சீனாவின் கடன்களும், கடன் மறுசீரமைப்பும் இலங்கையை காப்பாற்றுமா?

சீனாவின் கடன்களும், கடன் மறுசீரமைப்பும் இலங்கையை காப்பாற்றுமா?

—- வி. சிவலிங்கம் —-

சில தினங்களுக்கு முன்னர் சீனா இலங்கைக்கு வழங்கிய கடன்களை மீளச் செலுத்துவதற்கான கால அட்டவணையை மாற்ற ஒப்புக் கொண்டிருப்பதாக செய்திகள் வெளிவந்தன. இச் செய்திகள் பெரும் மகிழ்ச்சியை வழங்கியுள்ளது போன்ற மாயையைத் தோற்றுவித்துள்ளன. 

முதலில் இவை கடன் காலத்தை மாற்றியமைப்பதே தவிர கடன்களைக் குறைப்பதற்கான ஏற்பாடுகள் அல்ல. செய்திகள் பலவும் அரசியல் பின்னணியில் இயங்குவதைத் தெளிவுபடுத்துகின்றன. அரசு பெரும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கும் விபரங்களாகவே அவை அமைந்துள்ளன. அது மட்டுமல்ல, இவை ஆரம்ப பேச்சுவார்த்தைகளே தவிர வேறெதுவுமல்ல.  சர்வதேச நாணய சபையின் அழுத்தங்கள் காரணமாக இலங்கை முதலில் இதர கடன் வழங்கிய நாடுகளுடன் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான புதிய ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமென வற்புறுத்தியிருந்தது. இதன் பின்னணியிலேயே இச் செய்திகள் முக்கியத்துவம் பெறுகின்றன. குறிப்பாக, ஜப்பான், இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத்தின் சில நிதி நிறுவனங்கள் என பலவற்றிடம் இலங்கை அதிக வட்டிக்குக் கடன் பெற்றிருந்தது. சீனாவுடன் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான ஏற்பாடுகளை ஓழுங்கு செய்தால் இதர ஐரோப்பிய நாடுகள் ஒன்றாக இணைந்து ஒரு முடிவுக்குச் செல்லலாம் என்ற எதிர்பார்ப்புக் காணப்படுகிறது. 

இந்த நாடுகள் ஏன் சீனாவின் முடிவை எதிர்பார்த்து நிற்கின்றன? என்பதே மிக முக்கியமானது. சீனா இலங்கைக்கு மட்டுமல்ல, ஆபிரிக்க நாடுகள் பலவற்றிற்கும் கடன் வழங்கியுள்ளது. எனவே சீனா இலங்கைக்கென தனியான முடிவை எடுக்க முடியாது. அந்த வகையில் சீனாவின் முடிவு மிகவும் முக்கியமானது. நாம் இங்கு இரண்டு அம்சங்களில் கவனத்தைச் செலுத்த வேண்டியுள்ளது. அதாவது சர்வதேச நாணயசபை உட்பட ஐரோப்பிய நாடுகளின் கடன் மறுசீரமைப்புத் தொடர்பான முடிவுகள், அடுத்தது சீனாவின் முடிவுகள் என்பது அதன் ஏனைய கடன் வழங்கிய நாடுகளுடனான மறு சீரமைப்பு ஏற்பாடுகள் குறித்து கவனத்தைச் செலுத்த வேண்டியுள்ளது. 

