தேர்தல்களை தவிர்த்து சாத்தியமானளவு காலம்  அதிகாரத்தில் இருக்க வியூகம்

தேர்தல்களை தவிர்த்து சாத்தியமானளவு காலம் அதிகாரத்தில் இருக்க வியூகம்

 — வீ. தனபாலசிங்கம் —

   தேசிய தேர்தல்கள் ஒத்திவைக்கப்படுமா? அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிக்கப்படுமா? பாராளுமன்ற தேர்தல் முறையில் மாற்றத்தைச் செய்வதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது என்ற தலைப்புகளுடன் கடந்த வாரம் வெளியான பத்திரிகைச் செய்திகள் இலங்கை அரசியல் நிலைவரம் எந்தளவுக்கு குழப்பகரமானதாக இருக்கிறது என்பதையும், மக்கள் முன்னால் செல்வதற்கு அஞ்சும் அரசாங்கம் தேர்தல்களைச் சந்திப்பதை தவிர்த்து எவ்வளவு காலத்துக்கு அதிகாரத்தில் இருக்கலாம் என்று தடுமாறிக் கொண்டிருப்பதையும் பிரகாசமாக வெளிக்காட்டுகின்றன.

 பாராளுமன்ற தேர்தலையும்  பழைய தொகுதி அடிப்படையிலான முறை மற்றும்  தற்போதைய விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையை  உள்ளடக்கிய கலப்பு முறையில் நடத்துவதற்கான யோசனை அடங்கிய அமைச்சரவை பத்திரம் ஒன்றை நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச தயாரித்திருப்பதாக கூறப்படுகிறது.

 அதன் பிரகாரம் தொகுதி அடிப்படையில் பாராளுமன்றத்துக்கு 160 உறுப்பினர்களை மக்கள் தெரிவுசெய்யும் அதேவேளை விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் 65 ஆசனங்கள் ஒதுக்கப்படும்.

    இந்த முயற்சி உள்ளூராட்சி தேர்தல்களை காலவரையறையின்றி ஒத்திவைத்ததைப் போன்று அடுத்த வருட பிற்பகுதியில் நடத்தப்பட வேண்டியிருக்கும் ஜனாதிபதி தேர்தலை  ஒத்திவைப்பதற்கான ஒரு முயற்சி என்று  எதிரணி கட்சிகள் உடனடியாகவே சந்தேகத்தை கிளப்பியிருக்கின்றன.

  உள்ளூராட்சி தேர்தல்கள் கலப்பு முறையில் ஏற்கெனவே ஒரு தடவை 2018 பெப்ரவரியில் நடத்தப்பட்டன. மாகாண சபைகளுக்கும் அதே கலப்புமுறையில் தேர்தல்களை நடத்துவதற்கு ‘நல்லாட்சி’  அரசாங்க காலத்தில்  பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியது. ஆனால் தொகுதி எல்லை நிர்ணயக் குழுவொன்று நியமிக்கப்படாத காரணத்தால் மாகாணசபை தேர்தல்கள் ஐந்து வருடங்களுக்கும் அதிகமான காலமாக நடத்தப்படாமல் இருக்கின்றன.     அதனால் அரசாங்கத்தின் தற்போதைய முயற்சி குறித்து அரசியல் கட்சிகள் மத்தியில் மாத்திரமல்ல மக்கள் மத்தியிலும் வலுவான சந்தேகம் எழுவது தவிர்க்க முடியாதது.

   விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறையும் விருப்பு வாக்கு முறையும் படுமோசமான ஊழலுக்கும் முறைகேடு  களுக்கும் காரணமாக அமைந்து  பிரதிநிதித்துவ ஜனநாயகத்தை நான்கு தசாப்தங்களாக  கேலிக்கூத்தாக்கியிருக்கும் நிலையில்  மக்கள் தேர்தல் முறையில் மாற்றங்கள் தேவை என்று விரும்புகிறார்கள்.  பல வருடங்களாக இது தொடர்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் செய்யப்படக்கூடிய மாற்றங்கள்  எந்தவொரு தேசிய தேர்தலையும் ஒத்திவைப்பதற்கு வழிவகுப்பதை மக்களால் ஏற்றுக் கொள்ளமுடியாது.

