற்குலக நாடுகள் பச்சை கொடிகாட்ட தயங்குவதற்கு காரணமாகும். பிரான்ஸ், பெல்ஜியம், இத்தாலி, ஜேர்மனி ஆகியவற்றில் ஆங்காங்கே தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. இஸ்ரேல் – பாலஸ்தீன யுத்தத்தின் தாக்குதல் எதிரோலி மேற்கில் கேட்குமா..? இல்லையா…? என்பதை இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கையே தீர்மானிப்பதாக அமையும்.
பயங்கரவாதத்திற்கு எதிரான மேற்குலக யுத்தப்பிரகடனம் “முதலில் பயங்கரவாத ஒழிப்பு பின்னர் பிரச்சினைக்கு தீர்வு” என்ற “பொய் முகம்” கொண்டது. இந்த முகத்தை ஆப்கானிஸ்தான் முதல் பாலஸ்தீனம் வரை காணமுடிகிறது. இஸ்ரேலில் பேசிய பைடன் அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்கு தங்களுக்கு ஆப்கானிஸ்தானில் “நீதி” கிடைத்தது என்று கூறினார். இதன் அர்த்தம் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டது போன்று ஹாமாஸ் தலைமையும் அழிக்கப்படும் – அழிக்கப்பட வேண்டும் அதுதான் “நீதி” என்பதாகும். ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா, சிரியா….. இங்கெல்லாம் பயங்கரவாதத்தை அழித்து விட்டதாக மேற்குலகம் சொல்லும் வார்த்தைகளில் உள்ள “வாய்மை” எவ்வளவு?. அமெரிக்க, மேற்குலக அரச பயங்கரவாதம் அந்த மக்களின் அன்றாட வாழ்வில் இருந்ததையும் இழந்து நிற்கச் செய்துள்ளது.
சமாதானத்திற்கான யுத்தம் என்று கூறிக்கொண்டு ஒரு தரப்புக்கு கண்மூடித்தனமான ஆதரவையும், ஆயுதத்தையும் வழங்குவதனால் சமாதானம் சாத்தியமா? இது சாத்தியமான வழிமுறை அல்ல என்பதால் தான் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகில் அரசுகளுக்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்துள்ளன. உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்காவிலும், ஐரோப்பிய ஒன்றியத்திலும் மக்களுக்கு போதும்.. போதும் என்றாகிவிட்டது. இந்த நாடுகளில் சமூக, பொருளாதார பிரச்சினைகள் அதிகரித்துள்ளன. “மக்களின் வரிப்பணத்தை சமாதானத்திற்கான யுத்தத்திற்காகவே செலவிடுகிறோம்” என்று ஜோ பைடன் கூறுவதில் எள்ளளவும் உண்மை இல்லை. உக்ரைனில் நடப்பது சமாதானத்திற்கான யுத்தமா?
அனைத்து யுத்தங்களையும் போன்றே இஸ்ரேல் -பாலஸ்தீன யுத்தத்திலும் ஒரு பூகோள அரசியல் இருக்கிறது. ஒவ்வொரு நாடும் தங்கள் தேசிய நலன் சார்ந்து காய்களை நகர்த்துகின்றன. மேற்கில் மட்டும் அல்ல, பொருளாதார நலன் சார்ந்த கிழக்கு நாடுகளிலும் இந்த நிலை உண்டு. இந்தியாவை நோக்கினால் பாலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ள ஒரு நாடு. யஸீர் அரபாத்துடன் இந்திராகாந்தி கைகுலுக்கி ஆதரவையும் வழங்கினார். அது ஒரு காலம். ரஷ்ய- அமெரிக்க அணி, அணிசேரா நாடுகளின் அமைப்பு பலமாக இருந்த காலம் அது.
இன்று இந்தியா இஸ்ரேலை அதிகம் ஆதரிக்கின்ற போக்கு தெளிவாகிறது. இந்தியர்கள் யூதர்கள் மீது இனப்படுகொலை நடாத்திய ஹிட்லரை ஆரியர் என்பதற்காக ஆதரித்தவர்கள். இன்றும் வட இந்தியாவில் ஹிட்லருக்கு அதீத ஆதரவு உண்டு. இப்போது முன்னுக்கு பின் முரணாக இஸ்ரேலை ஆதரிப்பதற்கு இஸ்லாம் எதிர்ப்புவாதம் ஒரு காரணமாகிறது. இந்தியாவின் எல்லை நாடுகளில் இருந்து பயங்கரவாதம் பரவாது இருப்பதற்காக இஸ்ரேலின் பயங்கரவாத ஒழிப்பை இந்தியா ஆதரிக்கிறது. பாலஸ்தீன மக்களின் விடுதலை இன்று இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது.
இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் போன்ற ஒரு பின்னணி குறித்தும் இஸ்ரேல் விவகாரத்தில் இப்போது பேசப்படுகிறது. எவ்வாறு ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பான புலனாய்வு தகவல்களை இந்தியா இலங்கைக்கு வழங்கியிருந்த போதும் இலங்கை அரசு அதனை அலட்சியம் செய்திருந்தது என்று கூறப்படுவதற்கு சமமான ஒன்று இஸ்ரேலிலும் நடந்ததா?
ஹாமாஸ் தாக்குதல் ஒன்றுக்கு தயாராகிறது என்ற புலனாய்வு தகவல்களை எகிப்தும், அமெரிக்காவும் இஸ்ரேலுக்கு முன் கூட்டியே வழங்கி இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இஸ்ரேல் அரசு அதை அலட்டிக்கொள்ளாமல் இருந்துள்ளது. இஸ்ரேலில் நெத்தாயன்கு அரசாங்கத்தின் ஜனநாயக மறுப்பு நீதித்துறை சீர்திருத்தங்களுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் இடம்பெற்று வந்தன. இந்த சூழலில் உள்நாட்டு அரசியல் சூழலை திசை திருப்பும் நோக்கில் ஹாமாஸ் தாக்குதல் இடம்பெறுவதை நெத்தாயன்கு அரசாங்கம் விரும்பியதா? என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.
இன்னொரு பக்கத்தில் மொசாட்டை திசை திருப்பும் வகையில் தவறான தாக்குதல் இலக்கை கசிய விட்டு, இஸ்ரேல் படைகளையும் மொசாட்டையும் ஏமாற்றி எவரும் எதிர்பாராத வகையில் ஹாமாஸ் அணி தாங்கள் குறி வைத்த இலக்கில் தாக்கியதா? என்றும் கேட்கப்படுகிறது. ஏனெனில் மொசாட்டுக்கு பராக்கு காட்டுவது அவ்வளவு இலகுவானதல்ல. அப்படி நடந்திருந்தால் ஹாமாஸ் விரித்த வலையில் மொசாட் சிக்கியுள்ளது. இல்லையென்றால் மொசாட் நெத்தாயன்குவின் ஆட்சி தொடர கண்டும் காணாததுமாக இருந்துள்ளது.
மக்களின் இரத்தத்திலும், சதையிலும் ஆட்சி – அதிகாரம் செய்பவர்களுக்கு யூதர்கள் என்ன? இஸ்லாமியர்கள் என்ன? கிறிஸ்தவர்கள் என்ன?
ஆனால் அவர்களின் கோசம்….
எல்லா மதமும் சம்மதம்…! எல்லோர் இரத்தமும் ஒரே நிறம்…!!