முதலில் இலங்கை இந்த நாடுகளுடன் கடன் மறுசீரமைப்புத் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு முன்னர் எவ்வாறாயினும் கடன்களை மீளச் செலுத்துவதற்கான கால அட்டவணைகளில் மாற்றங்கள் ஏற்படலாமே தவிர கடன் நிச்சயமாகக் கொடுக்கப்பட வேண்டியதே. அவ்வாறாயின் இலங்கை அக் கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கான ஏற்பாடுகளை உள் நாட்டில் மேற்கொண்டுள்ளதா? என்பதே மிக முக்கியமான கேள்வியாகும். குறிப்பாக நாட்டின் அரசியல் கட்டுமானமும், பொருளாதாரக் கட்டுமானமும் இன்னமும் நவ-தாராளவாத பொருளாதார கட்டுமானத்தையே தொடர்ந்து வைத்திருக்கையில் பொருளாதார வளர்ச்சி சாத்தியமா? என்ற கேள்வி எழுகிறது. ஏனெனில் அமெரிக்கா உட்பட பல நாடுகள் தத்தமது பொருளாதாரத்தினை மூடிய நிலைக்கு எடுத்துச் சென்றுள்ளன. உதாரணமாக, அமெரிக்காவில் சீனாவின் இறக்குமதிகளுக்கு பெரும் வரி விதிக்கப்படுகிறது. அவ்வாறே ஐரோப்பிய நாடுகளும் சென்றுள்ளன. அது மட்டுமல்ல, இதே நவ-தாராளவாத பொருளாதாரமே தத்தமது நாடுகளை நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியதாகத் தெரிவித்து பல இறக்குமதிக் கட்டுப்பாடுகளை அந்தந்த நாடுகள் விதித்து வருகின்றன.  

            இலங்கையின் இன்றைய நெருக்கடிகளுக்குக் காரணமானவர்களே அதாவது அதே ஆட்சியாளர்களே, அதனை மீட்டெடுக்கும் பணியையும் தற்போது மேற்கொள்ளவுள்ளதால் மாற்றங்கள் சாத்திமா? என்பதும் கேள்வியாகவுள்ளது. 

முதலில் இலங்கை- சீனா கடன் மறுசீரமைப்புத்; தொடர்பான செய்திகளை அவதானிக்கையில் இலங்கை வெளிநாட்டுச் செலாவணிப் பற்றாக்குறையால் மிகவும் அவதிப்படுகிறது. மிக முக்கியமான அத்தியாவசியப் பொருட்களைக் குறிப்பாக, எரிபொருள், மருந்து வகைகள், உணவுப் பொருட்கள் பொன்றனவற்றைக்கூட இறக்குமதி செய்ய முடியவில்லை. 

     இப் பின்னணியில்தான் சீனாவுடன் கடன்களை மறுசீரமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. தற்போது நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் என்பது ஆரம்ப ஏற்பாடுகள் பற்றியதாகவே உள்ளன. இன்னமும் மிக முக்கியமான அம்சங்கள் குறித்துப் பேசவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அது மட்டுமல்ல இந்த மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் சாத்தியமானால் மட்டுமே சர்வதேச நாணய சபையின் இரண்டாவது பகுதிக் கடன்களையும் பெற முடியும் என்ற இக்கட்டான நிலையும் உள்ளது. இவ்வாறான அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கை எந்த நிபந்தனைகளையும் ஏற்றுக் கொள்ளலாம் என்ற நிலையே உள்ளது. அவ்வாறாயின் தற்போதைய ஆட்சியாளர்கள் நாட்டை அடமானம் வைத்தாயினும் ஆட்சியைக் காப்பாற்ற முயற்சித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இப் பின்னணியில் தாம் பதவிக்கு வந்தால் சர்வதேச நாணய நிதியத்துடன் மீளப் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக எதிர்க்கட்சிகள் கூறுவதிலும் சில நியாயங்கள் உள்ளதை நாம் அவதானிக்கலாம். 

     சீனாவுடனான கடன் என்பது சுமார் 4.2 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இக் கடன் தொகையை எவ்வாறு மறுசீரமைப்பது தொடர்பான எந்த விபரங்களும் வெளியிடப்படவில்லை என்பதும் கவனத்திற்குரியது. இவ்வாறான பெருந்தொகை கடன்கள் குறித்து ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளுடனும் பேசவேண்டியுள்ளது. ஆனாலும் ஏற்கெனவே குறிப்பிட்டது போல சீனா தவிர்ந்த ஏனைய நாடுகள் ஒரு தனிக் குழுவாகவும், சீனா தனியாகவும் கடன்களைக் கையாள்கிறது. இங்குள்ள இன்னொரு முக்கிய அம்சம் எதுவெனில் சீனா தனது கடன் குறித்து முன் வைக்கும் நிபந்தனைகளுக்கும், ஏனைய நாடுகள் முன்வைக்கும் நிபந்தனைகளுக்குமிடையே பாரிய இடைவெளி உண்டு. பொதுவாகவே அமெரிக்கா தலைமையிலான நாடுகள் “வாஷிங்டன் இணக்கப்பாடு” ( Washington Consensus) என்பதன் அடிப்படையில் 

