— வீரகத்தி தனபாலசிங்கம் —
பாராளுமன்ற தேர்தல் முறையை மாற்றுவதற்கு அரசாங்கம் முன்வைத்த யோசனை பல்வேறு வகையான விமர்சனங்கள் கிளம்புவதற்கு வழிவகுத்தது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழித்துவிட்டு நிறைவேற்று அதிகார பிரதமரைக் கொண்ட பாராளுமன்ற ஆட்சிமுறை மீண்டும் கொண்டுவரப்பட வேண்டுமா இல்லையா என்பதைத் தீர்மானிக்க சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்கு வழிவகுக்கக்கூடிய ஒரு முயற்சியின் அங்கமாகவே பாராளுமன்ற தேர்தல் முறையில் மாற்றம் செய்வதற்கான யோசனை அடங்கிய அமைச்சரவைப் பத்திரத்தை நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச சமர்ப்பித்ததாகவும் இது தொடர்பில் ஆராய்வதற்கு அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்டும் என்று அவர் கூறியதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
இது தேசிய தேர்தல்களை ஒத்திவைக்கும் அரசியல் உள்நோக்கத்துடன் முன்வைக்கப்படும் ஒரு யோசனை என்று கண்டனம் செய்த எதிரணி கட்சிகள் ஒருபோதும் அதற்கு ஒத்துழைக்கப் போவதில்லை என்று அறிவித்தன. ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதாக இருந்தால் 2025 பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு மக்களின் புதிய ஆணையுடன் பதவிக்கு வரக்கூடிய அரசாங்கமே அதற்கான முயற்சியை முன்னெடுக்கவேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி மாத்திரமல்ல ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் கூட கூறியிருந்தன.
ஆனால், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பது என்பது சிக்கல்கள் நிறைந்த கடினமான ஒரு பணி என்பதால் அத்தகைய முயற்சி எதையும் முன்னெடுக்கும் உத்தேசம் அரசாங்கத்துக்கு இல்லை என்றும் தற்போதைய பாராளுமன்றத்தின் ஊடாக அதைச் செய்வதற்கு வழியே இல்லை என்றும் விஜேதாச ராஜபக்ச கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
ஊடகங்களில் வெளியான செய்திகளும் அவை தொடர்பில் பொதுவெளியில் கிளம்பிய விமர்சனங்களும் அரசாங்கத்துக்கு பெரும் சங்கடத்தை கொடுத்த காரணத்தினால்தான் அந்த அறிவிப்பை அவர் சபையில் அவசரமாக செய்யவேண்டிவந்தது என்பதில் சந்தேகமில்லை.
பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்கு புதிய தேர்தல் முறையை அறிமுகப் படுத்துவதற்கான யோசனையை முன்வைத்ததை நீதியமைச்சர் ஒத்துக்கொண்டார்.
தங்களது யோசனையின் பிரகாரம் பாராளுமன்ற உறுப்பினர்கள் 160 பேர் தொகுதி அடிப்படையிலும் எஞ்சிய 65 பேரும் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை மற்றும் தேசியப் பட்டியல் மூலமாகவும் தெரிவு செய்யப்படுவர் என்று கூறிய அவர் தொகுதி அடிப்படையில் தெரிவாகும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 150 ஆக குறைக்கவேண்டும் என்று சிலரும் 140 ஆக குறைக்கவேண்டும் என்று வேறு சிலரும் விரும்புகிறார்கள். மக்கள் மாற்றத்தை விரும்புவதால் மாற்றம் ஒன்று நிச்சயம் தேவை. அது குறித்து கலந்தாலோசனைகளை நடத்த அரசாங்கம் தயாராக இருக்கிறது என்றும் தெரிவித்தார்.
அதேவேளை, அந்த தேர்தல் சீர்திருத்தம் குறித்து ஆராய்வதற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன புதன்கிழமை பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் நடத்திய சந்திப்பு எதிர்க்கட்சிகள் அந்த யோசனையை நிராகரித்த காரணத்தால் தீர்மானம் எதுவும் இன்றி முடிவடைந்தது. இரு வாரங்களில் மீண்டும் கட்சிகளின் தலைவர்களின் கூட்டமொன்றை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
உள்ளூராட்சி தேர்தல்களையும் மாகாணசபை தேர்தல்களையும் காலவரையறையின்றி ஒத்திவைத்திருக்கும் அரசாங்கம் ஜனாதிபதி தேர்தலையும் பாராளுமன்ற தேர்தலையும் ஒத்திவைக்கும் சூழ்ச்சித்தனமான நோக்கத்துடனேயே தற்போதைய தருணத்தில் தேர்தல் சீர்திருத்தம் குறித்து பேசுகிறது என்று எவருக்கும் வலுவான சந்தேகம் எழுவது தவிர்க்கமுடியாதது.
