— கலாநிதி ஜெகான் பெரேரா —
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை ஒழிப்பது தொடர்பில் சர்வஜனவாக்கெடுப்பு ஒன்றை நடத்துவது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக வெளியான செய்தி திடீரென்று தேர்தல் செயன்முறையில் அக்கறையை
தோற்றுவித்திருக்கிறது.
அடு்த்த வருடம் நடத்தப்படவேண்டிய ஜனாதிபதி தேர்தலில் எந்தவொரு வேட்பாளரும் முதற்சுற்று வாக்கு எண்ணிக்கையில் அதிகமான வாக்குகளைப் பெறப்போவதில்லை என்ற ஒரு அச்சவுணர்வும் வெளிப் படுத்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் எமது அயல்நாடான மாலைதீவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் முதற்சுற்று வாக்கு எண்ணிக்கையில் எந்தவொரு வேட்பாளரும் ஐம்பது சதவீத வாக்குகள் இலக்கை எட்டவில்லை.
இலங்கையில் முதலாவது ஜனாதிபதி தேர்தல் 1982 அக்டோபரில் நடைபெற்றது. அதிலும் அதைத் தொடர்ந்து இதுவரையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களில் வெற்றிபெற்றவர்கள் முதலாவது சுற்று வாக்கு எண்ணிக்கையிலேயே ஐம்பது சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறக்கூடியதாக இருந்தது.
இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கைக்கு போவது என்பது இலக்கையைப் பொறுத்தவரை புதியதொரு அனுபவமாக இருக்கும். ஆனால், ஜனாதிபதி தேர்தலில் மூன்று சுற்றுக்கள் வாக்கு எண்ணிக்கையை நடத்துவதற்கு எமது அரசியலமைப்பில் ஏற்பாடு இருக்கிறது. மூன்று சுற்றுக்களுக்கு பின்னரும் எந்த வேட்பாரும் ஐம்பது சதவீத வாக்குகள் இலக்கை அடையவில்லையானால் அதிகூடிய வாக்குகளைப் பெற்ற வேட்பாளரே ஜனாதிபதியாக தெரிவானதாக பிரகடனம் செய்யப்படும்.
இந்த சந்தேகத்துக்கு இடமான அடிப்படையில் ஜனாதிபதி பதவியை ஒழிக்கும் யோசனைக்கு புறம்பாக தேர்தல் முறையில் மாற்றத்தைச் செய்வதற்கான திட்டங்கள் குறித்தும் பேசப்படுகிறது.
உத்தேசிக்கப்படும் தேர்தல் சீர்திருத்தங்கள் பாராளுமன்றத்தின் மொத்தம் 225 உறுப்பினர்களில் 160 பேர் பழைய தொகுதி அடிப்படையில் தெரிவுசெய்யப்படுத்தற்கும் மீதி 65 பேரும் விகிதாசார வாக்களிப்பு முறையின் கீழ் தேசிய பட்டியலிலும் மாவட்ட பட்டியலிலும் கட்சிகள் பெறகின்ற வாக்குகளின் அடிப்படையில் தெரிவுசெய்யப்படுவதற்கும் வகைசெய்யும்.
இரு யோசனைகளுமே பெருவாரியான பிரச்சினைகளைக் கொண்டுவரும். அவை குறித்து கடந்த காலத்தில் தனியாகவும் கூட்டாகவும் பிரசாரம் செய்யப்பட்டிருந்தன. இடைக்கால சட்ட ஏற்பாடுகளாகவும் 2000 ஆம் ஆண்டிலும் 2015 ஆம் ஆண்டிலும் இடம்பெற்றதைப் போன்று புதிய அரசியலமைப்பைக் கொண்டுவரும் செயன்முறையின் அங்கமாகவும் அவற்றை கொண்டுவருவதற்கு முயற்சிக்கப்பட்டது.
ஆனால், ஒவ்வொரு தடவையும் பல்வேறு அரசியல் கட்சிகளிடம் இருந்தும் குழுக்களிடமிருந்தும் வந்த ஆட்சேபனைகள் மற்றும் சவால்களின் விளைவாக தேர்தல் சீர்திருத்த செயன்முறை தடங்கலுக்குள்ளானது.
