வாக்குமூலம்-81 (‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர்)

வாக்குமூலம்-81 (‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர்)

 — தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் —

இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு-முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் போது (2009) இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள்-காணாமல் போனவர்கள் விவகாரம் என்பவற்றிற்குச் சர்வதேச தலையீட்டை அல்லது விசாரணையைக் கோரிநிற்கின்ற போக்கு அண்மைக் காலமாக அதிகப்படுத்தப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. கடந்த கால அனுபவங்களை வைத்துப் பார்க்கும்போது தமிழர் தரப்பு மனம் கொண்டிருக்கும் அல்லது கருதும் ‘சர்வதேசம்’ இக்கோரிக்கையினை எந்த அளவுக்குச் ‘சீரியஸ்’ ஆக எடுத்துக்கொள்ளுமோ தெரியவில்லை. ‘சர்வதேசம்’ என மொட்டையாகக் கூறுவது நடைமுறையில் ‘இல்லாத ஊர்’ போலவும் ‘சர்வதேச தலையீடு’ என்பது அந்த இல்லாத ஊருக்குப் பயணிப்பது போலவும் ஒரு மயக்கத்தையும் கொடுக்கிறது.

சர்வதேசத் தலையீட்டுக் கோரிக்கைகளின் பின்னணியில் உள்ளூர்த் தேர்தல் மற்றும் கட்சி அரசியல் தேவைகளும் காரணங்களும் இருப்பதாகக் கருதப்பட்டாலும்கூட, உள்ளூரில் பாதுகாப்புத் துறை-சட்டம் ஒழுங்கைப் பேணுகிற காவல் துறை (பொலிஸ்) மற்றும் நீதித்துறை ஆகியவற்றின் மீது தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டதன் அல்லது அவற்றின் மீதான அவர்களின் திருப்தியீனத்தின் பிரதிபலிப்புத்தான் இவ்வாறான சர்வதேசத் தலையீட்டுக்கான கோரிக்கைகள் எழுவதற்கான அடிப்படைக் காரணம் என்பதைக் காய்தல் உவத்தலின்றி நடுநிலையாகச் சிந்திக்கும் எவரும் ஒப்புக்கொள்வர். 

அரசாங்கத்தால் நியமிக்கப்படும் ‘ஆணைக்குழுக்கள்’  மற்றும் ‘பாராளுமன்றத் தெரிவுக்குழுக்கள்’ போன்ற குழுக்களின் செயற்பாடுகளின் மீதும் தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்துவிட்ட போக்குதான் இலங்கையில் இப்போது பரவலாகக் காணப்படுகிறது. 

ஆனாலும், சர்வதேசத் தலையீட்டு மற்றும் விசாரணைக் கோரிக்கைகள் எதுவும் கடந்த காலங்களில் தீர்வுகளைக் கொண்டுவந்ததில்லை. இனியும் கொண்டுவரப்போவதுமில்லை.

ஈழத் தமிழர் தரப்பைப் பொறுத்தவரை இனப் பிரச்சனைக்கான தீர்வுக்காகச் சர்வதேச அமைப்புகளை நாடுகின்ற போக்கு 1972 இல் குடியரசு அரசியல் அமைப்பு நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து கால்கோள் கொள்கிறது. அதன் தோற்றுவாயாக முன்னாள் தமிழர் விடுதலைக் கூட்டணி, இலங்கைத் தமிழரசுக் கட்சியினதும் பின் தமிழர் விடுதலைக் கூட்டணியினதும் உருவாக்கத்திற்குக் காரணமாயிருந்த எஸ் ஜே வி செல்வநாயகம் (தந்தை செல்வா) அவர்களினால் கையொப்பமிடப்பட்டு ‘அனைத்துலக நீதிச் சபை’ முன் இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்துச் சமர்ப்பிக்கப்பெற்ற 1973 மே 15 திகதியிடப்பெற்ற முறையீடு அமைகிறது.

இந்த முறையீட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பெற்று இன்று அரை நூற்றாண்டு கடந்த நிலையில் சர்வதேசத் தலையீட்டுக் கோரிக்கை இதுவரை சாதித்தது என்ன என்ற கேள்விக்கு விடை பூச்சியமே. சர்வதேசத் தலையீடு என்பது நடைமுறையில் எவ்வளவு பலவீனமானது அல்லது சாத்தியமற்றது என்பதை இதனூடாகத் தெரிந்து கொள்ள முடியும். ஆனால், தமிழ் மக்களால் தேர்தல்களில் அங்கீகரிக்கப்பட்ட ஈழத் தமிழரின் அரசியல் தரப்பு இன்னும் சர்வதேசத்தையே நம்பிக் கொண்டிருக்கிறது. ‘தமிழ்த் தேசிய’ அரசியல்வாதிகளின் அண்மைக்கால அரைவேக்காட்டு அறிக்கைகள் அதைத்தான் காட்டுகின்றன. ‘தமிழ்த் தேசிய’ அரசியல்வாதிகள் சர்வதேசம் தலையிட வேண்டுமென்று ஆளுக்காள் போட்டி போட்டுக் கொண்டு அறிக்கை விடுகிறார்கள்.

