— அழகு குணசீலன் —
“போர் ஒருநாள் முடிவடையும்
தலைவர்கள் கைகுலுக்கிக் கொள்வார்கள்
இறந்து போன மகனின் வருகைக்காக
வயதான தாய் காத்திருப்பாள்
காதல் கணவனை எதிர்பார்த்து
காத்திருப்பாள் அந்தப் பெண்
அந்தக் குழந்தைகள் தங்கள்
சாகச அப்பாவின் வருகையை
எதிர்பார்த்து காத்திருப்பார்கள்
எங்கள் மண்ணை யார் விற்றார்கள்
என எனக்குத் தெரியாது -ஆனால்
அதற்கான விலையை யார் தருகிறார்கள்
என்பதற்கு சாட்சி நான் ….”
பாலஸ்தீனக்கவிஞர் மெஹகமுத் பார்விஷ் வடித்த இந்த சிற்பம் -கவிதை
ஈழவிடுதலைப் போர் தின்ற தமிழர் தேசத்தின் இன்றைய சமூகவாழ்வியலையும், தொடரும் பாலஸ்தீன விடுதலைப்போராட்டத்தில்-போரில் பாலஸ்தீன மக்களின் ஏக்கங்களுக்கும், துயரங்களுக்கும் வெளிச்சம் போடுகிறது.
1880 இல் ரஷ்யாவில் சிறுபான்மை யூதர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இன, மத வாத வன்முறைகள் ( POGROMS) காரணமாக அவர்கள் பாலஸ்தீனம் நோக்கி குடி பெயர்ந்தார்கள். அன்றிலிருந்து படிப்படியாக இடம்பெற்ற குடிப் பெயர்வு கிட்லரின் யூத இன அழிப்பை தொடர்ந்து 1948 இல் இஸ்ரேல் என்ற தனியரசு உருவாக வழிவகுத்தது. இதன்போது அராபியர்கள் குறிப்பாக முஸ்லீம்கள் தங்கள் சொந்த நிலத்தில் இருந்து விரட்டப்பட்டார்கள். இதனால் ஏற்பட்ட அரசியல் முரண்பாடு- ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டம் கடந்த மூன்று கால் நூற்றாண்டுகளாக வரலாறாக தொடரும் பாலஸ்தீன மக்களின் துயரம் இது.
பாலஸ்தீனர்கள் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட தங்கள் தேசத்தை மீட்க போராடுகிறார்கள். இஸ்ரேல் தனது ஆக்கிரமிப்பை தொடர்ந்தும் விரிவும், விரைவும் படுத்துகின்றது. திட்ட மிட்டு ஆக்கிரமிப்பு குடியேற்றங்களை மேற்கொள்கிறது.1993 ஒஸ்லோ (1} சமாதான உடன்பாட்டின் “இரு அரசுகள்” 1995 வாஷிங்டன் -ஒஸ்லோ (2) தீர்மானங்கள் நடைமுறையில் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளன. சுயாதீனமான இஸ்ரேல், பாலஸ்தீன தேசங்களுக்கான இரண்டு அரசுகள் உருவாக்கும் இலக்கு இன்னும் அடையப்படவில்லை.
இங்கு இஸ்ரேல் அரசை அங்கிகரிக்க கடும்போக்கு இஸ்லாமிய அடிப்படை வாதிகளும், ஹாமாஸ் அமைப்பும் தயாராக இல்லை. உலகவரைபடத்தில் இருந்து இஸ்ரேல் அழிக்கப்படவேண்டும் என்று கூறுகிறது ஈரான். இதே கருத்துத்தான் ஹிஷ்புல்லாவுக்கும். மறுபக்கத்தில் அங்கீகாரத்தை கோரி நிற்கிறது இஸ்ரேல்.
இஸ்ரேல் குடியேற்றவாசிகளும், யுத அடிப்படை வாதிகளும் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கவும் தயாரில்லை. இதனால் சமாதானத்திற்கான நோபல் பரிசு YITZHAK RABIN, SHIMON PERES, YASSIR ARAFAT ஆகியோருக்கு வழங்கப்பட்டபோதும் சமாதானம் கிட்டவில்லை கிடைத்தது பரிசு மட்டும்தான்.