உத்தேச அரசியலமைப்புத் தந்திரோபாயம் வெற்றியளிக்குமானால் அண்மைய எதிர்காலத்தில் நடத்தப்படவேண்டியிருக்கும் இரு பெரிய தேர்தல்களுக்கு இடையூறு ஏற்படும்.
முதலாவதாக 2024 அக்டோபருக்கு முன்னதாக ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டியிருக்கிறது. இரண்டாவதாக 2025 ஆகஸட் மாதமளவில் பாராளுமன்ற தேர்தலை நடத்தவேண்டியிருக்கும்.
ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடையவேண்டிவந்தால் அரசாங்கம் மிகவும் பலவீனமான நிலைக்கு தள்ளப்படும். புதிய ஜனாதிபதி தற்போதைய பாராளுமன்றத்தை அதன் பதவிக்காலம் 2025 ஆகஸ்டில் முடிவடையும் வரை நீடிக்கவிடாமல் உடனடியாகவே கலைத்து உரிய காலத்துக்கு முன்கூட்டியே பொதுத்தேர்தலுக்கு உத்தரவிடக்கூடிய சாத்தியம் இருக்கிறது.
அரசாங்கத்தின் அச்சம்
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கும் தேர்தல் முறையை மாற்றுவதற்கும் அவசரமாக செய்வதற்கான முயற்சி குறித்த செய்திகள் அந்த முயற்சியில் இறங்குவதற்கு முன்னதாக மக்களினதும் அரசியல் கட்சிகளினதும் மனநிலையை அறிந்துகொள்ளும் நோக்கத்துடன் வெளியிடப்பட்டவையாக இருக்கலாம்.
சில ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு அப்பால் அந்த முயற்சியின் பின்னணியில் இருக்கக்கூடிய கோட்பாடு மற்றும் செயன்முறை பற்றி பெரிதாக எதுவும் தெரியாது. ஒளிவுமறைவின்றி எதுவும் செய்யப்படுவதாக இல்லை.
ஆனால், பெரும் செலவை ஏற்படுத்தக்கூடிய சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின் மூலமாக மக்களின் கருத்துக்களை உறுதிப்படுத்திக்கொள்வதற்கு நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுக்கக்கூடும் என்ற சாத்தியம் தேர்தல் ஆணைக்குழுவை மீண்டும் செயலில் இறங்கவைத்திருக்கிறது போன்று தோன்றுகிறது.
நீண்டகாலமாக தாமதிக்கப்படும் உள்ளூராட்சி தேர்தல்கள் விரைவில் நடத்தப்படுவதை உறுதிசெய்வதற்கான புதிய முயற்சியொன்று முன்னெடுக்கப்பட்டிருப்தாக தேர்தல் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க கூறியிருக்கிறார். அரசாங்கத்தின் நிதி நிலைமை தற்போது மேம்பட்டிருப்பதை தாங்கள் கருத்தில் எடுத்திருப்பதாகவும் உள்ளூராட்சி தேர்தல்கள் தொடர்பில் சில நீதிமன்ற தீர்ப்புகள் வரவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
உள்ளூராட்சி தேர்தல்களுக்கு சமர்ப்பிக்கப்பட்ட நியமனப்பத்திரங்களை ரத்து செய்வதற்கான தீர்மானத்துக்கு பொதுநிருவாக, உள்நாட்டு அலுவல்கள், மாகாணசபைகள், உள்ளூராட்சி அமைச்சின் ஆலோசனை குழுவில் செப்டெம்பர் 20 ஆம் திகதி ஏகமனதாக இணக்கம் தெரிவிக்கப்படடபோது தேர்தல் ஆணைக்குழுவின் அந்தஸ்து அதன் தாழ்வெல்லைக்கு சென்றிருந்தது எனலாம்.
உள்ளூராட்சி தேர்தல்களுக்காக பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியை விடுவிக்குமாறு அரசாங்க திறைசேரியிடம் தேர்தல் ஆணைக்குழு திரும்பத்திரும்ப விடுத்த கோரிக்கைகள் அலட்சியம் செய்யப்பட்ட பிறகே அந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
நாட்டின் பொருளாதார நெருக்கடியின் விளைவாக தேர்தல்களுக்கு செலவிட போதுமான பணம் இல்லை என்ற காரணத்தை கூறியே உள்ளூராட்சி தேர்தல்களை அரசாங்கம் ஒத்திவைத்தது.