– நிதிக் கட்டுப்பாடு ( Fiscal austerity)

– வரி மறுசீரமைப்பு ( Tax reform)

– சுதந்திர வர்த்தகம் ( Free trade)

– தனியார் மயமாக்கல் ( Privatisation)

– கட்டுப்பாடுகளைத் தளர்த்தல் ( De- regulation)

– பொதுச் செலவினங்களுக்கான முன்னுரிமை ( Public spending priorities)

– வட்டி விகிதத்தினைச் சந்தை நடவடிக்கைகளே தீர்மானித்தல் ( Interest rate set by markets)

– போட்டி அடிப்படையிலான நாணய மாற்று பெறுமதி ( Competitive exchange rates)

– வெளிநாட்டு நேரடி முதலீடு ( Foreign Direct Investments)

– தனியார் சொத்துரிமை ( Property rights ) 

ஆகிய முக்கிய 10 அம்சங்கள் இந்த நாடுகளால் வலியுறுத்தப்படுகின்றன. இந்த அடிப்படையில் இலங்கை தொடர்ந்தும் நவ – தாராளவாத பொருளாதாரத்திற்குள் தள்ளப்படுவதைக் காணலாம். இக் கடன் மறுசீரமைப்புத் தொடர்பாக மேற்குலக கடன் வழங்கும் நாடுகளிடையே சீரான இணக்கம் இதுவரை இல்லை. அது போலவே சீனாவுக்கும், இந்த நாடுகளுக்குமிடையே பொருத்தமான பேச்சுவார்த்தைகள் இல்லை. உதாரணமாக, வழமையான கடன் வழங்கும் அமைப்புகளான பரிஸ் கிளப், சீனாவின் எக்ஸிம் வங்கி இதுவரை இணைந்து பேசியதாக இல்லை. குறிப்பாக, சீனா வழங்கிய கடன்களுக்கான வட்டி மிக அதிகமானது. வட்டியைக் குறைப்பார்களா? என்பதும் நிச்சயமில்லை. ஆனால் பரிஸ் கிளப் நிதி அமைப்புகள் இலங்கையின் பொருளாதார நிலமையைக் கருத்தில் கொண்டு வட்டியில் சிறியதான மாற்றத்தைக் கொண்டு வரலாம் எனக் கருதப்படுகிறது. 

தற்போது இலங்கையிலிருந்து வெளிவரும் செய்திகள் கடன் பெறுவது என்பது ஒரு மகிழ்ச்சியான செய்தியாகவே முன்வைக்கப்படுகின்றன. ஆனால் இக் கடன் தொடர்பான நிபந்தனைகள் பல சந்ததிகளைப் பாதிக்கும் முடிவுகள் என்பதனை அறிஞர்களோ அல்லது ஊடகங்களோ முன் வைப்பதில்லை. மக்கள் நாட்டின் நிதி முகாமைத்துவம் தொடர்பாக தெளிவான புரிதல்கள் இல்லாமல் அரசு என்பது வேறு ஒரு அமைப்பாகவும், அதற்கும் தமக்கும் பாரிய தொடர்பு இல்லை எனவும் எண்ணிச் செயற்படுகின்றனர். இப்படியான நெருக்கடி வேளைகளில் குறிப்பாக கடன் பளு அதிகரித்தமையால் இறக்குமதிக் கட்டுப்பாடு, உற்பத்திப் பற்றாக்குறை, வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம், விலைவாசி அதிகரிப்பு என பல பிரச்சனைகள் அடுக்கடுக்காக தொடரும் போதுதான் புரிந்து கொள்கிறார்கள். ஆனால் இவை காலம் கடந்து போய் பிரச்சனைகளை ஏற்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். தாம் தெரிவு செய்யும் அரசியல்வாதிகள் நாட்டின் நிதியை ஒரு குடும்பத் தலைவன் எவ்வாறு குடும்பத்தின் நிதி நிலமைகளைக் கையாள்கிறாரோ அதே போன்று நாட்டின் தலைவரும் நாட்டின் நிதியை வருமானத்திற்கு ஏற்றவாறு செலவு செய்ய வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளாதவரை இப் பிரச்சனைகள் தொடரும். அதுவே தற்போதும் தொடரப் போகிறது. அதாவது கடன் மறுசீரமைப்பு என்ற பெயரில் கடன் வழங்கும் காலம் நீடிக்கப்படுகிறதே தவிர உள்நாட்டின் மூல வளப் பெருக்கத்திற்கான எவ்வித திட்டமும் இதுவரை இல்லை. மக்கள் அவை பற்றி பரந்த அளவில் புரிந்து கொண்டதாகவும் இல்லை. 