இதற்கு முன்னர் 1947 இல் இரு நாடுகள் தீர்மானம் ஐ.நா.பொதுச்சபையில் நிறைவேற்றப்பட்ட போதும் வல்லரசுகளின் சுயநலன் சார்ந்த போக்கு, அரபு நாடுகள் நிலப்பங்கீட்டை அங்கீகரிக்காமை, முழு நிலப்பரப்பையும் கொண்ட பாலஸ்தீன சுயாதீன அரசைக் கோரியமை என்பன காரணமாக அந்த தீர்மானத்தை ஐ.நா. கிடப்பில் போடவேண்டிய நிலை ஏற்பட்டது.
1988 நவம்பர் 15 அல்ஜீரிய பாலஸ்தீன தனிநாட்டு பிரகடனம் ஐ.நா.வின் 193 அங்கத்து நாடுகளில் 138 நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டது. இவற்றில் இந்தியாவும், இலங்கையும் அடங்கும். உலக சனத்தொகையில் 80 வீதமான மக்களைக் கொண்ட நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட தனிநாடு பிரகடனம் அமெரிக்க ஏகாதிபத்திய அனுசரணையுடன் இஸ்ரேலால் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறது. இதற்கு மறுபக்க காரணம் பாலஸ்தீன தனியரசை அங்கீகரித்த அல்ஜீரியா, ஈராக், குவைத், லிபியா, மலேசியா, சோமாலியா,ஜேமன், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், கியூபா, பாகிஸ்தான், சவூதி அரேபியா, இந்தோனேசியா, வடகொரியா,ரிஷாத், ஈரான், லெபனான், சிரியா என்பன இஸ்ரேலை அங்கீகரிக்க மறுப்பதாகும்.
இதற்கிடையில் பாலஸ்தீன அமைப்புக்களுக்கு இடையிலான முரண்பாடு பாலஸ்தீனத்தையும், மக்களையும் இரண்டாக கூறுபோட்டுள்ளது. மேற்குக் கரையை யசீர் அரபாத்தின் FATAH வும் -தற்போது முகமட் அப்பாஸ் தலைமையிலான அரசும், காஸாவை காமாஸும் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. FATAH வின் இஸ்ரேலை அங்கீகரிக்கின்ற சமாதானத்திற்கான இணக்க அரசியலை காமாஸ் நிராகரிக்கிறது. இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல்களை தொடர்கிறது. காமாஸின் இஸ்ரேல் மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் அந்த அமைப்பை பயங்கரவாத அமைப்பாக மேற்குலகம் தடை செய்ய காரணமாக அமைந்தது.
இந்த அரசியல் – இராணுவ சூழலை இந்திய – இலங்கை சமாதான உடன்பாட்டுக் காலத்துடன் முழுமையாக இல்லாவிட்டாலும் இலகுவான புரிதலுக்காக ஓரளவு ஒப்பிடலாம். இந்திய – இலங்கை சமாதான உடன்பாட்டை நிராகரித்த விடுதலைப்புலிகள் அமைப்பை ஒஸ்லோ உடன்பாட்டை நிராகரிக்கின்ற காமாஸாகவும், உடன்பாட்டை ஏற்றுக்கொண்டு மாகாண சபையை ஆட்சிசெய்த ஈ.பி.ஆர்.எல்.எப் .கூட்டணி வரதராஜப்பெருமாள் ஆட்சியை FATAH வுக்கு சமமாகவும் ஒரு விளக்கத்திற்காக நோக்க முடியும். திட்டவட்டமான கட்டுப்பாட்டு பிரதேசங்களை அடையாளப்படுத்த முடியாவிட்டாலும் நிலைமை ஒப்பீட்டளவில் இப்படித்தான் இருந்திருக்கிறது. வரதராஜப்பெருமாள் ஆட்சி போன்றே அப்பாஷ் ஆட்சியும் பலவீனமானது. இதனால் மேற்குலகினதும் காமா இன் செல்வாக்கு அதிகரித்துள்ளது. அடுத்த தேர்தலில் மேற்குக் கரையும் காமாஸ் கைப்பற்றினாலும் ஆச்சரியமில்லை. இது நடந்தால் சமாதானத்திற்கு அதிகவிலை கொடுக்கவேண்டி இருக்கும்.