தேர்தல்களுக்கு முகங்கொடுப்பதை தவிர்ப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அரசாங்கமும் எத்தகைய ஜனநாயக விரோத செயன்முறைகளிலும் இறங்கத் தயங்க மாட்டார்கள் என்பது உள்ளூராட்சி தேர்தல்கள் விடயத்தில் அதுவும் உயர்நீதிமன்ற உத்தரவையும் கூட அலட்சியம் செய்து அவர்கள் நடந்துகொண்ட முறையின் மூலம் தெளிவாக தெரிந்தது.
வேறு எந்த தேர்தலையும் விரும்பாத ஜனாதிபதி விக்கிரமசிங்கவும் அவரது ஐக்கிய தேசிய கட்சியும் ஜனாதிபதி தேர்தலை பற்றி அடிக்கடி பேசிவந்திருக்கின்றனர்.
அடுத்த வருடம் நவம்பர் மாதத்துக்கு முன்னதாக நடத்தவேண்டியிருக்கும் ஜனாதிபதி தேர்தலை உரிய காலத்துக்கு முன்கூட்டியே அதாவது அடுத்த வருட முற்பகுதியில் நடத்துவதற்கு ஜனாதிபதி விரும்பியதாகவும் அதற்காக அரசியலமைப்பில் திருத்தம் ஒன்றை கொண்டுவருவது குறித்து அவர் யோசித்ததாகவும் கதைகள் அடிபட்டபோதிலும், அது இதுவரையில் சாத்தியமாகவில்லை. இனிமேலும் சாத்தியமாகும் அறிகுறிகள் இல்லை என்றே தோன்றுகிறது.
சுமார் மூன்று தசாப்தங்களாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக இருந்து வரும் விக்கிரமசிங்க தனக்கு வசப்படாமல் இருந்து வந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை அடைவதற்கு கடந்த வருடத்தைய மக்கள் கிளர்ச்சியின் விளைவான அசாதாரண சூழ்நிலைகள் உதவின. பாராளுமன்ற வாக்கெடுப்பின் மூலம் தெரிவான முதல் இலங்கை ஜனாதிபதி என்ற ‘பெருமையை’ பெற்ற அவர் தேர்தலில் வெற்றிபெற்று மக்கள் ஆணையுடன் ஜனாதிபதியாக அதிகாரத்துக்கு வரவேண்டும் என்று விரும்புகிறார் என்று தெரிகிறது.
தனது கட்சி படுமோசமாக பலவீன மடைந்திருக்கின்ற போதிலும் வங்குரோத்து நிலையடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு தனது அரசாங்கம் முன்னெடுத்து வரும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் மீண்டும் செல்வாக்கை கட்டியெழுப்ப உதவும் என்று அவர் நம்புகிறார். தற்போதைக்கு மீளக்கட்டியழுப்ப முடியாத அளவுக்கு ஐக்கிய தேசிய கட்சியின் நிலை இருக்கிறது என்பது விக்கிரமசிங்கவுக்கு தெரியும். அதனால் தான் பரந்தளவிலான கூட்டணியொன்றை அமைக்கும் வியூகங்களில் அவர் ஈடுபட்டிருக்கிறார்.
ஆனால், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக அவர் இதுவரையில் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. ஆனால், அவரின் பேச்சும் செயலும் அவரின் விருப்பத்தை தெளிவாக வெளிக் காட்டுகின்றன.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் ஜே.வி.பி. / தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார திசாநாயக்கவுமே இதுவரையில் தங்களை ஜனாதிபதி வேட்பாளர்களாக பிரகடனம் செய்திருக்கிறார்கள். பொதுஜன பெரமுன ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரை களமிறக்கப் போவதாக அடிக்கடி கூறுகின்ற போதிலும் பெயரை வெளியிடுவதில் தயக்கம் காட்டுகிறது.
ஒரு ராஜபக்சவை தவிர அந்த கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக வேறு எவரும் நியமிக்கப்படக் கூடியது பெரும்பாலும் சாத்தியமில்லை. அவ்வாறு தான் நியமிக்கப்பட்டாலும் கூட அந்த வேட்பாளர் அடுத்துவரும் காலத்தில் தாங்கள் மீண்டும் அதிகாரத்துக்கு வருவதற்கான சூழ்நிலை உறுதிசெய்வதற்கு உதவக்கூடியவர் என்று ராஜபக்சாக்கள் உறுதியாக நம்புகின்ற ஒருவராகத்தான் இருக்கமுடியும்.