உள்ளூராட்சி தேர்தல்களுக்காக தேசிய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியை நிறுத்திவைக்கக்கூடாது என்று உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் கூட அலட்சியம் செய்கிற அளவுக்கு அந்த தேர்தல்களை நடத்துவதற்கு அனுமதிக்கக்கூடாது என்ற முடிவில் அரசாங்கம் உறுதியாக இருந்தது.
உள்ளூராட்சி தேர்தல்களை நடத்துவதிலான தாமதம் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு அரசாங்கம் முயற்சி செய்துகொண்டிருக்கும் ஒரு நேரத்தில் அதன் நியாயப்பாட்டை இல்லாமல் செய்திருக்கக்கூடிய ஒரு தோல்வியை தடுத்திருக்கிறது.
உள்ளூராட்சி தேர்தல்களை நடத்துவது தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை அலட்சியம் செய்த அரசாங்கத்தின் தீர்மானம் ஜனநாயகம் தடம்மாறிச் செல்கிறது என்பதன் அறிகுறியாகும். அதே போன்று மீண்டும் நீதிமன்றங்களின் தீர்ப்பை அரசாங்கம் அலட்சியம் செய்யக்கூடாது என்பதே எதிர்பார்ப்பாக இருக்கிறது.
பலவந்தமாக ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு உறங்குநிலைக்குச் செல்ல நிர்ப்பந்திக்கப்பட்ட பிறகு மீண்டும் செயலில் இறங்குவதற்கு தேர்தல் ஆணைக்குழு எடுத்திருக்கும் முடிவு சில குறிப்பிட்ட முக்கியமான பொறிமுறைகளின் நிறுவன ரீதியான நேர்மை சேதமுறாது அப்படியே இருக்கிறது என்பதற்கான நேர்மறையான அறிகுறியாகும். தருணம் உகந்ததாக இருக்கும் பட்சத்தில் அரசாங்கத்தின் ஏனைய நிறுவனங்களும் நேர்மையுடன் ஆக்கபூர்வமாக செயற்படுவதற்கு இது உத்வேகத்தைக் கொடுக்கலாம்.
குறிப்பாக, நன்றாக இயங்குகின்ற ஜனநாயகத்தில் நிறைவேற்று அதகாரத்துக்கும் பாராளுமன்றத்துக்கும் சமதையானதாக இருக்கவேண்டிய நீதித்துறையை பொறுத்தவரை இது உண்மையாகும்.
காலாவதியான ஆணை
உள்ளூராட்சி தேர்தல்களையும் மாகாணசபை தேர்தல்களையும் நடத்துவதற்கு அரசாங்கம் திரும்பத்திரும்ப மறுத்துவருகின்ற ஒரு நேரத்தில் ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பது தொடர்பில் சர்வஜனவாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்கு அது காட்டும் ஆர்வம் ஒரு அரசியல் உபாயத் தன்மையானது என்ற ஊகங்களுக்கு வழிவகுக்கிறது.
புதிய ஜனாதிபதி ஒருவரினால் கலைக்கப்படுவதில் இருந்து தற்போதைய பாராளுமன்றத்தை பாதுகாப்பது என்பது சுலபமான ஒரு காரியமாக இருக்கப் போவதில்லை. ஜனாதிபதி பதவியை ஒழிப்பதுவும் கூட சுலபமானதாக இருக்கப்போவதில்லை.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவி மாத்திரம் தற்போதைய அரசியலமைப்பின் மைய அம்சம் அல்ல. இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன ஒரு தடவை கூறியது போன்று பாராளுமன்றத்தின் “விருப்பு வெறுப்புகளில்” இருந்து விடுபட்டவராக ஜனாதிபதி இருக்கிறார்.