புலிகளின் அப்பாவி தமிழ், முஸ்லீம், சிங்கள மக்கள் மீதான, குடியேற்றக் கிராமங்கள் மீதான தாக்குதல்களும், எல்லை கடந்து சிங்கள தேசத்தில் இடம்பெற்ற இராணுவ இலக்கற்ற தாக்குதல்களும், நாடுகடந்த பயங்கரவாதமும் அந்த அமைப்பை மேற்குலகம் பயங்கரவாத அமைப்பாக தடை செய்ய காரணமாகியது. புலிகளின் கடும்போக்கு மெல்ல மெல்ல பயங்கரவாதத்திற்கு எதிரான ஒரு யுத்தத்தில் பிராந்திய, சர்வதேச நாடுகளை ஒருங்கிணைத்து சிங்கள பௌத்த பேரினவாத அரசுக்கு ஆதரவாக அமைந்தது. இப்போது காமாஸுக்கு எதிரான இஸ்ரேல் யுத்தப் பிரகடனம் பயங்கரவாதத்திற்கு எதிரானதாகவே அமெரிக்க, மேற்குலக அதிகாரவர்க்கத்தால் பிரச்சாரப்படுத்தப்படுகிறது.
திருகோணமலையில் மாவில் ஆறு விவகாரம் வன்னி நோக்கிய படையெடுப்புக்கு காரணமாக அமைந்தது போல், காமாஸின் அண்மைய தாக்குதல் இஸ்ரேல் படையெடுப்புக்கு காரணமாகிறது. கிழக்கில் பெருமளவுக்கு கட்டுப்பாட்டை நிலை நிறுத்திய பின்னர் வன்னி நோக்கிய இலங்கைப் படைகளின் நகர்வுடன் ஒப்பிடக்கூடியது இன்றைய இஸ்ரேலின் நகர்வுகள். மேற்குக்கரை அமைதியாக இருக்க காஸாவைத் தனிமைப்படுத்தி குறிவைக்கிறது இஸ்ரேல்.
அமெரிக்க மேற்கு கூட்டாளிகளும், அவர்களின் இராணுவ கூட்டணியின் நேட்டோவும் இந்த யுத்தங்களுக்கு பொறுப்பாகின்றன. அணுவாயுதம் தேடல், பயங்கரவாதம் என்ற போர்வையில் இந்த அணியினர் தமது யுத்த முனைப்பை இலகுவில் நியாயப்படுத்த முடிகிறது. இதன் அர்த்தம் இந்த நாடுகளின் மக்கள் முழுமையாக ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதல்ல. பயங்கரவாதத்தை அவர்கள் வெறுத்தாலும், ஒழிக்கப்பட ஆதரவு வழங்கினாலும் இருதரப்பிலும் பொதுமக்கள் கொல்லப்படுவதை மக்கள் ஏற்கவில்லை. இதனால் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக நேச சக்திகளின் போராட்டங்கள் மேற்கிலும் இடம்பெறுகின்றன.
ஆரம்பத்தில் குளிர்யுத்தகாலத்தில் சோஷலிச முகாமுக்கு எதிராக அமெரிக்கா நேரடி யுத்தத்தில் ஈடுபட்டது. அல்லது சோஷலிச முகாமுக்கு எதிரான யுத்தங்களுக்கு மறைமுகமாக ஆதரவளித்தது. வியட்நாம் மீதான யுத்தம், ஆப்கானிஸ்தானில் ரஷ்யாவுக்கு எதிரான யுத்தத்தில் வழங்கிய ஆதரவைக்குறிப்பிடலாம்.
11. 9 க்கு பின்னரான இரட்டை கோபுர தாக்குதலை தொடர்ந்தது பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்த பிரகடனம். இது நவ காலனித்துவ உலகமயமாக்க பொருளாதார நலன்களையும் அடிப்படையாகக்கொண்டது. ஈராக், லிபியா, சிரியா , ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் மீதான அமெரிக்க மற்றும் கூட்டாளிகளின் படையெடுப்புக்கள் இது சார்ந்தவை.