தாங்கள் மீண்டும் அதிகாரத்துக்கு வரவேண்டும் அல்லது கடந்தகாலத் தவறுகளுககாக தங்களைப் பொறுப்புக்கூற வைக்காத ஒரு அரசாங்கம் பதவிக்கு வருவதை உறுதிசெய்வதே ராஜபக்சாக்களின் நோக்கமாக இருக்கிறது. இந்த நோக்கம் குறித்து நாட்டு மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதே முக்கியமானது.
ராஜபக்சாக்களுக்கு நெருக்கமான தொழிலதிபரும் பாராளுமன்ற உறுப்பினருமான தம்மிக்க பெரேரா சில தினங்களுக்கு முன்னர் கொழும்பில் வைபவம் ஒன்றில் உரையாற்றியபோது அரசியல் கட்சிகள் தனக்கு 51 சதவீத வாக்குகளை உத்தரவாதம் செய்தால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு
தயாராக இருப்பதாக அறிவித்தார். கட்சிகளின் பெயர்களை அவர் கூறவில்லை. ஆனால், அவரின் அறிவிப்பு குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவாசம் தம்மிக்க பெரேராவை தங்களது கட்சியின் பெறுமதி மிக்க உறுப்பினர் என்று மாத்திரம் கூறினார்.
அண்மையில் மௌபிம ஜனதா கட்சியின் அலுவலகத்தை கொழும்பில் திறந்துவைத்த அதன் தலைவரான பல ஊடக நிறுவனங்களின் உரிமையாளர் திலித் ஜயவீரவிடம் 2024 ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்கும் சாத்தியம் குறித்து கேட்டபோது முதலில் புதிய கட்சியை நாடுபூராவும் மக்கள் ஆதரவைக்கொண்ட அரசியல் இயக்கமாக வளர்ப்பதற்கு காலம் தேவை. அதற்கு பிறகு அரசியல் பதவிகளுக்கு போட்டியிடுவது குறித்து தீர்மானிக்கலாம் என்று பதிலளித்தார். இவர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியல் நிகழ்வுப் போக்குகள் இவ்வாறாக இருக்கையில், ஜனாதிபதி வேட்பாளர்கள் யார்யார் என்பதை விடவும் இன்னும் ஒரு வருடத்துக்கும் குறைவான காலத்திற்குள் நடத்தப்பட வேண்டியிருக்கும் அந்தத் தேர்தல் நடக்குமா என்பதைப் பற்றி சிந்திப்பதே முக்கியமானது என்று தோன்றுகிறது.
அரசாங்கத்தின் பேச்சாளர் போன்று நடந்துகொள்ளும் ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரான பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன கடந்த வாரம் செய்தியாளர்கள் சந்திப்பொன்றில் உரையாற்றியபோது நாட்டின் நலனைக் கருத்திற்கொண்டு அடுத்த ஜனாதிபதி தேர்தலில் எவரும் போட்டியிடக்கூடாது என்று தெரிவித்தார்.
“ஜனாதிபதி தேர்தலில் எவரும் போட்டியிட முன்வராமல் இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும். அது நாட்டை நிலையுறுதிப்படுத்த உதவும். அவ்வாறு ஒரு சூழ்நிலை ஏற்படுமாக இருந்தால் தற்போதைய ஜனாதிபதி பதவியில் தொடர்ந்து இருக்கவும் நாட்டின் வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கக் கூடியதாக இருக்கும். தற்போதைய சூழ்நிலையில் ஜனாதிபதி தேர்தல் ஒன்றுக்காக நிதியைச் செலவிடுவது விவேகமானதா என்று யோசிக்க வேண்டியிருக்கிறது” என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி தேர்தலில் விக்கிரமசிங்கவை எதிர்த்து எவரும் போட்டியிட முன்வராவிடடால் அவர் போட்டியின்றி தெரிவாகக்கூடிய வாய்ப்பு ஏற்படும் என்ற அர்த்தத்தில் தான் அபேவர்தன அவ்வாறு கூறியிருக்கிறார் போலும்.
வேறு எவரும் போட்டியிடக்கூடாது என்ற அவரின் கோரிக்கை தான் புதியதே தவிர மற்றும்படி ஜனாதிபதி தேர்தலுக்கு நிதி செலவிடவிடுவது சாத்தியமில்லை என்று அவர் ஏற்கெனவே கூறியிருக்கிறார்.
ஜனாதிபதி தேர்தலுக்காக 2024 பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்தால் அரசாங்கத்தினால் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற முடியாமல் போகும் என்று கடந்த மாதம் அபேவர்தன கூறியிருந்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தனியொரு உறுப்பினராக பாராளுமன்றத்தில் இருந்த விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவானதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே அபேவர்தன நியமிக்கப்பட்டார். ஜனாதிபதி நினைத்திருந்தால் தனது கட்சியின் வேறு உறுப்பினரை அந்த வெற்றிடத்துக்கு நியமித்திருக்கமுடியும்.