சீனாவின் கடன் சுமை தொடர்பாக விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை. ஆனால் இலங்கை தனது உள்நாட்டுப் பொருளாதார அபிவிருத்தி குறித்து எவ்வாறான திட்டங்களை மேற்கொள்ள வேண்டுமென சீனா நிபந்தனைகள் எதையும் விதிப்பதில்லை. அது மட்டுமல்ல, ஸம்பியா நாடு தனது மொத்த தேசிய உற்பத்தியின் குறிப்பிட்ட வீதத்திற்கு அப்பால் கடன்கள் பெறக்கூடாது என சர்வதேச நாணய சபை முன் நிபந்தனை விதித்துள்ளது. அவ்வாறான நிபந்தனை இலங்கைக்கு வழங்கப்படவில்லை. இதற்கான பிரதான காரணம் சீனாவுடனான ஏற்பாடுகள் குறித்துத் தெளிவான செயற்பாட்டு ஒழுங்குகள்  இல்லாமையே. இதனால் இலங்கை தொடர்ந்தும் கடன்களைப் பெறுவதற்கான வாய்ப்புகளை அளிக்கிறது. அதாவது கடன் பெறுவதற்கான கட்டுப்பாடுகள் இல்லாமையால் மேலும் கடன் பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவே கருத வேண்டும். 

ஸம்பியா

இப் பின்னணியில் சர்வதேச நாணய நிதியம் தனது கடன்களை ஸம்பியா நாட்டுடன் எவ்வாறு மறுசீரமைப்புச் செய்துள்ளது? என்பதை அறிதல் அவசியமானது. ஏனெனில் இலங்கை, ஸம்பியா ஆகிய இரு நாடுகளும் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாத காரணத்தால் வங்குறோத்து நிலையை அறிவித்த பின்னணியில் இவை பற்றிய விபரங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. 20 மில்லியன் மக்களையும் நிலத்தால் சூழப்பட்ட நாடாகவும், பல பில்லியன் டொலர்களை சீனாவிடமிருந்து கடனாகப்  பெற்று புகையிரதப் பாதைகள், பெருந்  தெருக்கள், அணைகள் என பல திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறது. இவற்றிற்கு சீனாவின் அரச வங்கிகளே கடன் வழங்கின. இலங்கையைப் போலவே பெருமளவு கடன்களைச் சீனாவிடமிருந்து பெற்று பொருளாதார அடிப்படைக் கட்டுமானங்களை அதிகரித்த போதிலும் இக் கடன்களுக்கான வட்டியைச் செலுத்துவதற்கான உள்நாட்டு வருமானம் போதியதாக இருக்கவி;ல்லை. இதனால் சுகாதாரம், கல்வி, சமூக சேவைகள் , விவசாயிகளுக்கான கொடுப்பனவுகள், உரவகைகளை வழங்கல் போன்ற ஏற்பாடுகள் படிப்படியாகக் குறைக்கப்பட்டன.   கடன்களுக்கான சர்வதேச நாணய நிதியம் ஸம்பியா தனது இதர கடன்காரர்களுடன் தெளிவான ஏற்பாட்டிற்குச் செல்ல வேண்டுமெனவும், உள்நாட்டு வருமானத்திற்கு ஏற்ற வகையில் மட்டுமே கடன்கள் பெறவேண்டுமெனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