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின்போது இழைக்கப்பட்ட போர்க் குற்றங்களுக்கான சர்வதேச விசாரணை-காணாமல் போனோர் விவகாரத்தில் சர்வதேசத் தலையீடு-இனப் பிரச்சனைக்கான தீர்வு குறித்துத் தமிழ் மக்களிடையேயான சர்வஜன வாக்கெடுப்பு என்றெல்லாம் இப்போது அடிக்கடி ‘சர்வதேச’ க் கதையளக்கும் ‘தமிழ்த் தேசியக்’ கட்சிகள் எதுவும் யுத்தம் முடிந்து மூன்று ஆண்டுகள் வாயே திறக்கவில்லை. யுத்தம் முடிவுற்றதைத் தொடர்ந்து 2010 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை (இவரே இறுதி யுத்தத்திற்கு இராணுவத் தலைமை ஏற்றிருந்தார்) ஆதரிப்பதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்த தீர்மானமும், 2010 இல் நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தலையொட்டித் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசு கட்சி) வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் போர்க் குற்றங்கள் குறித்த சர்வதேச விசாரணை பற்றிப் பிரஸ்தாபிக்கப்படாமையும் இன்று ‘தமிழ்த் தேசிய’ க் கட்சிகள் கோரி நிற்கின்ற சர்வதேசத் தலையீட்டுக் கோரிக்கைக்கு முரண்பாடானவையாகும். 2012ல் அமெரிக்கா ஐநா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் சீனா பக்கம் சாய்ந்து கொண்டிருந்த மஹிந்த ராஜபக்சவை இறுக்கிப்பிடிப்பதற்காகப் போர்க் குற்றங்கள் குறித்து இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டுவந்த பின்னரே தமிழ்த் தேசியக் கட்சிகள் சர்வதேச விசாரணை குறித்து வாய்திறந்தன. இது எதனைக் காட்டுகிறதென்றால் ‘தமிழ்த் தேசிய’ க் கட்சிகளால் முன்னெடுக்கப்படும் அரசியல், வெறும் சந்தர்ப்பவாத அரசியலே தவிர அது மக்களுக்கான அரசியல் அல்ல என்பதைத்தான்.

இன்று ‘முள்ளிவாய்க்கால்’ போர்க்குற்றங்களுக்காகச் சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரான சுமந்திரன் பா.உ. ஒரு கட்டத்தில் ‘சர்வதேச விசாரணை முடிந்து விட்டது. நவநீதம்பிள்ளை (ஐநா மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் ஆணையாளர்) யின் அறிக்கைதான் சர்வதேச விசாரணை’ என்று இவ்விடயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்ததையும் அதற்குத் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா ஒத்தூதியதையும் தங்கள் வசதிக்காக இப்போது இருவரும் மறந்து விட்டார்கள். சர்வதேசப் போர்க் குற்ற விசாரணை குறித்தோ-இனப் பிரச்சனைக்கான திருப்தியான அரசியல் தீர்வு குறித்தோ அர்ப்பணிப்புடன் கூடிய தெளிவான வழிவரைபடம் ‘தமிழ்த் தேசிய’ அரசியல்வாதிகள் எவரிடமும் இல்லையென்பதைப் புரிந்து கொள்வதற்கு இந்த ஒரு விடயமே போதும். 

காலத்துக்குக் காலம் ‘தமிழ்த் தேசிய’க் கட்சிகள் ஒன்று கூடுவதும் பின் பிரிவதும்கூட தேர்தல் அரசியலே தவிர அது மக்களுக்கான அரசியல் அல்ல. ‘தமிழ் தேசிய’கட்சிகளின் சர்வதேச பல்லவியும் இது போன்றதோர் தேர்தல் அரசியல் தேவைப்பாடுதான். இக்கட்சிகள் எல்லாம் இதுவரை தமிழ் மக்களுக்கு எந்தவிதமான சமூக பொருளாதார அரசியல் நன்மைகளையும் பெற்றுக் கொடுக்க முடியாத தமது கையாலாகாத்தனத்தை மறைப்பதற்காகவே சர்வதேசப் பாட்டுப் பாடுகின்றன. தமிழ் மக்களை எந்த வழியாக எந்த ஊருக்கு அழைத்துச் செல்ல வேண்டுமென்பதில் இத் ‘தமிழ்த் தேசிய’க் கட்சிகளிடம் தெளிவில்லை. திட்டமும் இல்லை. இல்லாத-பெயர் தெரியாத ஊருக்குத்தான் இக்கட்சிகள் வழி கூறிக் கொண்டிருக்கின்றன. இலங்கைத் தமிழர் பிரச்சினையில் சர்வதேச தலையீடு தீர்வைக் கொண்டுவரும் என்ற எதிர்பார்ப்பு ‘கானல் நீர்’ஆகும். அது வெறும் மாயையே. இலங்கைப் பிரச்சனையைப் பொறுத்தமட்டில் தலையிடக்கூடிய ஒரேயொரு நாடு இந்தியாவே.  

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு திருப்தியான தீர்வை ஏற்படுத்த இந்தியாவினால் மட்டுமே-இந்தியா மனம் வைத்தால் மட்டுமே முடியும் என்பதே யதார்த்தம். சர்வதேசமென்று விரல் நீட்டப்படுகின்ற மேற்குலக நாடுகள் எதுவும் இந்தியாவை மீறி அல்லது ஓரம் கட்டிவிட்டு இலங்கைத் தமிழர் பிரச்சினையில் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஈடுபடப்போவதில்லை என்பதையே இன்றைய உலக அரசியல் ஒழுங்கு உணர்த்தி நிற்கிறது.

எனவே, எதிர்காலத்தில் ஈழத் தமிழர்கள் ‘சர்வதேசம்’ என்ற மாயமானுக்குப் பின்னே சென்று ஏமாற்றம் அடையாமல் ‘இந்தியா’ என்கின்ற யதார்த்தத்தைப் பற்றிப் பிடிக்கின்ற அறிவுபூர்வமானதோர் அரசியல் பொறிமுறையொன்றினை-வியூகத்தினை-வகுத்துக் கொள்வது அவசியம். இதனையும்தான் இப் பத்தி ‘மாற்று அரசியல்’ ஆக அடையாளப்படுத்துகிறது.