ஜனாதிபதி பதவி ஒழிக்கப்பட்டால், பாராளுமன்றப் பெரும்பான்மையின் விருப்பு வெறுப்புகளில் இருந்து விடுபட்டவராக தற்போது இருக்கும் ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் எதிர்காலம் பற்றிய கேள்வி ஒன்று எழும்.
மாகாணங்களின் ஆளுநர்களை நியமிக்கும் அதிகாரத்தைக் கொண்டவர் என்ற வகையில் மாகாணசபை முறைமையிலும் மைய வகிபாகத்தைக் கொண்டவராக ஜனாதிபதி விளங்குகிறார்.
ஜனாதிபதி பதவியை ஒழிப்பதற்கான முயற்சிகள் தொடர்பில் செய்திகள் வெளியானதற்கு சமாந்தரமாக புதிய அரசியலமைப்பு ஒன்றை வரைவதற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட அரசியலமைப்புக்குழு அதன் கூட்டமொன்றை நடத்தியது ஒன்றும் தற்செயலானது அல்ல. அந்த கூட்டத்தில் உரையாற்றியவர்கள் ஒருவர் மாறி ஒருவர் நாட்டின் ஐக்கியத்துக்கும் சுயாதிபத்தியத்துக்கும் மாகாணசபைகள் மற்றும் அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தினால் தோற்றுவிக்கப்படுவதாகக் கூறப்படும் ஆபத்து பற்றியே பேசினார்கள்.
ஜனாதிபதி பதவியை ஒழிப்பதற்கு அரசாங்கம் நாட்டம் காட்டுகின்ற அதேவேளை முனனாள் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட அரசியலமைப்புக்குழு ஜனாதிபதி பதவியை மேலும் பலப்படுத்தவேண்டும் என்று வாதிடுவது ஒரு முரண்நகையாகும். அதனால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பது என்பது பெரு சர்ச்சைகளை தோற்றுவிக்கும்.
தற்போதைய தருணத்தில் தேர்தல் முறையை மாற்றுவதற்கான அரசாங்கத்தின் திட்டமும் கூட ஒப்பேறுவது சாத்தியமில்லை. உத்தேச புதிய தேர்தல் முறை இன,மத சிறுபான்மைச் சமூகங்களின் பிரதிநிதிகள் தெரிவாவதற்கு பாதகமாக அமையும் என்பதால் அவர்கள் அதற்கு தங்களது ஆதரவை வழங்க முன்வரப்போவதில்லை.
தேர்தல் முறையில் மாற்றத்தைச் செய்வதற்கு அரசாங்கம் கொண்டிருக்கும் யோசனை 2017 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டிருக்க வேண்டிய மாகாணசபை தேர்தல்களை இன்று வரையில் நடத்த முடியாத சூழ்நிலையை ஏற்படுத்திய செயன்முறை பற்றிய பீதியை மீண்டும் ஏற்படுத்துகிறது.
அந்த மாகாணசபை தேர்தல்களை நடத்த வேண்டியிருந்த நேரத்தில் தேர்தல் சட்டத்துக்கு பெண்களுக்கான ஆசன ஒதுக்கீடு உட்பட சில நேர்மறையான சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் முன்மொழிந்தது.
நடைமுறையில் இருந்த மாகாணசபை தேர்தல் சட்டம் செல்லுபடி யற்றதாக்கப்பட்டதும் சீர்திருத்தங்களை உள்ளடக்கிய புதிய சட்டத்தை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் தவறியது. அதற்கு பிறகு மாகாணசபைகள் ஒரு இயங்கா நிலைக்கு வந்தன.
அதே போன்ற நிலைமை பாராளுமன்றத்துக்கும் ஏற்படுமானால் அது நாடடின் ஜனநாயகத்துக்கு பாரிய ஒரு அனர்த்தமாகப் போய்விடும். மக்களினால் தெரிவு செய்யப்பட்ட ஒரு ஜனாதிபதியோ, பாராளுமன்றமோ, மாகாணசபைகளோ அல்லது உள்ளூராட்சி சபைகளோ இல்லாத ஒரு நிலைமையை அது கொண்டுவந்துவிடும். பதிலாக மக்களின் ஆணை காலாவதியான அரசாங்கத் தலைவர்களையே நாடு கொண்டிருக்க வேண்டியிருக்கும்.