ஸம்பியா நாடு இவ்வாறான பெரும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்ட போது கடன் வழங்கும் நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டபோது சீனா இலங்கை விவகாரத்தில் தற்போது நடந்து கொள்வது போலவே பல்தேசிய நிறுவனங்களின் கூட்டில் இணைந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொண்டதோடு தனியாகவே பேச விழைந்தது. ஸம்பியா நாடு தனது வட்டிக் கொடுப்பனவுகளைச் சில மாதங்களுக்குத் தள்ளிப் போடக் கோரிய போதிலும் சாத்தியப்படவில்லை. இதன் காரணமாக அந் நாட்டின் இருப்பிலிருந்து வெளிநாட்டு பண இருப்பு காலியானது. உள்நாட்டுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி மேற்கொள்ள முடியாத நிலையில் இலங்கையைப் போலவே வங்குறோத்து நிலையை அறிவித்தது. ஸம்பியா நாட்டின் வெளிநாட்டுக் கடன்களில் மூன்றில் ஒரு பகுதி சீனாவின் கடன்களாகும். அதாவது சுமார் 6.6 பில்லியன்களாகும். கடன் சுமை அதிகரித்ததால் உள்நாட்டின் செலவினங்களில் வெட்டுகள் ஆரம்பித்தன. பொருளாதாரச் செயற்பாடுகள் சுருங்கி, பணவீக்கம் அதிகரித்து உணவு, மருந்து வகைகள், எரி பொருட்களின் விலைகள் அதிகரித்தன. 

இங்கு இன்னொரு அம்சத்தையும் நாம் கவனத்தில் கொள்ளுதல் அவசியம். வெளிநாட்டுக் கடன்கள் பல பல்வேறு நாடுகளின் இணைந்த கடன்களாகும். இந்த நாடுகள் தத்தமது கடன்களைக் குறைத்துக் கொண்டாலும் அந் நாடுகளுக்குப் பாரிய பாதிப்பு ஏற்படப் போவதில்லை. ஏனெனில் அந் நாடுகளின் தேசிய மொத்த உற்பத்தியில் இக் கடன் என்பது சிறிய தொகையாகும். ஆனால் சீனா ஒரு தனி நாடு என்ற வகையில் அந் நாடு தனது கடனை மறு பரிசீலனை செய்வது என்பது மிகவும் பிரச்சனைக்குரிய அம்சமாகும். இதன் காரணமாக, சீனா தனது கடன் தவணைக் காலத்தை நீடிக்க அனுமதித்தது. சில கடன்களுக்கு வட்டி செலுத்தத் தேவையில்லை எனக் கூறியது. இலங்கையைப் போலவே சீனா சில தனியார் நிறுவனங்களுக்கும் கடன் வழங்கியிருந்தது. இவை பாரிய கடன்களொடு இணைந்தவை அல்ல. 

சீனாவிலும் பெரும் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. எனவே  சீனாவின் கடன் மறுசீரமைப்பு என்பதன் கட்டுப்பாடுகளைத் தெளிவாக அறிந்து கொள்ளாமல் நாம் ஒரு முடிவுக்குச் செல்ல முடியாது. அது மட்டுமல்ல, இந்த வர்த்தக ஏற்பாடுகள் பலவும் மிகவும் இரகசியமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதால் கடன்களின் மொத்த பெறுமதியையும் அறிய முடியாது. அரசியல்வாதிகள் தத்தமது விஷேச தேவைகளுக்காகவும் இந்த ஒப்பந்தங்களை நிபந்தனைகள் இல்லாமலேயே ஏற்றுக் கொண்டுள்ளனர். உதாரணமாக, அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான கொடுப்பனவில் பல கோடி பணம் தனியார் பெயரில் காசோலையாக வழங்கப்பட்டிருப்பது தற்போதைய விசாரணைகளில் வெளிவந்துள்ளது.         