  கடந்த வருடத்தய மக்கள் கிளர்ச்சியை அடுத்து ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலகிய காரணத்தினால்  இறுதியாக நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிலும் பாராளுமன்ற தேர்தலிலும் நாட்டு மக்கள் வழங்கிய ஆணை இனிமேலும் செல்லுபடியாகக் கூடியது என்று வாதாடுவது உண்மையில் அர்த்தமற்றது.  

   புதிய ஜனாதிபதி அரசியலமைப்பின் பிரகாரம் தெரிவு செய்யப்பட்டு, அதே பாராளுமன்ற பெரும்பான்மையின் ஆதரவுடன் அவர் ஆட்சி செய்துவருகின்ற போதிலும்,  அரசாங்கத்தின் இருப்பின் நியாயப்பாடு கடுமையாகக்  கேள்விக் குள்ளாகியிருக்கிறது. புதிய தேர்தல்களின் மூலமாக மக்கள் தங்களது பிரதிநிதிகளை தெரிவுசெய்வதற்கு அனுமதிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்திருக்கிறது.  இதற்கு மத்தியில்  தேசிய தேர்தல்களை ஒத்திவைப்பது நிச்சயமாக  ஜனநாயக விரோத செயலாகவே அமையும்.

   நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிக்கப்பட்டு நிறைவேற்று அதிகார பிரதமருடன் கூடியதாக பாராளுமன்ற ஆட்சிமுறை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வரப்படவேண்டுமா இல்லையா என்பது குறித்து  சர்வஜனவாக்கெடுப்பு ஒன்றுக்கு இறுதியில் வழிவகுக்கக்கூடிய ஒரு முயற்சியின் அங்கமாகவும் விஜேதாச ராஜபக்சவின் அமைச்சரவைப் பத்திரம் இருப்பதாகவும் இது தொடர்பில் அவரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் விரிவான கலந்தாலோசனையை நடத்தியதாகவும்  கூறப்படுகிறது.

 இவை தொடர்பில் ஆராய்வதற்கு அமைச்சரவை உப குழு ஒன்று நியமிக்கப்பட விருப்பதாக விஜேதாச ராஜபக்ச கூறுகிறார்.

    தேர்தல் சீர்திருத்தம் குறித்த அமைச்சரவை பத்திரம் அங்கீகரிக் கப்படுமானால், அரசியல் சூழ்நிலையும் உகந்ததாக அமையும் பட்சத்தில் அரசியல் உயர்மட்ட கலந்தாலோசனைகளின் பின்னர்  சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை  நடத்துவதற்கான ஏற்பாடுகள் செயயப்படும். ஜனாதிபதியினால் மாத்திரமே சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றுக்கு உத்தரவைப் பிறப்பிக்கமுடியும்.

   அந்த சர்வஜனவாக் கெடுப்பின் முடிவுகளின் அடிப்படையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிக்கப்படுவதற்காக மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவைப் பெறுவதற்காக இந்த விவகாரம்  பாராளுமன்றத்துக்கு கொண்டு வரப்படும். அவ்வாறு நடைபெறுமானால் அவசியமான சட்டத்திருத்தங்களை செய்வதற்காக ( 2024 நவம்பரில் நடத்தப்படவேண்டியிருக்கும் ) ஜனாதிபதி தேர்தல் ஒத்திவைக்கப்படக்கூடிய சாத்தியம் இருக்கிறது என்று ஊகிக்கப்படுவதாக  மூத்த பாராளுமன்ற உறுப்பினர்களை மேற்கோள் காட்டி பத்திரிகைகள்  கடந்த வாரம் செய்திகளை  வெளியிட்டன.

  கடந்த வருடத்தைய பொருளாதார நெருக்கடியின் விளைவான மக்கள் கிளர்ச்சியின் பின்னரான அரசியல் சூழ்நிலையில் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியடையக் கூடியதாக எந்தவொரு கட்சியின் வேட்பாளரும் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறப்போவதில்லை என்ற நம்பிக்கையும் அரசாங்கத்தின் புதிய முயற்சிக்கு ஒரு காரணம் என்றும் அந்த செய்திகள் கூறின.

  ஆனால், எதிரணி கட்சிகள் மாத்திரமல்ல, ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் கூட அரசாங்கத்தின் இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பது சாத்தியமில்லை என்றே தெரிகிறது.

  இது விடயத்தில் ஒரு விசித்திரமான அம்சத்தை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. அதாவது அரசாங்கத்தின் முயற்சியை எதிர்ப்பதற்கு ஆளும் பொதுஜன பெரமுனவும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.)வும் கூட ஒரேவிதமான காரணத்தை கூறுவதாக அறியமுடிகிறது.

   நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை நீடிக்கவேண்டும் என்ற ஆணையுடன் தற்போதைய அரசாங்கம் தெரிவுசெய்யப்பட்டதன் காரணத்தால் குறைந்த பட்சம் 2025 பாராளுமன்ற தேர்தல் வரையாவது அந்த ஆட்சிமுறை தொடரவேண்டும். அதை ஒழிப்பதானால் அந்த பாராளுமன்ற தேர்தலில் தெரிவு செய்யப்படக்கூடிய புதிய அரசாங்கத்தின் கீழேயே செய்யவேண்டும் என்று பொதுஜன பெரமுனவின் உயர்மட்ட வட்டாரங்கள் கூறுவதாக தகவல்.

  ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்புக்கு  வாக்களிக்கு முகமாக முதலில் 2025 பாராளுமன்ற தேர்தலில் புதிய அரசாங்கம் தெரிவு செய்யப்படவேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்துகின்ற அதேவேளை அடுத்த அரசாங்கம் மக்களின் புதிய ஆணையுடன் பதவிக்கு வரும் என்பதால் அதுவரைக்கும் ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பது குறித்து  தீர்மானிக்க முடியாது. அதற்கு முன்னதாக முன்னெடுக்கப் படக்கூடிய எந்த முயற்சியும் வெற்றியளிக்காது என்று ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) கூறுகிறது.

   இந்த கட்சிகளின் நிலைப்பாடுகள் தொடர்பில் வெளிவருகின்ற தகவல்களை அடிப்படையில் நோக்கும்போது அவற்றுக்கு அரசாங்கத்தின் உத்தேச முயற்சிகளின் நோக்கம் சாத்தியமானவரை தேர்தல்களை ஒத்திவைப்பதே என்ற வலுவான  சந்தேகம் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியும். அதனால் அவை அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பை வழங்கப்போவதில்லை என்பது நிச்சயம்.

  ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு பற்றி எந்த அக்கறையும் இல்லாமல் இருந்துவரும் அரசாங்கம் திடீரென்று அதைப் பற்றி சிந்திக்கத் தொடங்கியிருப்பது தான் மிகப் பெரிய ஆச்சரியம்.

  தேர்தல்களுக்கு முகங்கொடுப்பதை தவிர்ப்பதற்காக, கடந்த நான்கு தசாப்தங்களாக சாத்தியப்படாமல் இருந்துவரும் ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு குறித்து யோசனையை மீண்டும் அரசாங்கம் முன்வைக்கும் விசித்திரத்தை காண்கிறோம். 

  ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதாக தேர்தல்களில் நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கி அதிகாரத்துக்கு வந்த எந்த ஜனாதிபதியும் அதை நிறைவேற்றவில்லை. தற்போதைய அரசியலமைப்பை மாற்றுவதற்கு மிகுந்த அக்கறையுடன் முன்னெடுக்கப்பட்ட ஒரு முயற்சி என்றால், அது 2000 ஆம் ஆண்டில் ஜனாதிபதி திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த புதிய அரசியலமைப்பு வரைவாகவே இருக்கமுடியும்.

  திருமதி குமாரதுங்க தனது இரண்டாவது பதவிக்காலத்தின் முடிவில் மீண்டும் பிரதமராக பாராளுமன்றத்துக்கு வரும் திட்டத்தை மனதிற்கொண்டே அந்த வரைவை சமர்ப்பித்ததாக  குற்றஞ்சாட்டிய அன்றைய எதிரணி குறிப்பாக ஐக்கிய தேசிய கட்சி அவரது முயற்சியை சீர்குலைத்தது. 

    எதிர்க்கட்சி தலைவராக விக்கிரமசிங்க அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க அவரது கட்சியின் உறுப்பினர்கள் சபைக்குள் வரைவின் பிரதிகளை தீயிட்டுக் கொளுத்தி அட்டகாசம் செய்தததை  நாம் எல்லோரும் கண்டோம்.

   அதற்கு பிறகு ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு தொடர்பில் அக்கறையுடனான முயற்சி எதுவும் முன்னெடுக்கப்பட்டதாக இல்லை. இறுதியாக நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு குறித்து பேசப்பட வேயில்லை.