அபேவர்தனவை அவர் நியமிக்க விரும்பியதற்கு ஒரு பிரத்தியேக காரணம் இருந்திருக்கிறது என்பதை அவர் அண்மைக்காலமாக வெளியிட்டுவரும் ( அபத்தமான ) கருத்துக்களை நோக்கும்போது புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது.
முன்னாள் பொதுநிருவாக அமைச்சரான அவரின் கருத்துக்களை தான்தோன்றித்தனமாக பேசுகின்ற ஒரு அரசியல்வாதியிடம் இருந்து வருகின்றவையாக அலட்சியம் செய்துவிட முடியாது. ஏனென்றால் ஜனாதிபதி விக்கிரமசிங்க தனது அரசியல் தந்திரோபாயங்களுக்கு அரசியல் கட்சிகள் மற்றும் மக்களிடமிருந்து வெளிவரக்கூடிய பிரதிபலிப்புக்களை அறிந்துகொள்வதற்கு தனது கட்சியின் தவிசாளரைப் பயன்படுத்துகிறார் என்று நம்ப வேண்டியிருக்கிறது.
அபேவர்தன அண்மைக்காலத்தில் வெளியிட்ட பல கருத்துக்கள் அரசாங்கம் முன்னெடுத்த சில ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு முன்னோடியாக அமைந்ததை காணக்கூடியதாக இருந்தது.
“நாட்டை நிலையுறுதிப் படுத்துவதற்கான தேசிய கொள்கைக் கட்டமைப்பு ஒன்றை தயாரித்த பின்னரே தேர்தல்கள் நடத்தப்படும் என்றும் அடுத்த சில மாதங்களுக்கு தேர்தல் எதையும் நடத்த முடியாது” என்றும், ஜனாதிபதியும் அரசாங்கமும் உள்ளூராட்சி தேர்தல்களை எவ்வாறு ஒத்திவைப்பது என்று சிந்தித்துக்கொண்டிருந்த வேளையில் கடந்த வருடம் அக்டோபரில் அபேவர்தன கூறினார். தேர்தல்களை நடத்துவதற்கு இது நேரம் அல்ல. தேர்தல்களை நடத்தவேண்டும் என்று கோருபவர்கள் நாட்டை நிலைகுலைய வைக்கவே விரும்புகிறார்கள் என்றும் அவர் கூறியது பதிவில் இருக்கிறது.
ஐரோப்பிய பெண்கள் இலங்கைக்கு வந்து வீட்டுப்பணிப் பெண்களாக பணியாற்றக்கூடிய அளவுக்கு இலங்கையை பொருளாதார சுபிட்சமுடைய நாடாக ஜனாதிபதி விக்கிரமசிங்க மாற்றிக்காட்டுவார் என்றும் விக்கிரமசிங்கவை எந்தவொரு உலகத் தலைவரும் மதிக்காமல் இருக்கமுடியாது. அந்தளவுக்கு சர்வதேச சமூகத்தின் மத்தியில் செல்வாக்கைக் கொண்டவராக அவர் விளங்குகிறார் என்றும் அபேவர்தன கூறினார்.
கடந்த வருடம் இன்னொரு தடவை அதுவும் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்கு ஒரு சில நாட்கள் முன்னதாக, 2019 ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச 69 இலட்சம் வாக்குகளுடன் பெற்ற மக்கள் ஆணையை கடந்த பாராளுமன்ற
தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி 250,000 வாக்குகளுடன் பெற்ற ஆணை விஞ்சிவிட்டது. தற்போது நடைமுறைப் படுத்தப்படுவது அந்த ஆணையே என்று கூட அபேவர்தன கூறினார்.
நாட்டு மக்கள் என்ன நினைப்பார்கள் என்பதை பொருட்படுத்தாமல் இவ்வாறாக அபத்தமான கருத்துக்களை கூறும் ஒருவர்தான் இன்று நாட்டின் பழம் பெரும் கட்சியின் தவிசாளராக இருக்கிறார். அவரை எசமானரின் குரல் என்பதை தவிர வேறு எவ்வாறு அழைக்கமுடியும்?
இறுதியாக கடந்தவாரம் அபேவர்தன ஜனாதிபதி தேர்தலில் எவரும் போட்டியிட முன்வரக்கூடாது என்று கூறிய கருத்தின் பின்னணி என்ன என்பதை நாளடைவில் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும்.
( ஈழநாடு)