ஸம்பியா நாடு இலங்கையை விட வறுமையான நாடு ஆகும். மூல வளங்கள் இருப்பினும் அவை போதுமானதாக இல்லை. சுமார் 20 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டுக் கடன்களாக இந்த நாட்டிற்கு உண்டு. இக் கடன்களை 15 பில்லியன்களாகக் குறைக்கும்படி சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது. இதற்குள் சீனாவின் கடன் 6 பில்லியனும் அடங்கும். இலங்கையைப் போலவே ஸம்பியாவும் தனியார் நிதி நிறுவனங்களிடமிருந்தும் அதிக வட்டிக்குக்  கடன் பெற்றுள்ளது. அதாவது சுமார் 2.5 பில்லியன்களாகும். இதற்காக அந்த நாடு வருடா வருடம் 25 மில்லியன் டொலர்கள் வட்டியாகச் செலுத்துகிறது. ஓப்பீட்டளவில் இந்த நாட்டின் குறைந்த கடன் தொகை காரணமாக, சர்வதேச நாணய நிதியத்தின் கொடுப்பனவுகள் ஏனைய நாடுகளுக்கான ஸம்பியாவின் கடன் கொடுப்பனவுகளில் பாரிய தாக்கத்தைச் செலுத்தவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது. அக் கடனுதவி ஏனைய கடன்களை மீளச் செலுத்துவதற்கு இலகுவாக மாற்றியிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. 

இங்கு சீனா தனது கடன்களை மேற்கு நாடுகளின் நிபந்தனைகளுக்கு ஏற்றவாறு மாற்றுமானால் பாரிய சுமைகள் இருக்காது எனக் கருதுகின்றனர். இலங்கையைப் போலவே ஸம்பியாவும் பிணை முறிகளை விற்றிருக்கிறது. இப் பிணை முறிகளுக்கென 60மில்லியன் டொலர்களை வட்டியாக செலுத்துகிறது. அத்துடன் குறித்த காலத்தில் அக் கடன்களைச் செலுத்தாமையால் கடன் சுமை மேலும் அதிகரித்திருக்கிறது. அதிக வட்டியில் தனியார் நிறுவனங்களிடமிருந்து பெற்ற கடன்களை உரிய காலத்தில் செலுத்துவதே பாரிய பிரச்சனையாக உள்ளது. 

இக் கடன்களை மறு சீரமைத்தல் என்பது உள்நாட்டுப் பொருளாதாரத்தை விருத்தி செய்வதன் மூலமே சாத்தியமாகும். ஸம்பியா நாட்டின் தேசிய வருமானத்தின் 14 சதவீதம் வரியாகப் பெறப்பட வேண்டுமெனவும், 10 சதவீதம் ஏற்றுமதி வருமானமாக அமைதல் அவசியம் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தி 30-35 பில்லியன் டொலர்களாக 2025-2027 காலத்தில் எதிர்பார்க்கப்படுகிறது. 

கடந்த யூன் மாதம் ஸம்பியாவிற்கும் அதன் கடன் வழங்கிய நாடுகளுக்குமிடையே பாரிஸில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் பிரான்ஸ், தென் ஆபிரிக்கா, இஸ்ரேல், இந்தியா, சீனா ஆகிய நாடுகள் கலந்து கொண்டிருந்தன. ஸம்பியாவின் கடன் தொகை 6.3 பில்லியன் டாலர்களாகும். இதில் சீனாவுக்கான கடன்கள் பெருந்தொகையானதாகும். ஆனாலும் சீனாவின் கடன் தொகையின் அளவும், அதற்கான நிபந்தனைகளும் வெளிவருவதில்லை. 

இப் பின்னணியிலிருந்து சீன- இலங்கை கடன் மறுசீரமைப்பு என்பது மகிழ்ச்சி தரும் விடயமல்ல என்பது முக்கியமானது. ஏனெனில் இலங்கையில் பொறுப்புள்ள ஒரு ஜனநாயக அரசு தோற்றம் பெறாதவரை கடன் என்பது தொடர்ந்தும் அதிகரிக்கும் ஒன்றாகவே அமையும். முதலில் நாட்டின் அரசுக் கட்டுமானங்கள் பொறுப்பு வாய்ந்தனவாகவும், வெளிப்படைத் தன்மையுள்ளனவாகவும், சட்டவாக்கம், நிறைவேற்று அதிகாரம், நீதித்துறை என்பன சுயாதீனமானதாகவும், வெளிப்படையானதாகவும் அமையாத வரை நாடு ஊழல் மிக்க நிர்வாகமாகவே அமையும். இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் என்பது மனித துர்நடத்தைகளின் விளைவானதாகும். பெரும்பான்மை வாதம், இனவாதம், ஜனநாயக விரோத போக்குகள் நாட்டின் பொது விதியைத் தீர்மானிக்குமாயின் மாற்றங்கள் சாத்தியமில்லை.