உக்ரைன் – ரஷ்ய யுத்தத்தில் மேற்குலகம் ஒரு புதிய மாற்று யுக்தியை கையாளுகிறது. யுத்தத்தின் தங்கள் ஆதரவு சக்திகளுக்கு ஆயுதத்தை வழங்கி மறைமுகமாக போருக்கு தலலைமையேற்று நடாத்துதல். இது உக்ரைன் – ரஷ்ய யுத்தத்தில் வெளிப்படையானது. இந்த அணுகுமுறையை காஸாவிலும் , இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும், மேற்குலகமும் பின் பற்றவுள்ளன. அமெரிக்காவின் இரு விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் மத்திய தரை பிராந்தியம் நோக்கி நகர்கின்றன.
யுத்தம் ஒன்றை தடுப்பதற்கான நடுநிலை இராஜதந்திர அரசியல் அணுகுமுறைகளை தவிர்த்து, ஒரு பக்க நிலைப்பாட்டை எடுத்து அதை ஆதரிக்கும் போக்கு. உக்ரைன் யுத்தத்தில் செய்ததையே மத்திய கிழக்கில் 5 நாட்களில் 7 அரபுநாடுகளை அணுகி இஸ்ரேலுக்காக ஆதரவு பயணம் ஒன்றை அமெரிக்கா வெளியுறவு அமைச்சர் மேற்கொண்டிருப்பது இதையே காட்டுகிறது. வேடிக்கை தன்னை ஒரு சமாதான தூதுவராக காட்சிப்படுத்துகிறார் அவர்.
இந்த மத்திய கிழக்கு பிராந்திய, சர்வதேச சூழலில் இஸ்ரேலின் காஸா நோக்கிய தரை, கடல் மார்க்க நகர்வுகள் அமையப்போகின்றன. இதுவரை காஸா மக்கள் உடைமைகளையும், உயிர்களையும் காமாஸ் பயங்கரவாதத்திற்கு பாலஸ்தீன மக்கள் விலையாக செலுத்தியிருக்கிறார்கள். இன்னும் கூடியவிலையை இஸ்ரேல் மட்டும் அல்ல காமாஸும் அவர்களிடம் கோரி நிற்கிறது.
காஸாவில் இருந்து பொதுமக்களை தெற்கு நோக்கி , எகிப்து எல்லைக்குச் செல்லுமாறு இஸ்ரேலால் துண்டுப்பிரசுரம் மூலம் கோரப்பட்டுள்ளது. இதையே இலங்கை அரசாங்கமும் வன்னி மக்களிடம் கோரியது. புலிகள் மக்களை வெளியேறியது தடுத்து, மீறியவர்கள் மீது வன்முறையைப் பிரயோகித்தது போன்று காமாஸும் மக்கள் மீது இதைச்செய்து மக்களை கேடயமாகப் பயன்படுத்துகிறது. இலங்கை அனுபவத்தின் படி இது பாலஸ்தீன -காஸா மக்களுக்கு உயிர் இழப்புக்களை அதிகரிக்கும்.
இஸ்ரேலின் திட்டம் கடல்வழியாகவும், தரைவழியாகவும் காஸாவை சுற்றிவளைத்து தாக்குதல் நடாத்துவது. ஈரான், லெபனான், சிரியா, ஹிஸ்புல்லா இதில் பாலஸ்தீனத்தின் பங்காளிகளாக காமாஸோடு இணைந்தால் அமெரிக்காவும், கூட்டாளிகளும் இஸ்ரேலுக்கு பகிரங்கமாகவே ஆயுத விநியோகத்தை செய்ய வாய்ப்புள்ளது. ஆனால் உக்ரைன் விடயத்தில் பைடன் நிர்வாகத்திற்கு அமெரிக்காவில் மக்கள் எதிர்ப்பு அதிகரித்திருக்கிறது.ஈரானின் எச்சரிக்கை எந்தளவு பலமானது, ஹிஸ்புல்லாவின் 1இலட்சத்து 50 ஆயிரம் சக்திவாய்ந்த ராக்கெட்டுகள், காமாஸின் குகைகள், பங்கர்கள், தற்கொலைப்படை உள்ளிட்ட பல விடயங்களை நோக்க வேண்டியுள்ளது. இவ்வாறான ஒரு மிகை மதிப்பீடு புலிகள் குறித்தும் இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை.