  தற்போதைய அரசாங்கம் பாராளுமன்றத்தில் அதன் பெரும்பான்மையை தக்கவைத்துக் கொள்வதற்கு பெரும் கஷ்டப்படுகிறது. முக்கியமான ஒவ்வொரு சட்டமூலமும் அல்லது தீர்மானமும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டவுடன் வாக்குகளின் எண்ணிக்கையை காட்டி அரசாங்கம் அறுதிப் பெரும்பான்மையை விடவும் மேலதிகமாக கொண்டிருக்கும் ஒவ்வொரு  வாக்கு குறித்தும் பெருமைப்பட்டுக் கொள்கிறது.

  இத்தகைய பின்புலத்தில், அதுவும் ஜனாதிபதி ஆட்சிமுறை தொடர்பில் பொதுஜன பெரமுனவின் நிலைப்பாட்டை நன்கு தெரிந்துகொண்ட நிலையில் அதை ஒழிப்பதற்கான யோசனை முன்வைக்கப்படுகிறது என்றால் அதன் பின்னணியில் ஒரு அந்தரங்கத் திட்டம் இருக்கிறது என்று எவரும் சந்தேகப்படவே செய்வர். 

   அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தைப் பொறுத்தவரையிலும் கூட அதை நடைமுறைப்படுத்தும் தனது யோசனைக்கு  ஆதரவு கிடைக்காது என்பதை நன்கு தெரிந்துகொண்டுதான் ஜனாதிபதி விக்கிரமசிங்க அது தொடர்பில் தீர்மானிக்கும் பொறுப்பை தற்போதைய பாராளுமன்றத்திடம் ஒப்படைத்துவிட்டு தனது பொறுப்பைக் கைகழுவிவிட்டார்.

  தற்போதைய பாராளுமன்றத்தைப் பயன்படுத்தி எதைச் செய்யமுடியும்? எதைச் செய்யமுடியாது என்பதை விக்கிரமசிங்க நன்கு அறிவார். அதனால் பாராளுமன்ற தேர்தல் முறையில் மாற்றத்தை கொண்டு வருவதற்கும் அதன் நீட்சியாக ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கும் என்று கூறிக்கொண்டு அரசாங்க உயர்மட்டம் முன்வைக்கும் யோசனை ஒப்பேறக்கூடிய ஒன்றாக தெரியவில்லை.

  அதேவேளை 2025 பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு மக்களின் புதிய ஆணையுடன் பதவிக்கு வரக்கூடிய அரசாங்கமே ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு விவகாரத்தைக் கையாளவேண்டும் என்று கூறும் பொதுஜன பெரமுனவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தியும்  ஜே.வி.பி.யும் அந்த தேர்தலில் ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்புக்கு மக்களின் ஆணையைக் கேட்டு விஞ்ஞாபனத்தை முன்வைக்கவேண்டும். 

   அந்த ஆட்சிமுறை ஒழிப்பு குறித்து உறுதியான நிலை்பாட்டைக் கொண்டிருக்கும் ஜே.வி.பி. அண்மைக்காலமாக அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளராக அதன் தலைவர் அநுரா குமார திசாநாயக்கவை ஏற்கெனவே அறிவித்துவிட்டது. ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளராக பிரேமதாச சில மாதங்களுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டுவிட்டார். இவர்கள் எல்லோரும் ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு குறித்து அண்மைக்காலமாக முன்னைய  உறுதிப்பாட்டுடன்   பேசுவதில்லை.

   அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தலுக்கு முகங்கொடுக்க முடியாத நிலையில் ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு குறித்தும் பாராளுமன்ற தேர்தல் முறையில் மாற்றம் குறித்தும் கதையை அவிழ்த்துவிட்டிருக்கும் அரசாங்கம் அவை தொடர்பிலான சட்டவாக்க செயன்முறைகளை முன்னெடுக்க கால அவகாசம் தேவை என்று ஒரு விளக்கத்தைக் கூறி ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்கலாம் என்று நினைக்கிறது போலும். 

   தற்போதைய பாராளுமன்றத்தின் பதவிக்காலம் 2025 ஆகஸ்ட் வரை நீடிக்கிறது. அது வரைக்கும் அதிகாரத்தில் இருந்து பிறகு வேறு ஒரு வியூகத்தை வகுக்கலாம் என்ற விபரீதமான நம்பிக்கையில் அரசாங்கத் தலைவர்கள் இருக்கிறார்கள் என்று நினைக்க வேண்டியிருக்கிறது.

  (ஈழநாடு )