இராணுவ ஆய்வாளர்கள் கருத்துப்படி காஸாவுக்கான தரை நகர்வு இஸ்ரேலுக்கு இலகுவானதாக இருக்கப்போவதில்லை. மூன்றரை இலட்சம் ரிசர்வ் படையினர் தொகையில் அதிகமாக இருப்பினும் இவர்கள் முழுநேர இராணுவ வீரர்கள் அல்ல. காஸாவில் இஸ்ரேல் தாக்குதலில் தகர்க்கப்பட்ட கட்டிடங்கள் காமாஸின் மறைந்திருந்து தாக்குதல் யுக்திக்கு சாதகமானது என்று கருதப்படுகிறது. காமாஸின் கண்ணி வெடி தாக்குதல்களை இஸ்ரேல் எவ்வாறு எதிர் கொள்ளப்போகிறது. “விமானத்துக்கு தாக்குதல்கள் மூலம் எங்களை பலவீனப்படுத்த முடியாது. அது எதிரி அப்பாவி மக்களை கொல்லுவதற்கே உதவும்” என்று விடுதலைப்புலிகளின் தலைவர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்ததை இங்கு நினைவுபடுத்த முடியும்.
இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது புலிகளை பயங்கரவாதிகள் என்று பிரகடனம் செய்த முஸ்லீம் சமூகமும், முஸ்லீம் அரசியலும் காமாஸை ஒரு பயங்கரவாத அமைப்பாக காணத்தவறுவது முன்னுக்கு பின் முரணான நிலைப்பாடு. இஸ்ரேல் பொதுமக்கள் பயணக்கைதிகளாக கடத்தப்பட்டிருப்பதும், கொல்லப்படுவதும் பயங்கரவாதம். இதை இஸ்ரேல் அரசு செய்தாலும் அது அரசபயங்கரவாதம் என்ற நிலைப்பாடே சரியானது.
பாலஸ்தீன யுத்தம் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரானது என்ற வகையிலும் நேசசக்திகளை திரட்டமுடியும். இந்த நிலைப்பாட்டில் இஸ்ரேலின் அரசியல் கட்சிகள், முற்போக்கு சக்திகள் இருக்கிறார்கள். இவர்கள் இஸ்ரேல் பிரதமரின் யுத்தப்பிரகடனத்திற்கும், பாலஸ்தீன மக்கள் கொல்லப்படுவதற்கும் எதிரானவர்கள். எனவே அரபுலகம் பயங்கரவாதத்தையும், விடுதலைப்போராட்டத்தையும் பிரித்து நோக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக அரச பயங்கரவாதம் இயக்க பயங்கரவாத பக்கம் மக்களை வேறுவழியின்றி தள்ளிவிடுகிறது. இந்த தவறு ஈழப்போராட்டத்தில் விடுதலைப்புலிகள் விடயத்திலும் நடந்தது.
முள்ளிவாய்க்காலில் புலிகள் ஏகப்பிரதிநிதிகளாக தங்களைத் தாங்களே தனிமைப்படுத்தி நின்றதால் யுத்தம் மௌனித்தது. பாலஸ்தீன நிலை அதுவல்ல. காமாஸ் அழிக்கப்பட்டால்(?) FATAH அங்கு ஒரு மாற்றாக இருக்கிறது. பாலஸ்தீன விடுதலைப்போராட்டம் மற்றொரு கட்டத்தின் ஊடாக நகரும். அல்லது ஹிஸ்புல்லா போன்ற மற்றைய அமைப்புக்கள் போராட்டத்தை தொடர நிறைய வாய்ப்புண்டு. முள்ளி வாய்க்காலோடு ஈழப்போராட்டம் முடிந்தகதை பாலஸ்தீனத்திற்கு பொருத்தமற்றது.
இது காலம் கடந்தாயினும். ஈழப்போராட்ட ஏகபோகம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு பாடம்.